திரு நெடும் தாண்டகம்–3 திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

முதல் பாட்டிலே -விஷயாந்தர ப்ராவண்யா நிவ்ருத்தி தொடக்கமாக
ஸ்வரூப பிராப்தமான சேஷ சேஷித்வ பர்யந்தமாக ஈஸ்வரன் தன் பேறாக
சாஷாத்கரிப்பித்த உபகாரத்தைக் கண்டு விஸ்மிதர் ஆனார்
தான் அபேஷிக்க அவன் செய்யுமது இறே பிராப்தமாய் இருப்பது –
தாம் விமுகராய் இருக்க அவன் தானே மேல் விழுந்து கார்யம் செய்கையாலே விஸ்மயமாய் இருக்கும் இறே

இரண்டாம் பாட்டிலேஅந்ய சேஷத்வத்தை அறுத்துத் தந்தான் -என்கிறார் –
த்ரிமூர்த்தி சாம்ய பிரமத்தாலே பிரமித்தது அந்ய சேஷத்வம் இறே –

இப்பாட்டில் –
மணி வுருவில் பூதம் ஐந்தும் -என்றும் –
முகில் உருவம் -என்றும் –
ஸ்வரூபத்துக்கும் ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசகமாய் –
நிரதிசய போக்யமாய்
காள மேக நிபச்யாமமாய் -இருக்கிற வடிவை

ஆசா லேசம் உடையாருக்கு
ருசி அனுகுணமாக
அழிய மாறி -உபகரிக்கும் படியையும் –

தமக்கு ஸ்வாபாவிகமான வடிவு தன்னையே
நிர்ஹேதுக கிருபையாலே காட்டித் தந்த படியையும் கண்டு
நான் கண்டாப் போலே யார் காண வல்லார் -என்கிறார் –

(சேஷத்வ ஞானம் வந்த பின்பு மங்களா ஸாஸனம் பண்ண வேண்டி இருக்க இவ்வாறு அனுபவிப்பது என் என்னில்)

பதிவ்ரதையானால் பர்த்தா சம்ச்லேஷத்தில் இழியுமா போலே
சேஷத்வ சித்தி உண்டாய் –
அநந்யார்ஹதை உண்டானால் –
பின்னை அனுபவத்தில் இழியும் இத்தனை -இறே –

ஸ்வரூபத்தை கால் கடைக் கொண்டு பற்ற வேண்டும் படி இருக்கும் குணங்கள் –
உபயத்தையும் கால் கடைக் கொண்டு பற்ற வேண்டும்படி இறே –
வடிவின் போக்யதை இருப்பது –

இத்தால் –வடிவை -அனுபவிக்கிறார்

—————————————————————————————————————————————–

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே

பதவுரை

திரு வடிவில்–விலக்ஷணமான வடிவுகளில்,
கருநெடுமால்–காளமேக ஸ்யாமமான வடிவை
பெரு வடிவின்–பெரிய கூர்ம ரூபத்தோடே
கடல்–கடலினின்றும்
அமுதம் கொண்ட காலம்–(தேவர்களுக்கு) அமுதமெடுத்துக் கொடுத்த காலமாகிய கிருத யுகத்திலே
வளை உரு ஆய் திகழ்ந்தான் என்றும்–சங்கு போலே வெளுத்த நிறத்தை யுடையவனாக விளங்கினானென்றும்
திரேதைக் கண்–த்ரேதா யுகத்திலே
சேயன் என்றும்–சிவந்த நிறத்தை யுடையவனாக விளங்கினானென்றும்
(கலியுகத்தில்)
கரு நீலம் வண்ணன் என்றும்–இயற்கையான) நீல நிறத்தை யுடையவனாய் விளங்குகிறானென்றும்
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்–எப்போதும் நின்று துதிப்பதல்லாமல்
ஒரு வடிவம் என்று ஓர் உரு என்று உணரல் ஆகா-வடிவும் நிறமும் இன்ன தென்றும் இவ்வள வென்றும் அறியப் போகாமலிருக்கிற
கரு வடிவின் செம்வண்ணம் கண்ணன் தன்னை பெருமானை–கறுத்த திருமேனியையும் செந்நிறமான திருக் கண்களை யுமுடையனான எம்பெருமானை
யார் ஒருவர்–ஆரேனுமொருவர்
காண் நிற்பாரே–(ஸ்வ ப்ரயத்நத்தால்) காணக் கூடியவரோ?
கட்டுரை–(நெஞ்சே!) சொல்லு.

வர்ணங்களில் ஸ்வாபாவிகமான நீல வர்ணத்தை யுடையனான ஸர்வேஸ்வரனை அசாதாரண விக்ரஹத்தில்
நீல வர்ணனாய்க் கொண்டு
ஆஸ்ரிதர் இடத்தில் பெரிய வியாமோஹத்தை யுடையவன்
த்ரேதா யுகத்தில் சிவந்த நிறத்தை யுடையனாய் இருப்பன் என்றும்
பல வடிவுகளை யுடையனாய்க் கொண்டு
சமுத்திரத்தில் நின்றும் அம்ருதம் எடுத்த காலத்தில் கிருத யுகத்தில்
சங்கத்தினுடைய -வெண்மையான ரூபத்தை யுடையவனாய் -விளங்கினான் என்றும்
இப்படி பிரதி கல்பங்களிலும் இருந்து ஸ்தோத்ரம் செய்வது ஒழிய
ஒருபடிப்பட்ட விக்ரஹத்தை யுடையவன் என்றும்
ஒரு விதமான நிறத்தை யுடையவன் என்றும் அறியப் போகாது

நீலமான திருமேனியையும் சிவந்த திருக்கண்களையும் யுடைய
அந்த ஸர்வேஸ்வரனை யார் தான் காண வல்லார்
ஓ மனஸ்ஸே சொல்லிக் காண் –

———————————————

திரு வடிவில் –
வடிவிடை யாட்டத்தில் –
கீழே -சேஷத்வத்தின் இடையாட்டமாகவும்
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியின் இடையாட்டமாகவும் -செய்தவை போலே
இவ்விடை யாட்டத்தில் செய்தவை கிடீர் என்கிறார் –

திரு வடிவு
1-வி லஷணமான வடிவு -என்னுதல் –
2-திருவினுடைய வடிவு -என்னுதல் –

வடிவு -யென்ன அமைந்து இருக்க
திரு வடிவு -என்கிறது
அகலகில்லேன் இறையும்-என்கிறபடியே
பிராட்டி தண்ணீர் தண்ணீர் -என்னும்படி இருக்கிற
துர்லபமான வடிவைக் கிடீர் நாட்டார்க்கு அழிய மாறி –
முகம் கொடுத்தது என்று
அவ்வடிவின் வை லஷண்யம் தோற்றுகைக்காக –

(நித்ய அநபாயிநி -திருவே அவளும் அனுபவிக்க உரிய வடிவு -திருவை அனுபவிக்கக் கொண்ட வடிவு

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-)

அவ்வடிவை உபகரித்த படியை சொல்லுகிறது மேல் –
கரு நெடு மால் –
காள மேய நிபஸ்யாமமான வடிவை உடையனாய்
உபய விபூதிக்கும் அவ்வருகான
பெரிய மேன்மையை உடையவன் –

இத்தால் –
விலஷண விக்ரஹ உக்தனாய்
ஸ்வயம் நிரபேஷனாய்
சர்வாதிகனாய் இருக்குமவன் கிடீர் -இப்படி ஆனான் -என்கிறார் –

அதவா
மால் -என்று – வ்யாமோஹமாய்
அதி வ்யாமுக்தன் என்னவுமாம் –

இத்தால்
இப்படி இருக்கிறவன் -தன்னை அழிய மாறி முகம் காட்டுகைக்கு ஹேது
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆகையாலே என்ற ஹேது ஆகவுமாம் –

சேயன் என்றும் -த்ரேதைக் கண் –
த்ரேதா யுகத்தில் வந்தால் -சிவந்த வடிவை உடையவனாய் இருக்கும் –
அக் காலத்திலே புருஷர்கள் ரஜஸ் பிரசுரர் ஆகையாலே சிவப்பிலே யாய்த்து ருசி உண்டாய் இருப்பது –
அந்த ருசி அனுகுணமாக சிவந்த வடிவைக் கொண்டு முகம் காட்டும் –

ரஜஸ் ஸூ சிவந்து இருக்கக் கடவதாய் –
சத்வம் வெளுத்து இருக்கக் கடவதாய் –
தமஸ் ஸூ கறுத்து இருக்கக் கடவதாய் -இறே இருப்பது –
லோஹித சுக்ல க்ர்ஷ்ணம் -என்று இறே

(வேத வாக்கியத்தில்
* அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் * (ஸ்வேதார உபநிஷத் ) என்று சிவப்பு வெளுப்பு கறுப்பு என்கிற அடைவிலே
ஓதி யிருக்கையாலே அந்தச் சாயையாலே அருளிச் செய்கிறபடி எனலாம்.

பிரக்ருதியை முக்குண கலவி கொண்ட பெண்ணாக உருவகம் -முமுஷு இதில் தண்மை அறிந்து அவன் மேன்மை அறிந்து முக்தன் ஆகிறான்

முதல் யுகத்தில் கொண்ட வெண்மையை முதலில் சொல்லாமல் சிகப்பைச் சொல்லி வெண்மை சொன்னது போல் இங்கும் அருளிச் செய்கிறார் )

பிரக்ர்திக்கு அசாதாரண குண த்ரயத்தையும் சொல்லிற்று –
சிவந்த வடிவை பிரதமத்திலே சொல்லிற்று –
லோஹித சுக்ல க்ர்ஷ்ணம் -என்கிற ஸ்ருதி சாயையாலே
அருளிச் செய்கிறார் -என்னும் இடம் தோற்ற –

சேஷி உகப்புக்கு அனுகுணமாக சேஷ பூதன் தன் வடிவை அமைக்கை அன்றிக்கே
(நிவாஸ சய்யா –இத்யாதி
சென்றால் குடையாம் -இத்யாதி )
சேஷ பூதன் உகப்புக்கு அனுகுணமாக சேஷி தன் வடிவை
அழிய மாறுகிறான் இறே
தமர் உகந்தது எவ்வுருவம் -என்கிறபடியே

என்றும் -என்றும் -என்கிற இவை
ஊழி தூறு ஊழி -நின்று ஏத்தல் அல்லால் என்கிற இடத்தில் அந்வயிக்கக் கடவது

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –ஸ்ரீ முதல் திருவந்தாதி-53-

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 40 –

ஆபாஸ விருத்திக்கு ஐம்பது சரீரம் கொண்டானே ஸுபரி

“மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க் காணோரேனமுமாய்க் கற்கியாம்“ இத்யாதிப்படியே
தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர யோநிகளிலே பலவகைப் பட்ட வடிவுகளையும்

சதங்கை அழகியார் -நம்பிள்ளை ஆராதன தெய்வம் -நாவல் பழம் கேட்ட வ்ருத்தாந்தம்

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —ஸ்ரீ முதல் திருவந்தாதி —44–)

பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் –
கிருத யுகத்தில் வந்தால் –
திரேதைக் கண் -என்றவோபாதி –க்ர்த யுகம் -என்னாதே
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் -என்கிறது-
திரேதைக் கண் -என்று மலட்டுக் காலம் போலே இருக்கையாலே
பகவத் ஸ்பர்சியான காலம் என்று அருளிச் செய்கிறார் –
அக் காலத்தில் பண்ணின வியாபாரம் தமக்கு அபிமதமாய் இருக்கையாலே-

இப்படி பகவத் ஸ்பர்சத்தை இட்டுச் சொன்ன இடத்துக்கு த்ருஷ்டாந்தம் –
பெரிய திரு நாளில் ஆதரம் உடையார் -பங்குனி மாசத்துக்கு அப்புறம் கார்யம் செய்கிறோம் என்ன பிராப்தமாய் இருக்க
பெரிய திருநாளுக்குப் பின் கார்யம் செய்கிறோம் -என்னுமா போலே –

ஆனால் –கடல் அமுதம் கொண்ட காலம் -யென்ன அமையாதோ
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் -என்பான் -என்னில் –
பதினாலு நூறாயிரக் காதமாறு பரப்பை உடைத்தாய் இறே ஷீராப்தி இருப்பது –
(14 லக்ஷம் காதம் நீளமும் அகலமும் காய்ந்த பாற் கடல் )இப் பரப்பு அடங்கலும் விம்மும்படி யிறே
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி -என்கிறபடியே
கண் வளர்ந்து அருளுவது –

நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8-)

அவ் வடிவோடே எழுந்து இருந்து -கடைகிற போது
ஒரு கடல் செவ்வே நின்று கடல் கடைந்தால் போலே இருக்கையாலே
அருளிச் செய்கிறார் -(பாற் கடலை குணக் கடல் அன்றோ கடைந்து )
ஸ்ரமஹரமாய் அபரிச்சின்னமாய் இறே கடல் இருப்பது –
அப்படியே ஸ்ரமஹரமுமாய் அபரிச்சின்ன போக்யமுமாய் இருக்கிற படி –

அதவா
பெரு வடிவு -என்று
அசங்க்யாதமான வடிவாலே -என்னவுமாம் –
1-மந்த்ரம் அழுந்தாமைக்கு கூர்ம ரூபியாகவும்
2-மேலே கொந்தளியாமைக்கு ப்ர்ஹத் ரூபியாயும் –
3-தேவதைகளோடு அந்ய தமமான வடிவைக் கொண்டும்
4-அசுரர்களோடு அந்ய தமமான வடிவைக் கொண்டும் –
5-அவர்களுடைய மத்யே நின்று வலித்தும்-
5-வாஸூகிக்கு பலமாய் புகுந்து நின்றும்
யன்ன த்ரஷ்டும் சூராசூரை -என்று
மலையோடு தேவதைகளோடு அசுரர்களோடு வாசி அற –
வியாபித்து -பலாதானம் பண்ணுவதாயும்
இப்படி அநேகம் வடிவைக் கொண்டபடி –

கடல் அமுதம் கொண்ட காலம் –
துர்வாசவினுடைய சாபத்தால் நஷ்ட ஸ்ரீகராய்
அம்ர்தத்தை இழந்து தரித்ரராய் –
சரணம் த்வா மநு ப்ராப்தா சமஸ்தா தேவ கணா-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே

பிறிகதிர் படாதபடி சகல தேவதைகளும் வந்து சரணம் புகுர –
அவர்களுக்கு கடலைக் கடைந்து அமர்த்தம் கொடுத்த படி –

கொண்ட –
அவர்களுக்கு கொடுத்தது தன் பேறாய் இருக்கை –

கடல் அமுதம் கொண்ட காலம் –
1-தேவதைகளுக்கும் -2–தனக்கும் -3–எனக்கும் –
கடலிலே அமுதத்தை உண்டாக்கின காலம் –
1-தேவதைகள் பந்தகமான அம்ர்தத்தைக் கொண்டு போனார்கள் –
2-தான் பெரிய பிராட்டியார் ஆகிற அம்ர்தத்தை ஸ்வீகரித்தான் –
விண்ணவர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண்ணமுதம் உண்ட
இவை இரண்டும் அன்று இவருக்கு போக்கியம் –
3-நால் தோள் அமுது –என்கிறபடியே
கையும் திரு ஆழியும் கொண்டு
கடல் கடைந்தானே யாய்த்து இவருக்கு போக்கியம் –

(வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-)

1-தேவதைகளும் தங்கள் அபிமதத்தைப் பெற்றுப் போந்தார்கள் –
2-அவனும் தன் அபிமதம் பெற்றான் –
3-நானும் என் அபிமதம் பெற்றேன் –
பஸ்யதாம் -சர்வ தேவாநாம் யவௌ வஷஸ் த்தலம் ஹரே –
என்கிறபடியே
சகல தேவதைகளும் பார்த்து இருக்க
திரு நாபீ கமலத்திலே அடியை இட்டு திரு மார்பிலே ஏறினாள் ஆய்த்து –

(சிந்து கன்யை -பாற் கடலில் பிறந்தவள்-திவ்ய மால்ய அம்பர தரா
பதுமா -வாமனன் அவதாரம் பொழுது
தாரணி -பரசுராமன்
ருக்மிணி -கண்ணன்
சீதா -ராமன்)

இவர்களைப் பாராதே திரு மார்பிலே ஏறுவான் என் என்னில்
தன் அபிமதம் பெற்றால் இறே பிறர்க்கு அபிமதம் செய்வது –
அங்கன் அன்றியே
அவன் கடாஷம் அடியாக விறே நம்முடைய கடாஷம் என்று அவன் முகத்தைப் பார்த்தாள் –
அவன் நினைவு அறிந்து செய்கைக்காக –

இவ்விடத்திலே ஜீயர் பட்டர் –இடம்
தேவதைகள் அடங்க நிரம்பக் கிடக்கச் செய்தே
திரு மார்பிலே ஏறுகை ஸ்த்ரீத்வத்துக்கு போருமோ -என்று கேட்க –
பர்தர் சம்ஸ்லேஷத்தில் இழியும் பொழுது (கூனர் குறளர்  வயசானவர் பணி செய்யும் )கலசப்பானை எடுப்பார்க்குக் கூச வேணுமோ –
என்று அருளிச் செய்தார் –

சகல தேவதைகளும் ஈஸ்வரோஹம் -என்று இருந்தாலும்
இம் மிதுனத்துக்கு கிஞ்சித் கரிக்க யோக்யமாய் இறே ஸ்வரூபம் இருப்பது –

(அஸௌ மயா ஹத ஸத்ருர் ஹநிஷ்யே சாபராநபி–
ஈஸ்வரோஹமஹம் போகீ ஸித்தோஹம் பலவாந் ஸுகீ–৷৷16.14৷৷

நானே இயற்கையாகவே பலமுடையவன் – நானே சுகமுடையவன் –
அநிஷ்ட நிவ்ருத்தியும் என்னாலே -என்னாலே சத்ருக்கள் மாண்டனர் -நான் தான் ஈஸ்வரன் -நானே அனுபவிக்கிறேன்
ஸ்வர்க்காதிகளை நானே அடைவேன் -பலமும் என்னாலே சுகம் என்னாலே –)

அமுதம் கொண்ட காலம் –
அதுவும் ஒரு காலமே -என்கிறார்
அநந்ய பிரயோஜனருக்கு முகம் காட்டுகை அன்றியே
பிரயோஜனாந்த பரருக்கும் கூட வாழும் காலம் இறே –
1-மேன்மையும்–2- நீர்மையும்–3- போக்யதையும் பிரகாசிக்கும் காலம் இறே –

சகல தேவதைகளும் வந்து சரணம் புகுருகையாலே மேன்மை பிரகாசியா நின்றது
பிரயோஜனாந்த பரர்கள் –ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் துர்மானிகள் என்று பார்த்தல் –
செய்யாதே கார்யம் செய்கையாலே நீர்மையும் பிரகாசியா நின்றது –
பிராட்டியும் தானும் சேர்ந்த சேர்த்தியால் போக்யதையும் பிரகாசியா நின்றது –

வளை வுருவாய் திகழ்ந்தான் -என்று
க்ர்த யுக புருஷர்கள் சத்வோத்தராகையாலே வெளுப்பாய்த்து அவர்கள் உகப்பது –
ஆகையால் அவர்கள் ருசி அனுகுணமாக சுக்ல வர்ணமான வடிவை உடையனாய் இருக்கும் –

வளை வுருவாய் -சங்க வர்ணனாய் –
சசி வர்ணம் சதுர்புஜம் -என்னக் கடவது இறே –

கடல் கடைந்த காலம் க்ருத யுகம் யென்ன பிரமாணம் என் என்னில் –
ஸ்வேத வர்ணம் -என்கையாலே –க்ர்த யுகம் என்னும் இடம் தோற்றுகிறது

(ஸூக்ல அம்பர தரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ந உப சாந்தயே

சுக்லாம்பரதர”வெள்ளை வஸ்த்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
விஷ்ணு’ என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர், ஸர்வ வ்யாபி என்று அர்த்தம்.
சசிவர்ண”: நிலா மாதிரி நிறமுடையவர்.-சதுர்புஜ”: நாலு கை உள்ளவர்.
ப்ரஸந்ந வதந”: நல்ல மலர்ந்த முகமுள்ளவர்
த்யாயேத்’ என்பதற்கு ‘த்யானிக்க வேண்டும்’
“ஸர்வ விக்ந உப சாந்தயே”- எல்லா விக்னங்களும், தடைகளும் இடையூறுகளும் அடங்கி மறைந்து போவதற்காகவே,)

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வ மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –(ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-15-)

பாலின் நீர்மைநிறைந்த காலம் நான்குமாய் -என்று
நாலு யுகத்துக்கும் நாலு வர்ணமாக அருளிச் செய்தார் இறே ஒருவர் –

(பாலின் நீர்மை செம் பொன் நீர்மை* பாசியின் பசும் புறம்,*
போலும் நீர்மை பொற்பு உடைத்தடத்து* வண்டு விண்டு உலாம்,*
நீல நீர்மை என்று இவை* நிறைந்த காலம் நான்குமாய்,*
மாலின் நீர்மை வையகம்* மறைத்தது என்ன நீர்மையே?–ஸ்ரீ திருச்சந்த விருத்தம் -44-)

திகழ்ந்தான் -என்றும் –
தன்னை அழிய மாறி இவர்களுக்கு முகம் கொடுத்தால்
அவர்கள் உஜ்ஜ்வலராகை அன்றியே
இவன் உஜ்ஜ்வலனான படி –
தன்னை அழிய மாறியும் முகம் கொடுக்கையால் நீர்மை விளங்கா நிற்கும் இறே –

பெருமானைக் –
இப்படி ஆஸ்ரிதர்க்காக கொள்ளும் வடிவுக்கு தொகை இன்றிக்கே இருக்கிறவனை
யுகங்கள் நாலா னால் வடிவும் நாலாக இருக்குமோ வென்னில்
அவ்வவோ யுகங்களுக்கு தொகை இல்லாமையாலே வடிவும் அசங்க்யாதமாய் இறே இருப்பது –

(எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -25-அவதாரங்கள் ஸ்ரீ மத் பாகவதம் சொல்லும்)

த்வாபர யுகத்தில் உள்ளார் -ரஜஸ் தமோ மிஸ்ரராய் இருக்கையாலே
அவர்கள் உடைய ருசி அனுகுணமாக
சிவப்பும் இன்றியிலே நீலமும் இன்றியிலே இருக்கும் வடிவை உடையவை இருக்கும் என்னும் இடம்
அநுக்தம் ஆகையாலே அத்தையும் சமுச்சயிக்கிறது –
பாசியின் பசும் புறம் போலும் நீர்மை –என்னக் கடவது இறே –

கரு நீல வண்ணன் தன்னை –
கலிகாலத்தில் தன் பக்கல் அபிமுகராய்
ஒரு வர்ண விசேஷத்திலே ருசி பண்ணுவார் இல்லாமையாலே
ஸ்வா பாவிகமான வடிவு தன்னைக் கொண்டு இருக்கும் –

கலௌ ஜகத்பதிம் (கலௌ ஜகத் பதிம் விஷ்ணும் ஸர்வஸந்த்ரஷ்டாரம் ஈஸ்வரம். நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டே -இத்யாதி-ஸ்ரீ விஷ்ணு புராணம்
மைத்ரேய -பட்ட பாடு பாராய் -என்னுதல் –
பராசரருக்கு கலியுகம் பிரத்யஷம் போலே தோற்றுகையாலே இக் காலம் -என்கிறார் –
இக் காலம் தட்டாதே நீ ஒருவனே இரு -என்னுதல்
கருமை -என்று கறுப்புக்கும் பேர் -வர்ண சாமான்யத்துக்கும் பேர் –
நிறத்தில் வந்தால் நீலமான நிறத்தை உடையனாய் இருக்கும் –

ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது –
நிறத்தை அழிய மாறுகை அன்றியே
வடிவையும் அழிய மாறும் –
இப்படி ஆஸ்ரித அர்த்தமாக வடிவையும் வர்ணத்தையும் அழிய மாறுகையாலே
இது வடிவு இது வர்ணம் என்று ஒருவராலும் பரிச்சேதிக்க போகாது

ஸூர நர திரஸாம் -(ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் )என்கிறபடியே
சர்வ யோநியிலும் வந்து அவதரிக்கையாலே
வடிவை அழிய மாறினான் இறே –

(இயம் வையூஹீ வை ஸ்திதிரத கில இச்சா விஹ்ருதயே
விபூதி நாம் மத்யே ஸூர நர திரிச்சாம் அவதரன்
சஜாதியஸ் தேஷாமிதி து விபாக்க்யாம் அபி பஜந்
கரீச த்வம் பூர்ணோ வர குண கணைஸ் தாந் ஸ்தகயஸி –(ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-17-)

யுவா குமார -என்கிற பருவம் -காள மேகம் போலே இருக்கிற நிறம்
ஸ்வா பாவிகமாய் இருக்கும் என்று பரிச்சேதிக்கப் போகாதோ -என்னில்
புத்ரனாய் இருக்கவும் காண்கையாலே பருவத்தைப் பரிச்சேதிக்கப் போகாது –
ஆஸ்ரிதர் உடைய ருசி அனுகுணமாக வர்ணத்தைப் பரிகிரஹிக்கையாலே
நிறத்தை பரிச்சேதிக்கப் போகாது –

(யுவா குமார – யுவா அகுமாரா -கௌமாரம் இன்றியே யௌவன மாத்ரமேயாய் யுள்ளவனை
நீல ஜீமுத இந்திர நீல மணி ப்ரபாம் இவள் -யுவா குமார ரூபஞ்ச யுவதஸ்ய குமாரிணி)

ஆனாலும் இவை ஆகந்துகம் -நிலை நின்ற வேஷம் இது என்று பரிச்சேதிக்க குறை யென்ன -என்னில்
ஆஸ்ரித அர்த்தமாக கொண்ட வடிவையும் நிறத்தையும் பார்த்தால் அது தான் ஆகந்துகம் என்னும்படியாய் –
அவை தன்னை ஆதரித்து இருக்கையாலே பொருந்தி இருக்கும் படி –
இச்சா க்ருஹீதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )இறே –

(இச்சா க்ருஹீதம் -இச்சையால் கொள்ளப் படுகின்ற உருவம் நின் உருவம் என்னுதல்-கர்ம நிபந்தனம் அல்ல என்று தோற்றுகிறது;

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-)

உணரலாகா –
பாசுரமிட்டு பேச முடியாமை யன்று –
நெஞ்சாலும் நினைக்கப் போகாது –

ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் –
செய்யலாவது இது -என்கிறார் –
அவன் கொண்ட ரூப பேதங்களையும்
வர்ண பேதங்களையும் பார்த்தால்
கால தத்வம் உள்ளதனையும் நின்று ஏத்தும் இத்தனை யல்லது பரிச்சேதிக்கப் போகாது –

கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக் –
தமக்கு காட்டின வடிவை அருளிச் செய்கிறார் –
தமக்கு ருசி உண்டாகில் இறே ருசி அனுகுணமான வடிவைக் கொண்டு காட்டுவது
நாம் பகவத் விமுகராய்
விஷய பிரவணராய் இருக்க
தன்னுடைய ருசியாலே -ஸ்வா பாவிகமான வடிவு தன்னையே யாய்த்து காட்டிற்று –
காள மேக நிபாஸ்யமான வடிவையும்
அதுக்கு பரபாகமாய் உள் வாயிலே கிடக்கிற வாத்ஸல்யம்
அமர்த்த வர்ஷியான திருக் கண்களை உடையவன் –
இதையும் ஸ்ரீயபதித்வத்தோபாதி
தனித் தனியே சர்வாதிக லஷணமாய் இறே இருப்பது –

கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே -(யார் ஒருவர் கட்டுரையே -யார் ஒருவர் காண்கிற்பாரே )
நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே
நான் கண்டு பேசினால் போலே எவர் தான் கண்டு பேச வல்லார் –
நான் கண்டால் போலே காண வல்லார் உண்டோ –
நான் பேசினால் போலே பேச வல்லார் உண்டோ

அதவா
கட்டுரையே –
எல்லாரும் பேசியே போம் இத்தனை ஒழிய
காண வல்லார் உண்டோ -என்னவுமாம் –

வேதங்களும் ஈஸ்வரன் வடிவு இருக்கும் படியை
நீல தோயாத மத்யஸ்தா -(வித்யுல்லகேவ பாஸ்வர தைத்ரியம் )என்று கடக்க நின்று பேசிப் போம் அத்தனை -அல்லது கண்டது இல்லை
நீலமுண்ட மின்னன்ன மேனி எம்பெருமான் –என்றவர்களும் நான் கண்டால் போலே கண்டார்களோ –

(இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –ஸ்ரீ திரு விருத்தம் -29-)

நைசர்க்கிகமான விரக்தியையும் -நைசர்க்கிகமான பிரேமத்தையும்
உடையராய் (ஸஹஜ பக்தராய்-மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்லவே )அன்றோ அவர்கள் கண்டது –
நைசர்க்கிகமான பகவத் வைமுக்யத்தையும் விஷய பிராவண்யத்தையும் உடைய நான்
அவ்வாறு இவ்வாறாய் கண்ட காட்சிக்கு ஸத்ர்ஸம் உண்டோ –
ஆன பின்பு -நான் கண்ட காட்சியை வேதங்கள் கண்டதோ –
ஆழ்வார்கள் கண்டார்களோ –

ஆர் ஒருவர் காண்கிற்பாரே –
ஸ்வ சாமர்த்யத்தாலே எவர் காண வல்லார்
சாதகரைப் போலே ஸ்வ யத்னத்தால் கண்டேனோ
பிரபன்னரைப் போலே சம்சார பீதனாய் கண்டேனோ –
விஷய பிரவணனாய் திரியச் செய்தே அன்றோ நான் கண்டது –
பரகத ஸ்வீகாரத்துக்கு முக்ய அதிகாரி -தாம் -என்றபடி –

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading