திருப்பல்லாண்டு -5-அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

முற்பட அநந்ய பிரயோஜனரை அழைத்தார்
கேவலரும் ஐஸ்வர்யார்த்திகளும் பிரயோஜனாந்த பரராய் இருக்கச் செய்தேயும்
கேவலருடைய துர்கதியைக் கண்டு முந்துற அழைத்தார் -இப்பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளை-அழைக்கிறார்-

அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி அசுரர் ராக்கதரை
யிண்டைக் குலத்தை யெடுத்துக் களைந்த விருடிகேசன் தனக்குத்
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -5-

அண்டக் குலத்துக்கு -அண்ட சமூஹத்துக்கு
அதிபதி யாகி -தலைவனாய்
அசுரர் ராக்கதரை -அஸூர ராஷசர்கள் உடைய
யிண்டைக் குலத்தை -நெருங்கின திரளை
யெடுத்து-சேரத் திரட்டி
களைந்த -நிர்மூலமாகப் போக்கின
விருடிகேசன் தனக்கு-இந்திரியங்களை தன் வசமாக நடத்துமவனுக்கு
தொண்டைக் குலத்தில் -அடிமை செய்யும் குலத்தில்
உள்ளீர் -உளரான நீங்கள்
வந்து
அடி -சர்வேஸ்வரன் திருவடிகளை
தொழுது
ஆயிரம் நாமம் -அவன் திருநாமங்கள் எல்லாம்
சொல்லி-வாயாரச் சொல்லி
பண்டைக் குலத்தை -பகவத் விமுகராய் இருந்த பழைய ஜாதியை
தவிர்ந்து-நான் எனது என்ற நினைவோடு விட்டு
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -அநேகம் ஆயிரம்  சம்வஸ்தரங்கள்
நித்தியமாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்

வியாக்யானம் –

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி –
தேவதைகள் உடைய ஐஸ்வர்யத்துக்கு எல்லாம் மேலான அண்டாதிபத்யம் இ றே
ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லை-அந்த ப்ரஹ்மா ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் ப்ரகாரம் சொல்லுகிறது
அண்டாதி பதயே நம -என்று இ றே இப்பத ப்ராப்திக்கு சாதன மந்த்ரம் -அந்த அண்ட
ஐஸ்வர்ய விசிஷ்டனாய் இ றே சர்வேஸ்வரனை அனுசந்திப்பது -வ்யாஹ்ர நமநுஸ்மரன் -என்கிறபடியே இம் மந்த்ரத்தை சொல்லவும் -நெஞ்சாலே ஐஸ்வர்ய விசிஷ்டனாக
அனுசந்திகவும் மாய் இ றே ஆஸ்ரயண பிரகாரம் இருப்பது

அறவனை ஆழிப்படை அந்தணனை என்று ஸுத்தி குண யோகத்தை சொல்லுவாரைப் போலே-அண்டக் குலத்துக்கு அதிபதியான
ஆகாரமே யன்றோ இச் சப்தத்தில் உள்ளது -ஆஸ்ரயண பிரகாரம் தோற்ற இருந்தது
இல்லையே என்னில் -உதாரனாய் இருப்பான் ஒருவன் கையிலே எலுமிச்சம் பழம்
இருந்தால் -இது இருந்த அழகு என் -என்று சொன்ன அளவிலே -பாவஜ்ஞ்ஞனாய் இருக்குமவன் -கொள்ளலாகாதோ -என்று கருத்து அறிந்து கொடுக்கும் இ றே -அப்படியே
அண்டாதிபத்யத்தில் அபேஷை உண்டு என்று தங்கள் அபேஷையை ஆவிஷ்கரிக்கிறார்கள் –
இத்தால் பிரயோஜனாந்த பரரைக் குறித்து –உதாரா -என்னுமவனுடைய ஔ தார்யம் பிரகாசிக்கிறது
அண்டக் குலத்துக்கு
அண்டா நாந்து சஹாஸ்ராணாம் -என்று தொடங்கி -கோடி கோடி சதா நிஸ -என்று
அசங்க்யாதமான அண்டங்களுக்கு நிர்வாஹன் ஆகையாலே அபேக்ஷித்தார்  அபேஷித்த-அண்டங்களை கொடுக்கைக்கு உடைமையை சொல்லுகிறது
அதிபதியாகி –
உபய விபூதிக்கும் நிர்வாஹன் ஆகை
ஆகி –
ஆஸ்ரிதர் தன்னை அனுசந்தத்தித்த அளவிலே யாயிருக்கை –
ஐஸ்வர்யார்த்தி ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்தித்தால் அவ்வளவாய் இருக்கும்
கைவல்யார்த்தி அஸ்ப்ர்ஷ்ட சம்சார கந்தனாக அனுசந்தித்தால் அவ்வளவாய் இருக்கும்

அசுரர் இராக்கதரை
இப்பதத்துக்கு அசுரர்களாலே வேத அபஹார ஆபத்துக்களில் களை யறுத்துக் கொடுக்கையும்
ரஷகனுக்கு பரம் இ றே –ஆர்த்தன் -என்றும் அர்த்தார்த்தி -என்றும் -ஐஸ்வர்ய புருஷார்த்தம்
இரண்டு முகமாய் இ றே இருப்பது -அதில் அர்த்தார்தியை கீழே சொல்லி -இவ் வம்சத்தினாலே
ஆர்த்தனை சொல்லுகிறது -ஜன்ம ப்ரப்ர்த்தி பரா நர்த்தமே பண்ணிப் போருவது இரண்டு வர்க்கம் இ றே –

சம்பந்தம் ஒத்து இருக்க நிரசநத்திலே இழிகிறது ஆஸ்ரித விரோதிகள் என்று இ றே
இன்டைக் குலத்தை
மிகவும் நெருங்கின திரளை -இண்டர் -என்று சண்டாளர் –

இவர்களை சண்டாளர் என்று சொல்லுகிறது -நிஹீனர் என்னும் நினைவாலே
உத்க்ர்ஷத்துக்கு எல்லை -பர ச்ம்ர்த்தி ஏக பிரயோஜனாய் இருக்கை
நிகர்ஷத்துக்கு எல்லை -பர அனர்த்தமே யாத்ரையாய் இருக்கை
இவ் வாபத்துக்களிலே அஸூர சத்ரவே நம -என்று இ றே இவர்களுடைய
ஆசஸ்ரயண பிரகாரம் இருப்பது

எடுத்துக் களைந்த
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்னுமா போலே ஆஸ்ரிதர் பக்கல் அழல்
தட்டாதபடி நிரசிக்கை -களைந்த என்றால் போதாதோ எடுத்துக் களைந்த என்றது பொல்லா அரக்கன் போலே –
இலங்கை பாழாளாக -என்றதும் -விபீஷண பரிக்ரஹத்துக்கு ஒரு நோவு வராதபடி இ றே
விபீஷண க்ரஹத்துக்கு அழல் தட்டாதபடி இ றே லங்கா தஹனம் பண்ணிற்று திருவடியும்
இருடிகேசன் –
பிரயோஜனாந்த பரருக்கு ஐஸ்வர்யாதிகளில் கர்ம அனுகூலமாக ருசியைப் பிறப்பிக்கும் -தன் பக்கலிலே ந்யச்த பரராய் இருப்பவருக்கு ஸ்வரூப அநுரூபமாக ருசியைப் பிறப்பிக்கும் –
ஐஸ்வர்யார்த்தமாக அவன் பக்கலிலே கண் வைக்கும் போதே அவன் வடிவு அழகிலே உறைக்க வையும் கோள்
அவன் -மமேதம் -என்கிற அபிசந்தியைக் குலைத்து தன் பக்கலிலே ருசியைப் பிறப்பிக்கும்
அத்தாலே அபேஷித்த ஐஸ்வர்யத்தை விஸ்மரித்து அவன் தன்னையே பற்றலாம்

தனக்குத் தொண்டைக் குலத்தில் உள்ளீர் –
இப்படி ஐஸ்வர்யத்தில் ப்ரேமம் போய் பகவத் பிரேம யுக்தர் உடைய திரளிலே உளரான நீங்கள்
தொண்டைக்குலம் என்று தனியே ஒரு சந்தானம் போலே காணும்
தேஹமே ஸ்வரூபம் என்று இருப்பாருக்கும் -சேஷத்வமே ஸ்வரூபம் -என்று இருப்பாருக்கும்
இத்தனை வாசி உண்டு இ றே -இனி அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாருக்கு க்ர்த்த்யம் இன்னது என்கிறார் மேல்
வந்தடி தொழுது –
திருவடிகளே பிரயோஜனமாக வந்து -அநுகூல வ்ர்த்திகளைப் பண்ணி -ஐஸ்வர்யமே பிரயோஜனமாய்
விஷய அனுபவமே யாத்ரையாய் இருக்கும்படி பாரும் கோள்
ஆயிர நாமம் சொல்லி –
இரண்டு திருநாமத்தையே நிர்பந்திக்க வேண்டுவது -மமேதம் -என்று இருக்கும் அன்று இ றே
ததேவம் -என்கிற புத்தி பிறந்தால் பகவத் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திருநாமங்கள்
எல்லாம் போக்யமாய் இ றே இருப்பது -அவற்றை வாயாராச் சொல்லி –

பண்டைக் குலத்தை தவிர்ந்து
தொண்டைக் குலத்தை வந்து அன்வயித்தவாறே -மமேதம் -என்று இருந்த காலம் ஜன்மாந்தரமாய்
தோற்றும் இ றே -ஒரு ஜன்மத்தில் த்விஜன்மன் ஆகிறான் இ றே
ராஜர்ஷியான விஸ்வாமித்திரன் அந்த ஜன்மத்திலே ப்ரஹ்மர்ஷியானான் இ றே
அங்கு தபஸாலே வர்ண பேதம் பிறந்தது
இங்கு பகவத் ப்ரசாதத்தாலே ஸ்வரூப பேதம் பிறந்தது
உனக்கு நான் -என்ற அநந்தரம் -நான் எனக்கு -என்ற விது வ்யதிரேகமாய் தோன்றும் இ றே
பல்லாண்டு –
இப்படி அநந்ய  பிரயோஜனரான நீங்கள் மங்களா சாசனம் பண்ணும் கோள்
பிரயோஜனாந்த பரனாய் போந்தவன் நமக்கு ஆஸாசிக்கும் இத்தனை பரிவனாகப் பெற்றோமே
என்று அவன் குளிர நோக்கும் –
பல்லாயிரத்தாண்டு என்மினே-
பின்னை பல்லாயிரத்தாண்டு என்னும் கோள் –
அந்நோக்கு அழகு நித்திய ஸ்ரீ யாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்
உங்களுக்கு இம் மாத்ரத்தாலே ஸ்வரூபமும் -அத்தாலே ஈஸ்வரனுக்கு ச்ம்ர்த்தியும்
உண்டாகப் பெற்றால் ஆறி இருக்கிறது என் -சடக்கென மங்களா சாசனம் பண்ணும் கோள் என்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading