ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -85-96–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -/ஸ்ரீ அப்பிள்ளை உரை —

எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரோ என்று அழைக்க
இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்துவதே-

அப்பிள்ளை உரை அவதாரிகை
நாளும் தொழக் காதல் பூண்ட -நித்தியமாக இருந்தாலும்
எங்களைப் போலே ஒரு போது -பகவத் விஷயமும் இல்லாத போது –
லௌகிக வியாபாரமுமாய் இருக்கப் பார்த்தாலோ என்ன
என் நெஞ்சிலே நிரந்தர வாசம் பண்ணும் சக்ரவர்த்தி திருமகன் உடைய வீர சரிதம் அனுசந்திக்கைக்கு
காலம் போதும் அத்தனை போக்கி லோக விருத்தாந்தம் அனுசந்திக்கக் கால -அவசரமே இல்லை என்கிறார் –

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85–

பதவுரை

கழி சினத்த–மிகக் கோபத்தை யுடையவனும்
வல்லாளன்–மிக்க வலிமை யுடையவனும்
வானார் கோன்–குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி–வாலியினுடைய
மதன்–மதத்தை (கொழுப்பை
அழித்த–தொலைத்த
வில் ஆளன்–சார்ங்க வில்லை ஆள்பவனான இராமபிரான்
நெஞ்சத்து–எனது நெஞ்சிடத்து
உளன்–எழுந்தருளி யிருக்கின்றான்
எனக்கு–(அந்த இராம பிரானுடைய திருக் குணங்களில் அகப்பட்ட) எனக்கு
தொழில்–நித்ய கருமம்
தொல்லை மால் தன் நாமம் ஏத்த–புராணனான அந்த ஸர்வேஸ்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்
எனக்கு–(உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு
மற்றதுவே–கீழ்ச் சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே
பொழுது போதும்–போது போகும்.

அதிக கோபத்தை யுடையனாய் -பலிஷ்டனாய் -வானர ராஜாவான வாலியினுடைய
கர்வத்தைப் போக்கின தநுர்த் தரனான சக்ரவர்த்தி திருமகன்
என் ஹ்ருதயத்திலே வாஸம் பண்ணுகிறான்
எனக்கு வியாபாரம் அநாதியான ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களை ஸ்தோத்ரம் செய்கை
எனக்கு எல்லாக் காலமும் அதுக்கே போதுமாய் இருக்கிறது –

பொழுது இத்யாதி
நாங்களும் எல்லா கார்யம் செய்து-
பகவத் நாம சங்கீர்தனமும் பண்ணுகிறிலோமே-என்ன-
எனக்கு ராம வ்ருத்தாந்தம் கிடக்க வேறு ஒன்றுக்கு-போது போராது

கழி சினத்த -இத்யாதி –
மிக்க நித்ய சினத்தை உடையவனாய்-வானர ராஜாவான வாலி உடைய
செருக்கை வாட்டின-சக்கரவர்த்தி திருமகன் என் நெஞ்சிலே சந்நிஹிதன் –

மதன் -மதம் -செருக்கு -என்றபடி-

(கழி சினத்த
காலில் விழுந்த தம்பியை நிக்ரஹித்த செயலில் பெரும் சினத்தைக் காணலாம்
வல்லாளன்
ராவணனைப் பூச்சி போல் பிடித்த செயலில் பெரும் பலத்தைக் காணலாம்
வானவர் கோன்
பலத்தாலும் சினத்தாலும் அடக்கி ஆண்டு ராஜா வானவன்
இச்சா மோ ஹி மஹா பாஹும் -போல் அவர்களே தாமாகவே விரும்புவது போல் இல்லையே இவன் இடம்
கழி சினத்தை வாலி மதம் அழித்த வில்லாளன்
வல்லாளன் மதம் அழித்த வில்லாளன்
வானவர் கோன் மதம் அழித்த வில்லாளன் அன்றோ இவன் –
சரணாகத வத்சலன் -தம் பலத்தை தீயோரை அழித்து ஆஸ்ரித ரக்ஷணத்துக்குப் பயன் படுத்த
வாலி தனது வலிமையை சரணாகதனான ஸூக்ரீவனை சிஷிக்க பயன் படுத்திய வில்லாளன்)

அப்பிள்ளை உரை
மிக்க சீற்றத்தை யுடையவனாய் பெரும் மிடுக்கனாய் வானர ஜாதிக்கு ராஜாவான வாலியை
கர்வத்தை தலை அழித்துப் பொகட்ட
ஸ்ரீ சார்ங்க திரு வில்லை யுடைய வீரனான சக்ரவர்த்தி திருமகன்
நின்ற திருக்கோலம் சேவித்த தாரை புகழ்ந்தாள்-அப்ரமேயஸ்ய
வைய வந்த வாயால் வாழ்த்திப் போனாளே அன்றோ
அந்ய பரதை அறும்படிக்கு இடம் யறும் படி ஹ்ருதயத்தில் சன்னிஹிதராய் இரா நின்றார்
ஆகையாலே மிருத சஞ்சீவனமான ராம குணங்களிலே அகப்பட்ட எனக்கு நித்ய க்ருத்யம்
பழையவனாய் சர்வாதிகனான சக்ரவர்த்தி திருமகனுடைய திரு நாமங்களை அபிநிவேச பர வசனாய்க் கொண்டு
வாயாரப் பாடுகை ஏத்துகை
லௌகிகரான உங்களில் வியாவ்ருத்தமான எனக்கு மற்று உள்ள காலங்கள் எல்லாம் அதுக்கே நேரம் போதும்
எங்கள் தம் யுடையவர் திருக்கை அருளை ராமருடைய அருளைப் பெற இரக்கும் எங்களுக்கு
அந்நிய பரதை பண்ணுவது எங்கனே என்கிறார்-
என்று பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் படி
ஜீயர் மூலமாக அப்பிள்ளை அருளிச் செய்தபடி
அருளைப் பிக்ஷை எடுக்கவும் அருளே வேண்டும்
அருளைப் பெற தயார் நிலையாக இருக்க வேண்டும் அன்றோ –

————————————————————–

அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்
நீயும் இவ் வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

(சஞ்சலம் அற்ற மனசுக்கு எதற்கு உபதேசம்
அவனது ஸத்பாவம் உபதேசிக்க வில்லை
எந்த நிலையிலும் சர்வ ரக்ஷகம் அவன் மட்டுமே என்கிறார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
இப்படி சர்வேஸ்வரன் உளன் என்று சர்வருக்கும் -உபபாதித்தவர்
தம் திரு உள்ளத்தைக் குறித்து எம்பெருமான் நிர்வாஹகன் என்னும் இடத்தை
நீயும் உணர் என்கிறார்

உளன் கண்டாய் நல்  நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

பதவுரை

நல் நெஞ்சை–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்-(அதமன் -மத்யமன் -உத்தமன் -புருஷோத்தமன் )
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்
தன் ஒப்பான்–(தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத் தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான்
தமியேற்கு–ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும்
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க.
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்ய வாஸம் பண்ணுமவன் காண்
என் ஒப்பார்க்கு–என்னைப் போலே உபாய ஸூந்யராயிருப்பவர்கட்கும்
தான் ஈசன் ஆய் உளன் காண்–தானே நிர்வாகனாயிருக்கிறான் காண்
இமை–இதனை அறி.

அனுகூலமான ஹ்ருதயமே -புருஷோத்தமன் நமக்கு சத்தா ஹேதுவாக இருக்கிறான் கிடாய்
பிரளயாதி ஸர்வ காலங்களிலும் இருக்கிறான் கிடாய்
த்யான பரர்களுடைய ஹிருதயத்தில் நித்ய வாஸம் பண்ணுகிறான் கிடாய்
எனக்கும் என் போல்வாருக்கும்
தனக்குத் தானே சமானனான ஸர்வேஸ்வரன்
ரக்ஷகனாக இருப்பன் என்று நிச்சயித்து இரு –

உளன் கண்டாய் –
பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்து வந்தாலும்-பரிஹரிக்க வல்லவன் உண்டு –

நல்  நெஞ்சே-
சர்வேஸ்வரன் உளன் என்று-உபபாதிக்கப் பாங்கான நெஞ்சே –

உத்தமன் என்றும் உளன் கண்டாய் –
இதுக்கு (மோக்ஷம் போவதுக்கு ) முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-
ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது –
ஆணை இடாமை –

தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு என்னொப்பார்க்கு ஈசன்-
அகிஞ்சனான எனக்கும்-
என்னைப் போலே உபாய ஸூன்யர் ஆனவர்களுக்கும்
தனக்கு உபமானம் இன்றிக்கே உளனான ஈஸ்வரன்
உளன் –

இமை –
புத்தி பண்ணு -என்றபடி-

(நன்னெஞ்சே
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் -திருவாய் –1-10-4-
உள்ளுவார் உள்ளத்து உளன்
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
போதுவீர் போதுமினோ
இவனுக்கு ரக்ஷகத்வமே ஸ்வரூப நிரூபக தர்மம்
இமை -இவ் வர்த்தத்தை அறிவாயாக )

அப்பிள்ளை உரை
சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதிக்க பாங்கான நெஞ்சே
இத் தலையில் ஒரு ஹேதுவை அபேஷியாமல்
தனது பேறாக ரக்ஷிக்கும் புருஷோத்தமன்
பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்து வந்தால்
தானாக வந்து பரிஹரித்து –
ரஷிக்கவே நெஞ்சிலே சர்வ காலமும் இருக்க
தானே வந்து ரக்ஷிக்க வரும் பொழுது
ஆணை இட்டு விலக்காமல் பொருந்தி அனுசந்திப்பாருடைய ஹ்ருதயத்தில்
சன்னிஹிதனாயக் கொண்டு ரக்ஷிக்குமவன்
அகிஞ்சனான எனக்கும்
என்னைப் போல் கை முதல் இல்லாத அனைவருக்கும்
தனக்குத்தானே உபமானமாய் வேறே ஒரு உபமானம் இல்லாதவனாய் இருப்பவன் –
சர்வேஸ்வரனாய்க் கொண்டு உளனாய்
உத்தமன் என்னும் உளன் கண்டாய் -இப்பதச் சேர்க்கை
ஆழ்வார்களுக்கு அபிமதமாய் மூன்று பாசுரங்களில் இருக்குமே –

———————————————————————

தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு
இவன் நிர்வாஹகன் ஆன படியைக் காட்டுகிறார்-

அப்பிள்ளை உரை அவதாரிகை
தம்மை ஓக்கும் அகிஞ்சனருக்கு அவன் நிர்வாஹகனான படியை
மூதலிக்கிறார்

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்க் கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

பதவுரை

இமயம் பெரு மலை போல்-பெரிய இமய மலை போன்றிருக்கும்படி
இந்திரனார்க்கு இட்ட–இந்திரனுக்காகச் சமைத்து வைத்த
சமயம் விருந்து–வழக்கமான ஆராதனையை
உண்டு–உட் கொண்ட போது (நேர்ந்த கல் மழையாலாகிய ஆபத்தில் நின்றும்)
கார்க் கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்–சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்?
ஆர் காப்பார்–காப்பாற்றினது யார்?
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளைப் போக்கி ரஷித்தவனும் இவனே
சமயங்கள்–வைதிக மதங்களை
கண்டான்–பிரவர்த்திப்பித்தவன்
ஆர்–யார்?
கதி த்ரவ்யத்வ மூலம் -அனைத்துக்கும் பலம் தருபவன் இவனே
மெதுவாக கொடுத்து கொடுத்து தன்னையே கேட்க்கும்படி ருசி விளைவிப்பானும் இவனே
அவை காப்பான்–அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன்
ஆர்–யார்?
உலகோடு உயிர் உண்டான் ஆர்–
உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவ ராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்? (எல்லாம் எம்பெருமானே யன்றோ)

ஹிம வத பர்வதம் போலே —
இந்திரனுக்கு -மழை பெய்கைக்காக வருஷத்தில் ஒருகால் இட வேணும் என்கிற
சங்கேதத்தினால் குவித்திட்ட அன்னத்தை அமுது செய்து
கோ கோபர்களை ரக்ஷிப்பவர் யார்
ஸித்தாந்தங்களைப் ப்ரவர்த்திப்பதவனும்
அவைகளை ரஷித்தவனும்
நீல கண்டனோடும் சதுர் முகனோடும் லோகங்களோடும்
பிராணிகளைத் தன் உதரத்திலே வைத்து ரஷித்தவன் யார் –

சமய விருந்து
சமயம் பண்ணின விருந்து

ஆர் காப்பார் –
இந்த்ரன் பாதகனே வர்ஷிக்கிற போது-எம்பெருமான் அன்றோ காத்தார்-
இடையரோ –

சமய இத்யாதி –
வைதிக சமயத்தைக் கண்டானும்-
அவற்றை ரஷிப்பானும்-
நீல கண்டன் சதுர்முகன் முதலானவர்கள் துரிதங்களைப் போக்குமவனும்-
இவ் வாத்மாக்களையும் வயிற்றிலே வைத்துப் பரிகரித்தவனும்
எம்பெருமானை ஒழிய மற்று யார்-

உலகோடு உயிர் உண்ட எம்பெருமானை ஒழிய மற்று உண்டோ –
வேறே காப்பார் இல்லை என்றபடி –

(மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி -வைதிக மதத்தை சாஷாத்கரித்து இங்கே பரவச் செய்தவன் இவனே
அகிஞ்சனருக்கு அபகரிக்கும் பிரகாரணம் என்பதால் சமயங்களில் புற சமயங்கள் சேரா
அறமுயல் ஞானச் சமயிகள் -திரு விருத்தம்
வித்யா பேதத்தால் பலவகைப்பட்ட பக்தி யோக நிஷ்டர்களையே சொல்லும்
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே -பெரிய திருமொழி -11-6-2-
இப் பாசுரத்தை ஒட்டியே ஆளவந்தார்
கஸ்ய உதரே ஹர விரிஞ்சி முக பிரபஞ்ச
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத் யாபத் விமோசன மஹிஷ்ட பல பிரதாநை
கோன்ய ப்ரஜா பசுபதீ பரி பாதி
மாலியம் -ஸ்ரீ வைஷ்ணவம் என்பதற்கு பிரசித்தமான பெயர் பல தேசங்களிலும் உண்டே
சநாதன சமயம் -ஆதி வேத ப்ரதிபாத்யன் )

அப்பிள்ளை உரை
ஹிமவான் ஆகிற பெரிய பர்வதம் போல் வத்ஸரம் தோறும் இந்திரனுக்கு
நியமேன விருந்து இடுவாரைப் போல் சாதரமாக இட்ட சோற்றை ஓன்று ஒழியாமல் தானே அமுது செய்து
அஹம் கோவர்த்தனோஸ்மி என்றானே
முக பங்க குபிதனாய்-( மூக்கு உடைத்தல் போல் )
இந்திரனால் வந்த வர்ஷ ஆபத்தைப் பரிஹரிப்பார் வேறே யார்
வைதிக சமயங்களை பிரவர்த்திப்பானும்
அவற்றை உபதேச பரம்பரையால் குறைவற ரஷித்தவனும்
நீல கண்டன் சதுர்முகனோடு இவர்களோடு அவர்கள் இருப்பிடமான லோகங்கள் -மற்றும்
ஸமஸ்த லோகங்களையும் லோக வர்த்திகளான சேதன அசேதனங்களையும் பிரளயத்தில் அழியாத படி
திரு வயிற்றிலே வைத்து ரஷித்தவனும் வேறே யார்
வர்ஷ ஆபத்தோடு பிரளய ஆபத்தோடே ஸம்ஸார ஆபத்தோடு வாசி அற –
மழைக்கடல் -நீர்க் கடல் -சம்சாரக்கடல் -அனைத்திலும் இருந்து ரஷித்தவன் இவனே அன்றோ
ரஷித்தவன் சர்வேஸ்வரன் இத்தனை போக்கி
இடையரோ ப்ரஹ்மாதிகளோ ரக்ஷித்தார் என்று பேச்சே இல்லை
சமயங்கள் கண்டான் அவை காப்பான் இவனே என்பதால்
வைதிக சமயங்களைப் பிரவர்த்திப்பித்து -ரஷித்தவனும் இவனே என்பதால்
சம்சாரக் கடலைப் ஆபத்தைப் பரிஹரிப்பவனும் இவனே வேறே ஒருவர் உண்டோ
மற்று யாரும் இல்லை என்றவாறு –

————————————————————

இப் பாட்டிலும் அவ் வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –

(அகிஞ்சனரான அடியார்களுக்கு அவன் செய்து அருளும் உபகாரங்களை
மேலும் அருளிச் செய்கிறார்
குரு பரம்பரை மூலம் ஸம்ஸார கடலில் இருந்து ரக்ஷித்தமையை கீழே சொல்லி
அத்தை இதில் விவரிக்கிறார்
மாலியம் -ஸ்ரீ வைஷ்ணவம் என்பதற்கு பிரசித்தமான பெயர் பல தேசங்களிலும் உண்டே
சநாதன சமயம் -ஆதி வேத ப்ரதிபாத்யன் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரிதற்கு சரீர விஸ்லேஷ சமயத்தில் வரக் கடவ
எம பஸ்யாதி துரித பரம்பரையை தானே முற்கோலி பரிகரித்து
கீழே -சமயங்கள் கண்டான் அவை காப்பான் -என்ற இடத்தில்
கர்ப்பிதமான ஸம்ஸார ஆபத் ரக்ஷகத்வத்தை விவரிக்கிறார் –
(குரு பரம்பரை ஸ்தாபித்தார் என்று மட்டும் கீழே –
ஆ ர்த்தமாக இத்தால் சம்சார ரக்ஷணம் பலிதமானதே )

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

பதவுரை

உடல் ஒழிய–சரீரத்தைப் போட்டு விட்டு
உயிர் கொண்டு–ஆத்மாவைப் பிடித்துக் கொண்டு
ஓடும்போது–(யமபடர்கள்) ஓடும்போது
ஓடி–(எம்பெருமானாகிய தானே) ஓடிச் சென்று
செயல் தீர–பேற்றுக்காக நாம் செய்ய வேண்டிய செயல் (ப்ரவ்ருத்தி) ஒன்றுமில்லை யென்று
சிந்தித்து–ஸ்வரூபத்தை யுணர்ந்து
வாழ்வாரே–வாழ நினைப்பவர்களே
வாழ்வார்–வாழ்ச்சி பெறுவர்
அயர்வு என்ற–கஷ்ட மென்று சொல்லப் படுகிற எல்லாவற்றையும்-அறிவு கேடு என்று சொல்லப்பட்டவை முதலான
தீர்ப்பான்–தீர்க்குமவனான எம்பெருமானுடைய
தானே வந்து தனது அழகைக் காட்டி ரக்ஷித்து -ஆதரம் பெருகவும் ஐயப்பாடு அறுக்கவும் -தான் மாம் தானே மாம் ஏகம்
பேர்–திருநாமங்களை
பாடி–வாய்விட்டுப் பாடி
சிறு சமயம் பந்தனையார்–அற்பங்களாய் பல நியமங்களோடு கூடினவையாய் ஸம்ஸார பந்தத்திற்கே
காரணமாக வுள்ளவையான உபாயங்களைப் பற்றினவர்களுடைய
பந்தனையார் -பந்தக ஹேதுவான கர்மாதி உபாயாந்தரங்கள்
வாழ்வு ஏல்–வாழ்ச்சியோ வென்றால்
பழுது–உபயோகமற்றது.

சரீரத்தைப் பொகட்டு விட்டு பிராணனை எடுத்துக்கொண்டு எமபடர்கள் ஓடும் போது
அவர்களுடனே ஓடி துக்கம் என்று பேர் உள்ளவை எல்லாவற்றையும் போக்க வல்ல
ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களைக் கானம் செய்து
இதர வியாபாரங்களை விட்டு தியானித்து ஸூகமாக இருக்கிறவர்கள் ஸூகப் படுவார்கள்
அற்பமாய் -இந்தக் கரமத்துக்கு இதுவே பலம் என்று வியவஸ்த் திதமாய்
பந்த ஹேதுவான கர்ம பரவசர்களுடைய வாழ்க்கை நிரரர்தகம் –

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது
இவ் வாத்மா சரீரத்தைப் பொகட்டு-
பிராணனைக் கொண்டு
எம படராலே ப்ரேரிதமாகப் போம் போது

ஓடி அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்
ஆஸ்ரிதர் ஆனவர்களை-ஆள் இட்டு அந்தி தொழாதே
தானே ஓடி-
அவர்கள்( யம தூதர்கள் )தர்சனத்தால் வந்த அறிவு கேடு முதலான-துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திருநாமத்தை பிரியமுடன் சொல்லி -இவ் வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை
எம்பெருமானே நிர்வாஹகன் என்று இருக்குமவர்கள் வாழ்வார்-

(இத்தால்
சரம காலத்தில் திரு நாமத்தைச் சொன்னாலும்
அவர்களையும் எமபடர் கையிலே காட்டிக் கொடான் -என்றபடி )

சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது-
துக்க ஹேதுவான-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே
பந்தகமாய்-
ஷூத்ரமான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு
ஒரு பிரயோஜனமும் இல்லை –

(பகவதஸ் த்வராய நம -இவனுடைய ஓட்டத்தில் ஈடுபட்டு அருளிச் செய்தார் அன்றோ
கடைத் தலையில் இருந்து வாழும் சோம்பருக்கு அவன் செய்யும் உபகாரங்கள் வாசோ மகோசரம் அன்றோ
சமயப் பந்தனை
நெறி காட்டி நீக்குதியோ
செயல் தேர்ந்து சிந்தித்து வாழாத உபாசகர்கள்
சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது
அந்வய வியதிரேகங்களால் இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உள்ளபடி உணர்ந்து இருக்கும்
ஞானி நாம க்ரேரசர் ஆகையாலே பந்தனையார் வாழ்வேல் பழுது என்று
அவற்றில் ஒரு சரக்கு அற அருளிச் செய்கிறார் -அப்புள்ளார் உரை
பகவத் ப்ரீதியே பலத்துக்கு உபாயம்
கண்டாகர்ணன் க்ஷத்ர பந்து பக்கலிலே பார்த்தோமே )

அப்பிள்ளை உரை
சரீரத்தைப் பொகட்டு பிராணனைக் கொண்டு யம படராலே ப்ரேரிதனாகப் போம் போது
ஆஸ்ரிதரை ஆள் இட்டு அந்தி தொழாதே தானே விரைந்து சென்று கை தொட்டு
யம படர்கள் தரிசனத்தால் வரும் அறிவுகேடு முதலிய துரிதம் என்று பேர் பெற்ற
எல்லா வற்றையும் போக்கும் ஸ்வ பாவன் பேர் பாடி
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களைப் ப்ரீதி பரவசராய்ப் பாடி
இவன் ஸ்வ ரக்ஷணத்துக்கு உடலாக
நம்மால் செய்யலாவது ஒன்றுமே இல்லை என்று
ஸ்வரூப பாரதந்தர்யத்தை அனுசந்தித்து
(இத்தை அறிந்தால் அகிஞ்சனன் ஆவான் அவனே -உஜ்ஜீவிப்பான் )
இப்படி எம்பெருமானே நிர்வாஹகன் என்று அவன் தலையிலே சர்வ பாரங்களையும் பொகட்டு
தத் குண அனுபவம் பண்ணி வாழும் அவர்களே பழுதற்ற வாழ்வு வாழ்வார்கள் ஆவார்கள்
அந்ய சா பேஷமாகையாலே -பக்தி யோகம்-தனக்கு அங்கமாக கீழே கர்ம யோகம் ஞான யோகங்களை எதிர் பார்க்கும்
மேலே மோக்ஷம் தர அவனை எதிர்பார்க்கும்
ஆகவே அதி ஷூத்ரமாய் பிரதி புருஷன் தத் தத் ருசிக்கு அனுகுணமாய் வியவஸ்திமாய்- வகை அறுக்கப்பட்டதாய்
துக்க ஹேதுவாய் அகங்கார மமகார கர்ப்பமாய் சம்சாரத்தில் தழைப் படுத்தும்
பந்தகமாக கர்மாதி உபாயங்களைப் பற்றி வாழும் வாழ்வு நிஷ் பிரயோஜனம்
அன்வய வியதிரேகங்களால் இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உணர்த்த
ஞானாதிரேகர் ஆகையால்
(கர்ம யோகம் பண்ணினாலும் அவன் இல்லாமல் மோக்ஷம் இல்லை
இவை இல்லா விட்டாலும் அவன் ப்ரீதியால் மோக்ஷம்
இத்தை அறிந்த உள்ளபடி உணர்ந்த ஞானிகளில் முதன்மை )
ஆகையால் பந்தனையார் வாழ்வேல் பழுது என்று
ஒரு சரக்கு அற அருளிச் செய்கிறார் –

————————————————————————–

(பகவத் ஸமாஸ்ரயணமும் பாகவத ஸமாஸ்ரயணமும் பழுதாகாதா உபாயங்கள்
இவற்றுள் பாகவத ஸமாஸ்ரயணம் ஸ்ரேஷ்டம் என்கிறார்
அதிலும் ஸ்ரேஷ்டம் பாகவதர்கள் அபிமானத்தின் கீழ் ஒதுங்குவது
அத்தை அடுத்த பாசுரத்தில் அருளிச் செய்கிறார்
பகவத் ஸமாஸ்ரயணம் -90
பாகவத் ஸமாஸ்ரயணம் -89
பாகவத அபிமானம் -90–மூன்று வழிகள்-பழுதாகாதவை -உத்தர உத்தர ஸ்ரேஷ்டம் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
இப்படி கர்மாதி உபாயங்களைப் போல் பழுதாகாமல்
பழுதாகாதா ஒன்றை அறிந்தேன்
பழுதற்ற உபாயம் தான் எது என்னில்
பகவத் ஸமாஸ்ரயனமும் பாகவத ஸமாஸ்ரயணமும்
(ஒவ்வொன்றிலும் ஸ்வ கத பர கத என்று இரண்டு வகைகள் உண்டே-
ஸ்ரீ வசன பூஷணத்தில் நான்கும் உண்டே )
அவை இரண்டிலும் பாகவத ஸமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் என்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண் திறந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பதவுரை

பழுது ஆகாது ஒன்று–பழுதுபடாத (சிறந்த) ஒரு உபாயத்தை
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன் (அது என்ன வென்றால் கேண்மின்)
பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
வாழுவா வகை நினைத்து–தப்பாதபடி அநுஸந்தித்து
வைகல் தொழுவாரை–எப்போதும் வணங்குமவர்களை
கண்டு இறைஞ்சி–கண்டு வணங்கி
வாழ்வார்–வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்)
கலந்த வினை கெடுத்து–ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து
விண் திறந்து–பரமபத வாசலைத் திறந்து
மிக்கு–சிறப்புடனே
வீற்றிருப்பார்–எழுந்தருளி யிருக்கப் பெறுவர்

வியர்த்தமாகாத ஒரு உபாயத்தை அறிந்தேன்
அதாவது
ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை அஸ்க்கலித மார்க்கத்தினால் அனுசந்தித்து
ப்ரதி தினம் ஆஸ்ரயித்தவர்களை ஸேவித்து ந மமரராய் ஸூகிப்பவர்கள்
ஆத்மாவோடு சேர்ந்து இருந்த பாபங்களைப் போக்கிக் கொண்டு
பரமபத வாசலைத் திறந்து அங்கு
பெரிய மஹிமையுடன் இருப்பார்கள் –

பழுதாகது ஓன்று அறிந்தேன்
பழுதாகாத உபாயங்களில்-உத்க்ருஷ்டமான உபாயம்

பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை கண்டு இறைஞ்சி வாழ்வார்-
பாகவத சமாஸ்ரயணம் என்று இருந்தேன் –

கலந்த வினை கெடுத்து விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –
ஆத்மாவோடு அவிநாபூதமான பாபத்தைப் போக்கி-
ஸ்ரீ வைகுண்டத்தில் வாசல் திறந்து

விண் திறந்து –
அங்கே அதி சம்ருத்தமான ஜ்ஞான பக்திகளை உடையராய்-
பகவத் கைங்கர்யத்தில் தலைவரான-நித்ய ஸூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார்கள்

இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-
அங்கே நித்ய ஸூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-

(சூரணை -459-
பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை –
பூர்வோபாயத்துக்கு -(ஸ்வகத ஸ்வீ காரத்துக்கு ) பிரமாணமாக அநு சந்திப்பது —
ஆசார்யனை தான் பற்றும் பற்று -என்றும் –
ஆசார்ய அபிமானமே உத்தாரகம்- என்றும் அருளிச் செய்த ஆசார்ய விஷயத்தில் –
ஸ்வகத பரகத ஸ்வீகார ரூப உபாய த்வத்துக்கும்-
பிரமாண தர்சனம் பண்ணுவிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி –
ப்ரதமம் -ஸ்வகத ஸ்வீகார உபாயத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

பழுது ஆகாது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல்-தொழுவாரைக் கண்டு
இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறத்து
வீற்று இருப்பார் மிக்கு –
அதாவது –
அமோகமாய் இருப்பதோர் உபாயம் அறிந்தேன்-
ஆஸ்ரயிப்பார்க்கு சமாஸ்ரணீயனாய் கொண்டு-திரு பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அவனுடைய திருவடிகளை
தப்பாத பிரகாரத்தை நினைத்து -நாள் தோறும் அநு கூல விருத்தியை பண்ணிக் கொண்டு போரும் ஞானாதிகரைக் கண்டு
தங்களுக்கு தாரகமாக ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் அவர்கள் –
ஆத்மாவோடே அவிநா பூதமான பாபத்தைப் போக்கி -ஸ்ரீ வைகுண்டத்தில் திரு வாசல் திறந்து -அங்கே
சம்ருத்தமான ஞானாதிகளை உடையராய் -ததீய கைங்கர்ய நிரதராய் கொண்டு – வ்யாவிருத்தராய் இருப்பர் என்று –

பரம ஆப்தரான – திருமழிசைப் பிரான் அருளிச் செய்த -பழுது ஆகாது ஓன்று அறிந்தேன் -என்கிற
பாட்டை ஆசார்ய விஷயத்தில் முற்பட சொன்ன
ஸ்வகத ஸ்வீகார மாகிற உபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது -என்கை-

இத்தால் –
ஸ்வகத ஸ்வீகாரம் அஹங்கார கர்ப்பதயா அவத்யகரமாய் இருந்ததே ஆகிலும் –
பல சித்தியில் வந்தால் -பழுது போகாது என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
குருணா யோபி மன்யேத குரும் வா யோ அபிமந்யதே தாவு பௌ பரமாம் சித்திம் நியமா துபக கச்சத -என்று
பர கத ஸ்வீகாரோத்தோபாதி-ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் பலம் தப்பாது என்னும் இடம் –
பாரத்வாஜ சம்ஹிதையிலும் -சொல்லப் பட்டது -இறே-

சூரணை -460-
1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

இனிமேல் பரகத ஸ்வீ காரம் ஆகிற பரம உபாயத்துக்கு பிரமாணங்கள் பலவற்றையும் –
தர்சிப்பித்து அருளுகிறார் –)

அப்பிள்ளை உரை
பழுது போகாத உபாயங்களில் அத்விதீயமானது பாகவத ஸமாச்ரயணம்
அது எங்கனே என்னில்
போக பூமியான பரம பதத்தை விட்டு –
ஆஸ்ரயிப்பாருக்கு ஸமாஸ்ரயணீயனாகக் கொண்டு பாற்கடலில் கண் வளர்ந்து அருளுமவனது திருவடிகளை –
(வ்யூஹ ஸுஹார்த்தம் அன்றோ – நாம் ஸமாச்ரயணம் பண்ணவே )
ப்ராப்யமும் ப்ராபகமும் அவன் திருவடிகளே என்று தப்பாத பிரகாரங்களில் அனுசந்தித்து
நாள் தோறும் ஆஸ்ரயித்துக் கொண்டு போருமவர்களை
(கடமைக்காக அல்லவே -ராக பிராப்தம் அன்றோ )
கண்ணாரக் கண்டு
தலையாலே வணங்கி (இறைஞ்சி )
ஸூ கோத்தராக ஆஸ்ரயித்துக் கொண்டு போகுமவர்கள்
ஆத்மாவுடன் பொருந்திக் கிடந்த கர்மங்களை நிஸ் சேஷமாகப் போக்கி -(அவிநாபூதமாய் கிடக்கும் இவை அன்றோ )
ஸ்ரீ வைகுண்டத்தில் திரு வாசல் நீக்கி ஞான ப்ரேமங்களால் பரிபூர்ணராய்
ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த வியாவ்ருத்தம் தோற்ற எழுந்து அருளி இருப்பார்கள்
நான் ப்ரஹ்மத்தை அறிகிறேன்-அதை விட -ப்ரஹ்மம் என்னை அபிமானித்து இருக்கிறார் என்பதே உத்க்ருஷ்டம்

————————————————————————–

(குருணா யோபி மன்யேத குரும் வா யோ அபிமந்யதே தாவு பௌ பரமாம் சித்திம் நியமா துபக கச்சத -என்று
பர கத ஸ்வீகாரோத்தோபாதி-ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் பலம் தப்பாது –
பரம புருஷார்த்த்தைத் தப்பாமல் அளிக்கும் என்னும் இடம்
பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி
ஸ்வரூப விரோதியும் துஷ் கரத்வமும் இதுக்கு உண்டே
அதில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம்
விஸ்வாச மாந்த்யம் -ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் இரண்டாலும்
ஸ்வ ஸ்வாதந்தர்யத்தால் பக்தி நழுவிற்று
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தால் பிரபத்தி நழுவிற்று )

அப்பிள்ளை உரை -அவதாரிகை
பாகவதராலே அங்கீ க்ருதரானவர்களே எல்லாரிலும் மேம்பட்டவர் என்கிறார் –

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்த
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பதவுரை

விண்–பரமபதத்தில்
வீற்றிருந்து–பெருமை பொலிய இருந்து
ஆள வேண்டுவார்–ஆட்சி செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
வேங்கடத்தான் பால்–திருவேங்கட முடையான் பக்கலில்
பல் மலர்கள்–பலவகைப்பட்ட மலர்களை
திருந்த–நன்றாக
வைத்தாரே–ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை)
வரும் மதி பார்த்து–(எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து
அன்பினர் ஆய்–பக்தியை யுடையவர்களாய்
மற்றவற்கே–அந்த எம்பெருமானுக்கே
தாழ்வு ஆய் இருப்பார்–அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு
தமர்–அடிமைப்பட்டவர்கள்
மேல் திருந்த வாழ்வார்–முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம்.

திருவேங்கடமுடையான் விஷயமாக அநேக புஷ்பங்களைச் சோதித்து ஸமர்ப்பித்தவர்களே
அத்யாதிக மஹிமையுடன் இருந்து பரமபதத்தைப் பரி பாலநம் செய்ய வேண்டுவார்கள் ஆவார்
ஸர்வேஸ்வரன் திரு உள்ளத்தில் இருப்பதைச் செவ்வையாய் அறிந்து ப்ரீதி யுக்தராய்
அந்த ஸர்வேஸ்வரனுக்கே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தாஸரான
பாகவதர்கள் இன்னம் அதிகமாக ஸூ கிப்பார்கள் —

விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க வேண்டி இருக்கப் பெற்றவர்கள்-
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக ஆஸ்ரயித்தவர்கள்-

அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-
அது பெற்றவர்கள்
பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்

எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-
அதுக்கு ஈடான அடிமைகளில் ஸ்நேஹித்து-
அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-
விஷயீ க்ருதர் ஆனவர்கள் –

(யே ந யே ந தாதா கச்சதி தே ந தே ந ஸஹ கச்சதி –
சர்வேஸ்வரன் திரு உள்ளம் படியே இவன் நினைக்கிறான் )

யதோ உபாசனம் பலம் -என்கிறபடியே
பகவத் ஸமாஸ்ரயணத்தாலே பகவானைப் பெறுவார்
பாகவத் ஸமாஸ்ரயணத்தாலே பாகவதர்களைப் பெறுவார்
என்கிறது இப் பாட்டு

விண்ணாள
அங்கு உள்ளாருக்கும் பூஜ்யராய்
அவர்களும் அப்படியே வர்த்திக்க
தங்கள் இடத்திலே கைங்கர்யத்திலே அதிகரித்து வர்த்திக்க

மேல் -திருந்து -என்கிற பதத்துக்கும் அர்த்தமாய்
மேலுக்கு அவதாரிகை அருளிச் செய்கிறார் -அதிலும் -இத்யாதி –

மற்று அவருக்கே -ஈஸ்வரனுக்கே
தாழ்ந்த பாகவதர்களுக்கும் உத்தமர் அவர்களை ஆஸ்ரயித்தவர்கள் -என்றபடி —

அப்பிள்ளை உரை
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தால் மூர்த்தா அபி ஷிக்தர் ஆகையாலே
வந்த வேறுபாடு தோற்ற இருந்து
பரமபதத்தில் நித்ய கைங்கர்ய நியதரான
நித்ய ஸூரிகளை ஸ்வ அதீனமாக நிர்வஹிக்கை யாகிய இப் புருஷார்த்தத்தைப் பெற வேண்டும் என்று
மநோ ரதித்து-யதா மநோ ரதத்தின் படியே அடைந்து
திருமலையில் வந்து ஸூலபனான திருவேங்கடமுடையான்
திருவடிகளில் பஹு விதமான புஷ்பங்களை சாஸ்த்ர யுக்த க்ரமம் படியே அழகியதாக ஆஸ்ரயித்து
சேஷியான சர்வேஸ்வரன் திரு உள்ளத்தில் கோலி வருமவற்றை யதாவத் தர்சித்து
(வருமதி பார்த்து அன்பினராய் )-
அதுக்கு அனுரூபமான கைங்கர்யங்களில் நிரவதிக ப்ரேமத்தை யுடையவராய்
அதுக்கும் மேல்
அந்த சேஷியான சர்வேஸ்வரன் பக்கலிலே ஸூவ சேஷத்வ அனுகுணமாக
ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்களால் அங்கீ கரிக்கப்பட்டு
(நல்ல என் தோழி -ஆண்டாள் பாசுரம்-பெரியாழ்வார் திருவயிற்றிலே பிறப்பு பழுதாகாதே
தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே )
விஷயீ கரிக்கப்பட்ட மஹா புருஷர்கள்
பகவத் கைங்கர்யத்திலும் உத்க்ருஷ்டமாய் ததீய கைங்கர்யம்
பகவத் ஸ்வரூப உசிதம் கட்டளைப்பட்டு பாகவத கைங்கர்யம் செய்யப் பெற்று ஸூகோத்தரராய் வர்த்திக்கிறவர்
(நீக்கமில்லா அடியார் -சயமே அடியார்- கோதில் அடியார் )
தத் ஸமாஸ்ரயணம் பண்ணினவர்கள் தத் கைங்கர்யம் பெறுவார்கள்
ததீய ஸமாஸ்ரயணம் பண்ணினவர்கள் ததீய கைங்கர்யம் பெறுவார்கள்
யதோ உபாசனம் ததோ பலம் எல்லாருக்கும் ஒக்குமே

————————————————————————–

(பகவத் ஸமாஸ்ரயணம் செய்தவர்கள்–ஸ்வ கத -பர கத – பாகவத சமாஸ்ரயணம் –
மூவருக்கும் பகவத் பக்தி பொதுவானது என்றும்
இவர்கள் உபய விபூதியில் உள்ளவர்களில் சிறந்தவர்கள் என்றும்
இப் பாசுரத்தில் அருளிச் செய்கிறார் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
எம்பெருமான் திருவடிகளே ப்ராப்யமும் பிராபகமும்-உபாயமும் உபேயமும்- என்று
அறுதி இட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
உபய விபூதியில் உள்ளாருக்கும் நிர்வாஹகர் ஆவார் ஆகும்படியான பெருமையை யுடையவர் ஆவார்

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

பதவுரை

மால் வண்ணன்–கரிய மேனியனான எம்பெருமானுடைய
தாள் தாமரை–திருவடித் தாமரைகளில்
மலர்கள் இட்டு–புஷ்பங்களை ஸமர்ப்பித்து-காயிக-
இறைஞ்சி–வணங்கி-வாசிக
தாள் தாமரை அடைவோம் என்று–அத் திருவடித் தாமரைகளை யடைவோமென்று-மானஸ-
(வாசிக காயிக மானஸ மூன்றும் சொல்லி )
தமர் ஆவார்–பக்தராயிருக்குமவர்கள்
தாமரை மேலாற்கும்–திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்
ஆடு அரவு ஆர்த்தாற்கும்–ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும்
அமரர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
யாவர்க்கும்–மற்றுமெல்லார்க்கும்
அமரர்கள்–மேற்பட்டவராவர்-

ஸ்யாம வர்ணனான ஸர்வேஸ்வரனுடைய திருவடித் தாமரைகளிலே புஷ்பங்களை ஸமர்ப்பித்து நம்ரராய்
அத் திருவடித் தாமரைகளை அடைவோம் என்று நிர்ப்பரராய் இருக்கும் பாகவதர்கள்
கமல ஆஸநனான ப்ரஹ்மாவுக்கும்
ஆடுகிற சர்ப்பத்தை ஹாரமாக யுடைய ருத்ரனுக்கும்
மற்ற தேவர்களுக்கும்
எல்லாருக்கும் பூஜ்யமான தேவதைகள் ஆவார்கள் –

தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி –
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று தமராவர்
யாவர்க்கும்
தாமரை மேலார்க்கும்-
அமரர்க்கும்
ஆடு அரவத் தார்க்கும் –
அமரர்கள்-
என்று அந்வயம்

மால் வண்ணன் –
கிருஷ்ணன்

தாள் தாமரை –
தாளை உடைய தாமரை

ஆடு அரவத்தார்க்கும் –
ஆடுகிற பாம்பை ஆபரணமாக உடைய ருத்ரனுக்கும்

அமரர்கள் –
நித்ய ஸூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்
ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்றபடி-

(மலர்கள் இட்டு -காயிக வியாபாரம்
இறைஞ்சி –வாசிக வியாபாரம்
அடைவோம் என்று தமராவார் –மாநசமான வியாபாரம்
முக் கரணங்களால் அடிமைப் பட்டவர்கள்-
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே -திருவிருத்தம் –79-
தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே –திருவாய் 7-10-11-)

அப்பிள்ளை உரை
மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று அருளிச் செய்த
கறுத்த நிறத்தை யுடையவனான கிருஷ்ணன் -(மால் வண்ணன் )-
உடைய திருவடித் தாமரைகளில்
செவ்விப் பூக்களைப் பரிமாறி
தங்கள் தலைச் சுமையை அங்கே வைத்து ஆஸ்ரயித்து
அவனுடைய திருவடிகளைக் கிட்டி அனுபவிப்போம் என்று
அத்யவசித்து இருக்கும் ஆஸ்ரிதர் ஆனவர்கள்
திரு நாபி கமலத்தை இருப்பிடமாகக் கொண்ட நான்முகனுக்கும்
ஆடுகிற பாம்பை ஆபரணமாகப் பூண்டு இருக்கும் ருத்ரனுக்கும்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும்
மற்றும் எல்லாருக்கும்
நிர்வாஹகரான தேவர்கள்- பூஜ்யர் ஆவார் -பெருமையை யுடையவர் ஆவார் –

————————————————————————–

(நானும் அவன் தமர்களிலே ஒருவன் என்கிறார்
கர்ப்பத்தில் இருந்த நாள் முதல் ஸர்வேஸ்வரன் என்னை ரஷித்துக் கொண்டு போருகையாலே
எல்லாக் காலத்திலும் நான் அவனை மறந்து அறியேன் என்கிறார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை –
கர்ப்ப அவஸ்தையே தொடங்கி ஸர்வேஸ்வரன் என்னை ரஷித்துக் கொண்டு போருகையாலே
சர்வ காலத்திலும் நான் அவனை மறந்து அறியேன் என்கிறார்

என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

பதவுரை

கரு இருந்த நாள் முதலா–(நான்) கர்ப்பத்திலிருந்த நாள் தொடங்கி
காப்பு–(எம்பெருமானாலே) ரக்ஷை பெற்றவனாகையாலே
திரு என்றும் இருந்த மார்வன் சிரீதரனுக்கு–பிராட்டி நித்ய வாஸம் பண்ணப் பெற்ற திருமார்வை யுடைய அந்தத் திருமாலுக்கு
சொல்லும் பொருளும் சேர்ந்தமை இரண்டு சொற்களாலும் -நித்ய ஸ்ரீ நித்ய மங்களம் -என்றும் திரு விருந்த ஸ்ரீ தரன்
ஆள் ஆய்–ஆட்பட்டவனாய்
சேஷத்வம் புரிந்து கைங்கர்யம் பண்ணி ஆள் ஆனேன்
நெடு மாலை–(அந்த) ஸர்வேச்வரனை
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
வைத்து–ஸ்தாபித்து
நின்றும் இருந்தும் என்றும்–நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும்
மறந்தறியேன்–மறவாமல் (அவனையே) சிந்திப்பவனா யிருக்கின்றேன்.
அவன் நின்றும் இருந்தும் அவஸ்தைகளிலும் நான் நின்றும் இருந்தும் அவஸ்தைகளிலும் மறந்து அறியேன்

பெரிய பிராட்டி எப்போதும் வாஸம் பண்ணுகிற திருமார்பை யுடைய ஸ்ரீ தரனுக்கு தாஸனான நான்
கர்ப்பத்தில் இருந்த நாள் முதல் ரஷிக்கையாலே
ஸ்ரீ யபதியை என் ஹ்ருதயத்திலே ஸ்தாபித்து
நின்ற போதும்
இருந்த போதும்
எப்போதும் மறந்து அறிய மாட்டேன் –

கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-
எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-
என்றும்
திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று
வ்யாமுக்தனானவனை-என் நெஞ்சிலே வைத்து-
என்றும் ஒக்க
நின்ற போதொடு இருந்த போதொடு வாசி அன்றிக்கே-
மறந்து அறியேன் –
என்கிறார்-
ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

கருவிருந்த நாள் முதலாக் காப்பு
அவனாகையாலே
என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
நெடுமாலை
என் நெஞ்சத்தே வைத்து
என்றும்
நின்றும் இருந்தும்
மறந்தறியேன்
என்கிறார் -என்ற அந்வயத்திலே அர்த்தம்
ஜாயமான கடாக்ஷம் பெற்றதாலேயே இது எல்லாம் பெற்றேன் என்கிறார் –

(என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றுப் பருகினான் -(திருவாய் –9-6-10-)
அதனில் என் பெரிய அவா அறச் சூழ்ந்தாயே –(திருவாய் –10-10-10-)
ஆஸீ நா வா சயா நா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணா யேதி மந்த்ர ஏக சரணா வயம் –நாரதீயம்
திருமாலே நானும் உனக்குப் பழ யடியேன் -ஸ்ரீ தரனுக்கு ஆளாய்
ஜாய மாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது ஸூதந
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேய ஸ வை மோஷார்த்த சிந்தக –மோக்ஷ தர்மம்

கரு வரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் –(பொய்கையார் -6)
ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை –6-

கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் -(பூதத்தாழ்வார் –87 )
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

அப்பிள்ளை உரை
அறிகைக்கு யோக்யம் அல்லாத கர்ப்பத்தில் இருந்த நாள் தொடக்கமாக
அவன் என்னை குறைவற ரஷித்துக் கொண்டு போருகையாலே
பெரிய பிராட்டியார் சர்வ காலத்திலும் இறையும் அகலகில்லேன் என்று
எழுந்து அருளி இருக்கும் திரு மார்பை உடையவனாய்
(பிறந்த இடமான ஷீராப்தி ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் -இறங்காமலே சொல்லும் வார்த்தை )
அத்தாலே ஸ்ரீ தரன் திருநாமம் சார்த்தம் -அர்த்தமாக உடையவனான -திரு நாமம் படியே உள்ளதாக ஆனதே
(மாம்பழம் உண்ணி மைசூர் பாகு போல் இல்லையே )
ஸர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷ பூதனாய்
ஆஸ்ரித விஷயத்தில் நிரதிசய வ்யாமுக்தனானவனை (நெடு மால் )
என்னுடைய ஹ்ருதயத்தில் வைத்து நின்ற போதொடு இருந்த போதோடு வாசியற மறந்து அறியேன் -என்றார்
(குருஷ்மா மாம் அனுசரம் -கிரியதாம் இதி மாம் வத போல் )
நாரதீயம் -நமோ நாராயண மந்த்ரத்தை இருக்கும் பொழுதும் நின்ற போதும் கிடந்த போதும் –
எங்கே இருந்தாலும் சரணமாக பற்றினேன் போல் இங்கு இவரும்

————————————————————————–

(மறந்து அறியேன் -இறந்த கால பிரயோகம் கீழ்
இனி வரும் காலத்தில் மறப்பீரோ என்று ஸர்வேஸ்வரன் திரு உள்ளமாக
பிரானே நீ செய்து அருளிய ரக்ஷையையும்
உனது ஸ்வ பாவத்தையும் உள்ளபடி அறிந்தவர்கள்
உன்னை விடவும் முடியுமோ என்கிறார் இதில்
உலகில் சாதனாந்தரம் ஸாத்யாந்தரம் இரண்டில் செய்வது அனைத்தும் ஆகுமே
இவை இரண்டுமே கண்ணனே என்று இருப்பார் எவ்வாறு அவனை மறுப்பார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சர்வ சேஷியாய் குணாதிகனான உன்னை
யதாவாக அறிந்தவர்கள்
உன்னை விட்டு இருக்க மாட்டார்கள்

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப் பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

பதவுரை

அங்கு–அந்தப் பிரளய காலத்தில்
பல் உயிர்க்கும்–எல்லா ஆத்மாக்களுக்கும்
ஆப்பு ஒழியவும்–சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்)
ஆப்பு -சரீர இந்திரிய கட்டு -அநிஷ்டம்
ஆக்கை கொடுத்து–சரீரங்களைக் கொடுத்து
அளித்த–அருள் செய்த
கோனே–ஸ்வாமிந்!
காப்பு–(நீ செய்தருளும்) ரக்ஷைணை
மறந்தறியேன்–ஒரு நாளும் மறக்க மாட்டேன்
கண்ணனே என்று இருப்பன்–எல்லாம் கண்ணனே என்று உறுதி கொண்டிருப்பேன்
ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் -என்று இருப்பன்
குணம்–திருக் குணங்களினால்
பரனே–சிறந்த பெருமானே!
மெய் தெளிந்தார் தாம்–உள்ளபடி (ஸ்வரூபத்தைத்) தெளிவாக அறிந்தவர்கள்
உன்னை விட துணியார்–உன்னை விட மாட்டார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணனே ரக்ஷகன் என்று இருப்பன்
இதை மறக்க மாட்டேன்
பிரளய காலத்தில் சரீரங்கள் போனாலும்
ஸ்ருஷ்டி காலத்தில் ஸகல பிராணிகளுக்கும் சரீரங்களைக் கொடுத்து
ரஷித்த ஸ்வாமி யான குணாதிகனே
யதார்த்தம் அறிந்தவர்கள் உன்னை விடுகைக்கு ஸஹாஸம் செய்யார்கள் –

எம்பெருமானுடைய ரஷையை மறந்தறியேன்-
கிருஷ்ணனே பிராப்ய ப்ராபகங்கள் என்று இருப்பன்
சர்வ ஆத்மாக்களும் கரண களேபரங்கள் இழந்தால்-அத்தை மீளவும் கொடுத்து
ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான
சம்பந்தத்தை யுடையவனே
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-
உன்னை விடத் துணியார் -என்கிறார்

ஆப்பு -பந்தமாய்
அத்தால் கரண களேபரங்களை சொல்லுகிறது-

குணப் பரனே -குணாதிகனே -என்றபடி

(ஆப்பு -சம்சாரத்தில் அகப்பட்டுக் கட்டுண்ணப் பண்ணும் உபகரணம் -சரீர இந்திரியங்களைச் சொல்லுகிறது
நீ அடியிலே செய்த உதவியைக் கண்ட பின்பும் உன்னை விட்டும் அகல முடியுமோ
உன் சேஷித்வம் கண்ட பின்பும் அகல முடியுமோ
குண பரனே -உன் குணங்களைக் கண்ட பின்பும் அகல முடியுமோ
ரக்ஷகன் என்று விடுவதோ
உபகாரகன் அன்று என்று விடுவதோ
குண ஹீனன் என்று விடுவதோ
வகுத்தவன் அன்று என்று விடுவதோ
எத்தைச் சொல்லி விடுவது – )

(நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம் பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ–1-10-9-
எத்தைச் சொல்லி மறப்பேன்?
1-அபூர்ணன் என்று மறக்கவோ?
2-தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ?
3-வடிவழகு இல்லை என்று மறக்கவோ?
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ?
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ?
எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி. )

அப்பிள்ளை உரை
நீ இவ் வாத்மாவுக்கு பண்ணும் ரக்ஷையை மறந்து அறிந்தேன்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு ஸூலபனான நீயே
ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் என்று அத்யவசித்து இருப்பேன்
(மேன்மை விஸ்வரூபம் எளியவன் கையாளாய்-மாம் -அஹம் )
பிரளய தசையில் சரீரங்கள் அழிந்து போகவும் சர்வ ஆத்மாக்களுக்கும் உன்னை ஆஸ்ரயிக்க உறுப்பாக –
சரீரங்களையும் – கரண களேபரங்களையும் கொடுத்து அருளி (ஒருவனுக்கே பல சரீரங்கள் உண்டே )
தயாமானவாய்க் கொடுத்து -(பட்டர் ஸ்ரீ ஸூக்திகள் -நாயனாரும் எடுத்துக் காட்டி அருளினார் அன்றோ )
அதுக்கும் மேலே
குளிர ஈரக் கையாலே தடவி ரஷித்தவனாய்
இப்படி ரஷிக்கைக்கு அடியான ஸ்வாபாவிகமான சேஷித்வ பிராப்தியை யுடையவனாய்
ரக்ஷண அனுகுணமாக கல்யாண குண பூர்த்தியையும் யுடையவனாய் -குணங்களால் சர்வ உத்தமனாய்
( யாக்கை கொடுத்து அருளி -கோனே -குணப் பரனே-மூன்றுமே உண்டே )

உன்னோட்டை உறவையும்
உறவு அடியாக நீ பண்ணும் ரக்ஷணங்களையும்
ரக்ஷண அனுகுணமான குண வை லக்ஷண்யத்தையும்
உள்ளபடி அறிந்தவர்கள் உன்னை விட அத்யவசியர்கள்

சேஷ சேஷி பாவம் என்று விடவோ
ரக்ஷணங்கள் பண்ணி அருள வில்லை என்று விடவோ
உபகாரகன் அல்லன் என்று விடவோ
குண பரன் ஆலன் என்று விடவோ
பிராப்தி இல்லை என்று விடவோ

——————————————————–

(நீர் விடா விடிலும் உம் தோஷம் கண்டு நாம் விட்டால் என் செய்வீர் என்ன
எம்பிரானே உன் ஸ்வரூபத்தை மறந்து பேசுகிறீர்
சரணாகத ரக்ஷணமே அன்றோ உன் ஸ்வரூபம்
பாண்டவர்களை ரஷித்த செயலில் உம்முடைய ஆஸ்ரித பக்ஷபாதம் கண்டேனே
தோஷமே வடிவெடுத்த என்னை இதுவரை ரஷித்து மேலும் கால தத்வம் உள்ளதனையும் நீ ரஷிப்பதும் செய்வாய்
ஆரோக்ய ஹேது என்று அறிந்தால் வேம்பின் இலையும் கறியாகுமே
அப்படியே என்னையும் திரு உள்ளம் பற்ற வேணும் என்கிறார் -)

அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்
என்னிலும் தண்ணி யரையும்-
யதி வா ராவணஸ்வயம்-என்னும்படியே
வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும் விஷயீ கரிக்கப் படுமவர் என்கிறார்-

அப்பிள்ளை உரை -அவதாரிகை
அத்யந்த ஹேயன் யாகிலும் என்னை விஷயீ கரித்து அருள வேண்டும்
(அகிஞ்சனனாய் குண ஹீனனைத் தேடி அன்றோ நீர் உள்ளீர் )
வஸ்து ஸ்த்திதி அழகியதாக உண்மையாக யாதாவாக அறியுமவர்கள்
எத்தனையேனும் தோஷம் இருந்தாலும்
தோஷம் கண்டு இகழாமல்
தோஷமே பச்சையாக (உபகாரகமாக )மேல் விழுந்து
என்றும் விஷயீ கரிப்பார்கள் அன்றோ என்கிறார்-

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-

பதவுரை

வேறு ஆனார்–வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள்
நீறு ஆக–சாம்பலாய் ஒழிந்து போம்படியாக
தெளிந்து–(ஆஸ்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி
தெளிந்த பை பாம்பு இன்அணையாய்–விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே!
அடியேற்கு–அடியேனுக்கு
அருளாய்–அருள் புரிய வேணும்
என்று–வேணுமென்று விரும்பினால்
கை காட்டி–(பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து
கை தெளிந்து காட்டி–தெளிந்து கை காட்டி
களம் படுத்து–(அந்த எதிரிகளைப் போர் களத்தில் கொன்றொழித்து) (இவ் வகையாலே மண்ணின் பாரம் நீக்கி)
வேம்பும் கறி ஆகும்–வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ளக் கூடியதே
மெய் தெளிந்தார்–உள்ளதை உள்ளபடி யறியுமவர்கள்
என் செய்யார்–எது தான் செய்ய முடியாதவர்கள் (எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே)

ஸத்ருக்களான துரியோதனாதிகள் பஸ்மாமாம் படி ஸங்கல்பித்துப் படை வகுத்து யுத்த அரங்கத்திலே விழச் செய்து
நிர்மலமாய் பரந்த பணங்களை யுடைய திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கை மேலே கண் வளர்ந்து அருளுகிறவனே
அடியேன் விஷயமாகக் கிருபை பண்ணி அருளாய்
இஷ்டம் இருந்தால் வேம்பின் இலையும் கறி யமுதாகும்
தத்வம் அறிந்தவர்கள் என் செய்ய மாட்டார்கள் —

ஒன்றாய் வாழாதே வேறான துர் யோநாதிகள் பஸ்மாமாம்படி-
பர ஹிம்சை என்று கலங்காதே-
ஆஸ்ரித விரோதிகள் ஆகையாலே-திரு உள்ளம் தெளிந்து
அணி வகுத்து
யுத்த களத்திலே கொண்டு விழ விட்டு-
பின்னும் படுக்கையிலே சாய்ந்தவனே

பை தெளிந்த
எம்பெருமானோட்டை ஸ்பர்சத்தாலே குளிர்ந்த பணங்கள்-

அவர்கள் தக்க வைவர்
(நீர் தகாத ஒருவர் என்று அவன் திரு உள்ளதாக )

நீ ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்
(வேம்பையும் கறியாகக் கொள்ள வல்ல சமர்த்தன் அன்றோ
நீர் திரு உள்ளம் பற்றினால் குண ஹீனரையும் ரஷிக்கலாமே )

கறியாகக் கொள்ளுவோம் என்று அபிமானிக்க-வேம்பு கறியாகுமா போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –

கிமத்ர சித்ரந் தர்மஜ்ஞ-இதிவத்
சரணாகதி தர்மம் அறிந்தவர்கள்
தோஷவானையும்-கைக் கொள்ளுவார்கள் -என்றபடி-

(கிமத்ர சித்ரம் தர்மஜ்ஞ லோக நாத ஸூகாவஹ
யத் த்வமார்யம் ப்ரபா ஷேதா ஸத்வவான் ஸத்பதே ஸ்திதே -யுத்த –18-36-என்று
தர்மம் அறிந்தவனே லோக நாதனே ஸூகம் அளிப்பவனே ஸத்வ குணம் உடையவனாய்
நல் வழியில் நிற்கும் நீ
இந்த நல் வார்த்தை நவின்றதில் என்ன ஆச்சர்யம் உள்ளது – )

அப்பிள்ளை உரை
ஒன்றாய்க் கூடி வாழ அறியாதே ஏறிட்டுக் கொண்ட துரியோதனாதிகள்
ஒரு பிடி சாம்பலாகப் போம் படியாக
பர ஹிம்ஸை என்று கலங்காதே
ஆஸ்ரித விரோதிகள் என்று திரு உள்ளம் தெளிந்து கையும் அணியும் வகுத்து
எதிரிகளின் மர்மங்களைக் காட்டி யுத்த பூமியிலே கொன்று விழ விட்டு
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்து கை ஒழிகையாலே (விஸ்ராந்ததுக்காக )
ஸ்வ ஸ்பர்சத்தாலே குளிர்ந்த படங்களை யுடைய படுக்கையிலே திரு அனந்தாழ்வான் ஆகிய படுக்கையிலே
கரைசல் அற்று கண் வளர்ந்து அருளுகிறவனே
அத்யந்த ஹேயனான-புகலற்ற குண ஹீனனான -அகதி அகிஞ்சனான அடியேனை
கிருபை பண்ணி அருள வேணும்
அவர்கள் தக்கவர்கள் நீ ஹேயன் என்றால்
ஹேயனையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாமே
கறியாகக் கொள்ளலாம் என்று ஏறிட்டுக் கொள்ளும் அளவில்
விரசமான வேம்பும் கறி யாகுமே
வஸ்து ஸ்திதியை பழையதாக உள்ளபடி அறிந்து
தோஷம் பார்த்து இகழாமல் மாத்திரம் அன்றிக்கே
(யதிவா ராவணாஸ்யாம் போல் )அதுவே பச்சையாகக் கொண்டு
கை விடுகைக்கு உறுப்பான குற்றங்களைச் சொல்லி மறுதலைத்த அவர்களே
வாய் விட்டு புகழும் படி மேல் விழுந்து விஷயீ கரித்தார்கள் அன்றோ
(அஸ்மாத் துல்யம் என்றார்கள் அன்றோ )
பை தெளிந்த என்ற இடத்தில் தெளிவால் குளிர்த்தியைச் சொல்லுகிறது

————————————————————————–

(அருளாய் அடியேற்கு என்றபடியே
எம்பெருமான் அருள
தாம் இஷ்ட பிராப்திகளையும் அநிஷ்ட நிவ்ருத்திகளையும்
பெற்ற படியைப் பேசுகிறார் –
கடன் நாடு ஸ்வர்க்கம் விட்டேன் -அனுபவித்தே அற வேண்டிய நாடு தானே
மண்ணாடு விட்டேன் -சம்சாரம் போனதே
இட நாடு பெற்றேன்
அடிமை ஏன்றேன் -கைங்கர்யம் பெற்றேன் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
எம்பெருமான் பக்கலிலே தமக்கு பரம பக்தி பிறந்தமையை அருளிச் செய்கிறார்

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

பதவுரை

அடிமை–அடிமையை
என்றேன்–ஏற்றுக் கொண்டேன்
பிறப்பு இடும்பை–ஸம்ஸார துக்கங்களில் நின்றும்
இழிந்தேன்–நீங்கினேன்
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்களுக்கும்
அமராமை–என் அருகு நாடா வெண்ணாதபடி
ஆன்றேன்–(ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன்
கடன் நாடும்–ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும்
மண் நாடும்–இப் பூலோகத்தையும்
கை விட்டு–உபேக்ஷித்து
மேலே–எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய்
இடம்–(அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான்
நாடு–திருநாட்டை
காண–கண்டு அநுபவிக்கலாம்படி
இனி–இப்போது
ஆன்றேன்–(பரம பக்தி) நிரம்பப் பெற்றேன்

தாஸ்யத்தை ஏற்றுக் கொண்டேன்
ஜென்ம துக்கங்களில் நின்றும் இறங்கினேன்
ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் கிட்ட ஒண்ணாத படி ஞானாதிகன் ஆனேன்
கடன் போல் அவஸ்யம் அனுபவிக்கத் தக்க ஸ்வர்க்கத்தையும் பூ லோகத்தையும் விட்டு விட்டு
ஸர்வ உத்க்ருஷ்டமாய் விசாலமான திரு நாட்டை ஸேவிக்க
இப்போது பாக்யம் உடையேன் ஆனேன் —

ஏன்றேன் அடிமை –
அடிமை என்றால் மருந்து போலே இராதே-
அதிலே பொருந்தினேன்

இழிந்தேன் பிறப்பு இடும்பை –
அடிமைக்கு விரோதியாய்
சாம்சாரிகமான-அஹங்காரம் மமகாரம் ஆகிற
பர்வதத்தில் நின்றும் இழிந்தேன்

ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன் கடனாடும் மண்ணாடும்
கை விட்டு மேலை இடநாடு காண வினி –
ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-
ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-
அதுக்கு மேலே
புண்ய பலம் புஜிக்கும்-ஸ்வர்க்காதி லோகங்களையும்-
புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து
அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி
இப்போது பரம பக்தி யுக்தனானேன் என்கிறார்-

(கடன் நாடு -அனுபவித்தே தீர்க்க வேண்டிய புண்யம் புஜிக்கும் நாடான ஸ்வர்க்கம்
இட நாடு -சர்வாத்ம சாதாரண நாத கோஷ்ட்டி பூரேபி துஷ்பூர மஹா ஆகாசம் -ஸ்ரீ ரெங்கராஜ பூர்வ சதகம்
அடியார் குழாங்கள் திரளும் இடமான பரம பதம் )

அப்பிள்ளை உரை
அடிமை என்றால் மருந்து போலே முகம் சுளிக்கும் படி விரசமாய் இராதே –
(சேவை நாய்த் தொழில் மனு -பண்ண வேண்டாத இடத்தில் அது இங்கு ப்ராப்த விஷயம் )
அதிலே பொருந்தினேன
அஹம் சர்வம் கரிஷ்யாமி -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சகல வித கைங்கர்யங்களிலும்
அத்யபிநிவிஷ்டனாய்க் கொண்டு பொருந்தினேன்
அடிமைக்கு விரோதியான ஜென்ம சம்பந்த ப்ரயுக்தமான அஹங்கார மமகார சர்வ துக்க ரூப பர்வதங்களில் இருந்து இறங்கினேன்
ப்ரஹ்மாதிகளுக்கும் என்னைக் கண்டால் வந்து கிட்ட ஒண்ணாத படி கூசி அகன்று போகும்படி -மதி நலம் –
ஞானம் கனிந்த நலம் ப்ரேமங்களாலே பரிபூர்ணன் ஆனேன்
பண்ணிய புண்ணியத்துக்கு கடன் போல் அவஸ்ய அனுபாவ்யங்களான வரக் கடவ ஸ்வர்க்காதி லோகங்களையும்
புண்ய ஆர்ஜனம் பண்ணும் பூ லோகத்தையும் உபேக்ஷித்து
மிக உயர்ந்த -விஸ்வத பிரஷ்டேது -என்னும்படி -சர்வ விலக்ஷணமாய் -அநந்த ஆயாம விஸ்தீரணம் –
இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் மா நாட்டைக் கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது பரம பக்தி உக்தனானேன்
(கண்ணே உன்னைக் காணாக் கருதி- மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் எண்ணும் )
இத்தால்
1-பரம பிராப்தமான கைங்கர்யத்துக்கு தமக்கு அளவிறந்த சாரஸ்யம் விளைந்தபடியையும்
2-அதுக்கு விரோதியான அகங்கார மமகார ரூபா துக்க சம்பந்தம் விட்டு நீங்கிய படியையும்
3-அடிமைக்கு அடைவு இல்லாத சம்சாரத்தில் தனக்கு உள்ள விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரம பதத்தில் புக்கு அல்லது தரிக்க அரிதாம்படி தமக்கு பரம பக்தி பிறந்த படியையும்
5-இப்படி உள்ள அதிகார பூர்த்தியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தலை நடுங்கி தன் கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல்
கடக்கப் போம் படி தம்முடைய வேண்டற்பாட்டையும்
அருளிச் செய்தார் ஆயிற்று

————————————————————————–

(முக்தி தசையில் இவன் பெறும் பெருமைகளுக்கு எல்லாம்
மூல காரணம் ஞான விகாஸம் அன்றோ
தாம் அதைப் பெற்றத்தைப் பேசி
இப் பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார்
அனுகூல ஞானமே ஆனந்தம் -ஆனந்தத்துடனே நிகமிக்கிறார் –
உபக்ரமம் படியே உப சம்ஹாரம் பண்ணி அருளுகிறார்
ஸ்வரூப ஆவிர்பாவம் -ஞான விகாசம் -தானே ஆனந்தம் )

அப்பிள்ளை உரை -அவதாரிகை
(ஏகோ ஹை நாராயணா ஆஸீத் -மஹா நாராயண )
மஹா உபநிஷத் ப்ரக்ரியையால் பிரம்மா ருத்ர பிரமுகமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே
ஸர்வ ஸ்மாத் பரன் என்று உபக்ரமித்து -பிரதமத்திலே ப்ரதிஜ்ஜை பண்ணி
ஸ்ருதி ஸ்ம்ருதி உப ப்ராஹ்மணங்களாலும்
அநந்யசாத் ஸித்தமான ஸ்ரீயபதித்வாதி சிஹ்னங்களாலும்
நெடுக உப பாதித்துக் கொண்டு போந்து
அடியில் ப்ரதிஜ்ஜை அனுகுணமாக அவனுடைய பரத்வத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

பதவுரை

எம்பெருமான்–எம்பெருமானே!
உன்னை–உன்னை
ஈசற்கும்–ருத்ரனுக்கும்
நான் முகற்கும்–பிரமனுக்கும்
தெய்வம்–தெய்வமாக
இனி அறிந்தேன் இனி அறிந்தேன்–இப்போது திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ–ஸகல ஜகத்துக்கும் காரண பூதன் நீ
கற்றவை நீ–இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ
கற்பவை நீ–இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்)
நல் கிரிசை–நிர்ஹேதுக ரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான
நாரணன் நீ–நாராயணன் நீ
நான் நன்கு அறிந்தேன்–நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்

ஸர்வ ஸ்வாமியான உன்னை
ருத்ரனும் ப்ரஹ்மாவுக்கும் தேவதை என்று இப்போது அறிந்தேன்
நீ ஜகத் காரண பூதன் என்று இப்போது அறிந்தேன்
இது வரையில் அறிந்த பதார்த்தங்களும் நீயே
மேல் அறியத் தக்க பதார்த்தங்களும் நீயே என்று இப்போது அறிந்தேன்
நிர்ஹேதுக ரக்ஷணம் ஆகிற நல்ல வியாபாரத்தை யுடைய நீ
சர்வ சேஷியான நாராயணனே என்று நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன் —

இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம்  என்று எனக்கு
கை வந்தது –
இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன்
சர்வத்துக்கும் காரணன் நீ
இதுக்கு முன்பு அறிந்தனவும்
இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம்
நீ இட்ட வழக்கு
(நிர்வாக நிர்வாஹ்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் )

நற் கிரிசை –
நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-
அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
(கிரிசை -நற்கிரிசை -நிர்ஹேதுகம்
நல்கித்தான் காத்து அளிக்கும் நாரணனைக் கண்டக்கால் போல் இங்கும் )

நன்கு அறிந்தேன் நான்
இப் பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

(அறிந்தேன் -நன்கு அறிந்தேன் -ப்ரத்யக்ஷமாக அழகியதாக அறிந்தேன்
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைப் படைத்தான்
உபக்ரமத்தில் அருளிய அர்த்தத்தையே உபசம்ஹரித்து நிகமிக்கிறார்
கற்றவை நீ கற்பவை நீ
ஸர்வம் கல் விதம் ப்ரஹ்மம் )

அப்பிள்ளை உரை
எனக்கு நாயகனான சர்வாதிகனாக இருக்கும் உன்னை
பசு பிராயராகவும் மஸகப் பிராயராக (ஈ கொசு போல் )
ஈஸ்வர தயா சங்கதரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் ஆஸ்ரயணீயனாய் இருக்கும் இருப்பை நீயே ஒருவன்
உனது ப்ரஸாதத்தாலே யதாவாக அறிந்தேன்
சர்வத்துக்கும் காரண பூதன் நீ என்று அறிந்தேன்
(சதேவ சோம்ய ஏகம் இதம் அக்ர ஆஸீத் ஏவ அத்விதீயம்
பஹு ஸ்யாம் ப்ரஜாயேய
த்ரிவித காரணமும் அபின்ன நிமித்த காரணம் அலௌகிகம் அன்றோ )
இதுக்கு முன்பு அறியப்பட்ட பதார்த்தங்களும் மேல் அறியப் போகும் பதார்த்தங்களும்
நீ என்னும் இடம் விசத தமமாக அறிந்தேன்
நீ இட்ட வழக்கு தானே
நிர்ஹேதுக ரக்ஷணமாகிய நல்ல கிரிசை
அதுக்கு அடியாக -நாராயணத்வ ப்ரயுக்தமான சர்வ சேஷியான
சம்பந்த விசேஷம் யுடையதாக இருக்கும் என்பதையும் அழகிதாக அறிந்தேன்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading