அவதாரிகை –
இவ் விஷயம் சந்நிஹிதமாக இருக்க
தேகத்தைப் பூண் கட்டிக் கொள்வதே -சம்சாரிகள் -என்கிறார் –
(ஸம்ஸாரிகள் தேஹத்தைப் பூண் கட்டிக் கொள்ள விருக்கிறார்களே யன்றி
எம்பெருமானை மருவி வாழ்வாரில்லையே! என வருந்திப் பேசுகிறார்.)
—————————————————————————-
வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-
பதவுரை
வானி்டை புயலை–ஆகாசத்திலே வாழ்கிற மேகம் போன்ற வடிவுடையவனும்
மாலை–(அடியார் திறத்தில்) வியாமோஹ முடையவனும்
வரையிடை–மலையிலே
பிரசம் ஈன்ற–தேனீக்களாலே சேர்க்கப்பட்ட
மானிடம் பிறவி–(தாங்கள் மிக அருமையான) மநுஷ்ய ஜன்மமெடுத்திருப்பதை
மதி்க்கிலர்–எண்ணுகிறார்களில்லை;
அந்தோ–ஐயோ! ;
தம் தம்–தங்கள் தங்களுடைய
தேன் இடை–தேனீலே முளைத்த
கரும்பின்–கரும்பினுடைய
சாற்றை–சாறு போலப் பரம போக்யனும்
திருவினை–திருவுக்குந் திருவாகிய செல்வனுமான எம்பெருமானை
மருவி–ஆஸ்ரயித்து வாழ மாட்டார்கள்–
ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு–மாம்ஸ மயமான சரீரத்தில் வாழ்வதற்கு
உறுதியே–உறுதியையே
வேண்டினார்–விரும்பி நிற்கின்றார்கள்;
கொள்க–(இதை நீங்கள்) அறிந்து வைப்பது.
——————————————————————————-
வானிடைப் புயலை-
ஆகாசம் மத்யே நீர் கொண்டு எழுந்து வந்து
தோற்றுகிற மேகம் போன்ற வடிவு அழகை உடையவனே –
வானிடைப் புயலை-என்கையாலே
நிராலம்பனாய் இருக்கிற என்னை
நிர்ஹேதுகமாக வந்து விஷயீகரித்தவனை
என்கிறார் –
மாலை –
அதுக்கடியான வ்யாமோஹம் –
வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றைத் –
மலையிலே தேநீக்களாலே
உத்பாதிக்கப் பட்ட தேனே நீராக வளர்ந்த
கரும்பின் சாறு போலே போக்யனாவனை –
திருவினை –
உத்க்ர்ஷ்டமாய்
நிரவதிகமான
ரச வஸ்துவுக்கு பெரிது போலே
உத்கர்ஷ்ட வஸ்துவுக்கும் உத்கர்ஷ்ட வஸ்து இறே –
திருவுக்கும் திருவாகிய -என்றும்
கஸ் ஸ்ரீஸ் ஸ்ரிய -என்னும்படியே –
திருவினை மருவி வாழார்-
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-
கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 12
ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?)
வாழுகைக்கு நேர்த்தி -அவன் மேல் விழ
விலக்காது ஒழிகை –
உங்களுக்கு நான் வேணும் -என்ன
எங்களுக்கு நீ வேண்டா -என்னுமவர்கள் –
மானிடைப் பிறவி –
புருஷார்த்த உபயோகியான சரீரத்தை
உதாஸீ நிப்பதே –
அன்றிக்கே
இச் சரீரத்தில் தோஷத்தை உணராது ஒழிவதே -என்னவுமம் –
இத்தை தேவ சரீரமாக நினைத்து இருப்பார்கள் என்னவுமாம் –
சாஸ்திர அதிகாரமான தேகம் பெற்றும் -என்னுதல் –
தோஷ உக்தமான தேகம் -என்னுதல்
அஸ்திரமான தேகம் -என்னுதல்
யந்தோ – மதிக்கிலர்-
ஐயோ –
என்று இவர்கள் இழவுக்கு வெறுக்கிறார் –
கொள்க
நிச்சிதம் –
தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே –
த்ருடம் இன்றியே
அப்போது போயிற்று இப்போது போயிற்று என்றும்
மின்னிலும் நிலை அற்று இருக்கிற
இச் சரீரத்துக்கு பூண் கட்டவே தேடுவர்கள் –
(“மானிடப் பிறவியந்தோ மதிக்கிலர்” என்பதற்கு வேறு வகையாகவும் பொருள் கூறுவர்;
* தீண்டா வழும்பும் செந்நீரும் சீய நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகுமுடலாகிய
மநுஷ்ய சரீரத்தைப் பெற்றுவைத்தும் அந்தோ! திவ்ய சரீரம் பெற்று விட்டதாக மார்பு நெறித்திருக்கின்றார்களே! என்று.)
(‘குரம்பை‘ என்று குடிசைக்குப் பெயர்;
தேஹமானது ஆத்மா வஸிங்குங் குடிசையாதல் அறிக.
இவ்வுலகத்துப் பாமரர்கள் அநித்யமான தேஹம் வாடாமல் வதங்காமல் தளிர்த்திருந்தால் போதுமென்று
பார்க்கிறார்களே யன்றி
நித்யமான ஆத்ம வஸ்து உஜ்ஜீவிக்கும் வழியைச் சிறிதும் நாடுகின்றார்களில்லையே என்பதாம்.)
————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply