பார் வண்ண மட மங்கை பனி நன் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்தவனூர்
கார் வண்ண முது முந் நீர்க் கடல் மல்லைத் தல சயனம்
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே–2-6-2-
புருஷகாரமும் மிகையாகும்படி அவனுடைய ஊர்
முது முந் நீர்-பழைய ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று நீர்
எம்மை யாள்வாரே-ஆழ்வார்களை எல்லாரையும் கூட்டி அருளிச் செய்கிறார்-(பல சாதன சிஸ்ரூஷா )
——————————————————
முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே
படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் –
அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை –
ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும்
அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே
நமக்கு இனி இழக்க வேண்டாதபடி
சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை
ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள்
என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்-
வியாக்யானம் –
பார்வண்ண மட மங்கை
பாரை வண்ணமாக உடையாளாய்
ஆத்ம குணத்தை உடையாளாய் இருக்கிற
ஸ்ரீ பூமி பிராட்டி –
பூமிக்கு அபிமானியாய் இருக்குமவள் இறே-
அவன் தனக்கு கூட பொறைக்கு உவாத்தாய் இறே இவள் இருப்பது –
தன் பக்கலிலே எல்லா பிரதி கூல்யத்தையும்
பண்ணிக் காலிட்டு துகையா நின்றாலும்
துகையா நின்றோம் என்று கூச வேண்டாதே இறே இருப்பது -ஷமை என்று இறே பேர் –
(சாஷாத் ஷமா என்றே பெயர் -க்ஷமை உடையவள் என்னாதே க்ஷமையே இவள் நிரூபகம் )
பனி நன் மா மலர்க் கிழத்தி –
பிறர் குற்றம் நெஞ்சில் படாதபடியான மார்த்தவத்தை உடைய தலைவி –
சர்வ கந்த -என்கிற வஸ்துவையும்
தன்னுடைய போக்யதையாலே துவக்கி
ஆஸ்ரிதர் குற்றம் நெஞ்சில் படாதபடி பண்ணுமவள்-
அழகிய தாமரைப் பூவில் -பரிமளம் உபாதாநமாக பிறந்தவள் –
இத்தால் சர்வேஸ்வரனுக்கு தன்னோடே பணி
போரும்படியான போக்யதையை உடையவள் என்கை –
இவர்கள் –
நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்து –
கடல் போலே இருக்கிற குளிர்ந்த வடிவில் இடவருகிலும்
திரு மார்பிலும் எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுசந்தித்து –
நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே
சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை
நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே –
மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில்
பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை-
யத்ர கிருஷ்ணவ் ச கிருஷ்ண ச சத்யபாமாச பாமி நீ –
கிருஷ்ணனும் சத்யா பாமை பிராட்டியும்
அர்ஜுனனும் த்ரௌபதியுமாக
கால் மேலே கால் ஏறிட்டு ஒருவருக்கும் சென்று கிட்ட ஒண்ணாதபடி
ஏகாந்தமாக இருக்கிற இடத்தில்
சஞ்சயன் வந்தான் என்று அறிவிக்க
இவ் விருப்பு காண உகப்பான் ஒருத்தன்
இது தன்னையும் உகவாதார் மண் உண்ணும்படி
சொல்ல வல்லான் ஒருவன் -புகுர விடு -என்றான் இறே
ந சாபிமன்யூர் நய மௌ தம்தேச மபிஜக்மது –
மாதா பிதாக்கள் இருந்த இடத்தில்
பிரஜைகள் சென்று கிட்டுகையில்
ஒரு அருமை இல்லை இறே –
ஆயிருக்கச் செய்தே அந்த பிரஜைகளும் கிட்ட ஒண்ணாதபடி இருக்கிற சமயத்திலே யாயிற்று
இவனை அழைத்து காட்சி கொடுத்தது-
————————————————-
(பாகவத சமாகம் -உபாயமாகவா- புருஷகாரமாகவோ -ப்ராப்யமாகவோ-
ஆனுகூலஸ்ய இத்யாதிகளில் பாகவத சமாகம் இல்லையே -இதுக்கு மீண்டும் அவதாரிகை )
அநாதி காலம் சம்சரித்திப் போருதிற இச் சேதனர் விஷயமாக
சர்வேஸ்வரன் திரு உள்ளத்தாலே
ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம்-என்கிறபடியே பண்ணுவித்த தொரு
சௌஹார்த்தம் உண்டு இறே –
இவனுடைய சத் கிரியைக்கு ( யாதிருச்சாதிகள்-நன்மை என்று பேர் இடலாவது தீமைகள் )பல வ்யாப்தி
உண்டாகா நின்றால் அவனுடைய அனுக்ரகத்துக்கு பல வ்யாப்தி இன்றிக்கே இராது இறே –
ஆகையால் அது தான் ஒரு நாள் ஓர் அவகாசத்திலே
பலிக்கவும் கடவதாய் இருக்கும் இறே –
அத்தாலே இவனுக்கு ஈஸ்வரன் பக்கலிலே ஆபி முக்யம்
பிறந்து அது அடியாக அவன் விசேஷ கடாஷம் பண்ண –
அநந்தரம் -இவனுக்கு அவன் பக்கலிலே
ருசி விஸ்வாசங்கள் பிறந்து
ப்ராபகனும் ப்ராப்யனும் அவனே என்று அத்யவசித்தால்
பின்பு அவன் இருக்க கடவ படியைச் சொல்லுகிறது-
(பாகவத சேர்க்கையில் விருப்பமும் அபாகவத சேர்க்கையும் வெறுப்பும் –
இது உபாய கோடியிலா உபேய கோடியிலா என்பதுக்கு விளக்கம் மேல் )
இனி உபாயத்தில் வந்தால்
சர்வஞ்ஞனாய் –
சர்வ சக்தியாய் –
உபய விபூதி உக்தனாய் –
அவாப்த சமஸ்த காமனாய் –
இருக்கிற சர்வேஸ்வரனை இஸ் சம்சார சேதனன்
உபாயமாக வரித்தால் -பின்னை அவனுடைய சர்வ
பரங்களையும் தானே ஏறிட்டுக் கொண்டு நிர்வஹிப்பான் ஆகில்
அவன் செய்யுமதுவும் இவன் தானும் ஒரு தலைப் பற்ற வேண்டும்
படி இராமையால் பின்னை ஹித சேஷத்தில்
தனக்கு செய்ய வேண்டுவது ஓன்று இல்லை –
உபேயம் ஆகிறது -கர்ம நிபந்தனமாக பரிகிரஹித்த
இத் தேக சம்பந்தம் அற்று ஒரு கதி விசேஷத்தாலே போய்
ஒரு தேச விசேஷத்திலே புக்கால் பண்ணுவதொரு
வ்ருத்தி விசேஷம் ஆகையால் அது இதுவாகக் கூடாது
பிராபக அம்சத்தில் கர்தவ்ய அம்சம் இல்லை யாகில்
ப்ராப்ய அம்சத்தில் இது அந்வயித்தது இல்லை யாகில்
பின்னை இதுவாவது பழைய விஷய ப்ராவண்யமே
சித்தித்து விடுகிறதோ என்னில் கூடாது இறே –
ப்ராப்யம் இன்னது என்று நிஷ்கர்ஷித்து ப்ராப்ய ஸ்வீகாரம் பண்ணுகையாலே –
அதாவது
பிராப்ய ஆபாசங்களிலே ருசி நிவ்ருத்தி பூர்வகமாக இறே ப்ராப்ய பிரதிபத்தி ஆகையாலே
தூரதோ நிரஸ்தம் இறே அது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற இடத்தில்
விஹித கர்மங்களும் நிஷித்த பரிஹாரார்தமாக
செய்யுமவை (பிராயச்சித்த தர்மங்களும் )எல்லாம் தர்ம சப்த வாச்யம் ஆகையாலே
இவையும் த்யாக விஷயமாய் அன்வயிக்கும் என்று அர்த்த ப்ராப்தமாய்
பழைய பாபங்களையே சொல்லிற்றே வராதோ -வென்னில் -வாராது இறே
உபாய ஸ்வரூபத்தாலும்
அதிகாரி ஸ்வரூபத்தாலும்
(உபேய ஸ்வரூபத்தை பார்த்தாலும் )
அப்படியே இருக்கிறது இதுவும் -( ப்ராக்ருத விஷயாந்த ப்ராவண்யம் வாராது என்றபடி )
சரீர சமனந்தரத்திலே ப்ராப்ய சித்தியாய் இருக்கையாலும் –
இனி சமஸ்த கல்யாண குணாத்மகனை உபாயமாக வரிக்கையாலும்
இவன் தான் விதி பர தந்த்ரனாய்
சாதனா புத்யா இங்கு அனுஷ்டிப்பது ஓன்று இல்லாமையாலும்
ஜ்ஞானம் பிறந்த பின்பு செய்யுமவை எல்லாம் தான்
ஸ்வீகரித்த பிராப்யத்தோடும் ப்ராபகத்தோடும் சேர்ந்தது அல்லாது இராது –
நினைத்தார் நினைத்தபடி மூலையடியே திரிகிற
அஞ்ஞ்ரைக் காட்டில் இவனுக்கு ஒரு வ்யாவ்ருத்தி வேணும் இறே –
இன்று நாளை நீர் வரும் ஆறு
அங்கே இங்கே சினையாறு பட்டுக் காட்டுமா போலே
மேல் தான்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும் –
அவர்களோடு கூடி அனுபவிக்கும் அத்தை பேறாகச் சொல்லுகையாலே இவனுக்கு இது சரம சரீரம் ஆன பின்பு
இவை இங்கே பிறக்கக் காண வேணும் இறே-
அவை ஆகிறவை தான் எவை என்னில்
அபாகவதர்களோடு பொருந்தாமையும்
பாகவதர்களை ஒழியச் செல்லாமையும்
இறே
அவை இரண்டும் தமக்கு உண்டான படியை அருளிச் செய்கிறார் –
பார்யைக்கு அறிவு பிறக்க பிறக்க பர்த்தாவின் பக்கல் பாவ பந்தம் உண்டாம் –
பர்த்த்ராந்தர பரிக்ரஹம் பண்ணுமது இறே இவள் அவனுக்கு ஆகாது ஒழிகை ஆகிறது –
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மந்தர் -என்னா நின்றது இறே –
பிரபன்னருடைய லஷணம் சொல்லுகிற போது
இப்படி சர்வேஸ்வரன் உத்தேச்யம் என்று ஞானம் பிறக்க பிறக்க
பாகவதர் பக்கல் பாவ பந்தம் உண்டாகலாம் –
இந்த ஞான அர்த்தமாக விட வேணும் இறே அபாகவாத சம்பந்தம் –
(பார்த்தாவின் சரீரம் -கால் கை இவற்றில் ஈடுபாடு போல் பாகவதர் மேல் ஈடுபாடு –
அவன் திருமேனி அன்றோ இவர்கள்)
மூன்று தசைகள் பாகவதருக்கு என்பதை அருளிச் செய்கிறார்
இனி பாகவதர் ஆகிறார் –
பிரதம தசையில் ஈஸ்வரனுடைய உபாய பாவத்தை அறிவித்து –
அவ்வழி யாலே புருஷகார பூதராம் ஆவார்கள் –
இவன் தான் சேதனனாய் உபகாரம் கொண்டவன் ஆகையாலே கிருதஞ்ஞனாய் இருக்கக் கடவன் –
இனி சரம தசையில் வந்தால் ப்ராப்யத்தில் எல்லை இவர்கள் ஆகையால் அவன் தன்னோபாதியும்
உத்தேச்யராய் இருக்கக் கடவர் –
இனி நடுவு பட்ட நாள் –
இவனுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு
உடலாய் இருப்பார்கள் ஆகையால்
சர்வ அவஸ்தைகளிலும் இவர்களே உத்தேச்யம் என்னும் இடம் சொல்லிற்று –
ஆனுகூலச்ய சங்கல்ப -இத்யாதிகளால் ஆறு வகையாக இருக்கும் சரணாகதி என்று சொல்லா நின்றது –
அஹம் அஸ்ம்ய அபராதநாம் ஆலய அகிஞ்சன அகதி த்வமே உபாய பூதோ மே பவ இதி ப்ரார்த்தனா மதி சரணாகதி -என்று
தன் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு நீயே உபாயமாக
வேணும் என்று அபேஷிக்குமத்தை சரணாகதியாக சொல்லா நின்றது –
இதில் ஒன்றை விட்டு ஒன்றை ஸ்வீகரிக்கும் அன்று மற்றையதுக்கு அப்ராமண்யம் சித்திக்குமாய் இருந்தது –
ஆனால் இவை இரண்டும் அவிருத்தமாக அன்வயிக்கும்படி-( நயிக்கும் -படி பொருந்த விட்டபடி -) எங்கனே என்னில்
த்வமே -என்கிற இடத்தில் உபாயாந்தர நைரபேஷ்யம் தோற்றி இருக்கையாலே சரணா கதியினுடைய
ஸ்வரூபம் சொல்லுகிறது அந்த ஸ்லோகத்தாலே-
அச் சரணா கதி புக்க இடத்தே புகக் கடவதாய் சரணா கதன் ஆனவனுக்கு சம்பாவித ஸ்வாபாவங்களை சொல்லுகிறது
இந்த ஸ்லோகத்தாலே –
சரணா கதியினுடைய ஸ்வரூபத்தைப் பார்த்தால் வேறு ஒன்றைப் பொறாத படியாய் இருக்கும் –
இனி ஒதுங்கின ஆஸ்ரயத்தை பார்த்தால் இஸ் ஸ்வாபாவங்களோடு கூடி அல்லாது இராது –
ஷட் விதா சரணா கதி -என்று கொண்டு இக் குணங்களை சரணா கதிக்கு அங்கமாக சொல்லா நிற்க
இவனுக்கு சம்பாவித ஸ்வா பாவம் என்னும்படி எங்கனே என்னில் –
பிரார்த்தனா மதி சரணா கதி -என்கிற இடத்தில் பிரார்த்தனா புத்தி இச் சேதனன் கையில் கிடக்கச் செய்தே
எங்கனே சரணா கதி லஷணம் விஷயமாய் கிடக்கிறபடி –
ஆனுகூலச்ய -என்கிற ஸ்லோகம் விதி பரதந்த்ரமாய் செய்யும் அன்று –
பல அபேஷை இல்லாத போது தவிரலுமாய் இருக்கும் –
ஸ்வரூப நிவேசியாமன்று செய்யாத போது ஸ்வரூப ஹானியே சித்திக்கும் இறே –
ஸ்வர்க்க காமனாய் இல்லாத போது ஜ்யோதிஷ்டோமம் தவிரலாய் இருக்கும் –
அங்கனே செய்ய ஒண்ணாதபடி யாய் இருக்கும் இறே –
இத்தலையால் ஒரு பலம் சொல்லாத நித்ய அனுஷ்டான விதிக்கும் –
(உபாயத்துக்கு அங்கங்கள் என்றால் பலம் சித்தித்த பின்பு இவை தொடராக கூடாதே
இவை இங்கும் அங்கும் தொடருமே -ஸ்வரூபத்துடன் சேர்ந்தே இருக்குமே –
பாகவத சமாகம் அவர்ஜனீயம் -சந்த்யா வந்தனாதிகள் போல் -பலத்திலே அந்வயிக்கும் என்றவாறு )
இதில் முதல் பாட்டில் -அபாகவதரோடு பொருந்தாமை சொல்லுகிறது –
இவை இரண்டும் உத்தேச்யமானால் க்ரம விசேஷத்தத்துக்கு கருத்து என் என்னில் –
ஆநு கூல்யத்துக்கு அவதி இல்லாமையாலே சங்கல்பமே அமைந்தது –
இதில் முதல் அடி இட்டானாவதும் இஸ் ஸ்வா பாவம் உண்டானால் ஆகையாலே இத்தை முந்துறச் சொல்லுகிறது –
(பண்ணுவேன் என்று சொல்லாமல் பண்ணுவேன் என்ற சங்கல்பமே போதும்
பிரதிகூல வ்ரஜம் விட்டே இருக்க வேணுமே )
விரோதி த்யாக பூர்வகமாக இறே உபாய ஸ்வீகாரத்தை விதிக்கிறது –
பரித்யக்யா மயா லங்கா -என்றும் –
த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ தாராம்ச -என்றும் இறே
ராகவம் சரணம் கத -என்கிறது
தன்னைப் பேணாதே பிரயோஜனாந்த பரருக்காக உடம்பு நோவக்
கடல் கடைந்து அமுதத்தைக் கொடுத்த சர்வேஸ்வரன்
அந்த அம்ருத்தோ பாதியாகிலும் நம்மை விரும்புவார் சிலரைக் கிடைக்க வற்றோ என்று
அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு சாய்ந்து அருள
அவனை விட்டு புறம்பே போது போக்குகிற வர்களை
நான் ஒருவனாக புத்தி பண்ணி இரேன் என்கிறார்-
———————————————————————
நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு-
ஆசூர பிரகிருதிகள் நடுவே
பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காகப் போய் புக்கு –
சர்வேஸ்வரன் தேவாசுர விபாகம் பண்ணுகிற இடத்தில்
இவ்விரண்டாகாரம் எங்கும் ஒக்க உண்டாம்படி பண்ணினான் ஆயிற்று
அப்போது அர்ஜுனன் -நான் எக் கோடியிலே போகிறேனோ என்று சோகிக்க
மாஸூஸ சம்பதம் தைவீ மபி ஜாதோசி பாண்டவ -என்று
உனக்கு என் -நீ சத் பிரகிருதி அல்லையோ -என்றான் இறே –
மனுஷ்யராய் இருந்து வைத்து ஆசூர பிரகிருதி களாய் இருப்பார் கோடியில் அன்றிக்கே
இவர்களுடைய ஆசூரத்வம் ஜன்ம ப்ரப்ருதி உண்டாய் இருக்கை-
ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வைத்து உக்ரசேனன் நிலை
அல்லவாம்படி இறே-கம்சனுக்கு உண்டான ஆசூரத்வம்
ஈஸ்வரனோடு பொருந்தாமை ஸ்வ பாவமாக உடையராய்
தாங்கள் அதுக்கு மேலே சாயுதருமாய் இருப்பர்கள்-
வாள் அவுணர் இடைப்புக்கு –
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய
தோள் கண்டு புகுகிறதோ –
பர ஹிம்சை பண்ணுகைகாக பரிகரம் கொண்டு இருக்கிறவர்கள் நடுவே இறே போய்ப் புக்கது –
இப்படி போய் புக்கலுமாம் இறே தன் வாசி அறியாத சிலருக்கு செய்யப் பெற்றதாகில் –
வானவரை –
கார்ய காலத்தில் பல் காட்டி
அநந்தரம்
அவனைத் தள்ளி -ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்காக வாயிற்று –
இவனை தங்களோடு சஜாதீயனாகப் புத்தி பண்ணுதல் (தேவேந்திரன்-உபேந்த்ரன் )அன்றிக்கே –
இவன் ஒரு மூங்கில் வளைத்த போதாக நம்மில் அதிகன் என்று இருத்தல் செய்யுமவர்கள் இறே –
(பாரிஜாத வ்ருஷ வ்ருத்தாந்தம்-வில்லை வளைத்த வ்ருத்தாந்தம் -ஹூங்காரம் கேட்டே வில் முறிந்ததே )
இதில் இன்னும் அந்த சஜாதீய புத்தி தானே நன்று இறே –
அவ் அவுணரில் இவர்களுக்கு வ்யாவிருத்தி பெரிது அல்ல வாயிற்று –
அவர்கள் இவனுடைய ரஷ்ய வர்க்கத்தை அழியச் செய்து கொடு திரியப் புக்கார்கள் –
இவர்கள் அவன் பக்கலிலே அபேஷித்தார்கள் இத்தனை யாயிற்று வாசி –
இவர்களுக்கு கார்யம் செய்தாலும் இறே தன் ஸ்வரூபம் அழியாதபடி கார்யம் செய்யப் பெற்றோம் ஆகில் –
பெண்ணாகி –
(மோஹினி திருக்கோலம் )
தன்னை அழிய மாறி நிற்கச் செய்தேயும்
தூது போவது
சாரத்தியம் பண்ணுவது ஆனான் இறே
அவ்வளவு அல்லவாயிற்று –
அஹமஸ்மி மஹா பாஹோ -என்றும் –
இமௌஸ்மம் முநி சார்த்தூல கிங்கரௌ சமுபஸ் த்தி தௌ-
என்றும் ருஷிகளும் ஏவிற்றுச் செய்வானாக தன்னைத் தாழ விட்டுத் திரிந்தவன் ஆயிற்று –
புருஷோத்தமான தன்னை இறே தன் ஸ்வரூபத்துக்கு போராதபடி அழிய மாறிற்று
கிழக்கே ஐயாற்றிலே (திருவையாற்றில் ) யாதவ ராயர் வந்து இருக்க ஜீயர் என்னை இறையிலிக் கார்யத்துக்காக அநேகம்
ஸ்ரீ வைஷ்ணவர்களோடே கூடப் போக விட்டார் –
நான் அவன் கூடத்திலே வந்து அவசரம் பார்த்து இருக்கச் செய்தே
பலரும் வந்து என்னை அனுவர்திக்கக் கண்டவாறே அங்கே
மஹா மகேஸ்வரனாய் இருப்பான் ஒரு பையல் –
பிள்ளாய் நீர் பொருளுக்கு கடவீர் ( எப் பாட்டுக்கும் அர்த்தம் ) என்று கேட்டோம்
எங்களுடைய வற்றிலே அரியல்லால் தேவு இல்லை என்று உண்டாய் இருந்தது –
அதுக்கு பொருள் சொல்ல வேணும் -என்ன
நான் இதுக்கு அதிகரித்தேன் ஒருவன் அல்லேன் -என்ன
ஆகிலும் நீர் அனைத்துக்கும் சொல்வீர் சொல்லிக் காணும் என்ன –
நீ தான் தேவர்க்கு-ருத்னனுக்கு- ஒரு உத்கர்ஷத்தையும்
ஈஸ்வரனுக்கு ஒரு அபகர்ஷத்தையும்
நினைத்து கேட்கிறாய் ஆகில்
புருஷோத்தமன் என்று புராணங்களில் சொல்லா நிற்க
ஆஸ்ரித அர்த்தமாக அவன் தன்னை அழிய மாறினான் என்றால்
இது அவனுக்கு குணவாயாம் அல்லது தோஷாவாயாகாது-
இனி ஆண் பிள்ளை சோறாள்வியை-( சமையல் காரர் )- ஸ்திரீ என்று துடர்ந்து
திரிவாரைப் போலே துடர்ந்து திரியா நின்றார் -என்று
தேவரை அஞ்ஞர் ஆக்குவதில் காட்டில் இது சொன்னவன்
அநாப்தன் அஞ்ஞன் என்று இருக்க அமையாதோ -என்று சொன்னேன் என்று அருளிச் செய்தார் –
அமுதூட்டும் –
இப்படி அழிய மாறினாலும் இறே
தன்னையே விரும்பி பெற்றதாகில்
சரீரத்தை பூண் கட்டி கொடுப்பதானத்தை இறே விரும்புகிறது –
ஊட்டும்
கடல் கடைகையும்-யத்நிக்கையும் எல்லாம் தனக்கு பணியாய்
இவர்களுக்கு கர்த்தவ்யம் புஜிக்கையிலேயாய்
இவர்கள் மிடற்றுக்கு கீழ் இழிச்சுமது தனக்கு உபகரித்தார்களாய் இருக்கும்
எங்களுக்கு அம்ருதமே வேணும் -என்றல்
அத்தை உத்பாதித்துக் கொடுத்து விடுமத்தனை இறே –
அதுக்கு ஈடான ஒரு வடிவைக் கொண்டு நின்று புஜிப்பிக்கிறது தான் நீர்மை இறே –
உறங்குகிற பிரஜையை எழுப்பி ஊட்டும் தாயைப் போலே
இது தான் தனது பேறாக வாயிற்று செய்தது-
இப்படி செய்கைக்கு நிபந்தனம் என் என்னில்
பெருமானார் –
சேஷித்வ பிரயுக்தமான சம்பந்தம் ஆயிற்று –
மருவினிய இத்யாதி –
மருவினிய தேசம் ஆயிற்று
தண்ணார்ந்த
ஸ்ரமஹரத்தை விஞ்சி இருக்கை
அதாவது ஸ்ரீ வைகுண்டத்தைப் போலே ரஷ்யம் பெற்றிலோம்
என்னும் குறை தீரும்படியாய் இருக்கை –
கடல் மல்லைத் தல சயனம் –
ஆஸ்ரிதன் ஒக்கப் பணி செய்தான் என்று அவனுக்காக
காற்கடை தலைமாடாக வந்து தரையிலே சாய்ந்து அருளின இடம் இறே-
உறைவாரை –
ஆஸ்ரிதர் விரும்பின இடம் என்று விட்டுப் போக மாட்டாதே
நித்ய வாஸம் பண்ணுகிற இடம் –
அவ் ஆசூர பிரக்ருதிகளில் குறையாதார் நடுவே இறே வந்து கிடக்கிறது –
எண்ணாதே இருப்பாரை –
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளினவன்
ஸ்ரீ வைகுண்டத்திலே குறைவற இருக்கக் கடவன்
சம்சாரிகள் நடுவே -தன்னைப் பேணாதே -சாய்ந்து அருளின இது நமக்காகச் செய்தான் –
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று
இத்தை அனுசந்திக்க வேண்டி இருக்க இதில் நினைவு இன்றிக்கே
புறம்பே உண்டு உடுத்து கால ஷேபம் பண்ணித் திரியுமவர்களை –
இருப்பாரை –
எண்ணாதே இருக்கை யாவதும்
ஒழியல் ஆவதும்-அதுக்கடியான கர்ம ஷயம் பிறவாமையாலே
சைதன்ய கார்யம் இறே -இப்படிச் செய்திலோம் என்னும் அனுதாபம் பிறக்குமது-
அதுவும் இன்றிக்கே இருக்குமவர்களை –
இறைப் பொழுதும் எண்ணோமே-
சேதனராய் இருந்து வைத்து அஞ்ஞராய் எண்ணுவதொரு
போது உண்டு இறே
அப்போதும் எண்ணக் கடவோம் அல்லோம் –
அ வஸ்துகளைப் பரிகணிப்பதும் ஒரு போது உண்டு இறே
அப்போதும் எண்ணோம் –
அவர்கள் தாங்கள் தாங்களை கனக்க நினைத்து இருந்தார்கள் ஆகிலும்
அவர்களை ஒன்றாக நினைத்து இரோம்
இவர் தாம் நினைக்கிற் போலே அவர்களுக்கு வஸ்துத்வம் உண்டாவது –
மாநிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேன் -என்னக் கடவது இறே
கல்லிலும் செம்பிலும் வெட்டிற்று என்னுமா போலே-( கல் வெட்டு தாமர பத்ரம் போல்)
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -என்று இறே தம்மைச் சொல்லுகிறது –
ஜ்ஞான ஆநந்தங்கள் அன்று காணும் இவர்க்கு நிரூபகம் –
பாகவத சேஷம் ஆயிற்று
—————————————————————-
பிரவேசம் –
பார் வண்ணம் இத்யாதி –
நீர் பொருந்தாதாரை-இன்னார் என்று அறிந்தோம் –
நீர் பொருந்துவாரும் சிலர் உண்டோ என்ன –
அவர்கள் ஜன்ம வ்ருத்தாதிகளைக் கொண்டு கார்யம் இல்லை –
அவர்கள் தாங்கள் ஆரேனுமாக அமையும் –
இது உண்டாம் இத்தனையே இறே அவர்கள் தம்மை நிர்வஹிக்கை என்கிறார் –
நீர் பிரதிகூலர் விஷயத்தில் இருக்கும் படி அறிந்தோம்
அனுகூலர் விஷயத்தில் இருக்கும் படி என் என்ன –
அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –
இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் –
(நிந்திக்க ஆழ்வார் -வாழ்த்த நித்யர்கள் நம்மாழ்வார் மொய் மா பூம் பொழிலில்)
வியாக்யானம் –
பார் வண்ண மட மங்கை
பூமிக்கு தனக்கு பிரகாரமாய் வுடையாளாய்
ஷமாதி குணங்களாலே குறை வற்று இருந்துள்ள ஸ்ரீ பூமிப் பிராட்டி –
பனி நன் மா மலர்க் கிழத்தி –
ஸ்ரமஹரமாய் -விகசிதமாய்-அழகியதாய் இருந்துள்ள
தாமரைப் பூவை ஜென்மமாக உடையவள் –
இவர்கள் –
நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்து –
ஸ்ரமஹரமான திரு மேனியில்
இடவருகைப் பற்றவும்
அத் திருமார்பைப் பற்றவும் இருக்கிற இருப்பை அனுசந்தித்து –
நீர் வண்ணன் மார்வகத்தில் -பனி நன் மா மலர்க் கிழத்தி –என்று அந்வயம் ஆகவுமாம் –
மாதா பிதாக்கள் சேர இருந்தால் பிரஜைகளுக்கு கிட்டலாய் இருக்கும் இறே-
அவனூர் இத்யாதி –
அவன் பரமபதத்தை விட்டு நித்ய வாஸம் பண்ணுகிற
ஸ்ரமஹரமான திருக் கடல் மல்லையை
கறுத்த நிறத்தை உடைத்தாய்
பழையதாய் இருந்துள்ள
மூத்து முதிர்ந்துள்ள
முந்நீர் உண்டு கடல் -அதின் அருகே இறே
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் –
ஏதேனும் ஜன்மம் ஆகவுமாம்
ஏதேனும் வ்ருத்தம் ஆகவுமாம்
ஏதேனும் ஜ்ஞானம் ஆகவுமாம் –
இவ்விடத்தை எண்ணும் நெஞ்சு உடையாராம் இத்தனையே வேண்டுவது –
அவர் இத்யாதி –
அவர்கள் நின்ற நிலைகளிலே
பிரமாணம் காட்டாதே
நம்மை கார்யம் கொள்ள வுரியார் –
—————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply