ஸ்ரீ கோல வல்லி ராமன் -சேவை
திரு சேங்கனூர் இதன் அருகில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அவதாரம்
சுக்ர புரம்
செவ்வாழை ஸ்தல வ்ருக்ஷம்
கோல வல்லி ராமன்
புஜங்க சயனம் வர்ண கலாபம்
கருடன் சங்கு சக்கரத்துடன் சேவை
தேவ தச்சன்-மயன் ஆசைப்பட்ட படி
மரகத வல்லி
புஷ்கலா வர்த்த விமானம்
சுக்ராச்சாரியார் -பாபம் போக்கிக் கொள்ள-
வெள்ளியால் ஆபத்தைப் போக்கி
கண் நோய் நேத்ர தீபம் அணையா விளக்கு
வெள்ளியானின் குடி பார்கவர் பிருகுவின் பிள்ளை சுக்ராச்சாரியார்
ஆய்ச்சியர் பிரவேசம் –
நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறப் பெற்றிலோம்
என்று இன்னாதானார் கீழ்
நீர் இப்படி இன்னாதாகிறது என் என்ன
நம்மை ஆசைப் பட்டாருக்கு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறலாம் படி
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி யாவதாரங்களைப் பண்ணி
முகம் கொடுத்த நாம் அன்றோ
திரு வெள்ளி யங்குடியிலே வந்து சந்நிஹிதர் ஆனோம்
ஆன பின்பு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறத் தட்டு என்ன
என்று சமாதானம் பண்ண
சமாஹிதராய்
அவனைப் பேசி அனுபவிக்கிறார்
(கோபிகளுக்கு காதலன்
ஆயர் புத்ரன் ஆலன் யரும் தெய்வம்
யசோதாதிகளுக்கு மகன்
மாலாகாராதிகளுக்கு
பாண்டவர்களுக்கு சஹா
யார் யார் நினைக்கும் படி அப்படியே சேவை )
ததேவ கோபாய யத பிரசாதாயச ஜாயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6– இறே
ஒரு குண ஆவிஷ்காரத்தை தோற்றுவித்தார் -என்கை –
(கோபம் ஏற்படுத்தும் பொருளே பிரசாதமும் இன்பமும் துன்பமும் கொடுக்கும்
பக்தியை வளர்த்து ப்ராப்ய ருசியை வளர்க்கவே
இன்பமும் துன்பமும் பகவத் விஷயத்திலே தானே ஆழ்வார்களுக்கு )
————————————————————————
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-
கதலி-செவ்வாழை ஸ்தல வ்ருக்ஷம்
மண்ணி ஆற்றின் தெற்கு கரையில்
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு-
பஞ்ச லஷம் குடியில்
இடக்கை வலக்கை வாசி அறியாதே
இடைச்சிகள் கை எடுத்துக் கூப்பிடும்படி
வெண்ணையை அமுது செய்து
ஒரு கால் ஆலிலை வளர்ந்த
அப்பருவத்தில் ஜகத்தை அடங்கலும்
வயற்றிலே வைத்து
கூப்பிடுகைக்கு ஒருவரும் இல்லாத சமயத்திலே
ஒரு பவனான ஆலம் தளிரிலே
கண் வளர்ந்து அருளின –
எம்பெருமான் –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழிய செல்லாமையும்
அகடிதகடநா சாமர்த்யத்தையும் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கினவன் –
(ஊடின தன்னையும் சேர்த்துக் கொண்டது-ஜகத்தை உண்டு ஆலிலை
கண் வளர்ந்தது வ்ருத்தாந்தம் த்ருஷ்டாந்தம் )
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் –
துரபிசந்தியோடே வந்து
பூதனையை உடைய
முலையை உண்டு
அவளை முடித்து
பொல்லாத அபிசந்தியை யுடைத்தாய்
தன்னிலே புணர்ந்து நின்ற
மருதுகளை முறித்து –
பெரு நிலம் அளந்தவன் கோயில்
மகா பலியாலே அபஹ்ருதமான பூமிப் பரப்பை யடைய
அநாயாசேன
அளந்து கொண்டவன் வர்த்திக்கிற தேசம் –
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
ஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம்
என்று தோற்றும்படி யாய்த்து
அத் தேசத்தில் போக்யதை இருப்பது
எல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது –
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால்
சேர்ந்து குளிர்ந்த தண்ணீரையே குடிக்கும் செருக்கரை போலே யாய்த்து –
திரு வெள்ளியங்குடி யதுவே
அவன் கோயில் அதுவே என்கையாலே
ஆஸ்ரயநீய வஸ்து ஸ்தலம் அதுவே -என்கை –
————————————————————
வாமன
வட தள சாயி
அகடி கடனா சாமர்த்தியம் சேர்த்து கிருஷ்ண அனுபவம் கீழ்
இங்கு கிருஷ்ண அவதாரத்தையும்
அப்படியே நீரில் கற்கள் மிதக்கும் படி சேராதத்தை சேர்த்ததையும் சேர்த்து
விரோதி நிரசன சீலம் அனுபவம்
க்ஷேத்ர பெருமாளே ஸ்ரீ ராமர் தானே –
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே —4-10-2-
ஆநிரை மேய்த்து அன்று
கோ ரஷணம் பண்ணி
(திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி – செங்கண் ஆயர் தேவு
இஷ்டமான கன்றுகளை இனிது மறித்து நீரூட்டி )
அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
ஷூபிதமான கடலை அணை செய்து
வர பலத்தாலே திண்ணிதான ராஷசர் உடைய தலைகளை உருட்டி –
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்
ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில் –
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
நிரை நிரையான பூக்களை உடைத்தான செருந்தி
அரும்பின முத்தை உடைத்தான புன்னை
இவற்றில் உண்டான -பொதும்புகளிலே -த்வாரங்களிலே –
தர்ச நீயமான வடிவை உடைய வண்டுகள் நெருங்கிக் கொண்டு
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –
மது வனத்தில் புக்க முதலிகள் போலே
(மது வனத்தால் ராமன் முதுகு பிழைத்ததே )
பெரிய ஆரவாரத்தோடு மது பானத்தைப் பண்ணி
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாதே
ஆலத்தி வையா நிற்கும்
ஸ்வேச்சையிலே பாடா நிற்கும் யாய்த்து –
————————————————-
மற்ற ஒரு அவதாரத்தில் போக ஒட்டாமல் முடியாத ஒன்றை பண்ணிய
காளியன் தலைகள் மேல் நாட்டியம் சேராததை சேர்ப்பது தானே –
காளியன் உச்சியில் நட்டம் பயின்றான் –
கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்தவன் தன்
படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்
படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும் திருவெள்ளியங்குடி யதுவே —4-10-3-
கடுவிடமுடைய –
நாலைந்து யோஜனத்துக்கு அவ்வருகே
பறக்கிற பஷிகள் சிறகு அற்று விழும்படியே
குரூரமான விஷத்தை உடைய –
காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்து –
காளியன் உடைய தடாகத்தில்
மதியாதே போய்ப் புக்கு
அது குழம்பாம்படி பண்ணி
அலமந்து
கிலேசப் படும்படி யாக்கி –
அவன் தன்படமிறப் பாய்ந்து –
கரையிலே நிற்கிற கடம்பின் உச்சியிலே போய் ஏறி
அவனுடைய பணங்கள் இறும்படியாக பாய்ந்து –
(பூத்த கடம்பு ஏறி -கிளையாக இருந்து இருக்கக் கூடாதோ என்று ஆசைப்படும் படி -அணைய இத்யாதி –
பெருமக்கள் -தாஸ்ய சுகம் அறிந்த பாகவதர் திரு மாளிகையில் புழுவாக பிறக்கவும் ஆசைப்படுவார்கள் )
பன் மணி சிந்தப்-
அதில் உண்டான பல வகைப் பட்ட
ரத்னங்கள் சிதறும் படி –
பல் நடம் பயின்றவன் கோயில் –
அன்று துடங்கி பரத சாஸ்தரத்துக்கு வேண்டும்
லஷணங்கள் எல்லாம்
எழுதிக் கொள்ளலாம் படி
பல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –
படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
படத்தை உடைத்தான பாம்போடு ஒத்து இருக்கிற
நிதம்பப் பிரதேசத்தி உடைய
ஸ்திரீகள் ஸ்ரமம் செய்கிற போதை -ஸ்ரமம் செய்வது பழகுவது –
நாடக த்வநியானது போய்
அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும் திருவெள்ளியங்குடி யதுவே
அஹோ ராத்ரம் அணைந்து
ஆகாசத்தில் நின்று
கோஷியா நிற்கும் ஆய்த்து –
—————————————————
ஏஷ நாராயண ஸ்ரீ மான் –இத்யாதி
கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான ஷீராப்தி அனுபவம் –
கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்
பறவை முன் உயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-4-
பறவை முன் உயர்த்து-கருட புள் கொடி -ஆடு புள் கொடி
கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த
கோ ரஷணத்தைப் பண்ணி
அந்த கோ சம்ருதியைப் பொறாத கம்சனை அழியச் செய்த –
காள மேகத் திரு வுருவன்-
அழிவுக்கு இட்ட வடிவு தான் இருக்கிற படி –
(கரிய திருமேனி வாட பசு மேய்க்கைக்கு சென்றான் )
பறவை முன் உயர்த்து-
ரஷணத்துக்கு ஈடாக பெரிய திருவடியை
த்வஜமாக எடுத்து –
(உள்ளே இருக்கும் வஸ்துவை கோள் சொல்லிக் கொடுக்கும் கொடி )
பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக
அடுத்து அணியாக
திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின
சர்வாதிகன்
வந்து சாய்ந்து அருளின கோயில் –
(பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அன்றோ )
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
துறைகள் தோறும் துறைகள் தோறும்
பொன் மணிகள் கொழித்துக் கொடு வந்து
எறடா நின்றுள்ள திரண்ட திரைகளை உடைத்தான
மண்ணியின் தென் பால் –
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –
செறிந்த அழுத்தின மணிகளை உடைத்தான மாடங்களிலே
கட்டின கொடிகளானவை
ஆதித்ய பதத்தளவும் சென்று
அவனுக்கு இதஸ்தத சஞ்சரிக்க ஒண்ணாத படி
தகையா நிற்கும் ஆய்த்து
——————————————–
கிருஷ்ண அவதாரம் பிரதான ப்ரயோஜனம் பூ பாரம் குறைக்கவே
பூமிக்கு உதவியவற்றை இங்கு அருளிச் செய்கிறார் –
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே —4-10-5-
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து
பரப்பை உடைத்தான பூமியை
திரு வயிற்றிலே வைத்து
உள்ளுக் கிடந்து தளராதபடி வெளிநாடு காணப்
புறப்பட விட்டு
பாரத சமரத்திலே கையும் அணியும் வகுத்து –
ஒரு கால் தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த –
ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல்
வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி
அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள்
தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –
செங்கண் மால் சென்றுறை கோயில் –
ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும்
கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
ஏரியினுடைய நிரையை உடைத்தான
வயலில் உண்டான வாளைகள் அஞ்சி
எப்போதும் மாறாதே உழப் புக்கவாறே
இப்படி சாபாயமான இடம் நமக்கு வாசஸ் ஸ்தானம் அல்ல
என்று எண்ணி நிரபாயமாக வர்த்திகலாம் படியான
தேசத்திலே போய் புகுவோம் என்று –
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே –
சீர் மலி பொய்கை சென்று அணையும் ஆய்த்து
ஏர்கள் விட்டுக் கொடு போய்
பொய்கைகளில் உழுவார் இல்லையே –
சம்சாரம் அநித்தியம் துக்கம் -என்று அத்தை விட்டு
விரஜையைச் சென்று பற்றுவாரைப் போலே –
(ப்ரஹ்மாதிகள் காளைகள்
உழவன் அவன்
ஏர் கர்ம பாசங்கள்
லீலா விபூதியை விட்டு -ஜனன மரண விட்டு
பகவத் கிருபா ஜலஜம் பிறந்த பாகவதர்கள் விரஜைக்கு போவது போல் )
—————————————————
கோல வில்லி ராமனை கிருஷ்ண சேஷ்டிதங்களை சொல்லி கீழ்
ராமனாகவே இங்கு அனுபவம்
காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6-
காற்றிடைப் பூளை கரந்தன –
பெரும் காற்றிலே
பூளைப் பூவானது
பறந்து உரு மாய்ந்து போமா போலே
வரந்தை யுறக் –
துன்பம் உற
கடல் அரக்கர் தம் சேனை –
ஓதம் கிளர்ந்த -ஓங்கிக் கிளர்ந்த கடல் போல்
மிகைத்து வந்து தோற்றின
ராஷச சேனை எல்லாம் –
கூற்றிடைச் செல்லக் –
முன்பு யமனைத் திறை கொண்டு -ஜெயித்து –
பர தந்த்ரனாக்கி வர்த்தித்தவர்கள்
இப்போது அவனுக்கு குடி மக்களாக
திக் விஜயம் பண்ணுகிற போது
முந்துற அழியச் செய்வது யமனை இறே
கொடுங்கணை துரந்த –
பெருமாள் கண் பார்க்கிலும்
கண் பாராத க்ரௌர்யத்தை உடைய
அம்பை விட்ட
கோல வில்லி ராமன் தன் கோயில் –
கையில் வில் பிடித்த பிடியிலே
முடிந்து போகிற ராஷசர் அடங்க
இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ -என்னும்படி
தர்ச நீயமான வில்லை உடைய
சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்
(கோலம் வில்லுக்கு விசேஷணம் )
ரஞ்ச நீயச்ய விக்ரமை -என்றான் இறே
சாபஞ்ச முமோச
கறுவி வேணும் என்று பொகடுவாரைப் போலே
அங்கனே யாக வேணும் இறே பொகட்ட இடத்திலே வீர என்னும் போது –
(சத்ருவாலும் கொண்டாடப் படுபவன்
யுத்தத்தில் பேராசை கொண்ட என்னை கோழை ஆக்கினாய் என்று தனது சாரதியைக் கறுவி-கடிந்தான்
வஜ்ரத்தாலும் அசையாத ராவணன் வார்த்தை -ராம பானத்தால் தபித்து- அசைந்து ஆடி –
கை வில்லை விட்டு வீரன் ஆனான் –
வெறும் கை வீரன் -வில்லைக் கையில் வைத்த அளவும் ரஷிக்கும் என்ற எண்ணம் –
போட்டதும் ரக்ஷகன் -அஞ்சலி ஹஸ்தத்துடன் வந்து இருந்தால் ராமன் தோற்று இருப்பார்
யதி வா ராவணஸ்யம் என்ற பெருமாள் அன்றோ )
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
நீர் நிலைகளில் நின்ற வாழைகள் ஆனவை முற்றிப் பழுத்து
அந்த பழங்கள் பேர்த்து வீழும் -ஊழ்த்து இற்று-
ஆமிஷமானது கிடந்த விடத்தே வந்து கிட்ட
அத்தை மேல் விழுந்து புஜித்து –
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –
சேற்றிலே உண்டான வாளைகள் ஆனவை
தன் செருக்குப் போக்கு விட்டு
உகளா நின்றுள்ள விளங்குகின்ற
வயலாலே சூழப் பட்ட
நீர் நிலத்திலே போலே யாய்த்து சேற்றிலும் சஞ்சரிக்கும் படி
பிரளயத்தில் விடிலும் சேறு ஆக்க வற்றாய்த்து
இவை தான் தம் செருக்காலே –
——————————————————-
கோல வல்லி ராமன்
புஜங்க சயனம் வர்ண கலாபம்
கருடன் சங்கு சக்கரத்துடன் சேவை
தேவ தச்சன்-மயன் ஆசைப்பட்ட படி
மரகத வல்லி
புஷ்கலா வர்த்த விமானம்
சுக்ராச்சாரியார் -பாபம் போக்கிக் கொள்ள-
வெள்ளியால் ஆபத்தைப் போக்கி
கண் நோய் நேத்ர தீபம் அணையா விளக்கு
வெள்ளியானின் குடி பார்கவர் பிருகுவின் பிள்ளை சுக்ராச்சாரியார்
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே–4-10-7-
உணர்ந்த-உணர்ந்து பாட பேதம் -தானம் -இந்திரன் கார்யம் முடிப்பது ஒள்ளிய கருமம்
தெள்ளிய குறளாய்-தெள்ளிய சிங்கர் போல் இவனும் –
வாழ்-வாசம் செய்து ஸூ கியாய் இருக்கும்
வெள்ளியார்-சாத்விகர் என்றும் சுக்ராச்சாரியார் என்றும்
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
யாகம் என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு
என்னுடைய சர்வ தனத்தையும் பரார்தமாக்க கடவேன்
என்று அனுசந்தித்த மகா பலி உடைய வேள்வியில் புக்கு -என்னுதல்
உணர்ந்து -என்ற பாடமாகில்
என்னை இரந்த இந்த்ரனுக்காக
நான் என்னை இரப்பாளன் ஆக்குவேன் -என்று
மகா பலி யஞ்ஞ வாடத்திலே போய்ப் புக்கு –
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
சுக்ரன் மற்றை யார் -இவன் தேவ கார்யம் செய்ய வந்தான் இத்தனை –
அகப்படாதே கிடாய் -என்று உபதேசித்தால்
நான் கொண்டு அல்லது போகேன்
புக்க கார்யம் தலைக் கட்டாதே மீளுவேனோ -என்னும்
தெண்மையை உடைய வாமனனாய்
அவன் நிரோதித்தாலும்-இவன் கொடேன் -என்றாலும்
நான் கொண்டு அல்லது போகேன் -என்று போய் புக்கான் ஆய்த்து
மூன்று அடி தர வேணும் என்று அபேஷித்து
அநந்தரம்
திக்குகளை அடைய
தன் வடிவாலே பாரித்தான் ஆய்த்து – –
அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
அள்ளி -என்று அல்லியாய்-தாதுக்களை உடைத்தாய்
அழகியதாய் இருந்துள்ள பொழில் இடத்தே என்னுதல்
அன்றிக்கே
அளியை அள்ளி என்னுதல் -அத்தாலே தண்ணளி யாய்
குளிர்ந்து தர்ச நீயமான பொழில் இடத்திலே இருந்து
அங்கு உள்ள பலாதிகளை புஜித்து வர்த்திக்கிற குயில்கள் ஆனவை
சத்வ நிஷ்டர் ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து
ஹரி ஹரி
என்னுமா போலே திரு நாம சங்கீர்த்தனம் பண்ணும் ஆய்த்து
(மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் )
பிராமணர் உடைய யாத்ரையாய் இருக்கும் ஆய்த்து
அங்குத்தை திர்யக்குகளுக்கும் –
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே
சுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல்
அன்றிக்கே
சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு
அத்தை சொல்லிற்று ஆகவுமாம்
வெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி
அன்றிக்கே –
வெள்ளியார் வணங்க —
வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க
ஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே
சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்
விரைந்து அருள் –
வணங்கி எழுந்து இருப்பதற்கு முன்னே
அவர்களுக்கு பலத்தைக் கொடுக்கும் யாய்த்து –
————————————————————
ஈர் அடியைச் சொல்லி
ஈர் படி கொண்ட நரஸிம்ஹ அனுபவம் இதில் –
முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்
மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன் மணிகளின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறி வரிதாய திருவெள்ளியங்குடி யதுவே —4-10-8-
முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை
ஈஸ்வரோஹம் என்று அபிமானித்து இருக்கிற –
தேவ ஜாதிக்கு கிலேசத்தை விளைக்கிற
அசூரேந்த்ரன் உண்டு -ஹிரண்யன் -அவனை
அன்று –
சிறுக்கனுக்கு அவன் நலிவைப் பண்ணின அன்று –
அரியாய் –
நர சிம்ஹமாய் –
மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்-
பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி-பெரிய திருமடல் -என்கிற இடத்துக்கு பட்டர் அருளிச் செய்ய
நான் கேட்டேன் என்று பிள்ளை அருளிச் செய்வர்
பிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு
ஆசை உடைய என்னை அன்றோ
அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று
தம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக –
(பூமியிலோ ஆகாசத்திலோ மரணம் கூடாதே ஆகவே மடியிடை -சொல்லலாமே
ப்ரேமத்துடன் இருப்பவர் வரத்தைக் காண மாட்டார்களே )
அவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட
ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன் மணிகளின் ஒளியால்
பூமியிலே உண்டான மாடங்களிலே
நட்ட தூண் அடியிலே
அழுத்தின நாநாவான ரத்னங்களின் ஒளியாலே
விடி பகல் இரவு என்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி யதுவே
அங்கு உள்ளாருக்கு திவாராத்ரா விபாகம்
பண்ண ஒண்ணாத படியாய் இருக்கும் ஆய்த்து
இவை தான் ஒரு கால விசேஷங்களிலே உண்டாகையாலே சொல்லிற்று ஆகவுமாம்
அன்றியே
இவருடைய உகப்புக்கு அவதி இல்லாமையாலே ஆகவுமாம்
உகந்த விஷயங்களில் எல்லா நன்மைகளும் உண்டாகத் தோற்றும் இறே –
—————————————————
அஸுர நிரஸனம் கீழ்
அசுரர்கள் அழிந்தால் தேவர்கள் ஸ்தோத்ரம் பண்ணுவார்கள்
அதையே இதில் அனுபவிக்கிறார் –
குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற வாழியான் அமர்ந்து உறை கோயில்
கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய
வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே —4-10-9-
குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
ப்ரஹ்மாதிகள் -உமயா சார்த்த மீசாநா மாஹாத்ம்யம் -என்கிறபடியே
பார்யா புத்ராதிகளோடே திரண்டு
நாங்கள் ஆபந்னரான அன்றைக்கு
தேவரை ஒழிய ஒரு புகலிடம் உண்டோ என்று
அவன் உடைய குணங்களை சொல்லி நின்று ஏத்த –
அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற –
தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே
கிருபையைப் பண்ணி
இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக
திருப் பாற் கடல் கோயிலிலே
கண் வளர்ந்து அருளினவன் -என்னுதல்-
வாழியான் அமர்ந்து உறை கோயில்-
அன்றிக்கே
ரஷணத்துக்கு பரிகரமான திரு வாழியை உடையவன்
பொருந்தி வர்த்திக்கிற தேசம் -என்னுதல்
கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய
பரிமள பிரசுரமான தாமரை யானது
கரும்புக்கும் செந்நெலுக்கும் அடியிலே மலர
அத்தாலே கரும்பும் செந்நெல்லும் அசைய –
வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே
அதன் மேலே தர்ச நீயமான வடிவை உடைத்தான அன்னம்
பேடை யோடே வர்த்திக்கிற போது
ஓங்கின சிம்ஹாசனத்தின் மேலே
சாமரம் இரட்ட மகிஷியோடே கூட இருக்கும் ராஜ புத்ரனைப் போலே
இரா நின்றது ஆய்த்து –
————————————————–
ஸ்வேத கல்ப ஸ்ரீ வராஹ அவதார அனுபவத்துடன் நிகமிக்கிறார்
பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடல் உலகே—4-10-10-
பண்டு காலத்தை
முன் -அழிந்து போவதற்கு முன்
அன்று ஒருகால் -இவருக்கு உள்ள இன்னாப்பு -உதவப் பெற்றிலேனே
பண்டு –
வராஹ கல்பத்தின் ஆதியிலே
முன்
அண்ட பித்தியிலே ஒட்டின பூமி
உரு மாய்வதற்கு முன்பே
ஏனமாகி –
மகா வராஹமாகி
அன்று –
அன்றைக்கு நான் உதவப் பெற்றிலேன் என்னும் அர்த்தத்திலே
ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை-
பூமியை இடந்து
திரு எயிற்றினில் கொண்டு
அந்த ஸ்ரமம் ஆறும்படியாக
கடல் திரைகளில் குருந் திவலைகள்
துடை குத்தி உறக்கத் திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து
திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –
வண்டறை சோலை மங்கையர் தலைவன்
மது பான மத்தமான வண்டுகள்
த்வனியா நின்றுள்ள சோலையை உடைத்தாய்
திரு மங்கையில் உள்ளாருக்கு நிர்வாஹகன் –
மான வேல் –
அளவுடைய வேல் -என்னுதல்
வைஷ்ணவ அபிமானத்தை பண்ணிக் கொடுக்கும் வேல் -என்னுதல்
(மானமிலா பன்றி உவமானம் இல்லாத அபிமானம் இல்லாத போல்
இங்கு மான அளவும் அபிமானமும் )
கலியன் வாய் ஒலிகள் கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வர் இக் குரை கடல் உலகே —
இவற்றை ஆதரித்துக் கொண்டு
அப்யசிக்க ஈடான பாக்யாதிகர்
கடல் சூழ்ந்த பூமியை தாங்கள் இட்ட வழக்காம்படி ஆளப் பெறுவர் –
பரிந்து பாகவத சேஷம் ஆக்கப் பெறுகையாலே
ஐஸ்வர்யத்தை தாம் புருஷார்த்தமாக நினைத்தார்
அத்தாலே
இது கற்றாருக்கும் அப்படி கூடல் இது தானே அமையும்
என்று இருந்த படியாலே ராஜ்யஸ்ரீ யைப் பெறுவார் என்கிறார்
அன்றிக்கே
இது தன்னை சர்வாதிகாரம் ஆக்குகைக்கு சொல்லிற்று ஆகவுமாம் –
ஐஸ்வர்ய காமர் இல்லை யாகில் இத்தை அதிகரி யார்களே
அவர்கள் இழக்க ஒண்ணாது என்னு முகப்பாலே சொல்லுகிறார் –
———-
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
ஆய்ச்சியர் அன்பர் கைப்பொருளை உகக்கும் தான் சேரா
சேர்க்கும் அழிய மாருதி தொண்டர் இடர் தீர்க்கும்
திரு வெள்ளியங்குடியான் வாழ்த்தும் கலியன்
திரு மொழி ஏத்தும் அறிந்து -40-
அகடிதகடநா சமர்த்தன் -ஆலிலை -நரஸிம்ஹம்-போன்று
பரத்வத்தை அழிய மாறி ஸ்தாவர திர்யக் மனுஷ்ய யோனிகளில் திருவவதாரம்
————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply