அவதாரிகை-
ஏடு நிலத்திலே இவராலே ஆஹூதரான கைவல்யார்த்திகள் தங்கள் ஸ்வபாவத்தை
சொல்லிக் கொண்டு வர -அவர்களோடே சங்கதர் ஆகிறார் -இவர்களை அழைத்த
போது -வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ -என்று நீங்கள் பற்றின புருஷார்த்தத்தை விட்டு
வாரும் கோள் என்றும் -நமோ நாராயணாய -என்று -அநந்ய ப்ரயோஜனராய் வாரும் கோள் என்றும் –
நாடும் நகரும் நன்கறிய -என்று விசேஷஜ்ஞர் பரிகிரஹிக்கும் படியாகவும் -அவிசேஷஜ்ஞர்
உபேஷிக்கும் படியாகவும் வாரும் கோள் என்று இ றே அவர்களை அழைத்தது –
அதில் -ஷூத்ர புருஷார்த்தத்தை விடுகையும் -அநந்ய பிரயோஜனர் ஆகையும் -நம்முடைய க்ர்த்யம்
அனுகூலர் பரிகிரஹிக்கையும் ப்ரதிகூலர் கை விடுகையும் செய்ய வடுப்பது என் என்று பார்த்து
வைஷ்ணவ சிஹ்னமான திரு விலச்சினையைத் தரிக்கவே -த்யாஜ்ய உபாதேயங்கள்
இரண்டும் ஸித்திக்கும் என்று பார்த்து -அத்தைத் தரித்துக் கொண்டு வந்தோம் என்றார்கள் –
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை யாயிரம் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய வாழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –7-
தீயில் -சந்திர ஆதித்தியர்களில் காட்டிலும்
பொலிகின்ற -மிக விளங்கா நின்ற
செஞ்சுடர் -சிவந்த தேஜஸை உடைத்தாய்
ஆழி -மண்டல ஆகாரமான
திகழ் -ப்ரகாசியா நின்றுள்ள
திருச் சக்கரத்தின் கோயில் -திரு ஆழி ஆழ்வான் எழுந்து அருளி இருக்கிற கோயிலாய்
பொறியாலே -சிஹ்னத்தாலே
ஒற்று உண்டு நின்று -சிஹ்நிதராய் நின்று
குடி குடி -எங்கள் சந்தானம் எல்லாம்
ஆட் செய்கின்றோம் -அடிமை செய்வதாய் வந்தோம்
மாயப் -க்ரித்ரிமாக
பொரு -போர் செய்யா நின்றுள்ள
படை -சேனையை உடையவனாய்
வாணனை -பாணாசுரனுடைய
யாயிரம் தோளும் -ஆயிரம் தோள்களின் நின்றும்
பொழி குருதி பாயச் -ரக்தமானது மதகு திறந்தால் போலே புறப்பட்டு ஓடும்படி
சுழற்றிய -சுழற்றின
வாழி -திரு ஆழி ஆழ்வானை நியமிப்பதில்
வல்லானுக்குப் -சமர்த்தன் ஆனவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே-திருப்பல்லாண்டு பாடுவோம்
வியாக்யானம் –
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி என்று –
வைஷ்ணவ கோஷ்டியிலே புகுரப் பண்ணின-உபகார ச்ம்ர்த்தியாலே ஆழ்வானைக்
கொண்டாடுகிறார்கள் –
தீயில் பொலிகின்ற -தீ என்கிற சப்தம் சந்திர ஆதித்யாதி தேஜோ பதார்த்தங்கள்
எல்லா வற்றுக்கும் உப லஷணம் -அதில் காட்டில் தேஜஸு வர்த்திகை யாகிறது –
அத்யர்க்கா நலதீப்தம் தத் ஸ்தானம் -என்கிற பரமபதத்தில் தேஜஸு மிக்கு இருக்கக் கடவது –
அதில் காட்டில் அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸு மிக்கு இருக்கக் கடவது –
அதுக்கு பிரகாசாமாய் இ றே திரு வாழி ஆழ்வானுடைய தேஜஸு இருப்பது –
வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழி -என்னக் கடவது இ றே
தஸ்ய பாஸா சர்வ மிதம் விபாதி -என்கிற படியே அவனுடைய தேஜசாலே சர்வமும்
விளங்கா நின்றது என்னா நிற்க -திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு இவன் பிரகாசகனாம்படி என் என்னில் –
செஞ்சுடர் –
காளமேக நிபாச்யாமமான வடிவுக்கு இருட்டு அறையிலே விளக்கு ஏற்றினால் போலே
பரபாக ரூபத்தால் வந்த ப்ரகாசத்வத்தை சொல்லுகிறது
ஆழி திகழ் திருச் சக்கரம் –
இட்டளத்தில் பெரு வெள்ளம் போலே புறம்பு போக்கற்று -தன்னிலே -மண்டல ஆகாரமாய்
கொண்டு விளங்கா நின்றுள்ள திருவாழி ஆழ்வான் -என்கை
சக்கரத்தின் கோயில் –
ஆழ்வான் எழுந்து அருளி இருக்கிற மண்டல ஆகாரமான வாஸஸ்தானம்
பொறியாலே ஒற்று உண்டு நின்று -அதாகிறது
சிஹ்னத்தால் சிஹ்நிதராய் நின்று –
திரு இலச்சினை தரித்த பின் இ றே -இவன் ஜன்மாந்தரத்தில் போகாதே -மோஷாந்தரத்தில்-போகாதே -ஸூஸ் திரனாகப் பெற்றது -பகவத் அங்கீகாரமும் இது உண்டானால் இ றே அதிசயிப்பது –
ஸ்ரீ மத் த்வாரகையில் நின்றும் ஆஸ்ரித விரோதி நிரசனமாக எழுந்து அருளுகிற போது
திருவாசல் காக்கின்ற முதலிகள் -மீள எழுந்து அருளும் அளவும் இங்குப் புகுரக் கடவார் யார்-அல்லாதார் யார் -என்று விண்ணப்பம் செய்ய
சக்ரா கிங்தாஸ் பிரவேஷ்டவ்யா யாவதா கமநம் மம
நா முத்ரிதாஸ் வேஷ்டவ்யா யாவதா கமநம் மம-என்று இந்த லஷணம் உடையார் யாவர் சிலர்
அவர்கள் நிச்சங்கமாக புகுரக் கடவர்கள் -அல்லாதாரை -பாவ பரிஷை பண்ணி புகுர விடக்
கடவது என்றான் இ றே கிருஷ்ணன் -இது தான் ஈஸ்வரன் அங்கீகாரத்துக்கும் உடலாய் –
தானும் -நாம் அவன் உடைமை -என்று நிர்ப்பரனாய் இருக்கைக்கும் உடலாய் –
தான் பண்ணின பாபத்தை அனுசந்தித்து க்ரூரமாக பார்க்கக் கடவ யமாதிகளும்
அஞ்சும்படியாய் இருப்பது ஓன்று இ றே –
சக்ராதி தாரணம் பும்ஸாம் பர சம்பந்த வேதனம்
பதி வ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் -என்று பகவத் சம்பந்தத்துக்கு ஜ்ஞாபகமாய் இ றே இருப்பது
குடி குடி ஆட் செய்கின்றோம் –
ஸ புத்ர பௌத்ரஸ் ஸ கண -என்கிறபடியே சந்தானமாக அடிமை செய்யக் கடவோமாய் வந்தோம்-இப்படி அநன்யார்ஹராய் இருப்பார் செய்யும் அடிமை யாவது -திருப்பல்லாண்டு பாடுகை இ றே
எந்த அபதாநத்துக்கு நீங்கள் மங்களா சாசனம் பண்ணுகிறது என்னில்
மாயப் பொரு படை இத்யாதி –
எங்களை புகுர நிறுத்தின ஆழ்வான் உடைய வீரப் ப்ரகாசமான துறையிலே திருப்பல்லாண்டு-பாடக் கடவோம் என்கிறார்கள்
மாயப் பொரு படை வாணனை –
ஆச்சர்யமாக பொரும் சேனையை உடைய வாணன் என்னுதல்
ஆச்சர்யமாக பொரும் ஆயுதத்தை உடைய வாணன் என்னுதல்
மாயம் -என்று க்ர்த்ரிமமாய் க்ர்த்ரிமமான யுத்தத்தை உடையவன் என்னவுமாம்
ஆயிரம் தோளும் பொழி குருதி பாய –
ஆயிரம் தோள்களாலும் மதகு திறந்தால் போலே ரக்த வெள்ளம் குதி கொண்டு பூமிப்
பரப்படைய பரம்பும்படி –பொழிதல் -சொரிதல்
இதுக்கு இவன் பண்ணின வியாபாரத்து அளவு எது என்னில்
சுழற்றிய –
திரு வாழியை விட வேண்டி இற்றில்லை -சுழற்றின இத்தனை –
அவன் ஒருக்கால் திரு ஆழியைச் சுழற்ற வாணனுடைய தோள்கள் ஆயிரமும் ஒருக்காலே
மலைக் கொடுமுடிகள் போலே முறிந்து விழுந்தன –
வாணனுடைய தலையை அறாது ஒழிந்தது குற்றம் போறாமை யன்று
உஷை பித்ர் ஹீநை யாகாமைக்காகவும் –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாருக்கு பலம் இது என்னும் இடத்துக்கு மச்சமாகவும் –
அதாவது –
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று பிரதிக்ஜை பண்ணி
யுத்தத்திலே இவனைக் காட்டிக் கொடுத்து -ஸ பரிகரனாய் கொண்டு முதுகு
காட்டிப் போனான் ரஷகன் -ரஷ்ய பூதன் தோள் துணி உண்டான் -உன்னை ரஷிக்கப்
புக்கு நான் பட்டதோ -என்றும் -உன்னை ஆஸ்ரயித்து நான் பட்டதோ -என்றும்
இருவரும் கூடக் கட்டிக் கொண்டு கதறுகை இறே பலமாய் விட்டது –
ஆழி வல்லானுக்கு –
வில் வல்லான் -வாள் வல்லான் -தோள் வல்லான் -என்னுமா போலே
யஸ்ய ஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிராட்டியை எனக்கு என்ன இட்டுப் பிறத்தல்
திருவடி தோளிலே நல் தரிக்க விருத்தல் -கை பேராமல் திரு வாழியைப் பிடித்தல் –
செய்யுமது ஆய்த்து சர்வாதிகத்துவதுக்கு லஷணம்-
பல்லாண்டு கூறுதுமே –
அத்தலையில் அடிமை செய்த ஆழ்வான் உடைய வீர ஸ்ரீக்கும்
அடிமை கொண்ட கிருஷ்ணனுடைய வீர ஸ்ரீக்கும் –
மங்களா சாசனம் பண்ணுவார் பெற்றது இல்லை –
அவ் விழவு தீர இன்று இருந்து திருப் பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார்கள்
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply