அவதாரிகை –
சர்வேஸ்வரன் உடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை
அனுசந்திக்க வல்லார்க்கு
சஞ்சார பூமி -என் உத்தமாங்கம் –
என்கிறார் –
(கீழ்ப் பாட்டில் ”அமரர் சென்னிப் பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக் காட்டும்‘ என்ன;
என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தை செய்யுந் தொண்டர்களே
என் தலை மிசை மன்னுதற்கு உரியார் என்கிறார் போலும்.)
————————————————————————-
இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை யொருமையானைத்
தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே–7-
பதவுரை
எமக்கு–நமக்கு
இம்மையை–இவ் வுலகத்து இன்பத்தைத் தருமவனும்
மறுமை தன்னை–பர லோகத்து இன்பத்தைத் தருமவனும்
விரிந்த சோலை–பரந்த சோலைகளை யுடையதாய்
வியன்–ஆச்சரியமான
திரு அரங்கம்–ஸ்ரீரங்கத்திலே
மேய–நித்ய வாஸம் பண்ணுமவனும்
செம்மையை கருமை தன்னை திருமலை–(யுக பேதத்தாலே) செந் நிறத்தையும் கரு நிறத்தையுங் கொண்டுள்ளவனும்
திருமலை–திருவேங்கடமலையிலே நின்று கொண்டு
ஒருமையானை–(மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்) ஒருமைப் பட்டிருப்பவனுமான எம்பெருமானுடைய
தன்மையை–சீலத்தை
நினைவார்–நினைக்க வல்லவர்கள்
என் தன்–என்னுடைய
தலை மிசை–தலையிலே
மன்னுவார்–பொருந்தத் தக்கவர்கள்
————————————————————————-
இம்மையை –
இஹ லோகத்தில்
ஸ்வ விஷய ஜ்ஞான ஸூகத்தை -தருமவனை –
மறுமை தன்னை –
சரீர சமனந்தரம்
ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தைத் தருமவனை –
சம்சாரத்தில் துக்க நிவர்த்தியே
ஸூகம் என்று பிரமமே இறே –
(எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பற்றின ஞான விகாஸம் பெற்றுக் களிப்பதே
ஆழ்வார் திருவுள்ளத்தினால் இம்மை யின்பமாகும்;
திருவனந்தாழ்வானைப்போலே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும் அந்தரங்க கைங்கரியம்
பண்ணப் பெற்றுக் களிப்பதே மறுமை யின்பமாகும்;
ஆக, இஹ லோகத்திலே தன்னைப் பற்றின ஞான விகாஸத்தை யுண்டாக்கி இன்பம் பயந்தும்,
பர லோகத்திலே நித்ய கைங்கரியத்திலே மூட்டி இன்பம் பயந்தும் அடியார்களை வாழ்விப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.)
எமக்கு வீடாகி நின்ற மெய்மையை –
நமக்கு மோஷ ஸூகமாய் உள்ளவனை –
கீழ்ச் சொன்ன பிராப்யத்துக்கு
அவ்யவஹிதமான உபாயம் -ஆனவனை –
(இங்கு வீடு என்றது இலக்கணையால் மோக்ஷாபாயத்தைச் சொன்னபடி.
கீழ்ச் சொன்ன பிராப்யங்களுக்கு ப்ராபகனாயிருப்பவனென்கை.
அவ் வுபாயம் ஸுலபமான விடத்தைப் பேசுகிறார் வியன் திருவரங்க மேய என்று.)
விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய –
அவ் வுபாயம் ஸூலபமான இடத்தைப் பேசுகிறார் –
பரந்த சோலையை உடைத்தாய் –
விஸ்மய நீயமாய் –
இருந்துள்ள கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுமவனை –
செம்மையைக் கருமை தன்னைத் –
யுகம் தோறும் -அவ்வவ யுகங்களில் உள்ளார்க்கு
தக்க வடிவுகளைக் கொண்டு
அவர்களை ரஷிக்குமவனை –
முன்னை வண்ணம் -இத்யாதிப் படியே
செம்மையும் கருமையும் -மற்ற இரண்டுக்கும் உப லஷணம் –
(இது ”பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
போலு நீர்மை பொற் புடைத் தடத்து வண்டு விண்டுலாம்
நீல நீர்மை யென்றிவை நிறைந்த காலம் நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைத்த தென்ன நீர்மையே.” என்ற திருச்சந்த விருத்தப் பாசுரத்திலும்
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக்* கார் வண்ணம் நான்கும்*
இகழ்ந்தாய்* இருவரையும் வீய- புகழ்ந்தாய்*
சினப் போர்ச்சு வேதனைச்* சேனாபதியாய்*
மனப் போர் முடிக்கும் வகை.”– என்ற நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்திலும்
திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக் கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே-3-அருளிச் செய்யப்பட்டுள்ளது.)
திருமலை யொருமையானைத்
கண்ணாவான்-என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிறபடியே
திருமலையில் நின்று
நித்ய ஸூரிகளுக்கும் நித்ய சம்சாரிகளுக்கும்
ஒக்க முகம் கொடுக்குமவனை –
(கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பனே 1-8-3)
(புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப, -தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே,
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-நான்முகன் . 45)
தன்மையை நினைவார் –
இந்த ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை
நினைக்க வல்லார்
என் தன் தலை மிசை மன்னுவாரே –
அவன் திருவடிகளும் -இவர்கள் திருவடிகளும்
ஒக்க அன்று மன்னுவது –
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -என்கிறார் –
(கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-)
—————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply