ஸ்ரீ திருப்பாவை – சிற்றம் சிறுகாலே வந்து -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -மூவாயிரப்படி –

அவதாரிகை –

கீழ்ப் பாட்டிலே –
உபாய ஸ்வரூபத்தை சொல்லி
தங்கள் உத்தேச்யம் கைங்கர்யம் என்று பிரபந்த தாத்பர்யத்தைச் சொல்லி
முடிக்கிறார்கள் –

இதில் –
பிராப்ய ருசியையும்
பிராப்யம் தான் இன்னது என்னும் இடத்தையும் –
அத்தை அவனே தர வேணும் என்னும் இடத்தையும் –
தங்கள் பிராப்ய த்வரையையும்
அறிவிக்கிறார்கள் –

திருவாய் மொழியில்
எம்மா வீட்டிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷித்து
அதில் சரம தசையான அர்த்தத்தை
நெடுமாற்கு அடிமையிலே -அனுபவித்து முடித்தது –

இதில் முந்துற -சரம தசையான -நெடுமாற்கு அடிமையில் அர்த்தத்தை அனுபவித்து
அது நிலை நிற்கைகாகவும்
அத்தை காத்தூட்டுகைக்காகவும்
எம்மா வீட்டில் அர்த்தத்தோடு தலைக் கட்டுகிறது –

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

பதவுரை

கோவிந்தா–கண்ண பிரானே!
சிற்றம் சிறுகாலை–விடி காலத்திலே
வந்து–(இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து–உன்னைத் தெண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–உனது அழகிய திருவடித் தாமரைகளை
மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய்–கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ–பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ
எங்களை–எங்களிடத்தில்
குற்றேவல்–அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது–திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண்–இன்று (கொடுக்கப்படுகிற இப் பறையைப்
பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும்–காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–(உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்
உன் தன்னோடு–உன்னோடு
உற்றோமே ஆவோம்–உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே–உனக்கு மாத்திரமே
நாம்–நாங்கள்
ஆள் செய்வோம்–அடிமை செய்யக் கடவோம்;
எம்–எங்களுடைய
மற்றை காமங்கள்–இதர விஷய விருப்பங்களை
மாற்று–தவிர்க்கருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

வியாக்யானம் –

சிற்றம் சிறுகாலே –
சிறு பெண்கள் எழுந்திருக்க ஒண்ணாத குளிர் போதிலே –
சத்வம் தலை எடுத்த காலத்திலே-
அநாதி அஞ்ஞான அந்தகாரம் நீங்கி
பகவத் விஷயம் வெளிச்செறித்த காலத்தில் -என்றுமாம் –

நாரணனைக் கண்டேன் –பகல் கண்டேன் -என்னக் கடவது இறே –

சிற்றம் சிறுகாலே -என்று ஜாதி பேச்சு
வெட்ட விடியாலே-என்னுமா போலே –

வந்து –
சேதனருக்கு பகவத் லாபம் அவன் வரவாலே இருக்க
வந்து -என்றது ஆதர அதிசயத்தாலே –
இது தான் அங்குத்தைக்கும் மிகையாக இருப்பது –

எங்கனே என்னில் –
பெருமாள் ரிஷிகள் இடம் அருளிய வார்த்தை –
நீ இருந்த இடத்தே வந்து
ராகம் க்ரம பிராப்தி சஹியாது இறே –

உன்னைச் சேவித்து –
பலம் வேண்டாதே -சாதனா காலத்திலே ரசிக்கும் உன்னைச் சேவித்து –
பலமுந்து சீர் என்று இறே இருப்பது –
அதுக்கு மேலே ஓர் அஞ்சலியையும் உண்டறுக்க மாட்டாத

உன்னைச் சேவித்து –
தொழுது எழும் அதுவும் மிகையான உன்னை சேவித்து –
சேவ்யரான நாங்கள் சேவகராம்படி அத்தலை இத்தலை யாவதே –

உன் பொற்றாமரை அடியே –
மகார்க்கமுமாய்
போக்யமுமாய்
பிராப்தமுமாய்
இருந்த திருவடிகளிலே –

அடியே -என்று
அவதாரணத்துக்கு கருத்து –
வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை

போற்றும்-
போற்றுகை யாவது
ஸ்வாமிக்கு மங்களா சாசனம் பண்ணுகை –

பொருள் கேளாய் –
முன்பே இருக்கிறவனை -கேளாய் -என்பான் என் என்னில் –
இவர்களுடைய ஸ்தநாத்ய அவயவங்களிலே
அந்ய பரனாய் இருக்கையாலே
உன் பராக்கை விட்டு நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேளாய் -என்கிறார்கள் –

அவனும் இவர்கள் பேச்சு அன்றோ –
என்று கேட்டான் –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகக் கடவ நீ
பசுக்கள் மேய்த்து உண்ணக் கடவதான
இடைச் சாதியிலே வந்து பிறந்த எங்களை அடிமை
கொள்ளாது ஒழிய ஒண்ணாது –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் –
ரஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தால் அல்லது
தாங்கள் உண்ணாத குலம் –

உன் பிறப்பாலும்
எங்கள் கார்யம் தலைக் கட்ட வேணும் -என்று கருத்து –

குற்றேவல் –
அந்தரங்க வ்ருத்தி –
அன்றிக்கே –
உசிதமான அடிமை -என்றுமாம் –

எங்களைக் –
பசுக்களுக்கு வேறு ரஷகர் உண்டானாலும்
உன்னை ஒழிய ரஷகர் இல்லாத எங்களை –

கொள்ளாமல் போகாதே
உனக்கு விஹிதம் –
சப்தாதி விஷயங்களே தாரகமாய் இருக்கிறது எங்களை
உன் வடிவு அழகைக் காட்டி
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை -எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்னும்படி பண்ணி
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம்
தாராதே போகை-உனக்குப் போருமோ -என்கை –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்கிறார்கள் –

இவர்கள் சொன்ன சமனந்தரத்திலே
நீங்கள் நோன்புக்கு அங்கமானவற்றை கொண்டு போம் இத்தனை அல்லது
வேறு நீங்கள் அடிமை என்று சொல்லுகிறவை எல்லாம் என் -என்று
பறையைக் கொடுக்கப் புக –

இற்றைப் பறை கொள்வான் அன்று -காண் –
இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் –
யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –

கோவிந்தா –
பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-

அபிதா வ்ருத்தியைப் போக்கி
தாத்பர்ய வ்ருத்தி அறியாத ஜன்மம் இறே –
ஆனால் நீங்கள் சொல்லுகிறது என் என்ன –

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
திரு நாட்டிலே இருக்க்கவுமாம்
ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை
காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை
செய்தாப் போலே யாக வேணும் –

உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –
நீ ஸ்வாமியாகவும்
நாங்கள் ஸ்வம் ஆகவும்
இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்

ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது
எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –

மற்றும் வேண்டுவது என் என்ன –

உனக்கே நாம் ஆட்செய்வோம் –
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே
இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –

உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து
நீ உகந்த அடிமை செய்வோம் –
உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே
நீ உகந்த அடிமை யாக வேணும் –
அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் –
நாங்கள் எங்களுக்கு என்று இருக்கிற அதுவும்
நீயும் -இவர்களுக்கு என்று இருக்கும் அதுவும்
இவை இரண்டும் விரோதி யாகையாலே
அத்தைத் தவிர்த்து தர வேணும் -என்கிறார்கள் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading