ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –9 –உள்ளமோ ஒன்றில் நில்லாது–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

அவதாரிகை –

என் ஹ்ருதயமானது ஜனன மரணங்களை
நினைத்து உருகா நின்றது –
எனக்கு தேவரீரை ஒழிய துணை இல்லை –
என்கிறார் –

(நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே
மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து
எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார்.

என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது;
இதற்கு நான் செய்து கொள்ளக் கூடிய பரிஹார மொன்றுமில்லை;
நீயே துணை நிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார்.)

—————————————————————

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என் தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே-9-

பதவுரை

உள்ளமோ–மனமோ வென்னில்
ஒன்றில் நில்லாது–ஒரு விஷயத்திலும் பொருந்தி நிற்கிறதில்லை;
ஓசையில் எரி–ஓசையோடு கூடின அக்னி
நின்று உண்ணும்–கவ்வி நின்று உண்ணப் பெற்ற
கொள்ளி மேல்–கொள்ளியில் அகப்பட்ட
எறும்பு போல–எறும்பு போலே
என் தன் உள்ளம்–எனது நெஞ்சானது
குழையும்–நைகின்றது;
ஆல்-அந்தோ! ;
(இப்படி யிருப்பதனால்):
தெள்ளியீர்–தெளிந்த ஸ்வபாவத்தை யுடையீராய்
தேவர்க்கு எல்லாம் தேவர் ஆய்–தேவாதி தேவனாயிருந்து வைத்து
ஒள்ளியீர்–தேஜஸ்வி யானவரே!
எழுமையும்–எந்த நிலைமையிலும்
உம்மை அல்லால்–தேவரீரைத் தவிர்த்து
துணை இலோம்–வேறு துணை யற்றவர்களாய் இருக்கின்றோம்.

—————————————————————————

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என் தன் உள்ளம்
ஹிருதயமானது -ஓர் இடத்தே தரியாதே
ஓசையை உடைத்தான எரி நின்று உண்ணா நின்ற
கொள்ளியினுள் எறும்பு போலே –

உருவார் பிறவியை நினைத்து –
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போலே
வுருகி சிதிலமாகா நின்றது –
ஒரு தலை மரணம் –
ஒரு தலை ஜன்மம் இறே –

(உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்து என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4-)

குழையுமால் –
இவன் சைதன்யத்துக்கு பிரயோஜனம் இது பொல்லாது என்று அறிகை –
அவன் சைதன்யத்துக்கு பிரயோஜனம் அப்படியே செய்கை –
அதாவது –
ரஷிக்கை -இறே –

தெள்ளியீர் –
இத் தலையில் கலக்கத்துக்கு
எதிர் தட்டான தெளிவு உடையாரைப் பற்றுகிறார் –

மகாபலி ஔதார்யத்துக்கும் குறைவு வாராமே
தன்னை ஆஸ்ரயித்த இந்த்ரன் உடைய கார்யத்துக்கும் குறைவு வாராமே
கார்யம் பார்த்த தெளிவு

(சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண-எனக்குக் கலங்குகை இயற்கையானாப் போலே தேவரீர்க்குத் தெளிந்திருக்கை இயற்கை யன்றோ வென்கிறார்
தெள்ளீயிர் என்ற விளியினால்.-ஒரு மேட்டைக் கொண்டு ஒரு பள்ளத்தை நிரப்புமா போலே தேவரீருடைய தெளிவைக் கொண்டு
என்னுடைய கலக்கத்தைத் தொலைக்க வேணுமென்பது உட்கோள்.)

தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
தேவர்க்கு எல்லாம் தேவராய் இருந்து வைத்து –
அலம் புரி நெடும் தடக்கையை தாழ ஏற்று
பூமியை அளந்து கொண்ட –

(தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய்-

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-)

(சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்* திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி* போக்கினேன் பொழுதினை வாளா*
அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!* வானவர்க்கு அரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!)

ஒள்ளியீர்-
இந்த்ரன் பிரயோஜநாந்த பரன் ஆகிலும்
நம் கை பார்த்து இருந்தான் என்னும் அத்தாலே
வடிவில் பிறந்த புதுக் கணிப்பு
அவன் இவன் கை பார்த்து இருக்கை இறே
இவன் கால விளம்பமாக கார்யம் செய்தது –
ஒண்மை -அழகு

உம்மை யல்லால் எழுமையும் துணை யிலோமே –
எங்களுக்கு நாங்களும் தஞ்சம் அல்ல –
பிறரும் தஞ்சம் அல்ல
உம்மையே தஞ்சமாக உடையோம்
கோல் துணையாய் இருப்பார் சிலர் அன்றே

அவஸ்தாந்தரத்தை பிராபித்தாலும்
அரங்கத்து உறையும் இன் துணைவனையே துணைவனாக
போமவர் இறே –

(யாசகத் தொழில் செய்ததனால் உம்முடைய தேஜஸ்ஸுக்கு ஏதேனும் குறை யுண்டாயிற்றே?
அதனால் மேன் மேலும் தேசு பொலியப் பெற்றீரன்றோ,
இப்படிப்பட்ட ஆச்ரித பஷ பாதத்தைத் தேவரீரிடத்திற் கண்டவர்கள்
எற்றைக்குமேழேழ் பிறவிக்கும் வேறொருவரைத் துணையாகக் கொள்வரோ? என்றாராயிற்று.)

(என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-

நாங்களும் தஞ்சம் அல்ல -பிறரும் தஞ்சம் அல்ல -நீயே தஞ்சம் –)

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading