ஸ்ரீ பெரிய திருமொழி-6-9—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

(மீண்டும் ஒரு முறை சரணாகதி இதில்
1-நைமிசாரண்யம் முதல் பத்தில் நரக அனுபவ பயத்தால்
2-அடுத்து திருவேங்கடம் -ஆபாச பந்துக்களை விட்டு
3-திருக்காவளம் பாடி –
4-திரு வெள்ளக்குளம் -இடரைக் களையாய்
5-திருவரங்கம் -ஏழை ஏதலன்-
6-திரு விண்ணகர் –6-2-
இப்பொழுது ஏழாவது சரணாகதி
பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் – உலகம் உண்ட பெரு வாயா போல் இங்கும்
திருவாளன் இணை அடி அடை நெஞ்சே –சரணவ் சரணம் -உபாயமாக திருவடிகளை )

பெடையடர்த்த -பிரவேசம் –

நான் சென்று நாடி நறையூரிலே கண்டேனே -என்று
ஆஸ்ரயணீய வஸ்துவை ஒரு தேச விசேஷத்தில் போய் காண்கை அன்றிக்கே
சம்சார பூமியிலே
திரு நறையூரிலே
காணப் பெருகையால் வந்த அலாப்ய லாபத்தால்
ஹ்ருஷ்டர் ஆனார் –

அவனைக் காணப் பெற்ற பின்பு
அவன் ஸ்வரூபத்துக்கும்
நம் ஸ்வரூபத்துக்கும்
அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை  பண்ணப் பார் கிடாய் நெஞ்சே
என்று திரு உள்ளத்தைப் பார்த்து அருளிச் செய்கிறார் –
(பிரபத்தியை இங்கு வ்ருத்தி விசேஷம் என்கிறார் -பொதுவாக கைங்கர்யத்தைச் சொல்லுவோம் )

திரு நறையூரிலே திர்யக்குகளும் அகப்பட
பேடை பிரதானமாய்த்து இருப்பது –
ஆகையால் அங்கு நிற்கிற நம்பிக்கும் பிராட்டி பிரதாந்யம் உண்டாகக் கடவதே
ஆகையால் ஆஸ்ரயணீயதை குறைவற்ற தேசம் ஆயத்து –
ஷணம் தோறும் ஸூகுமாரராய் இருக்குமவர்கள் முகத்திலே நீர் ஏறிட்டுக் கொள்ளுமா போலே
பிராப்தி அளவும் பிரபத்தி பண்ணா நிற்பார் ஆயத்து

சக்ரு தேவ வுக்கு –
சஹ சைவ ( சடக்கென )-என்று ஆழ்வான்
நிர்வஹிப்பதோர் பொருள் உண்டு இறே-

ஒரு ஜென்மமாக பிரபத்தி பண்ணுமது சாலவும் அ சக்ருத்தாய் இருந்ததோ
பெற்ற பேற்றைப் பார்த்தால் -என்று அருளிச் செய்தார் எம்பார் –

(அந்யத் பூரணாத் –கும்ப -அந்யத் பாதார -அந்யத் குசல ப்ரஸ்னம் போதுமே
நூறு தடா வெண்ணெய் அக்கார அடிசில் வேண்டுமோ என்ன
பெறுகிற பேற்றுக்கு -வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் உண்டவனுக்கு
அந்யத் பூர்ணத்துக்கும் அதமம் தானே இவையும் )

(சரணம் முதல் தடவை -அப்புறம் இனிமையால் விடாமல் சொல்கிறோம் -பட்டர் நிர்வாகம்
ஆர்த்தி உடன் சரணாகதி கீழே -பரம போக்யமாக இருப்பதால் இப்பொழுது -)

பகவல் லாபம் ஒழிய புறம்பு தரிக்க வல்லர் அல்லர்  –
இது ஒழிய வேறு ஒரு உபாயம் உண்டு என்று இருக்குமவர் அல்லர் –
வேறு ஒரு உபாயம் உண்டு என்று இருக்கும்படி அன்று இறே
இதில் உண்டான நிலை –

(ஸக்ருத் ஏவ -ஒரு முறை ஒன்றே -இது ஒன்றே உபாயம் வேறே இல்லை -என்ற அர்த்தத்தில் இது
ந சாஸ்திரம் நைவ க்ரமம் -பக்தி பரவசராய் இருப்பதால் )

(அநு ரூபமான வ்ருத்தி விஷயம் -அநந்ய போக்யத்வமான -நாராயணாயா -அதன் அநு குணமாக பிரபத்தி

ஸ்த்ரீ பிராயர் முக்யத்வம்
ஏழை ஏதலன் பிராப்திக்கு பூர்ண பிரபத்தி
அவன் ஸ்வ தந்த்ரன்
பாசுரம் பெற
இவருக்கு உகந்து அருளினை நிலங்களில் பிராவண்யத்தாலும் –
இங்கே வைத்துக் கொண்டு அனுபவிக்கத் தேட
பிரபத்திக்கு குறைவற்ற தேசமாக இங்கு பிராட்டிக்கு முக்யத்வமாக இருக்க
மீளவும் சரணம்
பரம போக்யமாக இருப்பதால் விட மாட்டாமல் கண்ட போது எல்லாம் செய்கிறார் என்றபடி )

(ஆர்த்தி அதிசயத்தால் கீழே பல முறை
இப்பொழுது போக்யத்தால் விடமாட்டாமல் செய்கிறார்
விளம்ப நிஷேதம் -காலம் கடத்தாமல் -உடனே செய்ய வேண்டும் -ஆவ்ருத்தி நிஷேதம் இல்லை கூரத்தாழ்வான்
ஆவ்ருத்தி நிஷேத பரமானாலும் பக்திக்குப் போல் அநேக ஜென்ம ஆவ்ருத்தி வேண்டாம் இதுக்கு -எம்பார்
இப்படி இரண்டு வித பரிகாரம்-
அசக்ருத்தாயாக இருக்காதே -ஒரு முறை பண்ணினத்துக்கே சமம் –
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு -பக்தி ஆரம்ப விரோதி தொலைந்து பின்பு பக்தி செய்து உபாசகர்
அத்துடன் ஒப்பிட்டால் இது சுலபம்
இங்கே கண்ட மட்டில் -நினைத்தபடி அனுபவிக்க வேறே ஒன்றை அறியாமல் செய்கிறார் என்றபடி -)

———————————————————————–

பெடை யடர்த்த மட வன்னம் பிரியாது மலர்க் கமலம்
மட லெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடை யடர்த்த சிர மேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை யடியே  யடை நெஞ்சே —6-9-1-

(திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே-ஸ்ரீ மன் நாராயணன் சரணவ் சரணம் ப்ரபத்யே –
பூர்வாக்யார்த்தம் இதில் -பிரியாது-நித்ய யோகம் மதுப்பின் அர்த்தம் )

பெடை யடர்த்த மட வன்னம் –
பூவிலே சஞ்சரிக்கையாலே பேடைக்கு சேவலின் பக்கல்
எப்போதும் ஒக்க அதிசங்கை வர்த்தியா நிற்கும் ஆய்த்து –
பேடையாலே அடர்க்கப் பட்ட மட அன்னமானது –
மட வன்னம் போய் அத்தலை இத்தலை யானபடி –
பல் காட்டுவது காலைப்  பிடிப்பது இரப்பதாகா நிற்கும் –

பிரியாது –
ஒரு ஷணம் இத்தை விட்டு புறம்பே போகாதே
இதுக்கு இனியது கொடு வந்து இட  வேணும் -என்று
மது பான அர்த்தமாகவும் போகாதே –

மலர்க் கமலம் மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர் –
வேறு ஒரு பூவில் போய் அன்றிக்கே
அந்த பூத் தன்னிலே இருந்து
மது நிரம்பின பூவில் நின்றும்
மடலை வாங்கித் தான் சேவிப்பது
பேடையை சேவிப்பதாகா நிற்கும் –
(மடல் -தாமரை இதழ்
சேவிப்பது சேவகம் பண்ணுவது குடிப்பது )

இது வாய்த்து இவ் ஊரில் வயல் இருக்கும்படி –
உள்ளு நிற்கிறவன் எத்தனையேனும் அபிமானிகளுக்கும் புகலாம்படி இருக்குமவன் –
(புருஷர்கள் அவர்கள் வசப்பட்டு இருப்பர் இங்கே -புருஷோத்தமனும் அப்படியே –
வாத்சல்யத்துடன் இருப்பானே )

முடை யடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்-
லோக குருவுமாய் தனக்கு பிதாவாயும் இருந்த வனுடைய தலையை அறுத்து
அத்தாலே பாதகியாய் (பாதகம் -மிக்க பாவம் )
முடை மிக்கு இருந்துள்ள -துர்க் கந்தம் மிக்கு இருந்துள்ள –
ப்ரஹ்ம சிரஸை தரித்து
கூறு செய்த ஊரிலே கையும் கைத் தளையுமாய் திரியும் கூறு செய்வானைப் போலே
ஈஸ்வர அபிமானியாய்
தான் செலுத்திப் போந்த பூமிப் பரப்பு எங்கும்
பிஷை புக்குத் திரிந்தான் ஆயத்து –

இடர் கெடுத்த திருவாளன் –
அருமந்தான் ஒரு மதிப்பன் இப்படி எளிவரவு படுவதே -என்று திரு உள்ளம் புண்பட்டு
அவனுடைய சாபத்தை போக்கினான் ஆயத்து –
அதுக்கடி என் என்னில்

திருவாளன் –
தத்ர நாராயண ஸ்ரீ மான் மயா பிஷான் -என்கிறபடியே
ஸ்ரீயபதி யாகையாலே
(ருத்ரனே பார்வதிக்கு சொன்னது )

இணை யடியே  யடை நெஞ்சே  —
அவனுடைய -இணை யடியே  யடை நெஞ்சே  —
அபிமானிகளும் ஆபன்னர் ஆன அன்று
பற்றும் திருவடிகளை
நெஞ்சே நீ பற்றப் பார் –

(விடாமல் பதிகம் தோறும் நெஞ்சுக்கு உபதேசம்
உறவாடி பேசி தட்டி நம் பக்கம் கூட்டி வர வேண்டுமே )

————————————————————-

கீழே சிவன் ஆபத்தைப் போக்கி அருள் செய்த படி
வாத்சல்யம் உள்ளவனைப் பற்ற அருளிச் செய்து
அப்படி குணாதிகனும் கூட
குற்றமே செய்து கொண்டே இருக்கக் கூடாதே –
ராவணன்- ந நமேயம்-என்று இருந்தவனை -வணங்கலில் அரக்கனாக -இருக்கக் கூடாதே
அடை நெஞ்சே -வணக்கத்துடன் பற்று என்கிறார் –

கழி யாரும் கன சங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழி யார முத்தீன்று  வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே–6-9-2-

கழியாரும் கன சங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி –
சமுத்ரத்தில் நின்றும்
சங்குகள் ஆனவை கழி நிறையும் படியாக
வந்து புகுரும் ஆய்த்து-உப்பு நீரில் நின்றும் ரசித்த ஜலத்துக்காக –
(திரு சங்கணித்துறை -கடலில் இருந்து தாமிர பரணி வருமே அதே போல் )

கன சங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி –
கர்ப்ப கேதத்தாலே ஐப்பசி திரு நாளுக்கு
பிராணிகள் சர்வதோ திக்கமாக வந்து புகுருமா போலே
எங்கும் ஒக்கக் கலந்து
ஒழுகு மாறாதே வந்து புகுந்து –

வழியார முத்தீன்று  வளம் கொடுக்கும் திரு நறையூர் –
ஊர் ஏற்றின தார்மிகர் அவகாசம் உண்டாகும் படி
குறும் தெருவும் நெடும் தெருவும் உண்டாக்கினார்கள்
இவை சஞ்சார யோக்யதை இல்லாத படி
வழிகளிலே முத்தை மலையாக சுரவா  நிற்கும் ஆய்த்து –

பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாரும் சரம் துரந்தான்
ஜனனி என்று வாசி பார்க்க மாட்டாமையாலே
மிக்க பழியைத் தரித்து இருப்பானாய்
முன் கை மிடுக்காலே தோன்றின படி நடந்து திரிகிற
ராவணன் உடைய
தலைகள் சிதறும்படியாக –
எதிரிகளை அம்பாய் நலிகை அன்றிக்கே
நெருப்பாக சுடுகிற் அம்புகளை நடத்தினவன் உடைய –

அடி இணையே அடை நெஞ்சே  –

————————————————–

சர்வாத்மா ந நமேயம் என்பாரை அழித்தது கீழ்
அனுகூலர் விஷயத்தில் கர ஸ்பர்சம் பட்ட த்ரவ்யம் அல்லது செல்லாமை உடையவன்
இவன் என்கிறார்

சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3-

சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின் திளை கொண்ட பழம் கெழுமி
சுளை  மிக்கு இருந்துள்ள பலாப் பழம் ஆனது தேன் ஒழுக –
வாழைகளில் பருத்த பழங்கள் ஆனவை நெருங்கி

திகழ் சோலைத் திரு நறையூர் –
விளங்கா நின்றுள்ள
சோலையாலே சூழப் பட்ட திரு நறையூர் –

வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல்
நம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவன் –

மூவுலகோடு அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –
பூமிப் பரப்போடு கூட
தயிரையும் வெண்ணெயும் அமுது செய்தவனுடைய
திருவடிகளை அடை –

—————————————————————

ஆஸ்ரித கர ஸ்பர்சம் அல்லது செல்லாமை உடையவனாய் இருந்தாலும்
அந்த ஆஸ்ரிதரே விரோதித்தான் ஆகில்
தான் மலை எடுத்தாகிலும் ரக்ஷிக்கும் ஸ்வ பாவன் –

துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
மன்றாரக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே—6-9-4-

துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் –
நெருங்கி  ஒழுங்காய் இருந்துள்ள துகில்களாலே சமைந்த
கொடிகள் ஆனவை
மாளிகைகள் எங்கும் பரம்பி நெருங்கி –

நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர் –
ஆகாசம் தோற்றாத படி
மறைக்கிற நிரவதிக சம்பத்தை உடைய
திரு நறையூர் –

மன்றாரக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
மன்றில் பரப்படைய
பாழ் தீரும்படி
குடக் கூத்தாடி-
இந்த்ரன் வர்ஷிப்பிக்க  மலையை எடுத்து
வர்ஷத்தை பரிக்ரஹித்த

குன்றாரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே –
மலையாலே மலையை எடுத்தால் போலே
திரண்ட தோளை உடையவன் –

——————————————————

ஊருக்காக வந்த வர்ஷத்தால் ரஷித்தது கீழே
லோகத்துக்காக வந்த பிரளயம் ரக்ஷித்து அருளியது இதில் –

அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னு மணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
பகல் கரந்த சுடராழிப் படையான்  இவ் உலகு எழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே  அடை நெஞ்சே—6-9-5-

அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னு மணி முத்தும் மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர் –
அகில் குறடும்
சந்தனமும்
அம் பொன்னும்
அழகிய முத்தையும்
போக்தாக்கள் அளவில்லாத படி கனக்கக் கொடு வந்து தள்ளா நின்றுள்ள
ஆச்சர்யமான பொன்னியை உடைய திரு நறையூர் –

பகல் கரந்த சுடராழிப் படையான்  –
நிரவதிக தேஜஸ்ஸாலே தேஜோ பதார்த்தத்தை மறைத்தான் ஆய்த்து
ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம்
திரு ஆழி ஆழ்வான் உடைய தேஜஸ்ஸூ கண் கொண்டு முகக்க ஒண்ணாத படி
இருக்கையாலே இருண்டு காட்டிற்று ஆயிற்று –

இவ் உலகு எழும் புகக் கரந்த திரு வயிற்றன் –
லோகங்கள் ஏழையும் வயிற்றிலே வைத்து
பிரளயம் தேடி வந்தால்
இங்கு உண்டோ என்று பண்டையிலும் இளைத்துக் காட்டும்
திரு வயிற்றை உடையவன் –

பொன்னடியே  அடை நெஞ்சே  –
தன்னைப் பற்றினாரை உள்ளே இட்டு
தன்னை பிரளயத்துக்கு இலக்காக்கி
நோக்குமவன் திருவடிகளிலே அடையப் பார் –

————————————————-

கீழே நாராயண சப்தம்
இங்கு ஸ்ரீ மத் -மதுப்பின் -நித்ய யோகம்
ஆபத்சகாதவாதிகள் சொல்லும் புடையில் நாராயண சப்த அர்த்தங்கள்
இதில் ஸ்ரீ மத் அர்த்தம் -மெல்லியலைத் திரு மார்பில் மன்னத் தான் வைத்து உகந்தான்

பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை  யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில்
மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –6-9-6-

பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும் மின்னத்
சிம்ஹங்கள் ஆனைகள் உடன் பொருது
அதின் மஸ்தகத்தை  கிழித்து
அது உதிர்த்த முத்துக்களையும்
மலைகளில் உண்டான பொன்னையும்
சிம்ஹங்களின் உடைய உகிரையும்
ஆணைக் கொம்புகளையும்
ஆற்றுத் தலையிலே மேற்கே மின்ன

தண் திரை  யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர் –
தண் திரைகள் ஆனவை -நீர் வரவானது
கொடு போந்து தள்ளா நிற்கும் ஆய்த்து –

மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில்
மின் போலே நுண்ணிய இடையை உடையவளாய்
சௌகுமார்யத்துக்கு தானும் ஒப்பாகாதபடி
இருக்கிற பெரிய பிராட்டியாரை திரு மார்பில் –
(வஞ்சுள வல்லித் தாயார் )

மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –
மன்ன –
நாம் சென்று திருவடிகளைக் கிட்டினால்
அவன் நம்முடைய தோஷங்களை கணக்கிடுவான் ஆகில்
ந கச்சின் ந அபராத்யதி -என்று அத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியை உகந்து
எப்போதும் திரு மார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறவன் உடைய
ஸூகுமாரமான திருவடிகளை அடை
மதுப்பில் அர்த்தத்தை சொல்லுகிறது –

—————————————————–

திருவடி அர்த்தம் இதில்
கீழே ஸ்ரீ மத் அர்த்தம்
சரணவ் சப்தம் உப லக்ஷணம் திரு மேனி
இவற்றால் நித்யர் அடியார் உடன் வாசி இல்லாமல் உஜ்ஜீவிப்பவன்
இதனால்-உபய விபூதி நாதத்வத்துக்கு -வெற்றி மாலை சூடி இருப்பவன்

சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடையில்
பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும்  திரு  நறையூர்
கார் தழைத்த திரு வுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோன்
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே  –6-9-7

சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் –
அழகு மிக்க கதிரை உடைய செந்நெல் –
வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும் படியான
தர்ச நீயமான செந்நெல் –

செங்கமலத் திடையிடையில் -பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும்  திரு  நறையூர் –
முதல் தன்னிலே கரும்பு நிலத்திலே யாய்த்து செந்நெல்லை நடுவது –
அதுக்கு களையாக நடுவிலே தாமரை எழும் –
முன்பு வெட்டிப் பொகட்ட-கருப்பங்கட்டை – கரும்பு பழைய வாசனை கொண்டு எழும்
அது பலிக்க வேணும் என்னும் அபிசந்தி பண்ணி
கிருஷி பண்ணின செந்நெல்லுக்கு முன்பே அத்தைக் கொடுக்கும் –

கார் தழைத்த திரு வுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோன்-
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகி ஆகாச அவகாசம் இடம் அடையும் படியான வடிவை உடைத்தாய்
கொடு வந்து தோற்றுகிற
மேகம் போன்ற வடிவு அழகை உடைய –

கண்ண பிரான் –
உபகார சீலனான கிருஷ்ணன்

விண்ணவர் கோன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –

தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே  –
உபய விபூதி நாயகன் என்னும் இடம் தோற்ற
வைத்த வளையத்தை உடையவன்
திருவடிகளை அடை –

——————————————-

கீழ் மாம் ஏகம் சரணம் சரணம் வ்ரஜ -அர்த்தம் அருளிச் செய்து
அதிலும் வியாவர்த்தமான போக்யத்வம் இதில் –

குலை யார்ந்த பழுக் காயும் பசும் காயும்  பாளை முத்தும்
தலை யார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலை யார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி
நிலை யார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8-

நீள் கழலே-போக்யத்தை மிக்கு இருக்கும் -உபாயமாக இல்லையே இப்பதிகம் –

குலை யார்ந்த பழுக் காயும் பசும் காயும்  பாளை முத்தும் –
குலை மிக்கு இருந்துள்ள பழுக் காயும்
பழுக்கப் போகிற காய்களும்
பாளைகளிலே நிறைந்து உள்ள  முத்துக்களும்
பிரதம அவஸ்தையும் சரம அவஸ்தையும்
ஒரு காலே கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் ஆயத்து –

தலை யார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர் –
இளம்  குலைகளும் -ஆகிய இவைகளினால்  நிறைந்து உள்ள தேசம் –

மலை யார்ந்த கோலஞ் சேர் மணி மாடம் மிக மன்னி நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –
மலை போலே தர்ச நீயமான திரு  மணி மாடக் கோயிலின் உள்ள
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே
நிலை யார நின்றான் ஆய்த்து-

நிற்கிற  போதை அழகைக் கண்டு
இவன் இருத்தல் சாய்ந்து அருளுதல் செய்து இவ் வழகை இழக்க வரில் செய்வது என்-என்று
துணுக் துணுக் என்ன வேண்டும்படியாய் இருக்கும்  –

மலையை ஒக்க ஒக்கத்தை உடையதாய்
அழகை உடைய மணி மாடங்கள் மிக உடைய
திருநறையூரில் மன்னி நிலையார நின்றான் –

—————————————————————–

கீழே நிலையார நின்ற படியை அருளிச் செய்து
அந்த நிலையிலே ஆஸ்ரயணீயர்களான ப்ரஹ்மாதிகளும் வந்து ஆஸ்ரயிக்க
சர்வாதிகனாய் உள்ளான் இங்கே-என்கிறார்

மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறையார வான் மூடும்  நீள் செல்வத் திரு நறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே —6-9-9-

மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் நிறையார
வேதோக்தமான  மகா யஞ்ஞங்களை
அநபி சம்ஹித பலமாக அனுஷ்டியா நின்றுள்ள
பிராமணர் உடைய ஹோமத்தில் உண்டான கொழுவிய புகையானது
பரப்புள்ள இடம் எங்கும் போய் ஆகாச அவகாசத்தை மறைக்கையாலே

வான் மூடும்  நீள் செல்வத் திரு நறையூர் –
ஆகாசம் தோற்றாத படி இருக்கிற நிரவதிக சம்பத்தை உடைத்தான தேசம் –

பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த –
சாதனா வேஷம் தோற்றும்படி சடையையும்
போக பிரதாந்யம் தோற்ற  சந்திரனையும் தரித்துக் கொண்டு இருக்கிற ருத்ரனும்
அவனுக்கு ஜனகனான சதுர் முகனும்
ஸ்தோத்ராதிகளைப் பண்ணி ஆஸ்ரயிக்க –

இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே —
லோகத்துக்கு ஆஸ்ரயணீயராய் இருப்பாருக்கும்
ஆஸ்ரயணீயனாய் இருக்கையாலே
சர்வாதிகன் –
அவன் திருவடிகளையே ஆஸ்ரயிக்கப் பார் –

———————————————————

திண் களக மதிள் புடை சூழ்  திருநறையூர் நின்றானை
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண் களகத்து இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10-

முதல் அடியில் -களகம்-சந்தனப்பூச்சு
இரண்டாம் அடியில் -களகம்-ஹம்சம் -கதிர் செந்நெலுக்கும்
மூன்றாம் அடியில் –பண்கள் அகம் இங்கு -ராகத்துக்கு சாரம் -சார தமம்
நான்காம் அடியில் -விண்கள் அகத்து -மேல் உள்ள லோகங்கள் ஸ்ரேஷ்டம்-பரமாகாசம் ஸ்ரீ வைகுண்டம்-
இதில் கலியன் பெயர் இல்லை –

திண் களக மதிள் புடை சூழ்  திருநறையூர் நின்றானை-
திண்ணியதாய்
சாந்திட்ட மதிள்களாலே சூழப் பட்டு இருந்துள்ள
திருநறையூரில்  நிற்கிற சர்வேஸ்வரனை –
வஸ்துவின் சீர்மைக்குத் தக்க அரண் போருமாய்த்து –

வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன் –
அழகிய தான அன்னங்களின் உடைய சஞ்சாரத்தை ஆதல்
அன்றிக்கே
செந்நெல் கதிர்களின் உடைய ஒளி ஆதல்
களகம் -என்று அன்னத்துக்கு பேராய்
அவை ஆகிற நிலவை உடைத்தான வயலாலே சூழப் பட்டு இருந்துள்ள
திரு மங்கையில்  உள்ளாருக்கு நிர்வாஹகரான
திரு மங்கை ஆழ்வார் –

பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் –
பண்களின் உடைய அகமான பண்ணிலே சொன்ன
இப் பாடல் பத்தும் வல்லார் –

விண் களகத்து இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே
போக பூமிகளில் பிரதானமான பரம பதத்திலே போய்
நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாய்
அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

————–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

பெடையாம் பூ மங்கையோடு பத்தர் தம் பண்டம்
அடைந்து உகந்து அண்டர் தொண்டர் தம் இடையூறு
நீக்கு நிறையூர் நம்பி தாள் சரணாய் நீலன் தான்
நோக்கும் புகலாய்க் கிடந்து -59-

புகலாய்க் கிடந்து -ஒரே சொல்லாக்க கொண்டு ரக்ஷகனாகக் கொண்டு என்றபடி
சரணாய் நோக்கும் -சரணாகதி அடைகிறார் என்றவாறு
உலகம் உண்ட பெறுவான் போலே இந்த பதிகத்தில் பாசுரம் தோறும் எம்பெருமான் அடியிணை உண்டே –
பூ மங்கை -மலர்மகள் மண் மகள் இருவரையும் குறிக்கும்
பெடையாம் பூ மங்கையோடு -பூ மங்கையாம் பெடையோடு என்று மாற்றி பொருள் –

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading