திரு நெடும் தாண்டகம்–பிரவேசம் –பாசுரம் -1 –மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பிரவேசம் –

(ஆழ்வார்கள் பதின்மரில் இந்த )ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேல் கணார் கல்வியே கருதி –என்று
சர்வேஸ்வரன் விபூதி அடைய இவர் துடைக்கு கீழே கிடக்கிறதோ வென்று
சங்கிக்க வேண்டும்படி -அதிசய அஹங்காரராய் –

(வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4-)

அதுக்கடியான
தேகாத்ம அபிமானத்தை உடையவராய் –
அத்தாலே -சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் இன்ப வெள்ளம் தாழ்ந்தேன் -என்கிறபடியே
ஆத்ம விஷயம் ஆதல்
ஈஸ்வர விஷயம் ஆதல்
ஜ்ஞானம் பிறக்கைக்கு(த்யாஜ்ய உபாதேய விவேக ஞானம் )யோக்யதை இல்லாதபடி (ஸப்தாதி)விஷய ப்ரவணராய் போந்தார் ஒருவர்(ஆத்மாவை வெய்யிலே வைத்து வாழ்ந்த படி )

(சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே  உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே -6-3-4-)

சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை
சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு
(திரு மந்த்ரம் உபதேசித்த போது )தன் அழகைக் காட்டிக் கொடுக்கக் கண்டு –

(பிள்ளை உறங்கா வல்லி தாஸருக்கு அவர் தோற்ற கண் அழகையே பற்றாசாக-தன் பால் ஆதரம் பெருக வைத்த அழகனான -பெரிய பெருமாள் இடம் கூட்டிச் சென்று திருப் பாண் ஆழ்வாருக்குக் காட்டி அருளிய
கரிய வாகிப் புடை பெயர்ந்து –நீண்ட -அப்பெரிய வாகிய கண்களைக் காட்டி மீட்டிக் கொண்டது போலவே)

அத்தைக் கண்ட இவர் -ரசிகர் ஆகையால் இவர் அளவு கடந்து ஈடுபட்டு -வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று-இவர் அருளிச் செய்தபடியே
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் –

(இவர் ஈடுபாடு -அந்த அழகின் போக்யதையால் -இனிமையால்-இன்று வந்தது போல் அன்றியே
நித்ய ஸூரிகளைப் போல் ஆதியிலேயே தொடங்கி அனுபவிப்பார் போல் அவஹாஹித்தார்)

(வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7-)

ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
(நம் இனிமையால் மாத்திரமேயால் உண்டானதாக இருக்க ஒண்ணாது என்று )சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –

(குண க்ருத தாஸ்தத்தை விட ஸ்வரூப பிராப்தி தாஸ்யம் ஸ்ரேஷ்டம் அன்றோ –

அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யத்வம் அநந்ய போக்யத்வம் -மூன்றையும் மாத்ரம் அல்லாமல்
1-எம்பெருமானுடைய பெருமை -ரக்ஷகத்வாதி சேஷ்டிதங்கள்
2-நவ வித சம்பந்தம்
3-ஸுலப்யாதி குணங்கள் –
4-சரம நிலையான இதம் பூர்ணம் -ஸர்வஸ்ய பூர்ணம் -அர்ச்சாவதார தேசங்கள் –
அனைத்தையும் காட்டக் கண்டாரே-ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவாரோ என்னும் படி அர்ச்சையிலேயே மண்டினாரே )

வாடினேன் வாடி -(குடந்தை தஞ்சை தொடங்கி) தொடங்கி
ஒரு நல் சுற்றம் -அளவும்-(35 திவ்ய தேச மங்களா ஸாஸனம்)—விரிவாக அனுபவித்து
உகந்து அருளின இடமே
ஆஸ்ரயணீயமும் -சாதனமும் -போக்யமும் –
என்று அனுபவித்தார் –

(ஆஸ்ரயிக்கத்தக்கவை
பரமபுருஷார்த்த ஸாதனம்
இனிமை -அனைத்தும் திவ்ய தேசங்களே என்று மண்டினார்)

(வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-1-

ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே யொழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே–10-1-1-)

இப்படியே இவர் திருப்பதிகளிலே மண்டி அனுபவிக்கிறபடியைக் கண்டு –
இவ்வனுபவம் அவிச்சின்னமாம் படி -ஒரு தேச விசேஷத்தே கொடு போக வேணும்
அதுக்காக சம்சாரத்தின் உடைய தண்மை அறிவிப்போம் என்று பார்த்து -அத்தை அறிவிப்பிக்க
பீத பீதராய் –
மாற்றமுளவிலே(11-8)
இருபாடு உறு கொள்ளி யினுள்ளே எறும்பே போலே- என்றும்
ஆற்றங்கரை வாழ் மரம் போலே அஞ்சுகிறேன் -என்றும்
பாம்போடு ஒரே கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இப்படி தம்முடைய பயத்துக்கு அநேகம் த்ருஷ்டாந்தங்களைச் சொல்லிக் -கூப்பிட்டார்-

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் என்று பிரதமத்திலே நம்மாழ்வார்

உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்து என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4-

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்  கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா —11-8-3-

காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல் ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா -11-8-2-

வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி  முதல்வா -11-8-5-

இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே அடைய வருளாய் எனக்கு உன் தன் அருளே  -11-8-6-

மா மழை மொக்குளில் மாய்ந்து மாய்ந்து -இத்யாதி )

இவர் கூப்பிடச் செய்தேயும்
பிரஜை கூப்பிடா நிற்கச் செய்தேயும் ஆமம் அற்று பசிக்கும் தனையும் சோறு இடாத தாயைப் போலே
தன்னை அனுபவிக்கு ஈடான விடாய் வளருவதற்கு ஈடாக
ஈஸ்வரன் முகம் காட்டாது ஒழிய
ஒரு ஷணமும் தரிக்க மாட்டாது -பெரு விடாய் பட்டார் –

(இவ்வாறு ஏழு படிக்கட்டுக்கள் -பெரிய திருமொழி அவதரித்து நிகமித்து பரம பக்தி நிலையில் -பிரிந்தால் தரிக்க மாட்டாமை)

நீரிலே விழுந்து நீரைக் குடிப்பது
நீரையே ஏறிட்டுக் கொள்ளுவதாப் போலே
அவனை வாயாலே பேசியும்
தலையாலே வணங்கியும்-
நெஞ்சாலே நினைத்தும்-
தரிப்போம் என்று பார்த்து
அதிலே உபக்ரமித்தார் -திருக் குறும் தாண்டகத்தில்-

(மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே

மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –3-

வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே-4-

வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக் கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே–5-

உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-)

பெரு விடாயர் குடித்த தண்ணீர் ஆறாதே மேலும் விடாயைப் பிறப்பிக்குமா போலே
அது பழைய அபிநிவேசத்துக்கு உத்தம்பகமாய்-(உத்தம்பகம்–கிளப்புகை )
திரு வெழு கூற்று இருக்கையிலே (ரத பந்தனம் )-நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகலமாற்றோ வினையே -என்று
ஆர்த்தராய் சரணம் புக்கார்

(செல்வம் மல்கு தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே )

அநந்தரம் அபேஷிதம் பெறாமையாலே கண்ணாம் சுழலை இட்டு
பெருமாள் முந்துற கடலை சரணம் புக்கு அவன் முகம் காட்டா விட்டவாறே
(உப்புக் கடலை கருணைக் கடல் சரணம் அடைந்து கார்ய கரம் ஆகாமல் )சாபமாநய சௌமித்ரே -என்று
கொண்டு வா  தக்கானை -என்னுமா போலே
(ஸ்வரூபத்துக்கு விரோதமான செயலான )வழி அல்லா வழியே மடலூர்ந்து –
இரண்டு தலையும் அழித்தாகிலும் முகம் காட்டு வித்துக் கொள்ளுவோம் -என்று
மடல் எடுக்கையில் உபக்ரமித்தார் –

அதில் -சிறிய திருமடலில்
அவன் ஐஸ்வர்யத்தையும் (பரத்வத்தையும் )-
தேவும் தன்னையும் –என்று
தானான தன்மையாய் அபிமானித்து இருக்கும்
அவதாரங்களில்
உண்டான நீர்மையையும் (கிருஷ்ணாவதார நீர்மையில் ஸீமா பூமியையும் )அழிக்கிறேன் -என்றார் –

(கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-)

அதுக்கும் முகம் காட்டிற்று இலன் –
அதுதான் பர தசை என்னும்படி நீர்மைக்கு எல்லை நிலமான கோயில்களும் உண்டு இறே
என்று இருந்தான் -என்று கொண்டு
அவனுக்கும் தமக்கும் வைப்பான கோயில்களில் உண்டான நீர்மையையும்
அழிக்கிறேன் -என்றார் பெரிய திருமடலிலே –

இனி முகம் காட்டாது ஒழியில்
ஜகத்து அநீஸ்வரமாம் என்று பார்த்து –
ப்ரஹ்லாதிகளுக்கு முகம் காட்டுமா போலே
இவருக்கு முகம் காட்டி
தானும் இவரும் ஜகத்தும் உண்டாம்படி பண்ணினான்-(இந்த பிரபந்தத்தில் )

(ப்ரஹ்லாதன் ஹிரண்யன் -சேதனங்கள் பல -தூண் போல் அசேதனங்கள் பல -தானும் இவரும் ஜகத்தும்-தத்வ த்ரயம்
பரமாத்மா -ஸர்வ வியாப்தி -ஸர்வ நியந்தா என்பதைக் காட்டி அருளி-ஈஸ்வர சீல நாராயண -பகவத் சங்கரர் )

சுகாதிகளும் முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
சனகாதிகளும் திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
வால்மிகீகாதிகளும் குலசேகரப் பெருமாளும் ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
பராசர பாராசாராதிகளும் -நம் ஆழ்வாரும் பெரியாழ்வாரும் ஆண்டாளும் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் திருப் பாண் ஆழ்வாரும் கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –

(கோயிலும் அர்ச்சாவதாரமாக இருக்க
அத்தையும் பரத்வாதிகளோடே கூட்டினது
ஸ்வயம் வ்யக்தமாகையாலும்
எல்லாவற்றுக்கும் வேர்ப் பற்றாகையாலும்
அவற்றோடே கூட்டிற்று-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமல் ஆள்கின்ற எம்பெருமான் -பூ லோக வைகுண்டம் அன்றோ

ஸதாத்யாதி-ஷீராப்தி நாதனை -நாரதர் பகவான் ஸ்துதி -வியூஹ ஸுஹார்த்தம் கோயிலிலே பிரஸித்தம் அன்றோ )

அல்லாத ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ஸ்லேஷாசஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது –
விஸ்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ஸ்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ஸ்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –

(கீழே வக்த்ரு வை லக்ஷண்யம் சொல்லும் இடத்தில்
ஸ்வ யத்ன லப்த ஞானாதிகரான ரிஷிகளில் வியாவருத்தி சொல்லிற்று
இங்கே
ஆழ்வார்களைப் பற்ற இவருக்கு உண்டான ஸுகுமார்ய அதிசயத்தை அருளிச் செய்கிறார்

பிரணய கலஹத்தாலே கிலாய்த்துச் சொல்லும் பாசுரம் அடைய
ஆழ்வார் தாமான தன்மையிலே சொல்லலாம் படி யான பாவம் பிறந்து

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே —4-9-6-

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9- )

(மலையாள ஊட்டு –
உண்டாலும் ஓரு காலே பத்து எட்டு நாளைக்கு உண்ணவுமாய்
பட்டினி இருந்தாலும் பத்து எட்டு நாளைக்கு இருக்கவும் வல்லராகை )

ஆக
எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
அனுபவத்து –
அதனில் பெரிய என் அவா -என்று
தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே
அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்
அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் –
இப் பிரபந்தத்தில்-

(சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

மின்னுமா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய், என்று,
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
மன்னு மா மணிமாட வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல்
தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லர் தாமே.–30)

——————————————————————-

அவதாரிகை –
முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தி தொடக்கமாக
திருவடிகளோட்டை சம்பந்தம் பர்யந்தமாக
சாஷாத் கரிப்பித்த உபகார பரம்பரைகளைப் பேசுகிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

பதவுரை

முன் உருவில்–முன்னே யுள்ள (கண்ணாற் காணத் தக்க) பிராகிருத பதார்த்தங்களில்
மின் உரு ஆய்–மின்னின் தன்மையைக் காட்டிக் கொடுத்தவனாய்
வேதம் நான்கு ஆய்–நால் வேதங்களையும் உபகரித்தவனாய்
விளக்கு ஒளி ஆய்–இருளை அகற்றும் விளக்கொளி போலே அஜ்ஞான அந்தகாரத்தைப் போக்கித் தன் ஸ்வரூபத்தை ப்ரகாசிப்பித்தவனாய்
முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய்–(மலையில்) தோன்றி (ஆகாசத்திலே) கிளம்பின சந்திரனைப் போலே
ஆஹ்லாதகரமான ஞானத்தை எனக்குக் கொடுத்தவனாய்,
பின் உரு ஆய்–இருபத்தினான்கு தத்துவங்களுக்குப் பிற்பட்ட தத்துவமாகி
முன் உருவின் பிணி மூப்பு இல்லா பிறப்பு இலி ஆய்–முன்னே தோன்றுகிற பிராகிருத வஸ்துக்களுக்குப் போலே
வியாதியும் கிழத்தனமுமின்றியே பிறப்பு மில்லாதவனான ஜீவாத்மாவுக்கு நிர்வாஹகனாய்
இறப்பதற்கே எண்ணாது–கைவல்ய மோக்ஷத்தை ஆச்ரிதர்கட்குக் கொடுக்க நினையா தவனாய்
எண்ணும் பொன் உரு ஆய்–எண்ணத் தக்க பொன் போன்ற ஸ்வரூபத்தை யுடையவனாய்
மணி உருவின் பூதம் ஐந்து ஆய் புனல் உரு ஆய்–திவ்ய மங்கள விக்ரஹத்திலே பஞ்சோநிஜந்மயனாய்
புனல் உரு ஆய்-தண்ணீர் போலு ஸர்வ ஸுலபனாய்
அனல் உருவின் திகழும்–அக்னி போலே ஒருவர்க்குங் கிட்ட வொண்ணாத வடிவை யுடையனாய்
சோதி தன் உரு ஆய்–ஸ்வயம் ஜ்யோதிஸ் ஸ்வரூபனாய்
என் உருவில் நின்ற–என் சரீரத்திலே நின்றவனாய்-ஸ்ரீ ரெங்க நாத மம நாத போல்
எந்தை-எனக்குத் தந்தையான ஸர்வேச்வரனுடைய
தளிர் புரையும் திரு அடி–தளிர் போன்ற திருவடிகள்
என் தலை மேல–எனது தலையிலே இரா நின்றன;
ஏ-ஆச்சரியம்!

முன்னுருவில்—முன்னே உள்ள -கண்ணால் காணத் தக்க ப்ரக்ருதி பிராகிருத பதார்த்தங்களில்
மின்னுருவாய் –மின்னுடைய அஸ்த்தைர் யத்தைப் பிரகாசிப்பித்தவனாய்
வேதம் நான்காய் -நான்கு வேதங்களை உஜ்ஜீவன அர்த்தமாகத் தந்து அருளினவனாய்
விளக்கொளியாய் -விளக்கு ஒளி இருளை நீக்குமா போலே அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி தன் ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தவனாய்
முளைத்தெழுந்த திங்கள் தானாய்,–மலையில் தோன்றி ஆகாசத்தில் கிளம்பின சந்திரனைப் போலே ஆஹ்லாத கரமான ஞானத்தை எனக்குக் கொடுத்தவனாய்–ஸ்ரவண மனன நிதித்யாஸந ஸாஷாத் கார ப்ரதனாய்
பின்னுருவாய் -பின்னான இருபத்தைந்தாவது தத்வமாய்
முன்னுருவில் பிணி மூப் பில்லாப் பிறப்பிலியாய் -முன்னே தோன்றுகிற பிராகிருத துக்கம் வியாதி கிழத்தனங்கள் இல்லாதவனாய்
பிறப்பிலியாய்-ஜென்மமும் இல்லாத ஆத்மாவுக்கும் நிர்வாஹகனாய்
இறப்பதற்கே எண்ணாது, –மரணத்தை -கைவல்யத்தை ஆத்மாவுக்கு கொடுக்க எண்ணாதவனாய்
எண்ணும்-எப்போதும் மனனம் பண்ணுகைக்கு யோக்யமான
பொன்னுருவாய் -பொன்னினுடைய ஸ்வ பாவத்தை யுடையவனுமாய் –
மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் —ஜலம் போலே சர்வ ஸூலபனாய்
அனலுருவில் –அக்னி போலே ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத வடிவை யுடையவனாய்
திகழுஞ் சோதி,–ஸ்வயம் ஜ்யோதிஸ் ஸ்வரூபனாய்
தன்னுருவாய் –என் சரீரத்தில் நின்றவனாய்-ஸ்ரீ ரெங்க நாத மம நாத போல்
என்னுருவில் நின்ற எந்தை -எனக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய
தளிர் புரையும் திருவடி யென் தலை மேலவே.-தளிரை ஒத்த திருவடிகள் என் தலையிலே இரா நின்றனவே

(தத்வ ஞானம் மோக்ஷ லாபம் அஞ்ஞானத் ஸம்ஸாரம்-தத்வம் ஹதம் புருஷார்த்தம் அனைத்துமே இப்பாசுரத்தில் உண்டே

ஆய் -ஸாமாநாதி கரண்யம் -தானே உலகாகி தனக்குள்ளே தான் அடங்கி -விஸிஷ்ட அத்வைதம் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்

திருநெடும் தாண்டக ஸாஸ்த்ரம் அன்றோ -அனைத்தும் உண்டே )

(மின்னுருவாய் முன்னுருவில் -அசேதன தத்வம்
வேத நான்காய் விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்-ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் ஸாஷாத் கார ப்ரதனாய்

பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப் பிறப்பிலியாய் -சேதன தத்வம்
இறப்பதற்கே எண்ணாது -கைவல்ய மோக்ஷம் அளவில் நில்லாமல்
எண்ணும் பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய் புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்–ஈஸ்வர தத்வம்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே-பரம புருஷார்த்தம் -சேதன லாபம் ஈஸ்வரனுக்கே -)

மின்னுருவாய் முன்னுருவில் –
முன்னுருவில் மின்னுருவாய் –
பிரத்யஷ -பரித்ர்ஷ்டமான பதார்த்தங்களில் –
மின்னின் உடைய ஸ்வபாவத்தை பிரகாசிப்பித்தான் –
அதாவது –
பிரத்யஷ பரித்ர்ஷ்டமான -பிரகிருதி ப்ராக்ருதங்களின் அஸ்த்ரையத்தை பிரகாசிப்பித்தான் -என்கை –

(மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்)

இப்பிரக்ருதி சேதனனோட்டை சம்பந்தத்துக்கு ஹேது பேதம் உண்டான போது –
இதுக்கு ஸ்வபாவ பேதம் உண்டாகக் கடவது –

ஹேது பேதம் -ஆவன –
1-கர்மத்தால் பந்திக்கையும் –
2-கிருபையால் பந்திக்கையும்
3-இவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளுகையும்
4-மற்று உள்ளார்க்கு ஜாயமான கடாஷம் பண்ணுகையும் –

அதாவது –
கர்மத்தால் பந்தித்த போது -ஆத்ம பரமாத்ம ஸ்வரூபங்களுக்கு திரோதாயகமாய் இருக்கையும் –
தன் பக்கல் -அஸ்த்ர்யத்தையும் அபோக்யதையும் மறைத்து
ஸ்த்ர்யத்தையும் போக்ய புத்தியையும் பிறப்பிக்க கடவதுமாய் இருக்கும்-

பகவத் பிரசாதத்தாலே பந்தித்த போது
ஸ்வ விஷயத்திலும் ஸ்வ கீயங்களிலும் கிடக்கிற
அஸ்த்ரையத்தையும் அபோக்யதையையும் பிரகாசிக்கக் கடவதாய்
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபங்களையும் பிரகாசிப்பிக்க கடவதாய் இருக்கும் –

இப்போது
பகவத் பிரசாதம் அடியாகையாலே
பிரகிருதி பிராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசிப்பித்தது
த்யாஜ்யதா பிரதிபத்தி உண்டாய்த்து -என்கை –

விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ர்தா -என்றும்
சரீர மாத்ரம் கலு தர்ம சாதனம் (குமார சம்பவம் )-என்றும் –
புருஷார்த்த சாதனம் என்றும்-
தர்மத்துக்கு பிரதான உபகரணமான பிரக்ருதியாதிகளை த்யாஜ்யம் என்னக் கடவதோ -என்னில் –
போஜநார்த்தமாக அங்கீ கரித்த கலமும்
போஜன அநந்தரம் அஸ்பர்சமாப் போலேயும் –
அவப்ர்த ஸ்நான அநந்தரம் யூபாதிகள் அஸ்பர்சமாப் போலேயும்
இதுவும் கார்ய அநந்தரம்-ஜ்ஞானம் பிறந்த பின்பு – த்யாஜ்யமாகக் கடவது –

மின்னுருவாய் -என்ற
சாமாநாதி கரண்யம் -உபகார்யா உபகார பாவ சம்பந்த நிபந்தனம் –

(மின்னுருவாய்– எந்தை சொல்லலாமோ என்னில் -விசேஷ்யம்-விசேஷணம் -ஸாமாநாதி கரண்யம் – நீலோ வாயும் வயிறுமான குடம் –
இவை எல்லாமாயும் இருக்கிறான் -அந்த ஆகாரத்தை எனக்குக் காட்டி அருளினான் என்றபடி-இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -தத்வ த்ரயம் )

இப்படி இவை அஸ்தரம் ஆனால் அநந்தரம் ஸ்திரமான ஆத்ம வஸ்துவே-ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

அஹம் -என்று பிரத்யஷிக்கிற ஆத்ம வஸ்துவை
தேஹம் என்பார்
இந்த்ரியம் என்பார்
மனஸ் என்பார்
பிராணன் என்பார்
புத்தி என்பார்
இப்படி பண்ணுகிற விப்ரதிபத்தி -சமித்து யதா ஜ்ஞானம் பிறக்கைக்கு
சாஸ்திர அபேஷை உண்டாகையாலே
சாஸ்திர பிரதானம் பண்ணினார் -என்கிறார் மேல் –

வேத நான்காய் –
ஆத்மாவின் உடைய யாதாம்ய பிரதிபாதன பரமான வேதங்கள் நான்குமாய் –
வெறும் ஆத்மா பரமயோ வேதங்கள் என்னில் -தத்வ த்ரயத்தையும் பிரதி பாதியா நிற்க –
அல்லாத தத்வ த்யவமும் இவனுக்கு இன்னது த்யாஜ்யம்
இன்னது உபாதேயம்
என்கைக்காக பிரதிபாதிக்கப் படுகிறது இத்தனை ஒழிய
ஆத்ம பரமேயாகக் கடவது –

(ஆத்மா ஞான மயம் ஆனந்த மயம் எம்பெருமானுக்கே சேஷமாக இருப்பவன் என்று வேதம் நான்காய் உள்ள எந்தை காட்டிக் கொடுத்தான் அன்றோ)

(ஸாஸ்தா -ஸாஸ்த்ரம் -சேதனனுக்கு அறிய வேண்டியதை உபதேசிக்கும் -பற்ற வேண்டிய ஈஸ்வரனையும் விட வேண்டிய அசேதனங்களையும் சொல்லி உபதேசம்-ஆத்ம பரமேயாகக் கடவது – என்றவாறு)

ஆனால் த்யாஜ்ய உபாதேயங்களைச் சொல்ல அமையாதோ –
ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என் என்னில் –
த்யாஜ்ய உபாதேயங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் (நிச்சயத்துக்கு ஹேதுவான விஷயம் )ஸ்வரூபம் ஆகையாலே
ஸ்வரூப அனுரூபமான த்யாஜ்யம் இன்னது
ஸ்வரூப அனுரூபமான உபாதேயமின்னது -என்று அறியும் போது
ஸ்வரூபத்தை அறிய வேணும் இறே –

ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் இல்லாத போது
சரீர மாத்ரம் த்யாஜ்யமாய்
புத்திர பசு அந்நாதி மாத்ரம் உத்தேச்யம் ஆதல் –

சரீர வியதிரிக்தம் ஆத்மாவான போது
புத்திர பசு அந்நாதிகள் த்யாஜ்யமாய்
ஸ்வர்க்கம் உத்தேச்ய மாதல் செய்யும் இறே-

சாஸ்திர அபேஷை சேதனனுக்கே ஆகையாலே சேதன பரமாகக் கடவது –
ஈஸ்வரன் ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆகையாலும்
அசித் தத்வம் ஜடம் ஆகையாலும் சாஸ்திர அபேஷை இல்லை –

இனி சாஸ்திர வச்யனுமாய் -ஜ்ஞாதாவுமான சேதனனைப் பற்றி -சாஸ்திரம் உதிக்கக் கடவது –
வேதம் பிரதிபாதிக்கிற மாத்ரம் அன்றிக்கே வேதம் உண்டாக்கினதும் இவனுக்கே –
இவ்விடத்தில் ஸ்வார்த்த பிரகாசத்வத்தைப் பற்ற -ஸ்ருதி -மறை -என்னாமல் –வேதம் -என்கிறது –

(வேதயதி இதி வேத -அறிவிக்கும் -தெளிவிக்கும்)

பிரகாசம் உண்டோ என்னில்
மறையாய நால் வேதம் -என்கிறபடியே
தன்னை அதிலங்கித்தார்கு ஸ்வார்த்த திரோதாயகமாயும்
தன் பக்கலிலே புபுத்ஷூக்களுக்கு -ஸ்வார்த்த பிரகாசமாயும் இருக்கும் –
போத்தும் இச்சு புபுத்ஷூ -அறிய வேணும் என்கிற இச்சை உடையவன் -என்றபடி –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்க்கு அரிய வித்தகன் -என்கிறபடியே
பிரமேய ஸ்வ பாவம் பிரமாணத்துக்கும் உண்டாய் இருக்கும் -என்கை –

(மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,*
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறை ஆதல் அறிந்து ஏத்த* வீற்றிருத்தல் இது வியப்பே?)

(வேதம் என்றாலும் மறை என்றாலும் பர்யாயம் எனினும் அர்த்தஸக்தியில் வாசியுண்டு; வேதம் என்றால் விளங்கக்காட்டுவது என்று பொருள்;மறை என்றால் மறைத்துக் காட்டுவது என்று பொருள். ஆஸ்திகராயிருப்பாருக்குத் தன் அர்த்தங்களை வெளியிட்டு காட்டுதலால் வேதம்; பாஹ்யராய் நாஸ்திகரா யிருப்பார்க்கு மறைத்தலால் மறை; ஆகவே, மறையாய நால்வேதமென்றது தகுதியே. “துஷ்ப்ரக்ருதிகளுக்கு மறையாய் ஸத்ப்ரக்ருதிகளுக்கு வேதமாயிருக்கும்”)

(பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் ! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே 1-3-1)

இங்கு வேதம் நான்கு -என்கிற சாமாநாதி கரண்யம் –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய – என்று
பிரதிபாத்ய பிரதிபாதிக பாவ சம்பந்த நிபந்தனம் அன்று –
மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
பிரதார்த் பிரத்தேய பாவ சம்பந்த நிபந்தனம் –

(ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே)

(ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–1-

(தயாளுவான-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள் அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்
பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் ––
பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து-ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்–
சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில் வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் )

அநந்தரம் இந்த சாஸ்திர ஜன்யமான ஜ்ஞானத்தையும்
எனக்கு உண்டாக்கினான் -என்கிறார் –
விளக்கொளியாய் –
விளக்கு ஒளியின் ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –
விளக்கொளி -என்றது சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
அதாகிறது -தீபமாகிறது அந்தகாரத்தைப் போக்கி பதார்த்தங்களைப் பிரகாசிப்பிக்குமா போலே
அஞ்ஞானத்தைப் போக்கி ஸ்வரூபத்தை பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கை –
அந்தம் தம இவா ஜ்ஞானம் தீபவஸ் சேந்த்ரிய உத்பவம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்று
ஸ்ரவண ஜ்ஞானத்தை தீபமாகச் சொல்லக் கடவது இறே –

ஹர்த்தும் தமஸ் சதஸ தீவ விவேகத்து மீசோ மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி-என்னக் கடவது இறே-
இத்தால் -ஸ்ரோதவ்ய -என்று சொல்லுகிற ஸ்ரவணத்தை சொல்லிற்றாய் யாய்த்து –

முளைத்து எழுந்த திங்கள் தானாய் –
என்று -மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷடவ்ய -என்கிற
மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –

(ஸ்ரோதவ்ய -மந்தவ்ய – நிதித்யாஸி தவ்ய -த்ரஷ்டவ்ய-ப்ருஹதாரண்யம்–விளக்கொளியாய் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் )

முளைத்து –
பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே
தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும்
பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –

எழுந்து –
பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே
மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று

(விளக்கு ஒளியாய் திங்கள் தானாய் -என்கிற இத்தால்
ஸ்ரவண மனன நிதித்யசங்களாலே பரமாத்மாவைக் காணுமா போலே
இவற்றால் இங்கே ஜீவாத்மாவைக் காணும் படி சொல்கிறது

ஸ்வயம் பிரகாசம் -ஆனந்த மயம் -அவன் அருளால் அறியப் பெற்றேன் -என்றது )

திங்கள் தானாய் –
சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
தானான திங்கள் -என்று –
ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே
ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் –
பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று
நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –
நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே-
சாஷாத்காரம் சித்தித்ததாவது –
சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் –
சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே –
சதி ஆஹ்லாதே -என்கிறபடியே
ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும்
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே
அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –

யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை த்ருஷ்டாந்தித்தது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக –

பின்னுருவாய் –
பின்னான தத்வமாய் –
பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மாபவதி –
இருபத்தஞ்சாவது தத்வமான ஆத்மா சாஷாத்க்ர்த்யன் ஆகையாலே
சதுர்விம்சதி தத்வாத்மிகையான பிரகிருதிக்கு அவ்வருகாய் பிரிந்து தோற்றுகிறபடி –
தேகேந்த்ரிய மன பிராண தீப்யோன்ய அநந்ய சாதன
நித்யோவா பீப்ரதி ஷேத்ர மாத்மாபின்னஸ் ஸ்வதஸ் ஸூகி -(ஆத்ம ஸித்தி ஆளவந்தார் )
என்னக் கடவது இறே –

(ஸ்வயம் ப்ரகாஸம் -தானே ஒளிவிடும் -தர்ம பூத ஞானம் -நித்யம் -தேகம் முழுவதும் பரவி இருக்குமே –
பல ஜீவாத்மாக்கள் -இயற்கையில் ஆனந்த மயம் -ஞான மயம் -ஐந்தையும் சொன்னவாறு)

அநந்தரம் -இப்படிப் பட்ட ஆத்ம வஸ்து
வ்யாப்த கதமான தோஷங்களால் ஸ்பர்சிக்கப் படான் -என்கிறார் –
முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் –
முன்னுருவாகிறது -கீழே மின்னுரு -என்று கொண்டு சொன்ன
ப்ரத்யக்ஷ பர்த்ர்ஷ்டமான பிரகிருதி பிராக்ருதங்களை
அதில் உண்டான பிணி மூப்பு பிறவிகளோடு
ஸ்பர்சம் இல்லாத ஆத்ம வஸ்து –

பிணி -துக்கம் -இத்தால் அஞ்ஞாநாதிகளை உப லஷிக்கிறது –
மூப்பு பிறப்பு -என்கையாலே ஷட் பாவ விகாரங்களை உப லஷிக்கிறது –

(அஸ்தி -ஜாயதே -பரிணமிதே- விவர்த்ததே-அப ஷீயதே -விநஸ்யதே)

(ஆய்-இவையாவும் உள்ளான் -இத்தைக் காட்டிக் கொடுத்தான்)

நிர்வாண மய ஏவாய மாத்மா ஜ்ஞான மயோமலா (ஸ்ரீ விஷ்ணு புராணம்)-என்று(இன்பமே வடிவு எடுத்தவன் -ஞான மயன் -அழுக்கு அற்றவன் )
துக்காதிகள் பிரகிருதி தர்மமாய்
ஆத்மாவோடு சம்பந்தம் இல்லை -என்னக் கடவது இறே –

ஸவதஸ் ஸூகியாய் இருக்கிற ஆத்மாவுக்கு
துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதோவோபாதி
ஜடமான பிரக்ருதிக்கும் துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதே யாகிலும்
ஊமத் தங்காய் உடைய சம்சர்க்கத்தாலே ப்ரமம் வருகிறாப் போலே
பிரகிருதி சம்சர்க்கத்தாலே ஆத்மாவுக்கு துக்காதிகள் வருகையாலே
துக்காதிகள் பிரகிருதி தர்மமாகவே கடவது

இறப்பதற்கே எண்ணாது –
இறக்கை யாவது -மரிக்கை
மரணத்தை எண்ணாதே
கீழ் -ஷட் பாவ விகாரங்களிலே தேக அனுபந்தியான மரணத்தைச் சொல்லிற்று
இங்கே ஸ்வரூப அனுபந்தியான மரணத்தைச் சொல்லுகிறது -அதாகிறது
கைவல்யம் –

ஸ்வதஸ் ஸூகியான ஆத்மாவினுடைய அனுபவ ஸ்வரூபமாய்
தனியே ஒரு புருஷார்தமாய்
புனராவர்த்தி இல்லாத கைவல்யத்தை மரணம் என்னக் கடவதோ -என்னில்
மரணம் ஆகிறது
ஆத்மவியோகமாக லோகத்திலே பிரத்யஷியா நின்றது இறே –
இதுவும் அப்படியே
சாஷாத் ஆத்ம பூதனான பரமாத்மா வியோகத்தாலே மரணம் ஆகக் கடவது –

பிரத்யஷமாக ம்ர்தமான சரீரம் நஷ்டம் ஆகை போலே
இது நசியாமையாலே இத்தை மரணம் என்னலாமோ -வென்னில்
ஸ்வரூப அனுரூபமான போகம் இல்லாமையாலே
பர ஹ்ர்தயத்தால் மரணமாகக் கடவது –

(அவனை ஸதா அனுபவிக்கும் நித்யர் முக்தர் நினைவாலே இது மரணம் என்னக் குறையில்லையே

ஸ்வர்க்காதிகள் பலர் நினைவால் பலதரப்பட்டு இருக்குமே )

ம்ர்தோ தரித்ர புருஷ -என்று
போக்தாவானவன் தரித்ரனை ம்ர்தன் ((ஏழையான மனிதன் செத்தவனே))என்னுமா போலே
இந்த கைவல்யம் அந் நாதனுக்கு மரணமாகத் தோற்றுகையாலே-மரணம் –என்கிறது –

(அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -தைத்ரியம்
போக்யமாக இருந்து -அவன் அனுபவிக்க அத்தைக் கண்டு போக்யமாக உகக்கும் –
பகவத் அனுபவ ஜெனித ப்ரீதிகார கைங்கர்யம் -செய்யும் நித்ய முக்தர்களுக்கு-மரணமாகத் தோற்றுகையாலே-மரணம் –என்கிறது -)

இதனைத் திருவாய் மொழியில் ‘இறுகலிறப்பு என்றது முணர்க.

எண்ணாது –
இத்தை தருகைக்கு எண்ணாதே போந்தான் –
ஜரா மரண மோஷாயா மாமாச்ரித்ய தந்தியே -(7-29-)என்று
இத்தை புருஷார்தமாகக் கொடுக்கக் கடவன் –
அவன் இப்போது இப்படி படு குழியில் விழாதபடி
இத்தை எனக்கு எண்ணாதே போந்தான் –

(ஜரா மரண மோக்ஷாய–மாமாஸ்ரித்ய யதந்தி யே ।–
தே ப்ரஹ்ம தத்விது₃: க்ருத்ஸ்நம்-அத்யாத்மம் கர்மசாகி₂லம் ॥–7-29-)

அவனது எண்ணம் கொண்டே நமக்கு ஜீவனம் ஆகையாலே
எண்ணாது -என்கிறார் –

இவ் வாபன் நிவ்ருத்தியை பண்ணினது மேலே
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தான் -என்கிறார் மேல்
எண்ணும் பொன்னுருவாய் -என்று
திவ்யாத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தான் -என்கிறார் –

எண்ணும் –
போக்யாதிசயத்தாலே
நேதி நேதி –(ப்ரஹ்மதாரண்யம்)என்கிறபடியே
அது அது -எண்ணும் இத்தனை போக்கி
இதம் -என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –

(உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 19 –

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,)

ஏகைக குணாவதீப்சயா சதா ஸ்திதா -என்று
ஒரோ குணம் தான் அபரிச்சின்னமாய் இருக்க
ஈத்ர்சமாய் அசங்கயாதமான குணங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை
பரிச்சேதிக்க ஒண்ணாது எண்ணும் இடம் சொல்ல வேணுமோ –

பொன்னுருவாய் –
பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –
3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –
4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –
உபாதான பூதங்கள் ஐந்தாய் –
மணி வுருவில் –
மணியின் ஸ்வ பாவாத்தை உடைத்தான வடிவில்
1-தேஜோ மயமாய் இருக்கையும்
2-மாணிக்கச் செப்பிலே பொன் போலே தனக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும்-தான் ஸூத்த சத்வம் ஆகையாலே பிரகாசமாய் இருக்கையும் –
3-தான் ஸ்வரூப குணங்களில் காட்டில் போக்யமாய் இருக்கையும் –
இதுக்கு உபாதான பூதமான பூத பஞ்சகம் ஆகிறது –பஞ்ச உபநிஷத்
ஒரு தேச விசேஷமாக பஞ்ச உபநிஷண் மயமாய் இறே இருப்பது –
பரமேஷ்டீ புமான் விச்வோ நிவ்ர்த்தஸ் சர்வ ஏவஸ-

(பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.
இவ்வுலகம் ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டது போன்று, அவ்வுலகம் பஞ்ச
சக்திகளாலாயது என்பர்.)

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –என்று
திரோதாயகமாய் இருந்துள்ள சரீரத்துக்கு உபாதான பூதமான பூதங்களை(பகவத் ஸ்வரூப திரோதான கரீம் )வ்யாவர்த்திக்கிறது
அதவா
மணி வுருவிலும் வர்த்திக்க கடவதாய்
ப்ராக்ர்தமான பூதங்களிலும் வர்த்திக்கக் கடவனாய் இருக்கை –
இத்தால்
அசாதாரணமான விஹ்ரகதோபாதி இவையும் விதேயம் -என்கை –
பத்தனோடு பந்தகத்தோடு வாசி அற
இரண்டும் விதேயமாக வேணும் இறே விமோசகனுக்கு –
பிரதான புருஷேச்வர -(ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் )என்னக் கடவது இறே-

இப்படி விலஷணமாய் இருக்குமவன் துர்லபமாய் இருக்குமோ வென்னில் –
புனல் வுருவாய் –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற
ஒரு துறையிலே விநியோகம் கொள்ளலாய் இருக்கும் ஜலம் போலே  -என்க-

இப்படி சர்வ ஸூலபன் ஆனால் என் வருகிறதோ என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி
ஆஸ்ரித ஸூலபனானோபாதி
பிரதிகூலர்க்கு அக்னி போலே அநபிபவனாய் இருக்கும் என்கிறார் -மேல் –
அனலுருவில் திகழும் –
அபித பாவ கோப மம் -என்று
நினையாத போது அந்தரங்கருக்கும் அநபிபவனாய் இருக்கும் அவன்
(மான் தோல் மரவுரி தரித்த பெருமாள் -நெருப்பு போல் நான்கு பக்கமும் அணுக ஒண்ணாதபடி  -ஸ்ரீ பரதாழ்வானுக்கும் ஆனதே )
உகவாதார்க்கு அநபிபவனாய் இருக்கும் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

(கதிர் மதியம் போல் முகத்தான் -சந்த்ர ஸூர்ய நேத்ர)

சோதி தன்னுருவாய் –
கீழே ஸ்பர்ஹணீ யதையாலே பொன்னுருவாய் -என்று
ஸ்வரூபம் ஸூவம் பிரகாசமாய் இருக்கும் என்றது –

நாட்டில் ஜ்யோதிஸ் பதார்த்தங்களுக்கு ஜ்யோதிஸூ உண்டாகிறது
தன்னோட்டை சம்பந்தத்தால் யாம்படி இருக்கை –
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -(கட வல்லி )என்னக் கடவது இறே —

(அந்த பரம் பொருளுக்கு முன் ஸூர்யன் ஒளி விடுவது இல்லை –

சந்திரனும் நக்ஷத்ரங்களும் ஒளி விடுவது இல்லை -அக்னியைச் சொல்லவும் வேணுமோ)

(முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-)

என்னுருவில் நின்ற —
என்னுடைய ஆத்மாவில் நிற்கிலும் தனக்கு அவத்யவஹமாய் இருக்க
எனக்கு த்யாஜ்யமான வடிவில் வந்து நின்றான் என்க –

நின்ற –
இவர் மடல் எடுக்கையாலே -தன்னுடைய சாத்தா ஹாநி பிறக்கும்படியான-கலக்கம் சமித்து -தரித்து நின்றபடி –

எந்தை –
சத்தையோபாதி சேஷித்வமும் உறுதிப் படுத்திய படி –

தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –
என் தலை மேலவே –தளிர் புரையும் அடி –
அமரர் சென்னிப் பூவான -திருவடிகளே கிடீர் எனக்கு சிரோ பூஷணம் ஆய்த்து –
ஆருடைய கால் இருந்த தலையிலே ஆருடைய திருவடிகள் இருக்கிறது –

இவர் தலையிலே திருவடிகளை வைத்த பின்பு
அவன்
சத்தையும்
சேஷித்வமும்
விக்ரஹமும்
பெற்றானே -இருக்கிறபடி –

(நின்ற எந்தை திருவடி -நின்ற சத்தை -எந்தை -ஸ்வாமி -சேஷித்வம் -திருவடி -விக்ரஹம்)

ஆக
1-பிரகிருதி ப்ராக்ருதங்களில் அஸ்த்ரத்தையை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
2-ஸ்வ ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
3-கைவல்யத்தில் போகாதபடி நோக்கின அவ் அளவு போராதோ –
அதுக்கு மேலே
4-தன்னுடைய ஸ்வ ரூபத்தையும்
5-ஸ்வரூப பிரகாசமான விக்ரஹத்தையும் காட்டித் தந்தது போராதோ –
6-அதுக்கு மேலே த்யாஜ்யமான என் சரீரத்தில் புகுந்து நிற்பதே –
அதுக்கு மேலே
7-தன்னுடைய திருவடிகளை என் தலை மேல் பொருந்த வைப்பதே –
என்று தமக்கு அவன் பண்ணின உபகார பரம்பரைகளை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

ஆக
இப் பாட்டால்
1-தத்வ த்ரயங்களின் உடைய நிஷ்க்ர்ஷ்டமான ஸ்வ ரூபமும்
2-அவை மூன்றும் புருஷார்த்தம் என்னும் இடமும்
(சாமான்யேன தேகாத்ம அபிமானிக்கும் -கேவலனுக்கும் -பகவத் பரனுக்கும் -மூவருக்கும்
மூன்று தத்துவமும் புருஷார்த்தம் என்றபடி )
3-அவற்றில் ஒன்றே ஸ்வரூப பிரயுக்தமான முக்ய புருஷார்த்தம் –
4-அல்லாதவை நிஹீன புருஷார்த்தம் என்னும் இடமும் -(ஆத்மாவை நிஹீனம் என்றது கைவல்யத்துக்கு உறுப்பாகையாலே )
5-அந்த முக்ய புருஷார்த்த பூதனான ஈஸ்வரன் உடைய-ஸ்வரூப ரூப குணங்களின் உடைய வை லஷண்யமும்-
6-அவற்றை ஈஸ்வரன் தன் ஆஸ்ரிதர்க்குக் காட்டும் போது தன் பேறாக காட்டும் படியையும்-சொல்லுகிறது –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading