ஸ்ரீ திரு மாலை-7–புலை யறமாகி நின்ற -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் -என்றும்
புள் கவ்வக் கிடக்கின்றீர் -என்றும்
எங்களை நிந்திக்கிறது என்-

சம்சார ஸ்வாபம் இங்கனே இருந்தது –
தண் துழாய் மாலை மார்பன் – என்று ஆஸ்ரயணீயனாகச் சொன்னவன்
தூரஸ்தன் ஆகையாலே எங்களுக்கு கிட்ட அரிது –

இன்னமும் ஆஸ்ரயிப்பார்க்கு விலக்கடிகள் பலவும் உண்டாய் இருந்தது –
அந்த தடைகளையும் அறுத்து –
ஆஸ்ரயணீயனையும் காட்டித் தாரும் என்ன –
இங்கே வந்து அவதரித்து
விரோதி நிரசன சீலனான தசரதாத் மஜனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

(ஸம்ஸாரிகளைத் தெளிவிக்க விரும்பிய ஆழ்வார், தேவதா நிஷ்கர்ஷம் பண்ணித் தருகிறார்–)

——————————–

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

பதவுரை

கலை–சாஸ்திரங்களை
அற கற்ற மாந்தர் –நன்றாக ஓதின மனிதர்
புலை அறம் ஆகி நின்ற–நீச தர்மமாயிராநின்ற
புத்தொடு சமணம்–பௌத்த மதம் க்ஷபண மதம் முதலிய
எல்லாம் –எல்லா மதங்களையம்
காண்பரோ–நெஞ்சாலே தான் ஆராய்வார்களோ?
கேட்பரோ–காது கொடுத்துத் தான் கேட்பார்களோ?
(அது நிற்க)
தலை அறுப்புண்டும்–என் தலையானது அறுக்கப் பட்டாலும்
சாகேன் –நான் சாக மாட்டேன்;
சத்தியம் –இது சத்தியம் ;
ஐயா–ஸ்வாமிகளே!
காண்மின்–(ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறேன்) பாருங்கள்;
சிலையினால்–வில்லாலே
இலங்கை செற்ற–இலங்கையை நாசஞ்செய்த
தேவனே –எம்பெருமானே
தேவன் ஆவான் –ஸர்வேஸ்வரனெனப்படுவான்

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்-
சதுர்விதமான பௌத்யம் சமணம்
முதலியனவை எல்லாம் –

புலை அறம்-நீச தர்மம் –
அதாகிறது –
ஜ்ஞான விஷயமான தார்த்தங்களும்
ஜ்ஞானமுமே யாய் உள்ளது

இதில் பிரமாணம் -பிரத்யஷமும் அனுமானமே -என்பாரும்
பதார்த்தங்கள் அனுமேயங்கள் ஜ்ஞானமே உள்ளது என்பாரும்
அனுமேயமாயும் பதார்த்தங்கள் இல்லை கேவல ஜ்ஞானமே உள்ளது என்பாரும்
அந்த ஜ்ஞானமும் இல்லை -சர்வமும் சூன்யம் என்பாரும்

சர்வத்தையும் சூன்யம் என்னலாமோ –
ஜகத் காரண கார்ய ரூபத்தாலே
நித்தியமாயும்
அநித்யமாயும்
பின்னமாயும்
அபின்னமாயும்
சத்தியமாயும்
அசத்யமாயும்
இப்படி அநேகம் என்பாரும்
ஆக இப்படி சொல்லுகிற நீச தர்மம் –

ஆகி நின்ற
நெல்லுக்கு களைகளைப் போலே
வைதிக தர்மத்துக்கு விருத்தமாய் பழையதாய் போரும் என்கை

எல்லாம் -என்கிறது
சாங்க்யம் வைசேஷிகம் பாசுபதம் -முதலானவை –

(புலையறம் ஆகி நின்ற
வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகர்ப்பால்
பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவையவை தோறு
அணங்கும் பலபலவாக்கி -திருவிருத்தம்
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும் நிற்க)

இவை நீச தர்மம் ஆனபடி எங்கனே என்னில்
ஈஸ்வர விபூதியில் ஒருவனை ஹிம்சித்தார்க்கு
சொல்லுகிற பாபங்களுக்கு அவதி இல்லை
ஈஸ்வரனையும் ஈஸ்வர விபூதியையும் அஞ்ஞான ராசியாலே
அழிக்கப் பார்க்கிறார்கள் இறே
அகண்ட்ய கண்டன ப்ரவர்த்தர் இறே -அடங்க-

கலையறக் கற்ற மாந்தர் –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாசங்களில்
நிலை நின்றவர்களாய்-வேத தாத்பர்யம் கைப் பட்டவர்கள் –
அவர்கள் ஆகிறார் -கூரத் ஆழ்வார் போல்வார்கள் இறே –

காண்பரோ கேட்பாரோ தான்-
இவற்றை நெஞ்சாலே ஆராய்தல்
செவியாலே கேட்குதல் -செய்வார்களோ –

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர
ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –

இஷ்ட சித்தி -என்பது
சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –

ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது
இத்தனை போது விளம்பித்தது என் என்ன
ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய

கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று
அருளிச் செய்து
புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளி
ஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்-

பாஹ்ய குத்ர்ஷ்டிகள் சத்தயா அசஹ்யமாகையும்
பகவத் விஷயம் சத்தயா தாரகமாயும் இறே
தர்சன நிஷ்டை -யாவது –

தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் –
நிர்த்தோஷ ஸ்ருதி பிரமாணம் என்று இருக்கும் அளவு இல்லாதார்க்கும்
இதுவே ஆஸ்ரயணிய வஸ்து என்னும் இடம்
பிரத்யஷத்தாலே சாதிக்கிறேன் –
அத்தையும் காணும் கோள்

மழுவைக் காய்ச்சி கையிலே இட்டால் அக்நி தன் கார்யம் செய்ய மாட்டாது ஒழிகிறது
அர்த்தத்தின் உடைய சத்யதையாலே இறே
அப்படியே என்னுடைய சிரச் சேதத்தைப் பண்ணினால்
அதின் கார்யமான மரணம் இன்றிக்கே இருந்ததே யாகில்
தசரதாத் மஜனே ஆச்ரயணீயன் என்று இரும் கோள்

தர்மாத்மா சத்யா சந்தச்ச -என்கிற பிரதிஞ்ஞையாலே
வர பலத்தாலே அறுக்கக் கடவதல்லாத தலை அறுக்கக் கண்டோம் இறே

அப்படியே அற்ற தலையின் கார்யமான மரணம் பிறவாத படி இறே இவர் பிரதிஞ்ஞை
தலை அறுக்கச் செய்தேயும் மரணம் இன்றிக்கே ஒழியக்
கூடுமோ என்னில் –
சத்தியம் காண்மின் –
பிரத்யஷ புகுகிறவற்றிலே-சம்சயிக்கிறது -என் –
நான் பண்ணுகிற த்ரஷ்ட பிரத்யயத்தைக் காணும் கோள் –

ஐயா–
அவர்கள் இறாயாதே காண்கைக்காக -இரக்கிறார் –

நீர் இனி பிரத்யயம் பண்ண வேண்டா –
பண்ணின பிரதிஞ்ஞையே அமையும் –

ஆஸ்ரயணீயன் இன்னான் என்று சொல்லல் ஆகாதோ -என்ன
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்-
வரம் கொடுத்த தேவதைகள் தாம் குலையாமே
சக்கரவர்த்தி திரு மகனாய் வந்து அவதரித்து
கையிலிலே வில்லாலே இலங்கையை அழிக்கச் செய்தவனே -ஆஸ்ரயணீயன்-என்கிறார்

தேவதைகள் தங்கள் அளவு அறியாதே
ராவணனுக்கு வரம் கொடுத்து
பின்னை தங்கள் குடி இருப்பு இழக்கும் படி -அவனாலே நெருக்குண்டு
போக்கற்ற அளவிலே திருவடிகளிலே வந்து விழுவார்கள் –
அதுக்குப் போக்கடி செய்கை ஈஸ்வரனுக்கே பரம் இறே

ப்ரஹ்மாதிகள் வர பலத்தாலே பூண் கட்டின இலங்கையை
சங்கல்ப்பத்தால் அன்றியே
கையில் வில்லாலே அழியச் செய்தவனே
உங்கள் விரோதியையும் போக்கி ரஷிக்கும் -என்கை –

தேவனே –
ராவண வத சமனந்தரத்திலே
கையும் வில்லுமாய் நின்ற போதை
வீர ஸ்ரீ யால் வந்த புகரை உடையவனே ஆஸ்ரயணீயன்-ஆவான் —

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading