ஸ்ரீ வசன பூஷணம்-சூர்ணிகை -366/367/368/369/370/371/372/373/374/375/376/377/378/379/380—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

ஆறு பிரகரணங்களில் ஐந்தாவதான–பகவந் நிர்ஹேதுக க்ருபா பிரபாவ -பிரகரணம் –

இனி ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது  பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது-366- என்று துடங்கி -நிவர்த்ய ஞானம் பய ஹேது  நிவர்த்தக ஞானம் அபய ஹேது -406–என்னும் அளவாக இவ் வதிகாரிக்கு அநாதி கால ஆர்ஜித  கர்ம விநாச காரணமாய் அத்வேஷம் முதலாக  ப்ராப்தி பர்யந்தமாக நடுவாக  உள்ள பேறுகளுக்கு எல்லாம் பிரதான ஹேதுவான
பகவந் நிர்ஹேதுக க்ருபா வைபவம் சொல்லப் படுகிறது –

சம்சாரிகள் தோஷமும் ஸ்வ தோஷம் என்று நினைக்கை முதலாக  ப்ரசக்த அனு ப்ரசக்தமாய் வந்த அர்த்த விசேஷங்களை பிரதிபாதித்துத் தலைக் கட்டின அநந்தரம் கீழ்
ஸ்வ தோஷத்துக்கும் இத்யாதி வாக்யத்தாலே இவனுக்கு அநவரத கர்தவ்யமாய் சொன்ன
ஸ்வ தோஷ  பகவத் பாகவத குண அனுசந்தானங்களில்  வைத்துக் கொண்டு பாகவத குண அனுசந்தானம் பிரதிபாத்ய அம்சத்துக்கு உபயுக்தம் அல்லாமையால் அத்தை விட்டு
அதுக்கு உபயுக்தமான ஸ்வ தோஷ  பகவத் குண அனுசந்தானங்களை அங்கீகரித்துக் கொண்டு அவை இரண்டுக்கும் பிரயோஜனம் இன்னது என்கிறார் மேல் –

சூரணை -366
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –

ஸ்வ தோஷம் ஆவது –
அநாத்ம குணாதிகளும்-அதுக்கு மூலமாய் -அநாதி காலமே பிடித்து காட்பேறிக் கிடக்கிற
அவித்யாதிகளும் -ஏதத் அனுசந்தானம் இது இதுவாக இன்னம் சம்ஸ்ரணம் வரில் செய்வது என் என்னும் பயத்துக்கு ஹேது –

பகவத் குணம் ஆவது -இத் தோஷத்தை பார்த்து இகழாமல் அங்கீகரித்து -இவற்றைப் பொறுத்து -இவ் வாத்மாவை திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுகைக்கு  உடலான அவனுடைய தயா ஷாந்தியாதிகள் –ஏதத் அனுசந்தானம் அநாதி காலம் சம்சார ஹேதுவாய் போந்த ஸ்வ தோஷ பலத்தை பார்த்து – இன்னமும் அப்படியாகில் செய்வது என் என்கிற பயத்தினுடைய நிவ்ருத்திக்கு ஹேது என்கை-

துரந்தஸ்யா அநாதே அபரகரநீயஸ்ய மகாதோ நிஹீந ஆசாரோ அஹம் நிரூபசு அஸூபஸ் யாஸ்பதமபி– தயா சிந்தோ -பந்தோ- நிரவதிகவ வாத்சல்ய ஜலதே தவ ஸ்மாரம் ஸ்மாரம் குண கணம் இதீ இச்சாமி கதாபி – ஸ்தோத்ர ரத்னம்- என்னக் கடவது -இறே-

——————————————————

இப்படி இவ்விடத்திலே -பய அபய ஹேதுக்களான-சகல தோஷ -சகல குணங்களையும் -சேரச் சொல்லி இருக்கச் செய்தே –
இழவுக்கு அடி கர்மம் -பேற்றுக்கு அடி கிருபை-377 -என்றும் -கர்ம பலமும் போலே க்ருபா பலமும் அனுபவித்தே அற  வேணும் -406-என்றும்
கர்மத்தையும் கிருபையுமே இழவு பேறுகளுக்கு ஹேதுவாய் சொல்லிக் கொண்டு போய் -பய ஹேது கர்மம் -அபய ஹேது காருண்யம்-என்று நிகமித்தது –
இவை எல்லாவற்றிலும் இவனுக்கு -சம்சார மோஷங்களுக்கு பிரதான ஹேதுக்களவை ஆகையாலே -இவை இரண்டையும் பின் செல்லும் –
மற்றுள்ளவையும் இவை புக்கிடத்தே தானே வந்து விடும் இறே –
இங்கன் அன்றிக்கே –
அவன் படியை நினைத்து பயமும் –
தன் படியை நினைத்து அபயமுமாம் அளவில் அறிவிலித் தனமே பலிக்கும் -என்கிறார் –

சூரணை-367-

பய அபயங்கள் இரண்டும் மாறாடில்
அஜ்ஞதையே சித்திக்கும் –

அதாவது –
கீழ்ச் சொன்னபடி அன்றிகே –
அநாதி காலம் தனக்கு பரதந்த்ரமான ஆத்ம வஸ்துவை -கர்ம வ்யாஜத்தாலே சம்சரித்துப் போனவன் அன்றோ –நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆனவன் இன்னமும் சம்சரிப்பிக்கில் செய்வது என் -என்று அவன் படியை நினைத்து பயப்படுகையும் –
முன் போல் அன்றிக்கே –
நமக்கு இப்போது ஆத்ம குணங்கள் உண்டாகையாலே -பேற்றில் கண் அழிவு இல்லை என்று –தன் படியை நினைத்து பயம்  கெடுகையாம் அளவில் –

தான் தமக்கு நாசகன் என்று பயப்படுகையும் –
ஈஸ்வரன் ரஷகன் என்று பயம் கெடுகையும் ஆகிற –
ஜ்ஞாத்ருத்வ வேஷம் இல்லாமையாலே -அஜ்ஞத்தையே சித்தித்து விடும் -என்கை –

——————————————————–

அஜ்ஞதையே சித்திக்கும் -என்ற இத்தைத் தள்ளுகைக்காக -ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு ப்ரத்யவஸ்தானம் பண்ணினவர்கள் சங்கையை அனுவதிக்கிறார் –

சூரணை -368-

ஆனால்
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -7-1-
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -11-8-1-
என்கிற பாசுரங்களுக்கு
அடி என் -என்னில் –

அதாவது –
இப்படி ஆகில் -தத்வ வித அக்ரேசரான ஆழ்வார்கள் –
உள் நிலாவிய இவை ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -என்றும் –
காட்டிப் படுப்பாயோ -என்கிற படியே
விஷயங்களைக் காணில் முடியும்படியான என்னை -உள்ளே நிரந்தர வாசம் பண்ணுகையாலே ஆந்த்ர சத்ருக்களாய் இருக்கிற இந்திரியங்கள் ஐந்தினாலும் நலிவு உண்ணும் படி பண்ணி –
ப்ராப்தமுமாய் போக்யுமுமான உன் திரு வடிகளைக் கிட்டாதபடி யாகவே
சரணாகதனான பின்பும் சம்சாரத்திலே வைத்து நலிய வெண்ணா நின்றாய் என்றும் –

மக்கள் தோற்றக் குழி தோற்றி விப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -என்று
மனுஷ்யர்களுடைய கர்ப்ப ஸ்தானத்திலே என்னுடைய கர்ம அநு குணமாக
இன்னம் சம்சரிப்பிக்கிறாயோ என்று இப்போது இப்போது போயிற்று என்னும்படி 
பய ஸ்தானமான ஆற்றம் கரையிலே வர்த்திக்கிற மரம் போல் உன் ஸ்வாதந்த்ர்யத்தை
நினைத்து அஞ்சா நின்றேன் என்றும் அருளிச் செய்த பாசுரங்களுக்கு நிதானம் என் என்னில் -என்கை-

———————————–

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

சூரணை -369-

பந்த
அனுசந்தானம் –

அதாவது
பேறு இழவுகள் இரண்டும் அவனாலே என்னலாம்  படி நிருபாதிக ரஷகன் ஆனவனோடு
தங்களுக்கு உண்டான சம்பந்தத்தினுடைய அனுசந்தானம் -என்கை –

—————————————

பந்த அனுசந்தானத்தாலே இப்படி தன்னால்  வரும் அவற்றை -அவன் குறையாகச் சொல்லலாமோ என்ன –
ஆம் என்னும் இடத்தை -ச த்ருஷ்டாந்தமாக -அருளிச் செய்கிறார் –

சூரணை -370-

பிரஜை தெருவிலே இடறி –
தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –
விலக்காது ஒழிந்தால் –
அப்படிச் சொல்லாம் -இறே –

அதாவது –
க்ரீடார்தமாக -தெருவிலே ஓடித் திரிகிற பிரஜை -அங்கே இடறி கால் நொந்தவாறே –
அழுது கொண்டு அகத்திலே வந்து -தனக்கு இவ் வேதனை வந்தது -தாயாலே யாக நினைத்து அவள் முதுகிலே குத்துமா போலே -ஒரு உபாதி  ப்ரயுக்தம் அல்லாமையாலே –
ஒழிக்க ஒழியாத பந்தத்தை உடையவனுமாய் -இச் சேதனனுடைய கர்மத்தோடு
பிரகிருதி ப்ராக்ருதங்களோடு வாசி அற நலிவை தவிர்க்கைக்கு சக்தனுமாய் இருக்கிறவன்
நலிவு பட விட்டு விலக்காது ஒழிந்தால் -அவன் இவற்றை இட்டு நலிவிக்கிறான் என்னலாம் -இறே

———————————————–

விலக்காத மாத்ரம் கொண்டு -அவன் செய்தான் என்னலாமோ -என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -371-

பிரஜையை கிணற்றின் கரையின்
நின்றும் வாங்காது ஒழிந்தால் –
தாயே தள்ளினாள் என்னக் கடவது  -இறே –

அதாவது –
கிணற்றின் கரையிலே பிரஜை இருக்கிற படியைக் கண்ட மாதாவானவள் –
அப்பொழுது ஓடிச் சென்று -கிணற்றின் கரையின் நின்றும்  வாங்காது ஒழிந்தால் –
கிணற்றிலே பிரஜை விழுந்த அளவில் -தாய் அப்போதே சென்று எடுத்தாள் ஆகில் –
இப் ப்ரஜை விழுமோ -கிணற்றின் கரையில்  இருப்பை -இவள் அனுமதி பண்ணி இருக்கையால் அன்றோ விழுந்தது -ஆன பின்பு -இவள் அன்றோ -தள்ளினாள் என்று லோகம் சொல்லக் கடவது இறே -என்கை –

———————————————

ஆனால் -அப்ரதிஷித்தம் அநுமதம்-என்கிற ந்யாயத்தாலே -விலக்காமையாவது-அனுமதியாய் யற்ற பின்பு -அனுமதியோ பின்னை இழவுக்கு ஹேது என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை -372-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு
ஹேது அல்லாதாப் போலே –
அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –

அதாவது –
ரஷ்ய பூதனான இவனுடைய ரஷ்யத்வ அனுமதி -அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஆகையாலே -பகவல் லாபத்துக்கு ஹேது அல்லாதவோ பாதி – ரஷகனான அவனுடைய  சம்சார அனுமதியும் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர மரியாதை ஜீவிக்கைக்காக க்ரமேண அங்கீகரிப்போம் என்று இவன் -ருசி பார்த்து இருக்கிற இருப்பாகையாலே -தத் அலாபத்துக்கு ஹேது அன்று -என்கை –

———————————————

இவ் வனுமதி த்வயம் பின்னை ஆவது என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -373-

இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –

இருவருக்கும் ஸ்வரூபம்-என்றது -பர தந்த்ரனாயும்- ஸ்வதந்த்ரனாயும் இருக்கிற இருவருக்கும் ஸ்வ அசாதாரண ஆகாரம் என்றபடி –

அதாவது –பரதந்த்ரனான இவனுக்கு ஸ்வ ரஷ்யத்வ அனுமதி -ஸ்வரூப அதிரேகி அல்லாமையாலே -ஸ்வரூபம் –

ஸ்வ தந்த்ரனான அவனுக்கு ஸ்வ ரஷ்ய வஸ்து ரஷணத்தில் ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர அநு குண நிர்வாகண அர்த்தமான சம்சார அனுமதி -ஸ்வாதந்த்ர்ய  வேஷம் ஆகையாலே -ஸ்வரூபம் -என்கை –

————————————-

ஆனால் இழவு பேறுகளுக்கு அடி எவை என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -374-

இழவுக்கு அடி கர்மம் –
பேற்றுக்கு அடி கிருபை –

அதாவது –
பகவத் விஷயத்தை அநாதி காலம் இழக்கைக்கு  ஹேது – முன் செய்த முழு வினை -1-4-2–என்னும் படி அநாதி கால சஞ்சிதமான இவனுடைய கர்மம் –

இப்படி இழந்து கிடந்தவன் அவ் விஷயத்தைப் பெருகைக்கு ஹேது -விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்னும் படி இரு கரையும் அழியப் பெருகும் -பகவத் கிருபை -என்கை –

————————————–

இங்கன் அன்றிகே -மாறிச் சொல்லும் அளவில் வரும் அனர்ததத்தை அருளிச் செய்கிறார் மேல்-

சூரணை -375-

மற்றைப்படி சொல்லில்
இழவுக்கு உறுப்பாம் –

அதாவது –
இப்படி அன்றிக்கே -பய அபயங்கள் இரண்டும் மாறாடில்–367-என்கிற இடத்தில் -போலே –
இழவுக்கு அடி ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் –
பேற்றுக்கு அடி சேதன சத் குணம் -என்கிற
இழவு பேறுகளுக்கு ஹேதுவை மாற்றிச் சொல்லில் –
ஈஸ்வரன் கை வாங்குகையாலே-அவன் திருவடிகளைப் பெறாமல் இழந்து போகைக்கு உடலாம் -என்கை –

அதவா –
மற்றைப்படி -இத்யாதிக்கு –
இழவுக்கு அடி சேதன கர்மம் –
பேற்றுக்கு அடி ஈஸ்வர கிருபை -என்று
இழவு இவனாலும் -பேறு அவனாலுமாகச் சொன்னபடி அன்றிக்கே -இழவு பேறுகள் இரண்டுக்கும் அடி -ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமே என்று அநாதி காலம் இழந்ததுக்கும் அடி அவனாகச் சொல்லில் -அவன் கை வாங்குகையாலே -ஒரு காலும் அவனைப் பெறாமே-இழந்து போகைக்கு உடலாய் விடும் -என்னவுமாம் –

—————————————

இப்படி சொல்லும் அளவில் ஈஸ்வரன் கை வாங்கும் என்னும் அத்தை – லௌகிக நியாயத்தை உபஜீவித்து கொண்டு தர்சிப்பிக்கிறார்

சூரணை -376-

எடுக்க நினைக்கிறவனை தள்ளினாய் என்கை –
எடாமைக்கு உறுப்பு-இறே – –

அதாவது –
ஆழ்ந்த கிணற்றில் தன் கர்ம அநு குணமாக அநவதாநத்தாலே விழுந்தவனை –
அருகு நின்றான் ஒரு க்ருபனானவன் எடுப்பதாக யத்தனிக்கும் அளவில் –
தான் விழுகிற போது-அவன் ஆசன்னனானவன்  என்கிற மாத்ரத்தைக் கொண்டு –
அவன் தன்னைத் தள்ளினனாக நினைத்து -இக் கிணற்றில் என்னைத் தள்ளினாயும்  நீ அன்றோ -என்றால்-நான் செய்யாத கார்யத்தை இவன் சொல்வதே-என்று -சீற்றம் எழுந்து இருந்து -எடாமல் கை வாங்குகைக்கு உறுப்பு ஆம் போலே –

ஸ்வ கர்மத்தாலே சம்சாரம் ஆகிற  படு குழியில் விழுந்து கிடக்கிற தன்னை –
எடுக்க நினைக்கிற க்ருபவானனான ஈஸ்வரனை –
இத்தனை காலமும் என்னை சம்சாரத்தில் தள்ளி விட்டு வைத்தாயும் நீயே-என்றால்-
சீறிக் கை வாங்கி பட்டது படுகின்றான் என்று விடுகைக்கு உறுப்பாம் இறே -என்கை –

————————————————-

அப்படிச் சொல்லுகை ஈஸ்வரனுக்கு சீற்றத்துக்கு உடல் என்னும் இது லௌகிக ந்யாயம் கொண்டு சொல்ல வேணுமோ -தத்வ தர்சிகளான-திருமங்கை ஆழ்வார் -பூர்வோக்திக்க அனந்தரத்திலே – தாமே அருளிச் செய்தார் இறே -என்கிறார் –

சூரணை -377-

சீற்றம் உள என்ற
அனந்தரத்திலே-
இவ் அர்த்தத்தை –
தாமே அருளி செய்தார் -இறே

அதாவது –
இன்னம் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று –
ஈஸ்வரன் தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே சம்சரிப்பிக்கிறான் ஆக சொன்ன இது –
கர்ம அநு குணமாக சம்சரிக்கிற ஆத்மாவை -சம்சாரத்தில் நின்று எடுக்கைக்கு கிருஷி பண்ணிப் போரும் அவன் திரு உள்ளம் சீறுகைக்கு உடல் என்று நினைத்து -கீழ் விண்ணப்பம் செய்த வார்த்தையாலே திரு உள்ளத்துக்கு சீற்றம் உண்டு என்ன
முதல் வார்த்தைக்கு அநந்தரம் -இழவுக்கு அடி அவனாக சொல்லுகை -நிக்ரஹ ஜனகம் -என்னும் இவ் வர்த்தத்தை -முன்பு அப்படி அருளிச் செய்த தாமே – அருளிச் செய்தார்  -என்கை

—————————————–

சீற்றம் உள -என்ற பின்பும்
ஆகிலும் செப்புவன் -என்று முன்பு சொன்னது -தன்னையே சொல்லுகைக்கு
ஹேதுவை -ப்ரஸ்ன உத்தர ரூபேண-பிரகாசிப்பிகிறார் –

சூரணை -378-

சீற்றம் உண்டு என்று -அறிந்தால்
சொல்லும்படி என் -என்னில் –
அருளும் –
அர்த்தியும் –
அநந்ய கதித்வமும்
சொல்லப் பண்ணும் –

அதாவது –
கீழ்ச் சொன்ன இத்தால் ஈஸ்வரன் திரு உள்ளத்துக்குச் சீற்றம் உண்டு என்று அறிந்தால் –
பின்னையும் இவ் வர்த்தத்தைக் கூசாமல் திரு முன்பே சொல்லும்படி எங்கனே -என்னில் –
அவன் சீற்றத்தை தன் சந்நிதியில் ஜீவிக்க ஒட்டாத -பர துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபையும் –
உன் சீற்றம் கண்டு அஞ்சி வாய் மூட ஒட்டாதபடி கரை இழந்து செல்லுகிற சம்சார ஆர்த்தியும் 
சீறி எடுத்து எறியிலும் வேறு புகல் இல்லாமையாகிற -அநந்ய கதித்வமும் –
சொல்லும்படி பண்ணும் -என்கை –

இத் திரு மொழியிலே-11-8-
அடைய அருளாயே -நினைக்கும் தன் அருளே -6
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -7
தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய் -9-என்று பல இடங்களிலும் அவன் அருளையும் 

ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -1
காற்றத்திடை பட்ட கலவர் மனம் போலே ஆற்ற துளங்கா நிற்பன் -2-(கலவர் -மரக்கலத்தில் இருப்பவர் -)
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் தாங்காது உள்ளம் தள்ளும் -3
இருபாடு எரி கொள்ளியின் உள் எறும்பு போல் உருகா நிற்கும் என் உள்ளம் -4-
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் -5-என்றும்- பல த்ருஷ்டாந்தகளாலும் தம்முடைய-
ஆர்த்தி
அநந்ய கதித்வங்களையும் அருளிச் செய்தார்-இறே-

——————————————-

இப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டானாலும் அவனுக்குச் சீற்றம் பிறக்கும் படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -379-

சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்
ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே

அதாவது சீறின காலத்திலும் சீற்றத்துக்கு விஷயமானவர்களுக்குச் சென்று திருவடிகளைப் பூண்டு கொள்ளலாம் படி பரம க்ருபாவானாய் இருப்பான் ஒருவனைப் பெற்றால் நினைத்தபடி எல்லாம் சொல்லலாம் இறே என்கை –

———————————————-

சீறின தசையிலும் காலைக் கட்டிக் கொள்ளலாய் இருக்கும்  படிக்கு பிரமாணம்  காட்டுகிறார்

சூரணை -380-

க்ருபயா பர்ய பாலயத் –
அரி சினத்தால் –

அதாவது –
சதம் நிபதி தம் பூமவ் சரண்யச் சரணாகதம் வதார்ஹமபி ககுஸ்த்ச  க்ருபயா பர்யபாலயத் –ஸூந்தர காண்டம் -38- –என்று அபராதத்தை தீரக் கழியச் செய்து –
ப்ரஹ்மாஸ்ரத்துக்கு இலக்காய்-புறம் புகல் அற்றவாறே வந்து -திருவடிகளிலே விழுந்த காகத்தை – கிருபையாலே ரஷித்தார் ஆகையாலும் –
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்னருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -என்று –
பெருகைக்கு வருந்தி -வரம் கிடந்தது -பெற்ற தாயானவள் -இது செய்த தீங்கைக் கண்டு –
எறிந்து பொகட வேணும் சீற்றத்தை உடையவளாய் கொண்டு -கிட்ட வர ஒட்டாமல் தள்ளி விட்டாலும் -வேறு போக்கடி அற்று
சீறி எடுத்து எறிகிற அவளுடைய முகத்து இரக்கத்தையே நினைத்து -அழுது காலைத் தழுவிக் கொள்ளும் குழவி போலே –
என் அபராதத்தைக் கண்டு அருகு வராதபடி தேவரீர் தள்ளி விடப் பார்க்கிலும் –
திருவடிகள் அல்லது வேறு போக்கடி அற்று இருந்தேன் என்று -ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்கையாலும் –
சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான் ஒருவன் -என்னும் இடம் சித்தம் -என்கை –

இப்படி ஆழ்வார் அருளிச் செய்த இவ் வர்த்தத்தை –
நிராஸ கஸ்யாபி நதாவதுத் சஹே மகேசஹாதும்  தவ பாத பங்கஜம்
ருஷா நிரஸ்தோசபி ஸிஸூஸ் தநந்த்தயோ நஜாதுமாதுச் சரணவ் ஜிஹாசதி -என்று ஆளவந்தாரும் அருளிச் செய்தார் -இறே

ஆக
இவ்வளவும்
பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞ்ஞதையே சித்திக்கும் -என்கிறதின் மேல் வந்த சங்கா பரிகாரங்கள் பண்ணப் பட்டது –

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||-ஶ்லோகம் 26 –ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.

த்ருதீய  பிரகரணம் சம்பூர்ணம் –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading