ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –13-இரும்பு அனன்று உண்ட நீரும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

பதவுரை

இரும்பு

இரும்பானது
அனன்று

பழுக்கக் காய்ச்சப் பெற்று
உண்ட

உட் கொண்ட
நீரும்

ஜலமும்
போதரும்

வெளியிலே வந்து விடும்;
கொள்க

(இதை) உறுதியாக நினையுங்கோள்;
என் தன்

என்னுடையவையாய்
அரு

போக்க முடியாதவையாய்
பிணி பாவம் எல்லாம்

நோய்களுக்கு அடியான பாவங்களெல்லாம்
என்னை விட்டு அகன்றன

என்னை விட்டு நீங்கிப் போயின
கரும்பு அமர்

வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த

சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம்

மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட

இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிற
கரும்பினை

பரம போக்யனான எம்பெருமானை
என் கண் இணை

எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு

பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறே

மகிழ்ச்சி யடையும் விதம் என்னே! (என்று வியக்கிறார்)

————————————————————-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க –
அக்நியாலே ச தப்தமான அயஸ் ஸாலே
பீதமான ஜலமும் போரும்

எத்தாலே -என்னில் –
என் தன் அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச் –
இரும்பு உண்ட நீர் போதரச் சொல்ல வேணுமோ –

நான் பண்ணின துஷ் கர்மங்களும்
தத் பலமான துக்கங்களும் அன்றோ
என்னை விட்டுப் போயிற்று –

ஆத்மாவுக்கு நிரூபக தர்மமான ஜ்ஞான ஆனந்தகளோபாதி
இதுவும் சஹஜம் -என்னும்படி – போந்த
இவையும் அன்றோ என்னை விட்டுப் போந்தன –

எம்பெருமானை அகலுகையால் வந்த வ்யசனமும்
அகலுகைக்கு ஹேதுக்களும்
போயிற்று -என்னவுமாம் –

அவை போயிற்று ஆகில் பின்பு நீர் செய்தது என் என்னில் –
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட-
வண்டுகள் பொருந்தி இருந்து உள்ள
சோலையாலே சூழப் பட்ட
அரங்கமாகிற -பெரிய கோயிலை
தனக்கு கோயிலாகக் கொண்ட –

கரும்பினைக் கண்டு கொண்டு –
இது கண்ணாலே தின்னும் கரும்பு –

என் கண்ணினை களிக்குமாறே –
எவ் விஷயங்களைக் கண்டு களித்த கண்கள்
எவ் விஷயங்களைக் கண்டு களிக்கிறது –

ப்ரீதி தத்வம் கனாக் கண்டு அறியாத கண்கள் கிடீர்
இன்று களிக்கிறது –

(போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-)

(‘வரும் புண்டரம்! வாளி உன் மார்பு உருவிப்
பெரும் புண் திறவா வகை பேருதி நீ;
இரும்பு உண்ட நீர் மீளினும், என்னுழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்,’–கம்பர் -ஆரண்ய காண்டம்

வரும் புண்டரம் – (என்னை எதிர்த்து) வருகின்ற கழுகே;
உன் மார்பு வாளி உருவி – உனது மார்பினை (எனது அம்பு ஊடுருவி;
பெரும் புண் திறவா வகை – பெரிய புண்ணாகத் திறப்பதற்கு முன்பே;
நீ பேருதி – நீ (இவ்விடம் விட்டு) அப்பால் செல்க;
இரும்பு உண்ட நீர் மீளினும் – (காய்ச்சப்பட்ட) இரும்பில் பட்ட நீர் மறுபடியும் வெளிப்படும் என்றாலும் கூட;
என்னுழையின் -என்னிடத்தில் இருக்கின்ற;
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் -கரும்புச் சாற்றினும் இனிய சொற்களைப் பேசுகிற (சீதை) மீண்டு செல்ல மாட்டாள்;
காணுதி – (அதனைக்) காண்பாயாக; ஆல் -ஈற்றசை.)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading