ஸ்ரீ திருப்பாவை – சிற்றம் சிறுகாலே வந்து -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

(வேதம் அனைத்துக்கும் வித்து -வேதத்துக்கு ஓம் என்பது போல் -ரஹஸ்ய த்ரய விளக்கம் -ஸர்வாதிகாரம்
ஸ்வரூப உபாய உபேயங்களை சொல்லும் மந்த்ர விதி அனுசந்தான ரஹஸ்யங்கள் விளக்கும் திருப்பாவை –
மந்த்ர ரத்ன பூர்வ வாக்கியம் கீழ் கறவைகள் பின் சென்று
இதில் உத்தர வாக்கியம் -சரணாகதிக்குப் பலன் –
யதா ஸ்ருத ஞானம் இல்லாமல் பேரி வாத்யம் அல்ல நாங்கள் பிரார்த்தித்தது

கோவிந்தா உனக்கு அகார ஆய
நாம் -மகாரம்
கோவிந்தா உனக்கே -உகாரம்
கோவிந்தா உனக்கே ஆட் செய்வோம் -அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்
மற்றை நம் காமங்கள் மாற்று -உனது ஆனந்தத்துக்காகவே கைங்கர்யம்-திருமந்திர த்வய சரமஸ்லோக அர்த்தங்கள் சொன்னவாறு

மூன்றாவது கோவிந்தா -திரு நாமம் இதில் -தாத்பர்ய ஞானம் இல்லாதவனே -இதில்-இற்றைப் பறை கொள்வான் அன்று  காண் கோவிந்தா)

(காலை -சிறு காலை -விண்ணோர் பள்ளி எழுச்சி -சிற்றம் சிறுகாலை -அதுக்கு முன்பே எழுந்து இருந்து மற்ற கோபிகளைத் திருப்பள்ளி எழுப்பியது
பொற்றாமரை அடியே–திருக்கமல பாதம்–பாவானத்வமும் போக்யத்வமும்)

(உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாது -எதிர்மறை -இதில்-உன் தன்னோடு உற்றோமே யாவோம்)

அவதாரிகை –

இப் பாட்டில்
உபேய ஸ்வரூபத்தை
விவரிக்கிறார்கள் –

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

பதவுரை

கோவிந்தா–கண்ண பிரானே!
சிற்றம் சிறுகாலை–விடி காலத்திலே
வந்து–(இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து–உன்னைத் தெண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய்–கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ–பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ(உண்ணாத நீ )
எங்களை–எங்களிடத்தில்
குற்றேவல்–அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது–திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண்–இன்று (கொடுக்கப்படுகிற இப் பறையைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும்–காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–(உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்-யாவதாத்ம பாவி -பக்தி சாத்யமாவதால் எங்கும் தொடரும்
உன் தன்னோடு–உன்னோடு
உற்றோமே ஆவோம்–உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே–உனக்கு மாத்திரமே
நாம்–நாங்கள்
ஆள் செய்வோம்–அடிமை செய்யக் கடவோம்;
எம்–எங்களுடைய
மற்றை காமங்கள்–இதர விஷய விருப்பங்களை
மாற்று–தவிர்க்கருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

வியாக்யானம் –

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து –
சத்வோத்தரமான காலத்திலே
ஆற்றாமை யாலே வந்து
வருகை மிகை என்று இருக்கும்
உன்னைச் சேவித்து –

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-
பிராப்தமாய்
ஸ்ப்ருஹணீயமாய்
சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்யங்களாலே
பரம போக்யமான
உன் திருவடிகளையே
மங்களா சாசனம் பண்ணுகைக்கு
பிரயோஜனத்தைக் கேளாய் –

(ஸ்தனந்த்ய பிரஜைக்கு முலை போல் ப்ராப்தமான திருவடிகள்
லாவண்யம் -ஸமுதாய சோபை -திருவடிகள் -உப லக்ஷண முறையால் திருமேனியையே குறிக்குமே)

(தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -அவன் திருவாய் மலர்ந்து பேச வேண்டாமே)

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே-
ஸ்வ ரஷ்ய ரஷணம் பண்ணி தான் ஜீவிக்கிற குலத்திலே பிறந்த நீ
ரஷகனான நீ ரஷ்யரான எங்களை கைங்கர்யம் கொள்ளாமல் இருக்க ஒண்ணாது –
ரஷண ரூப கார்யம் இல்லாத போது ரஷ்ய ரஷ்க பாவம் ஜீவியாது இறே –

(அநஸ்யன் –உண்ணாதவன் -மரம் இரண்டு பறவைகள் -கர்ம வஸ்யம் இல்லாதவன் எங்கள் குலத்தில் பிறந்தாய்)

(ரக்ஷணம்–கைங்கர்யம் கொடுத்து உனது ஸ்வரூபம் -கைங்கர்யம் செய்வதே எங்களுக்கு தாரகம் உணவு)

(லோக பர்த்தா -ஆவதற்காக கௌசல்யை பெற்றாள் -ஒருத்தியை விட்டால் -பேர் கெடுமே
நாரணன் பெயர் நிலைக்க ரக்ஷணம் அனைவரையும் பண்ண வேண்டுமே)

இப்படி அபேஷிக்க –
கைங்கர்யம் ஆவது என் –
நீங்கள் முதலில் சொன்ன படி பறையை கொள்ளுங்கோள்
என்று பறையைக் கொடுக்க –

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-
இந்த பறையை கொள்ளுகின்ற பேர்கள் அன்று நாங்கள்
நீ தாத்பர்ய க்ராஹி அன்றியே
யதாஸ்ருத க்ராஹியாய் இருந்தாய்
ஆனால் அத்தால் உங்களுக்கு ஏது என்ன –

(இஷ்வாகு குலத்தில் பிறந்து இருந்தால் மனதில் நினைப்பதையே அறிபவர் -)

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு-
சர்வ தேச
சர்வ கால
சர்வ அவஸ்தைகளிலும்
உன்னோடு ஏக தர்மி என்னலாம் படி சம்பந்தித்து இருக்கக் கடவோம்

(கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81)

(பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—82-)

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்-
சம்பந்தித்து இருந்து
எங்கள் ரசத்துக்கு உறுப்பாகையும் அன்றிக்கே
உனக்கும் எங்களுக்கும் பிறர்க்கும் ரசத்துக்கு உறுப்பாகையும் அன்றிக்கே
உன்னுடைய ரசத்துக்கே உறுப்பாக
அனன்யார்ஹ சேஷ பூதரான நாம்
தாச வ்ருத்தியைப் பண்ணக் கடவோம் –

(எனக்கே யாட்செய் யெக்காலத்து மென்று,என்
மனக்கே வந்திடை வீடின்றி மன்னி,
தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே,
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.)

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-
இதுக்கு புறம்பான
நம்முடைய அபிமான க்ரஸ்தமான
பிரயோஜனங்களைப் போக்கு-

(படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -பிரதான ஆனந்தம் அவனுக்கு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத)

(உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-)

(நம் காமங்கள் -உனக்கும் எங்களுக்கும் சேர்ந்து -தமிழில் தன் இவ்வாறு பதபிரயோகம் -நமது வீடு -எமது வீடு -our house)

கீழ்
பறை என்று மறைத்து சொன்ன அர்த்தத்தை
இப்பாட்டில்
அவனுக்கு உகப்புக்காக புகராகப் பண்ணும் அடிமை என்று
விசதீகரித்துச் சொல்லுகிறார்கள் –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலம்என்று
ஜ்ஞான ஜன்மத்தைச் சொல்லுகிறது
ஜ்ஞாதாக்கள் ஆன்ரு சம்சய பிரதானராய்
பரர் அநர்த்தம் பொறுக்க மாட்டாதே
பிறர் உஜ்ஜீவிக்கும்படி
ஹித பிரவர்த்தனம் பண்ணுகையைப் பற்ற –

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் –
என்றவர்கள் தாங்களே
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று
கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே
கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே
மங்களா சாசனத்துக்கு பலமாக
அவன் கொடுக்க வேண்டியதும்
இவர்கள் கொள்ள வேண்டியதும்
மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –

(எல்லா கைங்கர்யங்களும் மங்களா ஸாஸனம் உட்க்கொண்டே இருக்கும்
பெரியாழ்வார் -இங்கு பல்லாண்டு பாட அங்கும் பல்லாண்டு
இவர்களோ ஆயர் குலத்துக்கு மேல் ஒன்றும் ரியாமல் இங்கேயே பல்லாண்டு
அங்கு அப்பறை கொண்டவாற்றை -இங்கு கேட்டுப் பெற்றவர்கள்-திவ்ய தேச கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்றதாயிற்று )

(கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-குற்றேவல் -திருமணம் புரிந்து கைங்கர்யமும் அடங்குமே )

சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் -என்கையாலே
ரஜஸ் -தமஸ் ஸூ க்களாலே கலங்கி
தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள்
அபேஷித்தாலும்
ஹித பரனான நீ
கேள்வி கொள்ளவும் கடவை அல்லை
கொடுக்கக் கடவையும் அல்லை –
என்றது ஆய்த்து –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading