இப்படி ஸ்வரூப நாசகமான உபாயாந்தரத்தினுடைய அத்யந்த நிஷித்தத்வத்தை அபியுக்த வசனத்தாலே தர்சிப்பிக்கிறார் –
சூரணை-122-
திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்ப மய கும்ப கத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–என்று-
திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஆகிறார் -சர்வஞ்ஞரான பாஷ்யகாரர் திருவடிகளிலே சேவித்து தத் அபிமத விஷயமாய் -சகல சாஸ்திரங்களும் ஆராய்ந்து அறுதி இட்டு இருக்குமவர் ஆகையாலே -ஆப்த தமராய் இருக்குமவர் அவர் இறே
பணிக்கும் படி என்றது -அருளிச் செய்யும் பிரகாரம் என்ற படி –
மதிரை யாவது -அத்யந்த நிஷித்த த்ரவ்யமாய் – ஸ்வஸ் ஸ்பர்ஸ (பிந்து)-லேசமுள்ள வஸ்துகளையும் தன்னைப் போலே நிஷித்தமாக்குமது இறே –இத்தை அஹங்காரத்துக்கு திருஷ்டாந்தம் ஆக்குகையாலே -அதினுடைய அத்யந்த நிஷித் தத்வமும் – தத் ஸ்பர்ச லேசமுள்ள வஸ்துவும் தத்வத் நிஷித்தம் என்னுமிடமும் தோற்றுகிறது –
சாத கும்ப மய மாவது – ஸூவர்ணம்-தந் மய கும்பம்-என்றது -உள்ளு த்ரவ்யாந்தரமாய் ஸூவர்ணம் மேல் பூச்சாய் இருக்கை-அன்றிக்கே-அது தானே உபாதாநமாகப் பண்ணின குடம் என்றபடி —இத்தால் -பாத்திர சுத்தி சொல்லுகிறது –
தத் கத தீர்த்த ஸலிலம் என்கையாலே -அதுக்குள் இருக்கிற ஜலத்தின் பாவநத்வம் சொல்லுகிறது –அது போலே அஹங்கார மிஸ்ரமான உபாயாந்தரம் என்கையாலே –இங்கும் பாத்திர சுத்தியும் தத் கத பதார்த்த சுத்தியும் சொல்ல வேணும் -அதாவது – ஆத்மா ஞான மய அமல -என்கிற ஸ்வதோ நிர்மலதையலும் -பகவத் அனந்யார்ஹ சேஷதையாலும் பரிசுத்தமாய் இறே-பகவத் ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து இருப்பது –தத் கத பக்தியும் பகவத் ஏக ஆகார தயா பரிசுத்தை இறே -அஹங்காரம் கலசிற்றில்லை ஆகில் ஒரு குறை இல்லையே –
ஆக -இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில் –ஸூவர்ண பாத்திர கதமான தீர்த்த ஜலம்- பாத்திர சுத்தியும் உண்டாய் தானும் பரிசுத்தமாய் இருக்க -ஸூரா பிந்து மிஸ்ரதையாலே நிஷித்தம் ஆம் போலே – ஸ்வதா நிர்மலத்வாதிகளாலே பரிசுத்தமான ஆத்மா வஸ்து கதையாய் -பகவத் ஏக விஷய தயா பரிசுத்தை யாய் இருக்கிற பக்தி தான் -ஸ்வ யத்ன மூலமான அஹங்கார ஸ்பர்சத்தாலே-ஞானிகள் அங்கீகாராதாம் படி நிஷித்தையாய் இருக்கும் என்றது ஆய்த்து –
பணிக்கும் படி -என்றதுக்கு சேர -வாக்யத்தின் முடிவிலே -என்று என்ற இத்தனையும் கூட்டி நிர்வஹிப்பது –
——————————————–
இன்னமும் இதுக்கு பல வி சத்ருசத்வம் என்பதொரு தூஷணம் உண்டு என்கிறார் –
சூரணை -123-
ரத்னத்துக்கு பலகறை போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று –
அதாவது -த்வீபாந்தரந்களிலே சிலர் பல கறையை ஆபரணமாக பூண்கையாலே பலகறையை கொடுத்தவர்களுக்கு ரத்னத்தைக் கொடுப்பார்கள் – உதாரரான ராஜாக்கள் ராஜ்ய அர்த்தியாய் வந்து ஓர் எலுமிச்சம் பழத்தைக் கொடுத்தவனுக்கு ராஜ்யத்தை கொடுப்பார்கள் –இப்படிக் கொடுப்பார்கள் என்றால் -மகார்ககமான ரத்னத்துக்கும் மகா சம்பத்தான ராஜ்யத்துக்கும் -பல கறையும் எலுமிச்சம் பழமும்-சத்ருச சாதனம் அல்லாதா போலே –பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா-பகவத் கீதை -8 -22 -என்றும்
பக்த்யா த்வ அந்ய யா சக்ய -பகவத் கீதை -11 -54 – என்கின்ற படி
பக்தி சபலனாய் -பரம உதாரனான ஈஸ்வரன் இவன் பக்கல் பக்தி மாத்ரமே பற்றாசாக -பரம புருஷார்த்த லஷண மோஷத்தைக் கொடுத்தாலும் -பலத்துக்கு இது சத்ருச சாதனம் அன்று என்கை-
—————————————————–
ஆனால் விசத்ருசமான பலகறையும் எலுமிச்சம் பழத்தையும் -உபகாரமாக் கொடுத்து ரத்னத்தையும் ராஜ்யத்தையும் பெறுகிறவர்கள் தான் பெருகிறபடி என் -என்ன –
அவ்வோபாதி யாகிறது என்ன -அது தனக்கு யோக்யதை இல்லை என்கிறார் –
சூரணை -124-
தான் தரித்திரன் ஆகையாலே
தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –
அதாவது -அங்கு தானும் தனக்கு உரியவனாய் -தனக்கு என்று ஒரு பலகறையும் எலுமிச்சம் பழமும் உண்டாகையாலே அது செய்யலாம் –இங்கு அப்படி இன்றிக்கே –
யானும் நீ என்னுடைமையும் நீயே -திரு வாய் மொழி -2 -2 -9 -என்கிறபடியே ஆத்மா ஆத்மீயங்கள் இரண்டும் அங்குத்தையாய்- தனக்கு என்று ஒன்றும் இல்லாத அகிஞ்சனன் ஆகையாலே -பேற்றுக்கு ஹேதுவாக அவன் விஷயத்தில் தனக்கு சமர்ப்பிக்கல் ஆவது ஒன்றும் இல்லை என்கை –
———————————————
கோ தானத்தில் பிதாவுக்கு புத்திரன் தஷிணை கொடுக்குமா போலே -அவன் தந்தது தன்னை அவனுக்கு கொடுத்தாலோ என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -125-
அவன் தந்த அத்தை கொடுக்கும் இடத்தில் –
அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம் –
அடைவு கெட கொடுக்கில் களவு வெளிப்படும் –
அவன் தந்ததை கொடுக்கை யாவது –விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ருதா பிரமன் ஹஸ்த பாதாதி சம்யுதா -என்றும் –
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும் -சொல்லுகிறபடியே அடியிலே அவன் தந்த கரண களேபரங்களை –மன்மநா பவ மத் பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -என்றும் –
சததம் கீர்த்த யந்தோ மாம் யதந் தச்ச திருட வ்ரதா -என்றும் -சொல்லுகிறபடியே –
த்யான அர்ச்சனா பிரணாமாதிகளாலே தச் சேஷமாம் படி பண்ணுகை-
அடைவிலே கொடுக்கையாவது -ததீயம் என்னும் புத்தியாலே சமர்ப்பிக்கை-
இப்படி கொடுக்கில் -அநு பாயமாம் -என்றது -அவனத்தை அவனுக்கே கொடுத்த இத்தனை ஒழிய -தான் ஓன்று கொடுத்தது ஆகாமையாலே-அது பேற்றுக்கு சாதனம் ஆகாது -என்றபடி –
அடைவு கெட கொடுக்கை யாவது -மதீயம் என்னும் புத்தியாலே சமர்பிக்கை –
இப்படிச் செய்யில் -களவு வெளிப்படும் -என்றது -பகவத் த்ரவ்ய அபஹாரம் பிரகாசிக்கும் என்ற படி –
ராஜ மகேந்தரன் படியை ரஹஸ்யத்தில் களவு கண்டு ஓலக்கத்திலே கொடுக்குமா போலே இறே இவன் கொடை–
————————————————
இன்னமும் உபாயாந்தரதுக்கு ஒரு தூஷணம் சொல்கிறார் –
சூரணை -126-
பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம் –
அதாவது –
பார்யை ஆனவள் ஸ்வயம் பிரயோஜனமான பர்த்ரு போகத்தை ஸ்வ உதர போஷணதுக்கு- (பக்தியை மோக்ஷத்துக்கு ) சாதனம் ஆக்கி கொள்ளும் அளவில் -தன்னை பார்யை யாக விரும்பின பர்த்தாவுக்கும் – தத் பார்யை என்று பேர் இட்டு இருக்கிற தனக்கும் அவத்யம் ஆம் போலே – பகவத் வை லக்ஷண்ய அனுபவத்தாலே விளைந்த போக ரூபை யான பக்தியை
மோஷ சாதனம் ஆக்கும் அளவில் –தன்னை சேஷ பூதனாக விரும்பி தன்னோடு கலந்து பரிமாறின ஈஸ்வரனுக்கும் -தத் சேஷ பூதன் என்று பேர் இட்டு இருக்கிற தனக்கும்
அவத்யமாய் தலை கட்டும் என்கை –
ராத்திரி பர்த்தாவோடே சம்ஸ்லேஷித்து விடிவோறே கைக் கூலி தர வேணும் என்று
வளைக்குமா போலே -பக்தியை உபாயமாகக் கொள்ளுகை-என்று இறே பிள்ளானும் அருளி செய்தது –
—————————————————-
சூரணை -127-
வேதாந்தங்கள் உபாயமாக விதிக்கிறபடி என் என்னில் –
இப்படி ஸ்வரூப விரோதாதி தோஷ துஷ்டமான இத்தை -ஹிதா தனுசாசனம் பண்ணுகிற வேதாந்தங்கள் –
ஒமித் யாத்மானம் த்யாயதா-
ஆத்மா நமேவ லோக முபாசீத –
ஆத்மாவா ஆர் த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவ்ய-என்று
இச் சேதனனுக்கு மோஷ உபாயமாக விதிக்கிறதுக்கு நிதானம் அருளிச் செய்வதாக – தத் ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை அநு வதிக்கிறார்-
——————————————————————
தந் திதானம் தன்னை அருளிச் செய்கிறார் –
சூரணை -128-
ஒவ்ஷத சேவை பண்ணாதவர்களுக்கு-
அபிமத வஸ்துக்களிலே அத்தைக் கலசி இடுவாரை போலே –
ஈஸ்வரனை கலந்து விதிக்கிறது இத்தனை –
அதாவது –அத்யந்த ருக்ணராய் திரியா நிற்கச் செய்தே -அத்தை அவிளம்பேன போக்கும்
ஆப்தமான மகா ஒவ்ஷதத்தை சேவிக்கச் சொன்னால் –அதுக்கு இசையாத பால புத்ராதிகளுக்கு -அவர்கள் ஆசைப் பட்டு விநியோகம் கொள்ளும் வஸ்துகளிலே அந்த ஒவ்ஷதத்தை கலசி இடும் –வத்சலரான மாத்ராதிகளைப் போலே -சீக்ரமாக சம்சார வியாதியை தீர்க்கும் -சித்தோ உபாயமாகிற நச்சு மா மருந்தை-திரு வாய் மொழி -3 -4 -5 –
ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வமாக சேவிக்கச் சொல்லி -முதலிலே உபதேசித்தால் –
அநாதியாய் வருகிற வாசநையால் அதுக்கு இசையாத சேதனரையும் விட மாட்டாமையாலே அவர்களுக்கு அபிமதமான ஸ்வ யத்ன ரூபமாய் இருக்கிற உபாசனத்திலே -தத் அங்கத்வேன- சித்தோ உபாயமான ஈஸ்வரனை கலந்து தாத்ருசமான -உபாசனத்தை அவர்களுக்கு மோஷ உபாயமாக விதிக்கிற இத்தனை என்கை –
த்ருஷ்டாந்தத்தில் அபிமத வஸ்து வியாதிகரம் அன்றியே தந் மிஸ்ரமாக பிரயோகித்த ஒவ்ஷதமே வியாதிகரம் ஆகிறது போலே – த்ருஷ்டாந்தகத்திலும் -உபாசனம் அன்றிக்கே -தந் மிஸ்ரமான ஈஸ்வரனே உபாயம் என்னும் இடம் சம்ப்ரதிபந்தம் –
அவ்யவதாநேன சேவிக்கும் அளவில் – அவிளம்பேன வியாதியை போக்கும் ஒவ்ஷதம் அபிமத வஸ்து மிஸ்ரமான போது-விளம்பேன கார்யகரம் ஆகிறாப் போல் ஆய்த்து -உபாசன மிஸ்ரமான போது-ஈஸ்வரன் விளம்ப பல ப்ரதன் ஆகிறதும் –
————————————————
இனி இப்படி இது தன்னை விதித்தது கீழ் நின்ற நிலையைக் குலைத்து -மேலே கொண்டு போகைக்காக இத்தனை என்கிறார் –
சூரணை -129-
இத்தைப் பிரவிர்ப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –
அதாவது சாஸ்திரம் ஆகிறது -த்ரைகுண்யா விஷயா வேதா -என்கிறபடி
பெற்ற தாய் -அந்த பதிராதிகள் ஆன விகல கரணரோடு படு கரணரோடு வாசி அற வாத்சல்யையாய் இருக்குமா போலே -மாதா பித்ரு சகஸ்ரங்களில் காட்டிலும் வத்சல தரம் ஆகையாலே -தம ப்ரசரோடு -ரஜ பிரசரோடு சத்ய பிரசரோடு வாசி அற -அவர்கள் அபேத பிரவ்ருத்தராய் நசிக்க விட ஷமம் அல்லாமையாலே -அவ்வோருடைய குண அநு குணமாக புருஷார்த்தங்களையும் -தத் சாதனங்களையும் உபதேசித்து -கொள் கொம்பிலே ஏற்றுகைக்கு சுள்ளிக் கால் நட்டுவாரோபாதி -இவ்வோ முகங்களால் தன்னுடைய தாத்பர்யாம்சத்திலே-யாரோபிக்கைக்காக ப்ரவர்த்திக்கிறது ஆகையாலே –
சேயேன விதி தொடங்கி-பிரபத்தி பர்யந்தமாக வரும் அளவும் சேதனர் நின்ற அளவுக்கு ஈடாக உத்தரோத்தர புருஷார்த்த சாதனங்களை ப்ரவர்பித்திப்பித்து பூர்வ பூர்வங்களை நிவர்திப்பிக் கடவதாய் இருக்கும் –ஆகையாலே இவ் உபாசனத்தை பிரவர்த்திப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –
பரஹிம்சை -என்றது –மேலான ஹிம்சை என்றபடி -பர தேவதை -பர கதி -என்கிற இடங்களில் -மேலான தேவதை -மேலான கதி -என்று அர்த்தம் ஆகிறது போலே –
அதாவது சேயேன விதிக்கு மேலாக விதிக்கப் பட்ட பசவ அவலம்ப நாதிகளை சொன்ன படி –
அத்தை ஹிம்சை என்னலாமோ என்னில் -விஹித ஹிம்சை என்ன கடவது இறே-
அக்நி ஷோமீயம் பசுமாலபேத -என்கிற இடத்தில் ஆலம்ப சப்தம் -ஆலம்ப ஸ்பர்ச ஹிம்சயோ- என்கையாலே -ஹிம்சா வாசி இறே —இத்தால் காம்ய கர்மத்தை சொன்னபடி -பூர்வ விஹித ஹிம்சை – என்று சேயேன விதியை சொல்லுகையாலும் -தது பரி விஹிதமான காம்யமே இவ்விடத்தில் விவஷிதம் –
அன்றிக்கே –
விஹிதமே ஆகிலும் -பகவத் சேஷத்வ ஜ்ஞான பூர்வகமாக அநந்ய பிரயோஜனாய் கொண்டு -அக்நி-இந்த்ராதி தேவதா அந்தர்யாமி சமாராதனமாகவே பண்ணும் பசவ ஆலம்ப நாதி யுக்த யாகாதி கர்மத்தைப் பற்ற ஸ்வ தந்த்ரனாய் கொண்டு ஸ்வர்க்காதி பல சாதனமாக அக்நி இந்த்ராதி தேவதா மாத்ரங்களை உத்தேசித்து பண்ணும் பச்வாலம்ப நாதி யுக்த காம்ய கர்மம் விசேஷஞ்ஞர்க்கு பர ஹிம்சாப்ராயம் என்னலாம்படி யத்யந்த நிக்ருஷ்டமாய் இருக்கையாலே இவ்வாகாரத்தை இட்டு அது தன்னை பர ஹிம்சை என்று அருளி செய்தார் ஆகவுமாம்–
சாஸ்திர விஹிதமுமாய் -பகவத் ஏக விஷயமுமாய்- இருக்கிற பிரபகாந்தரத்தை ஜ்ஞாநிகளுக்கு அபாயம் என்றவோபாதி -இதுவும் அதிகாரி விசேஷத்தை இட்டு
சொல்லலாம் இறே — அத பாதகபீதஸ் த்வம்-என்று உபாயாந்தரத்தை பாதகமாக சொல்லிற்று இறே-தர்ம தேவதையும் -புபுஷுக்கு உபாதேயமான புண்ணியமும் தானே முமுஷுக்கு பாப சப்த வாக்யமாகா நின்றது இறே —
ஆக -எல்லா வற்றாலும் -இவ்விடத்தில் காம்ய கர்மத்தையே சொல்லுகிறது –இப்படி தான் யோஜிக்கிறது–உபாசன விதிக்கு நிவர்த்யம் காம்ய கர்மமாக இவர் தாமே -பரந்தபடி ரஹஸ்யத்திலே அருளிச் செய்கையாலே —
———————————————————
ஆனால் இப்படி விதித்ததை பின்னை நிஷேதிக்கிறது என் என்ன – அருளிச் செய்கிறார் –
சூரணை-130-
இது தான் பூர்வ விஹித ஹிம்சை போலே
விதி நிஷேதங்கள் இரண்டுக்கும் குறை இல்லை –
இது தான் -என்கிறது –கீழ் சொன்ன உபாசனத்தை –
பூர்வ விஹித ஹிம்சையாவது -ச யே நே நாபி சரன் யஜதே -என்று பிரதமத்தில்
விதிக்க பட்ட அபிசார கர்மம் –அது -தம பிரசுரராய் -நாஸ்திகராய் இருப்பாரை பற்ற விதிக்கப் பட்டு ஆஸ்திகராய் காரீர்யாதி காம்ய கர்மங்களிலே இழிகைக்கு யோக்யரான ரஜ பிரசுரரைப் பற்ற நிஷேதிக்க படிகிறாப் போலே -உபாசனமும் -ஸ்வ தந்த்ர அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமாக -பகவத் சேஷத்வத்திலே ஊன்றுவிக்கைக்கு யோக்யரான சத்வ பிரசுரரைப் பற்ற விதிக்கப் பட்டு -பாரதந்த்ர்ய ஜ்ஞானம் பிறந்து பகவத் ஏக உபாயத்வத்திலே ஊன்றுகைக்கு யோக்யரான பரம சத்வ நிஷ்டரைப் பற்ற நிஷேதிக்கப் படவும் குறை இல்லை –
——————————————–
இப்படி நிஷேதிக்க படுமவையான இவை தன்னை அடியிலே எதுக்காக விதித்தது
என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -131-
அத்தை சாஸ்திர விஸ்வாசத்துக்காக விதித்தது –
இத்தை ஸ்வரூப விஸ்வாசத்துக்காக விதித்தது –
அதாவது -சட சித்த சாஸ்திர வசதோ பாயோபிசார சுருதி –என்கிறபடியே அபிசார கர்மத்தை விதித்தது-சாஸ்த்ரத்தை இல்லை என்று இருக்கும் நாஸ்திகனுக்கு சாஸ்திர விஸ்வாசம் பிறக்கைக்காக-உபாசனத்தை விதித்தது-தன்னை ஸ்வ தந்த்ரன் என்றும் அந்ய சேஷ பூதன் என்றும் பிரமித்து போந்த சேதனனுக்கு -அவை இரண்டும் வந்தேறி –பகவத் சேஷத்வமே நிலை நின்ற வேஷம் என்று தன் ஸ்வரூபத்தில் விஸ்வாசம் பிறக்கைக்காக என்கை-
——————————————–
இப்படி ஒரோ விஸ்வாசத்துக்காக விதித்து நிஷேதித்தமை ஒத்து இருந்ததே ஆகிலும் –
இவ் உபாசனத்தை விடாமல் பற்றி நின்றால்-அபிசார கர்மம் போலே க்ரூரம் அன்றே இது என்ன -அதிலும் காட்டிலும் க்ரூரம் என்கிறார் –
சூரணை -132-
அது தோல் புரையே போம் –
இது மர்ம ஸ்பர்சி –
பர ஹிம்சா ரூபமான அந்த அபிசார கர்மம் -தேக ஆத்ம அபிமான செயலாய் –விசிஷ்ட வேஷ விரோதியாய் -அத்தால் வரும் பலமும் -சில துக்க அனுபவ மாத்ரமாய்க் கொண்டு மேல் எழப் போகையாலே–தோல் புரையே போம் -என்கிறது
அஹங்கார கர்பமான இந்த உபாசனம் -ஆத்ம ஞானம் பிறந்தவன் செயலாய் – நிஷ்க்ருஷ்ட வேஷ விரோதியாய் பகவத் ஏக பாரதந்த்ர்ய ரூப ஸ்வரூப நாசகம் ஆகையாலே -மர்ம ஸ்பர்சி -என்கிறது –
———————————————-
இவ்வளவே அன்று –இது துஷ்கரமும் என்கிறார் –
சூரணை-133-
இது தான் கர்ம சாத்யம் ஆகையாலே –
துஷ்கரமுமாய் இருக்கும் –
இப்படி ஸ்வரூப விரோதியாய் இருக்கிற இவ் உபாசனம் தான் –
-யஜ்ஜேன தாநேன தபஸா அனாசகேன ப்ராஹ்மணா விவிதிஷந்தி–ப்ருஹதாரண்யம் -என்றும் –அவித்யயா அம்ருத்யும் தீர்த்தவா வித்ய யாம்ருத மஸ்நுதே-என்றும் –
சர்வ அபேஷாச யஜ்ஜாதி ஸ்ருதே ரஸ்வவத் -என்றும் –
கஷாய பங்க்யதே கர்மாணி ஞாநந்து பரமா கதி -என்றும் –
கஷாய கர்மபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி –
நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே –இத்யாதிகளில் சொல்லுகிறபடியே -காய கிலேசகரமான கர்ம அனுஷ்டானத்தாலே சாதிக்கப்படும் அது ஆகையாலே -அசக்தனான இவனால் செய்து தலைக் கட்ட அரிதாய் இருக்கும் என்கை –
ஆக -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் -என்றுதொடங்கி-115- -இவ்வளவாக
உபாயாந்தர தோஷம் விஸ்தரேண பிரதி பாதிக்கப் பட்டது –
———————————————–
இப்படி பிரபகாந்தரத்துக்கு அநேகம் குற்றங்களை ப்ரதிபாதித்தீர் –
பிரபத்தி உபாயத்துக்கு ஒரு குற்றமும் தான் இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –
சூர்ணிகை – 134–
பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லை
சர்வேஸ்வரன் மட்டுமே உபாயம் -பிரபத்தி உபாயம் இல்லையே -மேலோட்டமாக பார்க்க தன்னை மோக்ஷ உபாயம் என்று எண்ணுவதற்கு காரணமாக பிரபத்தி இருப்பதால் அந்த தோஷம் உண்டே –
இக்குற்றங்கள் என்று ஸ்வரூப விரோதம் முதலாக துஷ்கரத்வ பர்யந்தமாகச் சொன்னவை எல்லாவற்றையும் பராமர்சிக்கிறது
ஒன்றுமே இல்லை என்றது –ஒரு தோஷமும் இதன் பக்கலில் இல்லை என்றபடி
இக்குற்றங்கள் ஒன்றுமே இல்லை என்கையாலே மற்ற ஒரு குற்றம் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது-அதாவது –வஸ்து த உபாயத்வம் தனக்கு இன்றிக்கே இருக்கச் செய்தே ஆபாத ப்ரதீதியிலே உபாய பிரதிபத்ய அர்ஹமாம் படி இருக்கை –
————-
இக் குற்றங்கள் இதுக்கு இல்லை என்னுமத்தை பிரகாசிப்பைக்காக இதனுடைய ஸ்வரூப உசித ஸூ கரத்வங்களை அருளிச் செய்கிறார்
சூர்ணிகை —135-
ஆத்ம யாதாம்ய ஞான கார்யம் ஆகையாலே
ஸ்வரூபத்துக்கு உசிதமாய்
சிற்ற வேண்டா என்கிறபடியே -நிவ்ருத்தி சாத்யமாகையாலே
ஸூ கரமுமாயும் இருக்கும்
இப்பிரபத்தி -ஆத்ம யாதாத்ம்ய ஞான கார்யமாகை யாவது –
திருமந்திரத்தில் மத்யம பதத்தில் சொல்லுகிறபடியே ஆத்மாவினுடைய யதாவஸ்தித வேஷமான பகவத் அத்யந்த பாரதந்தர்யத்தை யுணருகையாலே வந்ததாய் இருக்கை –
ஸ்வரூபத்துக்கு உசிதமாகையாவது –அந்த பாரதந்தர்யமாகிற ஸ்வரூபத்துக்கு அனு ரூபமாய் இருக்கை –
சிற்ற வேண்டா -என்கிறது -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை-அதாவது ஒரு வியாபாரமும் பண்ண வேண்டாம் என்றபடி
நிவ்ருத்தி சாத்யமாகையாலே ஸூகரமுமாய் இருக்கும் -என்றது-பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்கிறபடியே-ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியாலே சாதிக்கப்படுமாதாகையாலே எளிதாகச் செய்யலுமாய் இருக்கும் என்கை –
இவை இரண்டையும் சொல்லவே -கீழ்ச் சொன்ன தோஷங்கள் ஒன்றுமே இதுக்கு இல்லை என்னும் இடம் சித்தித்தபடி என் என்னில்
1-அபாயத்வ -2- பய ஜநகத்வ 3–சோக ஜநகத்வ 4–அஹங்கார மிஸ்ர தயா நிஷித்தத்வ 6அவத்ய கரங்கள் 5-ஸ்வரூப விரோதத்தைப் பற்றி வருகிறவை யாகையாலும் -6-பல வி சத்ருசம்-இது பல சாதனம் அன்றிக்கே சித்த உபாயமே பல சாதகமாய் -இது தத் வரண மாத்ரமாய் -அதிகாரி விசேஷணமாய் இருப்பது ஓன்று ஆகையால்-இதில் பக்கல் வருகைக்கு அவகாசம் இல்லாமையாலும் இவ்வாறு தோஷமும் இதுக்கு இல்லாமை – ஸ்வரூபத்துக்கு உசிதம் -என்றதிலே சித்தமாம் இறே
கர்ம ஸாத்ய தயா வரும் துஷ்கரத்வம் இல்லை என்னும் இடம் -நிவ்ருத்தி சாத்தியம் ஆகையால் ஸூகரம் -என்றதிலே ஸூஸ்பஷ்டம் இறே-ஆகையால் ஸ்வரூப ஓவ்சித்திய ஸூ கரத்வங்கள் ஆகிய இவை இரண்டும் இதுக்கு உண்டு என்னவே-கீழ்ச் சொன்ன தோஷங்கள் ஒன்றுமே இதுக்கு இல்லை என்னும் இடம் ப்ரகாசமாய்த்து –
—————————————–
இப்படி உபாயம் அவன் என்று அத்யவசித்து – ஸ்வ ப்ரவ்ருத்தியில் -நிவ்ருத்தனாய் இருந்து விட அமையுமோ -தத் சந்தோஷ அர்த்தமாக இவன் சில பச்சை விட வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார்
சூர்ணிகை –136-
பூர்ண விஷயமாகையாலே பெருமைக்கு ஈடாகப் பச்சை விட ஒண்ணாது –
அதாவது லோகத்தில் -பச்சை இடுவார் அவ்வோ விஷயங்களின் தரத்துக்கு ஈடாக இறே இடுவது -இங்கும் பச்சை இடப் பார்க்கில் அப்படி இட வேணும் இறே
அவன் அவாப்த ஸமஸ்த காம தயா பரிபூர்ணனாய் இருக்குமவன் ஆகையால்
அவனுடைய வைபவத்துக்கு அனு குணமாக இவனால் ஒரு பச்சை இடப் போகாது என்கை –
————————————————————————
ஆனால் அவனுக்கு இவன் அளவில் ஸந்தோஷம் விளையும் படி என் -என்ன அருளிச் செய்கிறார் –
சூர்ணிகை –137-
ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்திலே ஸந்தோஷம் (அத்யந்த அபிமதம்)விளையும் –
அதாவது அநாதி காலம் யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு தன் பக்கல் விமுகனாய்ப் போந்தவன் அந்நினைவு குலைந்து தன் பக்கல் அபிமுகன் அணமைக்கு ஸூ சகமான தொரு வியாபாரம் பெற்ற அளவிலே இத்தனை காலம் விமுகனாய்ப் போந்தவன் இன்று அபிமுகனாகப் பெறுவதே -என்று அவன் திரு உள்ளம் மிக உய்க்கும் -என்றபடி –
————————————————
அவன் அப்படி இருந்தாலும் அவன் பூர்த்தியானது அகிஞ்சனரான நம்மால் அவனை யுகப்பித்து அணுகப் போகாது என்று இவன் கை வாங்கும் படி பண்ணாதோ என்ன அருளிச் செய்கிறார்
சூர்ணிகை –138-
பூர்த்தி கை வாங்காதே மேல் விழுகைக்கு ஹேது வித்தனை
அதாவது -அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வம் ஆஸ்ரயண உன்முகனான இவன்
நம்மால் அவனை ஒருபடியாலும் சந்தோஷிப்பிக்கப் போகாது என்று தத் ஆஸ்ரயணத்தின் நின்றும் மீளுகை அன்றிக்கே நாம் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாத பரிபூர்ணன் ஆகையால் நம் பக்கல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் என்று அபி நிவேசித்துப் பற்றுகைக்கு உடலாம் இத்தனை -என்கை –
அன்றிக்கே –(நம் நினைவு இது வரை -மேல் அவன் திரு உள்ளம் )
அவன் பூர்த்தி அவனை இப்படி சந்தோஷிக்க ஒட்டுமோ-உபேக்ஷித்துக் கை வாங்கப் பண்ண ஒண்ணாதோ என்ன-பூர்த்தி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-
அதாவது அவனுடைய பூர்த்தியானது-இவன் பச்சை இட்டிலன் என்று அநாதரித்து அங்கீ காரத்தின் நின்றும் கை வாங்காதே ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்துக்கு மேற்பட்ட நமக்கு இவன் சில செய்ய வேண்டுவது உண்டோ என்று விரும்பிக் கைக் கொள்ளுகைக்கு உடலாம் இத்தனை என்கை
————————————————-
இப்படி அவன் அல்ப ஸந்துஷ்டன் என்னும் அதுக்கு பிரமாணம் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –
சூர்ணிகை–139—
பத்ரம் புஷ்பம் –அந்யாத் பூர்ணாத்– புரிவதுவும் புகை பூவே –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி ததஹம் பக்த் யுப ஹ்ருத் மஸ்நாமி ப்ரயதாத்மன-ஸ்ரீ கீதை -9–26–என்று பத்ரத்தை யாகவுமாம் -புஷ்பத்தை ஆகவுமாம்-பலத்தை ஆகவுமாம் -ஜலத்தை ஆகவுமாம் -யாவன் ஒருவன் பக்தியால் தருகிறான் – அநந்ய ப்ரயோஜனதை யாகிற சுத்தியோடு கூடின மனசை யுடையனான அப்படிப்பட்ட பக்தியோடு தரப்பட்ட அத்தை அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கிற நான் -அவன் ப்ரேமத்தாலே கலங்கித் தருமாப் போலே வியாமோஹத்தாலே கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுவன் என்று தானே அருளிச் செய்தான் இறே
அந்யத் பூர்ணாதாபாம் கும்பாத் அந்யத் பாதாவநே ஜனாத் அந்யத் குசல சம்ப்ரஸ்நாந் ந தே இச்சதி ஜனார்த்தன-உத்யோக பர்வம் -என்று ஸ்ரீ தூது எழுந்து அருளுகிற போது த்ருதராஷ்ட்ரன் -பாண்டவ பக்ஷபாதியாய் இருக்கிற கிருஷ்ணன் வாரா நின்றான் –
அவனுக்கு சில நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து நமக்கு ஆக்கிக் கொள்ளுகிறோம் -என்றால் போலே சிலவற்றைச் சொல்ல நினைவும் சொல்லும் ஒத்து இராத அவன் கருத்தை அறிந்த சஞ்சயன் –வருகிறவன் அங்கண் ஒத்தவன் அல்ல காண்-
அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்றான்
அதாவது -தான் குடிக்கும் தண்ணீரை ஒரு குடத்தில் நிறைத்துக் குளிர வைக்கக் கடவனே-
அத்தை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும் -அதுக்கும் மேல் ஒன்றுமே வேண்டா -தன் க்ருஹத்திலே அதிதி வந்து புகுந்தால் காலைக் கழுவதுவதாக சாமான்ய சாஸ்திரம் வித்தித்து வைத்தது இறே-அவ்வோபாதி அவன் திருவடிகளை விளக்க அமையும் -அவனான வாசிக்கு விசேஷித்து ஒன்றுமே செய்ய வேண்டா –நெடும் தூரம் வந்தவனை குசல ப்ரஸ்னம் பண்ணக் கடவது இறே -அவ்வோபாதி ஓர் இன் சொல் சொல்ல அமையும் -ஏற்றமாக ஒன்றுமே வேண்டா இவ்வளவுகளை ஒழிய மாற்று ஒன்றை இச்சியான் காண் அவன் என்கை
இத்தால் நீ கொடுக்க நினைக்கிற நாட்டையும் பொன்னையும் ஒரு சரக்காக நினைத்து இருக்குமோ வல்லையாகில் உன் ஆபி முக்ய ஸூசகமாக இவ்வளவுகளைச் செய்யப் பார் -என்றபடி –
பரிவதில் யீசனை யென்று தொடங்கி –புரிவதுவும் புகை பூவே -1-61-என்று ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை சம்சாரன் முக்தராய் அனுபவித்து அவ் வனுபவ ஜனித ப்ரீதியாலே -ஏதத் சாம காயன் நாஸ்தே என்கிறபடியே பாடி விஸ்திருதராகையைப் பெற வேண்டி இருப்பீர்-உபகரணங்களில் குறைவு பார்த்து அகலுகை தவிர்த்து- அசம்ஸ்க்ருதமான ஜலத்தை ஏதேனும் ஒரு படி பிரயோகித்து -பின்னை அவனுக்கு அருள் கொடையாகக் கொடுப்பதுவும் -ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் இவ்வளவும் அமையும் கிடி கோள் அவனுக்கு என்று -அவனுடைய ஸ்வ ஆராதயையை ஸூ ஸ்பஷ்டமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –
—————————————
பூர்ண விஷயம்--136- என்று தொடங்கி இவ்வளவும் ப்ரஸ்க்த அனு பிரஸ்க்தமாக வந்த இத்தனை இறே – பிரபத்தி வை லக்ஷண்யம் இறே கீழே சொல்லப்பட்டது
ஆகையால் அதுக்கு இன்னம் ஒரு வை லக்ஷண்யம் சொல்லுகைக்காக சித்த உபாயத்துக்கும் பலத்துக்கும் உண்டான ஐக்கியத்தை முந்துற அருளிச் செய்கிறார் –
சூர்ணிகை –140-
புல்லைக் காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –
அதாவது கோவை வரவழைத்து -பின்னை அதுக்கு தாரகாதிகளை இட்டு நோக்க நினைப்பார் தத் போக்யமான புல்லு தன்னையே தத் வசீகர சாதனமாக முன்னிட்டு அழைத்துக் கொண்டு அது தன்னையே மேலிடும் அளவில் பல சாதனங்களுக்கு
பேதம் இல்லாதாப் போலே –விலக்ஷண குண விக்ரஹ விசிஷ்டனான தானே முந்துற இவனைச் சேர்த்துக் கொள்ளுகைக்கு உபாயமுமாய் பின்னை என்றும் ஓக்க இவனுக்கு உபேயமாய் இருக்கையாலே பல சாதனங்கள் இரண்டும் ஏக வஸ்துவாய் இருக்கும் என்கை –
—————————————————–
இத்தால் பிரபத்திக்கு வை லக்ஷண்யம் பலித்த படியே அருளிச் செய்கிறார் –
சூர்ணிகை –141-
ஆகையால் ஸூக ரூபமாய் இருக்கும் –
அதாவது -ஸாத்ய வஸ்து தானே சாதனம் ஆகையால் -தத் வரண ரூபமான இது தேவையாய் இராதே (விதி விதித்தது என்று இல்லாமல் ராக ப்ராப்தையாய் )ஸூக ரூபமாய் இருக்கும் என்றபடி
அன்றிக்கே –இன்னுமும் பிரபத்திக்கு ஒரு வைலக்ஷண்யம் அருளிச் செய்கிறார் -புல்லை -இத்யாதியாலே –அதாவது புல்லைக் காட்டி தேனுவை அழைத்துக் கொண்டு பின்னை அப் புல்லையே இடும் அளவில் பல சாதனங்களுக்கு பேதம் இல்லாதாப் போலே
ஸக்ருத் க்ருத அஞ்சலி -என்றும் -நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அஞ்சலியாதி (ஆதி மானசமும் வாசகமும் )ரூபையான ப்ரபத்தியை முன்னிட்டு ஈஸ்வரனை வசீகரித்தால் பின்னை அவனுக்கு உகப்புக்காகச் செய்யும் அடிமையும் பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி ந –-என்றும்
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை -(தொழுது இரட்டித்தது சாதனமும் சாத்யமும் )–3–8-4இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன் ஸ்வரூப அனுரூபமான அஞ்சலியாதி (ஆதி மானசமும் வாசகமும் )வ்ருத்தி விசேஷங்களாலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை – இப்படி பலமானது தானே சாதனமாகையாலே இப் பிரபத்தி தான் தேவை இராதே இவனுக்கு ஸூக ரூபமாய் இருக்கும் என்கை —
ஆக – பிரபத் யுபாயத்துக்கு-134- என்று தொடங்கி இவ்வளவாக ப்ரபத்தியினுடைய தோஷ ராஹித்யமும் குண சாஹித்யமும் சொல்லப் பட்டது
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply