ஸ்ரீ பெரிய திருமொழி-5-3–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

உயிருக்கு எல்லாம் தாயாய் அளிக்கும் தண் தாமரைக் கண்ணன் -புண்டரீகாக்ஷனே
கம்பீராம்ப ஸமுத்பூத -ஸ்ம்ருஷ்ட நாள – ரவி கர விகசித -புண்டரீக தல-அமலாய தேக்ஷிண –
அசேஷ சித் அசித் இத்யாதி
ஜகத் ரஷகம் அறிந்ததும் கைங்கர்ய பிரார்த்தனை வேண்டுமே
எனக்கு அருள் புரியே -பாட்டுத் தோறும் கைங்கர்ய பிரார்த்தனை இதில்
கைங்கர்யம் கொடுத்து அருளுவதே ரக்ஷணம்

ஸ்வேத கிரி
மஹா லஷ்மீ பிரதானம்
பங்கயச்செல்வி
தாமரைக்கண்ணன்
பிரயோக சக்கரம்
சிபி சக்ரவர்த்தி -புதருக்குள் வெள்ளைப் பன்றி
மார்கண்டேயர் சொல்ல பால் அபிஷேகம்
அந்திக்காப்பு பெரியாழ்வார் பதிகம்
விமலா கிரி விமானம் சூர்யன் சந்திரன் கவரி வீச
ராமானுஜர் இங்கேயே இருக்க இன்னுயிர் சேவல் பாடல் சொல்லி ஸ்ரீ ரெங்கம் கூட்டி சென்ற ஐதீகம்
ஸ்வஸ்திகா குளம் பிரசித்தம்

வென்றி  மா மழு–பிரவேசம் –

அடியேன் உள்ளம் உருகப் புகுந்த
ஒருவரூர் போல் -என்று
தம்முடைய ஹிருதயத்தில் புகுந்திருந்த
உபகாரத்தை அனுசந்தித்து ஹிருஷ்டரானார் -கீழில் திரு மொழியிலே –
அவ் விருப்புத் தான் பேறாய்த் தோற்றுகிறது -திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தைப் பண்ணி வர்த்திக்கப் பெறில் இறே-
அது பெறாமையாலே
கிலேசத்துக்கு உடலாய் தோற்றிற்று-

முதலிலே செய்யாது ஒழி ந்து இருந்தது அல்ல
குறைவறச் செய்தது அல்ல
ஒரு வாசி செய்தருளப் பார்த்தால்
அது முடியச் செய்து தலைக் கட்ட வேண்டாவோ –
ஆன பின்பு
த்வத் ப்ராப்தி பிரதிபந்தகத்தைப் போக்கி தேவர்
திருவடிகளில் உண்டான கைங்கர்யத்தை
நான் பெறுவேனாம்படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் –
என்கிறார் –

(வேண்டாவோ என்று -திருக் கூடலூரில் கைங்கர்யம் பெற வில்லை -இங்கு கொடுத்து அருளக் கூடாதோ
இவ்வளவு பாசுரங்கள் பாட வைத்த அளவு போதாதே
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
நாட்டாரை விட இவர் வேறே -வாசி –
முடிய செய்து அருள வேணுமே
ஆன பின்பு ஸ்வ பிராப்தி பிரதிபந்தகங்களைப் போக்கி -தேவரீர் திருவடிகளில் கைங்கர்யம்
பண்ண கிருபை பண்ணி அருள வேண்டும்
அங்கும் கைங்கர்ய ஸ்ரீ க்காக அன்றோ போகிறோம்

———————————————————-

விரோதி கழிந்த பின்பே கைங்கர்யம் -நம முன்பு- நாராயணாயா பின்பு –
ஆகவே விரோதி நிரசனம் முதல் பாசுரத்தில்
முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ-

பூமிக்கு ராஜாக்களால் வரும் நலிவைப் போக்கி
ரஷித்த அருமை வேணுமோ
என்னுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி
என்னை அடிமை கொள்ளுகைக்கு -என்கிறார்

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தர வரு திரு வெள்ளறை நின்றானே —-5-3-1-

மௌவலின்-முல்லையின்
முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ
தேவ – திவு – காந்தி ஒளி மயம்
கமலபாதம் வந்து போல் தென்றல் மணங்களைக் முகர்ந்து இங்கே வருமாம் –
நின் குரை கழல் தொழுவதோர் வகை -கைங்கர்யம் செய்யும் பிரகாரம் இங்கு -சரணாகதிக்கு பின்பு உள்ள கிருத்யம் இங்கு –

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால் கொன்ற தேவ –
ஆரேனும் கையில் கொடுக்கிலும்
வெற்றியை பண்ணிக் கொடுக்கக் கடவதாய்
எதிரிகள் அளவு அல்லாத படியான பெருமையை உடைத்தாய் இருக்கிற மழுவை
அழகுக்கு தரிப்பாரைப் போலே தரித்து –
(ஏந்தி -அநாயாசேன தரித்து -)

முன்பு ஒரு நாள் –
பூமியில்  ராஜாக்களை இருப்பதொரு படி கால்
வாரி அறுத்துப் பொகட்டு
பிரதிபந்தகத்தைப் போக்கின இது
பிறருக்கு உபகரித்தது ஆகை அன்றிக்கே
உன் பேறு என்னும் இடம்
வடிவில் புகரிலே தோற்றும்படி இருக்கிறவனே
விஜ்வர பிரமுமோதஹ -என்கிறபடியே  –
(ஓர் கூர் மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் அங்கும் தேவன் )

அப்போது அது செய்தமை உண்டு
உமக்குச் செய்ய வேண்டுவது என் என்ன –
நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
உன்னுடைய ஆபரணங்களால் அலங்க்ருதமாய்
அவற்றால் உண்டான த்வனியை உடைத்தான
திருவடிகளிலே
நான் என்னுடைய ஸ்வரூப அனுரூபமான
வ்ருத்தி விசேஷத்தை
பண்ணுவது ஒரு பிரகாரம் என் பக்கலிலே
கிருபை பண்ணி அருள வேணும் –

மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
அவ் ஊரில் பதார்த்தங்கள் அடங்கலும்
பரார்த்தமாய் யாய்த்து இருப்பது –
தனக்காய் இருக்குமது இன்றிக்கே
பிறர்க்காய் இருக்கையே தனக்கு பேறாய் இருக்கை –
மன்றில்களிலே செறியப் பூத்து
பழங்களை உடைத்தான மா மரங்களிலே போய் புக்கு
அதில் உண்டான பரிமளத்தை வாசிதமாக்கிக் கொண்டு
மல்லிகை மௌவல் என்கிற இவற்றின் புஷ்பங்களை அலர்த்தி
அவற்றில் உண்டான பரிமளத்தை தன் உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு

தென்றல் மா மணம் கமழ்   தரவரு திரு வெள்ளறை நின்றானே –
தென்றல் ஆனது மிக்க பரிமளத்தை
உடைத்தாய் கொண்டு வந்து உலாவுகிற
திரு வெள்ளறையிலே நின்றானே –

அவ் ஊரில் உள்ளாருக்கு  அபிமத சித்திக்கு
நின்ற நிலையில் நின்றும் போக வேண்டாதபடி
அன்றோ இருக்கிறது –
சைத்ய
சௌரப்ய
சௌகந்த்ய
மார்த்தவங்களை
உடைத்தாய் இறே காற்று இருப்பது –

பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட –கிஷ்கிந்தா 1-71-
துராலான அம்சத்தைக் கழித்து
பூத் தன்னிலும் சம் சர்க்கத்துக்கு   மேற்பட
ஆழ விழியுமது   அன்றிகே இருக்கை –
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத  –
வெய்யில் படப் பெறாத செல்வாலே
சோலைக்கு உள்ளீட்டாய் யாய்த்து வழி போந்தது –

குன்றூடு பொழில் நுழைந்து   -பெரியாழ்வார் திருமொழி-4-8-9- -சந்தனகிரில் போய்ப் புக்கு
கொடி இடையார் முலை யணவி-கறுவின விடத்தில் முகம் காட்டி
மன்றூடு தென்றல் உலாம் மதிள் அரங்கம் என்பதுவே -அது கை புகுந்த கர்வத்தாலே
வெளி நிலத்திலே புறப்பட்டு உலவா நின்றது யாய்த்து –
சேதன சமாதியாலே சொல்லுகிறார் யாய்த்து –

(கைங்கர்யம் பிரார்த்திக்கும் இவர்
நாயிகா தசை இல்லாமல் காமுகர் அபிமான தென்றல் இத்யாதி அருளிச் செய்வது பெரியாழ்வார்
திருவரங்கம் அதிசயமாக வர்ணித்தது போல் க்ஷேத்ரம் எழிலைச் சொல்ல அருளிச் செய்கிறர் )

——————————————————

வேதம் அருளினை நீர்
வேதத்தில் சொல்லப்பட்ட கைங்கர்யம் தர வேண்டாவோ
விரோதிகளை கிழங்கு எடுத்தது மட்டும் போதாதே
அதிகாரி புருஷணனான அயனுக்கு கண் கொடுத்தது போல் வேதங்களைக் கொடுத்தீரே
அதில் சொல்லப்பட்ட கைங்கர்ய பிரார்த்தனை இதில்

வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2-

இசை கொள் வேதம் -சாம வேதம் -சாந்தோக்யம் -நாயனார் இந்த ஸூக்தியையே அருளிச் செய்கிறார்

வசையில் நான்மறை கெடுத்த
விப்ரலம்பாதி தோஷ சம்பாவனை இல்லாத
நாலு வேதத்தைக் கொடுத்து
தாதா யதபூர்வ மகல்பயத்-என்று
முன்பு போலே இவற்றை உண்டாக்கு -என்று விட
அவனும் வேதத்தை அசுரர்கள் கையில் பறிகொடுத்து
வேதா மே பரமஞ் சஷூர் வேதா மே பரமம் தனம் -என்று
கண்ணும் கண்ண நீருமாய் நின்று கூப்பிட
அவன் பக்கலிலே கிருபையைப் பண்ணி  –

அம் மலர் அயற்கு அருளி –
அவன் தன் அதிகாரத்தில் குலையாது நின்று யாய்த்து அபேஷித்தது-
(தாய் கையில் சேய் போல் அதிகாரி -அப்படிப்பட்ட அவன் -அஜன் -லோக ஸஜாதீய ஜென்மம் விவஷிதம் )

முன் பரி முகமாய் —
ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால்
இவன் இறாய்க்கும்-என்று
இவன் தன்னை தாழ விட்டு  ஹயக்ரீவனாய்
நின்று யாய்த்து உபதேசித்தது –
சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து –

இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
நல்ல நாதத்தை உடைத்தாய் இருந்துள்ள வேதம் இதிஹாசாதிகள்
இவற்றை உண்டாக்கினவனே
என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –
நூல் -என்று சாஸ்த்ரங்களை சொல்லவுமாம்
அன்றிக்கே –
அல்லாத இதிஹாச புராணங்களை சொல்லிற்றான போது
தத் சர்வம் வை ஹரேஸ் தநு -என்கையாலே
அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று தான்
சொல்லுகையாலே அவன் சொன்னான் என்னத் தட்டு இல்லை –
(முனிவரை இடுக்கி -ஹயக்ரீவர் கொடுத்ததாக சொன்னதுக்கு இந்த பிரமாணம் )

உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம்
ஆகாச அவகாசம் இடம் அடையும்படி
வளர்ந்த குருக்கத்தியிலே
காலங்களிலே

வீதியின் வாய்த் –
வீதியிலே

திசை எல்லாம் கமழும்
சஞ்சரியா நின்றுள்ள காற்றானது
திக்குகள் தோறும் கமழா நிற்பதாய்
பொழிலாலே  சூழப் பட்டு இருப்பதாய் –

——————————————————

பரி முகமாய் இரண்டு வடிவம் -ஹயக்ரீவன்
சிருக்கனுக்கு அரி முகமாய் இரண்டு வடிவு கொண்டு
திரு உகிறாள் விரோதி போக்கி அருளினவன்

வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவாகக்
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே
மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-3-

மையினார்-மையார்-கருப்பு மிக்கு இருந்துள்ள -இன் சரிகை

வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலம் இரு பிளவாகக்
மிக்க க்ரௌர்யத்தை உடையனாய்
சகல லோகங்களையும் ஒரு காலே நலிந்த ஹிரண்யன் உடைய
சரீரமானது இரண்டு கூறாம் படியாக –

கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே –
திரு வாழியைக் கொண்டு கார்யம் செய்யப் பெறாத படி
அவன் வரம் பெற்று இருக்கையாலே
திரு உகிரே ஆயுதமாகக் கொண்டு வ்யாபரித்தவனே –

எனக்கு அருள் புரியே –
என்னுடைய விரோதியைப் போக்கி
என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் –

மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
கருப்பு மிக்கு இருந்துள்ள வரால் இனம் உண்டு
இவற்றின் உடைய திரள்கள் ஆனவை பூக்களைக் கிழித்துக் கொண்டு
அழகிய தடாகங்களில் பாய

தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே   –
தெய்வம் -ஸ்லாக்கியமான –
அக் கமலங்கள் மணம் நாறா நின்றுள்ள
பொய்கைகள் சூழ்ந்த
திரு வெள்ளறை நின்றானே –

————————————————

பிரலாதனுக்கு உதவியது
அவ்வளவு அன்றிக்கே
ராஜ்யார்த்தி பாண்டவர்களுக்கு
ஆதி யம் சோதி உருவைக் கொண்டே தூத்ய சாரத்யங்களைப் பண்ணி
அவ்வளவு அன்றிக்கே
அனைத்தையும் த்ருஷ்டார்த்திகளுக்கும் உதவ திருவேங்கடத்தில்
எல்லாக் காலத்திலும் எல்லாருக்கும் கண் கண்ட பிரயோஜனம்
அதே போல் கைங்கர்யம் -சேஷ வ்ருத்தி
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம்
-கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண  வர்த்தியான
பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும்
அந்த ப்ரீதிக்கு பிரார்த்தனை
அஞ்சன கிரி-கிருஷ்ண கிரி
ஸ்வேத கிரி -இரண்டையும் சேர்த்து அனுபவம்
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே சேமுஷி பக்தி ரூபா -பவது மம -இத்தைக் கொண்டே ஸ்ரீ பாஷ்ய காரர்
மதி நலம் அருள பிரார்த்தனை

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர்   திரு வெள்ளறை நின்றானே—5-3-4-

காம்பினார்-காம்பார்-மூங்கில் மிக்கு இருந்துள்ள -இங்கும் இன் சாரிகை

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசளித்த
தாவி வாரா நின்றுள்ள
குதிரைகள் உக்கிப் போம் படியாக
அவற்றை மேற்கொண்டு தோற்றின ராஜாக்கள் முடியும்படியாக
பாண்டவர்களுக்கு பக்கலிலே ஓரத்தைப் பண்ணின

காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப –
மூங்கில் மிக்கு இருந்துள்ள
திருவேங்கடம் ஆகிய மலையை உடையவனே –

நின் காதலை யருள் எனக்கு –
தேவர் திருவடிகளில் உண்டான
கைங்கர்யத்துக்கு
பூர்வ ஷண  வர்த்தியான
பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும் –

மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் –
மாம் பொழிலிலே போய் புக்கு
அதில் உண்டான தளிரை செருக்காலே தன் வாயாலே கோதின
மடக் குயிலானது -பெண் குயிலானது

வாயது துவர்ப்பு எய்த –
அத்தை ரசாந்தரத்தை   இட்டு மாற்ற வேணும் -என்று

தீம் பலங்கனி தேனது நுகர்   திரு வெள்ளறை நின்றானே
இனிய பலாப் பழத்திலே சென்று
அதில் உண்டான தேனை புஜியா நின்றுள்ள  தேசம் –

———————————————–

திரௌபதியா சக நமஸ்கரித்த -பிரார்த்தவர்களுக்கு செய்தமை கீழ்
பூமி அர்த்தியாகி இல்லாமல்
ஆபத்தே செப்பேடாக ரஷித்தது இதில்

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே —5-3-50

முருகு குக்கும்-வண்டின் உடைய வாயிலே தேனை ஒழுக்கா நின்றுள்ள தேசம்-
புண்டரீகாக்ஷன் தானே -அதே போல் தேனை வண்டுகளின் வாயில் கொட்டும் –
சமைத்த மடுவும் எல்லாம் சாய் கரம் போல்

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க –
இலை யகன்ற வேல் போலேயாய்
தர்ச நீயமாய் இருக்கிற  திருக் கண்களை உடையாளாய்
ஷமை துடக்கமான ஆத்ம குணங்களால் மிக்கு இருக்கிற
ஸ்ரீ பூமிப் பிராட்டி
தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –

முந்நீர்ப் பரப்பில் –
பிரளயத்தில் அகப்பட
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத
ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து

ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே –
அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு  ஏறினவனே –

எனக்கு அருள் புரியே –
அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு
அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை
பெரிய பணியோ –

கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
நெய்தல் மருதம் குறிஞ்சி  பாலை முல்லை -என்கிற
நிலங்கள் எல்லாம்
தன்னிலே கலந்தாய்த்து இருப்பது
ஊரை அணைந்த வயல் அருகு உண்டான காட்டில்
பெரிய முல்லை யானது
கரும்பின் நுனி அளவும் மூடப் படர்ந்து
ஏறின ஒக்கத்தால் உண்டான ஹர்ஷத்தாலே
ஸ்மிதம் பண்ணினாப் போலே
அலருகிற மலரானது –

தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே
தன்னிலே மது பானார்த்தமாக படிந்த
வண்டின் உடைய வாயிலே தேனை
ஒழுக்கா நின்றுள்ள தேசம் –

——————————————————–

பூ தரன் -ஸ்ரீ வராஹம்
பூ தர தரன் -ஸ்ரீ கூர்மம்
பூமிப் பிராட்டிக்கு
பிரயோஜனாந்தரருக்காக பூ தரம் மந்த்ரம் தரித்து ஸ்ரீ கூர்மம்
ஸ்ரீ வராஹ முன் அவதாரம் இதில் அனுபவம்
தொழுது எழ இல்லாமல் அமுதத்துக்காக தொழுமவர்கள் தேவர்கள் –

பொங்கு நீண் முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்
அங்கு ஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு
தங்கு பேடை யோடூடிய மது கரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே—5-3-6-

பொங்கு நீண் முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்
விஸ்த்ருதராய்
நிலை நின்ற முடியை உடையராய் இருக்கிற தேவர்கள் –
திருவடிகளிலே விழுந்து உஜ்ஜீவிப்பதாக
மநோ ரதிக்க
அவர்களுக்கு அசுரர்களால் வந்த
வினையைப் போக்கி ரஷிகைக்காக
(அம்ருத ரூப பலத்துக்கு தொழுது எழுவது சாதனம் இவர்களுக்கு )

அங்கு ஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு
மந்தரத்தை தரிக்க வல்ல
ஆமையின் வேஷத்தை பரிக்ரஹித்து
அவர்களை ரஷித்து
அவர்களுக்கு சத்தா ஹேது வானவனே –

ஆதி நின்னடிமையை யருள் எனக்கு
அடியேனுக்கு கைங்கர்யம் அருளி சத்தையை அருள வேணும் –
எனது சத்தையை அருள வல்ல ஆதியும் நீயே

தங்கு பேடை யோடூடிய மது கரம் தையலார் குழல் அணைவான்
பூவிலே தங்கின பேடையோடே
அத்தை இத்தைச் சொல்லி ஊடின  வண்டானது
இதுக்கு தெரியாத தோர் இடம் தேடி மறைய வேணும் -என்று அதுக்காக
ஸ்திரீகள் உடைய குழலிலே மறையக் கோலி

(நான் ஒரு பூவில் நின்றும் வேறே ஒரு பூவில் புறப்பட்டால்
அக்ர- முன்னே போன சீதாப் பிராட்டி போல் இல்லாமல்
கிளம்பின பின்பும்
பூவில் கால் தங்கிற்றோ
என்னிலும் தேன் இனிதோ போன்ற ஊடல் )

திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே  –
சந்திர பதத்து அளவும் செல்ல
ஓங்கின சிகரத்தை உடைத்தான
மாடங்களிலே சென்று அணையா நிற்கும் யாய்த்து –

——————————————————-

ராஜா ராமனே ரக்ஷகன்
தேவர்களுக்கு அமுதம் கீழ்
அவர்களுக்கு குடி இருப்பு அரிதாம் படி தலை பத்து கொண்ட அவனை நிரசித்து
ரஷித்து அருளிய குணம் அனுபவம்

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7-

அரக்கன் ராவணாசூரன் ஸ்வபாவத்தால் ராக்ஷஸனும் அரக்கனும் ஒருவரே-

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறு உக வில்லது வளைத்தவனே –
பத்து தலையை உடைய ராவணன் உடைய
தலை பத்தையும்
சின்னம் பின்னமாய் போம் படியாக
வில்லை வளைத்தவனே –

எனக்கு அருள் புரியே –
என் பக்கலில் கிருபையை பண்ணி யருள வேணும் –
(பத்து இந்திரியங்கள் -மனஸ் ஞான இந்திரியங்கள் -ஆறு -கர்ம இந்திரியங்கள் –
விவேக சர ஜாலேன கொண்டு போக்கி கைங்கர்யம் அருள வேணும் )

மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த –
ஒப்பிலாத புகரை உடைய வாய்
மரகதம் போலே இருந்துள்ள
பச்சை இலையை உடைத்தான தாமரை மலரில் நின்றும் –

தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே-
ஒழுகா நின்றுள்ள தேனைப் பருகி
வண்டுகள் ஆனவை
இனிய இசையைப் பாடா நின்றுள்ள தேசம் –

—————————————————–

தேவர்களுக்கு அமுதம்
ஹம்ஸ அவதாரம்
ஊண் கொடுத்து
குடி இருப்பும் கொடுத்த அளவு அன்றிக்கே
தேவர்களுக்கு ஓதுவித்தவனும் நீயே
வேத அர்த்தமான கைபகார்யம் அருள வேணும்
இரண்டாம் பாட்டில் ஹயக்ரீவர்
இங்கு ஹம்சம்
கல்ப பேதத்தால் கூடும்
இரண்டும் வித்யா பிரத அவதாரம்
ஒருவர் வேதம் கொடுத்து இருந்தாலும்
தர்மி ஐக்கியம் பற்ற ஒன்றே

முன்  இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8-

முன்  இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
பண்டு இவ் லோகங்கள் ஏழும் வெளிச் சிறப்பு இன்றியே
இருளானது மிக
ப்ரஹ்மாதிகள் திருவடிகளிலே விழுந்து ஸ்தோத்ரம் பண்ண –
அசுரர்களோடு கலந்து
உரு மாய்ந்து போன  வேதத்தை

அன்னமாகி-
பிரிக்கைக்கு உடலாக
நீரையும் பாலையும் பிரிக்க வல்ல   அன்னத்தின் வடிவினைக் கொண்டு

அன்று அரு மறை பயந்தவனே –
தன் படிகளை அடங்க லும் பேச வற்றாய் இருக்கிற
வேதத்தை உண்டாக்கினவனே-
(தன்னைப் பெறிலும் பெற அரிதான தன் படிகளை அடங்கலும் பேச வற்றாய் இருக்கும் வேதம் )

எனக்கு அருள் புரியே –
என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் –

மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
மாறாத பூக்களை உடைத்தான தாழை தேமா
என்கிற இவற்றாலே
நெருங்கின சோலையின் உள்ளே
சுரும்புகள் ஆனவை

தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே
மதுபானம் பண்ணி
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாமையாலே
தென்ன தென்ன -என்று ஆளத்தி வைக்க
வண்டுகள் ஆனவை அதில் முறுகின பாட்டை -பரி பக்குவமான பாட்டை-
பாடா நிற்கும் ஆய்த்து –

———————————————

ஸ்வேத கிரி
மஹா லஷ்மீ பிரதானம்
பங்கயச்செல்வி
தாமரைக்கண்ணன்
பிரயோக சக்கரம்
சிபி சக்ரவர்த்தி -புதருக்குள் வெள்ளைப் பன்றி
மார்கண்டேயர் சொல்ல பால் அபிஷேகம்
அந்திக்காப்பு பெரியாழ்வார் பதிகம்
விமலா கிரி விமானம் சூர்யன் சந்திரன் கவரி வீச
ராமானுஜர் இங்கேயே இருக்க இன்னுயிர் சேவல் பாடல் சொல்லி ஸ்ரீ ரெங்கம் கூட்டி சென்ற ஐதீகம்
ஸ்வஸ்திகா குளம் பிரசித்தம்

தேவர்களுக்கு
அமுதூட்டி
குடி இருப்பு
வேதம் கொடுத்தது
போதாது என்று
அவர்களுக்காக இரந்து ரஷித்தது அனுபவம் இதில் –

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா  வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே—5-3-9-

படைப்பை-கொடித் தோட்டம்
ஆங்கு சென்று -மஹா சபையில் தடுப்பவர்கள் இருந்த இடத்திலும் சென்று

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
மகாபலியினுடைய யஞ்ஞ வாடமான அவ்விடத்தில்
தன்னை இரப்பாளனாக்கிக் கொண்டு சென்று
பூமிப் பரப்பை அடங்கலும்

பாங்கினில் கொண்ட பரம
அவனது ஆக்கிக் கொண்ட சர்வாதிகனே
ராவணாதிகளைப் போலே தலையை அறுத்துப் பொகட்டு
வாங்கிக் கொள்ளலாய்   இருக்கச் செய்தே
ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால்
தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து –

(அவனதாகவே நம்பிக் கொண்டான் -கொடுப்பவனாக இருந்தால் கொள்வானாக –
ஸ்வாமியாக கொண்டால் தாசனாக துவம் மே அஹம் மே போல் )

நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே  –
இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி
போராதோ என்னுடைய ஆஸ்ரயணம் –

ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர –
ஆகாச அவகாசம் வெளி யடையும் படி
வளர்ந்த அசோகம் ஆனது
சிவக்கப் பூத்துக் கிடக்க
இதிலே மது பானம் பண்ணலாம் என்று -அதுக்காக வண்டுகள் சஞ்சரிக்க

மா  வேறித் தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே –
அத்தைக் கண்ட குயில்கள் ஆனவை-நெருப்பு என்று
அருகே செல்ல அஞ்சி நின்ற மாவிலே ஏறி
இவை நெருப்பிலே அகப்பட்டனவாகக் கொண்டு
அந ஷர ரச பேச்சாலே -அவ்யக்தமான பேச்சாலே -படு கொலை கிடி கோள் -என்றாப் போலே
கூப்பிடா நின்றது யாய்த்து –
இதில் வாசமும் நித்யமாய் இருக்கச் செய்தே
பயமும் நித்தியமாய் செல்லா நிற்கும் யாய்த்து -படப்பை –கொடித் தோட்டம் –

ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-9-

உரு துயர் -அனுபவ விநாஸ்ய பிரதிபந்தகங்கள்
பிண்டி -அசோகா புஷ்பம்
தேனைக் குடித்து பூ என்று உணரும் -முன்பு நெருப்பு -பயக்ருத் பய நாசன் –
அவனை நினைக்க பயம் போகும் நம்மை நினைக்க பயம் வருமா போலே

வியாக்யானம்-
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு-
ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லி
அவற்றின் உடைய அர்த்த அனுசந்தானம் பண்ணா நின்று உள்ளவர்களுக்கு –
ஒரு திரு நாமத்தைச் சொல்லி -அவ்வளவில் பர்யவசிக்க மாட்டாதே
ஆயிரம் திரு நாமங்களையும் அடைவு படச் சொல்லி
அந் நாமத்வாரா நாமி யானவனை மனனம் பண்ணா நின்று உள்ளவர்களுக்கு –

உறு துயர் அடையாமல்-
உறக் கடவதாய் நிற்கிற பாபங்கள் பல அனுபவத்துக்கு இவனைத் தொடராதபடியாக
அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்றும் –
ந புக்தம் ஷீ யதே -என்றும் சொல்லுகிறபடியே அனுபவித்தால் அல்லது நசியாத பாபங்கள்
பல அனுபவத்துக்கு வந்து கிட்டாதபடியாக

ஒரு பிசாசம் -கண்டா கர்ணன் – நரகாத ஜகந்நாத நாராயண பராயண என்று சொல்ல
ஆத்மாநாம் வாசுதேவோ ஸ்லாக்கியம் சிந்தயந்த் -என்று ஸ்வ அனுபவம் பண்ணி
அந்ய பரதையாய் இருக்கிற அளவிலே இத்தைக் கேட்டு
கஸ்ய முக்தி கரேஸ்திதா -என்று நம் பேரைச் சொல்லி நம்மை எழுதிக் கொண்டவர் -என்றான் இறே
(தாம் சென்று அடிமை செய்யும் படி -என்றவாறு )

ஏதம் என்று துக்கமாய் – வருத்தத்தை நினைக்கிறது
இத் திரு நாமத்தை சொன்னால் இத்தை உடையவன் செவிப்ப்படும்படி அண்ணியானாய் நிற்க –
ஆஸ்ரயிப்பாருக்கு வருத்தம் இன்றிக்கே ஒழிகைக்கு உடலாய் இருக்கும் இறே
இவர்களுக்கும் வருத்தம் இல்லாதபடி இருக்கும்-

உறு துயர் இத்யாதி
வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா உனை வாய்க் கொள்ள மாட்டேன் -என்று
அசித் சம்சர்க்கத்தை அனுசந்தித்து -நாம் அங்குத்தைக்கு யோக்யராய் பரிமாறுகை யாவது என் -என்று
தன் அயோக்யதையை அனுசந்திக்கைக்கு அவகாசம் இல்லாதபடி
(நின்று அருளும் நம் பெரும் தகை -)ஆஸ்ரயணீயனான தான் சந்நிஹிதன் ஆகையாலே
ஆஸ்ரயிப்பாருக்கு ஒரு வருத்தமும் வாராத படி இருக்கிற
மஹா ப்ரபாவன் வந்து வர்த்திக்கிற விலஷணமான ஹிமவானில்-

தாது இத்யாதி
தாது மிக்கு இருந்துள்ள அசோக புஷ்பம் ஆனது விட்டலருகிற போதை
அக்னி கல்பமான எழிலைப் பார்த்து
பேதை வண்டுகள்
அசோக புஷ்பங்களை நித்ய அனுபவம் பண்ணா  நிற்கச் செய்தேயும்
நித்யமாக பிரமிக்க வல்ல மௌக்யத்தை உடைய வண்டுகள் ஆயிற்று

தானும் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும்-
அதுவும் நாள் தோறும் மலரா நிற்கச் செய்தேயும்-
எப்போதும் ஒக்க இது நெருப்பு  இது நெருப்பு -என்று ப்ரமிக்கும்படியாய் இருக்கும்
முன்னாள் இது அக்னி என்று சங்கித்து விசாரித்து -அன்று என்று நிர்ணயித்து
பிற்றை நாள் அது அன்று என்று இருக்க மாட்டாதே -நெருப்பு -என்றே அஞ்சி இரா நிற்கும்
அதுக்கடி
பய நிவ்ருத்தியும் நித்தியமாய் பயமும் நித்தியமாய் இருக்கையாலே-

இதுக்கு திருஷ்டாந்தமாக திரு வெள்ளறை திரு மொழியில் -5-3-9-ஒரு பாசுரம் அருளிச் செய்வர்

ஆங்கு மாவலி வேள்வியில் சென்று இரந்து
மஹா பலியினுடைய யஞ்ஞா மாடத்திலே தன்னை அர்த்தியாக்கிச் சென்று

அகலிடம் முழு தினையும் இத்யாதி
பூமிப் பரப்பதைய வாங்குகிற அன்று
அவனை எதிரிட்டு கொண்டு வாங்குகை  அன்றிக்கே ஏறிட்டுக் கொண்டு இருக்கிற
ஔதார்யத்துக்கு அநு ரூபமாக வாங்கினான்
ராவணாதிகளைப் போலே தலை அறுக்க வேண்டிற்று இல்லை
ஔ தார்யம் என்று ஒரு அனுகூல லேசம் கிடைக்கையாலே
இவன் கொடுக்க உகந்து இருந்தான் என்று தன்னை இரபபாளன் ஆக்கி
அவனோடு இசைய கொண்டான்
தன்னைதான பூமியை இறே அவன் தந்ததாக கொண்டான்
ஆக நம்முடைய ஆத்ம சமர்ப்பணம் போலே இருப்பது ஓன்று இறே அவனுடைய தானமும்

அதவா
கின்நு  சமர்ப்பயாமி -அநந்தரம் அநுசயிக்க வேண்டும்படி இறே இது இருப்பது –
விழுக் காட்டில் ஆத்ம சமர்ப்பணத்தோடு ஆத்ம அபஹாரத்தோடு வாசி அற்று இறே இருப்பது –
ஆகை இறே உபாய நிரபேஷ்யம் சொல்லுகிறது

பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள் புரியே –
சர்வாதிகனே -உன்னை வணங்கி உஜ்ஜீவிக்கிற எனக்கு பிரசாதத்தை பண்ணி அருள வேணும் –
ஆஸ்ரயணத்துக்கு பல வ்யாப்தி உண்டு இறே

ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழிதர மா வேறி தீம் குயில் –
ஆகாசம் இடம் அறும்படி வளர்ந்து பரப்பு மாறப் பூத்த
அசோகத்தின் உடைய சிந்திய பூக்களில் –
மது பான அர்த்தமாக வண்டுகள் சஞ்சரிக்க
தர்சநீயமான குயில்கள் ஆனவை -இவை நெருப்பிலே புகை என்றே நிச்சயித்து
அது தன்னைத் தட்டாதபடி மாவிலே போய் ஏறி கூப்பிடா நிற்கும் ஆயிற்று –
சிவந்த பூப் பூவாத மாத்தேடி ஏறி நின்று –
மிழற்றும் –
எழுத்தும் சொல்லும் தெரியாதபடி கூப்பிடா நிற்கும்
இவற்றின் உடைய தயநீய தசையைக் கண்டு இன்னது என்று பாசுரம் இட்டு
சொல்ல மாட்டாதே -கடக்க நின்று -தர்ம ஹாநி கிடி கோள் -என்பாரைப் போலே
அவ்யக்தமாக கூப்பிடா நிற்கும் –
படைப்பை –
இது ஆயிற்று ஊரில் கொடித் தோட்டங்கள் இருக்கும்படி-

இத்தால்
அவனுடைய சர்வாதிகத்வத்தையும்
அவனை அனுபவிப்பதாக சொல்லுகிற தங்களுடைய சம்சாரித்வத்தையும்
அனுசந்தித்து
நான் சென்று கிட்டுகை  யாவது என் என்று துணுக் துணுக் என்னா நிற்பர்கள் -ப்ரஹ்மாதிகள் –
இவ்வண்டுகள் ஆனவை புஷ்ப சாமான்யத்தைக் கொண்டு மது பான அர்த்தமாக
மேல் விழா நிற்பது அக்னி என்று கிட்ட மாட்டாதே இறாய்த்து வெருவதாக நிற்கும் ஆயிற்று —
அன்றிக்கே
ஆஸ்ரயிப்பாருக்கு -அதசோ பயம் கதோ பவதி -என்னும் இதுவும் உண்டாய்
போக்யதையால் வந்த பயம் என்றும் உண்டாய் இருக்கும் என்னுதல் –
ஆஸ்ரயணீய வஸ்து சுலபன் ஆகையாலே ஆஸ்ரயிப்பாருக்கு
தம் தாமுடைய அநுபவ விநாச்யமான பாபங்களை அனுசந்தித்து
பயப்படவும் வேண்டா –
அசோக புஷ்பத்தை அக்னியாய் கொண்டு வண்டுகள் அஞ்சுகிற அச்சம்
நித்யமாக செல்லா நிற்கும்-

—————————————————–

மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ  இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10-

மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
மேக பதத்தளவும் செல்ல ஓங்கி இருப்பதாய்
மணி மயமான மாடங்களாலே சூழப் பட்ட
1-திரு வெள்ளறை யில் நித்ய வாஸம் பண்ணுகிற –

அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
2-மைப்படி மேனியன் -அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு –
3-ஆதியை-அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி –
4-அமுதத்தை-பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை –

நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ  இரண்டும்
திருஷ்டி விஷம் போலே இருக்கிற வேலை உடைய
ஆழ்வார் அருளிச் செய்த இப் பத்தையும்

எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –
ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை
நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு
இவர்களை ஆதரியா நிற்பர்கள் –

————–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வென்று விளங்கு வினை வீயச் செய் மாலடிக்கே
என்றும் அன்பால் ஏவல் இசைந்து ஆட்செய்ய ஓன்று நீலன்
வெள்ளறையானை வேண்டும் பாடலை உள்ளத்துள்
உள்ள உகந்து நெஞ்சே உந்து -43-

ஓன்று நீலன் -ஒருமைப்பாட்டை -இசைந்த நீலன் ஏவ மற்றமரர் ஆட் செய்வார்-என்கிறபடியே
பெருமான் சோதி வாய் திறந்து பணித்தபடியே ஆட் செய்தல் உற்றதாகும் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading