ஸ்ரீ பெரிய திருமொழி-6-6—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ருத்ரனுக்கு 70 கோயில்களைக் கட்டி
பின்பு இங்கு வந்து பக்ந அபிமானனாய் ஆஸ்ரயித்து அபிமதம் –
ஐஹிக -ஆமுஷ்மிகம் பெற்றான்
உள்ளத்து சொல்வது போல் பர உபதேசம் –
கீழே திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து
இங்கு பர உபதேச முகத்தால் உள்ளத்துக்கு
கீழே உள்ள பிரகரணத்துடன் சேர வேண்டுமே –
மணி மாடக் கோயில்
அனைவருடன் ஸ்நிக்தமான சாளக்ராம திருமேனி
கல் கருடன் சேவை பிரசித்தம் –

அம்பரம் பிரவேசம் –

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனானவன் வந்து நிற்கிற  தேசம்
திரு நறையூர் என்று அனுசந்தித்தார் –
நமக்கு அந்த ஸ்நேஹமும் இன்றிக்கே
தாந்தரும் அன்றிக்கே இருக்கிற நாம்
(தாந்தி சாந்தி தம சம -உள் வெளி இந்திரிய அடக்கம் )
ஆஸ்ரயிக்கும் படி எங்கனே -என்கிற
திரு உள்ளத்தைக் குறித்து

தான் துர் மாநியுமாய்
ஸ்நேஹமும் இன்றிக்கே
இருக்கிற ராஜா தான்
ஸ்ரீ மார்கண்டேய பகவானைப் போலே
தேவதாந்திர பஜனம் பண்ணி
அங்கு தன்னுடைய அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளப் பெறாமையாலே
இங்கே வந்து
பக்ன அபிமானனாய்
திருவடிகளிலே விழுந்து ஆஸ்ரயித்து
ஐஹிக  ஆமுஷ்மிகங்கள் இரண்டையும் பெற்றுப் போனான் –

ஆன பின்பு
திரு நறையூரை ஆஸ்ரயி என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து
பர உபதேச பிரவ்ருத்தர் ஆகிறார் –

நம்பி ஒரு வாள் கொடுத்து அருள
அத்தைக் கொண்டு பூமியை அடைய தன் காலின் கீழே இட்டுக் கொண்டான் -என்று
ஒரு பிரசித்தி உண்டாய்த்து –

—————————————————————–

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-1-

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் –
ஆகாசத்தையும்
பரப்பை உடைத்தான பூமியையும்
திக்குகள் எட்டையும்
ஷோபத்தை உடைத்தான கடலையும்
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற குல பர்வதங்களையும்
அமுது செய்த கண்டத்தை உடையவன் –

கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர் –
தழைத்த கொம்பை உடைத்தான
ஆல மரத்தின் இலையிலே கண் வளர்ந்து அருளின
அகடி தகடநா சாமர்த்தியம் உடையவன்
திருவடிகளை பெற வேண்டி இருப்பீர்  –
(நித்ய யுக்த -சதத யுக்தாம் -நித்தியமாக சேர்ந்து இருக்க ஆசை இருக்க வேண்டுமே )

வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு-
பரிமளத்தை புறப்பட வருகிற செண்பகத்தில் உண்டான
பரிமளத்தைப் புஜித்து
அத்தாலே நரை திரை (மூப்பு )மாறி
அச் செண்பகத்தில் உண்டான வெக்கையை  மாற்றும் ஆய்த்து
மகிழம் பூவிலே படிந்து –

செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –
செம்பியன் கோச் செங்கணான் -அவன் தனக்கு பெயர்
அவனுடைய அகடிதகட நா சாமர்த்தியம் உடன்
இந்த வண்டுகள் மகிழம் பூவிலே படிந்த இத்துடன்
வாசி அற
உத்தேச்யமாய்த்து இருக்கிறது இவருக்கு
அவ் ஊரில் உள்ளதாகையாலே –

(இத்தால் அவனுடைய அகடிதககடநா சாமர்த்யத்தோடு
இவையும் இவருக்கு உத்தேச்யம்
இருவரும் திவ்ய தேசம் உத்தேசியமாய் உகந்து அருளி வசிக்கிற படியால்
மணி அழகாய் கிழத்தன்மை போய்
செண்பகம் போன வண்டு -அவ் ஊரில் உள்ளவர்களாய் –
வர்ஜனீயமான பிராகிருத போகங்களை புஜித்தும் -ஸ்வரூப நாசம் போகாமல்
பகவத் அனுபவத்தால் போன படி-
ஆனால் அது இவருக்கு உத்தேஸ்யமோ என்னில்
திவ்ய தேச வாசித்தால் -செய்தாரேல் நன்றே செய்தார் என்னும் அவன் அன்றோ
இவர்களையும் அவன் கைக் கொள்ளுவதால்
ஆகவே அவர்கள் எனக்கும் உத்தேச்யர்களே )

—————————————————————

கீழே பிரளயம் ஆலிலை சயனம்
இதில் மத்ஸ்ய அவதாரம்
பிரளயத்தில் ஓடி விளையாடி
ஒரு லக்ஷம் யோஜனை பெரிய உருவத்துடன்
க்ருதமாலா -பாண்டியன் -கையில் -வந்து -வளர்ந்து –
கடாக்ஷத்தாலே ரக்ஷித்து அருளும் எந்தை அன்றோ ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி –

கொழுங் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி  வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

கொழுங் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத் தப்பால் எழுந்து இனிது விளையாடும் ஈசன்-
மிக்க ஜலமானது பூமியை அடையக் கொண்ட காலம் –
கொழு விதமான-த்ருடமான கயலாய்
குல வரைக்கு மேலே போய் அண்ட பித்தி அளவும் செல்லத் துள்ளி
ஸ்வைரமாக லீலா ரசம் அனுபவிக்கும் ஸ்வ தந்த்ரன்  –

எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் –
வகுத்த ஸ்வாமி யானவன் திருவடிகளை ஆஸ்ரயித்து-
ஆனந்த நிர்ப்பரராய் இருக்க வேண்டி இருப்பீர் –

இன வண்டாலும்-
இன வண்டு -திரண்ட வண்டுகள் ஆனவை –
சசப்ரம ந்ருத்தம் பண்ணா நிற்பதாய் –

உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள –
உழுகிற செய்களிலே வரம்புகளிலே மணிகளைக் கொடு வந்து சிதறா நிற்பதாய்
லோகம் அடங்கலும் அகிலையும் சந்தனத்தையும் கொள்ளை கொள்ளும்படியாக –

செழும் பொன்னி   வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
தர்ச நீயமான பொன்னியானது சம்ருதிகளைக் கொடு வந்து கொடுக்கிற திரு நறையூர் என்று
ஊருக்கு விசேஷணம் ஆதல்
அன்றிக்கே
சோழன் தனக்கு விசேஷணம் ஆதல்

அவனுடைய
விலாச  சேஷ்டிதங்கள் உடன்
காவேரியினுடைய ஸ்வைர சஞ்சாரத்தோடே
வாசி அற
இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அங்கு உள்ளது ஆகையாலே –

—————————————————————

பெரிய மீனாக துள்ளி விளையாடும் அளவு அன்றிக்கே
ஜெகதாகாரன்
விஸ்வரூபம் போல் இதுவும்
விராட் ஸ்வரூபம்
பாதம் பாதாளம் -இத்யாதி -த்யானம் பண்ண -ஸூகர் இடம் திரும்பி
தாமரைக் கண்ணன் -அசாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹம் த்யானம் எளிமை அன்றோ –

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங் கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-2-

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா –
கடல் நீரானது திருப் பீதாம்பரமாய் –
பூமிப் பரப்பு அடைய திருவடிகளாய்-
வாயு ஸ்கந்தமானது ( கூட்டமானது ) திரு மேனியாகவும்  –

செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்   –
அழகிய திக்குகள் எட்டும் திருத் தோள்கள் ஆகவும் (அஷ்ட புஜ கரத்தான் )
அண்ட பித்தியானது திரு அபிஷேகமாகவும்
இப்படி ஜகதாகாரனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் –

கவ்வை மா களிருந்தி –
பெரிய மிடுக்கை உடைத்தாய்
கதறிக் கொடு வருகிற ஆனையைத் தள்ளி –

விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
விண்ணி -என்று யுத்த பூமிக்கும் படை வீட்டுக்கும் பெயர்
யுத்தத்தில் வந்து எதிர்ப்பாராய்
வீரக் கழலை உடையராய் இருக்கிற ராஜாக்கள்
முடிகளிலே
காகமானது படியும் படியாக –

தெய்வ வாள் வலங் கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே-
ஆயுதத்தைக் கொண்டு வ்யாபரித்தான் ஆய்த்து-

அவன் ஜகதா காரனாய் நிற்கிற நிலையோடு
இவன் யுத்தத்தில் பராக்ரமித்ததோடு
வாசி அற -இவருக்கு
உத்தேச்யமாய் இருக்கிறது காணும்
அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –

——————————————————————

ஜெகதாகார அனுபவம் கீழ்
அதுக்கு உப யுக்தமாய் எங்கும் வியாபித்த
நரஸிம்ஹ அனுபவம் இதில் –

பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி  பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்பீர்
வெங்கண் மா களிருந்தி விண்ணி யேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-4-

பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி –
ஜாதி உசிதமான கண்ணில் பசுமையை உடைத்தாய் இருக்கிற நரசிம்ஹமாய் –
பார்த்த பார்வையாலே அஞ்சும் படியாக நோக்கி –
வர பலத்தாலே திண்ணியதான தோள் உடைய ஹிரண்யன் பக்கலில்
பிற்காலியாதே சென்று  கிட்டி
மடியைப் பிடித்து இழுத்து –

அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி  பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்பீர் –
வெறும் புறத்திலே அழகியதாய் –
ஒளியை உடைத்தாய் இருக்கிற திரு உகிரில் ஏக தேசத்தாலே
ஹிரணியன் சரீரமானது ருதிர வெள்ளம்  கொழிக்கும் படியாக
பண்ணினவன் திருவடிகளைப் பெற வேண்டி இருப்பீர் –

வெங்கண் மா களிருந்தி விண்ணி யேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த –
வெவ்விய கண்ணை உடைத்தாய் இருக்கிற ஆனையை தள்ளி
யுத்தத்திலே வந்து எதிர்ந்த  ராஜாக்கள் உடைய திறல்
அழியும் படியாக
குதிரையை நடத்தினவன் வர்த்திக்கிற தேசம் –

செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
அவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்கினதோடு
இவன் யுத்தத்தில் வ்யாபரித்ததோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும்
இவருக்கு –

———————————————–

கீழே வியாப்திக்கு நரஸிம்ஹ அனுபவம்
அதுக்கு அடுத்த
வாமன திரி விக்ரம பெருமாள் -அனுபவம் –
மீண்டும் நரஸிம்ஹ அனுபவமும் இதில் உண்டே –

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய்  இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —6-6-5-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய்  இரணியனதாகம் கீண்டு வென்றவனை –
த்ரை லோக்யத்தையும் தன் கால் கீழே இட்டுக் கொண்டு
நாட்டிலே நடை யாடாத  ஒரு  நரசிம்ஹமாய்
ஹிரண்யன் உடைய சரீரத்தைக் கிழித்து வென்று –

விண்ணுலகில் செல யுய்த்தாற்கு –
ஸ்வ ஹஸ்த வதத்தாலே
வீர ஸ்வர்க்கம் பெற்றான் என்னக் கடவது இறே-

விருந்தாவீர் –
அவனுக்கு அதிதீ வர்க்கமாய் புக்கு அந்வயிப்பீர்-

மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து  பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் –
கிளர்ந்து கொண்டு
நடுவே தகைந்து கொண்டு இருக்கிற மலைகளை முறித்து
அந்த மலைகளிலும் சஹ்யத்திலும் உண்டான
பொன்களையும் மணிகளையும் கரையிலே  கொடு வந்து சிந்துமாய்த்து –

புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் –
வெளி நிலம் உள்ள இடம் எங்கும் பரந்து
பூமிப் பரப்பு அடங்கலும் தானே கைக் கொள்ளும் ஆய்த்து –
பொன்னி நாடன் -பொன்னி நாட்டை உடையவன் –

தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே  –
ஆக மூன்று ராஜ்யமும் தானே ஆண்டான் ஆய்த்து –
(தென் தமிழன்- சேர பாண்டிய/ வடபுலக் கோன்-தொண்டை வடநாடு / சோழன்-மத்ய
புலம் பூமி )

அவன் பூமியை அடைய அளந்து  கொண்டத்தோடு
இவன் பூமியை அடையத் தானே நெருக்கி ஆண்டத்தோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு
அவனை  ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –

(எம்பார் -கொண்டாட -எல்லாம் எம்பெருமானார் சம்பந்தம் என்பதால் உண்டே என்ற ஐதிக்யம் –
திருவடி மஹாத்ம்யம் இல்லை என்னப் போகாதே -)

—————————————————————-

மூன்று லோகங்களையும் காலில் கீழே இட்டுக் கொண்ட
மூ உலகும் தான் ஆனான்
ஜகத் சர்வம்
சர்வம் கல் இதம் ப்ரஹ்ம
வியாப்தி புதுக் கணித்த -நீக்கமற நிறைந்து இருக்கும்
உபய விபூதி நிர்வாகம்- கிருஷ்ணன் அனுபவம் –

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தானாயன் ஆயினான்  சரண் என்று உய்வீர்
மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத்  தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்னாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே  —6-6-6-

குட-மேற்கு –

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் –
தன்னுடைய ஸ்வரூபாதிகளை
ஸ்வா தீனமாக வுடையவன் ஆகையாலே
இதர விசஜாதீயனாய் உள்ளவன் –
(பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரன் -அநன்யாதிபதி )
தன்னுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகள் தானிட்ட வழக்காம் படி
இருக்குமவன் ஆய்த்து ஈஸ்வரன் –

தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்-
க்ருதகம்-அக்ருதகம் -க்ருதக அக்ருதகம் -என்று
மூன்று வகையாக சொல்லப் படுகிற
லீலா விபூதி அடைய தானிட்ட வழக்காக  உடையவனாய்  –
(பூ புவ சுவ -க்ருதகம் நைமித்திக பிரளயத்தில் அழியும்
மகர் லோகம் அழியாது -மேல் லோகம் போவார்கள் ஆகவே க்ருதாக்ருதகம்
ஜன இத்யாதி அக்ருதகம் )

தன்னது என்னும் அத்தாலே
மிக்க ஒளியை உடைத்தாய்க் கொண்டு
அசைந்து வருகிற -பளபளத்து வருகிற மூ வுலகும் -என்னுதல்-
அன்றிக்கே
தயங்கொளி சேர்-மூர்த்தி என்று வடிவுக்கு விசேஷணம் ஆதல் –

வானாய்-
நித்ய விபூதி நிர்வாகன்

தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்
அந்த லீலா விபூதியினுடைய
ஸ்ருஷ்டியாதிகளுக்கு அனுரூபமான மூன்று வடிவை உடையவனாய் –
(ஆதி ரக்ஷணம் ஸம்ஹாரம் )

ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் –
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்த ராத்மாவாய் நின்று
சிருஷ்டி சம்ஹாரங்களை நடத்தியும்
இப்படி மூன்று கார்யத்துக்கும் ஈடான
மூன்று வடிவையும் உடையவனாய் –

தானாயன் ஆயினான்  சரண் என்று உய்வீர் –
இப்படிப் பட்ட தான்
லீலா விபூதியிலே தன்னுடைய விபூதி பூதரிலே சிலர்
இவன் எனக்கு மகன் -என்று அபிமாநிக்கும் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்
நமக்கு புகல் என்று உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர் –
மாம் ஏகம் -என்றவனுடைய திருவடிகளையே பற்றி உஜ்ஜீவிக்கப் பார்ப்பீர் –

மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத்  தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட –
ஒளி வர்த்தியா நின்று உள்ள வேலைக் கையிலே உடைய
விளைந்த வேள் ஆகிற குறும்பனை ( சிற்று அரசனை )
வீர ஸ்வர்க்கத்து ஏறப் போம் படி ஏக பிரயோகத்திலே வேலை நடத்தி
ஜகத்தை அடைய தான் இட்ட வழக்காம் படி நிர்வஹித்த ராஜாவானவன்
கிட்டி ஆஸ்ரயித்த திரு நறையூர் –

தென்னாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே    –
பாண்டிய நாட்டையும்
மேல் கொங்கையும்
கொண்ட சோழன் சேர்ந்த —
சர்வேஸ்வரன் உடைய ஜகதா காரதையோடு
இவன் மூன்று ராஜ்யத்தையும் நிர்வஹித்ததோடு
வாசி அற
உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து
அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்தது ஆகையாலே –

——————————————————

ஆயன் பிரஸ்த்வமானது கீழே
சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் இதில்

முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி  முது துவரைக் குலபதியாக் காலிப்  பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-7-

முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி  –
பூதனை முடியும்படி
அவளுடைய வடிவுக்கு தக்க
பெரிய முலையை உண்டு

முது துவரைக் குலபதியாக் காலிப்  பின்னே இலைத் தடத்த குழலூதி
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
பசுக்களின் பின்னே பெருத்த இலைக் குழலை ஊதிக் கொடு போய் -அவற்றை மேய்த்து –

ஆயர் மாதர் இன வளை கொண்டான் –
மீண்டு திரு வாய்ப்பாடியிலே புகுந்து –
இடைப் பெண்கள் உடைய வளை தொடக்கமான வற்றை கொண்டவன்

அடிக் கீழ் எய்த கிற்பீர் –
திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்

மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன்  –
மலைத் தாழ்வரைகளில் உண்டான ரத்னங்களைக் கொடு வந்து
பூமி அடைய உஜ்ஜீவிக்கும்படி சம்ருத்தியைத் தள்ளா நின்றுள்ள
ஜல சம்ருத்தியை உடைத்தாய்
தர்ச நீயமான பொன்னி நாட்டை உடையவன் –

சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
பெரிய ஆண் பிள்ளை யானவன்
அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக
ஆஸ்ரயிக்கிற தேசம் –

——————————————————-

ரத்நாதிகளை கொழித்துக் கொடு வருகிற ஆற்று வரவோடு –
கிருஷ்ணன் இடைப் பெண்கள் உடைய துகில்களையும் வளைகளையும்
வாரிக் கொடு வருகிற வரவோடு வாசி அற –
உத்தேச்யமாய் இருக்கிற படியை சொல்லிற்று -கீழ்ப் பாட்டில் –
இப்பாட்டில் –
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கும் இருப்போடு
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த செயலோடு வாசி அற
உத்தேச்யமாய் இருக்கிற படி சொல்லுகிறது –

முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8-

முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் –
முருக்கம் பூ போலேயும்
விளங்கா நின்றுள்ள கனி போலேயும்
இருக்கிற அதரத்தை உடைய
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் –

மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச் செருக் களத்து திறல் அழியச் –
ராஜ லோகம் அடங்க வழிப் போக்கிலே முடியும் படி
யுத்த பூமியிலே சென்று கிட்டி –

செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்-
இந்த பிராதி கூல்யத்துக்கு ஹேது பூதனான
சஹஸ்ர பாஹூ வர்ஜுனன் உடைய மிடுக்கு எல்லாம் போய்
அவன் முடிந்து போம் படிக்கு ஈடாக
தலைகளைத் துணித்த சர்வேஸ்வரன் திருவடிகளை
உங்கள் தலை மேலே வைக்க வேண்டி இருப்பீர் –

இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  –
வேதத்தில் ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை உச்சரியா நின்றுள்ள
வாயை உடையராய்
எட்டுத் தோள்களையும் உடையராய் இருக்கிற தேவர்க்கு -(ருத்ரன் )
(எல்லா வேதங்களிலும் புருஷ ஸூக்தம் உண்டே )

எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட-
தர்ச நீயமான மாடங்கள் எழுபதும் சமைத்து
பின்னையும் தம்முடைய அபிமதம் கிடையாமையாலே
அவ் வபிமத சித்யார்த்தமாக –

திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே-
அவன் வந்து ஆஸ்ரயிக்கிற தேசம் –

—————————————————————

கீழே விபவ அனுபவம்
ப்ரீதி அதிசயத்தால் பரத்வாதி பஞ்சகங்களையும் அனுபவம்
அன்றிக்கே
கீழே கிருஷ்ண அனுபவம் ஸ்வா பாவிக ஆகாரத்துடன் கொண்டாடுகிறார்

தாராளன்  தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படை மன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —-6-6-9-

(தாராளன்  -பரத்வம்
தண்ணரங்க வாளன் –அர்ச்சா
பூ மேல் தனியாளன் -ஸ்ரீ யபதி த்வம்
முனியாளர் ஏத்த நின்ற பேராளன் -வ்யூஹம்
ஆயிரம் பேருடைய வாளன் -அந்தர்யாமி தேவோ நாம சஹஸ்ரவான்
பின்னைக்கு மணவாளன்-விபவம் )

தாராளன் –
உபய விபூதியினுடைய ரஷணத்துக்கு
தனி மாலை இட்டு இருக்கிறவன்

தண்ணரங்க வாளன் –
ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாக கோயிலை வாசஸ் ஸ்தானமாக கொண்டு இருக்கிறவன் –

பூ மேல் தனியாளன் –
தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய்
அத்விதீயமான ஸ்த்ரீத்வத்தை உடைய
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் –

முனியாளர் ஏத்த நின்ற பேராளன் –
கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருக்கிற
சநகாதிகள் ஏத்துகையால் வந்த பெருமையை உடையவன் –

ஆயிரம் பேருடைய வாளன் –
அனுபவிப்பாருக்கு இழிந்த இடம் எங்கும்
துறையாகும் படியாய் இருக்கிற
ஆயிரம் திரு நாமங்களை உடையவன் –

பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் –
நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் உடைய
பெருமையைக் கேட்க வேண்டி இருப்பீர் –

பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படை மன்னர் உடல் துணியப் –
பூமிப் பரப்புக்கு அடைய நிர்வாஹகராய்
இன்னார் இன்னார் என்று பிரசித்தராய் இருக்கிற
ராஜாக்கள் ச பரிகரரய்க் கொண்டு
திரு வழுந்தூரில் வந்து எதிரிட
அவர்கள் உடைய உடல் துணியும் படிக்கு ஈடாக –

பரிமா வுய்த்த தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
குதிரை பூண்ட தேரை உடையவன் –

———————————————————–

செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங் கண் மாலைப்
பொய்ம் மொழி  யொன்றில்லாத மெய்ம்மை யாளன் புல மங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே —6-6-10-

செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங் கண் மாலைப்-
யதா பூத வாதிகளாய்
வேதத்துக்கு வியாச பதம் செலுத்த வல்லராய்
இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற
தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நறையூரிலே வர்த்திக்கிற
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை  கவி பாடிற்று –

பொய்ம் மொழி  யொன்றில்லாத மெய்ம்மை யாளன்
அவ் வேத சப்தம் போலே இருக்கிற
சப்தத்தை உடையவர் –

புல மங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் –
தர்ச நீயமான திரு மங்கைக்கு நிர்வாஹகரான திரு மங்கை ஆழ்வார்
அறிவு நிறைவு எல்லாம் பேச்சிலே தோற்றும்படியான
அப்படிப் பட்ட பேச்சை உடைய ஆழ்வார் உடைய இன்பப் பாடல் உண்டு
அனுபவத்துக்கு போக்கு விட்டுச் சொன்ன பாசுரம் -அத்தை –

வியனுலகில் நமனார் பாடி வெம் மொழி கேட்டு அஞ்சாதே-
புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற
சம்சார விபூதியிலே
வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார்
யம படருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே –

மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே-
மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் –
பரம பதத்திலே போய்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினார் -10-9-10- -என்கிறபடியே
நித்ய ஸூரிகள் எதிரே வந்து தந்தாம் இருப்பிடங்களிலே
கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள்
தாழ விருந்து
ஸ்ரீ பாதம் விளக்கி
கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள் –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

அம்பரம் தீ தானாய் அவை விழுங்கி ஆயன் அரி
அம்மீனாயத் தோன்று நம்பி சேர் நறையூர் அம்பணி செய்
செம்பியன் சீர் ஊர் எழிலுடன் செப்பும் சீர்க் கலியன்
செம் கழல் சேர்ந்து வான் ஆளும் –56-

செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெறுக்கிப் புகப்
பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் –10-6-1-
வான் ஆளும் -ஆண்மின்கள் வானகம் -திருவாய் -10-9-6-
கலி wயனுடைய செம் கழல் சேர்வது வான் ஆள்வதற்கு ஒப்பாகும்
வான் செம் கழல் சேர்ந்து ஆளும் -உபய விபூதி -இங்கே இருந்து கிட்டும்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading