இப்படி பிரஸ்துதையான பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –இது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் -கீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -142-
இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று -(உம்மைத் தொகை உபாயாந்தரங்களைப் போல் உபாயம் அன்று )
அதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று -அவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –
அதாவது –
உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்கக் கண்டு இருக்க பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் – அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல் லாப சாதனம் ஆகாது என்றபடி
————————————————-
இனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –
சூரணை-143-
அவன் இவனைப் பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —
அதாவது –
ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் – பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
சித பரம் சில்லாபே பிரபத்திரபிநோ பதி விபர்யே து நைவாஸ்ய பிரதிஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–
——————————————-
இப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன -அருளிச் செய்கிறார் –இவை என்று தொடங்கி
சூரணை -144-
இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –
———————————————
அவர்கள் தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -145-
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –
அதாவது –
பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –
தன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-
ஏபிஸ் ச சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –
வழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்
திருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –
சரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமை யாய் விட்டது –
ஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள் தாமே வந்து
அங்கீகரிக்கப் பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே பாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –
யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-
ஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –
——————————————–
இவன் பண்ணும் பிரபதனம் -சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது –
அபராத கோடி கடிதமாம் என்னும் இடம் அருளிச் செய்தார் கீழ் –
இது தான் இவனுடைய பூர்வ விருத்தத்தை பார்த்தாலும் -அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னும் இடத்தை பிரகாசிப்பிக்கைகாக -பாஷ்ய காரருடைய அனுஷ்டான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -146-
சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான
பிரபத்தி தானும் –
அபராத கோடி யிலேயாய்
ஷாமணம் பண்ண வேண்டும் படி
நில்லா நின்றது இறே —
அதாவது –
அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -என்கிறபடியே -அபராதங்களுக்கு எல்லாம் கொள்கலமாய் இருக்கிற இச் சேதனன் பிரபத்தி பண்ணவே –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்னும் படி இவன் அளவில் சர்வேஸ்வரன் திரு உள்ளம் பிரசன்னமாய் விடுகையாலே – சர்வ அபராதங்களுக்கும் பிராயச் சித்தமாய் இறே பிரபத்தி தான் இருப்பது –
இப்படி இருந்துள்ள பிரபத்தியை -த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் பிரபத்யே -என்று பண்ணி அருளிய பாஷ்ய காரருக்கு -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்த வாறே -அது தானும் அபராத கோடி யிலேயாய் -த்வமேவ மாதாச -என்று தொடங்கி -இத் தலையில் அபராதத்தை பொறுக்கைக்கு உறுப்பான பந்த விசேஷங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து கொண்டு –
தஸ்மாத் பிரணம்ய-இத்யாதியாலே இப்படி திரு முன்பு கூசாமல் வந்து நின்று பிரபத்தி பண்ணின இவ் வபராதத்தை பொறுத்து அருள வேணும் என்று
ஷாமணம் பண்ண வேண்டும் படி நில்லா நின்றது இறே என்கை –
ஆகையால் இவ் வழியாலும் இது அபராத கோடி கடிதமாய் இருக்கும் -என்கை –
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணி பின்பு ஒரு நாளிலே ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும் –
ரிபூணாபி வத்சல –
யதி வா ராவணஸ் ஸ்வயம் -என்று
இருக்கும் ஈஸ்வர ஹ்ருதயத்தை பார்த்தால் அவன் கைக் கொள்ளக் ஒரு குறை இல்லை –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -தன் பூர்வ விருத்தத்தை உணர்ந்தால் இவன் இத்தை அபராதமாகவே நினைத்து ஷாமணம் பண்ண வேண்டும் படியாய் இறே இருப்பது –
——————————————-
இவன் பண்ணும் பிரபத்தி -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்தால் – அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னுமத்தை -திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் -மேல் –
சூரணை -147-
நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –
இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –
அதாவது –
நெடும்காலம் பர்த்தாவோடு ஓட்டற்று -பர புருஷ காமிநியாய் -தந் நிக்ரஹ பாத்ரமாய் -போந்தாள் ஒரு பார்யை -இப்படி பட்ட நாம் அவன் சந்நிதியிலே கூசாமல் சென்று நிற்கும் படி என் -என்கிற லஜ்ஜையும் -இத்தனை காலமும் நாம் செய்து திரிந்தது எல்லாம் கண்டு இருக்கிற இவன் -இப்போது நம்மை வந்து இப்படி நம்மை அபேஷிப்பதே என்று தண்டிக்கில் செய்வது என் -என்னும் பயமும் இன்றிக்கே –
அவன் முன்னே சென்று நின்று என்னை அங்கீ கரிக்க வேணும் என்று அபேஷிக்கும் அளவில் – எத்தனை அபராதம் உண்டு –அப்படியே இருப்பது ஓன்று இறே –
பகவத் அனந்யார்ஹனாய் வைத்து அநாதி காலம் அவனுடன் பற்று இன்றிக்கே அந்ய பரனாய் போந்த இவன் – ஸ்வ பூர்வ விருத்த அனுசந்தத்தால் வரும் லஜ்ஜையும் –
ஸ்வ தந்த்ரனான அவன் தண்டிக்கில் செய்வது என் -என்ற பயமும் இன்றிக்கே
தத் சந்ந்நிதியிலே சென்று நின்று தன்னை அங்கீகரிக்க வேணும் என்று பண்ணுகிற சரண வரணம்-என்கை –
ஆக இவ்வளவும் ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும்-பரகத ஸ்வீகார உபாயத்வமும் -பிரதி பாதிக்க பட்டது –
———————————————
இனி -இவன் ஸ்வீகாரம் கண்டு இரங்கி -அவன் இவனுக்கு பர தந்த்ரன் ஆவதிலும் –
தந் ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பரதந்த்ரன் ஆவதே பிரபலம் என்கிறார்-
சூரணை -148-
கிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்
ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –
அதாவது –
ஆர்த்தராய் -அநந்ய சரண்யராய் தன் திரு அடிகளில் வந்து சரணம் புகுந்தவர் அளவில் –
தனக்கு உண்டான கிருபையாலே -அவர்கள் சொன்னதே செய்யும்படி பரதந்த்ரன் ஆகையும் பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன் நிரந்குச ஸ்வாதந்த்ரத்தால் நிர்ஹேதுகமாக சிலரை அங்கீகரித்து -தன்னை அவர்கள் இட்ட வழக்காக்கி வைக்கையும்-
இரண்டும் ஈஸ்வரனுக்கு உள்ளது ஓன்று –
இதில் முற்பட்டது -ஒரோ திசைகளிலே ஸ்வாதந்த்ர்ய நிருத்தமாய் விபலிக்கவும் கூடும் –
பிற்பட்டது -அப்ரதிகதம் ஆகையாலே ஒருக்காலும் கண் அழிவு இல்லை –
ஆகையால் அதிலும் காட்டிலும் இது பிரபலம் என்கை –
————————————————-
இவ் அர்த்தம் தான் வேத அபிமதம் என்கிறார் மேல் –
சூரணை -149-
இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-
இவ் அர்த்தம் -என்கிறது -கீழ் பிரபலமாக சொல்லப் பட்ட பரகத ஸ்வீகாரத்தை –
வேதபுருஷன் இத்தை அபேஷித்தான் -என்றது –
நாய மாதமா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ஸ்ருதேன- யமேவைஷ வ்ருணத தேன லப்ய தஸ்யைஷா ஆத்மா விவ்ருனதே தநூம் ஸ்வாம்-என்று கட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –
அஸக்ருத் கீர்த்தனம் அபேஷா கார்யம் இறே –
——————————————-
இத்தலையில் அபேஷை இன்றிக்கே இருக்க -இவ் விஷயீகாரம் சித்திக்கப் பெற்றவர்கள் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -150-
அபேஷா நிரபேஷமாக
திருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இது உண்டாயிற்று –
அதாவது –
தம் தாம் பக்கல் ( இருவர் உண்டே என்பதால் பன்மை )அபேஷை இன்றிக்கே இருக்கச் செய்தே –
பம்பா தீரத்திலும் –
கங்கா கூலத்திலும் –
பெருமாள் தாமே சென்று அங்கீகரிக்கப் பெற்ற திரு வடிக்கும் ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இந்த பரகத ஸ்வீகாரம் உண்டாய்த்து -என்கை –
————————————-
இப்படி ஸ்வதந்த்ரனானாய் இவர்களை அங்கீகரித்த இடத்திலும் –
தமப்யபாஷ ஸௌமித்ரே ஸூக்ரீவ ச சிவம் கபிம் -கிஷ்கிந்தா காண்டம் -3 -27 –
மாழை மான் மட நோக்கி வுன் தோழி உம்பி எம்பி பெரிய திரு மொழி -5- 8- 1 என்று
இளைய பெருமாளையும் பிராட்டியையும் முன்னிட்டாப் போலே மற்றும் புருஷகாரத்தை முன்னிட்டு அங்கீகரித்த இடம் காணலாமோ -என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -151-
இவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்-
அபய பிரதாநத்திலும் காணலாம் –
(உம்மைத் தொகையால் கீழ் குகனை பிராட்டி மூலம்- இங்கு லஷ்மண மூலம் திருவடி -ஒன்றுமே எதிர்பார்க்காமல் இருந்தும் அதே ஸ்வா தந்த்ரம் அடியாக இவர்களை வைத்தால் என்றே கொள்ள வேண்டும்)
அதாவது –
இச் சேதனன் தான் ஆஸ்ரயிக்கிற போது புருஷகாரமாக முன்னிடும் அவர்களை
அவனும் அங்கீகரிக்கும் போதும் முன்னிடும் என்னும் இடம் –
திருவடியையும் ஸ்ரீ குகப் பெருமாளையும் அங்கீகரித்த ஸ்தலங்கள் மாத்ரம் அன்றிக்கே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த ஸ்தலத்திலும் காணலாம் என்கை –
எங்கனே என்னில் –
சோஹம் பருஷி தஸ்தேன தாசவஸ் ச அவமானித த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று சரணம் புகுந்து –
சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயதே மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்-என்று நின்ற விபீஷண ஆழ்வானை அபய பிரதான பூர்வகமாக -அங்கீகரிக்கிற இடத்தில் – ஆனையேநம் ஸ்வயம் -என்று முதலிகளுக்கு எல்லாம் மூல பூதரான மகா ராஜரை முன்னிட்டு இறே அங்கீகரித்தது –
திருவடியையும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் அங்கீகரித்த இடத்தில் பிராட்டி சந்நிதிஹை
அல்லாமையாலே அவளை முன்னிட்டமை தோற்றிற்று இல்லை ஆகிலும் –
பிராட்டி இலங்கைக்கு எழுந்து அருளுகிற போது மகா ராஜரும் திருவடியும் நிற்கிற இடத்திலே – திரு ஆபரணங்களைப் பொகட்டு கடாஷித்து வைத்துப் போகையாலும்-
இலங்கையிலே எழுந்து அருளின போது ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பெருமாள் திருவடிகளிலே வரும்படி கடாஷித்து அருளுகையாலும் –
பெருமாள் இருவரையும் அங்கீகரிக்கும் இடத்தில் பிராட்டியை முன்னிட்டு அங்கீகரித்தார் என்றே கொள்ள வேண்டும் –பரதந்த்ரையான அவளுக்கு இத் தலையில் நினைவு ஒழிய தனித்தொரு பிரவ்ருத்தி கூடாது இறே –
ஆகையால் இறே –
பரகத ஸ்வீகாரம் சொல்லுகிற இடத்திலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த அத்தையும் சஹ படித்தது
———————————————–
இவன் நிருபாதிக சேஷ பூதனாய் -அவன் நிருபாதிக சேஷி பூதனாய் இருக்கையாலே-அவ்யவதாநேன , ஆஸ்ரயிக்கவும் அங்கீ கரிக்கவும் அமைந்து இருக்க –
இப்படி இருவரும் புருஷ காரத்தை முன் இடுகிறது எதுக்கு என்ன அருளிச் செய்கிறார்– இருவர் என்று தொடங்கி–
சூரணை –152
இருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –
சேதனனுக்கு குற்றம் ஆவது -அநாதி காலம் அவன் பக்கல் விமுகனாய்,அந்ய விஷய பிரவணனாய்-ததாஜ்ஞா அதி லங்கமே பண்ணி கூடு பூரித்து வைத்த அபராதம்
ஈஸ்வரனுக்கு குற்றம் ஆவது –அவர்ஜநீயமான சம்பந்தம் உண்டாய் இருக்க –
அபராததையே கணக்கிட்டு ,அநாதி காலம் இவனை அகல அடித்து இருந்தது இது
இவன் தன் குற்றத்தை சமிப்பிக்கையாவது –இத்தை பார்த்து ஈஸ்வரன் சீறாத படி பண்ணுகை-
அவன் தன் குற்றத்தை சமிப்பிக்கை யாவது -இத்தை நினைத்து சேதனன் வெருவாத படி பண்ணுகை
———————————————-
இவ்வளவே அன்றி -இன்னும் இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார் -ஸ்வரூப இத்யாதியால்–
சூரணை-153 —
ஸ்வரூப சித்தியும் அத்தாலே –
ஸ்வரூபம் ஆவது- இவனுக்கு ததீய பார தந்த்ர்யம் -அவனுக்கு ஆஸ்ரித பாரதந்தர்யம் -தேவும் தன்னையும் என்று-ஆஸ்ரித பாரதந்தர்த்தை இறே-இவனுக்கு தானான தன்மையாக ஆழ்வார் அருளிச் செய்தது –
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து-
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என்-
பாவம் தனையும் பாற கைத்து எமர் எழ ஏழு பிறப்பும்-
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே-திரு வாய்மொழி -2-7-4-
இவை இரண்டும் இருவருக்கும் சித்திப்பது , புருஷகார புரஸ் கரணத்தாலே என்கை–
—————————————
கீழே ஸ்வரூபம் என்று சொன்னதை உபபாதிகிறார்-
சூரணை-154–
ஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—
அதாவது சேதனனுக்கு இவ் (பிராட்டி)விஷயத்தில் பாரதந்த்ர்யம் ததீயத்வ பிரயுக்தம் ஆகையாலே –ஒவ்பாதிககுமாய் – அவ் வுபாதி தான் நித்யம் ஆகையாலே ,நிருபாதிக பகவத் பாரதந்த்ர்யதோ பாதி-நித்யமுமாய் இருக்கும் —
ஈஸ்வரனுக்கு இவ் விஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆஸ்ரித்வ பிரயுக்தம் ஆகையாலே ஒவ்பாதிகமமாய்–அவ் வுபாதி நித்யம் ஆகையாலே அது தானும் நித்யமுமாய் இருக்கை என்கை–
இருவருக்கும் உண்டு என்னாதே- உண்டு இறே – என்றது இவ் வர்த்தத்திலே பிரமாண பிரசித்தியை- தோற்று விக்கைகாக-
ஒவ்பாதிகம்-காரணத்தின் அடிப் படையில்-
———————————————–
இவ்வளவு இன்றி இன்னும் ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார்-
சூரணை-155–
அநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —
அநித்தியமான பாரதந்த்ர்யம் ஆவது கர்ம பார தந்த்ர்யம்–
அதில் சேதனனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது-அவஸ்யம் அனு போக்தவ்யங்களான சுப அசுப கர்மங்களின் வசத்தில் இழுப்புண்டு சம்சரிக்கை–
ஈஸ்வரனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது –தான் செய்த கர்மம் தான் அனுபவிக்கிறான் ஆகில் நாம் செய்வது என் என்று இவன் செய்த கர்மத்தையே பிரதானம் ஆக்கி அதுக்கு ஈடாக நிர்வஹித்து போருகை–
இது நடப்பது -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி-என்னும் அளவும் ஆகையாலே இத்தை அநித்தியம் என்கிறது .-
இவை புருஷ கார புரஸ் கரணத்தாலே குலைகை ஆவது –இவன் முன்னிட்டும் அளவில் அத் தலையைத் திருத்தியும் ,அவன் முன்னிடும் அளவில் இத் தலையைத் திருத்தியும்
இரண்டு தலையும் ரஷ்ய ரஷக பாவேன சேரும் படி பண்ணுகையாலே இவை தன்னடையே நிவ்ருத்தம் ஆகை-
——————————————————-
அநாதி கால ஸ்வதந்த்ரனாய் யாதானும் பற்றி நீங்கி திரிந்தவன் இன்று இறே ஆபிமுக்யம் பண்ணிற்று பிரகிருதியோடு இருக்கையாலே துர் வாசனை மேல் இட்டு ஆஸ்ரயண அங்கீ காரங்களாலே உத்பூதமான இந்த ரஷ்ய ரஷக பந்தத்தை இல்லை செய்து -பழைய படியே போக பார்க்குதல்- நிரந்குச ஸ்வதந்த்ரனாய் கர்ம அனுகுணமாக இவனை லீலையிலே அநாதி காலம் விநியோகம் கொண்டு போந்த ஈஸ்வரன் தான் இப் பந்தத்தை இல்லை செய்து முன்பு போலே இவனை கர்ம அனுகுணமாக நிர்வகிக்கப் பார்க்குதல் செய்யிலோ என்ன அருளிச் செய்கிறார் -ஸ ஸாஷிகம் என்று தொடங்கி–
சூரணை-156-
ஸ ஸாஷிகம் ஆகையாலே-
இப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்யப் போகாது —
அதாவது இந்த ரஷக ரஷ்ய சம்பந்தம் இரண்டு தலையும் (மட்டுமே)அறிந்ததாக வந்தது அன்றிக்கே -புருஷ கார ரூப சாஷி சஹிதமாக வந்தது ஆகையாலே -இத்தை இருவராலும் அழிய மாறப் போகாது என்கை—
—————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply