ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-2–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

அவதாரிகை –
அம்மம் உண்ணத் துயில் எழாய் -என்றும் –
சுண நல் அணி முலை உண்ணத் தருவன் -என்றும் –
இவன் பருவத்துக்கு அனுகுணமான தாரகம் இது -என்று நினைத்து கால அனுகுணமாக
முலை கொடுத்து போரும் – மாதாவான ஸ்ரீ யசோதை பிராட்டி –
இவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களைக் கண்டு
இவன் பக்கல் புத்ரத்வாதி பிரதிபத்தி குலைந்து –
தேவதா பிரதிபத்தி விளைந்து –
இவன் -அம்மம் உண்ண வேணும் -என்று அழச் செய்தேயும்
உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன் -என்று பல காலும் சொன்ன பிரகாரத்தை –
தாமும் அப்படியே பேசி அனுபவித்தாராய் நின்றார் கீழ் –

அவள் அத்தை அப்போதே மறந்து -முன் போலே தன்னுடைய புத்ரனாக இவனை
பிரதிபத்தி பண்ணி -அபிமானித்து -பிராமணர்க்கு பால்யத்திலே பிராமசார்யம் அனுஷ்டித்து
பின்பு கார்ஹச்த்யம் அனுஷ்டிக்கை தர்மமாய் இருக்குமா போலே –
இடையருக்கும் இளம் பருவத்தில் கன்றுகள் மேய்த்து –
பக்வரான பின்பு பசு நிரை மேய்க்கை ஜாத் உசிதம் ஆகையாலே –
சர்வச்ய ஜகாத பாலவ் வத்ச பாலவ் பபூவது -என்கிறபடியே –
கன்றுகள் மேய்க்க தகுதியான பருவத்தை ப்ராப்தனான இவனை –
சிறுகாலே ஊட்டி ஓருப்படுத்தி –
கன்றுகள் மேய்க்கும்படி போக விட்டு –
அவன் போன அநந்தரம்-ஷண கால விஸ்லேஷம் பொறுக்க மாட்டாதவள் ஆகையாலே –

அவன் ஊரிலே நின்று செய்யும் ஸ்வைர விஹாரங்கள் எல்லாம் பரக்கச் சொல்லி –
இப்படி செய்து திரியாமல் –
கன்றுகளின் பின்னே இவனை என் செய்யப் போக விட்டேன் -என்று –
இவனுடைய மார்த்வத்தையும் –
போகிற இடத்தின் காடின்யதை ஷன்யங்களையும் அனுசந்தித்து –
ஸூகுமாரனான இவனை இப்படி இருக்கிற காட்டிலே போக விட்டேனே -என்றும்

அவ்வளவும் அன்றிக்கே
குடையும் செருப்பும் கொடாமல் –
வெய்யிலும் கல்லும் முள்ளுமான தேசத்திலே போக விட்டேனே –
என்றும் பஹு முகமாக க்லேசித்து சொன்ன பிரகாரத்தை –
தத் அவஸ்த்தா பன்னராய் கொண்டு  –
தாமும் அப்படியே பேசி –
அனுபவிக்கிறார் இத் திருமொழியில் –

—————————————————

அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
மஞ்சனமாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனை காய்ந்த கழல் அடி நோவ கன்றின் பின்
என் செய்ய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே -3 2-1 – –

பதவுரை

அஞ்சனம் வண்ணனை–மை போன்ற நிறத்தை யுடையனும்
ஆயர் கோலம்–இடைக் கோலம் பூண்டுள்ளவனும்
கொழுந்தினை–(அவ் விடையர்க்குத்) தலைவனும்
பிள்ளையை–(எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை
மனைகள் தொறும்–(தன் வீட்டிற் போலவே) அயல் வீடுகள் தோறும்
திரியாமே–(இஷ்டப்படி) திரிய வொட்டாமல்
மஞ்சனம் ஆட்டி–(காலையில் குள்ளக் குளிர) நீராட்டி,
கஞ்சனை–கம்ஸனை
காய்ந்த–சீறி யுதைத்த
கழல்–வீரக் கழலை அணிந்துள்ள
அடி–திருவடிகள்
நோவ–நோம் படியாக
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போ வென்று)
என் செய போக்கினேன்–ஏதுக்காகப் போக விட்டேன்!;
எல்லே பாவமே–மஹாபாபம்! மஹாபாபம்.

அஞ்சன வண்ணனை  –
கண்டவர்கள் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருண்டு  இருக்கிற திரு மேனியை உடையவனே –
அஞ்சனம் -மை
மைப்படி மேனி இறே

ஆயர் இத்யாதி –
கன்றுகளின் பின்னே போகிற போதை நடையின் த்வரையும்
திரு மேனியின் குறு வெயிர்ப்பும்
அலைந்த திருக் குழல்களும் –
திருக் கையில் பிடித்த பொற் கோலுமான ஆயர் கோலத்தை உடையவனாய் –
அவர்களுக்கு முன்னோடி கார்யம் பார்க்கும் தலைவன் ஆனவனை –

அன்றிக்கே –
வேரிலே வெக்கை தட்டினால் -கொழுந்து முற்பட வாடுமா போலே
அவர்களுக்கு நோவு வந்தால் -முதல் தன் முகம் வாடும்படி இருக்கையாலே
கொழுந்து -என்கிறதாகவுமாம் –
ஆயர் கொழுந்தாய்-(அவரால் புடை உண்ணும் 1-7-)-என்றார் இறே ஆழ்வார்

மஞ்சனம் இத்யாதி –
பொன் போலே மஞ்சனம் ஆட்டி -என்கிறபடியே
திருமேனி அழகு விளங்கும்படி திரு மஞ்சனம் செய்து –
தன் மனை போலே பிறர் மனைகள் தோறும் வ்யாபரித்து திரியக் கண்டிருக்க பெறாதே

கஞ்சனைக் காய்ந்த கழல் அடி நோவ –
கடின பிரக்ருதியான கம்சனை உதைக்கையாலே நொந்த திரு வடிகளானவை
கல்லும் காடுமான காட்டு வழியிலே நடக்கையாலே மிகவும் நோம் படி –

கழல் அடி –
வீரக் கழலை உடைத்தான திருவடிகள் -என்கை –

கன்றின் பின் என் செயப் பிள்ளையை போக்கினேன் –
ஓரிடத்திலே நில்லாதே பரந்தோடித் திரியும் கன்றுகளின் பின்னே மிருது பிரக்ருதியான
பிள்ளையை எதுக்காக போக விட்டேன் –
இவன் பக்வனாய் சத்ரு ஜெயம் பண்ண வல்லான் ஆனாலும்
பிள்ளை-என்று இறே இவள் சொல்லுவது –

எல்லே பாவமே –
என்னே நான் பண்ணின பாபம் இருந்தபடி என் -என்று வெறுத்து சொல்கிறாள் –

———————————————————————-

பற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும்  தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளி உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – 3-2 2-

பதவுரை

பாடியில்–திருவாய்ப் பாடியில்
பற்று மஞ்சள் பூசி–பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனி யெங்கும் பெண்கள் கையால் தனித் தனியே) பூசப் பெற்று,
சிற்றில் சிதைத்து–(அப் பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி)
எங்கும்–எல்லா விடங்களிலும்
தீமை செய்து–தீம்புகளைச் செய்து கொண்டு
பாவை மாரொடு–அவ் விடைப் பெண்களோடே
திரியாமே–திரிய வொட்டாமல்,
கன்று–கன்றுகளினுடைய
தூளி உடை–தூள்களை யுடைத்தாய்
வேடர்–(அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக் கிருப்பிடமான
கான் இடை–காட்டிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (திரியும் படியாக)
என் பிள்ளையை–என் மகனை
எற்றுக்கு போக்கினேன்–ஏதுக்காக அனுப்பினேன்!

பற்று மஞ்சள் பூசி –
ஊரில் பெண்கள் தங்களுக்கு பூசுகைக்கு மஞ்சள் அரைத்தால் –
பற்றுப் பார்ப்பது -இவன் உடம்பிலே ஆய்த்து-
ஒருத்தி இழுகின இடத்தில் ஒருத்தர் இழுகாதே-தனித்தனியே -இழுகி-பற்றுப் பார்க்கையாலே –
திரு மேனி எங்கும் மஞ்சள் பூசினால் போலே இருக்கும் ஆய்த்து –
அத்தைப் பற்ற -பற்று மஞ்சள் பூசி -என்கிறாள் –

பாடியில் பாவை மாரோடு –
திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்களோடே

சிற்றில் சிதைத்து –
தன்னை உபேஷித்து இருந்து விளையாடுகிறவர்களுடைய கொட்டகங்களை அழித்து

எங்கும் தீமை செய்து திரியாமே –
இப்புடைகளிலே எங்கும் தீம்புகளை செய்து திரியாதபடியாக –
இப்படி திரியக் கண்டு இருக்கையாலே காணும் இவள் தான் உகப்பது
(சிற்றில் சிதைத்து –தீமைகளில் விசேஷ தீமையைத் தனியாக அருளிச் செய்தபடி )

கற்றுத் தூளி உடை வேடர் கானிடை –
முன் வருகிறவர்களை தெரியாதபடி கன்றுகளினுடைய தூளியாலே வ்யாப்தமாய் –
அடிச்சு பறிக்கும் வேடர் சஞ்சரிக்கிற காட்டிலே –

கன்றின் பின் எற்றுக் என் பிள்ளையை போக்கினேன்
புறம்பு ஒன்றையும் பார்க்க ஒட்டாதே தன் பின்னே ஓடித் திரியப் பண்ணும்
கன்றுகளின் பின்னே என்ன பிரயோஜனதுக்காக என் பிள்ளையை போக விட்டேன்

எல்லே பாவமே -பூர்வ வத்

—————————————————————-

நன் மணி மேகலை நங்கை மாரொடு நாள் தோறும்
பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே
கன் மணி நின்றதிர்  கானத ரிடைக் கன்றின் பின்னே
என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே – 3-2- 3-

பதவுரை

என்–என் மகனான
மணி வண்ணனை–நீல மணி போன்ற வடிவை யுடைய கண்ணனை,
நல்–லோகோத்தரமான
மணி–நவ மணிகள் பதித்த
மேகலை–மேகலையை (அணிந்துள்ள)
நங்கைமாரொடு–சவுந்தர்ய பூர்த்தியுடைய யுவதிகளோடு கூட
நாள் தொறும்–தினந்தோறும்
பொன் மணி மேனி–அழகிய நீல மணி போன்ற திருமேனியானது
புழுதி ஆடி–புழுதி படைக்கப் பெற்று(விளையாடி)
திரியாமே–திரிய வொண்ணாதபடி
கான்–காட்டிலே
(இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்)
கல்–மலையிலே
மணி நின்று அதிர்–மணியினோசை போல பிரதி த்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான)
அதர் இடை–வழியிலே
(வருந்தும்படியாக)
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே
போக்கினேன்–போக விட்டேனே!
எல்லே பாவமே!

நன் மணி இத்யாதி –
நல்ல ரத்னங்களாலே சேர்க்க மேகலையை உடையராய் –
ஜாதி உசிதமான குண பூர்த்தியை உடையரான -பெண்களோடே –
ஒரு நாள் இரண்டு நாள் அன்றிக்கே
நாள் தோறும் –

பொன்னின் -இத்யாதி –
அழகிய நீல ரத்னம் போலே இருக்கிற திருமேனி -அவர்களோடு இட்டீடு கொள்ளுகையாலே புழுதி யாடி
திரியாத படியாக -மஞ்சனமாட்டி மனைகள் தோறும் திரியக் காண்கை போலே -காணும் –
இவள் தான் உகந்து இருப்பது –

கன் மணி இத்யாதி –
கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில் -என்கிறபடியே –
மலை மேல் காடுகளில் -கன்றுகளை மேய்க்கையாலே -ஜாதி உசிதமாக
இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும் –
அவை தான் கூப்பிடுகிற த்வநியாலும் –
அங்கு உண்டான மலையானது -மணி த்வனி போலே நின்று பிரதி த்வனி எழும்படியான
காட்டு வழியிலே

கன்றின் பின்னே என் மணி வண்ணனைப் போக்கினேன் –
ஏதேனும் ஒன்றைக் கண்டவாறே வெருண்டோடுகிற கன்றுகளின் பின்னே
எனக்கு அனுபாவ்யமான நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனைப் போக விட்டேன் –
எல்லே பாவமே –

—————————————————-

வண்ணக் கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே -3 2-4 –

பதவுரை

கண்ணுக்கு இனியானை–கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய்
எண்ணற்கு அரியானை–(இத் தன்மையன் என்று) நினைக்க முடியாதவனாயுள்ள கண்ணபிரானை
இப் பாடி எங்கும்–இத் திருவாய்ப்பாடி முழுவதும்
பல செய்து–பல (தீமைகளைச்) செய்து (அத் தீமைகளினால்)
வண்ணம் கரு குழல்–அழகிய கறுத்த கூந்தலை யுடையரான
மாதர்–பெண் பிள்ளைகள்
வந்து–(தாயாகிய என்னிடம் அரை குலைய தலை குலைய ஓடி) வந்து
அலர் தூற்றிடப் பண்ணி–பழி தூற்றும்படியாகப் பண்ணிக் கொண்டு
திரியாமே–திரிய வொட்டாமல்
கான் அதர் இடை–காட்டு வழியிலே
கன்றின் பின்–கன்றுகளின் பின்னே (திரியும்படி)
போக்கினேன்–அனுப்பினேனே!
எல்லே பாவமே!

வண்ணம் இத்யாதி –
வண்ணம் -அழகு -அழகியதாய் கறுத்து இருந்துள்ள குழலை உடையரான
ஸ்திரீகள் ஆனவர்கள் தலை குலைய ஓடி வந்து பழி தூற்றும்படியாக பண்ணி –

பல செய்திப் பாடி எங்கும் திரியாமே –
பல -என்னுமது ஒழிய
இத்தனை என்று பரிகணிக்க ஒண்ணாதபடியான தீம்புகளை செய்து –
இவ் ஊர் எங்கும் திரியாதபடியாக -அலர் தூற்றுகையும் இவன் இப்படி செய்யுகையும் தானே
ரசமாய் இருக்குமா போலே காணும் இவளுக்கு

கண்ணுக்கு இனியானை –
தீம்பாலே நெஞ்சுகள் புண் பட்டாலும் அவற்றை கண் வாங்க ஒண்ணாதபடி
த்ர்ஷ்டி பிரியனாய் இருக்கும் அவனை

எண்ணற்கு அரியானை –
ஸ்வ யத்னத்தாலே பெறப் பார்ப்பார்க்கு நினைக்கைக்கும் அரியனானவனை

கானதரிடைக் கன்றின் பின் -போக்கினேன் –
இப்படி துர்லபனான அவனைக் காட்டு வழியிலே கன்றுகள் பின்னே போக விட்டேன் –

எல்லே பாவமே

————————————————–

அவ்வவிடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனிவாய் கொடுத்து கூழமை செய்யாமே
எவ் வுஞ்சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே -3-2-5- –

பதவுரை

தெய்வம்–தேவர்களுக்கு
தலைவனை–நிர்வாஹகனான கண்ணனை
அ அ இடம் புக்கு–(மச்சு மாளிகை முதலான) அவ்வவ் விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து
அ ஆயர் பெண்டிர்க்கு–(அவ்வவ் விடங்களிலுள்ள) அவ்விடைப் பெண்களுக்கு
அணுக்கன் ஆய்–அந்தரங்கனாய்
(அவர்களுக்கு)
கொவ்வை கனி–கோவைப் பழம் போன்ற
வாய்–(தன்) அதரத்தை
கொடுத்து–(போக்யமாக-ஜீவனமாக ) கொடுத்துக் கொண்டு
கூழைமை செய்யாமே–கூழ்மைத் தன்மடித்துத் திரிய வொட்டாமல்
எவ்வும்–துன்பத்தை விளைக்குமதான
சிலை உடை–வில்லை(க்கையிலே) உடைய
வேடர்–வேடர்களுக்கு(இருப்பிடமான)
கான் இடை–காட்டிலே
கன்றின் பின் போக்கினேன் ;
எல்லே பாவமே!

அவ்வவிடம் புக்கு-
மச்சொடு மாளிகை நிலவரை முதலான அவ்வவ ஸ்தலங்களிலே
பிறர்க்கு தெரியாதபடி சென்று புக்கு –

அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் –
அவ்வவ ஸ்தலங்களில் இருந்த இடை பெண்களுக்கு அந்தரங்கனாய் –
அதாவது –
அவர்கள் புத்ய அதீனமாக தன்னைத் சமைத்து வைக்கை

கொவ்வைக் கனி வாய் கொடுத்து –
கோவைப் பழம் போல் இருக்கிற திரு வதரத்தை அவர்களுக்கு ஜீவனமாக கொடுத்து

கூழமை செய்யாமே –
கூழ்மைத் தனம் அடித்து திரியாமே
கூழமை யாவது –
உன்னை அல்லது அறியேன் -உன்னால் அல்லது தரியேன் -என்று
அவர் அவர்க்கே அற்றானாய் பரிமாறுகை

எவ்வும் சிலை உடை வேடர் கானிடை –
எவ்வும் சிலை என்றது -எவ்வும் வெவ்வேல்-(கலியன் -1-7-) -என்னுமா போலே
கண்டவர்களுக்கு பயங்கரமாய் கொண்டு -துக்கத்தை பண்ணா நின்றுள்ள சிலை-என்னுதல்-

அன்றிக்கே –
ஏவும் -என்கிற இத்தை –
எவ்வும் -என்று குறைத்து கிடக்கிறதாய் –
ஏ-என்று அம்புக்கு பேராய்-
அம்போடு சேர்ந்த சிலை -என்னவுமாம்-

முற்பட்ட யோஜனைக்கு –
எவ்வும் -எவ்வத்தை பண்ணா நிற்கும் -என்றபடி –
எவ்வம் -துன்பம்

பிற்பட்ட யோஜனைக்கு-
எவ்வும் என்கிற இடத்தில் –
வகர ஒற்று -கீழில் அடிகளுக்கு சேர வேண்டுகையாலே வந்து கிடக்கிற இத்தனை –
இப்படி இருந்துள்ள சிலையை உடையரான வேடர் வர்த்திக்கிற காட்டு இடத்திலே

கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன்
ஸ்வைர கதிகளான கன்றுகளின் பின்னே தேவர்களுக்கு தலையானவனைப் போக விட்டேன்

எல்லே பாவமே

—————————————-

மிடறு மெழு மெழுத் தோடே வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கடிறு பல திரி  கானதரிடைக் கன்றின் பின்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -3 -2-6 –

பதவுரை

என் பிள்ளையை–என் மகனாகிய கண்ண பிரானை
வெண்ணெய்–வெண்ணெயை
மிடறு–கழுத்திலே
மெழுமெழுத்து ஓட–(உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி
விழுங்கி–விழுங்கி விட்டு
போய்–(பிறரகங்களுக்குப்) போய்
பல படிறு–பல கள்ள வேலைகளை
செய்து–செய்து கொண்டு
இ பாடி எங்கும்–இவ் விடைச்சேரி முழுதும்
திரியாமே–திரிய வொட்டாமல்
பல கடிறு திரி–பல காட்டானைகள் திரியப் பெற்ற
கான் அதர் இடை–காட்டு வழியிலே
இடற–தட்டித் திரியும்படியாக
கன்றின் பின் போக்கினேன் ;
எல்லே பாவமே!
(dal makani -பருப்பும் வெண்ணெயும் சேர்ந்து உண்டான் -முன்பே பார்த்தோம் )

மிடறு மெழு மெழுத் தோடே வெண்ணெய் விழுங்கிப் போய் –
இத்தால்-
வெண்ணெய் விழுங்கும் போதை அநாயாசம் சொல்லுகிறது
அதாவது –
ஓதந அபூபாதிகள் அமுது செய்யும் போது குறிக் கொண்டு -திருப் பவளத்திலே
இட்டு இருந்து மென்று -மெள்ள மிடறுக்கு கீழே -இழிச்ச வேணும் இறே –
(ஓதந -அரிசிச் சோறு -அபூபாதிகள்-வடை போல்வன )
அங்கன் இன்றிக்கே –
தாழியில் வெண்ணெய் தடம் கை ஆர விழுங்கிய-(1-5-) -என்றும் –
தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு ( 10-7-) -என்றும்
சொல்லுகிறபடியே –
வெண்ணெயினுடைய உடைய ஸம்ருத்தியைக் கண்டு பிரியப்பட்டு
அபிநிவேச அதிசயத்தாலே -திருக்கையை விரித்து -நிறைய அள்ளி –
கை கலந்து உண்டான் (திருவாய் ) –என்கிறபடியே
இடக் கையாலும் வலக் கையாலும் வாரி அமுது செய்யும் போது –
ஒரு பருக்கை ( தடங்கல் ) இல்லாமையாலே -மிடற்றில் உறுத்தாமல் -மெழு மெழுத்து
உள்ளே ஒடும்படியாய் இறே இருப்பது –
ஆகையால் இவன் ஸௌகுமார்யத்துக்கு சேர்ந்து இருக்கும் இறே –
இப்படி வெண்ணெயை அமுது செய்து -கவ்யாந்தரங்களில் காட்டிலும் (திரட்டுப்பால் இத்யாதி சொல்லாமல் )
இவன் விரும்பி இருப்பது வெண்ணெயே இறே –
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்கைக்காக இறே வந்து அவதரித்ததும் -(திரு விருத்தம் )

விழுங்கிப் போய் -என்றது -விழுங்கி இட்டு என்னுதல்
ஸ்வ க்ரஹத்திலே-இப்படி வெண்ணெயை விழுங்கி புறம் போய் -என்னுதல் –
(வெண்ணெய் திருடன் தான் அல்லாதாராய்ப் போலே )

படிறு பல செய்து –
படிறு -தீம்பு -பல என்கையாலே -அதுக்கு எண்ணில்லாமை சொல்லுகிறது
பந்து பறித்து துகில் பற்றி கீறி படிறன் படிறு செய்ய (10-7-)-என்கிறபடியே
விளையாடுகிற பெண்கள் கையிலே லீலா உபகரணங்களைப் பறிப்பது –
அவர்கள் புடைவைகளைப் பற்றிக் கிழிப்பது -சிற்றில்களை அழிப்பது
தொட்டுதைத்து நலியேல்-எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கு இட்டக் கால் (நாச்சியார் )-என்கிறபடியே –
அவர்களோடு இட்டீடு கொண்டு மெய்ப்பிணக்கு இடுவதாகச் சொல்லும் வியாபாரங்களுக்கு ஒரு அவதி இல்லை இறே –
இவன் செய்யுமவை -அவாச்யமுமாய் -அஸங்யேயயுமாய்- இருக்கை யாலே இறே –
படிறு -என்றும் -பல -என்றும் -இவள் (இவர்) அடக்கிச் சொல்லி விட்டது -இப்படி செய்து –

இப்படி எங்கும் திரியாமே –
ஓரகம் இரண்டகத்து அளவு அன்றிக்கே -ஒரு தெரு இரண்டு தெரு அளவும் அன்றிக்கே –
பஞ்ச லஷம் குடியாய்-ஒரு கோல் -ஒரு மனையான-இத் திருவாய்ப்பாடி எங்கும் -இப்படி திரியாதபடியாக
அஞ்ச உரப்பாள் யசோதை   ஆணாட விட்டிட்டு இருக்கும் (நாச்சியார் )-என்கிறபடியே –
இப்படி இவன் செய்யா நின்றால் – பயப்பட நியமியாதே –
நம்முடைய பிள்ளையும் சமர்தனாய் இப்படி செய்யப் பெற்றோம் -என்று
இது தன்னைக் கண்டு உகந்து இருக்கும் அவள் இறே -ஆகையால் இறே
இப்படி திரியாதபடி போக விட்டேன் என்று க்லேசிக்கிறது

கடிறு பல திரி –
களிறுகள் பலவும் திரிகிற
கெளிறு -என்கிற மத்ச்யத்தை  -கெடிறு -என்னுமா போலே
களிறு -என்கிற இத்தை -கடிறு -என்கிறது
கருடனை -கருளன் -என்று டகரத்துக்கு ளகரமாக சொல்லுகிறது போலே
களிற்றை -கடிறு -என்று ளகரத்துக்கு டகரமாக சொல்லுகிறது –

ஆனைகள் பலவும் திரிகிற -என்கையாலே –
காட்டானைகள் ஆளைக் கண்டால் ஓடித் தொடர்ந்து விழ விட்டுக் கொல்லும்-என்று அஞ்சி சொல்லுகிறாள்

கானதரிடை –
காட்டு வழி இடத்திலே -அதாவது –
சிற்றடி பாடாகையாலே -இடவாய் வலவாய் போக இடம் அற்று இருக்கும் இறே

கன்றின் பின்
அதுவும் தன் இஷ்டத்தில் போய் வருகை அன்றிக்கே -புல்லுக் கண்ட இடத்தில்
நுழைந்து போகா நிற்கும் கன்றுகள் பின்னே திரிய வேணுமே

இடற என் பிள்ளையை போக்கினேன் –
இப்படி தட்டித் திரியும் படியாக ஸூகுமாரனான என் பிள்ளையை போக விட்டேனே

எல்லே பாவமே –

————————————————-

வள்ளி நுடங்கு இடை மாந்தர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி உணங்கு வெம் கானதரிடை கன்றின் பின்
புள்ளின் தலைவனை  போக்கினேன் எல்லே பாவமே 3-2 -7- – –

பதவுரை

புள்ளின் தலைவனை–பெரிய திருவடிக்குத் தலைவனான கண்ண பிரானை
வள்ளி–கொடி போன்று
துடங்கு–துவளா நின்றுள்ள
இடை–இடையை யுடைய
மாதர்–இடைப் பெண்கள்
வந்து–(தாயாகிய என்னிடத்தில்) வந்து (இவன் செய்த தீமைகளைச் சொல்லி)
அலர் தூற்றிட–பழி தூற்றிக் கொண்டிருக்கச் செய்தே
(அதை ஒரு பொருளாக மதியாமல்)
துள்ளி–(நிலத்தில் நில்லாமல்) துள்ளி
தோழரோடு–(தன்) தோழர்களோடு கூட
விளையாடி–விளையாடிக் கொண்டு
திரியாமே–திரிய வொட்டாமல்
கள்ளி–(மழை யில்லாக் காலத்திலும் பசுமை மாறாத) கள்ளிச் செடியுங்கூட
உணங்கு–(பால் வற்றி) உலரும் படியாய்
வெம்–மிக்க வெப்பத்தை யுடைய
கான் அதர் இடை–காட்டு வழியிலே

வள்ளி -இத்யாதி
வள்ளி -கொடி-
கொடி போலே நுடங்குகிற இடையை உடையரான பெண்கள்
வந்து தங்கள் திறத்தில் -இவன் செய்த படிறுகளை சொல்லி -பழி தூற்ற –
உளைய விளையாடினால் பழி தூற்றா திரார்கள் இறே

துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே –
இப்படி இவர்கள் வந்து பழி தூற்றா நின்றால் -ஒரு சற்றும் பயம் இன்றிக்கே -இது
தன்னையே தனக்கு ஏற்றமாக கொண்டு கர்வித்து -குழக் கன்றுகள் செருக்காலே
துள்ளுமா போலே -நிலத்தில் மிதித்து நடவாதே -துள்ளிக் கொண்டு வினோதித்து
தன்னோராயிரம் பிள்ளைகளான தோழன்மாரோடே திரியாதபடியாக

கள்ளி உணங்கு வெம் கானதரிடை கன்றின் பின் –
அநாவர்ஷ்டியாலும் பசுமை மாறாத கள்ளி யானது -நிலா வெம்மையால் பால் வற்றி
பசுமை அழிந்து உலரும்படி அத் உஷ்ணமான காட்டு வழியிலே கன்றுகளின் பின்னே –

புள்ளின் தலைவனை  போக்கினேன்
ஸ்ரீ பெரிய திருவடிக்கு நாயகனாய் -அவன் மேல் கொண்டு சஞ்சரிக்கும் அது ஒழிய
ஒரு காலமும் கால் நடை தந்து திரியாதவனைப் போக்கினேன் –

எல்லே பாவமே

—————————————

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்
என் இளம் கொங்கை அமுதமூட்டி எடுத்தி யான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே 3-2-8- –

பதவுரை

என் இள சிங்கத்தை–எனது சிங்கக் குட்டி போன்ற கண்ணபிரானை
பன்னிரு திங்கள்–பன்னிரண்டு மாஸ காலம்
வயிற்றில் கொண்ட அப் பாங்கினால்–(என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப
யான்–(தாயாகிய) நான்
என்–என்னுடைய
இள–குழைந்திரா நின்றுள்ள
கொங்கை–முலையிலுண்டான
அமுதம்–பாலை
ஊட்டி–(அவனுக்கு) உண்ணக் கொடுத்து
எடுத்து–வளர்த்து
(இப்படியாக அருமைப்பட நோக்கின பிள்ளையை)
புலரியே–(இன்று) விடியற் காலத்திலேயே (எழுப்பி)
பொன் அடி நோவ–அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக
பொன் -மென்மையால் வந்த மதிப்பு
கானில்–காட்டிலே
கன்றின் பின் போக்கினேன்;
எல்லே பாவமே!

(எடுத்தி-உக்குறள் -குற்றியல் உகரம் -நன்னூல் ஸூத்ரம்
உயிர் வந்தால் நிலை மொழி- வரும் மொழி -மெய் விட்டு
நாடு எல்லாம் நாடெல்லாம் -நடு நிலை மொழி -உகரம் போனதே –
வரும் மொழி முதலில் ய இருந்தால் குற்றியல் உகரம் இகரம் ஆகும்
எடுத்து யான் -எடுத்தி யான்-ஆனது இதனாலே
இப்படி முற்றியல் உகரமும் இப்படியே )

புலரி -விடியற் காலத்திலேயே
பன்னிரு திங்கள் –
ததச் ச த்வாதசேமாச-என்கிறபடியே சக்கரவர்த்தி திரு மகனைப் போலே இவனும்
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாசம் பண்ணி இறே பிறந்தது –
கர்ப்பிணிகளான ஸ்திரீகள் தங்களுடைய ஆதரத்தால்-ஸ்திதி கமன சயநாதிகளால் -கர்பத்தில் இருக்கிற
பிள்ளைகளுக்கு நலுக்கம் வாராதபடி பேணிக் கொண்டு இறே திரிவது –
அப்படியே இவளும் பன்னிரண்டு மாசமும் ஒரு நலுக்கம் வாராதபடி பேணித் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு
இருந்த ஸ்நேக விசேஷத்தை சொல்லுகிறாள் -பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்-என்று

என் இளம் கொங்கை அமுதமூட்டி எடுத்தி யான் –
வயிற்றில் இருந்த காலம் நலுங்காமல் நோக்கினவள்-பிறந்து வளருகிற காலத்தில் நலுங்க விடாள் இறே –
ஆகையால்  இவனுடைய பருவத்துக்கு ஈடான தாரகம் இட்டு தான் எடுத்து வளர்த்து கொண்டு போந்த படி சொல்லுகிறாள்
இப்படி ஸ்நேஹிநியான என்னுடைய இள முலையில் பாலை ஊட்டி யான் எடுத்து
பிள்ளை முழுசி முலை நெருடும் காலத்தில் -வரக்கு–என்று இருக்கை அன்றிக்கே
குழைந்து இருக்கும் படியை பற்ற -இள முலை -என்கிறது –
கொங்கை அமுதம் -என்கையாலே முலைப் பால் என்கிறது –
ஊட்டி எடுத்தி யான் என்றது -நிலத்தில் விடாமல் ஒக்கலையில் எடுத்துக் கொண்டு
திரிந்து வளர்த்து வைத்தேன் என்கை-
(எடுத்தது -லக்ஷணையால் வளர்த்ததும் குறிக்கும் )

பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின் –
தண் போது கொண்ட தவிசு-( பெரியாழ்வார் 1-8-) –நெரிஞ்சி -என்னும்படி அத்யந்தம் மிருதுவாய்
ஸ்பர்ஹநீயமான திருவடிகள் கடின ஸ்தலத்திலே நடக்கையாலே உளைந்து நோம்படி யாக
சிறுகாலே காட்டில் மேய்ச்சல் கண்ட இடத்திலே ஓடும் கன்றுகளின் பின்னே

என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன்
என்னுடைய பிள்ளையாய் -நான் சீராட்டி வளர்க்கையாலே -சிம்ஹ கன்று போலே செருக்கி
திறிகிறவனை போக விட்டேன் –

எல்லே பாவமே

——————————————

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடைக்
கடிய வெம் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின்
கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -3 -2-9 –

பதவுரை

என் பிள்ளையை–என் மகனான
தாமோதரனை–கண்ணபிரானை,
குடையும்–குடையையும்
செருப்பும்–செருப்பையும்
கொடாதே–(அவனுக்குக்) கொடாமல்
கொடியேன் நான் -கொடியவளாகிய நான்
உடையும்–(ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய்
கடியன–கூரியனவாய்க் கொண்டு
ஊன்று–(காலிலே) உறுத்துவனவாய்
வெம்–(இப்படி) அதி தீக்ஷ்ணமான
பரற்கள் உடை–பருக்காங் கல்லை யுடைய
கடிய வெம்–அத்யுஷ்ணமான
கான் இடை–காட்டிலே
கால் அடி நோவ கன்றின் பின் போக்கினேன்
எல்லே பாவமே!

உடையும் -சூர்யன் வெப்பத்தினால் பிளந்து கிடப்பனவாய்
கடியன -கூரியனவாய்க் கொண்டு
ஊன்று -காலிலே உறுத்துவனவாய்

குடையும் செருப்பும் கொடாதே –
வெயிலுக்கு  ரஷகமான குடையும் -அடிச் சூட்டுக்கும் முள்ளு முதலானவற்றுக்கும்
ரஷகமான செருப்பையும் கொடுத்து விடாதே

தாமோதரனை நான் –
எனக்கு பவ்யனாய் -நான் கட்டின கட்டு அவிழ்க்க மாட்டாமல் இருந்த பிள்ளை யானவனை நான் –

உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடைக்-
உஷ்ணத்தாலே உடைந்து கிடப்பதாய்-கூரியதாய் கொண்டு -காலிலே ஊன்றுவனாய்
கால் வைக்கப் பெறாதபடி அதி உஷ்ணமான பருக்களை உடைய

கடிய வெம் கானிடைக் –
மேல் ஒதுங்க நிழல் இல்லாதபடி -கொடியதாய் வெவ்விதான காட்டிலே

காலடி நோவக்-
கால்களின் உள்ளடி நோம்படியாக

கன்றின் பின் கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன்-
பச்சை கண்ட இடம் எல்லாம் பரந்து திரியும் கன்றுகளின் பின்னே
இவற்றை எல்லாம் ஏற்கவே நிரூபியாத கொடுமையை உடையனான நான்
ஸூகுமாரனான என் பிள்ளையை போக விட்டேன் –

எல்லே பாவமே –

———————————————–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார்-

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே -3 2-10 –

பதவுரை

என்றும்–‘எப்போதும்
எனக்கு–(தாயாகிய) எனக்கு
இனியானை–இனிமையைத் தருமவனாய்
என்–என்னுடைய
மணி வண்ணனை–நீல மணி போன்ற வடிவை யுடையனான கண்ணபிரானை
கன்றின் பின் போக்கினேன் என்று–கன்றுகளின் பின்னே (காட்டில்) போக விட்டேனே!’ என்று
அசோதை–யசோதைப் பிராட்டி
கழறிய–(மனம் நொந்து) சொன்னவற்றவை
சொல்–அருளிச் செய்த
பொன்–பொன் மயமாய்
திகழ்–விளங்கா நின்றுள்ள
மாடம்–மாடங்களை யுடைய
புதுவையர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்களுக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வாருடைய
இன்–போக்யமான
தமிழ் மாலைகள்–தமிழ்ச் சொல் மாலைகளை
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை–(ஒரு காலும்) துன்பமில்லையாம்.

கழறிய -மனம் வருந்தி சொன்னவை
என்றும் எனக்கு இனியானை –
இப்போது செய்கை அன்றிகே -எல்லா காலத்திலும் எனக்கு ரசாவ்ஹனானவனை

என் மணி வண்ணனை
எனுக்கு அனுபாவ்யமான நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனை

கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய-
விளைவது அறியாதே கன்றுகளின் பின்னே போக விட்டேனே -என்று
ஸ்ரீ யசோதை பிராட்டி க்லேசப்பட்டு சொன்னதை

பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல் –
பொன்னாலே செய்யப்பட்டு விலங்கா நின்றுள்ள மாடங்களை உடைய
ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ளவர்களுக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த

இன் தமிழ் -இத்யாதி
சப்தார்தங்களினுடைய ரசத்தை உடைத்தான -தமிழ் தொடைகளான இப்பத்தை
சாபிப்ராயமாக வல்லவர்களுக்கு ஸ்ரீ பகவத் விஸ்லேஷ துக்கம் இல்லை

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading