ஸ்ரீ ஷீராப்தி நாதன் ஹிமாவானில் நித்ய வாசம் செய்து அருளும் ஏற்றம் அருளிச் செய்கிறார்
நித்ய முக்தர்களும் வானவர்களும் நம்முடன் இங்கே வந்து எல்லாரும் ஒக்க தர்சிக்கலாமே –
அப்படி திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளினவன்
இங்கே வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்திக்கிறார் –
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாய் இருக்க
அங்கு நின்றும் எங்கள் உடைய கூக்குரல் கேட்கைகாக திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின தேவரீர்
எல்லாரும் ஒக்க அனுபவிக்கலாம் படி
இங்கனே எழுந்து அருளி இருப்பதே என்பார்கள் ஆயிற்று –
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்ற
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-6-
மாதவி-குருக்கத்தி–
வண்டிசை சொலும்–ஆலாபித்து பாடா நிற்கும்-
வியாக்யானம்-
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளிகொள் பரமா வென்று-
ஆறுகள் குளங்கள் நிரம்பினால் அதிக ஜலத்துக்கு போக்கு விடுகைக்கு பல வாய் தலைகள் உண்டாமா போலே
பகவத் அனுபவ ஹர்ஷத்துக்கு போக்கு விடுகைக்கு பல தலைகளையும் உடையவனாய் இருக்கிற –
ஸ்ரீ திருவநந்த ஆழ்வானோட்டை ஸ்பர்சத்தாலே
கண் வளர்ந்து அருளுகிற -(பரமா)-சர்வாதிகனே -என்பர்கள் ஆயிற்று –
(பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அன்றோ )
ஸ்துதிக்க இழிந்தவர் ஆகையாலே தங்களைப் போலே சதுர்முகம் பஞ்ச முகராய்
அன்றிக்கே சஹஸ்ர முகனாகப் பெற்றதே -என்று ஈடுபடுகிறார்கள் என்று கருத்து –
பிராட்டியை எனக்கு என்னுதல்-(ஸ்ரீ யபதி-திருவுக்கும் திருவாகிய செல்வன்)
திருவநந்த ஆழ்வானைப் படுக்கையாக பெறுதல்
செய்யும் தத்வம் ஆயிற்று சர்வாதிகம் ஆவது –
உச்சாஸ நிஸ் வாசங்களாலே ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு தூங்கு மெத்தை போலே
அசைந்து தாரா நிற்கும் ஆயிற்று –
ஸ்ரீ யசோதை பிராட்டி ஸ்ரீ கிருஷ்ணனை தன் மடியிலே கொண்டு இருந்து தாலாட்டுமா போலே
ஸ்ரீ சர்வேஸ்வரனை தன் மடியிலே சாய விட்டுக் கொண்டு இருந்து ஏத்தா நிற்கும் ஆயிற்று
ஸ்ரீ திருவநந்த ஆழ்வான் மடியிலும்
ஸ்ரீ திருவடி சிறகின் கீழும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் உள்ளும் காண் -இத் தத்வம் வளருவது -என்று
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் வார்த்தை –
வ்ருத்த மந்த்ரிகள் ராஜ புத்ரர்களை வைத்து நடத்துமா போலே யாயிற்று அவர்கள் நடத்தும் படி-
அவர்களாலே நியாம்யனாயாயிற்று இருப்பது –
வான் இளவரசு வைகுந்த குட்டன்-இறே –
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பல ஏகதாமநி -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பிராட்டியுமாய் சாய்ந்தால்
அவர்கள் நினைவுக்கு பாங்காக குழைந்து கொடுகைக்கு ஈடான ஞான ஆதிக்யத்தையும் –
இருவரும் துகையா நின்றால்
ஒரு சேதனன் என்று கூசாதே
படுக்கை என்று துகைக்கலாம்படியான
தாரண சாமர்த்தியத்தையும் உடையவனாய் இருக்கை –
சேஷி யானவன் சர்வாதிகனாய் இருக்கச் செய்தே தன்னை ஆஸ்ரித பர தந்த்ரனாக்கி வைக்குமா போலே
சேஷ பூதனும் தன்னுடைய சர்வ வியாபாரங்களையும் சேஷிக்கு உறுப்பாக்கி வைக்கக் கடவன் இறே
ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே
நல் அரவணை –
அத் தலைக்கே உறுப்பாய் இருக்கை –
சேஷ பூதனுக்கு நன்மை யாவது-எனக்கு என்னுமது அன்றிக்கே
சேஷிக்கே உறுப்பாய் இருக்கை இறே-(பிரபலதர விரோதி – நமஸ் அர்த்தம்)
பாவஞ்ஞேந -க்ருதஞ்ஞேந -தர்மஞ்ஞேந -லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம-
பாவஞ்ஞேந –
க்ரியதாம் -என்று சொல்லுகிறவர் இறே இளைய பெருமாள்
இப்படி செய்ய வல்ல நீர் நம்மை கேட்டது என் -என்கிறார்
பர்ண சாலையை சமைத்த அநந்தரம் சொல்லுகிற வார்த்தை இறே –
பாவஞ்ஞேந –
அல்லாதவை சொன்னாலும் தாமும் பிராட்டியுமாய் ஏகாந்தமாய் இருக்கும் இடங்கள் சமைக்கும்படி
இளைய பெருமாளுக்கு பெருமாள் அருளிச் செய்யார் இறே
நெஞ்சாலே நினைக்கும் இத்தனை இறே –
இந் நினைவு அறிந்து செய்தார் –
க்ருதஞ்ஞேந –
அதுவே அன்றிக்கே செய்து போம்படி அறிந்து செய்தார்-
நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவன் ஆகையாலே இவர் என் நினைந்து இருக்கிறாரோ –
என்று நினைவை ஆராய்ந்தும் –
இவருக்கு எத்தாலே என்ன குறை வருகிறதோ என்று பொருந்தும் இடங்கள் பார்த்தும்
அவன் செய்து போரும் அடைவு அறிவராயிற்று-
தர்மஞ்ஞேந –
நினைவு அறிந்தாலும் -செய்து போருமிடம் அறிந்தாலும் –
தானும் ராஜ புத்திரன் ஆன பின்பு எனக்கும் ஓர் இருப்பிடம் வேண்டாவோ –
என்று இருக்குமவனுக்கு இது செய்ய ஒண்ணாது இறே –
அங்கன் அன்றிக்கே
அத் தலையில் தாதர்யதமே நமக்கு ஸ்வரூபமான பின்பு
அத் தலைக்கு உறுப்பாக செய்து போருமதே நமக்கு -வகுத்தது என்று
அத் தலைக்கு செய்யுமத்தையே தமக்கு கர்த்தவ்யம் என்று இருப்பர்-
லஷ்மண த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம
தாம் உள்ளவன்று தாம் உளராய்
தாம் போன வன்றைக்கும் உம்மை வைத்துப் போனாரே என்கிறார்
புத்ரே
புத் என்று ஒரு நரக விசேஷமாய் -அதில் புகாதபடி நோக்கும் என்றாயிற்று
புத்திரன் என்று பேராகிறது
ஐயருக்கு நம்முடைய அபிமத ஸித்தி இன்றிக்கே ஒழிகை தனக்கு மேற்பட நிரயம் இல்லை இறே
அவருக்கு அது வராதபடி நோக்குகிறீர் நீர் இறே
(ஸ்ரீ ராம கைங்கர்யம் சிறிது குறைந்தாலும் ஸ்ரீ சக்கரவர்த்திக்கு அதுவே நரகம் –
அத்தைப் போக்கி அருளினார் அன்றோ ஸ்ரீ இளைய பெருமாள் )
தர்மாத்மா –
சக்ரவர்த்தி ப்ரஸ்துதன் ஆனவாறே -நம் ஐயரை ஒப்பார் உண்டோ
அவரும் ஒருவரே
தாம் இருந்த நாள் தாம் வேண்டுவன எனக்குச் செய்து
தாம் போன வன்றும் நமக்கு வேண்டுவன செய்கைக்கு உம்மைப் பெற்று
தண்ணீர் பந்தல் வைத்துப் போவதே
மம –
இருவருக்கும் பிதா ஆவது ஒத்து இருக்கச் செய்தே -மம -என்கிறார் ஆயிற்று –
அவர் நமக்கு செய்யுமவை நீர் இருந்து செய்கையாலே நாம் அவரை இழந்திலோம்
நீர் இழந்தார் ஆகில் இத்தனை இறே-
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிற இடத்தில் சேஷி உடைய வியாபாரமும்
புகாதாகில் -சர்வம்-என்ன ஒண்ணாது இறே-
(ஸ்ரீ சக்ரவர்த்தி பிதா காட்டும் ஆசை அன்பும் பரிவும் சர்வத்துக்குள்ளும் அடங்கும் )
அரவணை –
நாற்றம் குளிர்த்தி துடக்கமானவை ஜாதி பிரயுக்தமாகவே உண்டாய் இருக்கும் இறே
(மெத்தென்ன பஞ்ச சயனம் -)
பரமா
இப் படுக்கையிலே சாய்ந்தவன் ஆயிற்று தனக்கு அவ்வருகு
ஒருவரை உடையவன் அல்லாதவன் ஆகிறான்
இணங்கி –
ப்ராமணிகளைப் போலே யாயிற்று தேவர்களும்
ப்ரஹ்ம ஹத்யை சொல்லிப் பழி இடுவாரும்
தலை அறுப்பாரும் –
தலை அறுப்புண்பாருமாய் இறே இருப்பது
இப்படி இருப்பவர்கள் கிண்ணகத்தில் இழிவாரைப் போலே ஒரு மிடறராய் இருப்பார்கள் ஆயிற்று
தேவர்கள் அடங்கலும் திரண்டு இறுமாப்பாலே வணங்கோம் -என்று இருக்குமது தவிர்ந்து –
பக்ந அபிமாநராய் திருவடிகளிலே தலைகள் பட வணங்கும்படி ஆயிற்று
அங்கு எழுந்து அருளி இருக்கிறது
பரத்வத்தில் வணங்கதார் எல்லாரும் சீலம் கண்டு வணங்கும்படியாக இருக்கிற தேசம் ஆயிற்று-
மணம் கொள் -இத்யாதி
பரிமள பிரசுரமாய் அதுக்கு ஓர் ஆஸ்ரயம் வேண்டும் என்று சங்கல்ப்பிக்க
வேண்டும்படி யாயிற்று தான் இருப்பது –
மணத்தை உடைத்தான மாதவி உண்டு -குறுக்கத்தி அதினுடைய நெடும் கொடியானது
ஸ்ரத்தையாலே வளர்ந்த கொடி யானது
விசும்புற நிமிர்ந்து –
ஆகாசா வகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு
மேக பதத் அளவும் சென்று அத்தை மூடப் படரும் ஆயிற்று
அவை இத்யாதி
ஆகாசத்தில் முகடுருவ வளர்ந்தால் ஒரு கொள் கொம்பு அபேஷிதமாய் இருக்குமே –
அப்போதாகக் கொள் கொம்பு கொடுப்பார் இல்லையே
அவ்வளவிலே மேகங்கள் வந்து கிட்டுமே
அவற்றைச் சென்று பற்றும்
அவை வாயு ப்ரேரிதமாய் போகத் தொடங்கும்
கொடியானது இங்கே இசிக்கும்
இவ்வாயாசத்தால் வந்த அலசுதலாலே பூக்கள் அலரா நிற்கும்-
அப்பூவில் மது பானம் பண்ண நினைத்த வண்டுகள் ஆனவை
அம்மேகத்துக்கும் கொடிக்கும் நடுவே நுழைந்து புக்கு மது பானத்தை பண்ணிக் களித்து
அச் செருக்குக்கு போக்கு விட்டு ஆளத்தி வைத்து இசை சொல்லா நிற்கும்
அச் சோலை அடைய மது பானம் பண்ணிக் கழித்துப் பாடுகிற வண்டுகளின் உடைய
இசை ஆரவாரமாய் இருக்கும்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கொடி பிரஜைகளை ரஷிக்க வேண்டும் என்று இசிக்க
செய்கிறோம் இறே என்று அவன் இசிக்க
உள்ளாடைய தேவர்கள் ஸ்தோத்ரம் பண்ணுகிற ஆரவாரமாய் இருக்கும் –
ஸ்ரீ அலர் மகளை கொடியாகவும்
ஸ்ரீ எம்பெருமானை முகிலாகவும்
புஷ்பங்களை பிரசாத விசேஷங்கள் ஆகவும்
வண்டுகள் தேவ கணங்கள் ஆகவும் -உரூபகம்
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply