ஸ்ரீ திரு மாலை-45–வள வெழும் தவள மாட–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

அவதாரிகை

நிகமத்தில் –
குவலயா பீடத்தைப் போக்கினால் போலே
தம்முடைய பிரதிபந்தகத்தைப் போக்கின படியைச் சொல்லி –
பெரிய பெருமாள் உடைய ப்ரீதியே
தமக்கு பிரயோஜனம் என்று முடிக்கிறார் –

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே

பதவுரை

வளம் எழும் தவளம் மாடம் –அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களை யுடைய
மா மதுரை நகரம் தன்னுள் –பெருமை தங்கிய வட மதுரையில்
கவளம் மால் யானை கொன்ற–கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலை செய்தருளின
கண்ணனை-ஸ்ரீ க்ருஷ்ணனாகிய
அரங்கம் மாலை –கோயிலிலே (கண் வளரும்) எம்பெருமானைக் குறித்து
துளபம் தொண்டு ஆய–திருத் துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும்
தொல் சீர்–இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான
தொண்டரடிப் பொடி–தொண்டரடிப் பொடி யாழ்வார் (அருளிச் செய்த)
சொல்–திருமாலை யாகிய இத்திருமொழி
இளைய புன் கவிதை ஏலும்–மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும்
எம்பிராற்கு–பெரிய பெருமாளுக்கு
இனிதே ஆறே–பரம போக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.)

———————-

வள வெழும் தவள மாட –
அழகு மிக்கு இருப்பதாய்
வெள்ளியாலே செய்தது போலே அதி தவளமான மாடங்களை உடைத்ததாய் -இருக்கை –

திரு அவதரித்ததன்று போகப் பெறாத இழவு தீருகிறார் –
வில் விழவுக்காக கம்சன் கோடித்த படியைச் சொல்லிற்றாகவுமாம்

வளம் -அழகு
எழுச்சி -மிகுதி

மதுரை மா நகரம் தன்னுள் –
பிரதமத்தில் வாமன ஆஸ்ரயமாய்
பின்பு ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படை வீடு செய்து
பின்பு கிருஷ்ணன் திரு அவதாரம் பண்ணுகையால் உண்டான
பெருமையைச் சொல்கிறது –

இப்படி பகவத் சம்பந்தம் மாறாத தேசம் ஆகையாலே
வைகுந்த மா நகரில் காட்டிலும்
இது வ்யாவ்ர்த்தம் –

கவளமால் யானை கொன்ற கண்ணனை –
கவளம் கொண்டு இருப்பதாய்
பெருத்து இருந்துள்ள
ஆனையைக் கொன்ற கிருஷ்ணனை –

களபமால் -என்று
எதுகைக்கு சேர பாடம் ஆன போது –
களபம் என்று
உருவத்தில் பெருத்த யானை -என்றபடி –

கீழே ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றார்
இங்கே ஆனை கொன்ற என்கிறார்
இத்தால்
தேவாநாம் தானவாநாஞ்ச -என்றது அழிந்தது-

அங்கு உள்ளார் விரோதிகளைப் போக்கி தன்னை அனுபவிப்பித்தாப் போலே
இவர் தம் உடைய பிரதிபந்தங்களைப் போக்கி தம்மை அனுபவிப்பித்த படி –
திரு அவதரித்த அன்று ஒளிந்து
போன ஊரிலே கண் காண வந்து விரோதியை அழியச் செய்த ஏற்றத்தை அனுபவிக்கிறார்-

யரங்க மாலைத்
அவதாரத்துக்கு பிற்பாட ரான தம்முடைய விரோதியைப் போக்கி
கோயிலிலே வந்தார் ஆய்த்து –

மாலை
ஆஸ்ரித விஷயத்தில் பெரும் பித்தர் ஆனவரை –

விரோதி நிரசனமும்
தத் பூர்வகமான ஸ்வ அனுபவமும்
தன் பேறாய் இருக்கை-

துளவத் தொண்டைய தொல் சீர்த்-
திருத் துழாய் ஆழ்வாருக்கு அடிமை செய்யுமவர்
புருஷார்த்தைன் எல்லையிலே நின்றவர் –
இது தான் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் அடிமை செய்த படி யாதல் –

துளபத் தொண்டாய -என்கையாலே –
அபசாரம் தட்டாத கைங்கர்யம் -என்கை –

துடை ஒத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
தொண்டர் அடிப் பொடி -என்னக் கடவது இறே

தொல் சீர் –
ஸ்வா பாவிகமான பகவத் சேஷத்வத்தின் சீமையிலே –
சஹஜ கைங்கர்யத்தின் உடைய மேல் எல்லை ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யம் இறே –

தொண்டர் அடிப் பொடி சொல் –
இத்தால்
தொண்டர் அடிப் பொடி -என்ற பேரை உடையவர் –
இவருக்கு ஞான ஆனந்தங்கள் அன்று காணும் நிரூபகம்

அடிப் பொடி -என்கையாலே –
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -என்றாப் போலே இருக்கிறது யாய்த்து –

இளைய புன் கவிதை ஏலும்
சப்தத்தில் இனிமையும்
கவித்வத்தில் குற்றம் உண்டே யாகிலும்
இளசாய் புல்லிய கவியே யாகிலும் –

எம்பிராற்கு இனியவாறே –
எம்பிரானுக்கு இனிதாய் இருக்கும் இறே –

கிம்ம்ர்ஷ்டம் ஸூத வசனம் -என்கிறபடியே
பெரிய பெருமாள் இத்தை உகந்த படி என் என்கிறார் –

பிரஜை மழலைச் சொல்லு தமப்பனார்க்கு இனிதாய் இருக்கும் இறே –
ப்ரஹர்ஷ யிஷ்யாமி சநாத ஜீவித – என்கிறபடியே
இவ் உகப்பு தானே புருஷார்த்தம் –

இவன் சத்தை யாவது
அவன் ப்ரீதிக்கு கை தொடுமானமாகை

இப் பிரபந்தம் கற்றார்க்கு பலம் சொல்லாது ஒழிந்தது
இவ் உகப்பு தானே அவர்களுக்குப் பலம் ஆகையாலே
இவ் வாழ்வாரை உகந்தாப் போலே
இப்பிரபந்தம் கற்றாரையும்
பெரிய பெருமாள் உகந்து அருளுவார் -என்கை –

ப்ரியதே சததாம் ராம -என்று
ஸ்ரீ ராமாயணம் கற்றார் உடைய பலம் போலே
இப் பிரபந்தம் கற்றார் உடைய பலமும் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading