ஸ்ரீ திருவிருத்தம்-87-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளைஸ்வாமிகள் -வியாக்யானம் –

(அன்றில் கிரௌஞ்ச மிதுனம் -ஒலி -விஸ்லேஷ துக்கம்
ஆழி -கடலின் பேர் இரைச்சல் -ஸம்ஸ்லேஷ ஸூகம்
கருடவாஹனன் என்று ஸ்தோத்ரம் பண்ணுவதே குற்றமாகக் கொண்டு உபேக்ஷித்து
வையமே சிலம்பும்படி
இத்திரு -மிதுனத்தைப் பற்றின இத்திரு
திருமால் இப்படிச் செய்வதே -மாலையைப் பற்றிய அத்திரு
துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –
பண்டை நாளாலே -9-2-

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-திருமால் உகப்புக்குக்காகக் கைங்கர்யம்

காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-மூலவர் உத்சவர்கள் திருநாமங்கள் இதில் உண்டே

புள் -காய்ச்சின பறவை

தாய் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும் கொள்ளலாம் )

அவதாரிகை –

உன்னைப் பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு –
லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே -என்று
திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது-

அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –

புலம்பும் கனகுரல்  போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87-

பாசுரம் -87-புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் –
துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –
பண்டை நாளாலே -9-2-

பதவுரை

திருமால்–பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும்–(விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல்–கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும்–பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்
பூ கழி பாய்ந்து அலம்பும்–அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல்–கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும்–சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை–அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த பாதக வஸ்துக்களானவை.
நின் வலம்புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக–உனது வலிமையையுடைய கருடப்பறவையினது நன்மையை
(இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக்கொண்டு
வையம் சிலம்பும்படி–உலகத்தார் முறையிடும்படி-குற்றம் சொல்லி கோஷிக்கும் படி
இத் திருவினை–திருமகள் போன்ற இப்பெண்ணை
செய்வதே–துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)

போழ்-பிரிந்தாரை இறு துண்டாக விடுவாரை

வியாக்யானம் –

புலம்பும் கனை குரல் –
பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் -செறிந்த த்வனியை உடைத்தாய் –
உன்னைக் கூடி பிரிந்து தனி இருப்பாரை -இரு துண்டமாக விடுகிற வாயை வுடைய அன்றிலும் –

பூம் கழி இத்யாதி –
அழகிய கழியில் வரப் பாயா நிற்பதாய் –
அலை எறியா நிற்பதாய் –
ஊமை கூறனான த்வனியை உடைத்தாய் -பரந்த திரைகளை உடைய கடலும் –

ஆங்கவை –
பிரிந்து இருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணி ஓசை என்ன –
சந்த்ரோதயம் என்ன -தென்றல் என்ன -இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல் –
அன்றிக்கே –
கீழ் சொன்னவை தன்னையே சொல்லிற்று ஆதல் –
இவை பாதகமாகா நின்றன –

என்ன குற்றம் செய்தாள் என்று பாதகம் ஆகிறது என்ன –

நின் வலம் புள் இத்யாதி –
உனக்கு அசாதாரணமாய் -பலத்தை உடைத்தாய் –
கருடோ வாருணம் சத்ரம் ததைவ மணி பர்வதம் -சபார்யஞ்ச ஹ்ருஷீகேசம் லீலயைவ வஹந்யயௌ -என்கிறபடியே
தாரண சாமர்த்தியத்தை உடையனான திருவடி உடைய
நலமுண்டு –நன்மை-
அத்தைப் பாடினது குற்றமாக –

த்வதங்க்ரி சம்மர்த கிணாங்க சோபினா  (ஸ்தோத்ர ரத்னம் )-என்கிறபடியே-
அவனுக்கு அடிமை செய்து –
அவன் தழும்பு சுமந்தாப் போலே
சம்ஸ்லேஷ சிஹ்னங்களை-தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு –
அவனைப் பாடின இது குற்றமாக

வையம் சிலம்பும்படி செய்வதே –
சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே -இருந்ததே குடியாக- கை எடுத்து பழி சொல்லும்படி பண்ணுவதே –

திருமால் –
நீர் தான் பிரணயிகள் அல்லீராய்  தான் இப்படி செய்கிறீரோ –

இத் திரு வினையே –
உம்மை ஆசைபட்டவளில் குறைந்தாளோ
அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்டவள் –
ராவணாதிகள் பெருமாளைப் பழி சொல்ல –
ராஷசிகள் தன்னை நெருக்க இருந்தவளைப்-போலே இருக்க வல்லளோ –

இவள் அன்றில் -கடலோசை -தொடக்கமானவை இவளை நலிய-
அத்தாலே இவள் நோவு படா நின்றாள் என்று
நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு வைப்பதே –
உம்முடைய மகிஷி நோவு பட பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ -என்றபடி –

ஸ்வா பதேசம் –

இத்தால் –
அத் தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி –
இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் விழ
நீர் தாழ்த்தீர்  ஆவது  உமக்கு குறை அன்றோ -என்று
இவர் தசையை அனுசந்தித்தவர் பாசுரமாய் இருக்கிறது –

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சஸ்வஸ் சாந்திம் நியச்சதி கௌந்தேய ப்ரதிஜாநீ ஹி நமே பக்த ப்ரணஸ் யதி–ஸ்ரீ கீதை –
இவை மறந்தீரோ -என்கிறார்கள் –

தாத்பர்யம்

இதில் லௌகிக பதார்த்தங்கள் பாதகமாம் படி ஸூஹ்ருத்துக்கள் பாசுரம்
உத்போதாக பதார்த்தங்கள் ஞாபகப்படுத்தும்
வருந்தும் நாயகி பாசுரத்தால்
உன்னுடன் ஸம்ஸ்லேஷித்து
சிஹ்னங்கள் தனக்குப்பட ஆசை கொண்ட
உனக்கு வாகனமாய் பெரிய திருவடி கல்யாண குணங்களைக் கீர்த்தனை பண்ணி
அத்தைப் போலவே தானும் பெற ஆசை கொண்ட இவள்
அது பெறாமையாலே மிகவும் ஆரத்தை ஆனாள்
அதுக்கு மேல்
விரஹிணிக்கு பாதகமாய் அநஷரமான அன்றில் கடலோசை இவை போன்ற பாதகங்கள் இவளை நலியும் படி வாசா மகோசரம் என்று
வையம் எல்லாம் உன்னை இகழ்ந்து புலம்பும் படி ஆனதே என்று
நாயகனை நினைத்து சர்வேஸ்வரனுக்கு சொல்கிறாள்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply