திரு நெடும் தாண்டகம்–2–பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை

முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான ராஹித்யம் தொடக்கமாக
பிராப்தி பர்யந்தமாக ஈஸ்வரன் தமக்கு பண்ணின உபகார பரம்பரைகளை அருளிச் செய்தார் –

இதில் –
தமக்கு த்ரிமூர்த்தி சாம்ய ப்ரமத்தை அறுத்து தந்தபடியை அருளிச் செய்கிறார் –
எண்ணும் பொன்னுருவாய் -என்று ஸ்வரூப வைலஷண்யத்தை சொன்ன போதே

இதுவும் அதிலே அர்த்ததா உக்தம் அன்றோ -என்னில் –
சிம்ஹாவ லோக ந்யாயத்தாலே -கீழ்ச் சொன்ன உபகாரங்களை
மறித்துப் பார்த்து அல்லாத உபகாரங்களை உண்டு அறுக்கிலும்
இந்த த்ரிமூர்த்தி சாம்ய கூழ்ப்பை அறுத்துத் தந்த உபகாரத்தை
உண்டறுக்கப் போமோ -என்று -அவற்றின் உடைய ஆதிக்யத்தாலே திரியட்டும் சொல்லுகிறார் –

கூழ்ப்பு -சம்சயம்
விஷயாந்தர ப்ராவண்யத்தில் நின்றும் மீட்ட உபகாரம் போலேயோ –
கைவல்யம் ஆகிற ஆபத்தில் நின்றும் மீட்ட உபகாரம் போலேயோ –
இந்த உபகாரம் -என்கிறார்-

1-இருவர் சேஷமாய் -ஒருவன் சேஷியாய்
2-இருவர் உத்பாதகராய் -ஒருவன் உத்பாதகனாய் –
3-இருவர் சரீரமாய் -ஒருவன் சரீரியாய் –
இருக்கிறபடியை எனக்குக் காட்டித் தந்தான் –
என்கிறார் –

—————————————————————————-

பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ
யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே-–2-

பதவுரை

ஏர் உருவில் அழகிற ஜகத்தில்–
மூவருமே என்ன நின்ற–மூன்று தெய்வங்களே முக்கியம்‘ என்று சொல்லலாம்படி யமைந்த
இமையவர் தம்-தேவதைகளினுடைய
திரு உரு-ரூபங்களை
வேறு எண்ணும் போது–தனித் தனியாகப் பிரித்து ஆராயுமிடத்தில்
ஓர் உருவம்-(நான்முகக் கடவுளாகிற) ஒரு மூர்த்தியானது
பொன் உருவம்–பொன்னின் வடிவாகவுள்ளது;
ஒன்று–(பரம சிவனாகிற) ஒரு மூர்த்தி யானது
செம் தீ–சிவந்த நெருப்பின் வடிவாக வுள்ளது;
ஒன்று–(ஸ்ரீமந் நாராயணனாகிற) ஒரு மூர்த்தியானது
மா கடல் உருவம்–கருங்கடல் போன்ற வடிவமாக வுள்ளது;
ஒத்து நின்ற–சேர்ந்திருக்கின்ற
மூ உருவும்–(மேற்சொன்ன) மூன்று மூர்த்திகளையும்
கண்ட போது-(பிரமாணங்கொண்டு) பரிசீலனை செய்யுமிடத்து,
பார் உருவி–கடினமான பூமி யென்ன
நீர்-ஜலமென்ன
எரி-அக்நியென்ன
கால்-வாயுவென்ன
விசும்பும் ஆகி–ஆகாசமென்ன ஆகிய பஞ்ச பூதங்களையும் படைத்தும்
பல் வேறு சமயமும் ஆய்-பலவாய் வேறுபட்ட சமயங்களை யுடைத்தாயிருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்டித்தும்
பரந்து நின்ற-இப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்து நிற்குமதாய்
ஆம் சோதி-பரஞ்சோதி யென்று போற்றப் படுமதாய்
ஒன்று-அத்விதீயமா யிருக்கின்ற
முகில் உருவம்-காளமேக வுருவமானது
எம் அடிகள் உருவம்–எம்பெருமானுடைய வடிவமாம்.

அழகிய சரீரங்களில் பிராணிகளில் -மூவருமே பிரதானர் என்னும்படி இருக்கிற
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்களுடைய ரூபங்களை வேறாகப் பிரித்துப் பார்க்கும் போது
ஒரு -ப்ரஹ்மாவின் வடிவம் பொன்னின் ஸ்வபாவம்
ஒரு -ருத்ரனின் வடிவு -சிவந்த அக்னியின் வடிவு
ஓரு -ஸ்ரீ யபதியான நாராயணனுடைய வடிவு பெரிய கடல் போலே ஸ்ரமஹரமான வடிவு
சேர்ந்து இருக்கிற மூன்று வடிவுகளையும் ப்ரமாணத்தாலே பார்க்கும் போது
கடினையான பூமி ஜலம் அக்னி காற்று ஆகாசங்களை ஸ்ருஷ்ட்டித்தும்
பலவாய் வேறுபட்ட சமயத்தை யுடைத்தாய் இருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்ட்டித்தும்
அந்தராத்மதயா வியாபித்து நிற்குமவனாய்
தத்வ ஸ்தியை ஆராய்ந்து பார்க்கும் இடத்து
பரஞ்சோதி ஸப்த வாஸ்யனாய்
ஒருவனாய் விளங்குகிற
காளமேக நிபஸ்யா மமான வடிவு
ஸர்வ ஸ்வாமியான ஸர்வேஸ்வரன் வடிவமாம் –

—————–

பாருருவி-நீர் எரி கால் விசும்புமாகி –
கடினையான பூமி
ஆர்யச் சிதைவாகையாலே –உர்வியை -உருவி -என்கிறது –
பார் -என்று பூமியைச் சொல்லுகிறது அன்று –
காடிந்ய பரம் உருவி -என்று பூமியைச் சொல்லுகையாலே –
இத்தால் பூதாந்தரங்களில் காட்டில் வ்யாவர்தகமான
காடிந்யத்தை உடைத்தான பூமி -என்கை —

உருவில் -என்ற பாடமான போது –
அண்ட காரணமான பதார்த்தங்களில்
பார் நீர் எரி கால் விசும்பு ஆகிய பஞ்ச பூதங்களையும் சிருஷ்டித்து –
அல்லாத அஷர அவ்யக்த மஹத் அஹங்காரங்கள் ஆகிற
இவை அண்டத்துக்கு காரணம் அன்றோ என்னில் –
அவற்றில் காட்டில் ஸ்தூலமாய் இருக்கையாலும்
அண்டத்துக்கு சாஷாத் காரணமாய் இருக்கையாலும்
நித்ய சிருஷ்டியைச் சொல்லுகிறது –
ருஷியும் –பூதோப்யண்டம் -என்றார் இறே
பார் முதலாகச் சொல்கிறது -வ்யய க்ரமத்தைப் பற்றி –

ஆகி –என்றது
உண்டாக்கி -என்னுமத்தை காட்டுமோ என்னில்
வேதாந்திகள் -ஆகையாலே
பஹுஸ்யாம் –என்கிற ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்கிறார் –
ஆகாசாத் வாய் -வாயுரோக்னி -அக்னேராப -அத்யப்ப்ரத்வி –
என்று ஒன்றுக்கு ஓன்று உத்பாதகமாக சொல்லச் செய்தே
இவற்றுக்கு எல்லாம் ஈஸ்வரனே உத்பாதகன் -என்னப் போமோ -என்னில் –
தேஜ ஐஷத-ஆப ஐஷத -என்கிற ஈஷண க்ரியை
அசேதனத்துக்கு கூடாமையாலே
ததவஸ்தனான சர்வேஸ்வரனே இவற்றுக்கு உத்பாதகன் என்னும் இடம் தோற்றிற்றே –

த்ரிமூர்த்தி சாம்ய பிரம நிவர்தனம் ஆகில்
இப்பாட்டுக்கு வாக்யார்த்தம் பிரக்ருத சிருஷ்டியை சொல்லுவான் என் என்னில் –
அண்ட காரணமான பூதங்களை ஸ்ருஷ்டிதவனுக்கு
அண்டத்தில் உத்பன்னரான ப்ரஹ்மாதிகளோடு
சாம்ய சம்பாவனையும் இல்லை -என்கைக்காக –

பல் வேறு சமயமுமாய் –
கீழே சமஷ்டி சிருஷ்டியைச் சொல்லிற்று
இத்தால் – வ்யஷ்டி சிருஷ்டியைச் சொல்லுகிறது –
பத்த சேதனர் பூதங்களிலே சமஷ்டி ரூபேண அந்வயித்து போருகையாலே சமஷ்டி சிருஷ்டி -என்கிறது –
பத்தாத்ம சமஸ்டி பூதனான ப்ரஹ்மாவின் பக்கலில் நின்றும்
பக்த சேதனாபின்னராய் பிறக்கையாலே வ்யஷ்டி சிருஷ்டி -என்கிறது –

பலவாய் வேறுபட்ட சமயத்தை உடைய ஜகத்தை சிருஷ்டித்து
சமஷ்டி சிருஷ்டி போலே சங்க்யாதமாய் இருக்கை அன்றிக்கே
அசங்க்யாதரான ஆத்மாக்களை ஸ்ருஷ்டிக்கையாலே –வ்யஷ்டி சிருஷ்டியை -பல் -என்கிறது

வேறு பட்டு இருக்கை யாவது -ஒன்றோடு ஓன்று தீண்டவும்
துடைக்கவும் ஒண்ணாத படி
தேகாதி பேதத்தாலே அன்யோன்யம் அத்யந்த பின்னமாய் இருக்கை –

சமயம் ஆகிறது -வியவஸ்தை -வ்யவஸ்தித ஸ்வபாவமாய் இருக்கை –
தேவதைகள் ஆராத்யராயும் -அமர்த்த புக்குகளாய் இருக்கையும்-
மனுஷ்யர் ஆராதகராயும் அந்நாசிகளாயும் இருக்கையும் –
திர்யக் ஸ்தாவரங்கள் ஆராதனா உப கரணங்களாயும் -ஆராதகருக்கு உஜ்ஜீவனமாயும்
அல்லாதவை அவன் அபிமானத்திலே கிடந்தது உஜ்ஜீவிக்கையும் வ்யவஸ்த்திதமாய் இருக்கை –
தாஸ்ய ஸூகைக்க சங்கினாம் -பவநேஷ் வஸ்த்வபி கீட ஜன்மமே -என்னக் கடவது இறே –

(தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 55 –

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.)

பரந்து நின்ற –
பரக்கை யாவது -ஸ்ருஷ்டையான சகல பதார்த்தங்களையும்
அனு பிரவேசத்தாலே
ஆத்ம தயா வியாபித்து நிற்கை –

அனு பிரவேசமாவது – ஸ்தூலாகாரத்துக்கு அனுகூலமாக தன்னை அமைக்கை –
சூஷ்ம சிதசித் விசிஷ்டனான தன்னை ஸ்தூல சிதசித் விசிஷ்டன் ஆகை இறே-

(காரண ப்ரஹ்மமே கார்ய ப்ரஹ்மமாவான் அன்றோ-அப்ருதக் ஸித்த விசேஷணம் -அனைத்து நிலைகளிலும் -)

அழகிய சரீரங்களிலே
பரந்து நின்ற -என்று
ஆத்ம தயா வ்யாப்தனான ஈஸ்வரனுக்கு
ஜகத் சர்வம் சரீரம் தே -என்று ஜகத்தடைய சரீரமாய் இருக்கையாலே
உரு -என்று ஜகத்தைச் சொல்லுகிறது –

(பவான் நாராயண தேவ
ஸமஸ்காரா த்வத் பவன் வேதா -வேதங்கள் உன்னையே காட்டும்
நைன தத் த்வத் விநா -நீ இல்லாத ஒன்றுமே இல்லை
ஜகத் ஸர்வம் சரீரம் தே -அனைத்தும்
வஸூ தலம் தே -பூமி எல்லாம் நீயே)

த்யாஜ்யரான சம்சாரிகளை –ஏருரு -என்பான் -என் என்னில் –
முமுஷூவுக்கு சம்சாரம் தான்
பய ஸ்தானமாயும் இருக்கும்
உத்தேச்யமாயும் இருக்கும் –
கர்ம நிபந்தனமாகப் பார்த்தால் -பய ஸ்தானமாய் -இருக்கும் –
ஜகத் சர்வம் சரீரம் தே -என்று பகவத் சரீரத்வ ஆகாரத்தாலே பார்த்தால் -உத்தேச்யமாய் இருக்கும்

மூவருமே யென்ன நின்ற –
பஹூ நாயக ஜகத்து -என்கிறதை தவிர்த்து குறுக விட்டு வைத்தார்களே சிலர் -வேதாந்திகள்
ஆராத்யராய்த் தோற்றுகிறவர்கள் அடைய நிஷேதிக்க வேண்டாதே
நமக்கு நிஷேத்யர் இவராம்படி பண்ணித் தந்தார் -என்கை –

பூர்வ காண்டத்திலே –
த்ரிம் சச்ச தேவா நாவச ஸ்பர்யன் த்ரீணி சதாத் ரீஷஹஸ்ராண் யக்நிம்-(ரிக்வேதம் அஷ்டகம் )என்று
3339 தேவதைகளை அக்னி தேவதைக்கு  ஆஸ்ரயணீயாராகச் சொல்லக் கடவது இறே –

வேதாந்திகள் -காரணந்து த்யேய –ஜகத் காரண வஸ்துவே -ஆஸ்ரயணீம் -என்று இறே சொல்வது –
அதில் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்கு கடவார் மூவர் ஆகையாலே
இவர்கள் மூவருமே ஆஸ்ரயணீயர் -என்பார்கள் –

யென்ன நின்ற –
என்கையாலே -ஆபாத பிரதீதியிலே சாம்யம் தோற்றுகையாலே
ஆஸ்ரயணீயாராகத் தோற்றும் இத்தனை ஒழிய-
நிரூபித்தால் சாம்ய சம்பாவனையும் இல்லை -என்கை –

ஸ்ருஷ்ட்டி ஸ்திதி அந்தக் கிராணம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் சசம்ஜ்ஞாம் யாதி பகவநேக  ஜனார்த்தனா-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )
என்று ஆபாத ப்ரதீதியிலே சாம்யம் தோற்றுகையும் –
ஜனார்த்தனா -என்று
விஷ்ணு சப்தத்தோடு பர்யாய்சமான ஜனார்த்தன சொல்லுகையாலே
பரிஹ்ர்தமாகக் கடவது இறே -(இருவருக்கும் இவனே காரணம் என்றதாயிற்று )

விமையவர் –
இதுவும் ஒரு ப்ரம ஹேது –
அநிமிஷத்வாகாரம் ஒத்து இருக்கையாலும்
தேவ -சப்தத்தால் சொல்லுகையாலும்
சாம்ய பிரமத்துக்கு ஏகாந்தமாய் இருக்கை –
அநிமிஷத்வம் தேவாதி வர்க்கங்களுக்கு எல்லாம் பொதுவாய் இருக்கையாலும்
சாஷாத் தேவ புராணா சௌ -என்று
நிருபாதிக தேவத்வம் ஒரு வ்யக்தியிலே கிடக்கையாலும் –சாம்ய சம்பாவனை -இல்லை –

(ஆரண்ய பர்வதம் ஸுநகர் யுதிர்ஷ்டனிடம் சொல்வது
புண்யா துவாரகை -தத்ர மது ஸூதனன் – -ஸாஷாத் தேவன் புராணா சௌ –கிருஷ்ணன் தர்மம் ஸனாதந -)

தம் திரு வுரு வேறு எண்ணும் போது
அவ்வவர் உடைய ஸ்வபாவங்களைப் பிரித்து –
அனுசந்திக்கும் போது –
பிரம யோக்யதை உண்டு என்கை –

தமக்கு நிஷேத்யராய் இருக்குமவர்களைப் பற்றி –திரு உரு -என்று
ஸ்லாகித்துச் சொல்லுவான் -என் என்னில் –
அவர்கள் உடைய ஸ்வரூபத்தோபாதி –
அவர்கள் சரீரம் ஈஸ்வர சரீரம் ஆகையால் -தத்வாரா பேசுகிறார் –

வேறு எண்ணும் போது –
கூட அனுசந்திக்கும் போது இறே
இருவர் சேஷமாய் -ஒருவர் சேஷியாய் -இருப்பது –
அரிஅயன் அரன் என்னும் இவரை ஒன்ற நும் மனத்து வைத்து -என்னக் கடவது இறே –

உணர்ந்துஉணர்ந்து இழிந்துஅகன்று உயர்ந்துஉரு வியந்தஇந் நிலைமை
உணர்ந்துஉணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வுஅரிது உயிர்காள்!
உணர்ந்துஉணர்ந்து உரைத்துஉரைத்து அரிஅயன் அரன்என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்துஉரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.–1-3-6-)

(ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –திருவாய் மொழி-1-3-7-)

(நான்முகனை நாராயணன் படைத்தான் -யஸ்ய உபசேஷணம் -ருத்ரனையும் ஸம்ஹரித்தார் -பிரமாணங்கள் உண்டே)

(உலகு அளந்த அரி அதிகன் அயன் அயன் அதிகன் அதிகன் -அறிவிலிகள் கம்பர்)

(பொதுவான கேள்வி -ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ சஹஸ்ர நாமம் -பதில் இவனே -விஷ்ணவே ஜகத் பதிம்)

ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ –பிரம ஹேதுவான அசாதாரண ஸ்வபாவங்களைச் சொல்லுகிறது –
ப்ரஹ்மா வினுடைய ஸ்வபாவம் பொன்னின் ஸ்வபாவம் –
பொன்னாவது சர்வ ஆபரணங்களுக்கும் பண்ண யோக்யமாய் இறே இருப்பது –
அப்படியே சதுர் தச புவனங்களையும் ஸ்ருஷ்டிக்கைக்கு யோக்கியம் என்று தோற்றி இருக்கும் –
பத்தாத்ம சமஷ்டி பூதன் ஆகையாலே –
ஸ்வ சரீரத்தின் நின்றும் இறே -சகல பதார்த்தங்களும் உத்பன்னம் ஆவது –

ஓன்று செந்தீ –
ஒரு தத்தவத்தின் உடைய ஸ்வபாவம் காலாக்னி யினுடைய ஸ்வபாவம் –
அக்னிக்கு ஸ்வபாவம் சர்வத்தையும் தஹிக்கை இறே –
அப்படியே ருத்ரனுடைய ஸ்வபாவத்தைப் பார்த்தால் ஜகத்தை உபசம்ஹரிக்கைக்கு ஈடாக இருக்கும் –

யொன்று மா கடலுருவம் –
கண்டார்க்கு ஸ்ரமஹரமாய் இருக்கையும் –
துஷ்ட சத்வங்களோடு -அதுஷ்ட சத்வங்களோடு -ரத்நாதிகளோடு -வாசி அற
சகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே இட்டு வைத்து ரஷிக்கும் ஸ்வபாவம் இறே -கடலின் ஸ்வபாவம்

அப்படியே ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தைப் பார்த்தால் –
ஆஸ்ரயித்தாற்கு ஸ்ரமஹரமாய் இருக்கையும் –
ஆஸ்ரயித்தாரை தன் அபிமானத்தில் இட்டு வைத்து
மூன்றும் உண்டான இடத்தே இறே ஜகத் காரணத்வம் உள்ளது –

மூவர் பக்கலிலே மூன்று ஸ்வபாவமும் கிடைக்கையாலே
மூவரையும் ஜகத் காரணராய் பிரமிக்கலாய் இருக்கை –

ஒத்து நின்ற –
சேர்ந்து நின்ற –
அதாகிறது
அவ்வவ ஸ்வபாவங்கள் அவ்வவருடைய ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் உடன் சேர்ந்து இருக்கை –

அநந்தரம் -பிரம நிவ்ருத்தி -சொல்கிறது –
மூ வுருவம் கண்ட போது –
மூன்று தத்வத்தையும் பிரமாணத்தால் கண்ட போது –

ஒன்றாம் சோதி –
அவற்றில் வைத்துக் கொண்டு ஒன்றேயாம் சோதி –
உத்பாதகமாயும் –
சரீரியாயும் –
சேஷியாகவும் -இருக்கும் –

எங்கே கண்டோம் -என்னில் –
ஏகோஹவை நாராயண ஆஸீத் -என்று ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி –
ந ப்ரஹ்ம நேசாந நேமேத்யாவா பர்த்வீ (மஹா உபநிஷத் )–என்று
அசேதனமான ப்ரத்வ்யாதிகளோபாதி
ப்ரஹ்ம ருத்ராதிகளையும் சம்ஹாரத்திலே கர்மீபவித்து
சொல்லுகையாலும் –

ஸ ப்ரஹ்ம ஸ சிவா ஸ இந்த்ர (தைத்ரியம் நாராயண வல்லி )-இத்யாதிகளாலே
இவர்களுடைய ஷேத்ரஞ்ஞ்த்வ சேஷத்வத்தைச் சொல்லுகையாலும்

ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா (ஸூ பாலா உபநிஷத் ) – என்று
சர்வ சப்தத்தாலே க்ரோடீ க்ர்தமான வ்யாப்ய பதார்த்தங்களிலே
அந்ய தமராகையாலும் –
கார்யத்வமும்
ஷேத்ரஞ்ஞத்வமும்
சரீரத்வமும்
சம் பிரதிபன்னம் -என்கை –

ஆம் சோதி -என்கையாலே
நிர்வாஹ்ய ஜ்யோதிஸ் ஸூக்களான -ஆத்மாக்களை -வ்யாவர்த்திக்கிறது –
சேதனரும் ஸுவயம் பிரகாசமாய் இறே இருப்பது –
ஆகையால் இறே
நாராயண பரோஞ்சோதி -(தைத்ரியம் நாராயண வல்லி)என்றும் –
ஜ்யோதிஷாம் ஜ்யோதி -(ப்ருஹதாரண்யம் )என்றும்
சொல்ல வேண்டிற்று –

மூ வுருவும் கண்ட போது ஒன்றாம் ஜோதி -என்கிறது –
ஏக த்ரவ்யாதிகளுக்கு சேருமா போலே இருக்கும் –
இது இவருக்கு தர்சனம் அல்லாமையாலே பஷம் அல்ல –

இன்னமும்
மின்னுருவாய் –என்றும் –பின்னுருவாய் -என்றும் –பொன்னுருவாய் -என்றும்
தத்வ த்ரயங்களை அகலகல பிரித்துச் சொல்லுகையாலும் –
இப் பாட்டிலே –ஏருரு -என்றது சரீர ஆத்ம பாவங்களைச் சொல்லுகையாலும்
இந்த்ரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை -என்று மேலே (4 பாசுரம் )சொல்லுகையாலும்
பிரகரண விரோதம் உண்டு –

முகிலுருவம் எம் அடிகள் உருவம் –
எம் அடிகள் உருவம் -முகில் உருவம் –
என் ஸ்வாமிகள் உடைய வடிவு -காள மேக நிபஸ்யமாய் இருக்கும் –
அங்கு -ரஷகன் -என்கைக்காக –ஓன்று மா கடல் உருவம் -என்று கடலின் ஸ்வபாவத்தைச் சொல்லிற்று
இங்கு வடிவைச் சொல்லுகிறது –
இவ் வடிவு இறே சர்வாதிகத்வத்துக்கு அடையாளமாய் இருப்பது -(நீல தோயதா மத்யஸ்தா )

(உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10 )

தானே –
மணி வுருவில் பூதம் ஐந்தாய் -என்ற வடிவு தான்
காள மேக நிபாச்யாமமாய் கிடீர் இருப்பது –
அங்கு –மணி யுரு -என்று சொல்லிற்று –

1-முந்தானையில் முடிந்து ஆளலாம் படி -பவ்யமாய் இருக்கை யாலும் –
2-பிரகாசகமாய் இருக்கை யாலும் –
3-மஹார்க்கமாய் இருக்கையாலும் –
4-போக்யமாய் இருக்கையாலும் –

ஏருருவில் மூவருமே யென்ன நின்ற இமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது–
ஓருருவம் பொன்னுருவம் -ஓன்று செந்தீ -ஓன்று மா கடல் வுருவம் -ஒத்து நின்ற –

மூ வுருவும் கண்ட போது பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற–

ஒன்றாம் சோதி முகில் வுருவம் -எம் அடிகள் உருவம் -தானே –

என்று அந்வயம் –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading