ஸ்ரீ பெரிய திருமொழி-5-7—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பண்டை நான்மறையின் –பிரவேசம்

1-ஜகத் காரண பூதனாய்
2-ப்ரஹ்மாதிகளுக்கும் ஆஸ்ரயநீயனாய்
3-சகல சேதனர்க்கும் துக்க நிவர்த்தகனாய்
4-ஆஸ்ரிதர்க்கு அபேஷித சமயங்களிலே வந்து உதவும் ஸ்வபாவனான
சர்வேஸ்வரன்
(முதல் நான்கு பாசுரங்களின் அர்த்தங்கள் இவை )

அவ்வவதாரங்களில் பண்ணி அருளுகிற காலங்களிலும்
உதவாதாருக்கு இழக்க  வேண்டாதபடி
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே
கோயிலிலே வந்து
நித்ய வாஸம் பண்ணி யருள
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்று
இனியராய்ப் பேசுகிறார் –

(மேல் ஒவ் ஒரு பாசுரமும் ஒவ் ஒரு அவதார விவரணம் -அன்று –இழந்தோம் –
இன்று -அரங்க மா நகர் அமர்ந்து -நித்ய வாசம்
அடியேனும் கண்டு கொண்டேன்
கீழ் கண்டு களித்தமை அனுபவித்து
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன்-என்று இருப்பதைக் கண்டு இனியராகிறார் )

——————————————————————-

பரே சப்தம் பொலிய நின்றதை நம்மாழ்வார் –4-10- போல் இங்கு இவரும் இதில் –
சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம் -என்பதை அருளிச் செய்கிறார் -இதில் –
அரையர் சேவை இந்த பாசுரம் பிரசித்தம் –

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும்  குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-

பண்டை நான்மறையும் –
பூர்வே பூர்வேப்யோ வச ஏத தூசு -என்கிறபடியே
பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற
உத்தர உத்தர உச்சாரணம்   ஆகையாலே
புருஷ புத்தி அதீனம் ஆனால் வரக் கடவ தோஷங்கள் ஒன்றும் இல்லாத
வேதங்களும் –

வேள்வியும் –
அவ் வேதங்களால் விதிக்கப் படுகிற
யாகாதி கிரியைகளும் –

கேள்விப் பதங்களும் –
பத ரூபத்தாலும்
அஷர ரூபத்தாலும்
ஸ்ரவணம் பண்ணி அறிய வேண்டும் படி  இருக்கிற
வியாகரண சாஸ்திரமும் –

பதங்களின் பொருளும் –
அவ்வோ பதங்களால் அறியப் படுகிற
ஜீவ சமஷ்டியும் –
(நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் போலே பொருள் ஜீவ சமஷ்டியைக் குறிக்கும் இங்கும் )

(மூல பிரகிருதி –விக்ருதமாவதற்கு மூலம் அவித்யா-திரோதானம் -மாயா -ஆச்சார்யம் -விசித்திர ஸ்ருஷ்ட்டி -ஆகவே
அவிபக்த தமஸ் -விபக்த தாமஸ் -அக்ஷரம் -அவ்யக்தம் -நான்கு அவஸ்தைகள் இதற்கு -பின்பே
மஹான் அப்புறம் ஆகும்
பிருத்வி -தண்ணீரில் லயித்து –இப்படியாகக்கடைசியில் –மஹான் -அவ்யக்தத்தில் –
அது அக்ஷரத்தில் -அது தமஸ்ஸில் லயித்து -ஏகி பாவமாக ப்ரஹ்மத்துடன் ஒன்றிக் கிடைக்கும்
நாம ரூப அநர்ஹம் -பிரிவு இல்லாமல் -இப்படி லயம்
ஸ்ருஷ்ட்டி பொழுது மாறி வரும் )

(பூமியில் விதைக்கப்பட்ட விதை போன்றது அவிபக்த தமஸ்
மண்ணில் இருந்து கிளம்பிய விதை விபக்த தாமஸ்
நீர் உடன் கலந்து ஊறி பெருத்த விதை அக்ஷரம்
பருத்து வெடித்த விதை -அவ்யக்தம்
பின்பு
முளை போல் மஹான்)

பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
நாநா வான கார்யங்களுக்கு எல்லாம்
காரணமாய் இருக்கிற அசித் சமஷ்டியில் நின்றும்
விஸ்த்ருமாகா நின்றுள்ள தேஜோ பதார்த்தம்
ஜல தத்வம்
பூமி என்றால் போலே இருக்கிற ப்ருதிவ்யாதி பூத பஞ்சகமும்

கொண்டல் மாருதமும்  குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
சேதனருக்கு அபேஷித சமயங்களில் முகம் காட்டி
உபகரிக்கக்   கடவ மேகங்கள்
அப்படி உபகரிப்பதான வாயு தத்வமும்
பூமிக்கு வேலி இட்டால் போலேயாய்
மிக்க கோஷத்தை யுடைத்தான சப்த சமுத்ரங்களும்
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற
குல பர்வதங்களும்
இத்தனைக்கும் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும்

அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –
இவை எல்லாமுமாய் இருக்கிற அண்டம்
எங்கும் புக்கு அனு பிரவேசித்து
தா நி சர்வாணி தத் வபு-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடி
இவற்றைச் சொன்ன பாசுரம்
தன்னளவும் வரும்படியாய் இருக்கையாலே
இவை அடைய -தான் -என்று சொல்லும்படி
சரீரதயா சேஷமாகத் தான்  சேஷியாய் இருக்கிற
சர்வேஸ்வரன்
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளக் கண்டு
அனுபவிக்கப் பெற்றேன் –
என்கிறார் –

——————————————————

ஜகத் காரணத்வம் சொல்லிற்று ஆயிற்று கீழே
ப்ரஹ்மாதிகளுக்கும் ஆஸ்ரயணீயன் இவனே என்கிறார் இதில்

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே —5-7-2-

அந்தம் -லய ஸ்தானம் –
வாழ்வு ஸூகம் –

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தன்னாலே ஸ்ருஜ்யரான இந்த்ரன் ப்ரஹ்மா ருத்ரன்
என்று பிரதானராக சொல்லுகிற இவர்கள்
இதில் இந்த்ரனை முற்பட எடுத்து
பின்னை இவர்களைச் சொல்லுகையாலே
இவனோடு அவர்களுக்கு வாசி இல்லை –
சதுர் முகனை ஈஸ்வரன் என்று சிலர் சொல்லுமன்று
ருத்ரன் பக்கல் ஈஸ்வரத்வம் உள்ளது -(என்று சிலர் சொல்லு வார்கள் )
இப்படி ஜகத்துக்கு பிரதானராய் இருக்கிற இவர்கள்
பக்ன அபிமானராய்க் கொண்டு
அஸங்யேயமான பல குணங்களைச் சொல்லி
ஸ்துதியா நின்று கொண்டு ஆஸ்ரயிக்க-

தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப் பந்தமும்-
பிராணிகளுக்கு எல்லாம் ஹித பிரவர்த்தகராய் இருக்கக் கடவ பிதாவும்
பிரியத்திலே நடக்கக் கடவ தாயும்
நிரய நிஸ்தாரகரான புத்ரர்களும்
அளவிறந்து இருந்துள்ள ஜ்ஞாதி வர்க்கமும்
கிட்டி விடாதே நிற்கக் கடவ பந்து வர்க்கமும்

பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும்
இப்படிப் பட்ட சம்சார சம்பந்தத்தை போக்கக் கடவதான பேஷஜமும்
( நிர்வாணம் பேஷஜம் பிஷக் அவனே )
இஸ் சம்சார பந்தம் அற்றால்  இருக்கக் கடவ
நிஷ்கல ஸ்வபாவமும்

பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய
சகல சேதனருக்கும் லயத்தில் இருப்பிடமாய்
இருக்குமவனும்
பாலநத்தால் வரக் கடவதான  சுகமும்
இவ்விரண்டாலும் சிருஷ்டியை நினைக்கிறது-

இப்படி சகல பிராணிகள் உடைய
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்கும்
கடவனாய் இருக்கிற
சர்வேஸ்வரன் –
எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே –

—————————————————————————

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள்  நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-3-

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
கடிநையான பிருதுவியும்
குல பர்வதங்களும்
சமுத்ரமும்
ஆகாசமும்
அசுரர்கள் உடைய குடி இருக்கும் –

துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
இவை அடைய நெருங்கின பேர் இருளாய்
பிரகாச தத்வம் தான் போய்
சங்குசிதமாய்
பிரகாசத்தைப் பண்ணித் தரக் கடவதான
வேதங்களும் மறைய

பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறந்கிருள்  நிறம் கெட ஒரு நாள்
பின்னையும்
யோவை வேதாம்ச ப்ரஹிணோதி -என்கிறபடியே
ஒரு கால் ஓதுவித்து விட்டோமாகில்
அத்தைப் பறி கொடுத்த பின்பு
இனி நம்மால் செய்யல் ஆவது உண்டோ
என்று கை வாங்குகை அன்றிக்கே
தேவர்கள் பக்கலிலும் பிராமணர்கள் பக்கலிலும்
ஸ்நேஹத்தைப் பண்ணி
மிக்க இருளானது கழியும் படியாக –

அன்னமாய் அன்று அருமறை பயந்தான்-
தன்னைப் பேணாதே
கேட்கிறவனுக்கு ஆச்சார்ய அநுவர்த்தனம்
பண்ண வேண்டுகிறதோ -என்று
கூச வேண்டாத வடிவைக் கொண்டு
தன்னைப் பெறிலும் பெற ஒண்ணாத
வேதங்களை வெளியிட்டவன் –

அரங்க மா நகர் அமர்ந்தானே –
அன்று பிரமாணத்தை வெளி இட்டுத் தந்தவன்
இன்று பிரமேய பூதனான தன்னை
வெளி இட்டுக் கொண்டு வந்து
கண் வளர்ந்து அருளினான் –

————————————————————-

(அம்ருத மதனம் –எட்டாம் நாள் அரையர் சேவை- -அழகிய மணவாளர்-அம்ருத மதனம் செய்து அருளியபடி
ஏழாம் நாள் -மண் அளந்த தாளாளர் -அழகிய மணவாளர் திரு உலகு அளந்த படி
இரண்டாம் அரையர் சேவை
தண் குடந்தை நகராளா தொடங்கி சேவை ஆகும் )

(வேத பிரதான முகம் துக்கம் போக்கினது கீழே
அம்ருதம் கொடுத்து துக்கம் போக்கினது இதில் )

மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மா சுணம் அதனோடும் அளவி
பாயிரும் பௌவம் பகடு விண்டலறப்  படுதிரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-4-

நான்கு தோள்களால் கடைய -அதன் வேகம் ஆயிரம் தோளால் கடைந்து போல் –

மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மாசுணம் அதனோடும் அளவி
அகலத்தாலும் அளவாலும் குறைவற்று இருந்துள்ள
மந்தர பர்வதமானது மத்தாக
வாசுகியினுடைய உடம்பை அத்தோடே சுற்றி –

பாயிரும் பௌவம் பகடு விண்டலறப்  படுதிரை விசும்பிடைப் படர
பரந்து நீண்டு இருந்துள்ள கடலானது
ஆனை பிளிருமா போலே கிடந்தது கோஷிக்க –
அப்போதை ஷோபத்தில் உண்டான திரைகள்
ஆகாசத்தை
இடம் அடைத்துக் கொண்டு படர –

சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப
தூரஸ்தமாய்
விஸ்த்ருதமாய்
இருந்துள்ள
ஸ்வர்க்காதி லோகங்களும்
சந்திரனும்
மற்றும் உண்டான தேஜோ பதார்த்தங்களும்
மற்றும் உண்டான தேவ ஜாதியும்
ஏக காலத்திலே
விஸ்மயப்படச் செய்த கார்யம்

ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே
(நால் தோள் அமுதான அவன் )நான்கு தோள்கள் கொண்டு வ்யாபரித்த படி தான்
ஆயிரம் தோள் கொண்டு
வ்யாபரித்தான் என்னலாம்படி யாய்த்து –

————————————————

எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-5–

அருவி ஒத்து-வெண்மையான நீராக இருந்தாலும் தாதுக்களின் சேர்க்கையால் சிவந்து இருக்குமே

எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் –
நம்மைப் போலே அனுகூலித்து
ப்ரஹ்லாதனைப் போலே  -இது நமக்காக செய்த செயல் -என்று
இருப்பார் உஜ்ஜீவிக்கும் அத்தனை போக்கி
சத்ரு பஷமான அசுர  வர்க்கம்
இவ் வபதானத்தை ஸ்மரித்தால் எங்கனே உஜ்ஜீவிக்கும் படி –

இரணியன் இலங்கு பூண் அகலம் –
ஹிரண்யன் உடைய ஆபரணங்களால் அலங்க்ருதமாகா
நின்றுள்ள மார்வானத்தில் –

பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
போக்கிடம் காணாமையாலே
பெரிய கிளர்த்தியோடே கோஷித்துக் கொண்டு வருகிற
ருதிர வெள்ளமானது
மேருவைப் பிட்டுக் கொடு வெள்ளம் இடா நின்றுள்ள
அருவி போலே வந்து இழிய –
அவனும் ஹிரண்யன் இறே
நாநாவான தாதுக்களாலே கலங்கி மேருவைப் பிட்டுக் கொடு
இழிகிறது
ஹிரண்யன் உடலைப் பிளந்து கொடு
இழிகிற
ருதிரம் போலே இரா நின்றது ஆயத்து-

வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
வெவ்விதான கண்ணையும்
ஒளியை உடைத்தான எயிற்றையும் உடைத்தாய்
வெள்ளியாலே சமைந்த தொரு பெரிய மலையானது
ஆகாசத்தை ஊடுருவி
அக்னி கல்பமாக பாரா நின்று கொண்டு

அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே
தோற்றினது போலே இருக்க
நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டவன்
இன்னம் அப்படிக்கொத்த விரோதி வர்க்கம்
வந்து கிட்டினால் போக்குகைக்காக
இங்கே வந்து சந்நிஹிதன் ஆனவன்-

———————————————————-

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி   மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-6-

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் மலைகள் தன்னிலே திரண்டு சென்றால் போல்
யுத்தத்துக்கு தகுதியாய்
எழில் விளங்கா நிற்பதாய்

ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி   மற்று அவன் அகல் விசும்பு அணைய
திரண்டு இருந்துள்ள தோள்கள் ஆயிரமும்
துணியும்படியாக
யுத்தத்திலே கையிலே மழுவைத் தரித்து
மற்று அவன் உண்டு -சஹஸ்ர பாஹ் வர்ஜுனன் –
ஸ்வ ஹஸ்த வதத்தாலே
வீர ஸ்வர்க்கத்தை பிராபிக்க –

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலை கடல் நடுவே
அவனாலே  பீடிதரான தேவர்கள் அடங்கலும்
அநந்தரம்
திரு நாமங்கள் ஆயிரமும் சொல்லி ஆஸ்ரயிக்க
யோக நித்ரையை ஸ்வ சந்நிதானத்தாலே கழித்து
திரை மோதா நின்றுள்ள கடலின் நடுவே

ஆயிரம் சுடர்  வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே
நித்ய அனுபவம் பண்ணுகையால் வந்த
ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக
புகரை உடைத்தான பல வாய்களையும் உடைய
திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவன்
அப்படியே காணலாம்படி இங்கே வந்து
சந்நிஹிதன் ஆனான் –
(ஓம் நமோ பகவத் வாஸூ தேவாயா -ஸ்வரூபியாய் இங்கே )

————————————————————-

கடலைக் கடைந்து அம்ருத பிரதானம் கீழே
இதில் கடலை அடைத்தது –

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-

சுரி குழல் கனி வாய்த் திருவினைப்
ஸூ கேச்யா-என்றும்
சாரு கேசீம் – என்றும்
சொல்லுகிறபடியே அழகிய திருக் குழலையும்
கனிந்த அதரத்தையும் உடையளான பிராட்டியை –

பிரித்த கொடுமையில் –
அனந்யா ராகவேணாஹம்-என்றும்
அனந்யா ஹி மயா சீதாபாஸ்கரேண ப்ரபா தயா -என்றும்
இரண்டு தலையும் சொல்லாம்படி இருக்கிற இருவரையும்
இரண்டு இடத்திலே யாம்படி பண்ணி

கடு விசை யரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து
க்ரௌர்யத்தையும் பெரிய வேகத்தையும் உடையனான
ராவணன் உடைய அக்னி கல்பமாய்க் கொண்டு
விளங்கா நின்றுள்ள  ரத்னங்களாலே
செய்யப் பட்ட முடிகளை பொடி செய்து -என்னுதல்
அன்றிக்கே
எரி விழித்து –திருவினைப் பிரித்த என்னுதல் –

இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி –
இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக
பாழ் படுத்தும்படி மநோ ரதித்து

வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட
தர்ச நீயமான வில்லு  வளைய
கொலை யம்புகளை நடத்தி
பெரிய ஷோபத்தை   உடைத்தான கடல் வந்து முகம் காட்டி
நான் முதுகு காட்டிச் செறிந்து தருகிறேன்
அடைத்துக் கொடு போவது என்று வழி பட –

மலையால் அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான்-
எதேனுமாக இட்டது அ.டையைக் கொண்டு
ஆழக் கடவ கடல் வழி பட
நீரிலே புக்கு அமிழக் கடவ மலைகள் மிதந்து அணையாக
கணக்கு வழக்குப்பட ஒரு வியாபாரம் பண்ண மாட்டாத வானர ஜாதியைக் கொண்டு
அடிமை கொண்டு
நீர்க் கிளப்பத்தை உடைத்தான
கடலை அடைத்தான் –

அரங்க மா நகர் அமர்ந்தானே –

————————————————-

ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-8-

ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய்
காலோ பல ஷிதமான சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்
அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா பிரபு – என்றும்
போக்தாம் யஜ்ஞ  தபஸாம் -என்கிறபடியே
சர்வ கர்ம சமாராத்யனாய்
ஏக சக்கரமான ரதத்தை உடைய ஆதித்யனுக்கு
அந்தராத்மாவாகக் கொண்டு
அவ் வழியாலே உபாஸ்யனாய்-

உலகினில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து –
லோகத்திலே முகப் பட்டத்தை உடைத்தாய்
மத முதிதமாய்க் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துக்கத்தைப் போக்கி

இலங்கை மலங்க வன்று வடு சரம் துரந்து-
இலங்கை யானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி
கொலை யம்பு நடத்தி

பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப்
பலத்தால் மிக்கு இருந்துள்ள அர்ஜுனனுக்கு கிருபை பண்ணி
ஆதித்யனாவனன் ஒளி மழுங்கும்படி

பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் –
அவனுடைய பிரகாசத்துக்கு அடைத்த காலம் தன்னிலே
அநேக ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே
இருந்துள்ள புகரை உடைய திரு ஆழியைக் கொண்டு
அந்த ஆதித்யனை மறைத்தவன் –
இந்த ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே
முகக்கலாம் படி
அளவு பட்டு இருக்கையாலே தமஸ்ஸூ  போம்படியாய் இருக்கும் –
அங்கன் அன்றிக்கே
திரு ஆழி ஆழ்வான் தேஜஸ்ஸூ
நேர் கொடு நேர் கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி
மிக்கு இருக்கையாலே
பளபளத்து கண்ணை இருளைப் பண்ணிற்று
பகலே -பகலவன் ஒளி கெட –

அரங்க மா நகர் அமர்ந்தானே –

—————————————————–

பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால் பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச்
சேயனாய் அடியேற்கு  அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-9-

பேயினார் முலை யூண் பிள்ளையாய் –
பேயினுடைய விஷத்தாலே நிறைந்த முலையை –
தாய் முலைக்கும் வேற்று முலைக்கும்
வாசி அறியாதே உண்ட முக்த்தனாய் –

ஒரு கால்
ஒரு கால் விழுக்காடு அறியாமை என்றும் ஒக்கும் ஆய்த்து-
(தாய்க்கும் பேய்க்கும் வாசி அறியான்
மண்ணுக்கும் வெண்ணெய்க்கும் வாசி அறியான் )

பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த வாயனாய்-
ஒரு கால் பரப்பை உடைத்தான பூமியை வயிற்றிலே வைத்து
அது சாத்மியாமையாலே உமிழ்ந்த திரு வதரத்தை உடையனாய்

மாலாய் –
சர்வாதிகனான சர்வேஸ்வரனாய் –

ஆலிலை வளர்ந்து –
சிறு வடிவைக் கொண்டு
பெரிய லோகங்களை வயிற்றிலே வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளி

மணி முடி வானவர் தமக்குச் சேயனாய்
ப்ரஹ்மாதிகளுக்கு தூரஸ்தனாய்-

அடியேற்கு  அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
என் போல்வாருக்கு கையாளாய்-
என் பக்கல் அபேஷா மாத்ரமும் இன்றிக்கே   இருக்கத்
தானே வந்து
என்னுடைய மானஸ வ்யசனத்தைப் போக்கும் –

ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே
ஆயனாய்
கோவர்த்தன கிரியைத் தரித்து
பண்ணின உபகாரம் அறியாத
பசுக்களையும் இடையரையும் நோக்கினவன் –
(தானே வந்து அபேஷா நிரபேஷமாக உதவினத்துக்கு த்ருஷ்டாந்தம் இது )

———————————————

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல்  பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே —-5-7-10-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
பொன்னும்
பெரு விலையனான ரத்னங்களும்
முத்துக்களும் சுமந்து
தன்னில் தான் பொரா நின்றுள்ள திரைகளை உடைய
மகா நதி உண்டு -காவேரி
அது பர்யந்தத்திலே சூழப் பட்டு இருப்பதாய்

அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
அருகே அன்னங்கள் சஞ்சரியா நின்றுள்ள
ஸ்ரீ சந்திர புஷ்கரணி தொடக்கமான பொய்கைகள்
சூழ்ந்த கோயிலிலே வந்து
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனை –
(சுற்றிலும் -அஷ்ட தீர்த்தங்கள் உண்டே சந்த்ரபுஷ்கரணி கர்ணிகை போல் நடுவாக
அன்னங்கள் பொய்கையில் தானே இருக்கும் )

மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பிரளயங்களுக்கும் அழியாத
மாடங்களால் சூழப் பட்ட திரு மங்கையில் உள்ளாருக்கு
நிர்வாஹகராய்
அளவுடைத்தான வேலைப் பரிகரமாக உடைய ஆழ்வார்
அருளிச் செய்த –

பன்னிய பனுவல்  பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே
லஷணங்களில் ஒன்றும் குறையாத படி
விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார்
ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு
போக்கப் பெறுவார் –

——–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

பண்டைய காரணன் அண்டர் அல்லல் விண்டு ஒழித்து
தொண்டர்க்காய்த் தான் தரணியில் திண்ணம் அண்டர் கோன்
வந்து இருக்கும் கோயில் எண்ணித் தான் உய்க்கும் நீலன் தாள்
வந்தியாதார் தாம் ஏழையர் -47-

காரணன் -காரணம் ஸ்து த்யேய-
தரணி -உலகம் -திண்ணம் வந்திருக்கும் -சம்சாரம் வேரோடு கிழங்கு அறுத்தால் அன்றி பேரேன்-என்று இருக்கும் சீர் –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading