ஸ்ரீ பெரிய திருமொழி-5-6—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

தீர்ப்பாரை –த்வாராபதி மன்னனை ஏற்றுமின்
ஏற்றுதலும் தொழுது ஆடுமே சொன்னதும்
தொழுதாள்
எழுந்தாள்
ஆடினாள்
அதே போல் இங்கும்

கைம்மானம் பிரவேசம் –

மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாள் -என்று
திரு நாமங்களைப் பல காலும் தானே சொல்லியும்
திருத் தாயார் அவற்றை அனுபாஷித்து கேட்டும்
ஆக
இப்படி திரு நாமங்களிலே வாசனை பிறந்தது –
சத்தா தாரகமாய் இறே திரு நாமங்கள் தான் இருப்பது  –
அத்தாலே உணர்ந்து தரித்தார் –

தரித்த அநந்தரம்
நீர் இங்கனே கிடந்து படுகிறது என் –
பரம பதம் கலவிருக்கையாய் இருக்க
நாம் இங்கே வந்து ஸூலபர் ஆகிறது உமக்காக அன்றோ -என்று
அவதார சௌலப் யங்களையும்  காட்டி
அங்கன் காதாசித்கமாக அன்றிக்கே
கோயில்களில்  வந்து சந்நிஹிதர் ஆகிறதும் உமக்காக
(ஆராமம் சூழ்ந்த அரங்கம் )

அந்தப் பொதுவும் அன்றிக்கே
விசேஷித்து கோயிலிலே வந்து
சந்நிஹிதர் ஆய்த்ததும் உமக்காக –
நம்முடைய சந்நிதியால் உள்ள பலம் தானே நீர் பெறுவதும் செய்தீர் –
நாமே உம்முடைய கார்யத்துக்குக் கடவோம் என்று
நம் தலையிலே ந்யஸ்த பரராய் இருக்கப் பெற்றீர் இறே
இனி அலமாக்கிறது என் -என்ன –
(நம் தலையிலே-திருவடியில் சொல்லாமல் -நாம் சமர்ப்பிப்பதை தலையால் தாங்குபவன் அன்றோ )

ஸ்ரீ கௌசலையையார் பெருமாள் காடேறப் போகிற போது
ஏக புத்ரையாய் இருக்கிற நான் உம்மை விட்டு இருக்க மாட்டேன் -என்று புறப்பட
ஒரு கால் அவர் முகத்தைப் பார்த்து
ஆச்சீ நீர் சொல்லுகிறது தர்ம ஹானி கிடீர்
இனி பர்த்தா இருக்க புத்ரனை அநுவிதானம் பண்ணவும் கடவதல்ல
ஆன பின்பு இனி மீளும் -என்ன
அவள் காப்பிட்டு மீண்டாள் இறே

அப்படியே இவர்
அவ் வார்த்தையாலே ஹ்ருஷ்டராய்
பெற்றதிலே லாப அம்சத்தைச் சொல்லி
க்ருதாரத்தராகிறார் –

—————————————

கைம்மான மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1-

பனி-கல் மழை அன்றோ வர்ஷித்தான் -ஆகவே கல் எடுத்துக் காத்தான்

கைம்மான மழ களிற்றை –
ஆனையில் கிடந்த கிடக்கை -என்று
ஓர் ஆனை கைகளையும் கால்களையும்
பரப்பிக் கொடு கிடக்குமா போலே
கிடக்கிற கிடை –
நீண்ட துதிக்கையை உடைத்தாய்
பருவத்தால் இளையதாய்
இருப்பதொரு ஆனை சாய்ந்தாப் போலே
இருக்கிறவனை –

கடல் கிடந்த கரு மணியை-
(திருப் பாற் கடலிலே )கடலில் பாழ் தீரும்படி
ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே
இருக்குமவனை –

மைம்மான மரகதத்தை –
ஸ்யாமத்வம் மிக்கு இருந்துள்ள
மரகத ரத்னம் போலே இருக்குமவனை  –
(ஸ்யாமம் நீலம் பசகு பசகு என்று இருக்கும் கறுமை )

மறை யுரைத்த திரு மாலை –
வேதங்களாலே ஒரு மிடறு செய்து
பேசப் பட்ட ஸ்ரீயபதியை –
ஹ்ரீஸ்சதே-அஸ்யே சா நா  –
(மறைகளால் உரைக்கப்படும்
மாதவன் பெயர் சொல்வதே வேதத்தின் சுருக்கு
நால் வேதம் கண்டானை கண்ண புரத்தம்மானே -அங்கு வெளியிட்டு அருளினவன் )

திரு மாலை எம்மானை –
இருவருமான சேர்த்தியைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனை –

எனக்கு என்றும் இனியானைப் –
ஏதேனும் நொந்த தசையிலும் தன்னை அனுசந்தித்தால்
எனக்கு இனியனாய் இருக்குமவனை –

பனி காத்த வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
இப்படியே தான் அல்லது ரஷகர் அல்லாதாரை
அரியன செய்தும் ரஷிக்குமவனை –
(கீழே விஸ்லேஷ வியசனம் தடுத்ததுக்கு திருஷ்டாந்தம் இது )

கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
ஒரு கால் மலையை எடுத்து பசுக்களையும் இடையரையும் ரஷித்தான் –
திருப் பாற் கடலிலே கிடந்தான் -என்று
கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே
நான் கோயிலிலே காணப் பெற்றேன் –

———————————————-

கீழே கிடை அழகு
துக்க விசனம் போக்கினத்துக்கு பனி காத்ததையும் அனுசந்தித்து
அத்தோடு தோள் தீண்டி
கிடந்தபடி
தெற்கு வீட்டில் அபேக்ஷிதம் தருவதாக சொல்ல ( திருக்குறுங்குடி திருவரசு)
போகும் வழியில் திருத் தண் கால்
திருக்குறுங்குடி
அனுபவிக்கிறார்

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ்வுலகு ஏழு உண்டும்
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே —5-6-2-

(ஏழு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேன் -10-8-2–நம்மாழ்வாரும் திருப்பேர் நகர் பதிகம் )

பேரானைக் –
ஆற்றங்கரையிலே
சர்வ போக்யமாம் படி
திருப் பேரிலே சந்நிஹிதன் ஆனவனை –

குறுங்குடி எம்பெருமானைத் –
திருக் குறுங்குடியிலே ஒரு விசேஷ பிராப்தி உண்டு இறே இவருக்கு –
ஆழ்வார் ஸ்வா தந்த்ர்யம் இறே அங்கு நடப்பது

(மங்க ஒட்டு உம் மா மாயம்
சரம விமல திருமேனி –
திருவாணை கண்டாய்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
பாகம் முதிர்ந்தவாறே
இங்கே காண மாட்டாமல் தெற்கு வீட்டுக்கு அருள் பாடிட்டு
அவர் ஆஸ்ரித பாரதந்தர்யம் தானே எனக்கு கர்தவ்யம்
என்று ஆழ்வார் ஸ்வா தந்தர்யம் படி சரீரம் தள்ளி கூட்டிப் போனதால் )

திருத் தண் கால் ஊரானைக் –
அவ் ஊரில் உள்ளாவர்களில் தானும் ஒருவனாய்
தன் வ்யாவ்ருத்தி தோற்றாதபடி  இருந்தவனை –

கரம்பனூர் உத்தமனை –
வழிக் கரையிலே திரு வாசலுக்கு ஒரு கதவு
இடாதே வந்து கிடக்கிறவனை-

முத்திலங்கு காரார் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ்வுலகு ஏழு உண்டும் ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே
முத்துக்கள் ஒளி விடா நிற்பதாய்
கருமை மிக்கு
தான் கரையை அதிக்ரமிக்க கடவது அன்றிக்கே
நிற்கிற நிலையை ஒருவரால்
கொலைக்க ஒண்ணாத படி
அதில் திண்ணியதாய் இருக்கிற கடல்கள் ஏழும்
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற மலைகள் ஏழுமான
இந்த லோகங்கள் ஏழையும்
தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும்
ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே
உபகாரம் கொண்டார்க்கு
பிரத்யுபகாரம் தேடி
நெஞ்சாறல் பட வேண்டாத படி
இருந்தவனை –

———————————————–

திருக் குறுங்குடி நம்பி தம்மை
சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்ததும் த்ருஷ்டாந்தம்
ஸ்ரீ வராஹ நாயனார்
நம் பாடுவான் -பாகவதனுக்கு போக்ய பூதனாய் அங்கு போல்
நமக்கும் இருப்பார் என்று சங்கதி

ஏனாகி உலகிடந்து  அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

ஏனாகி உலகிடந்து  அன்று  –
பூமியை பிரளயம் கொண்ட அன்று
ஏனமாய் இத்தை  இடந்து எடுத்து –

இரு நிலமும் பெரு விசும்பும் தானாய பெருமானைத்-
பூம் யந்தரிஷாதிகள் அடைய தான் என்ற சொல்லில் அடங்கும்படி
இத்தை பிரகாரமாக உடைய
சர்வேஸ்வரனை –

தன் அடியார் மனத்து என்றும் தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை
ஒருவன் காலில் முள் பாய்ந்தால்
சரீரி யானவன் நோவு படுமா போலே
ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம்  படி
இதுக்கு அபிமானியாய் இருக்கிற
இருப்பை அனுசந்தித்து இருக்கும்
தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு
சர்வ வித போக்யனாய்
அத்தாலே உஜ்ஜ்வலனாய்
இருக்குமவனை –

மகிழ்ந்து ஒரு கால் ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே –
கிருஷ்ணனாய் அவதரித்து
பரமபதம் கலவிருக்கையாய் இருக்க
நமக்கு இங்கே வந்து குறைய நிற்க வேண்டா நின்றது
என்னும் இன்னாப்போடு அன்றிக்கே
இப்படி யாகிலும் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம் என்னும்
ப்ரீதி பிரகர்ஷத்தோடே பண்டு ஒரு கால் பசுக்களையும்
கன்றுகளையும் மேய்க்கும் இடையனாய்
அதில் புரையற வர்த்தித்தவனை   –

——————————————–

ஆனாயானான் ஏனம் கீழே அனுபவம்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி ஆகதோ மதுராம் புரிம்-
கடல் கிடைத்து
கண்ணனாய்
ஏனம் அடுத்த
நரசிம்ம வாமனன் த்ரிவிக்ரமன் அனுபவம் இதில் என்று சங்கதி –
உமக்காகவே அவதாரம் கோயில் சந்நிதி சொன்னதுக்கு பாட்டு தோறும் உண்டே –

வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலி யுருவில் திரி சகடம்
தளர்ந் துதிற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெரு நிலம் ஈரடி நீட்டி நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

வளர்ந்தவனைத் தடம் கடலுள் –
பரப்பை உடைய கடலில்
அவதாரங்களுக்கு நாற்றங்கால் ஆம்படி வந்து கண் வளர்ந்தவனை –

வலி யுருவில் திரி சகடம் தளர்ந் துதிற யுதைத்தவனைத்
பின்பு அசுரர்கள் மிகைத்தார்கள் என்று கேட்டவாறே வந்து அவதரித்து
அசூராவேசத்தாலே திண்ணிய வடிவை உடைத்தாய்
ஊர்ந்து வருகிற சகடம் சின்னம் பின்னமாய் போம்படி
திருவடிகளாலே உதைத்தவனை –

தரியாதன்றி ரணியனைப் பிளந்தவனைப்-
சிறுக்கனை கடலிலே தள்ளுவது
மலையிட்டு அமுக்குவது ஆகப் புக்கவாறே
நரசிம்ஹமாய் ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனை –

பெரு நிலம் ஈரடி நீட்டி நீட்டிப் பண்டு ஒரு நாள் யளந்தவனை –
பரைப்பை உடைய பூமி இரண்டு அடியாலே அடங்கும்படி
திருவடிகளை
நீட்டி அளந்து கொண்டவனை –

யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே  –

—————————————

வாமனனாய் மண் அளந்து
காரண அவஸ்தை வியாப்தி ஸூஷ்ம
கார்ய அவஸ்தை வியாபித்து ஸ்தூல
அனுசந்தித்து
அந்தர்யாமித்வம்
நரஸிம்ஹ கீழே -கொல்லப்பட்ட ஹிரண்ய கசிபு அடுத்த அவதாரம் ராவணன்
ராம அவதாரம்
நற்பால் உய்த்தவன்
சாதந பூதயா கர்ம -ஆராதிக்கப் படுபவனையும் சொல்லி
இதில் உண்டே

நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
பேர் அழலாய்ப் பெரு விசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5-

மந்த்ரத்தின்-இன் சரிகை

நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை –
த்ரிவ்ருத் கரணத்தாலே
பஞ்சீ கரணத்தைச் சொன்ன படி

அன்று அரக்கன் ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
ராவணன் மிகைத்த அன்று
அவனூரை அரணும் அட்டாலையும் தெருவுமாய் கண்டவர்கள்
அனந்தர ஷணத்திலே
அப்படிக் காணாதே -ஸ்மசான சத்ருசமாக காணும்படி
அக்நியாலே அத்தை முடித்தவனை –

பேர் அழலாய்ப் –
படபாமுக அக்னியாய்

பெரு விசும்பாய்ப் –
இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி
அவ்வருகே பட்டார்க்கு
பிராப்யமான பரம பதமுமாய் –

பின் மறையோர் மந்த்ரத்தின் ஆர் அழலால் உண்டானைக் –
அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக
பிராமணர்கள் உடைய யாகங்களிலே
மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை
த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா பிரபு ச –

கண்டது தென்னரங்கத்தே –

——————————————

கீழே மோக்ஷ சாதனம் ஆராதனை
அந்தர்யாமித்வம் -மோக்ஷம் பூரி தானம் பண்ணின ராமன்
இப்பாட்டில்
தானே உபாயம்
விரோதி சீலன்
ஆபத் சகன்
ஸ்ரீ கிருஷ்ண அனுபவம்

தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசை யுருவை யசைவித்த
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே–5-6-6-

அஞ்சிறைப் புட்பாகனை-பாணாசுரன் நரகாசுரன் இரண்டிலும் கருடாரூடனாய் வந்தானே-

தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத்
அநசூயவே-என்று
உந்தனை அதிகாரிகளைக் கண்டிலேன் காண்-
என் வைபவத்தைச் சொன்ன விடத்தில்
சிவீல் என்று இருந்திலை –
இன்னமும் எனக்கு வைப்பான வற்றைச் சொல்லுகிறேன்
செவி தாழ்த்து கேட்டுக் காண் -என்றான் இறே

பிரத்வேஷம் பண்ணாது ஒழிவது அத்தனையே யாய்த்து வேண்டுவது
த்வேஷத்தை தவிர்ந்து
தன்னை அடைந்தவர்கள் உடைய
ஸ்வ பிராப்தி உபாயத்தை
தானே நிர்வஹித்துக் கொடுக்குமவனை –

(அசூயை குணத்தை தோஷமாகப் பார்ப்பது
வாத்சல்யம் தோஷமே குணமாகக் கொள்வது)

தரியாது கஞ்சனைக் கொன்று –
த்வேஷமேயாய் இருப்பார் அளவில் இருக்கும் படி –
ஸ்ரீ தேவகியாரையும் ஸ்ரீ வசுதேவரையும் நலியப் புக்க வாறே
அத்தைப் பொறாதே
இனி அரை ஷணம் இவனை வைக்க ஒண்ணாது
என்று அவனைக் கொன்றான் ஆய்த்து-

அன்று உலகம் உண்டு உமிழ்ந்த –
த்வேஷமும் பண்ணாதே
தன்னை அடைவதும் செய்யாதே
இருப்பார் அளவில் இருக்கும் படி
ஆபத்தை அடையாளமாக ரஷிக்கும் இத்தனை யாய்த்து
தான் அறிந்த சம்பந்தத்தையே பார்க்கும் இத்தனை –

கற்பகத்தை –
இப்படி உபகரித்தோம் என்று நினைத்து இராதவனை-

வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசை யுருவை யசைவித்த அஞ்சிறைப் புட்பாகனை –
வெவ்விய சினத்தை உடையவனாய்
பிராணி ஹிம்சா ரூபமான உப சம்ஹாரத்தை
தொழிலாக உடைய ருத்ரன் உடைய
பெரிய வேகத்தை உடைய வடிவை
அசைவித்தான் யாய்த்து

ருஷபம் வாலை எடுத்துக் கொண்டு ஓட
தான் ஜடையை விரித்துக் கொண்டு முதுகு  காட்டி
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ -என்றாப் போலே சொல்லிக் கொண்டு
ஓடும்படி பண்ணின
திருவடியை வாகனமாக உடையவனை –

இது பாணனை -என்றும் சொல்லுவார்கள்
நரகனை என்றும் சொல்லுவார்கள் –

யான் கண்டது தென்னரங்கத்தே –

—————————————

திருவேங்கடம் -திருவிக்ரமன் -திருக்கோவலூர் -திருவரங்கம்
உபாயத்தை ச பிரகாரமாக அனுசந்திக்க
ப்ராப்யமும் பெறு விக்கும் அவள் சேர்த்தியும் திரு உள்ளத்தில் ஓட
காணலாம்படி
வட வேங்கடம் இருந்து
திருவடிக்கீழ் இட்டபடியும்
த்வய பதங்கள் இதில் உண்டே –
சிந்தனை -ப்ராப்யம்
தவ நெறி -பிராபகம்
இரண்டுமே திரு மால் ஒரு மிதுனமே ப்ராப்ய ப்ராபகம் என்று காட்டி அருளிய
திரு அரங்கனுக்கு க்ருதஜ்ஜை இதில்

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள்
த்வயம் சொன்னாலே திருவேங்கடம் உண்டே ஆழ்வார்கள் அருளிச் செயல்களில்

சிந்தனையைத் தவ நெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7-

சிந்தனையைத்-
வழு  விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று
உண்டான என்  மநோ ரதத்துக்கு விஷயமாய்
பிராப்யமாய் உள்ளவனை –

தவ நெறியைத் –
அத்தை பெறுவிக்கும் உபாயமும் தானேயாய் உள்ளவனை –

இப்படி பிராப்ய
பிராபகங்கள்
இரண்டும் தானேயாய் இருக்கிற வஸ்து தான் ஏது என்ன –
திருமாலைப் –
பிராபகத்தில் புருஷகாரமுமாய்
பிராப்யத்துக்கு அவனோபாதி இறே
இருப்பது –

பிரியாது வந்து எனது மனத்து இருந்த வட மலையை –
திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக
உடையவனாய்  இருந்து வைத்து
இவ் வவஸ்தைகளை என் நெஞ்சிலே பிறப்பிக்கைக்கு
தானே வந்து
மனசிலே விடாதே
பொருந்தி இருக்கிறவனை –

வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த வந்தணனை-
நல்ல நிறத்தை உடைய வண்டுகள்
படிந்து இருக்கும் பூங்கொத்துக்கள்
நெருங்கின பொழிலை உடைய
திருக் கோவலூரிலே
இந்த லோகங்களை அளைக்கைக்காக
திருவடியை நீட்டிக் கொடு நிற்கிற
விநீத வேஷத்தைக் காட்டி
இத்தை அடைய தன்னதாக்கிக் கொண்டவனை –

யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
தானே அர்த்தியாய் கொண்டு இருக்க
நான் கண்டது தென்னரங்கத்தே-

——————————————–

கீழ் பாட்டில் த்வய நிஷ்டர்
கிருபையை அனுசந்தித்து
பரம வைதிகர்
கேசவன் தமர் படி திரு மேனி சம்பந்தம் -சிஷ்யாதிகளுக்கும்
நித்ய ஸூரிகள் படி போலே அனுக்ரஹம் உபகாரன்
எதிரிட்ட புத்தாதிகளை நிரசித்தபடியும் –

துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத் தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8-

துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும் அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத்
சிவந்த அஸ்தரத்தை தரிக்கக் கடவ பௌத்தருக்கும்
வைதிகர் அல்லாமையாலே ஸ்பர்ச யோக்யதை அல்லாத சமணர்க்கும்
வேதோக்தமான கர்மத்தாலே
தன்னை ஆஸ்ரயியாதார் அளவில் ஒரு காலும் கிருபை பண்ணக்
கடவது அன்றிக்கே இருக்கும் அருளை உடையவனை –

பால் மரமே யாகிலும் அகாலத்திலே குத்தினால்
பால் மறுத்து இருக்குமா போலே யாய்த்து இருப்பது –

தன் அடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
தன்னையே பற்றின என்னோடு
சம்பந்தம் உடையாருக்கும்
வைஷ்ணவர்களுக்கும் -என்றபடி
எனக்கும்
எனக்கு தாயும் தமப்பனும் என்று இருக்கிற இவர்களுக்கும்

அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே
நித்ய ஸூரிகளுக்கும் ஒக்க
தரம் வையாதே சேஷியாய்
இருக்குமவனை –

—————————————————

புத்தாதிகள் இடம் பொய்யன்
மெய்யர்க்கு மெய்யானாமை அனுசந்தித்து
நிரதிசய பக்தி நிஷ்டர் ஆழ்வார்கள்
அரவத்து அமளியினோடும் உள்ளத்தில் இருந்தமை
சாதனா நிஷ்டர் போல் இருக்கும் அளவு என்னிடம் என்றுமாம் –

பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செல வைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ் வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-9-

பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செல வைத்து
பொய் என்றது -பிரகிருதி பிராக்ருதங்களை-(அஸ்திரம் மாறிக் கொண்டே இருப்பதால் பொய் )
சத்யஞ்சா ந்ருதஞ்ச   -பொய்யினுடைய வண்ணத்தைப் பற்றின மனசை அகற்றி –
பிரகிருதி பிராக்ருதங்களை -நன்று ஸ்திரம் -என்றாப் போலே
நினைத்து இருக்கும் அவற்றை விட்டு

புலன் இத்யாதி –
மனசை அகற்றினாலும்
பின்னையும் அவற்றிலே கொடு போய்
மூட்டுமவை இறே  -பாஹ்யேந்திரங்கள்
அவை விஷயங்களில் போகாதபடி பண்ணி –

மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக
தன் பக்கலிலே பக்தியைப் பண்ணுமவர்களுக்கு-
தன் ஸ்வரூபாதிகளை
உள்ள படியே காட்டிக் கொடுக்கும் விஸ்மய நீயனை  –
(ஆழ்வாராதிகளுக்கும் சாதனா நிஷ்டர்களுக்கும் இவை பொருந்தும்)

அவர்களுக்கு உள்ள படியே காட்டிக் கொடுப்பதை எத்தை -என்ன –
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின் அவ் வண்ண வண்ணனை –
விவ்ருனுதே தநூம் ஸ்வாம்-
அஞ்சனத்தின் உடைய நிறம் இருண்ட மேகம் போலே விளங்கா நின்றுள்ள  நிறத்தை உடைய
மரகதத்தின் உடைய
அந்த நிறம் போலே இருக்கிற நிறத்தை உடையவனை –

யான் கண்டது தென்னரங்கத்தே –
( அவன் காட்ட நான் கண்டது )

————————————————-

ஆ மருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
கா மரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு  இரண்டினையும்
தா மருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே —5-6-10-

ஆ மருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம் முதல் இல்லாத
பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து (கோ சகன் ஆ மருவி அப்பன் )
அது தான் பர தசை-என்னும்படி
கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை –
(மதிள் அரங்கர் கற்றினம் மேய்த்த எந்தை -திருமாலை தனியன் )

கா மரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
எல்லாருக்கும் ஸ்ப்ருஹை பண்ண வேண்டும்படியான
ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மியை உடைய ஆழ்வார்
ஒலி உடைத்தாய் செய்த தமிழ் மாலை  –

நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு  இரண்டினையும்
மனஸ் சஹகாரம் வேண்டாதே
இத்தை ஒரு கால் நாக்கிலே இட்டால்
பின்னை நா விடாதே இருக்கும் ஆய்த்து

தா மருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே
மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக்
கற்றவர்கள் மேல்
இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க
துஷ் கர்மங்கள் தாமே
இது நமக்கு நிலம் அல்ல -என்று
விட்டு ஓடிப் போம் –

————-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கை கழிந்த அன்பர் முன் கை கட்டித் தான் நின்றும்
கையர் நலிந்தும் வையம் நலம் எண் ஐயன்
அரங்கனைக் கைக்கனியாய்க் காண் கலியன் பாதம்
பரவ வினைப் பாறிடுமே பண்டு -46-

கை கழிந்த அன்பார் -மிக்க பெரும் சீர் தொண்டர் என்றபடி -பரத்வம் வந்தேறி அன்றோ அரங்கனுக்கு
கையர் -கயவர்
வையம் நலம் எண் -உறங்குவான் போலே யோகு செய்யும் -வ்யூஹ ஸுஹார்த்தம் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading