திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-1-1..

1முதற்பத்து

முதல் திருவாய்மொழி – ‘உயர்வற’

1

         உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.

பொழிப்புரை : என் மனமே, தேவர்கள் முதலிய மற்றையோருடைய மேன்மைகள் முழுதும் இல்லை என்று கூறலாம்படி மேன்மேல் உயர்ந்துகொண்டே செல்லுகின்ற நற்குணங்களையுடையவன் யாவனோ அவன், என்னிடத்துள்ள அறிவின்மையாவும் நீங்க, பத்தியின் நிலையை அடைந்த அறிவைத் தந்தான்; அந்த அறிவைத் தந்தவன் யாவனோ அவன், மறதி என்பது சிறிதும் இல்லாத நித்தியசூரிகட்குத் தலைவன்; அந்நித்தியசூரிகட்குத் தலைவன் யாவனோ அவனுடைய, எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற ஒளி பொருந்திய திருவடிகளைத்தொழுது பிறவிப் பெருங்கடலினின்றும் கரை ஏறுவாய்.

விசேடக்குறிப்பு : ‘யவன்’ என்பது ‘யாவன்’ என்ற சொல்லின் விகாரம். மனன் – மனம்; மகரத்திற்கு னகரம் போலி என்பர்.

இப்பதிகம் நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்படும்.

முதற்பாட்டுக்கு இரண்டுவகையில் அவதாரிகை, ஒன்று, ‘மனமே, நமக்குப்
பல உதவிகளைச்செய்த இறைவனுடைய திருவடிகளை வணங்கு, என்பது.
மற்றொன்று, ‘இறைவன் நற்குணக்கடலாதலின், இளைய பெருமாளைப்போன்று,
நீயும் குணங்கட்குத் தோற்று அவனை வணங்கு,’ என்பது. இரண்டாவது
அவதாரிகை, ‘உயர்வற உயர்நலமுடையவன், துயரறு சுடர் அடி தொழுதெழு’
என்பதில் நோக்காக எழுந்தது.

 ஈடு : 1‘இறைவன் எல்லா நற்குணங்கட்கும் தான் இருப்பிடனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்

‘ ஐந்து வாக்கியங்களும்–உயர்நலமுடையவன்–‘யவன்-அருளினன்-‘அமரர்கள் அதிபதி’-சுடரடி’

;2அக்குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்வியாத்ம சொரூபத்தின் வேறுபாட்டினைக்காட்டி உபகரித்தான்; இப்பேற்றுக்கு என் பக்கல் சொல்லக்கூடிய நன்மை சிறிதும் இன்றி இருக்கவும்,3நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்; 4தம் தன்மைகளை அடைந்தவர்களாக இருக்கின்ற 5நித்தியசூரிகட்கும் அவ்வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்; தன்னுடைய திவ்விய விக்கிரகத்தின் வேறுபாட்டினைக் காட்டி உபகரித்தான்,’ என்று அவன் செய்த உதவிகள் அடையச் சொல்லி, ‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான 6கைங்கரியத்தைச் செய்து உய்வு பெறுவதற்கு வாராய்,’ என்று தம் திருவுள்ளத்துக்கு உபதேசிக்கிறார். இனி, ‘ஆறு 7கிண்ணகம் எடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறி உண்டு போய்க் கடலிலே புகும்; நீர் வஞ்சிக்கொடி முதலானவை வளைந்து பிழைக்கும்; அவை போன்று, இறைவனுடைய குணங்களின் எடுப்பு இருந்தபடி கண்ட நமக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை; அவன் திருவடிகளிலே தலை சாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே,’ என்கிறார் எனலுமாம். 8இளைய பெருமாளை ‘நீர் இவருக்கு என் ஆவீர்?’ என்ன, ‘பெருமாளும் ஒரு படி

நினைத்திருப்பர்; நானும் ஒருபடி நினைத்திருப்பன்,’ என்றார். ‘அவர் நினைத்திருக்கிறபடி என்? நீர் நினைத்திருக்கும்படி என்?’ என்ன, 1‘அவர் தம் பின் பிறந்தவன் என்று இருப்பர்’ நான் அவர் குணங்களுக்குத்தோற்று அடியேனாய் இருப்பன் என்று இருப்பன்,’ என்றார். அப்படியே இவரும் ‘உயர்வற உயர்நலம் உடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே,’ என்கிறார். 2‘ஆயின், இவர் தாம் முற்படக் குணங்களில் இழிந்து பேசுதற்குக் காரணம் யாது?’ எனில், தாம் அகப்பட்ட துறை அக்குணங்களாகையாலே அவற்றையே முதன்முன்னம் பேசுகிறார். இறைவன், இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன் – பகவானுடைய ஆனந்தத்தைப் பேசப்புக்க வேதங்கள் மனிதர்களுடைய ஆனந்தம் தொடங்கிப் பிரமானந்தத்து அளவும் சென்று பின்னையும் அதற்கு மேல் 3உத்பிரேக்ஷித்துக்கொண்டு சென்று பின்னையும் அளவிட்டு அறியமாட்டாது, 4‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே மீண்டன; இவ்வாறு மீண்டமையும் ஆனந்தகுணம் ஒன்றைப் பற்றியேயாம்; குணங்கள் எல்லாம் இப்படியே அன்றோ இருப்பன? இக்குணங்கள் எல்லாம் தமக்கு நிலையமாகப் பேசுகிறார் இவர். 5இறைவனின் வேறுபட்ட எல்லாப் பொருள்களிலும் எல்லா வகையாலும் வருகின்ற மேன்மையினை ஈண்டு ‘உயர்வு’ என்கிறார். அற – அம்மேன்மை இன்றியே ஒழிய; ஈண்டு ‘அற’ என்றது, மற்றைத் தெய்வங்கள் உயர்வே இல்லாதவர்கள் என்பதனைக் குறிக்க வந்தது அன்று; இறைவனுடைய மேன்மையினையும் பிற தெய்வங்களினுடைய

 மேன்மையினையும் பார்த்தால், சூரியன் முன் நட்சத்திரங்கள் போலவும், மஹாமேருமலையின் உச்சியில் நின்றவனுக்குக் கீழுள்ள கடுகு முதலியவை போலவும், உள்ளனவாக இருக்கச்செய்தே இல்லை என்னலாம்படி இருக்கையைத் தெரிவித்தபடி. இதனால், அவர்கள் உயர்வின் சிறுமையைத் தெரிவித்தபடி. இனி, 1‘உயர்வற’ என்பதற்கு, ‘எல்லோருக்கும் உயர்வு உண்டாகும் போது வருத்தமுண்டு; அப்படி வருந்த வேண்டுமோ?’ என்றால், ‘உயர்வற உயராநிற்கும்’ என்று உரைத்தலுமாம். உயர்வு – வருத்தம். இத்தைப் பற்றியே ஸ்ரீ ஆளவந்தாரும் 2‘ஸ்வாபாவிகம்’ என்று அருளிச்செய்தார்.

‘ஆயின் மற்றையோருடைய உயர்வுகளை எல்லாம் இல்லை என்னலாம்படி செய்தால் தனக்கு ஓரெல்லை உண்டாய் இருக்குமோ? என்னில், உயர் – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையில் அனுபவித்தாலும் அப்பாற்பட்டு, வாக்காலும் மனத்தாலும் அளவிட்டு அறிய முடியாதபடி உயராநிற்கும். ஆயின், 3‘செல்வம், அழிதலை முடிவாகவுடையன; உயர்வு, இறங்குதலை முடிவாகவுடையன; சேர்க்கை, பிரிதலை முடிவாகவுடையன; வாழ்தல், சாதலை முடிவாகவுடையன,’ என்கிறபடியே, இங்குக் கூறப்படும் உயர்வும் ஒரு காலத்தில் தாழுமோ?’ எனின், அன்று; ‘உயர்’ என்ற சொல்லால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாமையைக் கூறியபடி. ‘ஆயின், 4கரை கட்டாக் காவிரி போன்று குணங்கள் பரந்திருந்தால் இவற்றுள் யாதாயினும் ஒன்று பயன் இல்லாமல் பாடு பட்டுக்கிடக்குமோ?’ என்னில், நலம் – கண்ட இடம் எங்கும் பயிர் பட்டு இருக்கும் நன்செய் நிலம் போன்று எல்லாக்குணங்களும் ஒக்கக் கொள்ளத் தக்கனவாக இருக்கும். இங்கு ‘நலம்’ என்றது, ஆனந்த

குணம் ஒன்றனையே சொல்லுகிறது. அன்றி, குணங்களின் தொகுதியினைச் சொல்லுகிறது என்றும், ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமான 1விபூதிகளைச் சொல்லுகிறது என்றும் கோடலும் பொருந்தும். உடையவன் – இக்குணங்களை உள்ளவை என்று கூறுதலோடு அமையாது, இவற்றைக் கொண்டு நிரூபிக்கவேண்டும்படியாக இருப்பவன். இதனால், இக்குணங்கள் இடையில் தோன்றியவையல்ல; இறைவன் தன்மையோடு சேர்ந்தவைகளாய் இருப்பன என்பதனைத் தெரிவித்தபடி 2ஆழ்வான், பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து, ‘நிர்க்குணம் என்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!’ என்று பணித்தான். 3‘அந்த இறைவன் எல்லா நற்குணங்களையும் இயற்கையாக உடையவன்’; 4‘எங்கும் நிறைந்து இருக்கின்ற கண்ணபிரானுடைய கல்யாண குணங்கள் எல்லா உலகங்களும் சேர்ந்து பதினாயிரம் வருடங்கள் கூறினும், கூறுதற்கு முடிவு பெறுவன அல்ல;’5‘மகாத்துமாவாகிய ஸ்ரீ ராமன், தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருக்கும் இமயமலையினைப் போன்று, எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கின்றான்’; 6‘அரசனே, உன்னுடைய மகனான ஸ்ரீ ராமனுக்குப் பல நற்குணங்கள் இருக்கின்றன,’ என வருவனவற்றை இங்கு உணர்தல்தகும். 7‘இயற்கையில் அமைந்தனவாய், எல்லை அற்றனவாய், மேன்மையினையுடையனவாய், எண் இல்லாதனவாய் உள்ள கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன்,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

‘இப்படி, குணங்கள் கரை புரண்டு இருந்தால் இக்குணங்களாலே    தனக்கு நிறமாகும்படி இருக்கின்றானோ இறைவன்?’ என்னில், அங்ஙன் இரான்; தன்னைப் பற்றிக் குணங்கள் நிறம் பெறவேண்டும்படி இருக்கின்றான் இறைவன் என்பதனை அருளிச் செய்கிறார் ‘யவன்’ என்ற சொல்லால். 8’உப்புக்கட்டி உள்ளும் புறமும் உப்புச்சுவையே ஆயினாற்போன்று, இறைவன் உள்ளும் புறமும் ஞானமயமாய் இருக்கின்றான்,’ என்ற பிரசித்தமான பிரமா

 ணத்தைப் பற்ற ‘யவன்’ என்கிறார். 1இதனால், குணங்களை வேண்டாத இறைவனுடைய பிரசித்தியைச் சொல்லுகிறார் என்றாதல், குணங்களோடு கூடி இருக்கின்ற இறைவனுடைய வேறுபாட்டினைச் சொல்லுகின்றார் என்றாதல் கொள்க. அவன் – இதற்கு அப்பால் ஓர் உபகாரத்தைச் சொல்ல நினைந்து கீழ் நின்ற நிலையை அமைத்து மேலே 2தோள்படி கொள்ளுகிறார். ‘அவ்வுதவி தான் யாது?’ என்னில், மயர்வு அற – ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை 3வாசனையோடே போகும்படியாக. ஞாநாநுதயமாவது, தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல். அந்யதா ஞானமாவது பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல். விபரீத ஞானமாவது, தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் 4கேவலனுடைய ஞானம், தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் இறைவன் தான் இவர்க்கு அறிவு இன்மையை வாசனையோடே போக்கினபடி. மதி நலம் – ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று 5கூறுவாரும் உளர். இனி, நலம் மதி என முன்பின்னாகக் கூட்டி ‘நலமான மதி’ என்று பொருள் கொண்டு, ‘முளைக்கும்போதே வயிரம் பற்றி முளைக்கும்6பொருள்களைப்போலேபத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் தந்தான் என்கிறார்,’ என்று பட்டர் அருளிச்செய்வர். கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகக் கூடியது பத்தி. அந்தப் பத்தியின் நிலையிலே இறைவனுடைய திருவருள் நிற்க, பின்னர்த் தொண்டு செய்வதற்குக் காரணமாய் முன்னே உண்டான பத்திதான் இவ்வாழ்வாருடைய பத்தி. ‘ஆழ்வார் 1பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு 2தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார். ‘எவ்வாறு?’ எனின், ‘நாம் அனைவரும் பிரபந்நர்களாய் இருப்பினும், ஓர் ஆண்டிற்கு அல்லது ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப் பொருள்களை முன்னரே தேடிக்கொள்ளுகின்றோம் அன்றோ? அது போன்று,3‘உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ யாவான் இவர்க்கு.

அருளினன் – ஒரு விதக்காரணமும் பற்றாமல் அருளிக்கொண்டு நிற்கக் கண்ட இத்தனை, இறைவன் திருவருள் புரிதற்கு முன்னர் ஆழ்வார் தம்மை இல்லாத பொருளுக்குச் சமமாக நினைத்திருந்தார் ஆதலின், ‘எனக்கு அருளினன்’ என்றிலர். இனி, தாம் விரும்பாமல் இருக்கவும், மார்பின் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போன்று, தானாகவே அருள் செய்துகொண்டு நின்றான் ஆதலின், ‘அருளினன்’ என்கிறார் எனலுமாம். 4‘மிக்க பெருமையோடு கூடியவனும் எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனுமானபரம்பொருள் தனது நிர்ஹேதுக கிருபையால் எப்பொழுது எவனைப் பார்க்கின்றானோ, அப்பொழுது அவன் சோகம் நீங்கினவன் ஆகின்றான்,’ என்று உபநிடதம் புகலும். ‘ஆயின், இத்தலையில் நினைவு இன்றியே இருக்கவும், வந்து அருளினன் தன் அருள் கொள்வார் இல்லாதான் ஒருவனோ?’ என்னில், அயர்வு அறும் அமரர்கள் அதிபதி – தான் அருளாத அன்று 1சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடகவுடையவன். அயர்வாவது, மறதி. அஃது இன்றிக்கே இருப்பவர்கள், அயர்வறும் அமரர்கள். அவர்கள், நித்தியர்கள். 2மறதி இருந்து பின் நீங்கினவர்கள், முத்தர்கள். அவரின் வேறுபட்டவர்கள் இவர்கள். ஈண்டு ‘அமரர்கள்’ என்றது, கேவலம் மரணம் இல்லாதவர்கள் என்பதனைக் குறிக்க வந்தது அன்று; பகவானுடைய அநுபவம் தடைபடுமேயானால், அப்பொழுது தங்களை உள்ளவர்களாகக் கருதாதவர்கள் என்பதனைத் தெரிவிக்க வந்தது. அதாவது, பிரிவில் தரியாதவர்கள் என்றபடி. 3‘இராகவரே, உம்மைப் பிரிந்து பிராட்டி பிழைக்க மாட்டாள்; நானும் பிழைக்க மாட்டேன்,’ என்பது இளைய பெருமாள் திருவார்த்தை. ‘அமரர்கள்’ என்பதில் ‘கள்’ விகுதிமேல் விகுதி, சத்தியலோகம் முடிவாக உள்ள இவ்வுலகங்கள் எல்லாம் காற்பங்காகவும், மோக்ஷ உலகம் முக்காற்பங்காகவும் உள்ள பெருமையினைக் குறிக்க வந்தது.

மோக்ஷ உலகத்திலிருப்பவர்கள் எல்லாவகையாலும் இறைவனை ஒத்திருப்பவர்களாய் இருக்கையாலே, ஓலக்கம் இருக்குங்காலத்திலே தான் அவர்களுக்கும் அவனுக்கும் வாசி அறியலாமாதலின், ‘அமரர்கள் அதிபதி’ என்கிறார். ‘ஆயின், ஓலக்கம் இராத காலத்தில் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், பிராட்டி மாராலேயாதல், ஸ்ரீ கௌஸ்துபம் முதலியவைகளாலேயாதல் சேஷி என்று அறியுமத்தனை. ‘ஆயின், இப்படி இருக்கிற இவர்கள் பலராகத் தான் ஒருவனாக இப்பதனால், இவர்களைப் பின் பற்றிக்கொண்டு தன்னுடைய 4சேஷியாந்தன்மை ஆகும்படி இருக்கின்றானோ இறைவன்?’ என்னில், அதிபதி – அவர்களுக்கும் ‘தொட்டுக்கொள்’

தொட்டுக்கொள்’ என்ன வேண்டும்படி 1யானைக்குக் குதிரை வைத்து அவ்வருகாய் இருப்பான் என்பதாம். இனி, அதிபதி – தலைவன் என்று கோடலுமாம்.

இதற்கு அப்பால், விக்கிரகத்தின் வேறுபாட்டினைச் சொல்ல ஒருப்பாட்டுக் கீழ் நின்ற நிலையினைக் 2குலுக்கி ‘அவன்’என்று அவ்வருகே போகிறார். துயர் அறு சுடர் அடி – துயர் அறுக்குஞ் சுடர் அடி என்று முன்புள்ள 3முதலிகள்அருளிச்செய்வர்; அதாவது, எல்லா ஆத்துமாக்களினுடைய எல்லாத் துன்பங்களையும் போக்குதலையே தம் இயல்பாகவுடைய திருவடிகள் என்பதாம். இனி, 4எம்பெருமானார், 5ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’ என்று கூறுகின்றது ஸ்ரீராமாயணம்; இதனால், துன்பத்தை நீக்குதலும் அவனதாக இருக்கும் என்பதும், மக்கள் இன்புறுங் காலத்துத் தானும் இன்புறுகின்றான் என்பதும் பெறப்படும். அது போன்று, இவர் துயர் அறத்தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை. இத்தால், 6இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வர். சுடர் அடி – எல்லையற்ற ஒளி உருவமான திவ்விய மங்கள விக்கிரகத்தைச் சொல்லுகிறார். சுடர் – 7பஞ்ச சத்தி மயமான புகரை அருளிச்செய்கிறார். அடி – அடியவன் இறைவனிடத்தில் விரும்புவது திருவடிகளை. பால் குடிக்கும் குழந்தைகள், தம் தாயின் மார்பிலே

 வாய் வைக்குமாறு போன்று. இவரும் 1‘உன் தேனே மலருந் திருப்பாதம்’ என்கிற 2திருவடிகளிலே வாய் வைக்கிறார்.

தொழுது – நித்திய சமுசாரியாகப் போந்த இழவு எல்லாந் தீரும்படி ஆத்துமாவின் தன்மைக்கு ஏற்ற தொழிலை (தொழுதலை)ச் செய்து, எழு – 3‘கடவுளை உள்ளபடி அறிதல் என்பது இல்லையானால் அவன் இல்லாதவன் ஆகிறான்,’ என்னும் நிலை கழிந்து, ‘கடவுளை உள்ளபடி அறிதல் என்பது உண்டானால் அவன் உள்ளவன் ஆகிறான்,’ என்கிறவர்கள் கோட்டியிலே எண்ணலாம்படியாக நன்னெறியில் செல்லப் பார்ப்பாய். 4அடியிலே தொழாமையால் வந்த குறைவு தீரும்படி அடியிலே தொழுது பிழைப்பாய்,’ என்கிறார். என் மனனே, இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ‘அருளினன்’ என்று நின்ற இத்தனையே முன்பு. இருவர் கூடப் 5பள்ளியில் ஓதியிருந்தால், அவர்களுள் ஒருவனுக்கு உயர்வு உண்டாயின், மற்றையவன் அவனோடே ஒரு சம்பந்தத்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமாறு போன்று 6‘மனமே மனிதர்கள் உலக பாசத்தாற் கட்டுப்படுவதற்கும், உலக பாசத்தினின்று நீங்குவதற்கும் காரணமாக இருக்கின்றது,’ என்கிறபடியே, நெடுநாள் பிறப்பிற்குக் காரணமாகப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

பாட்டை முடியச்சொல்லி, ஈற்றில் ‘அவன்’ என்று கூறின் அமையுமே? அடிதோறும் ‘அவன், அவன்’ என்று ‘கூறுவதற்குக் கருத்துயாது?’ எனின், இவ்வாழ்வார்தாம், 7இத்திருவாய்மொழியில் இறைவனுடைய இறைமைத்தன்மையினை ஆயிற்று அருளிச்செய்கிறது; அல்விறைமைத்தன்மைக்கு ஒவ்வோரடியிலும் கூறுகின்ற அவ்வக்குணமே வேறு குணங்களை வேண்டாததாய் இருத்தலின், அங்ஙனம் அருளிச்செய்கின்றார்.

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன்; மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி; அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழு,’ என்று ஒரே தொடராகக் கொள்க. இனி, ‘உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன், துயரறு சுடரடி தொழுது எழு; மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன், துயரறு சுடரடிதொழுது எழு’ எனத் தனித்தனி தொடராகக் கோடலும் பொருந்தும் அங்ஙனம் கொள்ளுமிடத்து, 1‘கிருஷ்ணரே! முன் பக்கத்திலும் வணக்கம்; தேவரீர்பொருட்டு பின்பக்கத்திலும் வணக்கம்,’ என்று அருச்சுனன் பல முறை வணக்கங்கூறியதுபோன்று, இங்கும் பல முறை வணக்கங் கூறியதாகக் கொள்க. ஆயின், ‘உயர்வற உயர்நலம் உடையவன் அயர்வறு மமரர்கள் அதிபதி’ என்று இறைவனுடைய தன்மைகளை ஒரு சேரக் கூறி, பின் அவன் செய்த உதவியை ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்ன வேண்டியிருக்க, ‘உயர்வற உயர்நலமுடையவன்’ என்ற பின்னர், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று அவ்வளவும் போகமாட்டாமல்2உபகாரத்தின் நினைவாலே ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிறார்.

இப்பாட்டால், ‘இறைவனுக்குக் குணமில்லை; விக்கிரகம் இல்லை; விபூதி இல்லை’ என்று சொல்லுகின்றவர் எல்லாரும் மறுக்கப்பட்டவராவர், அவர்களை எதிரிகளாக்கிச் சொல்ல வேண்டா; தமது மதத்தை நிலை நிறுத்தவே, மற்றைய மதங்கள் மறுக்கப் பட்டனவாம். 3நெற்செய்யப் புல்தேயுமா போலே, தாமாகவே மறுக்கப்பட்டவர் ஆவர்கள் அவர்கள். ‘உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே 4பிராப்பிய வேஷம் சொல்லிற்று; ‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று; ‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது; ‘தொழுது எழு’ என்கையாலே 5பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று; ‘என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக்கரணத்தையுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.

 

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்

வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading