ஸ்ரீ திரு மாலை-6-மறஞ்சுவர் மதிள் எடுத்து -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

அவதாரிகை

விஷயங்களுக்கு அல்ப அஸ்திரத் வாதி தோஷங்கள்
அநேகம் உண்டானாலும்
எங்கள் உடைய த்யாகத்துக்கு ஹேதுவாக மாட்டாது –
ஏக விஷயத்தில் பூர்ண அனுபவம் பெற்றிலோமே யாகிலும்
விஷயங்கள் அநேகம் உண்டான பின்பு
ஒன்றில் இல்லாத நன்மை
மற்றையதில் கூட்டிக் கொண்டு அனுபவிக்கிறோமே -என்ன

அப்படியே யானாலும் அந்த போக்தா தான்
ஸ்திரனாக வேணுமே
அவ் விஷயங்களோபாதி
போக்தாவும் அஸ்திரன் என்று
போக்தாவினுடைய நிலை நில்லாமையைச் சொல்லுகிறார் –

——

மறஞ்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
அறஞ்சுவர் ஆகி நின்ற வரங்க னார்க்கு ஆட்செய்யாதே
புறஞ்சுவர் கோலம் செய்து புட் கவ்வக் கிடக்கின்றீரே

பதவுரை

மறம் சுவர்–கொடுமையாகிற சுவரை
மதிள் எடுத்து–மதிளாக எழுப்பியும்
மறுமைக்கு–ஆமுஷ்மிக பலத்திற்கு
வெறுமை பூண்டு –ஏழ்மையை மேற் கொண்டும் இருக்கிற நீங்கள்
புறம் சுவர்–வெளிச் சுவராய்
ஓட்டை–அநித்யமான
மாடம்–சரீரமானது
புரளும் போது–தரையில் விழும் காலத்தை
அறிய மாட்டீர்–அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற–தர்மமே ப்ரக்ருதியாக நிற்கிற
அரங்கனார்க்கு–அழகிய மணவாளனுக்கு
ஆள் செய்யாதே–அடிமை செய்யாமல்
புறம் சுவர்–வெளிச் சுவரான உடம்பை
கோலம் செய்து–அலங்கரித்து
புள் கவ்வ–பறவைகள் கவ்விக் கொள்ளும் படி
கிடக்கின்றீரே–கிடக்கின்றீர்களே.

மறஞ்சுவர் மதிள் எடுத்து
மறம் ஆகிற சுவரை அரணாக எடுத்து
க்ரௌர்ய சமுதாயத்தை யாய்த்து தனக்கு அரணாக நினைத்து இருப்பது –
அமாநித்வாதி ஆத்ம குணங்கள் எல்லா வற்றுக்குமாக
இவன் பக்கல் உள்ளது க்ரைர்யமே யாய்த்து –

மறம் –
அருள் இன்மையும்
கோபமும் –
தறுகண்மையுமாம் -தறுகண் -வீரம்

அதாவது
‘இவன் அதிக்ருத்யனாய் வர்த்தியா நின்றான்
தனக்கு அனர்த்தத்தை தானே சூழ்த்துக் கொள்ளா நின்றான் என்று
சத்துக்கள் ஐயோ -என்று தனக்கு ஹிதம் சொல்ல நினைத்தால்
தன் பக்கல் அணுக ஒண்ணாத படி க்ருத்தனாய் இருக்கும் –

ஒரு சாத்மிகன் தன் பக்கல் கிட்டாமைக்கு இடும் அரண் இது விறே –

ராவணனுக்கு
மாரீசன் மால்யவான் கும்ப கர்ணன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
இவர்கள் எல்லாரும் ஹிதம் சொன்ன இடத்தில்
சொன்ன ஹிதம் கேளாமையாலே-
தன்னோடு சேர்ந்த கும்ப கர்ணனும் மாரீசனும் முடிந்து போனார்கள்
அல்லாதார் திக்ர்தர் ஆனார்கள்
இது விறே துஷ் பிரக்ருதிக்கு ஹிதம் சொன்னால் படும் எளிவரவு

மதிள் எடுத்து -என்ற இது
இந்த க்ரௌர்யம் ஸ்வரூப பிராப்தமாய் வந்தது ஓன்று அன்று –
ஒரு நாள் வரையிலே -பகவத் விஷயீ காரம் அடியாக அழிவது ஓன்று என்று தோற்றுகைக்காக-

வீர சுந்தர ப்ரஹ்ம ராயன் சோழக் குடியில் இட்ட மதிள் போலே இறே
இவன் தான் பண்ணிக் கொள்ளும் அரண் விநாச பர்யந்தமாய் முடியும்படி –

(பூத பவ்ய பவந்நாத; கேசவ: கேசிஸூதந; -ப்ராகாரஸ் ஸர்வ வ்ருஷ்ணீநாமா பந்நாபயதோஹரி; (பாரதம்-ஸபாபர்வம்)
என்று அடியவர்க்கு மதிளாகக் சொல்லப்பட்ட எம்பெருமானை விட்டு மறஞ்சுவரை நீங்கள் மதிளாகப் பற்றினபடி மிகவுமழகியதே!)

இவன் இத்தால் பெற்ற பிரயோஜனம் சொல்கிறது மேல் –
மறுமைக்கே வெறுமை பூண்டு –
இவன் இருந்த காலத்திலேயே செய்த க்ரௌர்யம்
அத்ர்ஷ்டத்துக்கு தாரித்ர்யத்தை கூடு பூரித்த இத்தனை –

சரீர தாரணத்தோ பாதி
ஆத்ம தாரணமாய் இருப்பதொரு
நன்மையையும் வேண்டும் என்று இருந்தான் ஆகில்
ஈஸ்வரன் அத்தையே நினைத்து ரஷிக்கும் இறே –

தாது சாம்யே ஸ்திதி ஸ்மர்த்தா -என்கிறபடியே
ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக ஒரு கால் நினைத்தான் ஆகில் –
அஹம் ஸ்மராமி -என்று
அது தன்னை ஒன்றுமே கொண்டு முடிவ நடத்தும் இறே ஈஸ்வரன் –

சரீர விஸ்லேஷ சமனந்தரத்திலெ-அவ்வருகே ஒரு குளிர்ந்த விழி இல்லாதபடி
பண்ணிக் கொண்டான் ஆய்த்து –

இம்மையிலே வெறுமை யாகில்-ஆகமா பாயிகளுமாய் சரீரத்து அளவுமாய் இறே இருப்பது

மறுமையிலே வெறுமை யாகிறது -நித்தியமான ஆத்மாவுக்கு பிறந்தது ஆகையாலே வந்த தாரித்ர்யமும் நித்யம் இறே

இதற்கு முன்பு ஓன்று இன்றிக்கே ஒழிந்தாலும்
மேலே ஒரு நன்மை தேடிக் கொள்ளுகைக்கு தான் இல்லையே -என்கிறார்-

புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர் –
புறஞ்சுவர் -என்கிறது -தேகத்தை
புருஷார்த்த உபயோகியாக ஈஸ்வரன் தந்த சரீரத்தைக் கொண்டு
விஷயாந்தர பிராவண்யம் ஆக்குகையாலே –
புறஞ்சுவர் -என்கிறது
இத்தைக் கொண்டு ஆத்மாவுக்கு ஒரு நன்மை தேடினான் ஆகில்
அது தானே உத்தேச்யமாம் இறே

ஓட்டை மாடம் –
அப்பொழுது விழுந்தது இப்பொழுது விழுந்தது -என்னும்படி
அஸ்த்ரிமாய் இருக்கையாலே சொல்லுகிறார் –

ஓட்டை மாடம்
ஓடும் பூட்டும் கொண்டு சமாதானம் பண்ணி நிற்க வேண்டும்படி இருக்கை

மாடம் -என்கிறது
சம்சாரிகள் அபிப்ராயத்தாலே

(ஓட்டை மாடம் என்றும் இச் சரீரத்திற்கே நாமாந்தரம் போலும்.)

நீர் ஹிதம் சொல்லுகிறது இப்போது அன்றே
க்ரமத்தில் செய்கிறோம் -என்ன
புரளும் போது அறிய மாட்டீர் –
ஜீவிக்கும் காலம் இன்னளவு என்று அறிய மாட்டி கோள்-கெடுவிகாள்-
மரணம் அன்றோ தோள் தீண்டியாக வந்து நிற்கிறது –
க்ரமத்தில் செய்கிறோம் என்று ஆறி இருக்கலாமோ –

இருக்கும் நாள் அந்ய பரராய்க் கொண்டு உங்களுக்கு நன்மையைப் பார்த்திலி கோள்
இனி மரண வேளையிலே தானே சக்தர் அல்லி கோள்
நீங்கள் என்ன நன்மை தேட இருக்கிறி கோள்
இனி முடிந்து போம் இத்தனை யாகாதே -என்கிறார்-

(“ப்ராண ப்ரயாண ஸமையே கபவாதபித்தை: கண்டாவரோதநவி தௌஸ்மரணம் குதஸ்தே” (முகந்தமாலை)
என்றபடி அப்போது உங்களால் ஒன்றும் நன்மை தேடிக் கொள்ள முடியாது;
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்” என்றபடி செய்யுங்கள் என்று உபதேசிக்கிறாரென்றுங் கொள்ளலாம்.)

அறம் சுவராகி நின்ற –
தர்மமே ப்ர்க்ருதியாக நிற்கிறவர்
லோகாநாம் த்வம் பரோ தர்ம -என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும்
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்றும்
சித்த தர்மமாய் இருக்கிற இருப்பு -பிரக்ர்தி இறே-
உபாய உபேயத் வேததிஹ தவ தத்வம் னது குநௌ-என்னக் கடவது இறே –

ஆகி நின்ற –
உபாயாந்தரங்கள் போலே சாத்தியம் அன்றிக்கே
சித்யமாய்க் கொண்டு சமைந்து நின்றவர் –

சாத்திய தர்மங்களுக்கு பல வேளையில் வந்தால்
அவன் கை பார்த்து இருக்க வேணும்
அவன் தன்னை பற்றினார்க்கு வேறு ஒன்றை அபேஷிக்க வேண்டாமே –

இனி இவனுக்கு வேண்டுவது
இவன் அரணில் ஒதுங்குவோம் என்னாமை யாய்த்து –

பிரகாரஸ் சர்வ வ்ர்ஷீணாம்-என்று எதிலே ஒதுங்குவோம்
என்னும் குறைவாளர்க்கு
அரணாகச் சொல்லக் கடவது இறே –

நின்ற –
ஆசயாயத்வாராம -என்கிறபடியே
அவன் அவசர பிரதீஷனாய் நிற்கிறபடி –

(“தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே” என்ற வாயோலைப் படியே
தர்மத்திற்குச் சுவராய் (ரக்ஷகராய்) நின்ற என்றுமாம்.)

அரங்கனார்க்கு –
விஷயம் தூரம் என்னும் குறை இல்லை கிடீர் –
நம்மைக் கொள்ளுவார் ஆர் – என்று கிடக்கிறவர் ஆய்த்து –

ஆள் செய்யாதே –
இவன் தலையில் அனுஷ்டானம் இல்லாத பின்பு
பலத்தில் அன்வயிக்கும் இத்தனை இறே –
இவனுக்கு ஸ்வரூப பிராப்தமான பலமாகச் சொல்லுகிறது
அடிமை இறே –
இத்தை இறே இழந்து போனதே –

இவனுக்கு ஓர் இடத்திலும் பாரதந்த்ர்யம் தவிராது –
கார்ம பாரதந்த்ர்யம் ஆதல் –
ஈஸ்வர பாரதந்த்ர்யம் ஆதல் –
அதில் கர்ம பாரதந்த்ர்யதுக்கு இசைந்தான் -வாசனையாலே
ஈஸ்வர பாரதந்த்ர்யத்துக்கு இசைந்திலன் -பாபத்தாலே

ஆட் செய்யாதே –
உண்ணாதே -என்றாப் போலே இருக்கிறது யாய்த்து இவர்க்கு –

புறஞ்சுவர் கோலம் செய்து –
அசந்நேவச பவதி -என்கிறபடியே
ஆத்ம ஸ்வரூபம் அசத் சமமாக கிடக்கிற
வந்தேறியான உடம்பை ஒப்பித்துக் திரிகிறி கோள் இறே –
ஆத்மாவை அலங்கரிக்கை யாவது -அடிமை செய்கை இறே –

புத்தகங்களை அகவாய் பெருச்சாளி அறுத்துக் கிடக்கத்
தெருவுபாட்டை நூலும் துரும்பும் வைத்து
அலங்கரிக்குமா போலே யாய்த்து உடம்பை பேணுகை –

(இன்னடிசிலுண்பதும் பொன்னுடைமை பூண்பதும் பூந்துகில் சாத்துவதுமாய்
நீங்கள் சரீரத்திற்குச் செய்கிற கோலங்கள் சவாலங்காரத்தோடும் விதவாலங்காரத்தோடும் ஒக்குமென்றவாறு.)

புள் கவ்வ –
மாம்ச பஷணம் பண்ணித் திரிய கடவ
பஷிகளும் முந்துற கவ்வி –
பின்னை -க்ர்தக்ன மாம்சம் -என்று பொகட்டுப் போம் –

கிடக்கின்றீரே –
வகுத்த விஷயம் சந்நிஹிதமாய் இருக்க –
இங்கனம் அனர்த்தப் படுகிறீர்களே -என்று வெறுக்கிறார் –

பரர் அனர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறார் –
கோவை வாயாளில் படியே -அவன் சாத்தும் படியான உடம்பு படும் பாடே -என்று வெறுக்கிறார் –

இவர்கள் செத்துக் கிடக்கச் செய்தேயோ இவ் வார்த்தை சொல்லிற்று என்னில்
அங்கன் அன்று –
இவர்கள் உண்டு உடுத்து திரியா நிற்கச் செய்தே -கிடக்கின்றீரே -என்கிறார்

நேயமஸ்தி புரி லங்கா -என்று திருவடி சொல்லிற்று
ராவணன் சிம்ஹாஸ்தானானாய் இருக்கச் செய்தே இறே –

துர்யோனாதிகள் பூசல் களத்திலே பட்டுக் கிடக்க அவர்களை ஸ்ரீ வேத வியாசர் பகவான் கண்டு
நான் சொல்லிற்று செய்யாதே பட்டுக் கிடக்கிறி கோளே-என்று
வெறுத்தாப் போலே வெறுக்கிறார்

—————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading