கீழ் எல்லாம் திரு உள்ளத்தைக் குறித்து உபதேசிக்க
முதல் இரண்டில் நேராக திரு உள்ளத்துக்கு
அடுத்து பர உபாசம் முகத்தால் திரு உள்ளத்துக்கு
அடுத்து நேராக திரு உள்ளத்துக்கு
அனுபவ ப்ரகர்ஷத்தால்
சன்னிஹிதனாக அவன் நித்ய வாசம் பண்ண
அவனைக் காணப் பெற்றேன் என்று ஹர்ஷிக்கிறார் இதில்
மான் கொண்ட -பிரவேசம் –
இந்த்ராதி தேவதைகள் தன்னைக் கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே
பிரயோஜனாந்தரங்களை அபேஷிக்க
அவர்களுக்காக தன்னைப் பேணாதே
இரப்பாளன் ஆக்கி –
கடல் கடைந்தும்
இப்படி அபேஷித சம்விதானம் பண்ணும் அவனை
நான் உத்தேச்யனாகப் பற்றி
அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற திரு நறையூரிலே நான் காணப் பெற்றேன் –
அத் தேசமே உத்தேச்யம் -என்கிறார் –
ஏழு திவ்ய தேசங்கள் சேர்த்து ஏழு பாசுரங்கள் இதில் அருளிச் செய்கிறார் –
——————————————————-
மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1-
தாளால் அளந்த பெருமானை- திரி விக்ரமன் -சொன்ன உடனே திரு வேங்கடம் –
மான் கொண்ட தோல் மார்வில்-வக்ஷஸ்தல மஹா லஷ்மி மறைக்க கிருஷ்ணாஜினம் யவனிகா திரை
அளந்த பெருமானை-சர்வ சேஷி –
மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் –
மானுடைத்தான தோலை மார்விலே யுடைய மாணியாய் –
தன்னுடைய விநீத வேஷத்தைக் காட்டி
அவன் நெஞ்சை நெகிழ்த்து
பின்னை யாய்த்து பூமியை வாங்கிற்று –
மாணியாய் –
பூர்வ ஜன்மமும் இரந்தேயோ ஜீவித்தது -என்று தோற்ற இரக்கை –
கொண்டு அல்லது போகேன் -என்று இரப்பிலே
தகண் ஏறின படி –
மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத் –
கிடந்த ஆனை கண்டு ஏறின மகா பலியதான பூமியைத்
தான் அவன் பக்கலிலே இரந்து பெற்றானாய் இருக்கை-
அவன் அல்லாததை அவனதாக்கி
உடைய தான்
தன்னது அல்லாதது ஓன்று அவன் பக்கலிலே பெற்றானாய் இருக்கை –
நமக்கு ஏதேனுமாக –
பெறும் இத்தனை யன்றோ வேண்டுவது -என்று இருந்தான் –
தாளால் அளந்த பெருமானை- –
கையிலே நீர் விழுந்த அநந்தரம்-
அவன் மறு மனஸ்ஸூ படுவதற்கு முன்பே எல்லை நடந்து கொண்டான் ஆய்த்து –
தாளால்-
பிராட்டி திரு முலைத் தடத்திலும் கண்ணிலும் வைத்துக் கொள்ளுகைக்கு அர்த்திக்கும் படி
ஸூகுமாரமான திருவடிகளாலே யாய்த்து
காடையும் மேடையும் அளந்து கொண்டது –
பெருமானை –
சர்வ சேஷியாய்-
சர்வாதிகனாய் –
இருக்கிறவன் இப்படி தன்னை தாழ விட்ட இடத்திலும்
தாழ்ந்து தோற்றாமை இறே
தாழ விட வல்லான் ஆய்த்து –
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை –
தேன் மிக்க பர்யந்தத்தை உடைத்தான
திரு மலையிலே வந்து நிற்கிறவனை –
தாளால் அளந்த போது தப்பினார்க்கும் இழக்க
வேண்டாத படி திருமலையிலே வந்து நின்றான் ஆய்த்து-
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –
அவன் நாடித் திரிகிற போது
வைமுக்யம் பண்ணி இறாய்த்து திரிந்த நான்
தேடிச் சென்று –
நறையூரில் –
அறுகாத பயணம் போய்
பரம பதத்தில் காண்கை அன்றிக்கே
விடாய்த்த இடத்தில் தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே
திரு நறையூரிலே காணப் பெற்றேன் –
—————————————————–
இந்திரனுக்காக இரந்த
இதில் அந்த இந்த்ராதிகளுக்கு அமுதம் அருள
உடம்பு நோவ கடலைக் கடந்து
மீனாய் பிரளயம் கொண்ட பூமியை ரஷித்த படி
கடல் கடைந்த போது பிராட்டி வர ஆலிங்கனம் -திருவாலி -சேர்த்து அனுபவம் இதில்
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே—6-8-2-
அமைத்த-கீழ் வயிற்றில் பிரளய ஆர்ணவத்தை அடக்கி பூமியை மேலே வைத்து
ரக்ஷித்து அருளினான் அன்றோ
முந்நீரை முன்னாள் கடைந்தானை –
மூன்று வகைப் பட்ட நீர் திரண்ட கடலை
கிருத யுகத்திலே கடைந்தவனை –
தேவர்கள் அசுரர்கள் கையிலே அகப்பட்டு கிடக்கப் புக்கவாறே
அவர்களை ஜீவிப்பைக்காக
கடலை நெருக்கிக் கடைந்தான் ஆய்த்து –
மூழ்த்த நாள் –
லோகத்தை பிரளயம் கொண்ட காலத்து –
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத் –
அந்நீர் தானே பாடி காப்பாரே களவு காணுமா போலே
ஜகத்தை அடையக் கோக்க
ஒரு மத்ஸ்யமாய்
அத்தை தன்னுடைய செலுவிலே ஏக தேசத்திலே
அடக்கினான் ஆய்த்து –
கடல் கடைகைக்கு தேவர்களையும் அசுரர்களையும் கூட்டி
தானான மேன்மை குறையாதே நிற்க வேண்டிற்று –
ஜகத்துக்காக வந்த பிரளயத்தை பரிகரிக்கிற இடத்தில்
அங்கன் ஒரு சகாயமும் இன்றிக்கே
தானும் தன்னைக் குறைய விட்டு நிற்கும் அளவிலே ஆய்த்து
ஓன்று செய்யும் இடத்தில் அநேகம் பேரைக் கூட்டி கொண்டு செய்யவும் வல்லனாய்
தனியேயும் செய்ய வல்லனுமாய்
இருக்கும் பெருமானை –
சர்வாதிகன் உடைய செயல் இறே –
தென்னாலி மேய திருமாலை யெம்மானை-
தேவர்களுக்கு கடல் கடைந்தாப் போலேயும்
ஜகத்துக்கு பிரளயத்தைப் பரிகரித்தால் போலேயும்
என்னுடைய சம்சார பிரளயத்தை பரிகரிக்கைகாக
பிராட்டி யோடும் கூடத் திரு வாலியிலே நிற்கிற சர்வேஸ்வரனை
அன்றிக்கே
தேவர்களோடு
லௌகிகரொடு
என்னோடு
வாசி அற
அபேஷிதம் செய்யும்படி யான சர்வேஸ்வரனை –
பிராப்தி உடையவனை –
நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே –
கெட்ட நீர் அன்றிக்கே
மிக்கு -குறைவற்று
வேண்டும் அளவான நீரை உடைத்தான வயலாலே
சூழப் பட்ட திரு நறையூர் –
———————————————————–
நாவாய் முகுந்தன் -நவ யோகி ஸ்தலம் -தனிக் கோயில் நாச்சியார் உள்ள
பிரயோஜனாந்தர பிறர்க்கும்
லோகத்துக்கு -ஆபத்து அறியாத
இதில் அநந்ய பிரயோஜனராய்
பூ இட முடியாமல் இழவு தீர
பெரிய திருவடி மேல் வந்து கடாக்ஷம் செய்த படியை அனுசந்திக்கிறார் –
கஜேந்திர மோக்ஷம் -பூ பரிக்க பிராட்டி உடன் போட்டி -க்ஷேத்ர மஹாத்ம்யம் –
தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை நறையூரில் கண்டேனே –6-8-3-
தூவாய –
சர்வேஸ்வரன் திருவடியை மேற்கொண்டு
தன் திருவடிகளால் தாக்கி நடத்தப் புக்கால்
அந்த ஸ்பர்ச ஸூத்தாலே திமிர்த்து
எங்கள் அம்மை நாயனார் உடைய ஸ்பர்ச ஸூகம் இருந்த படி என் -என்று
ஏத்தும் வாயை உடையவாதல் –
அன்றிக்கே –
நிர் தோஷமான சப்தத்தை வடிவாக உடையவன் -என்னுதல் –
வேதாத்மா விஹாகேஸ்வரா -என்னக் கடவது இறே-
புள்ளூர்ந்து வந்து துறை –
அவனுடைய ஸ்வாபாவிக வேகம் போராமை நடத்திக் கொண்டு
அவன் இடர் பட்ட பொய்கைக் கரையிலே வந்து –
வேழம் மூவாமை நல்கி –
அது முடியாதபடி
அதன் பக்கலிலே ஓரத்தைப் பண்ணினான் ஆய்த்து-
அதாவது
பூவில் செவ்வி மாறுவதற்கு முன்பே
திருவடிகளிலே இடுவித்துக் கொண்டான் ஆய்த்து –
தானும் மூவாமை பெற்றான் யாய்த்து –
அவன் ஆபன்னானன் ஆன பின்பு அரை ஷணம் தாழ்த்தான் ஆகில்
தன் குனங்களை இழந்து போனான் ஆம் இறே-
(மூன்று பரீஷைகளிலே தேறினானே -ஸ்ரீ எம்பார்
மழுங்காத –தொழும் காதல் வேழம் -இத்யாதி – )
முதலை இத்யாதி –
இடர்ப் பட்ட பொய்கையிலே போய்ப் புக்கு
பெரிய அவதானத்தோடு இரண்டையும் கூடக் கரையிலே கொடு போய் வைத்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே
முதலைக்கே இடர் ஆம்படி பண்ணினான் ஆய்த்து –
ராஜ புத்ரர்களைப் பிணைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலும் சோறும்
இடக் கடவது காண் -என்று அருளிச் செய்தார் -பட்டர்
துணித்தானை –
பீஷ்மாதிகள் மேலே கிளருமா போலே –
எதிரிகள் பக்கல் சீறுமா போலே –
நீர்ப் புழு என்று பாராதே சீறினான் ஆய்த்து –
ஆஸ்ரித விரோதி என்னும் ஆகாரத்தாலே கனத்துத் தோற்றுகையாலே-
ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
பெரிய சீற்றத்தோடு
தன்னைப் பேணாதே
வந்து விழுந்தவன் தான் ஆர் என்னில் –
தேவாதி தேவனை –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -யாய்த்து –
செங்கமலக் கண்ணானை –
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –
நாவாய் யுளானை –
பரம பதம் கலவிருக்கையாய் இருக்க
என்னுடைய ரஷணத்துக்காக
திரு நாவாயிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-
அந்த திரு நாவாய் தான் பரம பதத்தோபாதியாம் படி
அடுத்து அணித்தாக
திரு நறையூரிலே-காணப் பெற்றேன் –
—————————————
ஆனைக்கு புள்ளூர்ந்து
அங்கனே தேசாந்தரத்தில் இருந்து வர வேண்டாதே
நினைத்த இடத்தில்
ஆங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய வ்ருத்தாந்தம்
ஒடா வரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4-
ஒடா வரியாய் –
ஹிரண்யன் உடைய முரட்டு உடலைக் கண்டால்
பிற்காலியாத நரசிம்ஹமாய் -என்னுதல் –
அன்றிக்கே
நாட்டில் நடையாடாத நரசிம்ஹமாய் -என்னுதல் –
இரணியனை ஊன் இடந்த சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை –
வர பலத்தாலே பூண் கட்டின ஹிரண்யன் உடைய முரட்டு உடலை பிளந்து
இன்னம் இங்கனே இருந்துள்ள விரோதிகள் ஆஸ்ரிதர்க்கு
அடர்த்து வரில் செய்வது என் -என்று
அவற்றைப் போக்குகைகாக
இளமை மிக்க பொழில் சூழ்ந்து இருந்துள்ள
திரு நீர் மலையிலே சந்நிஹிதன் ஆனவனை –
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை –
ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து
மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –
நாள் தோறும் நித்ய ஸூரிகள் உடைய ஆசையே யாத்ரையாக
உடையனாய்க் கொண்டு
இங்கே காணப் பெற்றேன் –
—————————————
அப்பன் பகையாக உதவியது கீழே
தமையன் பகையாக உதவியது இங்கு
சுக்ரீவனையும் விபீஷணனையும் -ரக்ஷித்து கைக்கொண்டது
ஈஸ்வரனை ஒழிந்த அனைவரும் ரக்ஷகர் அல்லர் பிரபன்ன பரித்ராணத்தில் சொன்னோம் –
இதிலும் அடுத்ததிலும் வேறே திவ்ய தேச பிரஸ்தாபம் இல்லை –
கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-
கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் –
கல்லார் மதிள் சூழ்ந்து
அரண் மிக்கு இருந்துள்ள இலங்கையிலே
கறுத்த நிறத்தை உடைய ராவணன் -என்னுதல் –
அன்றிக்கே
தண்ணியன் -என்னுதல்
கறுப்பு -தண்மைக்கும் நிறத்துக்கும் -இரண்டுக்கும் பேர் இறே –
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லானைச்
ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் சிளையாத படி வரபலத்தாலே
திண்ணியதான
உடல் கிழியும்படிக்கு ஈடாக
தர்ச நீயமாய்
தீப்த பாவக சங்காசை -என்கிறபடியே
தொடுத்து விடும் போது அம்பாய்
சத்ருக்கள் சரீரங்களில் அக்னியாய் பிரவேசிக்கும்
அம்பை நடத்தின வில் வலியை உடையவனை –
செல்வ விபீடணற்கு
ராவண பவனத்தை விட்டு
ஆகாச ஸ்தானனானன் ஆன போதே
அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் -என்கிறபடியே
ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –
வேறாக நல்லானை –
வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று
மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க
அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று
பெருமாளும் நிர்பந்திக்க
ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன
வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று
அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-
நாடி நறையூரில் கண்டேனே –
நான் அவனைத் தேடி
நறையூரிலே காணப் பெற்றேன் –
———————————————-
சதுர் தேச ப்ரஹ்மாவுக்கும் உத்பாதகன்
ஆஸ்ரித பவ்யனாக
மேன்மையைப் பாராமல் இடைச்சி கையால் கட்டுண்டு இருந்த வ்ருத்தாந்தம் –
உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6-
உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில் வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை –
ப்ரஹ்மாதிகள் குடி இருப்போடே
கூடே மற்றும் உள்ள மனுஷ்யாதிகளை அடைய
தன் திரு உந்தியிலே செவ்விப் பூவின் மேலே
தன்னுடைய சங்கல்ப்பத்தாலே உண்டாக்கின
ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனை –
(தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைக்க – நம்மாழ்வார் தெளிவாக )
தன் சங்கல்ப்பத்தால் எல்லாவற்றையும் உண்டாக்குமவன் தான்
மெய்யே வந்து அவதரித்தான் ஆய்த்து –
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
பிள்ளை உறங்கா வல்லி தாசர்
பிள்ளைக்கு தாய் வழி ஆகாதே கண் -என்று அருளிச் செய்வர் –
(தன்யன் -பெருமை உடையன் ஆவான் தாய் போல் பிள்ளை இருந்தால் வசனமும் உண்டே )
நம்பனை –
தன்னை அணுகினவருக்கு
தன் கையிலே சமர்ப்பிக்கலாம் படி
விஸ்வச நீயன் ஆனவன் -என்றபடி –
நாடி நறையூரில் கண்டேனே –
சம்சாரத்தில் இருக்கச் செய்தே
அவனை விஸ்வசித்து பற்றப் பெற்றேன் –
—————————————————-
மீண்டும் திவ்ய தேசம் இதில் திரு மெய்யம் -திருத் த்வாரகையும் இதில் –
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் கீழ்
அதன் பிரயோஜனம் இதிலும் அடுத்ததிலும் –
கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-
கட்டேறு நீள் சோலைக் –
இந்த்ரன் உடைய காவல் காடு என்கிற மதிப்பாலே மிக்க அரணை உடைத்தாய் இருக்கிற-
காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை –
அர்ஜுனனும் தாமுமாய் யமுனா தீரத்தில் பூம் பந்து இறட்டு
விளையாடா நிற்க
அக்னி ஒரு ப்ராஹ்மன வேஷத்தை கொண்டு வந்து நிற்க
நீ இந்த்ரன் உடைய காட்டை புஜி-என்று விட்டான் –
மூட்டி விட்டானை –
துஷ்ட மிருகங்களின் மேலே விட்டானாய்
தான் கிட்டுகைக்கு பயப்படுமா போலே
பிரவேசிப்பிக்கையில் உண்டான அருமை சொன்னபடி –
மெய்யமர்ந்த பெருமானை –
இன்னும் ஆரேனும் அர்த்தித்து வரில் செய்வது என்-என்று
திரு மெய்யத்தில் வந்து சந்நிஹிதன் ஆனவனை-
(திரு மெய்யம் –
சத்யம் ஆழமாக இருக்கும்
காட்டை அழித்ததும் தப்பில்லை -)
மட்டேறு கற்பகத்தை –
பரிமளம் மிக்கு வாரா நின்றுள்ள
கல்பக விருஷத்தை –
மாதர்க்காய் –
ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி பக்கல்
தாதர்த்தத்தை முடிய நடத்தின் படி –
வண்டுவரை நட்டானை –
இந்தரனுக்கு நரகாசுரன் உடன் விரோதம் விளைய
அவனுக்காக எடுத்து விட்டு
அவனை அழித்து
மீண்டு வந்து ஸ்வர்க்கத்தை குடி ஏற்றுகிற அளவிலே
இந்த்ராணி யானவள் -கல்பக வருஷத்தின் பூ வர
உங்களுக்கு இது பொராது இறே
உடம்பு வேர்க்கும் இறே
தரையில் அல்லது கால் பாவாதே -என்று இங்கனே
தன்னுடைய தேவதத்வத்தையும்
இவள் உடைய மனுஷ்யத்வத்தையும் சொல்லி
ஷேபித்துச் சூடினாள்-
அவளும் கிருஷ்ணன் தோளைப் பற்றி -இத்தை என் புழக் கடையில் நட வேணும் -என்ன
அத்தை பிடுங்கிக் கொடு போந்து
ஸ்ரீமத் த்வாரகையிலே நட்டு
பின்னை யாய்த்து திரு மஞ்சனம் பண்ணிற்று
தான் சோபன -நன்றாக -குடி ஏறுவதற்கு
முன்பே தன்னைக் குடி இருத்தினவன்
தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று
வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று
பிள்ளை அமுதனார் பணிக்கும் படி –
நாடி நறையூரில் கண்டேனே –
என்னுடைய அபேஷிதம் செய்கைக்காக
திரு நறையூரிலே வந்து நின்றவனைக்
காணப் பெற்றேன் –
—————————————————-
பாரம் -ந கிஞ்சித் பர்வதிகா
ந சப்த சாகரம்
ஸ்வாமி துரோகம் மஹா பாரம்
கண்ணனுக்கு விரோதியாலே பாரம் -ஸ்ரீ தேவி பொறுக்க மாட்டாள் –
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-
மண்ணின் மீ பாரம் கெடுப்பான்
எல்லா வற்றையும் பொறுக்கக் கடவ பூமி
பொறுக்கப் போகிறதில்லை -என்ன –
அதனுடைய பாரதத்தைப் போக்குகைகாக –
மற மன்னர் பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து விண்ணின் மீதேற-
மறத்தை உடைய கர்ண துர்யோநாதிகள்
கையும் அணியும் வகுத்து மேலிட்டு வந்த பரிகரம் அடைய மீளவும்
அவ் ஊரில் போகாதே வீர ஸ்வர்க்கத்தை பிராபிக்கும் படி -யுத்தப் பண்போடு வந்த படை எல்லாம்-
விசயன் தேரூர்ந்தானை —
அர்ஜுனன் உடைய தேரை நடத்தினவனை –
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –
ஆசை உடையேனாய்க் கிட்டி –
அவ் வாசைக்கு அனுரூபமாக திரு நறையூரிலே காணப் பெற்றேன் –
—————————————————————-
பூமிக்கு ஆனந்தம் கொடுக்க வந்த கிருஷ்ணனே ஆராவமுது
சக்கர பாணி சாரங்க பாணி -திவ்ய ஆயுதங்கள் உடன் சேர்த்தி –
இதிலும் அடுத்ததிலும் வேறே திவ்ய தேசம் சேர்த்து அனுபவம் –
பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானைக்
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே–6-8-9-
பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும் சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானைக் –
மிகைத்து ஆற்றுப் பெருக்கு போலே ஏறி வாரா நின்றுள்ள
நிரவதிக தேஜசை உடைத்தாய்
ஸ்ப்ருஹநீயமாய் இருக்கிற திருவாழி யோடே கூட
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கும் குடி இருப்பான
அழகிய திருத் தோள்களை உடைய சர்வேஸ்வரன் –
ஆழ்வார்களை ஒழியவே
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி யாய்த்து
திருத் தோள்கள் அழகு இருக்கும் படி –
ஆபரணத்துக்கும் ஆபரணம் போலே –
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானைநங்கோனை நாடி நறையூரில் கண்டேனே-
பரிமளம் ஆதல்
தேன் ஆதல்
பரம பதத்தில் இருப்பு நித்ய ஸூரிகளுக்காய் இருக்குமா போலே
நமக்கு ஸ்வாமி ஆனவனை
நமக்காக வந்து நிற்கிற திரு நறையூரிலே காணப் பெற்றேன் –
—————————————–
கீழே ஸ்ரீ திருக்குடந்தையுடன் அனுபவம்
இதில் ஸ்ரீ வடமதுரை உடன் அனுபவம் =
மன்னு மதுரை வசு தேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ் தார்க்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே–6-8-10-
மன்னு மதுரை –
சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் இருந்து தபஸ்ஸூ பண்ணி
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் வன்னியம் அறுத்து படை வீடு செய்து
சர்வேஸ்வரன் தான் உகந்து வந்து அவதரித்து
ஆனை படும் அடவி ( காடு ) போலே
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –
வசு தேவர் வாழ் முதலை –
ஸ்ரீ வசுதேவர் உடைய சத்தைக்கு நிமித்த பூதனாய் உள்ளவனை –
இவனைக் கண்டு அத்தாலே உளராய்த்துத் திரிவது –
நன்னறையூர் நின்ற நம்பியை –
ஸ்ரீ மதுரையில் காட்டிலும் மிக்க நன்மை உடைத்தான
திரு நறையூரிலே நிற்கிற
கல்யாண குண பூர்ணனை –
வம்பவிழ் தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
செவ்வி மாலையையும்
அதுக்கு ஆஸ்ரயமாய்-கல் என்று சொல்லப் படும் திண்ணிய
தோளையும் உடையரான
திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த
தமிழ்த் தொடை வல்லவர்கள்-
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே –
பரம பதத்தில் அங்கு உள்ள நித்ய ஸூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள்
வைகுந்தன் தமர் எமர் -10-9-9–என்று இறே அவர்கள் சொல்லுவது –
அவர்களுக்கு ஆஸ்ரயணீயர் ஆவார்கள் –
————
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
மானமுடை வானவர் தொண்டர்க்கு வாசியற
தான் அழிய மாறி அருள் நம்பியிடம் நான் உகந்த
மாற்ற வூரான் பான்மை நீலன் கண்டான் நறையூரில்
உற்ற திருவாம் பெடையோடு-58-
திருவேங்கடம் திருவாலி திருநாவாய் திரு மெய்யம் திருகி குடந்தை திரு நறையூரில் கண்டதாக அருளிச் செய்கிறார்
நரசிம்மம் கண்ணன் இராமன் தன்மைகளையும் கண்டார் –
உற்ற திரு -பகவான் நாராயண அபிமத அனுரூப ஸ்வரூப ரூபம் –
நமக்கு உற்ற திரு என்றுமாம் –
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply