1-நைமிசாரண்யம் -1-6–முதல் சரணாகதி
2-திருவேங்கடம் -1-9–ஆபாச பந்துக்கள் விட்டு
3-காவளம்பாடி -4-6- கண்ணா
4-திரு வெள்ளக்குளத்து அண்ணா இடரைக் களையாயே -4-7-
5-திருவரங்கம் -5-8- ஏழை ஏதலன்
6-திரு விண்ணகர் அப்பன் -6-2- இந்திரிய பயம்
7-திரு நறையூர் -இடர் கடுத்த திருவாளர் இணை அடி
கீழே ஏழு சரணாகதிகள் பார்த்தோம் –
இது எட்டாவது சரணாகதி
ஆ மருவி அப்பன்
கோ சகன்
ரத மக்ந புரம்
கண்ணன் கோகுலம் மாடு மேய்க்க
ப்ரம்மா அபசாரம் -பொறாமை -கவர்ந்து போக
தேடி இங்கு வர
ஆகாசம் தேர் போக நிழல்
கீழே பிடித்து இழுக்க
என்ன வேணும்
1000 குடம் வெண்ணெய் சாயங்காலம்
ஒன்றில் நீர் –
1000 நீராக இருக்க
மாயன் -தேவாதி ராஜன்
தை அமாவாசை -தர்ச புஷ்கரணி
அரசன் என்று நினைத்து திருமங்கை ஆழ்வார் போக
கால் தளர்ந்து நின்று 40
கம்பர் அவதாரம்
ஹிரண்ய வத படலம் –
கருடனும் பிரகலாதனும்
செங்கமல வல்லித்தாயார்
கருட விமானம்
மார்க்கண்டேயர் காவேரி தாயார் கர்ப்ப க்ருஹம்
வைநதேய விமானம் இங்கு -தாச சக -அருகில் இருந்து சேவை
வைநதேய முடி திரு நாராயண புரம்
லோக முத்ரா -அகஸ்தியர் தர்மபத்தினி -காவேரி
கோவிந்த ராஜர் தனி சந்நிதி வெளியில்
ரெங்க நாதர் சயன திருக்கோலம்
திரு நெடும் தாண்டகம் தூது விடும் பாசுரமும் உண்டே –
7-7-திருவுக்கும் திருவாகிய பிரவேசம்-
அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -என்றார் கீழ்
அது தானேயாய் நிற்கப் பெறாதே –
பாதகமான இந்த்ரியங்கள் விடாதே
அணித்தாய் நின்று நலிகிற படியை அனுசந்தித்து அஞ்சி
நம்மாழ்வார் -உண்ணிலாவியில் பட்ட க்லேசத்தை-( 7-1-) அடையப் பட்டு –
இதுக்குப் போக்கடி அவன் திருவடிகளிலே
விழுந்து சரணம் புகுகைக்கு மேற்பட இல்லை என்று அத்யவசித்து
புருஷகார பூதையான பிராட்டி முன்னாக
தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லிக் கொண்டு சரணம் புகுகிறார்-
(கீழே சகல இந்திரியங்களும் பகவத் விஷயத்தில் ப்ரவணமாய் ஈடுபட்டு கண்டு களித்தார்
மிகவும் களித்த இவருக்கு பயப்பட்டு சரண் அடையக் காரணம்
ஆரா இன்னமுதை அனுபவித்தார்
ஏதா மநோ ரதம் அனுபவம் பெறாமல்
இதுக்கு மூலம் சம்சாரமே -கர்ம க்ருதம் -பூர்வ வாசனா பலம்
மீண்டும் விஷயாந்தரங்களிலே மூழுவோமோ என்கிற அதி சங்கையால்
சரணாகதி -)
———————————————
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-
திருவுக்கும் திருவாகிய செல்வா-திருவாகிய திருவுக்கும் செல்வா
திரு மார்பா-மீண்டும் ஸ்ரீ யபதித்தவம்
திருவுக்கும் திருவாகிய செல்வா –
ஸ்வ வ்யதிரிக்தருடைய சம்பத்துக்கு நிதான பூதையான பிராட்டிக்கு சம்பத் ஆனவனே –
தெய்வத்துக்கு அரசே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியே –
செய்ய கண்ணா-
புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே
உருவச் செஞ்சுடராழி வல்லானே –
விரோதி நிரசனத்துக்கு பரிகரமாய்-அழகிய வடிவை யுடைத்தாய் -நிரதிக தேஜோ ரூபமான
திரு வாழியைக் கையிலே யுடைய சர்வேஸ்வரனே –
ஸ்ரீ லஷ்மீபதி என்னுதல்-
நித்ய ஸூரிகளுக்கு எல்லாம் நிர்வாஹகன் என்னுதல் –
கை சலியாமல் திரு ஆழியைப் பிடிக்க வல்லவன் என்னுதல் –
புண்டரீகாஷனானவன் என்னுதல் –
இவை இறே சர்வாதிகத்துவத்துக்கு லஷணம்
உலகுண்ட ஒருவா –
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே தளர்ந்தார் தாவளமானவனே-
திரு மார்பா-
உன்னைத் தளர்ந்தார் தாவளமாக்குமவளை திரு மார்விலே யுடையவனே
(தளர்ந்தார் தாவளமாக்குமவளைஇவன் ரக்ஷகன் ஆக்குபவளே இவள் –
இதில் புருஷகார பூதை என்கிறார்
கீழே பர ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று )
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால் –
ஏக விஷயத்தில் சேஷத்வம் குலைந்தது கிடாய் –
ஒருவருக்கு ஆடல் கொடுத்து உஜ்ஜீவிக்கும் படியாய் இருக்கிறது இல்லை
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது-
ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
கர்ம வச்யன் ஆகையாலே கர்ம க்ருதங்கள் சேர்ந்தே இருக்கும்
நீ அவசரம் பார்த்து புகுந்தாய் -இவை சஹஜங்கள்-
உண்ணிலாய 7-1–என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியால்
நலியா நின்றுள்ள ஐந்து இந்த்ரியங்கள் என் பக்கல்
வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறவன வில்லை-
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் –
என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு என்று இவை தனித் தனியே
அலைத்து நெருக்க-அவற்றுக்கு அஞ்சி வந்து
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –
சர்வ ஸ்வாமியான உன் திருவடிகளிலே சரண ரஷணத்தில் அதிகரித்த உனக்கு
அத்தை முடிய நடத்த வேண்டாவோ –
—————————————————-
ஆஸ்ரயண ஸுவ்கர்ய குணங்கள் கீழே
அதுக்கு தூண்டி விட பிராட்டி சம்பந்தம்
தலை எடுக்க வைப்பவள்
ஆஸ்ரய கார்ய ஆபாதக குணங்களை சொல்லி
கைம்முதல் ஒன்றும் இல்லை என்று ஆகிஞ்சன்யம் சொல்லுகிறார் இதில்
பந்தார் மெல் விரலி நல் வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் யுடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதனே நெடு மாலே
அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-2-
பந்தார் மெல் விரலி –
சர்வேஸ்வரன் உடன் கலக்கும் போதும் அகப்பட -ஒரு ஷணமும் விடாதே பந்தை யுடையவளாய்
அப் பந்தும் உட்படப் பொறாத விரல்களை யுடையவளுமாய் –
(பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடி -நரமான நாம் ஒருகையில்
நாராயணனாக அவன் ஒரு கையிலும் விடாமல் )
நல் வளைத் தோளி –
தர்ச நீயமான வளைகளை யடைய திருத் தோள்களை யுடையவளுமாய் –
பாவை பூ மகள் தன்னொடும் யுடனே வந்தாய் –
தாமரைப் பூவை இருப்பிடமாக பெரிய பிராட்டியாரோடு கூட வந்தாய் –
அரவிந்தப் பாவையும் தானும் -5-2-10–என்கிறபடியே
ச பரிகரனாய்க் கொண்டாய்த்து வந்து புகுந்தது –
என் மனத்தே மன்னி நின்றாய் –
இவ் வரவாலே நெஞ்சை நெகிழப் பண்ணி
விலக்காமை யுண்டான வாறே –
ஆவாசந்த்வஹம் இச்சாமி -என்கிறபடியே வந்து புகுந்தான் ஆய்த்து-
(ரிஷிகள் இடம் பெருமாள் தங்க இடம் கேட்டது போல் )
மால் வண்ணா –
கறுத்த நிறத்தை யுடையவனே –
(மால் கருமை பெருமை பித்தம் )
மழை போல் ஒளி வண்ணா –
கறுத்து இருக்கை அன்றிக்கே
மேகம் போலே குளிர்ந்த வடிவை யுடையவனே –
சந்தோகா பௌழியா தைத்ரியா சாமவேதனே –
ஆர்த்த ரஷணத்துக்கு ஈடான சர்வஜ்ஞத்வத்தை யுடையவனே –
இத்தால் வேதார்த்த தத்வ ஜ்ஞானத்தை யுடையவனே என்றபடி –
(ஆஸ்ரிதர் கார்யம் செய்ய சர்வஞ்ஞன் சர்வசக்தன் ப்ராப்யம் பூர்த்தி வேண்டுமே )
நெடுமாலே –
அவ் வேதங்களாலே சொல்லப்படுகிற ஆதிக்யத்தை யுடைய சர்வாதிகனே –
அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன்-
வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று –
உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –
அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –
அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
————————————————————————————–
அனிஷ்டம் தொலைத்து இஷ்டம் அருள
கீழே சர்வஞ்ஞத்வம் அனுசந்தித்து
சக்திமத்வத்தையும் பிராப்தியையும் இதில் அனுசந்திக்கிறார் –
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-3-
செய்யாத செய்தாய் -உன் விஷயத்தில் ருசி விச்வாசாதிகளை உண்டு பண்ணி
விஷயாந்த்ரியங்களைக் கண்டு அஞ்சவும் பண்ணிணவனே-
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் –
கடைந்து பற்றற நெய் இட்டு இருக்கிற திவ்ய ஆயுதங்களை யுடையவனே
நெய் -கூர்மை
ஆர்தல் -மிகுதி —
கூர்மை மிக்க திரு வாழி-
அவற்றுக்குத் தகுதியான திருத் தோள்களை யுடையவனே –
அடியேனைச்-
தேவர்க்கு யோக்யனாய் இருக்கிற யுன்னை –
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் –
லோகத்தில் செய்யாதவற்றை எல்லாம் செய்தாய்
உன் திருவடிகளில் கைங்கர்யத்தை நினையாத லோகத்திலே வைத்தாய்
சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகுந்து பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் –
ஷூத்ர விஷயங்களை லபிக்கைக்கும்
கிட்டவரிய விஷயங்களை லபிக்கைக்குமாக
க்ருத்ரிம ரூபத்தாலே -நான் -என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும் படி
என் சரீரத்துக்குள் வந்து குடி புகுந்தன வாய்த்து –
போற்றி வாழ்வதற்கு அஞ்சி-
அவற்றை ஆராதித்திப் பின் சென்று வர்த்திக்குமதற்கு அஞ்சி –
நின்னடைந்தேன் –
நிருபாதிக சேஷியான யுன்னைக் கிட்டினேன் –
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் –
நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-
——————————————————————
தம்மை லோகத்தாரில் வியாவருத்தமாய் பண்ணியத்துக்கு நன்றி உடையவனாய்
மனம் அளவில் இல்லாமல்
உபகார ஸ்ம்ருதி அடியாக வாயாலே ஸ்தோத்ரம் இதில் –
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மதுசூதா மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண்
நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமானும் பாராளும்
அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே—7-7-4-
மன்னர் மன்னர்-ஐஸ்வர்ய பூர்த்தியும் அரசராயும் –
முன் ஆதி -ஆதி காலத்தில் ஜகத் காரண பூதன்-
நற்றுணை-பர அர்த்தம் -ஏக பிரயோஜனமாக உள்ள துணை –
பரனே-
சர்வ ஸ்மாத் பரனானவனே-
பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரனே-
பஞ்சவன் என்றும்
பௌழியன் என்றும்
சோழர்கள் பேர் -ஒரோ ராஜ்யங்களுக்கு கடவராய் -ஐஸ்வர்ய பிரதானராய் இருக்கும் ராஜாக்கள்
தம் தாமுடைய அபிமத அர்த்தமாக வந்து ஆஸ்ரயித்து
அவை பெற்றுப் போம்படிக்கு ஈடாக நிற்கிற பரனே –
அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் யுள்ளவனே-
மாதவனே –
அவர்களுடைய அபிமதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும்-கொடிப்பிக்கும் –
புருஷகாரத்தை யுடையவனே –
மதுசூதா –
அவர்களுடைய விரோதியைப் போக்குகைக்கு ஈடான விரோதி நிரசன சீலனானவனே –
மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண்-
தன்னை அழிய மாறியும் அடைந்தாரை நோக்கும் துணை உன்னை ஒழிய
வேறு ஒருவரை யுடையேன் அல்லேன் –
நரனே நாரணனே –
ஆஸ்ரித அர்த்தமாக அவர்கள் உன்னைப் பெறுகைக்கு பண்ணும் தபஸை-
நீ அவர்களைப் பெறுகைக்கு பண்ணுமவனே –
திரு நறையூர் நம்பீ –
திரு நறையூரிலே வந்து நிற்கும் கல்யாண குண பரிபூரணனே –
எம்பெருமான் உம்பராளும் அரனே –
எம்பெருமான் –
அங்கே பிராட்டியும் நீயும் நிற்கிற நிலையைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே-
உம்பராளும் அரனே –
மேல் யுண்டான தேவதைகளை நிர்வஹிக்கிற ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று
அவர்களை நிர்வஹிக்கிறவனே-
ருத்ரம் சமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரிதா
ப்ரஹ்மா மாமாஸ்ரித்த ராஜன் நாஹம் கஞ்சிது பாஸ்ரித -என்னக் கடவது இறே-
(பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம் )
ஆதி வராஹ முன்னானாய் –
ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே
மகா வராஹமாய் வந்து அவதரித்து
கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே-
(சகல மனுஷ நயன விஷய தாங்கதன் )
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
அது தன்னை பழம் கதை யாக்கி இப்பொழுது இங்கே வந்து நிற்கிறவனே
————————————————————————
கீழே அரசர்களுக்கு ரக்ஷகன்
நீர் இங்கே நம்மைக் கொண்டாடி
அநன்யார் ஹத்வம் சொல்லிக் கொண்டு
ஸ்தோத்ரம் பண்ணி
பலகாலும் தவிக்க மூலம் என்ன
உத்தரம் இதில் –
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டானுய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலி யுகத்ததன் தன்மைக் கரும மாவதும் என் தனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே-7-7-5-
சமரம் -மருவி -சமம் -யுத்தம் என்றபடி –
விண்டான் விண் புக –
ஹிரண்யாசுரன் ஆனவன் வீர ஸ்வர்க்கம் ஏறிப் போம்படியாக –
வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து –
கொடிய யுத்தத்திலே நரசிம்ஹ வேஷத்தை யுடையனாய்
அஹங்கார மமகாரங்களாலே தடித்த வடிவை யுடையவனுடைய மார்வைச் சென்று
பற்றி இரு பிளவாம் படி பண்ணி –
பண்டானுய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா-
அத்தால் அது சிறுக்கன் அறியச் செய்த செயல் இறே-
அங்கன் உபகார ஸ்ம்ருதியும் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்கும் உதவின படி சொல்லுகிறது
முன்பு பசுக்களும் இடையரும் பிழைக்கும் படி கைக்கு எட்டிட்டு ஒரு பெரிய மலையை
எடுத்து ரஷித்த நீர்மையை யுடையவனே –
பரனே-
இப் பிரஜா ரஷண தர்மத்தில் இவனுக்கு அவ்வருகு ஒருவரும் இல்லாத படி இருக்கிறவனே –
பவித்திரனே –
அசுத்தரையும் சுத்தராக்கும் சுத்தியை யுடையவனே –
கண்டேன் நான் கலி யுகத்ததன் தன்மைக் –
இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி –
பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து
முடிக்கும் -சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –
கருமமாவதும் என் தனக்கு அறிந்தேன் –
எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –
அண்டா –
அண்டத்துக்கு நிர்வாஹகனானவனே
அன்றிக்கே
இடையருக்கு நிர்வாஹகனானவனே என்றுமாம் –
நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும்
இடையருக்கும் பசுக்களுக்கும்
உதவியது போல்
பிற்பாடாருக்கும் உதவவே இங்கு வந்து நிற்கிறது —
——————————————————–
கலியுகத்திலும் க்ருத யுக நன்மை பண்ண வல்லவனே –
பாலைவனத்தில் சோலை ஆக்க வல்லவனே அன்றோ நீ –
தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது எங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகமிவை நான்கும் ஆனாய்
ஆயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-6-
பெற்ற தாயால் -பெற்ற தாய் போல் பிரியம் மிக்கு –
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ என்னும் படி
தரையோர்க்கும் -வசுந்தரா தரா -பூமி என்பதையே தரை இங்கு -மண்ணோர்க்கும் –
தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச்-
அறத் தோயாத இனிய தயிரையும் நெய்யையும் பொருந்தி அமுது செய்ய –
சொன்னார் சொல்லி நகும் பரிசே-
வாய்க்குப் போந்தார் போந்தபடி சொல்லுகிற பழிக்கு அஞ்சாதே-
மழலைத் தயிரும் நெய்யும் புஜித்தோம் ஆகில் இதுக்கு வருவது ஓன்று உண்டோ என்றும்
ஒன்றை இட்டுப் பழி சொல்லுகிறார்கள் அன்றே -என்று
நாட்டார் சொல்லுகிற பழிக்கு லஜ்ஜியாதே இருந்தானாய்த்து –
பெற்ற தாயால் ஆப்புண்டு-இருந்து அழுது –
யசோதை பிராட்டியால் கட்டுண்டு -அழுது-பிரதிகிரியை அற்றுப் போக மாட்டாதே-
நிற்க வேண்டப்பாட்டை யுடையவனே
எங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் சேயாய்-
பூமி அந்தரிஷங்களில் யுள்ளார் ஸ்வ யத்னத்தால் காணப் பார்க்குமன்று
அவர்களுக்கு தூரஸ்தன் ஆனவனே –
நீர் இங்கனே பதறுகிறது என்-காலம் வந்து கார்யம் செய்ய வேண்டாவோ என்ன –
கிரேத திரேத துவாபர கலியுகமிவை நான்கும் ஆனாய் ஆயா நின்னடியன்றி மற்று அறியேன் –
கலௌ கிருதயுகம் தஸ்ய -என்ன ஒண்ணாதோ யுனக்கு –
காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –
உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன்
(யார் உள்ளத்தில் கோவிந்தன் உள்ளானோ அவனுக்கு கலி யுகத்தில் க்ருத யுகம் வந்தது போல்
இல்லை என்றால் கிருதயுகத்தில் கலி யுகம் போலவே )
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே —–
அந்த கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு அன்றோ
நீ இங்கே வந்து நிற்கிறது –
——————————————————————
காலம் நீ இட்ட வழக்கு
என்னையே நினைக்கும்படி உபகரிக்க வேண்டினீர்
விஷயங்களில் இருந்து மீட்டு நீர் என்னை நினைக்கலாம்
என்னால் முடியாதே –
நீயே பண்ணி அருள வேணும்
எப்பொழுதும் அடியேன் உன்னையே நிரந்தரமாக நினைக்கும் படி நீ நினைக்க வேண்டுமே
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் –
எல்லாரும் ரஷை பெற்று ஜீவிக்க வேணும் என்று இருக்கிற இவன் பக்கலிலே
துர் அபிசந்தியை பண்ணினான் ஆய்த்து-கம்சன் –
அவன் பண்ணின அபிசந்தி அவன் தன்னோடு போம்படி கோபித்து
கம்சனானவன் பீதனாம்படி முனிந்தாய் -சீறினாய் –
கார் வண்ணா –
கண்டாருக்கு ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே-
கடல் போல் ஒளி வண்ணா –
கடல் போலே சர்வ பதார்த்தங்களுக்கும் ரஷகனுமாய் –
அத்தோடு ஒத்த நிறத்தை யுடையவனே –
(ஒளியையும் வண்ணத்தையும் –
ரக்ஷணம் சொல்லி அத்தோடு ஒத்த வண்ணம் -அக்ரமமாக அருளிச் செய்கிறார் )
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் –
அசூரா வேசத்தாலே மிருத்யு போலே வந்த ருஷபங்கள் ஏழின் வுடைய கொம்பையும்
முறித்து அவற்றையும் ஜெயித்தாய் –
எந்தாய் –
அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டாய்-
அந்தரம் ஏழுமும் ஆனாய் –
உபரிதன லோகங்கள் ஏழையும் யுடையவனே-
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட
வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே –
இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி
போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க
அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
——————————————————-
நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-8-
நெடியானே-
சர்வாதிகனான சர்வேஸ்வரனே –
கடியார் கலி நம்பீ –
பரிமளத்தை யுடைத்தாய் -அரண் பெற்று இருக்கிற -ஆர் கலி யுண்டு -கடல் –
அதிலே சாய்ந்து அருளின கல்யாண குண பரிபூரணனே –
நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
பரம பதத்தே இருந்து -அங்கு உள்ளார் நினைக்கும் நினைவை
இங்கேயே இருந்து
உன்னையே நினைத்து இருக்கும் என்னை-
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த –
நெஞ்சில் நன்மை இன்றிக்கே பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடைய
ஐவர் வந்து புகுந்து சிறை செய்கிற –
அக் காவலைப் பிழைத்துக் குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் –
த்யக்த்வா புத்ராம் ச தாராம் ச ராகவம் சரணம் கத -என்கிறபடியே
அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்-
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி –
எனக்கு கூறையும் சோறுமாய் இருக்கிற இத் திருவடிகளைத் தந்து அருளி –
தோட்டமில்லவள் -பெரியாழ்வார் -5-1-5- -என்றும் –
எல்லாம் கண்ணன் -திருவாய் -என்றும் சொல்லுகிறபடி
கூறை சோறாக நினைத்து இருப்பது இவை யாய்த்து இவர் –
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் –
வகுத்த ஸ்வாமியான நீ -ராஜ புத்ரனாய் பிறந்து முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே
அடியேனாய் இருக்கிற என்னை நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் –
(அடி சூடும் அரசு – கைங்கர்ய பட்டாபிஷேகம் )
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம் படி கடல்கரை வெளியிலே வந்து நின்றால் போலே
எனக்கு உறவு முறையார் கை விட்ட அன்று வந்து கிட்டலாம் படி அன்றோ
தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
——————————————————————–
நின்ற திருக்கோலம் தேவாதி ராஜன்
ரெங்கன் கிடந்த திருக்கோலம்
கோவிந்த -அமர்ந்த திருக்கோலம்
மூவரும் இங்கே உண்டே
கீழே அபீஷ்டம் பிரார்த்தித்தார் -தமக்கு அடுத்த கூறை சோறு
இதில் இந்திரியங்கள் தமக்கு பிடித்தவற்றை கேட்டு பாதிக்க
அநிஷ்டம் நிவ்ருத்தி இதில்
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-
செய்வது-செய்ய வேண்டியது என்றவாறு –
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக்-
நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது –
கூறை சோறு இவை தா என்று குமைத்துப் போவார் நானவரைப் பொறுக்க கில்லேன்-
நான் ( வகுத்த ப்ராப்தமான திருவடிகளையே )கூறையும் சோறுமாக நினைத்து இருக்கும் அது ஒழிய
வேறு சிலவற்றைத் தா வென்று
என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்கு கிறிலர்கள் –
நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டு கிறிலேன் –
புனிதா-
என் விரோதியைப் போக்கி ரஷிக்குமது உன் பேறாக நினைத்து இருக்கும்
சுத்தி யோகத்தை யுடையவனே –
புட் கொடியாய் –
இவை எல்லா வற்றுக்கும் கொடி கட்டி இருக்கிறவனே-
நெடு மாலே –
ஆஸ்ரிதர் பக்கலில் மிக்க வ்யாமோஹத்தை யுடையவனே-
தீவாய் நாகணையில் துயில்வானே-
ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே-
உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற
திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –
திரு மாலே –
அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-
இனிச் செய்வது ஓன்று அறியேன் –
இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் –
ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –
(நான் அவரை பொறுக்க மாட்டேன்
நீரே போக்கும் விரகு பார்க்கலாகாதோ
கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் )
——————————————————
அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே –7-7-10-
பைம்-பரந்த
கன்னி மன்னு-அழிவில்லாமை இடைவிடாமல் பொருந்தி உள்ள –
அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த –
அன்னங்கள் நித்ய வாசம் பண்ணுகிற பரந்த பூவை யுடைத்தான பொழிலாலே சூழப் பட்ட –
அன்னங்கள் ஒன்றோடு ஓன்று கூடினால் உடம்போடு உடம்பு அணுகாதபடி கிடைக்கைக்கு வேண்டும்படி
பரப்பு போந்து இருக்குமாய்த்து பூவின் பெருமை –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் –
திரு அழுந்தூரில் மேற்கு பார்ஸ்வத்திலே நின்ற சர்வாதிகனான சர்வேஸ்வரனை-
கன்னி மன்னு திண் தோள் -கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
ஒரு நாளும் அழியாத மிடுக்கை யுடைத்தான தோள்களை யுடைய ஆழ்வார் –
திருவாலி நாட்டுக்கு நிர்வாஹகராய் உள்ளார்
திரு மங்கையில் உள்ளார்க்கு பழையதாக ராஜாக்களாய் யுள்ளார்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்-
சொன்ன இனிய தமிழான இந்த நல்ல ரத்ன மாலையை
லஷணங்களில் குறைவற்று இருக்கிற இப் பத்தையும் அப்யசிக்க வல்லார் –
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே —
சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து பெரிய முத்தின் குடைக் கீழே இருந்து
நிரவதிக ப்ரீதி யுக்தராய்ப் பெறுவார் –
இந்த்ரிய வஸ்தையை அனுசந்தித்து அஞ்சின ஆழ்வார் (யோகியாக இல்லாமல் போகியாக) இத்தை
பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே
அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று பட்டர் அருளிச் செய்தாராம் –
———-
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
திரு வழுந்தூரான் நெடியான் நல் துணையான் தூயன்
திருவன் நிறைவறிவன் என்று திருத்த ஐவர்
செய் துயரை வேறு புகலின்றி கலிகன்றி சேர்ந்தான்
உய்ய தாளாம் செங்கமலம் -67-
ஐவர் -ஐந்து புலன்கள்
நெடியான் -தேவராய நிற்கும் அத்தேவும் அத்தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும்
அம்மூவரில் முதல்வனாக நிற்கும் நெடியான் -மனிசர்க்குத் தேவர் போலெ தேவர்க்கும் தேவனான தேவாதி தேவன்
நிறைவறிவன் -சர்வஞ்ஞன் –
————————————————————-
7-8-செங்கமலத் திருமகளும் -பிரவேசம் –
(இப் பதிகம் பர உபதேசப் பதிகம் )
இந்த்ரிய அவஸ்தைக்கு அஞ்சிக் கூப்பிட்டார் –
நீர் இங்கனே கிடந்தது கூப்பிடுகிறது என் –
பேரளவுடைய ப்ரஹ்மாதிகள் தங்கள் ஆபத்தை அறிவிப்பிக்கும் போது
அக் கரையிலே நின்று கூப்பிடுமது ஒழிய
அவர்களுக்கும் கிட்ட ஒண்ணாத படி இருக்கக் கடவ நாம் –
உமக்குப் பட்ட குறை அறிவிக்கலாம்படி பண்ணினோமாய் நின்றோமே –
இவ்வளவும் வர நின்ற நாம்
இனி மேல் உள்ள கார்யம் செய்வுதோம் என்று
உமக்கு ஆறி இருக்கக் குறை உண்டோ –
உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்கைக்கு அன்றோ நாம் இங்கு வந்து நிற்கிறது என்று
அங்குற்றை நிலையைக் காட்டிக் கொடுக்க-
அத்தை அனுசந்தித்து திருப்தராய்
பிறரைப் பார்த்து
இவன் அல்லது ஆஸ்ரயணீயன் இல்லை
ஆன பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –
என்கிறார் –
—————————————-
பிரகலாதன் கருடன் அருகில் இங்கு -கர்ப்ப க்ருஹத்தில் –
செங்கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1-
கேள்விகளும்-கேட்டு அறிய வேண்டிய ஸ்ம்ருதிகள் போல்வனவும் –
அணி அழுந்தூர் -லீலா விபூதிக்கு ஆபரணம்
செங்கமலத் திருமகளும் –
ஆஸ்ரிதர் உடைய சர்வ அபராதங்களையும் பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் –
புவியும்-
அப் பொறைக்கு உவாத்தான ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –
செம் பொன் திருவடியின் இணை வருட –
ஸ்ப்ருஹணீயமாய்
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளை வருட –
முனிவர் ஏத்த —
சனகாதிகள் நின்று ஸ்துதிக்க –
வங்கமலி தடம் கடலுள் –
மரக் கலங்களால் மிக்கு இருக்கிற பெரிய கடலுள்-
அநந்தன் என்னும் –
திரு வநந்த வாழ்வான் என்று பிரசித்தனாய் இருக்கிறவன் மேலே –
சர்வேஸ்வரனையும்-அநந்தன் -என்னக் கடவது இறே
த்ரிவித பரிச்சேத ராஹித்யத்தாலே –
அநந்தன் தன்னையும் விளாக்குலை கொள்ள வல்லனாய் இருக்கையாலே
அநந்தன் -என்று பிரசித்தியை உடையனான –
வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின் –
குன்றிச் சூடு-(மயில் தோகைக் கற்று ) போலே
சர்வேஸ்வரனுக்கு வைத்த கண் மாறாதே
கண்டு கொண்டே இருக்க வேண்டும் படி
தர்ச நீயமான வரிகளை உடையனாய்
சைத்ய சௌரப்யாதிகளை பிரக்ருதியாக உடைய
திரு வநந்த வாழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரன் கிடீர் கோள் இங்கு வந்து நிற்கிறவன் –
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை –
வேத ப்ராமாண்யம் ப்ராதேசிகமாய் இருக்கை அன்றிக்கே
எங்கும் ஒக்க மிகுகையால் வந்த நிறைந்த புகழை உடைத்தான
நான்கு வேதங்கள்
பஞ்ச மகா யஞ்ஞம்
மற்றும் ஸ்ரவணத்தால் அறிய வேண்டுயவற்றாலும் வந்த
இயற்றியை ஸ்வாபாவகமாக உடையராய் –
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –
தனித் தனியே பிரஹ்மாவைப் போலே சிருஷ்டிக்க
ஷமராய் இருக்கிற
பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகையாலே
வந்த நிரவதிக சம்பத்தை உடைய திரு வழுந்தூரிலே
வந்து நின்று அருளின இது தான் அலாப்ய லாபமாகக் கொண்டு நிற்கிறவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான சர்வேஸ்வரன் கிடி கோள்
அவனை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிக்கப் போகப் பாருங்கோள் –
—————————————-
தேவாதி ராஜனே இவர் அமரர் கோவே என்றும் பலகாலும் அருளிச் செய்கிறார் –
பாற் கடல் ஷீராப்தி நாதன் அனுபவம் =கீழ்
அங்கு நின்றும் போந்து விபாவமான
ஹயக்ரீவன் இதில் வேத பிரதானம் செய்து அருளி
முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய வெம் பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2-
முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண –
பண்டு இவ் உலகங்கள் ஏழையும்
அந்தகாரமானது தான் கண்ட படியே பரந்து புஜிக்க –
முனிவரோடு தாநவர்கள் திசைப்ப –
சாத்விகரோடு அசாத்விகரோடு வாசி அற அறிவு
கெட்டுக் கலங்க –
வந்து அவதரித்து –
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய வெம் பரமன் காண்மின்
பரம்பின கலைகளை உடைத்தான நாலு வகைப் பட்ட வேதங்களின் உடைய
அர்த்தத்தை எல்லாம்
ஹயக்ரீவ முகத்தாலே
அருளிச் செய்த சர்வ ஸ்மாத் பரன் கிடீர் –
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் –
செந்நெலின் உடைய கனத்த கதிரானது
கவரி வீச –
சங்க மவை முரலச்-
அங்கே ஊருகிற சங்கங்கள் ஆனவை த்வநிக்க-
செங்கமல மலரை ஏறி –
செவ்வி பெற்ற அலர்ந்த தானரைப் பூவை படுக்கையாகக் கொண்டு
அதின் மேல் ஏறி –
அன்னமலி பெடையோடு மமரும் செல்வத்து –
அன்னமானது அப்பூம் படுக்கையிலே
போக ஸ்ரோதஸ்ஸில்
தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற
நிரவதிக சம்பத்தை உடைய –
அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட
போக பிரதாநமாய்த்து இருப்பது –
தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –
———————————————
காவேரி தாய் பிரபாவம் -ஹேமாம் பத -பொன்னி –
அஞ்ஞானம் போகும்படி வேதம் பிரதானம் கீழ்
இதில் அந்த வேதத்தில் ப்ரதிபாத்யமான கைங்கர்யம் கொள்ளுவான்
அதுக்கு உண்டான விரோதிகளைப் போக்கு அருளுவதற்கு ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விருத்தாந்தம் –
குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-3-
குலத்தலைய மத வேழம்-கைங்கர்ய குலம் –
குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் –
நல்ல ஆகரத்திலே பிறந்து -தான் ஆனைகளுக்கு எல்லாம் பிரதானமாய்-
மதமுதிதமாய் –
மூலையடியே திரிகிற யானை விழுக்காடு அறியாதே
தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு
கொடிதான முதலையின் கையிலே அகப்பட்ட தாய்த்து –
கோள் முதலை பிடிக்க —
சபோபஹதமாய் -அதுக்குப் பரிஹாரமாக
எப்போதே இது நம் கையில் வந்து அகப்படுவது -என்று
இருக்கிற முதலையின் கையிலே புக்குப் பிடிபட –
(சாபம் போக -அன்றோ -ஆகவே கவ்வ என்னாமல் பிடிக்க )
வதற்கு அனுங்கி நின்று –
அதற்கு வெருவி –
முதலையினுடைய வ்யாபாரமேயாய்
தன்னுடைய வியாபாரம் அற்று நின்று –
நிலத் திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன –
நிலவைப் பரப்பா நின்ற விகாசத்தை உடைய சுடர் உண்டு -சந்தரன் –
அவனோடு ஒத்த தண்ணளியை உடையையாய்க் கொண்டு
வந்து தோற்ற வேணும் -யென்ன –
நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின் –
அதன் உடைய கையில் பூச் செவ்வி மாறாத படி
தன் திருவடிகளிலே இடுவித்துக் கொண்டு
அதினுடைய ஹிருதயத்தில் வியசனத்தைப் போக்கி அருளுகையாலே –
ஆஸ்ரிதர் உடைய விரோதியைப் போக்கி –
அவர்கள் உடைய அபேஷிதம் சம்விதானம் பண்ணும்
ஸ்வபாவன் என்கிற சுத்தியை எனக்கு
பிரகாசிப்பித்தவன் கிடீர் –
மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு –
சஹ்ய பர்வதத்தில் விளங்கா நின்ற சந்தனத்தையும்
அகிலையும் பொன்னையும் ரத்னங்களையும்
வாரிக் கொண்டு போந்து –
வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –
பாரம் பொறுக்க மாட்டாமை சுமை பொகடுவாரைப் போலே தள்ளி –
வயல் என்று பேர் பெற்ற இடம் எங்கும்
மடைகள் தோறும் வந்து பாயா நிற்கும் ஆய்த்து-பொன்னி யானது –
இப்படி அலைத்துக் கொண்டு பெருகி வாரா நின்ற காவிரியால் வந்த
நிரவதிக சம்பத்தை உடைய –
அவன் தான் ஆர்த்தர் இருந்த இடம் எங்கும் வந்து ரஷிக்குமா போலே வந்து பாயா நிற்கும் ஆய்த்து –
———————————————————————–
பொய்கை–ஒரு முதலை -யானை பெரு மிடறு செய்ய வந்து ரஷித்தவன்
சம்சார பிரளயம்-ஐந்து முதலைகள் இங்கு
ரக்ஷிக்க வா என்று கூப்பிடக் கூட அறியாத பூமியை ரக்ஷித்து அருளின
வராஹா நாயனார் போல் வந்து ரஷித்து அருளுவான் என்கிறார் இதில் –
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம் மீசன் காண்மின்
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-
பூகம்-கமுகு-
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி –
சிலம்பு துடக்கமான ஆபரணங்கள்
பலவற்றையும் அணிந்து
ஒரு மேருவானது நின்று விளங்குமா போலே
வராஹ வேஷத்தை உடையனாய் –
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம்மீசன் காண்மின் –
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –
அந்த பூமிக்கும் அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து-
அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே
வைத்து அருளின அச் செயலைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் –
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் –
அழகிய சிறகை உடைத்தான வண்டுகள்
மதுபான மத்தமாய்த் த்வநிக்க –
பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ –
கமுகுகள் திரண்ட சோலைகள் தோறும் குயில்கள் ஆனவை
முக்தர் சாமகானம் பண்ணுமா போலே கூவ –
மயில்கள் ஆல –
அதினுடைய பாட்டுக்கு ஈடாக மயில்கள் ஆலிக்க –
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத்து –
அலைத்து கொடு வருகிற திரைகளை உடைத்தான
ஜலமானது பர்யந்தம் எங்கும் சூழ்கையால் வந்த
நிரவதிக சம்பத்தை உடைத்தாய் –
தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –
சம்சார விபூதிக்கு ஆபரணம் போலே இருக்கிற
திரு அழுந்தூரிலே –
———————————————————
விரோதி நிரசனங்கள் இதில்
கீழே அனுகூல கஜேந்திர ரக்ஷணம்
ஜகத் ரக்ஷணம்
நாங்களோ பிரதி கூலர்
விரோதிகளும் கனத்து இருக்க
ரக்ஷிக்கும் படி -எங்கனம்
ஸர்வ சக்தன் -நரஸிம்ஹ ரூபனாய் ஹிரண்ய நிரஸனம்
பூதனா நிரசனங்கள் இதில் –
சின மேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய வெம் மாயோன் காண்மின்
இன மேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன் சொல்
அன மேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே —7-8-5-
மாயோன்-ஆச்சர்ய சேஷ்டிதங்களைப் பண்ணி அத்தை எனக்கு பிரகாசித்து அருளினவன்
இங்கு பிரகலாதன ஆழ்வானும் கர்ப்ப க்ருஹத்தில் உண்டே-
சின மேவும் அடல் அரியின் உருவமாகித் –
சிறுக்கன் பக்கலிலே அவன் மிகைத்து வரப் புக்கவாறே
அது கண்டு பொறுக்க மாட்டாமை
சினத்தை இட்டு வகுத்தால் போலேயே
கிட்ட ஒண்ணாத நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் –
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலியாத
மிடுக்கை உடைய ஹிரண்யன் உடைய
உடலைக் கீண்டு –
மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய வெம் மாயோன் காண்மின் –
இவனுடைய பருவத்தைக் கண்டால் –
கெட்டேன் இவனை அழியச் செய்கையால்
நெஞ்சிலே (இரக்கம் இல்லாமல் ) பொருந்தி இருக்கிற வஞ்சனத்தை உடையளாய் கொண்டு வந்த பூதனை
முடியும்படி அவள் உடைய முலை வழியே
அவளுடைய பிராணங்களும் வற்றி வரும்படி முலையை அமுது செய்த
ஆச்சர்ய பூதன் கிடி கோள்
இங்கு வந்து நிற்கிறவன் –
இன மேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன் சொல்
தர்ச நீயமான வளையை உடைத்தான கைகளாலே ஏந்தப் பட்டு
இவர்கள் தங்களோடு ஒத்து கோவை போன்ற அதரத்தை உடைத்தாய்
மரகதம் போன்ற நிறத்தை உடைத்தாய் இருக்கிற்
கிளியினுடைய பேச்சுப் போலே
இனிதான பேச்சை உடையராய் –
கற்ப்பிக்கிற வர்கள் பேச்சும் கிளியின் பேச்சும் வாசி தெரியாது –
(ஆச்சார்யர் உச்சாரணம் சிஷ்யர் அதே போல் இருப்பது போல் இங்கும் )
அன மேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –
அன்னம் போன்ற நடையை உடைய ஸ்திரீகள்
நெருங்கி வர்த்திக்கையால் வந்த நிரவதிக சம்பத்தை உடைய –
———————————————————–
விரோதி நிரசன சீலன் ஆகிலும்
பிரயோஜனாந்தர நசைகள் இல்லாமல் நாங்கள் இருக்க
இந்திரனுக்கும் உதவியவர் அன்றோ
தன்னை இரப்பாளன் ஆக்கி அவர்களுக்கும் கார்யம் செய்யும் சீலன் அன்றோ –
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-6-
தம்-ஈஸ்வரோஹம் -என்றும் வான் உலகம் அடைவதே ப்ராப்யம் என்று இருக்கும் தேவர்கள் –
மாணாய் இல்லாமல் மாண் உருவாய் -கொண்ட கோலம் அன்றோ -உருவத்தின் சீர்மை –
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி –
அநந்ய சரண்யராய்
அவனை அல்லாது அறியாத
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்
நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –
மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித் தானமர வேழலகு மளந்த
அவன் பக்கலிலே பெறா விடில் ஜீவிக்க அரிது -என்று
தோற்றும் இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையனாய் –
தனக்கு இல்லாதது மூவடியாய் –
அது உடையான் மகா பலியாய் –
அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று-
அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும்
அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –
வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் –
வெற்றியை உடைத்தாய்
அத்விதீயமாய்
ஆயதங்களுக்கு எல்லாம் பிரதாநமாய் இருக்கிற
திரு ஆழியைப் பரிகரமாக உடையவனான என் ஸ்வாமி கிடி கோள்
த்ரிவிக்ரம க்ரமாக்ராந்த த்ரைலோக்யஸ் ஸ்ப்புரதாயூத – என்கிறபடியே
இருக்கிற
திவ்ய ஆயுதங்களை உடையவன் –
ஜிதம் பகவதா ஜகத் -ஹரி வம்ச ஸ்லோகம் -ஜாம்பவான் கொண்டாடியது
(ஆழி எழ இத்யாதி )
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச்
தேன் மாறாத பொழில் களாலே
தழுவப் பட்ட அழகை உடைத்தான வீதி –
செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
அழகிய மாடங்கள் மாளிகைகள் கூடங்கள்
மற்றும் அவகாசம் உள்ள இடம் எங்கும் –
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே-
வித்யா வினயங்களால்
(ஆத்ம குணங்களால் )சம்பன்னராய்
பழையதான சீரையும் உடையராய்
நிரவதிக சம்பத்தை உடைய தேசம் –
———————————————————————
கீழே ப்ரயோஜனாந்தர ரக்ஷணம்
இப்படி அவன் செய்ய ஹேது
பிராட்டி போல் சேதனர் அனைவருக்கும் செய்பவன்
அவளது உகப்புக்காகவே ரக்ஷித்து அருளுபவன்
சக்ரவர்த்தி திருமகன் அனுபவம் இதில்
அடுத்து இரண்டு பாசுரங்களில் கிருஷ்ண அனுபவம் –
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-7-
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் –
சர்வேஸ்வரன் சந்நிதியிலும் பந்து கொண்டு போது போக்க வேண்டும் படியாய் –
அந்த பந்து தொடவும் பொறாதபடியான விரலை உடைய
பெரிய பிராட்டியாரோடு உண்டான சம்ஸ்லேஷத்துக்காக –
பிரிவுக்கு ஹேது பூதனாய்
சந்த்ராதித்யர்கள் மேலே சஞ்சரிக்கப் பெறாத அரணை உடைத்தாய் இருக்கிற
இலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் உடைய –
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின் –
அறுக்க அறுக்க முளைக்கையாலே அவதி இன்றிக்கே இருப்பதாய்
திண்ணியுதமாய் இருக்கிற தோள்களும் தலைகளும் தெறித்துப் பாய் வீழ
ஒரு கொலை அம்பாலே எய்து
அவனை அழித்து
விரோதி போக்கப் பெற்றோம் -ஆஸ்ரிதர்களும் குடி இருப்புப் பெற்றார்கள் –
என்று அவர்களுக்கு உகவக் கடவ உகப்பை தான் உகந்த
சர்வேஸ்வரன் கிடீர் –
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் –
அர்த்தத்தை நேராக காட்ட வல்ல தமிழும்
சம்ஸ்க்ருதமும்
இவை அடங்க விளங்குகிற நாவை உடையருமாய்
தனித் தனியே சதுர்முகனைப் போலே சிருஷ்டி ஷமராய் இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற –
செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –
இப்படி வை லஷண்யம் விஞ்சி இருந்துள்ள பிராமணர் உடைய ஹோம தூமத்தையும்
அழகிய செல்வத்தையும் உடைய அணி அழுந்தூர் –
————————————————————————-
கீழே பிராட்டி போல் சேதனர்கள் இடமும் அபி நிவிஷ்டனாய் இருப்பதற்கு மூலம் என் -என்ன –
ஆஸ்ரித கர ஸ்பர்சம் இல்லாவிடில் தரிக்க மாட்டாத ஸ்வ பாவன்
ஆஸ்ரிதர்கள் அனைவர் இடமும் பேர் அன்பு காட்டுபவன் அன்றோ என்கிறார் –
கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை யடர்த்துக் குரவை கோத்து
வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்
செம் பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே —7-8-8-
கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து –
ஆனைகளோடும் மலைகளோடும் பொருது
புண் பட்ட மஸ்தகத்தை உடைத்தாய்
குட்டிச் சுவர் போலே தளர்ந்து விழும்படி
அதனுடைய கொம்பை அநாயாசேன பறித்து –
மழ விடை யடர்த்துக் –
பருவத்தால் இளையதாய்
காட்டுக் காட்டு என்று மிருத்யு சத்ருசமாய் இருக்கிற
வ்ருஷபங்கள் ஏழையும்
அழியச் செய்து –
குரவை கோத்து –
பெண்கள் உடைய குரவை கூத்தில் தன்னையும் ஒருவனாக
விட்டுக் கோத்து –
வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின் –
விரோதி வர்க்கத்தை தானே கை தொட்டு போக்கினவன் –
அனுகூல ஸ்பர்சம் ஒழிய த்ரவ்யம் ஒழிய செல்லாமையாலே
பரிமள பிரசுரமான பூவை உடைத்தான குழலை உடைய யசோதை பிராட்டி வைத்த
தயிரையும் வெண்ணெயும் அமுது செய்து
அத்தாலே பெறாப் பேறு பெற்றானாக இருக்கிற
ஆச்சர்ய பூதன் கிடீர் –
செம்பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அங்கு உண்டான கமுகுகளில் பாளைகள் முத்தைக் காட்ட
பசும் காயானது மரகதத்தைக் காட்ட
பழங்கா யானது பவளத்தைக் காட்ட
ஆக இப்படி மூன்றும்
ஒரு காலே கண்டு அனுபவிக்கலாம்படி இருப்பதாய் –
வாழைகளின் உடைய மிகுதியால் வந்த அழகு குறைவற்று
எங்கும் ஒக்க ஸ்ப்ருஹணீயமாய்-
அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே –
அரணாகப் போரும்படியான மதிளாலே சூழப் பட்ட
பொழிலை உடைத்தாய் இருக்கிற திரு வழுந்தூர்-
——————————————————————
ஆஸ்ரிதகர ஸ்பர்சம் -அல்லது தரியாத வியாமோஹம்
அந்த வ்யாமிஹம் தூண்ட அன்பர்கள் விரோதி போக்குபவன்
நேமியைக் கைவிட்டால் அன்றோ ஆஸ்ரிதர்களை கைவிடுவான் –
ஊடேறு கஞ்சனொடு வில்லும் மல்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் –
சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில் மணி யணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே —7-8-9-
10 வயசு நிறைந்த பின்பு கம்ச வதம் -நம்பி பிறந்த ஏழு திங்களில் சகடாசூர வதம் –
எல்லாம் ஒன்றாகத் தோற்றுகிறது இவருக்கு
ஊடேறு கஞ்சனொடு -வில்லும் மல்லும்-
தன் பயத்தாலே உயர மஞ்சத்திலே போயேறி நிற்கிற
கம்சனோடே கூட –
அவன் தனக்கு அரணாக நிறுத்தின மல்ல வர்க்கமும்
வில் விழாவுக்கு என்று விட்டு வைத்த வில்லும் –
ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற –
ஆனை நலிந்தது என்று மாதுலனாய் கண்ண நீரை
விழ விட்டு
இருப்பதாக கோலின குவலயா பீடமும் –
அசூரா வேசத்தாலே தொட்டில் பருவத்திலே
மேலே வந்து விழக் கோலின சகடமும் –
இவற்றை எல்லாம் ஒரு காலே அழியச் செய்தாப் போலே
தோற்றுகிறது யாய்த்து
இவர்க்கு அனுசந்தானத்தில் வைசத்யத்தாலே –
(சம காலத்தில் நடந்தது போல் விசதமாகக் காட்டக் கண்டு அருளிச் செய்கிறார் –
வைசத்யத்தாலே-விளக்கமான தர்சனத்தாலே )
நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் –
நாள் செல்ல நாள் செல்ல மிடுக்கு ஏறி வாரா நிற்பதான
தோளை உடையனாய்
விஜயமானது எப்போதும் ஒக்க வர்த்தியா நின்ற புகழை உடைத்தான
திரு வாழியைக் கையிலே உடைய சர்வாதிகன் கிடீர் –
சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில் மணி யணிந்த திண்ணை தோறும்
இளமை மிக்கு வருகிற பொழிலாலே தழுவப் பட்டு
அத்தாலே எழில் மிக்கு இருக்கிற திரு வீதியிலே திரு நாள்களில்
ரத்னங்களால் அழுத்தப் பட்ட திண்ணைகள் தோறும்-
ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே —
ஆடுகைக்காக ஏறின புஷ்பாதிகளால் அலங்க்ருதமான
குழலை உடைய ஸ்திரீகள் உடைய நெருக்கத்தால் வந்த
நிரதிசய
சம்பத்தை உடைய திரு வழுந்தூரிலே
ஆடு -என்று பரிமளம்
பரிமளம் மிக்கு இருந்த மலர்க் குழல் –
———————————————————-
பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே —7-8-10-
பன்றியாய் மீனாகி யரியாய் –
ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால்
தன்னைப் பேணாமையும் ரஷிக்குமவன் ஆய்த்து –
பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை –
பூமியை சிருஷ்டித்து
பன்றியாய் இத்யாதிகளால் காத்து -அத்தை ரஷித்து
திரியவும்
பிரளயம் வர -வயிற்றிலே வைத்து –
திரிய வெளிநாடு காணப் புறப்பட விட்டு
இப்படி சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில்
தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற
சர்வாதிகனை –
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் –
அபிமானிகளான ப்ரஹ்மாதிகளும் வந்து ஆஸ்ரயித்து
தம்தாமுடைய அபிமதங்கள்
பெற்றுப் போம்படியாக வந்து நிற்கிற இடம் ஆய்த்து –
தேவர்களுக்கு எல்லாம் நியாமகனாய் இருக்கிற இந்த்ரனும்
இவ்வருகில் உள்ளாரில் காட்டில் விஜாதீயமான ஜென்மத்தை உடைய ப்ரஹ்மாவும்
அவன் மகனான ருத்ரனும் –
அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை –
திருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிக்க
திரு வழுந்தூரிலே நின்று அருளின
சர்வாதிகன் ஆனவனை –
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல் –
சத்ரு நிரசனம் பண்ணிக் கறை கழற்ற அவசரம் இன்றிக்கே இருப்பதாய்
மஹத் தனு -என்னுமா போலே
ஒருவரால் நியமித்து ஆள ஒண்ணாத படி நெடிதாய் இருந்துள்ள வேலைக்
கையிலே கொண்ட ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த இனிய பாடலான –
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –
இப் பத்தையும் வல்லார்-
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்-என்று தாம் சேர்த்து அனுபவித்த பிரகாரம் இருக்கிறபடி –
முதல் பாட்டு -ஷீரார்ணவம்-அவதார கந்தம் –
2-4-5-10—அங்கு நின்று-திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும்
ஆகவே ஒன்றினோடு நாலும் ஒரு பிரகரணம்
அடுத்து ஐந்தும் -தேவ மனுஷ்ய வேறே பிரகரணம்
ஹரியாய்–வாமன -ராம -கிருஷ்ண -அவதாரங்கள்
கஜேந்திர ரஷணம் வாமன – ராம கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள்
இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு
ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை –
திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு
உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார்
என்று அருளிச் செய்வர் –
———-
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
செங்கண் பொன்னன் கஞ்சன் மல்லர் இலங்கையன்
மங்க மறை இந்திரன் வெள்ளம் பூ மங்கை
அளிக்கும் அழுந்தூர் அமரர் கோ அடைந்து உய்யும் என்
கலியன் கெடுக்கும் கள்ளம் -68-
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply