ஸ்ரீ திரு மாலை-சங்கதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் தம்முடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு வாசகமான திருநாம பிரபாவத்தை நிர்ஹேதுகமாக
காட்டி அருளக் கண்டு –
தாமும் அனுபவித்து –
அனுபு பூஷுக்களையும் அனுபவிக்கவும் வல்லராய் –
ஸ்ரீ பெரிய பெருமாளையும் உகப்பித்து தலைக் கட்டுகிறார்

———-

திரு நாமம் யம வஸ்யதையை தவிர்த்து தரும் என்று இதனுடைய
பாவநத்வத்தையும்
ராஜ குல மஹாத்ம்யத்தையும் சொல்லுகிறது –

காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே -1-

——–

திரு நாமத்தின் உடைய பாவநத்வமும்
அது கற்கையாலே தமக்கு பிறந்த ராஜ குலமும் சொல்லிற்று கீழ்

இதில்
திரு நாமத்தின் உடைய போக்யதையைச் சொல்லுகிறது

ஆனால் போக்யதையைச் சொல்லி
பாவனத்வத்தைச் சொன்னாலோ -என் என்னில் –

பயம் போனால் இறே ரஸ்யதையிலே இழிவது
ஜ்வரம் அனுவர்த்தியா நிற்க பால் ரசிக்குமோ –
முன்பு பாபத்தை கூடு பூரித்து யம பீதனாய் இருக்கிறவனுக்கு
அந்த பயம் நிவர்த்தம் ஆனால் அல்லது
போக்யதையிலே நெஞ்சு செல்லாது இறே

யன் நாம சந்கீர்த்தனதோ மகா பயாத் விமோஷ மாப்நோதி ந சம்சயம் நா -என்று
ரிஷிகள் பய நிவ்ருத்திக்கு ஹேதுவாக சொல்வார்கள்

ஆழ்வார்கள் –
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -என்று
போக்யதா பிரகர்ஷத்தைச் சொல்லுவார்கள் –

இத் திரு நாமம் தான்
பிரயோஜநாந்த பரருக்கு பிரயோஜனத்தைக் கொடுக்கும் –
உபாயாந்தர நிஷ்டருக்கு உபகரணமாய் இருக்கும் –
பிரபன்னருக்கு தேக யாத்ரை சேஷமாய் இருக்கும் –

முத்துப் படும் துறையிலே முக்குவார்
முத்தை கொடுத்து பழம் கொள்ளுவார்கள்

செழு முத்து வெண்ணற்க்கும் என்று ஆறுவார்கள் இறே
விலை அறியும் செட்டி பக்கல் புகுந்தவாறே பெரு விலையனாம்
செருக்கர் ஆனவர்கள் இதைப் பூண்டு அனுபவிப்பார்கள் –

அப்படியே பிரயோஜநாந்த பரருக்கும் உறுப்பாய்
சாதநாந்த நிஷ்டருக்கும் உறுப்பாய்
பிரபன்னருக்கு ஸுயம் பிரயோஜனமுமாய் ஆய்த்து இத் திரு நாமம் இருப்பது –

கீழ் நின் நாமம் கற்ற -என்னா நின்றீர்
நம் பேர் சொன்னாருக்கு நாம் கொடுக்கக் கடவதொரு நாடு உண்டு
அத்தை அவர்களால் கொள்ளோம் என்ன ஒண்ணாது
அத்தைக் கொள்ளீர் -என்று
பெரிய பெருமாள் அருளிச் செய்ய –

திரு நாமம் சொல்லும் போதை ரசம் ஒழிய
அவ்வருகு போய் அனுபவிக்கும் ரசம் எனக்கு வேண்டா -என்கிறார் –

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-

————

உமக்கு பரம பதம் வேண்டாவாகில்
கோயிலோடு தோள் தீண்டியான சம்சாரத்திலே இருந்து
திரு நாமத்தை அனுபவியும் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் அருளிச் செய்ய –
அத்தையும் நிரூபித்த வாறே அவகாசம் இல்லாதபடி துரித பரம்பரையேயாய் இருந்தது –

ஆகையாலே அது எனக்கு அது வேண்டா வென்ன –
திரு நாமம் சொல்லுகைக்கு அவகாசம் இல்லாதபடி சம்சாரத்துக்கு நீர் சொல்லுகிற குறை என் என்று அருள
சம்சாரத்தின் உடைய தோஷங்களை உப பாதித்துக் காட்டுகிறார்

இத்தால்
பழகிப் போகிற சம்சார யாத்ரையிலும் ஜூகுப்சை பிறக்கும்படி
திரு நாமம் இனிது என்று
அம் முகத்தாலே திரு நாமத்தின் உடைய போக்யதா பிரகர்ஷத்தை சொல்கிறது –

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே

————

கீழ்-
மூன்று பாட்டாலும்
ஸ்வ லாபத்தை பேசினாராய்-

மேல்
பதினோரு பாட்டாலே -பரோபதேசம் பண்ணுகிறார் –

ஸ்வ அனுபவத்தை விட்டு இவர் பரோபதேசம் பண்ணுகைக்கு
ஹேது என் என்னில் –
பிராப்தமுமாய்
ஸூலபமுமான
இவ் விஷயத்தை சம்சாரிகள் இழக்கிற இழவு பொறுக்க மாட்டாமையாலும்
இவ் விஷயம் தான் சம்சாரிகளைப் பற்று அல்லது தனியே அனுபவிக்க அரிதாகையாலும்
ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத -என்கிறபடி
அனுபூதாம்சம் பிறரை அனுபவிப்பித்து அல்லது நிற்க மாட்டாத ப்ரக்ர்தி ஆகையாலும்
பரோபதேசத்திலே பிரவர்தகர் ஆகிறார் –

இதில் முதல் பாட்டு
சம்சாரிகள் பாபிகளான எங்களுக்கு
திரு நாமம் சொல்லுகைக்கு யோக்யதை உண்டோ என்ன
பிராயச் சித்தம் சாத்தியம் அல்லாதபடி
பாப பிரசுரனான ஷத்ர பந்துவும் திரு நாம பிரபாவத்தாலே
பரமபத பிராப்தியை
பண்ணின படியைக் கேட்டார்க்கு
அயோக்யன் என்று அகல விரகு உண்டோ என்ற இடத்திலும்
விமுகராக கண்டவாறே
அத்தைக் கேட்டு வைத்து பாப பலமான ஜென்மாதி கிலேசத்தை
அனுபவிப்பதே –என்று விஸ்மிதர் ஆகிறார் –

மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால்
கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய
பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே--4-

————–

பிறவியுள் பினங்குமாறு -என்று
விலஷண விஷயத்தை விட்டு
துர் விஷயங்களை பற்றி அனர்த்தப் படுவதே -என்று வெறுத்தார் -கீழ்

ஏன் தான் ஷோடச வயசைகளான ஸ்திரீகள் சஞ்சரிக்கிற
சம்சாரத்துக்கு பொல்லாங்கு சொல்லுவான் என் என்று
லோகாயதிகள் ப்ரத்ய வஸ்தானம் பண்ணினான்

அவனாகிறான் –
தேஹாதி ரிக்தமாய் இருப்பான் ஒரு ஆத்மா உண்டு என்றும்
தர்ம அதர்மங்கள் உண்டு என்றும்
பரலோகம் உண்டு என்றும்
சொல்லுகிறவை அசத்யம்
பிரத்யஷிக்கிற உடம்பு கொண்டு அனுபவிக்கிற த்ரஷ்ட அனுபவம் ஒழிய
வேறு ஓன்று இல்லை என்னுமவன் –

அவர்களைக் குறித்து விஷயங்கள்
அல்ப அஸ்திரத் வாத்யநேக தோஷி தூஷிதங்கள் என்று
இவை எல்லாம் சொல்ல வேண்டுவது லபித்தால் இறே
துராரதமாகையாலே லபிக்கை அரிது –என்கிறார் –

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே–5-

————

விஷயங்களுக்கு அல்ப அஸ்திரத் வாதி தோஷங்கள்
அநேகம் உண்டானாலும்
எங்கள் உடைய த்யாகத்துக்கு ஹேதுவாக மாட்டாது –
ஏக விஷயத்தில் பூர்ண அனுபவம் பெற்றிலோமே யாகிலும்
விஷயங்கள் அநேகம் உண்டான பின்பு
ஒன்றில் இல்லாத நன்மை
மற்றையதில் கூட்டிக் கொண்டு அனுபவிக்கிறோமே -என்ன

அப்படியே யானாலும் அந்த போக்தா தான்
ஸ்திரனாக வேணுமே
அவ் விஷயங்களோபாதி
போக்தாவும் அஸ்திரன் என்று
போக்தாவினுடைய நிலை நில்லாமையைச் சொல்லுகிறார் –

மறஞ்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
அறஞ்சுவர் ஆகி நின்ற வரங்க னார்க்கு ஆட்செய்யாதே
புறஞ்சுவர் கோலம் செய்து புட் கவ்வக் கிடக்கின்றீரே-6-

———–

தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் -என்றும்
புள் கவ்வக் கிடக்கின்றீர் -என்றும்
எங்களை நிந்திக்கிறது என்-

சம்சார ஸ்வாபம் இங்கனே இருந்தது –
தண் துழாய் மாலை மார்பன் – என்று ஆஸ்ரயணீயனாகச் சொன்னவன்
தூரஸ்தன் ஆகையாலே எங்களுக்கு கிட்ட அரிது –

இன்னமும் ஆஸ்ரயிப்பார்க்கு விலக்கடிகள் பலவும் உண்டாய் இருந்தது –
அந்த தடைகளையும் அறுத்து –
ஆஸ்ரயணீய னையும் காட்டித் தாரும் என்ன –
இங்கே வந்து அவதரித்து
விரோதி நிரசன சீலனான தசரதாத் மஜனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7-

———

இப்படி வைதிக மர்யாதைகளிலே நின்ற
தசரதாத் மஜனே ஆஸ்ரயணீயன் என்று சொன்ன விடத்தில்
அங்குத்தை குணாதிசயத்தை புத்தி பண்ணி ஆஸ்ரயியாதே
சம்சாரிகள் விக்ர்த்தராய் இருந்த படியைக் கண்டு
இதுக்கடி பாஹ்ய தர்சன ருசிகள் ஆகை இறே –
ஆன பின்பு இவர்கள் அவத்யர் என்று பெரிய பெருமாளைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே–8-

———-

சிஷ்ட கர்ஹைக்கு அஞ்சி
இதர தர்சன ருசியால் ஆஸ்ரயியாது இருந்தோம் அல்லோம் –
தசரதாத் மஜனை இறே ஆஸ்ரயிக்கச் சொல்லிற்று –

அவன் ஆகிறான் –
வாசலும் தடையுமாய் எங்களுக்கு கிட்ட ஒண்ணாதாய் இருப்பான் ஒருத்தன் –
கிட்டினாலும் வசிஷ்டாதிகள் அருகே இருந்து
அயோக்யரோ அயோக்யரோ என்னா நிற்பார்கள் –

ஆகையாலே
பர அவஸ்தையோடு
ராம அவஸ்தையோடு வாசி இல்லை –
எங்கள் யோக்யதை பாராதான் ஒருத்தன் ஆஸ்ரயணீகனாக வேணும்
அவனைக் காட்டித் தாரீர் -என்ன

அதில்
யோக்யதை அயோக்யதை பாராதே
தானே மேல் விழுந்து விஷயீ கரிக்கும் கிருஷ்ணனை
ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே--9-

———

தண் துழாய் மாலை மார்பன் -என்கிற
தேச விப்ரகர்ஷம் தீர ஸ்ரீ ராமாவதாரத்தை அருளிச் செய்தீர்
அநந்தரம்
அதிலும் ஸூலபமான ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை அருளிச் செய்தீர்
ஸ்ரீ ராம அவதாரத்தோடு ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தோடு வாசி என்
இரண்டுக்கும் பிற்பாடரான எங்களுக்கு என்ன

தேச காலத்தால் வந்த குறை தீர
ஸ்ரீ கோயிலிலே வந்து ஸ்ரீ பெரிய பெருமாளே கண் வளர்ந்து அருளுகிறார்
அங்கே ஆஸ்ரயிங்கோள்
அவரை ஒழிய மோஷார்தமாக வேறு தேவதைகளை ஆஸ்ரயிக்கை யாவது
அ ஸ்ரீ வாசலிலே ஐஸ்வர்யம் வேண்டி இருப்பாரோபாதி கிடி கோள் -என்கிறார்-

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்
சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே–10-

———-

இப்படி சௌலப்ய காஷ்டையை சொல்லா நிற்கச் செய்தேயும்
அவிக்ருதராய் இருக்கிற சம்சாரிகளைக் குறித்து
நான் ஆஸ்ரயணீயனாகச் சொன்ன சக்கரவர்த்தி திருமகன்
பிறபாடர்க்கு உதவுகைக்காக கண் வளர்ந்து அருளா நிற்க
பாஹ்ய ஹானியாலே -திரு நாமத்தைச் சொல்லி
பிழைக்க மாட்டாதே
காலத்தை வ்யர்த்தமே போக்குகிறி கோளே
என்று இன்னாதாகிறார்-

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே–11-

———

வாயாலே திரு நாமத்தைச் சொல்லச் சொன்னீர் –
எங்கள் பாபத்தாலே பஹூ ஜல்பம் பண்ண ஷமர் ஆகா நின்றோம் –
திரு நாமம் சொல்ல சக்தர் ஆகிறிலோம் -என்ன
ஆகில் ஸ்ரவண மாத்ரத்திலே திரு நாமம் உத்தாரகம் -என்று
உத்கலோபாக்யான முகத்தாலே சொல்லி
இப்படிப் பட்ட பிரபாபத்தை உடையவனூர் கோயில் -என்று
உஜ்ஜீவிக்கலாய் இருக்க
துக்க பாவிகள் ஆவதே -என்று
இவர்கள் அனர்த்தத்தை பொறுக்க மாட்டு கிறிலேன் –
என்கிறார் –

நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
அவனதுஊர் அரங்கம் என்னா அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவர்கின்றேனே–12-

———–

சம்சாரிகளை நோக்கி ஹிதம் சொல்லுகை தான்
அவர்களுக்கு அசஹ்யமாம் அளவானவாறே
இவர்கள் துஷ் ப்ரக்ருதிகள் என்று பாராதே துர்க்கதியைப் பார்த்து
ஸ்வ கதமாக இவர்கள் ஸ்வரூபம் பகவத் அர்த்தமாய் இருக்கிற படியை
அறிந்து இலர்களே ஆகிலும்
ஓர் உபாதியால் அன்றியே வாயால் திருவரங்கம் -என்பார்கள் ஆகில்
சம்சாரம் கரம்பெழுந்து போம் ஆகாதே -என்கிறார் –

எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
பொறியில் வாழும் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –13-

————-

பிறர் முகம் பார்த்து சொல்லியும்
தம்மிலே சொல்லியும்
இப்படி ஹிதம் சொன்ன இடத்திலும் அவர்கள் விமுகர் ஆகையாலே
அவர்களை வெறுத்து

அவர்களோட்டை சகவாசத்தாலே வந்த கிலேசம் தீர
கர்ப்பூர நிகரத்தை வாயிலே இடுவாரைப் போலே
கோயிலை அனுபவித்து

இப்படி தங்களுக்கு செல்ல பிராப்தமாய் இருக்க இத்தை அநாதரிப்பதே என்று
அவர்களை உபேஷா வசனத்தைப் பண்ணி இவர்
பரோபதேச சாந்நிவர்த்தகர் ஆகிறார் –

இது ஸ்வ அனுபவமாய் இருக்க
பரோபதேசமாகத் தலைக் கட்டுகிறது
சத்துக்கள் அனுபவ ஜ்ஞானம் பிறர்க்கு கர்த்தவ்யமாக கடவது இறே-

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–14-

——–

முதல் மூன்று பாட்டாலே -ஸுவ லாபத்தைப் பேசி
அனந்தரம் –
பதினொரு பாட்டாலே -பரோபதேசம் பண்ணி –
அது தன்னை சம்சாரிகள் ஸ்வீகரியாமையால்
அவர்கள் பக்கல் நின்றும் கால் வாங்கினாராய் நின்றார் -கீழ் –

இவர்களிலே
அந்ய தமனாய் இருந்துள்ள என்னை –
பரோபதேசம் பண்ண வல்லனாம்படி
ஸ்வ விஷயத்திலே –
சம்சய நிவ்ருத்தி முதலாக –
பரம பக்தி பர்யந்தமாக பிறப்பிப்பதே -என்று
பெரிய பெருமாள் தமக்கு நிர்ஹேதுகமாகப் பண்ணின
மகா உபகாரத்தை –
மேல் பத்துப் பாட்டாலே -அருளிச் செய்கிறார் –

இது இறே க்ருதஞ்ஞர் உடைய ஸ்வ பாவம் இருக்கிற படி –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -என்னா நிற்பார்கள் இறே –

இப்பாட்டில் –
அத்வேஷம் பிறந்த அளவில்
தன் படிகளை எல்லாம் காட்டிக் கொடுக்கும் என்றும்
தானும் ஒருவன் உளன் என்று அறிந்த அளவில்
சம்சய நிவ்ருத்தியைப் பண்ணி வைக்கும் என்றும்
இவ் வர்த்தத்தை
எனக்கு அத்வேஷம் பிறந்த அளவிலே
காட்டித் தர
அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –

மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-

———-

பிராப்யமும் பிராபகமும்
தானே என்னும் இடத்தில் சம்சயத்தை அறுத்துத் தந்தாப் போலே
தத் அனந்தர பாவியான ஆதரத்தை தன் பக்கலிலே
அனுகுணமாகப் பெருகும் படி பண்ணினான்
என்கிறார்-

சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-

————-

கீழ்
ஆதரம் பெருகின படி சொல்லிற்று
இதில்
அகவாயில் ஆதரம் விளைந்து
புறவே கட்டு அழியாமல் இருக்கை அன்றிக்கே
சஷூராதி கரணங்களும்
தன்னைக் கண்டு சேதன சமாதியாலே களிக்கும் படி பண்ணினான் –
என்கிறார் –

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –17-

———-

கண்களினுடைய களிப்புக்கு போக்கு வீடான
ஆனந்தா ஸ்ருக்கள் பிரவஹிக்கையாலே
குட்யாதி வ்யவதானம் போலே
அநுபாவ்ய விஷயத்தை மறையாது நின்றது -என்று வெறுக்கிறார் –

இனித் திரைத் திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக்கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும்புதிரு மாலோ வேன்செய்கேன் பாவியேனே-18-

————-

சஷூர் யாதி அவயவங்களுக்கு பிறக்கிற விக்ருதிகள் அன்றிக்கே
தத் ஆஸ்ரயமாய் அவயவியான சரீரம் தானே கட்டழியா நின்றது
என்கிறார்

குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக்
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே--19-

———-

இவ் விஷயத்தில் ப்ராவண்யத்தை தவிர்த்து
எங்களைப் போலே தேக யாத்ரா பரராய் வர்த்திக்கவே தரிக்கலாம் -என்ன
கண் வளர்ந்து அருளுகிற அழகைக் கண்டு வைத்து
இஸ் ஸ்மர்த்தி யடங்க எங்களுக்கு -என்னும்படியான ஸ்வரூப ஞானம் உடைய எங்களுக்கு
அஹம் மம -என்கிற உங்களைப் போலே
அகல விரகு உண்டோ
என்கிறார் –

பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–20-

——–

அகலப் போகாதாகில்
பரிச்சேதித்து அனுபவிக்கப் போகலாகாதோ -என்கிற
திரு உள்ளத்தைக் குறித்து –
இவ் விஷயத்திலே துணிவு இல்லாமையாலே அநாதி காலம் இழந்த
அறிவு கேடு போலே இருப்பது ஓன்று காண்-
இப்போது பரிச்சேதித்து அனுபவிக்கலாம் என்று கணிசிக்கிற இதுவும் –
என்கிறார் –

பணிவினால் மனமது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியினார் செம் பொன்னாய வருவரை யனைய கோயில்
மணியினார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கலாமே–21-

—————–

நினைக்க ஒண்ணாதாகில்
வாய் விட்டு பேசினாலோ -என்ன
மநோ பூர்வோ வாக்குத்தர -அன்றோ
மனசால் பரிச்சேதிக்க ஒண்ணாதா விஷயத்தை பாசுரம் இட்டு முடிக்கப் போமோ –
பேசலாம் என்று -அறிவு கெட்ட நெஞ்சே சொல்லாய்
என்கிறார் –

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்–22-

———–

நினைக்கவும் பேசவும் ஒண்ணாது ஆகில்
இவ் விஷயத்தை விஸ்மரித்து தரித்தாலோ -என்ன
பெரிய பெருமாள் உடைய கிடை அழகிலே அதி சபலனான நான்
விஸ்மரித்து எங்கனே தரிப்பேன் –
என்கிறார்-

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே–23-

—————-

மனத்தினால் நினைக்கலாமே -என்றும்
பேசத் தான் ஆவதுண்டோ -என்றும்
எங்கனம் மறந்து வாழ்கேன் -என்றும்
இவர் மறக்கப் புக்க வாறே இவரை நினைப்பிக்கைக்காக
இவர் பக்கல் தமக்குண்டான பிரேமத்தைக் காட்டக் –
கண்டு –

இவ் விஷயத்தில் நமக்கு உண்டான ப்ரேமம் அசத் சமமாய் இருந்ததீ என்றும்
இன்னமும் இவ் விஷயத்தின் உடைய வைலஷண்யத்தை அனுசந்தித்து
தமக்குப் பிறந்த பக்தி விஷய அனுரூபமாகப் போரமையாலும்
அசித் சம்ச்ருஷ்டனுக்கு பிறந்த பிரேமம்
பித்தோபஹதனுக்கு பிறந்த தெளிவு போலே விஸ்வசிக்க ஒண்ணாமை யாலும்
அனுதபித்து

திரு உள்ளத்தைக் குறித்து
உனக்கு இதர விஷயத்தோபாதி இவ் விஷயத்திலும்
கர்த்ரிம ஸ்நேஹமாய் விட்டதாகாதே -என்று
திரு உள்ளத்தை நிந்திக்கிறார் –

வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள்;
கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே–24-

———————

கீழ்
பகவத் விஷயத்தில் தமக்கு பிறந்த ஆதாரம் விஷய அனுரூபமாகப் போராமையாலும்
அசித் சம்சர்க்க யுக்தனுக்கு பிறந்தது ஆகையாலே பித்தோப ஹதனுக்கு பிறந்த
தெளிவு போலே விஸ்வசிக்க ஒண்ணாமை யாலும்
திரு உள்ளத்தைக் குறித்து அனுதபித்தவராய் நின்றார்

இனி
அசித் சம்சர்க்கம் அற்று ஒரு தேச விசேஷத்திலே நித்ய அனுபவம் பண்ணுகைக்கு
நம் கையில் முதல் காண்கிறிலோம்
நாம் விஷயத்தை இழந்தே போம் இத்தனை -யாகாதே -என்று சோகிக்க

நீர் சோகிக்கிறது என் –
அசித் சம்சர்க்கம் அற்று நம்மைப் பெறுகைக்கு சாஸ்த்ரங்களிலே
த்ரைவர்ணிக அதிகாரமாயும் சர்வாதிகாரமாயும்
உண்டான சாதனங்கள் பிரசித்தம் அன்றோ
அவற்றில் ஒன்றை அனுசந்தித்து நம்மை கிட்ட மாட்டீரோ என்ன –

எனக்கு அவை ஒன்றிலும் யோக்யதையே தொடங்கி இல்லை என்றும்
மேல் பத்துப் பாட்டாலே
தம்முடைய உபாய சூன்யதையை அருளிச் செய்கிறார்

ஆனால் பின்னை கீழ் இவருக்கு பிறந்ததாகச் சொன்ன ஜ்ஞான பக்திகள்
என்னவாய்த்து என்னில்
பகவத் பிரசாதத்தாலே பிறந்த போக உபகரணமான
ஜ்ஞான பக்திகள் யாய்த்து அங்குச் சொல்லிற்று –
அவை சாதன கோடியிலே அந்தர்பவியாது

அவ் வநுபவம் காதாசித்கம் அன்றிக்கே நித்யமாகைக்கு தம் கையிலே
சாதனம் இல்லை என்கிறார் -இங்கு –

இதில்
முதல் பாட்டில்
பிரசித்தமாய் தரை வர்ணிகர் ஆனவர்களுக்கு அதிகாரமான
ஞான பக்திகள் எனக்கோர் அந்வயம் இல்லை–என்கிறார் –

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –25-

—————

த்ரை வர்ணிக அதிகாரமான
உபாயம் இல்லை யாகில்
சர்வாதிகாரமான -அர்ச்சன ஸ்த்வ நாதிகள் தான் உண்டோ வென்னில் –
அதுவும் இல்லை -என்கிறார் –

போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே–26-

———————

மனுஷ்ய அதிகாரமானவை ஒன்றும் இல்லை யாகில்
திருவடி திரு அநந்த ஆழ்வான் முதலானவர்களைக் கொள்ளும் அடிமையை
சாஸ்திர அவஸ்தை இன்றிக்கே இருந்துள்ள
திர்யக்குகளைக் கொள்ளுவதாக நாம் வந்து அவதரித்த காலத்தில்
திர்யக் சாமான்யத்தாலே அணில்கள் ஸூத்த பாவனை யோடே
பண்ணின சில கிஞ்சித் காரம் உண்டு –
அது தானும் உண்டோ வென்னில்
அதுவும் இல்லை என்கிறார் –

குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –27-

——————-

அணில்கள் திர்யக்காக வைத்து நமக்கு கிஞ்சித் கரிக்க உத்யோகித்த பாவ சுத்தி
உமக்கு இல்லை யாகில்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பொய்கையிலே புக்கு இடர் பட்டு நாம் சென்று தனக்கு உதவக் கடவதாக
நினைத்ததொரு நினைவு உண்டு
அது தானும் உமக்கு உண்டோ -வென்ன
அதுவும் இல்லை -என்கிறார் – –

உம்பரால் அறியலாகா யொளி உளார் ஆனைக்காகிச்
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே–28-

——————-

ஆனை இடர் பட்ட போது அது தனக்கு உதவுகைக்காக நினைத்த நினைவு
உமக்கு இல்லையாகில்
ஸ்ரீ சாளக்ராமம்
ஸ்ரீ அயோதியை
ஸ்ரீ கோயில் முதலாக
நாம் உகந்த நிலங்களிலே ஒருவனுக்கு ஜன்மாதிகள் உண்டானால்
அவனை நமக்கு ரஷித்தே தீர வேணும்
அங்கனே இருப்பன சில உண்டோ -வென்ன –
அவையும் எனக்கு இல்லை -என்கிறார்-

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –29-

———————-

1-பிரசித்தமான கர்மாத்யுபாயங்கள் இல்லை
2-ஸ்திரீ சூத்திர அதிகாரமான த்யான சங்கீர்த்த நாதிகளும் இல்லை –
3-அணில்களுக்கும் உண்டான பாவ சுத்தியும் இல்லை –
4-ஆனை இடர்பட்ட போது நினைத்த நினைவும் இல்லை –
5-புண்ய தேச வாசத்தால் வரும் நன்மையையும் இல்லை –
என்றார் -கீழ் அஞ்சு பாட்டாலே –

இந் நன்மைகள் ஒன்றும் இல்லை யாகிலும்
உம்முடைய பக்கல் தீமைகள் இல்லை யாகில்
உம்மால் வரும் இழவு இல்லாமையாலே உம்மை அங்கீ கரித்து உம்முடைய கார்யங்களும் செய்கிறோம்
அது இருந்த படி என் என்று பெரிய பெருமாள் கேட்டு அருள –

நன்மைகள் ஒன்றும் இல்லாதோபாதி
தீமைகள் எனக்கு இல்லாதது இல்லை -என்கிறார் மேல் அஞ்சு பாட்டாலே

அதில் –இப்பாட்டில் –
ஆனுகூல்ய பாவத்தை அனுபாஷித்துக் கொண்டு
தம்முடைய பர ச்ம்ருத்த்ய சஹத்வம் ஆகிற
அநாத்ம குணத்தைப் பேசுகிறார் –

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே–30-

—————–

சாஸ்த்ரீயமாய்-மோஷார்த்தமான விஷயங்களிலே
எனக்கு ஓர் அந்வயம் இல்லை என்றீர்

ஸ்வர்க்க பலார்த்தம் ஆதல்
விப்ரலம்பகத்ர்ஷ்ட பலார்த்தமாக வாதல் –
சத் கர்மாதிகளைப் பண்ணிப் போந்தீர் ஆகில்
அவற்றில் உபாயமாக்கி நன்மையில் மூட்டி விடுகிறோம் –
அவை தான் உண்டோ -என்ன –

அவை ஒன்றும் ஸ்வ பிராப்திக்கு பரிகரமாக தேவரீர் தந்த ஜென்மத்தை
விஷய பிரவணனாய்
ப்ரந்வேஷத் விநாச ஹேதுவாக்கத் தந்தீராகக் கொண்டேன் -என்கிறார் –

ஆனால்
கீழ் பாட்டோடு இதுக்கு சங்கதி என் என்னில்
பர ச்ம்ர்த்த்ய அசஹத்வமே அன்றிக்கே
விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பந்து ஜனங்களுக்கும்
அசல் ஆனேன் –என்கிறார் –

தவத்துள்ளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உளானே–31-

———–

நம் பக்கல் விமுகரான சம்சாரிகளுக்கும் கூட ஆகாத படி
வர்த்தித்த நீர் நம் பக்கலில் வந்த படி என் -என்ன
பிரதிபன்னகாரிகளாய் இருப்பார் செய்யும் அவற்றுக்கு ஒரு அடைவு உண்டோ
என் மௌர்க்யத்தாலே வந்தேன் –
என்கிறார்

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே--32-

————

இப்படி-
நன்மைகளும் இல்லை
தீமைகளாலும் குறைவில்லை
நான் இங்குத்தைக்கு ஆகாத ஒருவன் -என்கிறார்

அநந்தரம் –
மேல் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் சங்கதி என் என்னில்
மூர்கனேன் வந்து நின்றேன் -என்று
அந்த மௌர்க்யம் ஹ்ருதயத்தில் பட்டுச் சொல்லுகிறீரோ -என்னில் –
அதுவும் -பொய் –என்கிறார் –

ஆனால்
நம்மைக் கிட்டுகைக்கு ஒரு உபாயம் இல்லை யாகில்
மேல் போக்கு என்ன -என்று கேட்க

தேவரீர் திருவடிகளோட்டை சம்பந்தமும்
கிருபையும் ஒழிய
வேறு உண்டோ -என்று
சரம உபாயமான கிருபையை
வெளியிடுகிறார் –

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே –33-

——————-

ஜ்ஞான ப்ரசர த்வாரமான -மனசிலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்
நம் குற்றங்களை நேராக அறியும் சர்வஞ்ஞனான -இவனை –
பொய்யனான நான் கிட்டி –
அவத்யத்தை விளைத்து
என்ன கார்யம் செய்தேன் -என்று லஜ்ஜித்து –

இதில் காட்டில்
நம் குற்றம் அறிகைக்கு ஜ்ஞானம் இன்றிக்கே இருக்கிற
சம்சாரிகளோடே முடிந்து போகையே நன்று என்று
பெரிய பெருமாள் திருவடிகளிலே நசை அற்று
அகலுகிறார் –

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே–34-

———————–

இப்படி இவை கை வாங்கின வாறே
பெரிய பெருமாள் -இவரை இழந்தோம் ஆகாதே -என்று நொந்து
ஆழ்வீர்-நீர் அகல நினைத்ததற்கு ஹேது என்
என்று கேட்டு அருள –

சர்வஞ்ஞரான தேவரீர் திரு முன்பே க்ர்த்ரிமங்களை சொல்ல
உம்மைக் கிட்டி
அவத்யாவஹன் ஆகும் காட்டில்
என் சுவடு அறியாத சம்சாரிகளும் நானுமாய் இருக்கப் பார்த்தேன் -என்ன

நீர் கிட்டின பிரயோஜனம் அழகிது –
நாம் தோஷத்தில் அவிஞ்ஞாதா –
அவர்கள் குணங்களில் அவிஞ்ஞாதா –
அவர்கள் தோஷத்தில் சர்வஞ்ஞர் –
நாம் குணசர்வஞ்ஞர்
ஆகையால் நம் வாசல் சர்வாதிகாரம் -காணும் -என்ன

இது உக்தி மாத்ரமேயோ –
அனுஷ்டானமும் உண்டோ வென்ன –

பண்டே அடிபட்டுக் கிடக்கிறது காணும் என்று
த்ரிவிக்ரம அபதானத்தைக் காட்டிக் கொடுத்தான் –

த்ரிவிக்ரம அபதானம் கேட்டு அறியீரோ –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற
எல்லார் தலையிலும் நம் கால் பொருந்தின படி அறியீரோ -வென்று –
சீல ஆதிக்யத்தையும்
தன் செல்லாமையையும்
காட்டி –
சமாதானம் பண்ண
சமாஹிதர் ஆகிறார் –

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –35-

————————-

அயோக்யன் என்று அகலாதபடி தன் நீர்மையைக் காட்டி சேர விட்டுக் கொண்டான்
என்றார் கீழில் பாட்டில் –

இதில் –
தம்முடைய அயோக்யதை கழிந்தவாறே
ப்ராப்யத்தில் த்வரை மிக்கு
யோக்யரைக் கொண்டு போய் அடிமை கொள்ளும் தேசத்து ஏறக் கொடு போக வேண்டி இருந்தார்

அது செய்யக் கண்டிலர்
அதுக்கடி இவரை அகலாமே சேர விடுக்கைக்கு தான் பட்ட பாடு அறியுமவன் ஆகையாலே
ஆமம் அற்றுப் பசி மிக வேணும் என்று பேசாது இருந்தான் –

விஷயங்கள் நடமாடும் தேசத்தில் இருந்து கிலேசப்பட்டே போம் இத்தனை ஆகாதே -என்று
பிராப்யத்தில் த்வரையாலும்
விரோதியில் அருசியாலுமாக
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருள அரிதாம்படியாகவும்
கேட்டார் எல்லாரும் நீராம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிடுகிறார் –

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –36-

———————–

இப்படி கூப்பிடச் செய்தேயும்
பெரிய பெருமாள் இரங்கி -மாஸூச -என்னக் காணாமையாலே
தம்மை ஒழிய வேறு எனக்கு ஒரு பந்துக்கள் உண்டாய் இருக்கிறாரோ

பிரயோஜனாந்த பரனாய்
பந்தகமாய் இருந்துள்ள புருஷார்த்தத்தை அபேஷிக்கிறான் -என்று இருக்கிறாரோ

நம்முடையவன் என்று அங்கீ கரிக்க நான் பிழைப்பேன் ஆகில்
இத்தனையும் செய்யாதே ஆர்த்த த்வனி கேட்டு
கண் உறங்கும் படி
அம்மே –
இவர் திரு உள்ளம் இப்போது இங்கனே கொடியதாய் யாய்த்து ஆகாதே
என்று இன்னாதாகிறார் –

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –37-

————————–

ஸ்ரீ மகா பாரதத்துக்கு சரம ஸ்லோகம் போலே யாய்த்து
இப்பிரபந்ததுக்கு இப்பாட்டு

மகா பாரதம் ஆகிறது –
மதிமந்தா நமாவித்ய யேனா சௌ சுருதி சாகராத்
ஜகத்தி தாய ஜனித்த மகா பாரத சந்த்ரமா -என்கிறபடியே –
ஸ்ருதி சாகர சந்தரமா வாய்த்து மகா பாரதம் –

சர்வேஸ்வரன் ஷீராப்தியைக் கடைந்து
தேவர்களுக்கு அம்ர்தத்தைக் கொடுத்தான் –

ஸ்ரீ வேத வியாச பகவான் சுருதியைக் கடைந்து
சர்வாஹ்லாத கரமான மகா பாரதத்தை சம்சாரிகளுக்கு
ஆத்ம உஜ்ஜீவன ஹேதுவாக கொடுத்தான் –

தேவர்களுக்கு ஈஸ்வரன் கொடுத்த அமர்த்தம் பந்தகம்
ஸ்ரீ வேத வியாச பகவான் சம்சாரிகளுக்கு கொடுத்த மகா பாரதம் சம்சார விமோசகம் இறே –

அம் மகா பாரதம் தான் கோது என்னும்படி ஆய்த்து ஸ்ரீ கீதை
அதில் சாரம் யாய்த்து சரம ஸ்லோகம்
இது சொல்லுகைக்காக -கீழ் அடங்கச் சொல்லிற்று –

இதந்தே நாதபஸ்காய -என்று தொடங்கி
இந்த சரம ஸ்லோகத்தின் கௌ ரவத்தைச் சொல்லுகிறது மேல் –

அப்படியே
இப் பாட்டு அவதரிக்கைக்காக வாய்த்து
இப் பிரபந்தம் அவதரித்தது –

இதுக்கு மேலே –
இப்பிரபந்த சேஷமும் இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தத்தில்
நிஷ்டராய் இருப்பார் உடைய ஏற்றம் சொல்லுகிறது –

ஆக
மகா பாரத சாரம் -சரம ஸ்லோகம் -ஆனால் போலே
இப்பிரபந்த சாரம் -இப்பாட்டு –

இது தான் த்வயத்தின் உடைய அர்த்தத்தைச் சொல்லுகிறது –
த்வயத்தில் பிராபகம் முன்னாய்-பிராப்யம் பின்னாய் -இருக்க
இதில் பிராப்யம் முன்னாய் -பிராபகம் பின்னாய் -இருப்பான்
என் என்னில்

வ்யுத்பத்தி வேளையிலே
பிராப்யம் முன்னாகவும்
பிராபகம் பின்னாகவும் இருக்கக் கடவது இறே
ஸ்வர்க்க காமோ ஜ்யோதிஷ்டோமேன யஜேத -என்று இறே வ்யுத்பத்தி வேலை இருப்பது –

அனுஷ்டான வேளையிலே
ஜ்யோதிஷ்டமோம் அனுஷ்டான பூர்வகமாக இறே ஸ்வர்க்க சித்தி
பிராபக நிஷ்டையால் இறே பிராப்யம் சித்திக்கும்

அப்படியே
இப் பாட்டிலே வுயுத்பத்தி வேளையாய்
த்வயத்தில் அனுஷ்டான வேளையாய்
இருக்கிறது –

அதில் பூர்வபாகத்தளவிலே அனுசந்தித்தார் நம் ஆழ்வார் –
உத்தர பாகத்தை அனுசந்தித்தாள் ஆண்டாள்
அவ் விரண்டையும் சேர அனுசந்தித்தார் இவ் ஆழ்வாரே யாய்த்து-

இப்பாட்டுக்கு கீழ் பாட்டோடு சங்கதி என் என்னில் –
அளியல் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே -என்று
கிலாய்த்து வார்த்தை சொன்னவாறே

விஷயாந்தர பிராவண்ய கரமான சம்சாரத்தில்
வகுத்த புருஷார்த்தத்தை அபேஷிக்கையும்-
தத் சித்திக்கு நம் கை பார்த்து இருக்கையும் –
அதுக்கு மேலே விளம்பம் பெறாதே கிலாய்க்கையும்
ஆக
இவ்வளவு புகுர நிற்பாரை பெறுவோமே என்று
பெரிய பெருமாள் திரு உள்ளம் பிரசன்னமாய்

திரு உள்ளத்தில் ஹர்ஷம் அடங்கலும்
திரு முகத்தில் தோற்றும் படியாய் இருக்க

தேவரீரைக் கிட்டி தேவரீர் பக்கலிலே ந்யஸ்த பரராய்
தம்தாமுடைய ஹிதத்தில் கை வாங்கி இருப்பாரைக் கண்டால்
இங்கனேயோ தேவரீர் திரு உள்ளம் இருப்பது என்று
பெரிய பெருமாள் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார் –

சரம ஸ்லோகம் பிராப்தியை விதிப்பதாய் இருக்கும் –
அதில் ருசி உடையாருடைய அனுசந்தானமாய் இருக்கும் -த்வயம் –
த்வய நிஷ்டர் பக்கலிலே ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை
சொல்லுகிறது -இப்பாட்டு –

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38-

————————–

மேல் ஆறு பாட்டும்
இந்த ஜ்ஞானம் உடையார் உடைய
ராஜகுலம் சொல்லுகிறது –

இவருடைய
பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்கு அடிமை —
இருக்கிறபடி

ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்களால்
குறைய நின்றார்களே யாகிலும்
இவர்கள் இந்த ஜ்ஞானம் உடையவர்கள் ஆகில்
உத்தேச்யர் -என்கிறார் –

இப் பாட்டால் –
எத்தனையேனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தார்களே ஆகிலும்
இந்த ஜ்ஞானத்தில் நிஷ்டை உடையவர்கள் ஆகில்
திருத் துழாயோ பாதி ஈஸ்வரனுக்கு சிரஸா
வஹிக்கப் படுவர்
என்கிறார்-

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே--39-

————————-

ஜன்மத்தால் வந்த தண்மை அன்றிக்கே
எத்தனையேனும் தண்ணிய வ்ர்த்தம் உடையாரும்
மேம் பொருளில் -சொன்ன ஜ்ஞானத்திலே உண்டார் ஆகில்
அவர்களுக்கு அந்த கர்ம பலம் அனுபவிக்க வேண்டா –
என்கிறார் –

திரு மறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தராகில் மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவறக் கொன்று சுட்டிட் டீட்டிய வினையரேனும்
அருவினைப் பயனது உய்யார் அரங்க மா நகர் உளானே –40-

———————–

இவர்களுக்கு ஜன்ம வ்ருத்தங்களால் வரும்
இல்லாமையே அன்று
தங்களோடு சம்பந்தித்த சம்சாரிகளுக்கும்
தங்கள் அங்கீ காரத்தால் பரிசுத்தராம்படியான
உத்கர்ஷத்தை உடையவர்கள் என்கிறார்-

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பாராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்கள் ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –41-

———————–

ஜன்ம வ்ர்த்தாதிகளால் குறைய நின்றே
இந்த ஜ்ஞானம் உடையவர்கள்
இந்த ஜ்ஞான விதுரராய்
ஜன்ம வ்ருத்தாதிகளால் உயர்ந்தவர்களுக்கு
சர்வேச்வரனோபாதி பூஜ்யராய்
ஜ்ஞான பிரதான ப்ரதிக்ர ஹவ்யவ ஹாரங்களுக்கும்
அர்ஹர் ஆவார் என்கிறார்-

பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே–42-

———————–

கீழ்ச் சொன்ன ஜன்ம வ்ருத்தாதிகளுக்கு மேலே
ஜ்ஞானாதிகாருமான இவர்கள்
ஜன்ம வ்ருத்தாதிகள் இன்றிக்கே
இந்த ஜ்ஞானம் உடையார் ஆனவர்களை
பகவத் பிரசாதத்தாலே வந்த வை லஷ்ண்யத்தை புத்தி பண்ணாதே
கர்ம நிபந்தனமான ஜன்மாத்ய அபகர்ஷத்தையே புத்தி பண்ணி
தாழ நினைத்தார்கள் ஆகில்
அந்த ஷணத்திலே அவர்கள் தான் சண்டாளர்கள்
என்கிறார் –

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –43-

———————–

கீழ் பிரதிபாதித்த அர்த்தங்கள் உஜ்ஜீவிக்கும் என்னும் இடம்
ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை
திர்யக் ஜாதியிலே பிறந்த ஒருவன் பெற்ற பின்பு சொல்ல வேணுமோ என்று
அன்யாபதேசத்தாலே
ஸ்வ லாபத்தைச் சொல்லித் தலைக்கட்டுகிறார் –

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே–44–

——————–

நிகமத்தில் –
குவலயா பீடத்தைப் போக்கினால் போலே
தம்முடைய பிரதிபந்தகத்தைப் போக்கின படியைச் சொல்லி –
பெரிய பெருமாள் உடைய ப்ரீதியே
தமக்கு பிரயோஜனம் என்று முடிக்கிறார் –

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே--45-

———————————————————-

ஸ்ரீயபதி கிருபையால்
யதார்ச்சிகமாக -திரு நாம சந்கீர்த்தனத்தாலே –
யமாதிகள் தலையிலே காலை வைத்தேன் -என்றார் முதல் பாட்டில் –

அதனுடைய இனிமையால் பரமபதம் வேண்டாம் என்கிறார் -இரண்டாம் பாட்டில் –

அத்தோடு விரோதிக்கும் சம்சாரமும் வேண்டாம் என்கிறார் -மூன்றாம் பாட்டில் –

பாப பிரசுரர்க்கும் திரு நாமம் சொல்ல அதிகாரம் உண்டாய் இருக்க
இவ்விஷயத்தை இழப்பதே என்றார் -நான்காம் பாட்டில்

அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டங்களான ப்ராக்ருதங்களைப் பற்றுவார்
அவிசேஷஞ்ஞர் என்கிறார் -ஐந்தாம் பாட்டில்

போக்தாவின் நிலை இல்லாமையைச் சொன்னார் ஆறாம் பாட்டில் –

முமுஷூகளாக பிரமித்து இருக்கிற பாஹ்யரைக் குறித்து
ஆஸ்ரயணீய வஸ்துவை உபதேசித்தார் ஏழாம் பாட்டில்

இது கேட்டால் பொறாதவர்கள் என்கிறார் எட்டாம் பாட்டில்

இசைந்தவர்களைக் குறித்து ஸூலபனான கிருஷ்ணனை ஆஸ்ரயிங்கோள் -என்றார் ஒன்பதாம் பாட்டில்

பிற்பாடர்க்கு உதவும்படி கோயிலிலே சந்நிஹிதர் என்றார் -பத்தாம் பாட்டில்

உறவு அறிந்தார்க்கு அகல ஒண்ணாது –
அதுக்கு கண் அழிவு உடையார் கர்ப்ப நிர்பாக்யர் -என்றார் பதினோராம் பாட்டில்

தாம் பெற்றாலும் பிறர் அநர்த்தம் பொறுக்க மாட்டேன் -என்றார் பன்னிரண்டாம் பாட்டில்

எல்லாரும் திருநாமத்தைச் சொல்லி பிழைப்பது காண் -என்று மனோரதித்தார் –பதிமூன்றாம் பாட்டில்

அவர்களோட்டை சம்சர்க்கத்தால் வந்த விடாய் தீர திரு நாமத்தைச் சொன்னார் -பதினான்காம் பாட்டில் –

சம்பந்த ஜ்ஞானம் பிறப்பித்தபடி சொன்னார் -பதினைந்தாம் பாட்டில்

விஷய அனுரூபமாக பக்தி பெருகின படியைச் சொன்னார் -பதினாறாம் பாட்டில்

கண் களித்த படியைச் சொன்னார் பதினேழாம் பாட்டில்

அது புற வெள்ளம் இட்ட படியைச் சொன்னார் -பதினெட்டாம் பாட்டில்

உடல் உருகின படி சொன்னார் -பத்தொன்பதாம் பாட்டில்

மனசால் பரிச்செதிக்க ஒண்ணாது -என்றார் இருபத்தொராம் பாட்டில்

பாசுரம் இட்டுப் பேச ஒண்ணாது -என்றார் இருபத்திரண்டாம் பாட்டில்

மறக்க ஒண்ணாது என்றார் -இருபத்து மூன்றாம் பாட்டில்

பிறந்த பக்தி விஷய வை லஷண்யத்துக்கு அனுரூபமாய் இராமையாலே
அது க்ர்த்ரிமம் -என்றார் இருபத்து நான்காம் பாட்டில்

சாஸ்த்ரியமான பக்த்யாதிகள் இல்லை -என்றார் -இருபத்து ஐந்தாம் பாட்டில்

ஸ்திரீ ஸூத்ராதிகளுக்கு உள்ள நன்மையையும் இல்லை என்றார் -இருபத்து ஆறாம் பாட்டில்

திர்யக்குகளுக்கு உள்ள நன்மையையும் இல்லை -என்றார் இருபத்து ஏழாம் பாட்டில் –

ஆனை தன் இடரிலே நினைத்த நினைவும் இல்லை -என்றார் இருபத்து எட்டாம் பாட்டில்

விலஷண தேச வாஸம் இல்லை -என்றார் இருபத்து ஒன்பதாம் பாட்டில்

இவை இல்லாமை அன்றிக்கே -பிறர்க்கு அநர்த்தன் ஆனேன் -என்றார் முப்பதாம் பாட்டில்

நீச விஷயங்களுக்கும் ஆகாதான் ஒருவன் -என்றார் முப்பத்தோராம் பாட்டில்

இப்படி இருக்க வந்து கொடு நின்ற மூர்க்கன் -என்றார் முப்பது இரண்டாம் பாட்டில்

அதுக்கடியான நிர்லஜ்ஜையை உடையேன் -என்றார் முப்பது மூன்றாம் பாட்டில்

இப்படிப் பட்ட நான் கிட்டி அவத்யத்தை விளைப்பேன் அல்லேன் -என்றார் முப்பத்து நான்காம் பாட்டில்
நீர்மையால் சேர்த்துக் கொண்டான் -என்றார் -முப்பத்து ஐந்தாம் பாட்டில்

விசேஷ கடாஷம் பண்ண வேண்டும் என்று கதறினார் முப்பத்து ஆறாம் பாட்டில்

அது பெறாமே கிலாய்த்தார் -முப்பத்து ஏழாம் பாட்டில்

இப்படி த்வரை உடைய பிரபன்னரை உகத்தி -என்றார் முப்பத்தி எட்டாம் பாட்டில்

அவர்களுக்கு ஜன்மத்தில் தாழ்வால் வரும் குறை இல்லை -என்றார் முப்பத்து ஒன்பதாம் பாட்டில்

அவர்களுக்கு ஹிம்சாதி வ்ருத்தத்தால் உண்டான பலம் அனுபவிக்க வேண்டாம் என்றார் -நாற்பதாம் பாட்டில்

தங்களோடு சம்பந்தித்தாரையும் பரிசுத்தர் ஆக்குமவர் -என்றார் நாற்பத்து ஒன்றாம் பாட்டில்

இவர்கள் நம்பெருமானோபாதி பூஜ்யர் -என்றார் நாற்பத்து இரண்டாம் பாட்டில்

இவர்களை ஜன்ம வ்ருத்தாதிகளாலே குறைய நினைத்தவர்கள் சண்டாளர் -என்றார் நாற்பத்து மூன்றாம் பாட்டில்

ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை ஒரு திர்யக்குக் கொடுத்தபடி சொன்னார் -நாற்பத்து நான்காம் பாட்டில்

இப்பிரபந்தம் கற்றார்க்கு பலம் அருளிச் செய்தார் நாற்பத்து ஐந்தாம் பாட்டில்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading