ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ திவ்யார்த்த தீபிகையில் இருந்து சிறப்பு குறிப்புக்கள்-

அத்யாத்ம க்ரந்த நிர்மாணம், அந்யேஷாம் ச அவ போதநம் அர்ச்சாவதார – ஸேவாச…”என்ற ஸ்லோகத்தின் படி வாழ்ந்தவர்

நூலுக்கு வயது நூறு! காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஸ்ரீ உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள் எழுதிய முதல் நூலுக்கு 100 வயது ஆகிவிட்டது-அண்ணங்கராச்சாரியார் ’திவ்ய பிரபந்த வைபவம்’ என்ற நூலை எழுதியபோது அவருக்கு வயது பதினெட்டு. இதுவே இவர் எழுதிய முதல் நூல்.அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை -மலைக்காதீர்கள் – 1200!-எத்தனை மொழிகளில் தெரியுமா? நான்கு மொழிகளில்!ஒரு மொழியில் எழுதிய புத்தகத்தை மற்றொரு மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்யவில்லை.

குவலயங் கண்ணி கொல்லி யம் பாவை‘ (பெரி.திரு.2.7:1) என்ற திருவிட எந்தை பற்றிய திருமொழிப் பாசுர அடியிலுள்ள ‘கொல்லியம் பாவை- என்பதற்குத் தீபிகையிலுள்ள குறிப்பு வருமாறு: ‘வல்வில் ஓரி’ என்றசிற்றரசனுக்கு உரியதாய்க் ‘கொல்லி’ என்னும் பெயர் கொண்டான். மலையின் கண்ணுள்ள(இது சேலம் மாவட்டம் – திருச்சி மாவட்டங்களில் (சேந்த மங்கலம் துறையூர்) அருகில் பரவி யுள்ள ‘கொல்லிமலை’ என்று கருத இடம்
தருகின்றது.) ஒரு பெண்பாற் பிரதிமையே கொல்லியம் பாவை யாகும். இது தேவ சிற்பி போல் அமைக்கப் பெற்ற அழகிற் சிறந்த பதுமை யாகும்.அம்மலை யிலுள்ள தேவரையும் மனிதரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் அங்கு அணுகும் போது அவர்களது வாடை பட்டவுடனே அது தானே நகை புரியுமாறு பொறி வைக்கப் பெற்ற தென்பர் இப் பதுமையின் சிரிப்பைக்கண்டு மயங்கி உயிர் துறப்பார்களாம்(சித்திர மடல்). . இப் பாவை கண்டார் உள்ளமும் விழியும் கவரப்படுவதாய் பெருங் காம வேட்கை
உறுவித்து இறுதியில் கொல்லும் என்று கூறுவது. இது தெய்வ நிர்மாணம் என்பர். ஒரு காலத்தில் திருமகள் தம் முன் போர்க்கெழுந்த அவுணர் மோகித்து விழும்படி இக் கொல்லியம் பாவை உருக் கொண்டு ஆடினள் என்பதை,செருவெங் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும் என்று சிலப்பதிகாரம் செப்பும். இக் கொல்லிப் பாவை கொல்லி மலையில் உள்ளது என்பதும், தெய்வத்தால் செய்யப்பட்டது என்பதும், காற்றினாலும் மழையினாலும் மற்றெல்லா வகை ஊறுகளாலும் தன் அழகிய நல் வடிவம் கெடாது என்பதும் நற்றிணையில் காணத் தகும்.இப் பாவையின் அழகைத் தலைவியின் நலத்திற்கு உவமை கூறுதல் அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிலும் சிறப்பாக உண்டு. சீவக சிந்தாமணி, குறுந்தொகை என்ற நூல்களிலும் இப் பாவை பற்றிய குறிப்புகளைக் காணலாம்.ஆகவே தமிழ்க் கவிஞர்கள் கொல்லிப் பாவையை ஒப்புயர்வற்ற அழகிற் சிறந்த மாதர்க்கு உவமை கூறுதல் மரபு என்பது அறியப் படும்.இப் பாசுரத்தில் ‘கொல்லியம்பாவை போன்றவள்’ என்று கூறாமல் ‘கொல்லியம் பாவை’ என்றே சொல்லி வைத்தது முற்றுவமை(உருவகம்). ‘தாவி வையங் கொண்ட தடந் தாமரைக்கே’ என்றது போல-

‘துளையார் மென்குழல் ஆய்ச்சியர்‘ (பெரி.திரு. 3.8:8)என்ற தொடருக்கு எவ்வாறு பொருள் எழுதுவது?குழலாகிய கூந்தலுக்குத் துளை உண்டோ? துளை பொருந்துவது புல்லாங் குழலுக்கே யாகும். ‘துளை’ என்ற அடைமொழி கூந்தலுக்கு ஏற்காது. எனவே, “துளைகள் நிரம்பிய புல்லாங் குழலைச் சொல்லக் கடவதான ‘குழல்’என்ற சொல்லால் கூறப்படுகின்ற கூந்தலை யுடையவர்களான ஆய்ச்சிகள்” என்று பொழிப்புரை வரைய வேண்டும்.இங்கே ஆழ்வார் சங்கப் பாடல்களில் வரும் அரியதோர் தமிழ் மரியாதையைப் பின்பற்றி யுள்ளார். சங்க நூல்களிலிருந்து நம் சுவாமி எடுத்துக் காட்டுகளைத் தருகின்றார்.
(i) புல்லிலை வஞ்சிப் புரமதிலலைக்கும் பொருநை |(புறம்-387)
(ii) “நெட்டிலை வஞ்சிக்கோ” (பரிபா, 102 பரிமேலழகர் உரை மேற்கோள்)
இவ் விரண்டிகளிலும் வஞ்சி மா நகர் விவட்சிதமே யல்லாது வஞ்சி மரம் விவட்சிதம் அன்று. ஆயினும் விருட்ச விசேடப் பொருட்கு உரிய புல்லிலை, நெட்டிலை என்னும் அடைமொழிகளை அம் மரப் பெயர் அடைமொழிகளை அம்மரப் பெயர் கொண்ட வஞ்சி மா நகர்க்கு ஏற்றியுள்ளார்கள்.
( iii) ‘ஒளி திகழ் உத்தி உருக் கெழு நாகம்” (பரிபா.12)’நாகம்’ என்னும் சொல் புன்னை மரத்துக்கும் பாம்புக்கும் பெயர். பரி பாடலில் ‘நாகம்’ என்ற சொல்லை யிட்டுப் புன்னை மரத்தைப் பேசுங்கால் பாம்புக்குரிய அடைமொழியைப் புன்னைக்கு இட்டனர். இவ்வாறு தமிழில் ஒரு சொல்லுக்கு இரண்டு பொருள் இருந்தால் ஒரு பொருளுக்கு இசையும் அடைமொழியை மற்றொரு பொருளுக்கும் உபயோகிப்பதுண்டு. ‘இங்ஙனே தமிழ் நூல்களிலுள்ள சம்பிரதாயம் ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் ஏறி யுள்ளதை உணர வேண்டும்’ என்பர் நம்சுவாமி.

நாச்சியார் திருமொழியில் (3:9) ‘கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து’ என்ற இடத்தில் எல்லில் இரவில் என்று சுவாமி பொருள் கூறியதை தமிழ்ப் புலவர் ஒருவர் மறுத்து எல்லி என்பது பகலையே குறிக்குமாதலால்,’அல்லில் பிழைத்து’ என்று பாடத்தையே திருத்த வேண்டும் என்றும் எழுதினார். ‘அல்லும் பகலும்’ என்ற உலக வழக்கை அவர் தம் கருத்துக்கு அரணாகக் காட்டினார். ஆனால் நம் சுவாமியோ ‘எல்லூர்ச் சேர் தரும் ஏறுடை யினத்து’ (குறுந்.275) என்ற குறுந்தொகைப் பாடலின் அடியையும் மலை படு கடாத்தில் (அடி 416)வரும் ‘எல்லினிப் புதினே’ என்ற தொடரையும் அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய ‘இராக் காலத்தை யுடைய யாயிராய்’என்ற பொருளையும் காட்டி நாச்சியார் திரு வாக்கின் தூய்மையை நிலை நாட்டினார்.

பரிவதில் ஈசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர்
பிரிவகை யின்றி நன் னீர்தூய் –
புரிவது வும் புகை பூவே
(திருவாய் 1.6:1)
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘பரிவதில் ஈசன்’என்பதற்கு ‘ஹேய ப்ரத்ய நீகனான ஈஸ்வரனை’ என்று பிள்ளானும் பெரிய வாச்சான் பிள்ளையும் உரைப்பர். இதனை நம்பிள்ளை விவரித்து, கல்யாண குண யோகத்தையும் சேர்த்து உரைப்பர். எம்பெருமான் எப்படிப் பட்டவன் எனில்: ‘பரிவதில் ஈசன்’ என்கிறார். அதாவது துக்கம் இல்லாதவன்;எம்பெருமானுக்குத் துக்கம் இல்லை என்று சொல்லி விட முடியாது. பிராட்டியைப் பிரிந்து பட்ட துக்கம் அனைவரும் அறிந்ததே! ஆனால் பிறர் படும் துன்பத்தைக் கண்டு தானும் துக்கப்படுகை என்ற தயை குணம் எம்பெருமான் ஒருவனுக்கே உள்ள தென்றாகையால் இந்தத் துக்கம் குற்றமன்று என்று கூறுவர் நம் சுவாமிகள். இதனால் எம்பெருமானின் தயை என்னும் கல்யாண குணம் சொல்லப்பட்டது.-திரௌபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது கண்ண பிரானின் திருநாமமே யாயினும் தான் நேரில் சென்று உதவாத துக்கத்தைக் காட்ட,கண்ணன் திருவுள்ளம் புண்பட்டுக் கதறினது அனைவரும் அறிந்ததே. மேலும் எம்பெருமான் ஆனையின் துயரம் தீர அரை குலைய தலை குலைய மடுக் கரைக்கு ஓடி வந்து உதவினான். இது பிறர்க்காகப் படும் துக்கம் என்பதும் வெள்ளிடை மலை.

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லிய செவ் விதழே (திருவாய் 8.9:6)’எம்பெருமான் திருவருளால் இத் திருப்பதியில் வளர்ந்த கமுகு ஈன்ற செவ்விய பழத்தின் நிறத்தை யொத்துள்ளது இவளுடைய உதடுகளின் நிறம்’ என்கின்றாள். ‘திருவருள் கமுகு’என்பதற்கு நம் சுவாமி இன்சுவைமிக்க ஈட்டின் ஸ்ரீ சூக்தியை எடுத்துக் காட்டுவார். அச் சூக்தி : “திருவருள் கமுகு என்று சில உண்டு; அதாவது நீரால் வளருகை யன்றிக்கே பெரிய பிராட்டியாரும் சர்வேஸ்வரனும் கடாட்சிக்க, அத்தால் வளருவன’ சில”. இதனை எண்ணி எண்ணி மகிழ வேண்டும். இப் பாசுரத்தால் “இந்த ஆன்மா பிற தெய்வங்கட்கு அடிமைப் பட்டது மன்று; தனக்குத் தானே உரியதுமன்று; பகவான் ஒருவனுக்கே உரியது” என்ற கருத்தாகிய ‘அநந்யார்ஹ சேக்ஷத்துவம்‘ தெளிவாக விளங்குகின்றது.

சேதந லாபம் தான் ஈஸ்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே சித்தாந்தம். எம்பெருமான் சிருஷ்டி அவதாராதி முகத்தாலே கிருஷி பண்ணுவ தெல்லாம் ‘ஒரு சேதநன் நமக்குக் கிடைப்பனா’ என்கின்ற நப்பாசை யினாலன்றோ?கீதையிலே ‘ஸ மஹாத்மா துர்லப:‘ என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகின்ற வார்த்தை யன்றோ? ‘வாஸு தேவஸ் ஸர்வம்’ என்றிருக்கின்ற மகாத்மா எனக்குக் கிடைக்க வில்லையே! என்றன்றோ சொல்லுகின்றான்? பாடுபட்டுத் தேடிப் பார்த்தும் கிடைக்காமையாலே வருந்திச் சொல்லுகிற வார்த்தை இது என்று நன்கு தெரிகின்ற தன்றோ?எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் – ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவில் –ஜநாநிநம் லப்தவா” என்கின்ற அற்புதமான ஸ்ரீஸுக்தியில் இப் பரமார்த்தம் தன்னை ஆழ்வார் சுவாநுபவ முகத்தாலே இப்பாசுரத்தில் வைத்தருள்கின்றார்-என்னில் முன்னம் பாரித்துத்தானென்னை முற்றப் பருகினான்” என்றது சத் சம்பிரதாய சுவைஞர்களின் நெஞ்சை யுருக்கும் வார்த்தை. ‘உன்னைக் காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன்’ என்று தாம் ஆசைப் பட்டிருந்ததாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இங்ஙனே பாரித்திருந்து தன்னுடைய மநோரதமே வலிதென்றும் அதுதான் முற்பட்டதாயிருந்து கார்ய கரமாகின்ற தென்றும் சொல்லிற்றாயிற்று.
என் உயிருண்ட மாயன்’ (7)என்றும் ‘என்னுயிர் தானுண்டான்’ (8) என்றும் எம்பெருமான் உண்ட படியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணீரும் அபேட்சிதமா யிருக்குமே; தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப் பாசுரத்தில் “தான் என்னை முற்றப் பருகினான்” என்று. இவருடைய ‘உண்ணுஞ்சோறு பருகுநீர்’ அவன்; அவனுடைய ‘உண்ணுஞ் சோறு பருகு நீர்’இவர். இங்கு தம்மை மறந்து இப் பாசுரத்தை நம் சுவாமிகள் அநுபவித்ததைக் காண முடிகிறது.

‘என் ஆனாய்'(பெரி.திரு. 1.9:2) என்பதற்கு ‘ஆனை’ விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே என்றபடி.”தென்னானாய், வடவானாய், குட பாலானாய், குண பால மதயானாய்” என்று திருநெடுந் தாண்டகத்திலும் (10)அருளிச் செய்வர். “என்னானை, என்னப்பன், எம்பெருமான்”என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.

‘என் தந்தை’ என்பது (பெரி.திரு. 1.1:6)’எந்தை’ என மருவிற்று. ‘வாழ்நாள்’ என்பது ‘வாணாள்’ என மருவிற்று. ‘கொள்ள’ என்பது ‘கொள’ எனத் தொக்கி நிற்கின்றது; வெருக்கொள – அச்சங் கொள்ள என்றாயிற்று.பாடா வருவேன் (பெரி.திரு. 4.7:5) உன்னுடன் பாடிக் கொண்டு வருகின்ற என்கை. ‘பாடா’ ‘செய்யா’ என்னும் வாய்பாட்டுடன் இறந்த கால வினையெச்சம்,

தொழுதாடித் தூ மணி, வண்ணனுக்கு ஆட் செய்த‘ (திருவாய். 4.6:11) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் அடியில் ‘ஆட் செய்த நோய் தீர்ந்து‘ என்று தொடர் அமைந்திருப்பினும் ‘உருபு பிரித்துக் கூட்டுதல்’என்ற முறைமையின் கீழ் நோய் தீர்ந்து ஆட் செய்த’ என்று பொருள் கொள்ளத் தகும். ‘ஆட் செய்த’ என்று உருபு பிரித்துக் கூட்டியதால் ‘சொல் திரிந்து பொருள் திரியா வினைக் குறை’ (நன்னூல்- 346) என்ற நன்னூல் நூற் பாவிற்கு ஏற்ப ‘செய்து’ என்பதை எச்சத் திரிபாகக் கொண்டு ‘செய்ய’ என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் கூறுவர். இவ்விடத்தில் சிறந்து விளங்கும் பொருளையும் வழங்குகிறார் சுவாமிகள். அஃதாவது, ஆழ்வாருக்கு இந்த நோய் தீருவதன்று. ஆன்மா உள்ள வரையில் தொடருமது.ஆகையால் ‘நோய் தீர்ந்த’ என்றது மோகம் தெளிந்து சற்று உணர்த்தி உண்டானமை பற்றியதாகும். இவ்வாறு இலக்கண வழி மூலமும் பொருட் சுவையை உணர்த்துகிறது என்று சுவாமிகள் தெளிவிப்பதால் சுவாமியின் தமிழ்ப் புலமை தெற்றென விளங்கும்.

திருவாய் மொழி (6.8)தலைமகள் பறவைகளைத் தூது விடும் பதிகமாகும். இதில் 8-ஆம் பாசுரத்தில் ‘அருள் செய்து ஒரு நாள்’ (2-ஆம்அடி) என்ற பாடமே நம்பிள்ளை முதலாக ஆசாரியர்களின் காலத்தில் வழங்கி வந்தது. இப்பாடத்தில் வினை முற்று(கிரியா பதம்) இல்லை யாகிறது. குருகிடம் ‘நீ போய்ச் சொல்ல வேணும்’ என்கின்ற வேண்டுகோள் இருக்க
வேணுமே; அ ஃது இங்கு இல்லை; ஆனாலும் வருவித்துக் கொள்ளலாம் என்பது நம்பிள்ளையின் திரு வுள்ளம்.பன்னீராயிரப்படி ஆசிரியர் வாதி கேசரி ஜீயர் ‘அருள் செய் ஒரு நாள்’ என்று பாடம் காட்டுகின்றார்;” ‘அருள் செய்து’என்று பாடமான போது ‘என்று சொல்’ என்று வாக்கிய சேஷமாகக் கூடாது” என்று எழுதி யுள்ளார். ‘அருள் செய்து‘என்று வினை எச்சமான பாடமே பிரசித்தம் என்று நம் சுவாமிகள் அதனையே கொள்வார். தொடர்ந்து ஈற்றடியின் முதலிலுள்ள ‘ஏசறு’ என்பதை வினைமுற்றாகக் கொள்ளுகிற வழியையும் நம்பிள்ளை காட்டி யருள்கின்றார் என்பதையும் சுட்டி யுரைத்து தம் கருத்துக்கு அரணாக்கிக் கொள்வர். ஏசறு துக்கப்படு. ‘நான் படுகிற துக்கத்தை உன் வடிவிலே ஏறிட்டுக் கொண்டு காட்டு’ என்பது தாற்பரியம். இவ்வாறு விளக்குவர் நம் சுவாமிகள்..

வியாக்கியானத்தில் ‘சக்ரவர்த்தித் திருமகன்’என்று வருகிறது. அது பிழை என்று காட்டி விளக்கமும் தருவார் நம் சுவாமி. “சக்கர வர்த்தி என்பது தசரதனைக் குறிக்கும். அவனுடைய மகன் என்ற பொருளில் ‘சக்ரவர்த்தி திருமகன்’ என்று ஒற்று மிகாது வர வேண்டும். வேற்றுமைத் தொகை யன்றோ?” என்பர். இங்ஙனமே “பிள்ளை திரு நறையூர் அரையர்” என்று ஒற்று மிகாது எழுத வேண்டும்” என்பர்.

‘ப்ரஹ்ம்’ என்று எழுதுவதே நேர்மை யானது;’ப்ரம்ஹ’ என்று எழுதுவோரைக் கண்டித்தார்- ஸ்ரீ’ என்ற சொல்லும் தமிழில் பயிலாது என்றும், அதனைத்’திரு’ என்று பெயர்த்தோ அல்லது ‘சீர்’ என்று திரித்துத் தற்பவமாகவோ தான் வழங்க வேண்டும் என்பது அவர் தம் கொள்கை. ‘சீர் வசன பூடணம்’ என்ற உபதேச ரத்னமாலைப் பிரயோகத்தைக் காட்டி ‘ஸ்ரீபாஷ்யம்’ என்பதுபோன்று செய்யுளில் வழங்குவதைக் கண்டித்துள்ளார்.

கற்றறிந்த பெரியார் ஒருவர் தம் கட்டுரை யொன்றில் “முயற்சிக்கத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது”என்று எழுதி யிருந்தார். அதனைக் கண்ணுற்ற நம் சுவாமி”முயற்சி என்கின்ற சொல் உண்டே யல்லது அதன் மேல் ஒரு ப்ரத்யய மேற்றி ‘முயற்சிக்க’ என்பது பரிஹாஸ்யங்களிலும் கடையானது” என்று கண்டித்தார். மற்றொருவர்”முயற்சிக்கிறேன்” என்று எழுதிய போது ‘முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கன்பையே‘ (கண்ணி நுண்.10) என்ற மதுர கவிகளின் திரு வாக்கினை நினைவுப் படுத்தித் திருத்தினார்-சொற்றொடர்களை மிகவும் பிரித்தெழுவது தமிழின் நரம்பறியாத செயல் என்பர் நம் சுவாமி. சொற்கள் புணர்ந்து தொடருவதில் ஓசை யின்பம் சிறக்கும் என்பது ஸ்வாமியின் கருத்து. இவ் வாய்வு வுரை, வீற்று இருக்கும்,நூற்று அந்தாதி, நூற்று எட்டுத் திருப்பதிகள் போன்ற தொடர்ப் பிரிவுகளைக் கண்டு ஸ்வாமியின் திரு வுள்ளம் புண்பட்டதுண்டு.

லட்சித லட்சணை’ என்பது ஒரு மரியாதையாகத் தமிழ் நூல்களில் வரும் மரபாகும். பரிபாடலில் (3-30)கேசியை வதம் செய்த கண்ண பிரானைக் குறிப்பாக ‘கூந்தல் எரி சினம் கொன்றோய்’ என்று வருகிறது. இங்குப் பரிமேலழகர் “கேசி – குதிரையாய் வந்து பொருதான் ஓர் அசுரன். இப் பெயர் கேசம் என்னும் வடமொழி முதல் நிலையாக முடிந்தமையின் அதன் பொருண்மை பற்றிக் கூந்தல் என்றார்” என்று விளக்குகின்றார்.-முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரும் ‘கூந்தல் வாய் கீண்டானை‘(இரண். திருவந். 93) என்று பிரயோகித்துள்ளார். தீபிகை யுரையில் ஸ்வாமியின் குறிப்பு : “தலை மயிர்க்கு வாசகமான கூந்தல் என்னும் சொல்லாட்சி லட்சணை என்னும் வழியில் கேசி என்பவனைக் குறிக்கும். எங்ஙனமே என்னில்; கூந்தல் என்பதற்கு வடமொழிப் பெயர் ‘கேசம்’ என்பதாகும்.அச் சொல் கேசியை நினைப்பூட்டும்” என்பதாகும்.
திருமங்கை மன்னனும், தம் திருமொழியில்,-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள (10.9:1) என்று குறிப்பிடுகின்றார். நள்ளிருட் கண் வந்த பூதனை புள்ளுருவாகி வர வில்லை. அவள் பேய்ச்சியாக வந்தாள்-இங்கு ஸ்வாமி தம் தீபிகை உரையில் “மேலே சஞ்சரித்துக் குழந்தைகளை அனுங்கப் பண்ணும் சில பறவைகள் உண்டு; அப்படிப் பட்டவளாய் வந்தாள் என்று இவளது கொடுமையைக் குறிப்பிட்டவாறு” என்று வரைந்த உரை குறிப்பதாகும். பெரியவாச்சான் பிள்ளையும் இவ்வாறே உரைப்பார்.

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை‘ என்ற தொடருக்கு லட்சித லட்சணை வழியில் அரிய விளக்கம் அளித்தார். ‘புள்’ என்பது அலகை (=கேடு)உடையது அன்றோ! ஆதலால் அலகை ( பேய் மகள் நள்ளிருள் வந்த பூதனை என்று தேறுகின்றது. வடமொழி தமிழ்மொழி இலக்கண மரியாதைகள் எல்லாம் ஸ்வாமிக்கு நன்கு வசப்பட்டிருந்தது

தமிழ் நெறியை அறியாதார் சிலர் “என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்’ (பெரியாழ். திரு . 4.9:3) என்ற விஷ்ணு சித்தன் திரு வாக்கில் உள்ள ‘போலும்’ என்பதை ஐயப் பொருளாக்கி அவப் பொருள் கண்டனர். ‘ஆங்கவுரையசை’ ‘ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும்’ (தொல்.சொல். 277, 278) என்ற நூற் பாக்களைக் கொண்டு’போலும்’ என்பதை அசை நிலையாகக் கொள்வதே தமிழ் மரியாதைக்குச் சேரும் என்பது ஸ்வாமியின் முடிபாகும்.

இருந் தமிழ் நூற் புலவன்‘(பெரி.திரு.1.8:10) என்று சிங்கவேள் குன்றத் திருமொழியில் குறிப்பிடுவர். இவர் தம் ஆறு பிரபந்தங்களும் மாறன் அருளிய மா மறைக்கு ஆறு அங்கங்கள் என்று வகுத்துக் கூறுங்கால் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ‘இருந்தமிழ் நூற் புலவர் பனுவல் ஆறும்‘ என்று குறிப்பிடுவர். அதனால் ‘இருந் தமிழ்’ என்று கலியனால் கருதப் பெற்றது நம்மாழ்வாருடைய நான்கு திவ்வியப் பிரபந்தங்களாகும் என்பது தெளிவு.

பங்கயக் கண்ணன் என்கோ?
பவளச் செவ் வாயன் என்கோ?
அங்கதிர் அடியன் என்கோ?
அஞ்சன வண்ணன் என்கோ?
செங் கதிர் முடியன் என்கோ?
திரு மறு மார்வன் எங்கோ?
சங்கு சக்கரத்தன் என்கோ?
சாதி மாணிக்கத்தையே!(
திருவாய். 3.3:3)
ஆழ்வார் பெருங்காற்றில் வீழ்ந்த பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளக் கருதுபவர்கள்’அந்தப் பழத்தை எடுப்போமா? இந்தப் பழத்தை எடுப்போமா?”என்று அலமந்து கிடப்பது போல், அத்தைச் சொல்லுவேனா?இத்தைச் சொல்லுவேனா? என்று அலமந்து, எங்கும் எல்லா வகைப் பொருள்களுமாயும் தோன்றுகின்ற அப் பெருமானுக்கு வாசிகமாகக் கைங்கரியம் செய்ய நினைத்து ‘சகல கல்யாண குணங்களுக்கும் கடலான அவ்வெம் பெருமானுடைய தன்மையை யான் என்ன வென்று சொல்லுவேன்?’ என்று நிர்வேதத்துடனே அவனது சர்வாத்மத்தைப் பேசுகின்றார் இத் திருவாய் மொழியில். அதில் மூன்றாவது பாசுரம் இது : இதற்குச் சுவாமியின் அநுபவ உரை இது :“ஆழ்வார் தம்மைக் கடாட்சித்து தம்மோடு முதலுறவு)பண்ணின திருக் கண்களின் அழகில் ஈடுபட்டு முதலில்’பங்கயக் கண்ணன்’ என்றார். அந்தக் கண்ணோக்குக்குத் தப்பினாலும் தப்ப வொண்ணாத புன் முறுவலை யுடைய வாயழகில் ஈடுபட்டுப் ‘பவளச் செவ் வாயன்’ என்றார். அந்த நோக்கத்திலும் புன் சிரிப்பிலும் ஈடுபட்டுத் தோற்று விழும் நிலமாகிய திருவடிகளில் ஈடுபட்டு ‘அங் கதிர் அடியன்’என்றார். அத் திருவடிகளில் வீழ்ந்தவர் அநுபவிக்கின்ற வடிவழகில் ஈடுபட்டு ‘அஞ்சன வண்ணன்’ என்றார்.அவ்வாறு அநுபவிக்கும் வடிவழகை யுடையவன் ஈடும் எடுப்பும் இல்லாத ஈசன் என்பதை விளக்குகின்ற திருமுடியழகில் ஈடுபட்டுச் “செங்கதிர் முடியன்” என்றார்.திருமுடியினால் விளங்குகின்ற ஸ்வாமித்துவத்தைக் கண்டு’இப் பெரியோனை நாம் எவ்வாறு நெருங்குவது!’ என்று கருதி பின் வாங்காதபடி எப்போதும் அப் பெருமானின் திரு மார்பில் ‘அகலகில்லேன் இறையும்’ என்று இருந்து புருஷகாரம் செய்யும் தாயான பிராட்டியின் சம்பந்தத்தைக் கருதித் ‘திரு மறு மார்பன்’ என்றார் பெருமாளும் பிராட்டியுமான இச் சேர்த்திக்கு என்ன தீங்கு வருகின்றதோ என்று பொங்கும் பரிவினால் பாப சங்கை கொள்ளுகின்ற அடியார்களுடைய அச்சத்தைத் தவிர்ப்பனவான திவ்வியாயுதங்களைக் கருதி ‘சங்கு சக்கரன்’ என்றார்.” சாதி மாணிக்கத்தை) போலி யன்றிக்கே ஆதரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே நிர்த் தோஷமாய்(குற்றமில்லாததாய்) ஸ்வத சித்தமான வடிவழகுடையவனை”என்பது ஈடு முப்பத்தாறாயிரம். மறு – ஸ்ரீவத்ஸம் என்கின்ற மயிர்ச் சுழி.-உரையை ஊன்றிப் படிக்குங்கால் ஆழ்வார் பெற்ற அநுபவத்தை நம் ஸ்வாமி அநுபவித்ததை அறிகின்றோம்.உரை நம்மையும் மறந்து இறையபவத்தில் ஆழ்ந்து விடச் செய்கின்றது.

1- யானையை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அரிய பொருளைப் பார்ப்பது போல் பரமானந்தத்தைத் தரும்; எம் பெருமானும் “அப் பொழுதைக் கப்பொழுது என் ஆரா அமுதமே” (திருவாய்2.5:4) என்று இனிப்பான்.
2-யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏற வேண்டும்; எம்பெருமானிடம் சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3-யானை தன்னைக் கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனும் கயிற்றினால்”(திருச்சந்த. 83) என்ற படி எம்பெருமானைக் கட்டுப் படுத்தும் பக்தி யாகின்ற கயிற்றை அவன் தானே தந்தருள்வான். “மதி நலம் அருளினவன்” (திருவாய். 1.1:1)
4-யானையை நீராட்டினாலும் அடுத்த கணத்திலேயே அஃது அழுக்கோடு சேரும்; எம்பெருமான் சுத்த பவித்திரனாய் சுத்த சத்துவ மயனாய் இருக்கச் செய்தேயும்”பொய்ந் நின்ற ஞாலமும் பொல்லா அழுக்குடம்பும்”(திருவிருத்.1) உடைய நம் போலியருடன் சேரத் திருவுள்ளமா யிருப்பன், வாத்சல்யத்தாலே.
5-யானையைப் பிடிக்க வேண்டுமானால் பெண் யானையைக் கொண்டு பிடிக்க வேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.
6-யானை பாகனுடைய அநுமதி யின்றித் தன் பக்கம் வருகின்றவர்களைத் தள்ளி விடும்; எம்பெருமானும் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து” (திருவாய். 4.6 8) என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீ கரித்தருளான்.
7-யானையின் மொழியைப் பாகனே அறிவான்;எம்பெருமானின் மொழி திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும். பேரருளாளனோடே பேசுபவரன்றோ நம்பிகள்?
8-யானையினுடைய நிற்றல், இருத்தல், கிடத்தல்,திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு;எம்பெருமானும், “கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி, மணி வண்ணா நீ கிடக்க வேண்டா…! உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்றும், “கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” (திருச்சந்த. 61) என்றும் சொல்லுகின்ற திருமழிசைபிரான் போல்வாருக்கு எல்லா வகையிலும் அடியன்.
9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்.எம்பெருமான் அமுது செய்து சேவித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்க்கங்கள் உய்விக்கக் காண்கின்றோ மன்றோ?
10-யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்”அலம் புரி நெடுந் நடக்கை ஆயன்” (பெரி. திரு. 1.6:2)அன்றோ? “நீண்டவத்தைக் கரு முகிலை” (பெரி.திரு. 2.5:2)
11-யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் சாதித்துத் தன் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிகாச புராணங்கள், அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உதவுகின்றானன்றோ?
12-யானைக்கு ஒரு கையே உள்ளது; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கை யொழியக் கொள்ளும் கை இல்லையன்றோ? “விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுப்பதில் உறுதியான எண்ண முடையவன்” (அர்த்தி தார்த்த பரிதாந தீட்சிதம்)
13-பாகனுக்கு வாழ்க்கைக்குரிய பொருள்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு உதவுவான்.

1-நீர் பள்ளத்திலே பாயும்; மேட்டில் ஏறுவது அருமை. எம்பெருமானும் சாதி முதலிய வற்றால் குறைந்தவரிடத்தே எளிதாகச் செல்லுவன்; உயர்ந்தோர் என்று மார்பு நெறித்திருப்போரிடத்தே செல்ல விரும்பான். பாண்டவர்க்காகத் தூது எழுந்தருளும் போது ‘ஞானத்தால் சிறந்தோம்’என்றிருக்கும் வீடுமரையும் துரோணரையும், ‘செல்வத்தால்’சிறந்தோம் என்றிருக்கும் துரியோதனனையும் ஒரு பொருளாக மதியாமல் இவை யெல்லாவற்றிலும் தாழ்ந்தவராகத் தம்மைக் கருதி யிருந்த விதுரருடைய திருமாளிகையிலே தானாகவே சென்று அமுது செய்தருளினான் கண்ணபிரான். ஆகவே பள்ளத்தை யோடிப் பெருங்குழியே தங்கும் இயல்பு ஒக்கும்.
2-நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாது; அப்படியே எம்பெருமானின்றி ஒரு காரியமும் ஆகாது. ஒருவன் விரும்பியதை வோறொருவன் விரும்பாதபடி உலகம் வெவ்வேறு விருப்பத்தை யுடையதாயினும் எல்லோரும் நீரை விரும்பியேயாக வேண்டும்; அது போலவே எம்பெருமானையும்..
3-நீருக்குக் குளிர்ச்சி இயற்கை; சூடு வந்தேறி. எம்பெருமானுக்கும் தண்ணளி இயற்கையாய்ச் சீற்றம் வந்தேறி யாயிருக்கும் “நீரிலே நெருப்புக் கிளறு மாப் போலே குளிர்ந்த திரு வுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால்” என்ற முமுட்சுப்படி திவ்விய ஸூக்தி காண்க.
4-நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும். “தரு துயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை” என்றார் குலசேகரப் பெருமாள்.
5-நீர் நம் விருப்பப்படி தேக்கி வைக்கவும் ஓடவிடவும் உரித்தா யிருக்கும். எம்பெருமான் இயல்பும் அப்படியே;ஆண்டாள் தான் சூடிக் களைந்த மாலையிலே விலங்கிட்டு வைத்துப் புசிக்க நின்றான் எம்பெருமான். பாண்டவர்கட்காகக் கழுத்தாலே ஓலை கட்டித் தூது நடந்தான்.
6-நீரானது மற்ற பண்டங்களைச் சமைப்பதற்குக் கருவியாயு மிருக்கும்; தனிப்படத் தானே குடிக்கத் தக்கதுமா யிருக்கும். எம்பெருமானுக்கும் உபாயத்துவம்,உபேயத்துவம் என்ற இரு தன்மைகள் உண்டல்லவா?எம்பெருமானைக் கொண்டு வேறு பலன்களைப் பெற விரும்புவாரும் எம்பெருமான் தன்னையே புருஷார்த்தமாகக் கொள்வாரும் உள்ளமை காண்க.
7-அன்னம் முதலானவை தமக்குப் பிரதிநிதிகளைச் சகிக்கும்; அதாவது காய் கனி கிழங்கு வேர் பலா முதலியவற்றால் உடலைப் பாதுகாக்கலாம்; நீரானது அப்படிப் பிரதிநிதி யொன்றையும் சகிக்க மாட்டாது நீருக்கு நீரே வேண்டும். அப்படியே எம்பெருமானுக்கும் பிரதிநிதி கிடையாது; குணாநுசந்தத்தாலும் போது போக்குதல் அரிது.”ஒருநாள் காண வாராயே” “அடியேன் தொழ வந்தருளே”என்று பிரார்த்தித்துப் பெற்றே தீர வேண்டும்.
8-சோறு உண்ணும் போது நீர் இல்லாமல் முடியாது;அப்படி நீர் வேறொன்றை விரும்புவதன்று. எம்பெருமானும் அப்படியே; உபயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேண்டும்;எம்பெருமான் இவற்றை விரும்பாதவன், “உன்னல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்.”
9-கொள்ளும் பாத்திரங்களின் வேறுபாடின்றி நீர் தான் குறைய நில்லாது; எங்கும் நிரம்பி யிருக்கும் எம்பெருமானும் “கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் வள்ளல்” கொள்வார் குறையே யத்தனை ஐஸ்வரியமே போதும் என்பாரும் கைவல்யமே போதும் என்பாருமாகக் குறையக் கொள்வார் குற்றமே யாகும்.
10- நீர் ஐவகைப் பட்டிருப்பது போல எம் பெருமானும் ஐவகைப் பட்டிருப்பன். எங்ஙனே என்னில் (i) பூமிக்குள்ளே பொதிந்து கிடக்கும் நீர்; (ii) ஆவரண நீர்; (iii) பாற்கடல் நீர்;(iv) பெருக் காற்று நீர்; (v) தடாகங்களில் தேங்கும் நீர் என ஐவகைப் பட்டிருக்கும். பர, வியூக, விபவ, அந்தர்யாமி,அர்ச்சை என எம்பெருமானும் ஐவகைப் பட்டிருப்பான்.
11-நீரானது பரிசுத்தமாயினும் தான் இருக்கும்.இடத்துக்குத் தக்கதாய்க் கொள்ளத் தக்கதாயும் விடத் தக்கதாயும் இருக்கும். அப்படியே தேவதாந்தரங்களில் அந்தர்மியான எம்பெருமான் விடத் தக்கவனாகவும் கூராழி வெண்சங்கேந்தின எம்பெருமான் கொள்ளத் தக்கவனாகவும் விடத்தக்கவனாகவும் இருப்பது தெளிவாகும்.
12-நீர் தோண்டத் தோண்டச் சுரக்கும்;’கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில் தந்திடும்”
13-நீர் தனக்கொரு பயனின்றியே பிறர்க்காகவே இருக்கும்; எம்பெருமானும் அவனைச் சேர்ந்தனவாயும் அவனை அடைத்தவர்க்காகவே இருக்கும்.
14-நீர் தானாகப் பெய்ய வேண்டுமே யன்றி ஒருவரால் வலிந்து பெய்விக்க முடியாது; எம்பெருமான் இயல்பும் அப்படியே.
15-நீர் கடலிலிருந்து காளமேகம் வழியாக வந்தாலன்றி உயிர் வாழப் பயன் படுவதாகாது; எம்பெருமானும் சாத்திரங்களிலிருந்து ஆசாரியர் முகமாக வந்தே அடையத் தக்கவனாகின்றான்.
16- வசிட்ட சண்டாள வேறு பாடின்றியே அனைவரும் ஒரு துறையிலே படிந்து குடைந்தாடலாம்படி இருக்கும் நீர்;எம்பெருமானும் ‘நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத் தானே” என்றும், “கானமும் வானரமும் வேடும் உண்ட வேங்கடம்” என்றும் சொல்லுகிறபடியே பெரியார் சிறியார் என்னும் வேற்றுமை யின்றி ஒக்க அடையலாம்படி இருப்பன்.
17- நீர் சிறிது துவாரம் இருப்பினும் உள் புகுந்து விடும்; எம்பெருமானுக்குச் சிறிது வியாஜமே போதும்.’திருமாலிருஞ்சோலை மலை யென்றேன்; என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
18- தீர்த்தச் சிறப்புகளிலே நீருக்கு மகாத்மியம் அதிகம். எம்பெருமானுக்கும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் முதலான திருப்பதிகளிலே சிறப்பு பொலியும்.
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் தெளித்துக் கொள்வது, முதுகில் கொட்டுவது, உள்ளில் இழிச்சுவது,படிந்து குடைந்தாடுவது போல் “வாக்கினால் கருமந் தன்னால்,மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கை மீதூர வாங்கி”விழுங்குவார்கள் எம்பெருமானையும்.
20-நீரில் சிறிய கல்லும் அமிழும்; பெரிய தெப்பமும் மிதக்கும்; எம்பெருமான் பக்கலிலும் பிரமாவாய் இழந்து போதல், இடைச்சியாய்ப் பெற்று விடுதல் செய்யக் காணா நின்றோம். “நேரே, கடிக் கமலத்துள்ளிருந்தும் காணகிலான் கண்ணனடிக் கமலந் தன்னை அவன்” “மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர மணி வாயிடை முத்தும் தருதலும், உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டுள்ளம் குளிர விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ் வுரையும்,
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன், தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என்பன அடைவே பிரமாணம்.பகவத் குணங்களில் சிறு மா மனிசர் அமிழ்தலும், “ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கமையில் நிற்றலும் கொள்க.
21-நீர் வேண்டியவன் துளி நாக்கு நனைக்கக் கிடைத்தல் போதும் என்பன்; “கூரார் ஆழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால், வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே”

1-பெய்ய வேண்டும் இடமளவும் சென்று பெய்யும் மேகம்; எம்பெருமான் “வந்தருளி யென்னெஞ்சிடங் கொண்ட வானவர் கொழுந்து என்று ஆங்காங்குச் சென்று அநுக்கிரகிப்பன்.
2-மின்னலுள்ள காலம் நீர் நிரம்பி யிருக்கும் மேகம்;எம்பெருமானுக்கும் பிராட்டியோடு கூடி யிருக்கும் காலத்தில்
கிருபா ரசம் மிஞ்சி யிருக்கும். “இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது; அஃது இல்லாமையால் இராவணன் முடிந்தான்” என்ற முமுட்சுப்படியின் திவ்விய ஸூக்தியும் காண்க.
(3) மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்; தனக்கு உபதேசித்தவர்களுக்கும் உபதேசிக்குமவன் எம்பெருமான்.வசிட்டாதிகளுக்கும் ஞானப் பிரதானம் பண்ணினான் இராமபிரான். சித்திரகூடத்தில் வசிட்டன் பெருமாளிடம் சில தரும ஸூஷ்மங்கள் கேட்கப் பெற்றானாயிற்று.
(4) பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும் மேகம்;நெஞ்சுலர்ந்து பேசினான்றோ எம்பெருமானும், திரௌபதிக்கு ஆபத்திலே அருகே யிருந்து உதவப் பெறாத குறைக்காக-
5- இன்ன காலத்திலே மேகம் பெய்யு மென்று அறுதி யிட வல்லார் எவரும் இலர். பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யா தொழியவும், பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் எண்ணாததாகவும் வந்து பெய்யவும் கடவது மேகம்; எம்பெருமான் படியும் அப்படியே; “வந்தாய் போல வாராதாய்! வாராதாய் போல் வருவானே”திரௌபதிக்கு ஆபத்திலே வந்து முகங் காட்டா தொழிந்தான்;விரும்புதலை எதிர்பாராமல் “தாவி யன்றுலகமெல்லாம் தலை விளாக் கொண்டான்”
6-‘வனத்திடரை ஏரியாக வெட்டியாயிற்று. நீ மழை பெய்தாக வேண்டும்” என்று வளைப்பிட வொண்ணாதது மேகம்; எம்பெருமான் படியும் இங்ஙனமாயிறே””பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா யூழி யூழித் தவஞ் செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கன்றருள வந்தவனிறே”
7- ஜல ஸ்தல விபாக மின்றியே பெய்யும் மேகம்.வேடன், வேடுவச்சி, பட்சி, குரங்கு, சராசரம், இடைச்சி,இடையர், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், பிண விருந்து வேண்டடிசிலிட்டவர், அவர் மகன், அவன் தம்பி ஆனை அரவம், மறையாளன் பெற்ற மைந்தன்” ல் என்னும் படியிறே பகவத விஷயீகாரம் பெற்றவர்களிருப்பது.
வேடன் -குகன்;வேடுவிச்சி – சபரி; பட்சி சடாயு; குரங்கு – சுக்கிரீவன், சராசரம் அயோத்தியில் வாழும் சராசரம்; இடைச்சி சித்தயந்தி; இடையர் -ததிபாண்டன்; தயிர்த் தாழி – ததி பாண்டனுடைய தாழி; கூனி -கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுக்குச் சந்தனம் தந்தவள்; மாலாகாரர்-கண்ணன் காலத்து, பக்தர்; பிணவிருந்து இதையிட்ட கண்டாகர்ணன்; வேண்டடிசில் இட்டவர் பக்த விலோசன ரிஷிபத்தினிகள்; அவன் மகன் – பிரகலாதன்; அவன் தம்பி -வீடணன்;ஆனை கஜேந்திராழ்வான்; அரவம் -சுமுகன்; மறையாளன்-
கோவிந்த சாமி; பெற்ற மைந்தன் -மார்க்கண்டேயன் ஆகிய பதினெண்மர்.
8-மேகம் சரத் காலத்தில் பெரு முழக்க மிட்டுப்போய் விடும், மழை பெய்யாது; பெய்யுங் காலத்தில்ஆடம்பரமின்றிப் பெய்யும். எம்பெருமான் குசேலனுக்கு அருள் செய்தபடி இங்ஙனேயிறே.
9-விராட பர்வ காலஷேபத்துக்கு வரும் மேகம்;பகவத் விஷய காலஷேபங்களிலே வந்து நிற்பான் எம்பெருமான். ஸ்ரீ சைலேஸ தயா பாத்ர (தனியன்) என்று வந்தானிறே அரங்கநாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே.
10-சுக்திகளிற் பெய்து முத்தாக்கும் மேகம்;அடியார்க்கு இன்ப மாரியாகிய (திருவாய் 4.5:10) கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆசாரியர்களிடத்தே பிரவகித்து மிக்க பயன் விளைக்குமிறே.
(11) “விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்கள்”’+ இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்;எம்பெருமான் றானும் “இன்னார் தூதன் என நின்றான்”(பெரி.திரு. 2.2:3); கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான். தூதனாய் மன்னவனால் சொல்லுண்டானிறே”(மேலது 11.5:7)
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்;எருக்கிலை போல்வன வீழ்ந்தொழியும்; ஆகவே மழை சிலர்க்குத் தீங்கு, சிலர்க்கு நன்மை. எம்பெருமான் படியும் அப்படியே. “கஞ்சன் நாள் கவர் கருமுகில்; எந்தாய்”
“தாயர் மகிழ ஒன்னார் தளர”# இத்யாதி.
13-“எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள், மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்” என்கின்றபடியே பயிர்கள் வேறு புகலற்று எதிர்பார்க்கப் பெற்றிருக்கும் மேகம்; “களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்” என்று அநந்ய கதிகளால் எதிர்ப்பார்க்கப் படுகை ஒக்குமிறே.
(14) “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கும் துப்பாய தூஉம் மழை’ (குறள். 12) என்கின்றபடியேஅன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேதுவாகையாலே போக சாதனமாயும் விடாய் தீரப் பருகுகையாலே ஸ்வயம் போக்கியமாயுமிருக்கும் மேகம்; அடைவிப்பானாயும் அடையப் படுபவனாயுமிறே எம்பெருமான் இருப்பது.
15-எத்தனை கண்ண நீர் விழ விட்டாலும் விருப்பமில்லாதவன் என்று வாளா கிடக்கும் மேகம்; பரதாழ்வான் பலருடனே சித்திர கூடத்தருகே போந்து கண்ண நீரை விழ விட்டு வேண்டின விடத்தும் தம் மனோ ரதம் பெறாமலே மீண்டானிறே’

1-இரத்தினத்தைச் சொந்தமாகவும் அனுபவிக்கலாம்;விற்பனை செய்து வேறு பொருள்களையும் பெறலாம்.அப்படியே எம்பெருமானைப் புருஷார்த்தமாகவும் கொள்ளலாம்;அவனை உபாயமாக்கி ஐஸ்வர்ய கைவல்யாதிகளான வேறு புருஷார்த்தங்களையும் பெறலாம்.
2-இரத்தினத்தின் மதிப்பை அறியாதவன் அற்ப விலைக்கு விற்பன்; மதிப்பறிந்தவன் உள்ள விலைக்கு விற்பன்; உத்தம அதிகாரி அதனை விற்பனை செய்யாமல் மார்பிலணிந்து அநுபவித்து மகிழ்வான். இங்ஙனமே எம்பெருமானைக் கொண்டு ஐஸ்வரியம் போன்ற கீழான பலன்களைக் கொள்வாரும், அவனை மோஷ உபாயமாகக் கொண்டு மோஷ புருஷார்த்தத்தைக் கொள்வாரும், அவனை’எனக்குத் தேனே, பாலே, கன்னலே அமுதே’ என்று தாமே அநுபவிப்பவர்களுமாக இருப்பார்கள்.
3-இரத்தினத்தை இழந்தவன் கதறி யழுவான்.எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. இராம ரத்தினத்தை இழந்த பரதன் அவையில் கதறி யழுதானன்றோ? “பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்”: ‘இன்பத்தை இழந்தபாவியேன் என தாவி நில்லாதே” “உன்னைக் காண்பான் நான் அலப்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன் தொழுவன் ‘ என்றிப்படி யெல்லாமாக கதறி யழுவார்கள்.
4-இரத்தின முடையவன் மார்பு நெறிப்பன்.எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் “எனக்கு யாரும் நிகரில்லையே” “மாறுள்ளதோ இம் மண்ணின் மிசையே””எனக் கென்னினி வேண்டுவதே “இல்லை யெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்கள்.
5-இரத்தினம் பெற்றுள்ளவனை உலகமெல்லாம் தொடரும். எம்பெருமானைக் கைக் கொண்டவனையும் அப்படியே.
6-இடையில் ஒரு புருஷனைக் கொண்டே இரத்தினம் வாங்கப்படும்; புருஷகாரமின்றி எம்பெருமானைப் பெற முடியாது. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து. “
7-இரத்தினத்திற்குச் சிலசில ஆதாரங்களில்(ஆஸ்ரயங்களில்) மதிப்பு அதிகப்படும். எம்பெருமானுக்கும் அப்படியே. ஆழ்வார்கள் திரு வாக்கில் புகுந்து புறப்பட்ட திருப்பதிகளில் அன்றோ எம்பெருமானுக்கு மதிப்பு அதிகம்.
8-இரத்தினம் ஒளியை விட்டு இராது; எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான்.
9-இரத்தினத்திற்கு ஒளியால் மகிமை; எம்பெருமானுக்கும் பிராட்டியால் ஏற்றம்.
10-இரத்தினத்திற்கு ஒளியால் ஏற்றமென்றாலும்,இரத்தினத்தின் சுதந்திரப் பெருமைக்கு ஒரு குறை இல்லை; எம்பெருமானுக்கும் அப்படியே.
11-இரத்தினம் கடல், மலை முதலிய இடங்களில் உள்ளது. எம்பெருமானும் திருப்பாற்கடல், திருமலை முதலான இடங்களில் உள்ளான்.
12-இரத்தினம் எவ்வளவு உயர்ந்த தாயினும் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி இருக்கும். எம்பெருமானும் பரத்துவத்தை மறைத்து (அர்ச்சையில் சௌலப்பியத்தைக் காட்டுகின்றவனன்றோ?
13-இரத்தினம் பெற்றவர்கள் இரவும் பகலும் கண்ணுறங்கார்; எந்த
வேளையில் யார் கொள்ளை கொள்வாரோ என்று துஞ்சாதிருப்பார்கள். எம்பெருமானைப் பெற்றவர்களும் அப்படியே. “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்கின்றபடியே காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை;கண்ட பின்பும் இல்லை.

நிதியையும் வைத்த மாநிதியையும் ஒப்பு நோக்கி நம் ஸ்வாமிகள் அநுபவித்தவை: ஸ்வாமிகளின் சிந்தனை யோட்டம்.
1-புதைத்து வைக்கப் பெறும் பொருள் ‘நிதி’எனப்படும். தைத்ரீய உபநிடதத்தினால் எம்பெருமான் நிதியாக அறியப் பெறுபவன். நிலத்தினுள் புதைத்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி;எம்பெருமானாகிய நிதி வைத்த மா நிதி அங்ஙனமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத் தக்கது என்ற வேற்றுமை கண்டு மகிழத்தக்கது.
(2) நிதியானது தன்னை யடைந்தவர்களை இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது; எந்த நேரத்தில் யார் கொள்ளை கொள்வாரோ என்ற அச்சத்தால் துஞ்சாதிருப்பர் நிதியுடையார். எம்பெருமானும் அப்படியே. “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” . காண்பதற்கு முன்பும் உறக்கம் இல்லை;கண்டாலும் காதல் மிகுதியால் உறங்குவதில்லை.நிதியானது ‘சித்தாஞ்சனம்’ அணிந்த சில பாக்கியவான்களுக்கே கிடைக்கும்; எம்பெருமானும் ‘பக்தி சித்தாஞ்சனம்’பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்கியசாலிகட்கே கிடைப்பன்-
3-நிதி யுடையவன் மார்பு நெறிப்பன்; எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் ‘எனக்கு ஆரும் நிகரில்லையே ‘மாறுள்ளதோ இம் மண்ணின் மிசையே” ‘இல்லை யெனக்கெதிரில்லை யெனக், கெதிரில்லை யெனக் கெதிரே என்று செருக்கிப் பேசுவார்கள். நிதி படைத்துள்ளவனை உலகமெல்லாம் போற்றிப் புகழும். எம்பெருமானைக் கைக் கொண்டவர்களையும் அறிஞர் புகழ்வர்.
4-நிதியை இழந்தவன் கதறி யழுவன். எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. ஸ்ரீ ராமனாகிய வைத்தமா நிதியைஇழந்த பரதாழ்வான் சபையில் கதறி யழுதானன்றோ?“பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்” “இன்பத்தை இழந்த பாவியேன் என தாவி நில்லாதே “எழில் கொள் நின் திருக் கண்ணின் நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே” * “உன்னைக் காண்பான் நான் அலம்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன்”” “என சொல்லிப் புலம்புவனே”” என்று இப்படி யெல்லாம் கதறி யழுவார்கள் எம்பெருமானுடைய சிந்தனையை இழந்து ஒரு கணப் பொழுது கழியப் பெற்றாலும் கள்வர் எல்லா சொத்துகளையும் கொள்ளை கொண்டால் எப்படி கதறி யழக் கூடுமோ அப்படிக் கதறி யழ வேண்டும் என்பர்.

ஐதிகங்கள்
அம்மங்கி அம்மாள் என்ற ஓர் ஆசிரியர் நோயால் வருந்தி யிருக்க, நஞ்சீயரும்?நம்பிள்ளையும் அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றனர். அப்போது அவர் மிகவும் கிலேசப் படுவதைக் கண்டு நஞ்சியர் ‘ஸ்வாமின்! தேவரீர் சாமானிய மனிதரன்றே;எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணி யிருக்கின்றீர்; குணாநுபவத் தாலல்லது போது போக்கி அறியீர்; இப்படி யிருக்க உம்மை மற்றவர்களைப் போல இப்படிக் கஷ்டப்படுத்துகிறானே (இறைவன்) என்றாராம்.அதற்கு அவர் “நீயாள, வளையாள மாட்டோமே” என்றானன்றறோ கலியன் பாசுரம். எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டால்)கிலேசப்பட்டு தானே ஆக வேண்டும்” என்றாராம். பிறகு வெளியே எழுந்தருளிய பின் நஞ்சீயர் நம்பிள்ளையை நோக்கி ‘பார்த்தீரா இவருடைய எண்ணத்தை? என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்!” என்று அருளிச் செய்து மகிழ்ந்தாராம். (பெரி. திரு. 3.6:9 உரை -புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ் வார்த்தை சொல்லுகிறது விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்)

2- ‘குடதிசை முடியை வைத்து’ (திருமாலை19) என்ற பாசுர உரையில் காணப் பெறுவது. “மேலைத் திக்கு உபய விபூதிக்கும் தலைமை வகித்தலைத் தெரிவிக்குமாறு தான் சூடின திருவபிடேகத்தை யுடைய திருமுடியை வைப்பதானாலும், கீழைத் திக்கு – சகல லோகமும்,உய்விக்கும்படி சரணமடையக் கூடிய தன் திருவடிகளை நீட்டுவதனாலும், வடக்குத் திக்கு – முரட்டு சமஸ்கிருதம் நடையாடுவதாகி ஆழ்வார்களின் செவிக்கினிய ஈரச் சொல் நடையாடாத தேசமாகையாலே அத் திக்கிலுள்ளா ரெல்லாரும் ஈடேறுவதற்கு ஏற்பட வேண்டிய பின்னழகை யெல்லாம் காட்டுவதனாலும், தெற்குத் திக்கு – தனது அந்தரங்க பக்தனான விபீஷணாழ்வானுக்காகத் தனது இரு கண்களை வைத்து அன்போடு நோக்குவதனாலும் என இவ்வாறு நான்கு திக்குகளும் பயன்படும் என்க. விபீஷணாழ்வான் சிரஞ்சீவியாய் என்றும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றான் என்பது நூற் கொள்கை.

3- ‘அமலனாதி பிரான்’ (1) – இதன் உரையில் : பிள்ளை திருநறையூர் அரையரைச் சிலர்”பெரிய பெருமாளை அநுபவிக்க இருந்த இந்த ஆழ்வார்(திருப்பாணாழ்வார்) திருவேங்கடமுடையான் பக்கம் போவானேன்?” என்று கேட்க, “ஆற்றிலே அழுந்துகிறவன் ஒரு காலைத் தரையில் ஊன்றினால் பிழைக்கலாமோ என்று காலந் தாழ்க்குமாப் போலே, இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவராகையாலே திருமலையில் கால் தாழ்ந்தார்” என்றாராம். “ஒருவனைக் கவி பாடும்போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவி பாட வேணும்;பரம பதத்தில் நின்றும், வட மதுரையிலே தங்கித் திருவாய்ப்பாடிக்கு வந்தாப் போலே வைகுண்டத்தில் நின்றும் திருமலையிலே தங்கியாய்த்துக் கோயிலுக்கு வந்தது;அவ் வரலாற்றைப் பாடுகிறபடி” என்றும் ஒரு கால் அருளிச் செய்தாராம்.

4-‘கொண்டல் வண்ணனை‘ (அமலனாதி10) என்பதன் உரையில் வருவது. கூரத்தாழ்வான் தம் சுந்தர பாஹு ஸ்வத்தில் பண்டு யசோதைப் பிராட்டி முத்தங் கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்விய கன்னங்களில் திகழா நிற்கும் என்று அநுபவித்தாற் போல,இவரும் (திருப்பாணாழ்வார்) பண்டு வெண்ணெய் உண்ட முடை நாற்றம் இன்னும் பெரிய பெருமாள் திருப் பவளத்திலே கமழா நிற்பதாகக் கருதி அநுபவிக்கிறார் ‘வெண்ணெய் உண்ட வாயன்’ என்று தசரத சக்கரவர்த்தி தன்னுடைய அரசு ஐஸ்வர்யத்தைப் புசிக்கைக்கு ‘எனக்கு ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெருமாளைப் (இராமனைப்) பெற்றதைப் போல நந்தகோபரும் “கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன்” என்றபடியே திருவாய்ப்பாடியில் பால் முதலானவற்றின் நிறைவு அடங்கலும் (கவ்ய ஸம்ருத்தி அடங்கலும்) பாழ் போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை யாய்த்து ஸ்ரீ கிருஷ்ணன். பெரிய பெருமாள் கொறுட்டை (உதட்டை) முகர்ந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்குமாம்.

5- ‘அருள் கொண்டாடும்‘ (கண்ணி நுண்-8) என்பதன் உரையில் வருவது. திருவாய் மொழியில்“எண்ணாதனகள் எண்ணும் நம் முனிவர் இன்பம் தலை சிறப்ப, பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி” (10.7:3) என்றவிடத்து அருள் செய்யும் பொருள் சிறப்பை ஈண்டு அநுசந்திக்க, எண்ண முடியாதவற்றை எண்ணுகின்றவர்களான நம் முனிவர்கள் பேரானந்தம் பெறும்படியாகத் திருவாய்மொழி அவதரித்ததாம்.எண்ணாத வற்றை எண்ணுகையாவது என்? எனில்:திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு பல பெரியோர் அவை கூடி “எம்பெருமானுடைய ஸ்வரூப குண விக்கிரக விபூதிகளை யெலாம் முற்றும் நிறைவாகப் பேச வல்ல பிரபந்தம் ஒன்று கூட இல்லை; அப்படிப்பட்ட பிரபந்தம்ஒன்று அவதரிக்க வேணுமென்று நாம் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேணும்” என்று பேசி எழுந்து போனார்களாம். அவர்களே திருவாய்மொழி அவதரித்த பின்பு மறுபடியும் ஒரு பேரவை கூட்டி ‘எம் பெருமானுக்கு இன்னமும் குண விக்கிரக விபூதிகள் உண்டாக வேணும்’என்றார்களாம். உள்ள குண விக்கிரக விபூதிகளை யெல்லாம் திருவாய்மொழியில் பேசி முடித்து விட்டார் ஆழ்வார் என்பது இதன் கருத்து.

5- ‘முற்ற முத்துக் கோல் துணையா’ (பெரி.திரு. 1.3:1) என்ற தொடரில் ‘கோல் துணையா என்ற விடத்து வியாக்கியானத்தில் இரு ஐதிகங்கள்-
நஞ்சீயர் சந்நியாச்ரமத்தை மேற் கொண்ட நிலையில் திரிதண்டம் (முக்கோல்) தரித்துக் கொள்ளும் போது ‘ஓ திரி தண்டமே! நீ எனக்குத் துணையாயிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற பொருளை யுடைய மந்திரத்தை (ஸகர மா கோபாய ) உச்சரிக்க வேண்டும்என்று கேட்டு “எல்லாவற்றையும் அறிய வல்லவரையும் முழு ஆற்றலை யுடையவரையும் உள்ள எம்பெருமானையே துணையாகப் பற்ற வேண்டி யிருக்க, அசேதநமான தண்டத்தை நோக்கி இங்ஙனம் சொல்லும்படியாக நேர்ந்ததே” என்று சாதித்தாராம். சாத்திர விதிப்படி கோலைத் துணை கொள்ள வேண்டியது அங்கு; கிழத் தனத்தில் கோலைத் துணை கொள்வது ஆற்றலற்றமையினாலேஇங்கு.
இன்னுமோர் ஐதிகம் : நஞ்சீயர் பட்டர் திருவடிகளுக்கு அந்தரங்கராய் இருக்கிற நாளிலே ஒரு கைசிக துவாதசி யன்று பட்டர் பிரம்ம ரதத்தில் எழுந்தருளித் திருவீதி அலங்கரிக்கப்பட்டவாறே நஞ்சீயரும் ஸ்ரீபாதம் தாங்கப் புக, ‘உத்தமாஸ்ரமியாய் திரி தண்ட தாரியான உமக்கு இக் காரியம் தகாது’ என்று பட்டர் முதலானோர் மறுத்துக் கூற, நஞ்சீயர் “எனக்குத் துணையாகி என்னை இரட்சிக்க வேண்டும்” என்ற மந்திரத்தைச் சொல்லி ஏற்றுக் கொண்டஇந்த முக் கோல் தானே இன்று எனக்கு விரோதி யாகின்றதோ?இக் கோல் எனக்குத் துணை யல்லவோ? ஸ்வரூப ரட்சணத்துக்கு இக் கோல் இடையூராயின் இஃது எனக்கு வேண்டா” என்று சொல்லித் திரி தண்டத்தை விட்டெறியப் போனாராம்.அப்போது அவருடைய ஆசாரிய பக்தியைக் கண்டு அனைவரும் வியந்தனராம்.

6- ‘ஓதலும் உன் பேரன்றி மற்றோ தாள்'(பெரி.திரு. 2.7:5) இந்தப் பாசுரத்தின் (இது தாய்ப் பாசுரம்)இக் காட்டிய அடிக்கு ஓர் ஐதிகம். திருவாய்ப்பாடியில் கண்ணன் பிறந்து வளரும் காலத்தில் ஓர் ஆய மங்கை இடைவிடாது கண்ண பிரானையே சிந்தித்துக் கொண்டு வியாமோகம் அடைந்திருந்தாள்; அது கண்ட அவன் மாமியானவள் அந்த சிந்தனையை மாற்றி விடக் கருதி, தயிர் பால் நெய் முதலியவற்றை அவளிடம் கொடுத்து ‘இவற்றை விற்று வா’ என்று சொல்லி யனுப்பினான். அம் மங்கை கண்ண பிரானை யன்றி வேறொன்றையும் அறியாதவளாகையாலே, மாமியின் நிர்ப்பந்தத்துக்காகக் கூடையைத் தலையிலே சுமந்து கொண்டு, தெரு வழியே நடந்து செல்லும்போது, ‘தயிர்! பால்! நெய்!’ என்று விற்பது தவிர்த்து “கோவிந்தன் வாங்கலையோ கோவிந்தன்! தாமோதரன் வாங்கலையோ தாமோதரன்! மாதவன் வாங்கலையோ மாதவன்!” என்று இங்ஙனே கண்ணனின் திருநாமங்களையே கூவிக் கொண்டு சென்றாளாம். அது போலவே இப் பரகால நாயகியும் ‘ஓதிலும் உன் பேரன்றி மற்றோதாள்’ என்றவளாக உள்ளாள்.

7-‘வாத மா மகன் ‘ (பெரி.திரு. 5.8:2) என்ற திருமொழிப் பாசுரத்தின் ‘கோதில் வாய்மையி னாயொடும்உடனே உண்பன் நான்’ என்ற அடிக்கு ஓர் ஐதிகம்.முன்பெல்லாம் வாழை இலையில் தாமரை இலையில் உள்ளது போலவே இடை நரம்பு இல்லாமல் இருந்ததென்றும், இப்பொழுது இராமன் அநுமனைத் தன் எதிரில் அமரச் செய்து தனது இலையில் ஒரு பாதியிலேயே அவன்உண்ணுமாறு அவ்விலை நடுவில் தனது கையால் ஒருவரையறை கீறினானாக, அது முதல் சங்கற்பத்தால் அவ்விலையில் இடை நரம்பு ஏற்பட்டதென்றும் கூறுவர்.இராமபிரான் ஒக்க உண்ட செய்தி வாஸிஷ்ட இராமாயணத்தில்உள்ளது என்பர்.

8- ‘பண்டை நாளாலே‘ (திருவாய். 9.2:1) என்ற திருவாய்மொழியின் உரையில் இரண்டு ஐதிகங்கள் -கோயில் சீய்த்து (இரண்டாம் அடியில் உள்ளஇதற்கு) ஐதிகம். திவ்விய தேசங்களில் பண்ணும் கைங்கரியங்களில் தலையாயது இது. “கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினைக் களையலாமே‘ (திருவாய்10.2:7) என்று மேலும் அருளிச் செய்வர். திருவலகிடுதல்,,மெழுகுதல், கோலமிடுதல் முதலியன செய்தலையே’கோயில் சீய்க்கை’ என வழங்குவர். இங்கே ஈட்டில் திருக் கண்ணமங்கை யாண்டானின் இதிகாசம் ஒன்றுஉள்ளது. அஃது இது : திருங்கண்ணமங்கை யாண்டான் திருக்கண்ணமங்கை என்னும் திவ்விய தேசத்திலே ஒருமகில மரத்தடியிலிருந்து சருகைத் திரு அலகிடா நிற்க, கூட வாசித்து நாத்திகராயிருப்பான் ஒருவன் ‘பகவான் உபாயம்,நாம் வேறு பயன் கருதாதவர்கள், இப்போது செய்யும் பணிக்குப் பயன் என்ன?’ என்றானாம். அப்போது திருக்கண்ண மங்கையாண்டான் திருஅலகு இட்ட இடத்தையும், திருஅலகு இடாத இடத்தையும் காட்டி,’இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே;இங்கொரு பலம் இல்லை என்று தோற்றி யிருந்ததோ? என்று பணித்தாராம். இங்கு அறியவேண்டுவதாவது; நேரில் காணும் பயன் என்றும் நேரில் காணாப் பயன் என்றும் இருவகைப்படும். சந்நிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு பயன் கருதாது செய்வதனால் ஒரு குறையும் இல்லை. இது பயனற்றது என்று கருதுதல் வேண்டா; திருவலகிடாத இடம் கண் கொண்டு காண வொண்ணாததாயும், திருவலகிட்ட இடம் கண்ணால் காண இனிதாயிருப்பதுவும் பயன் காட்டப் பெறுகின்றன.

9-மேற்கட்ட பாசுரத்தின் மூன்றாவதுஅடியில் ‘தாமரைக் கண்களால் நோக்காய்‘ என்ற அடியின் பகுதியின் உரையில் கண்ட ஐதிகம் வார்த்தையிலே தோற்றாத அன்பும் நோக்கிலே அநுபவிக்கும்படி குளிர நோக்கி அருள வேண்டும். கோயிலில் (திருவரங்கத்தில்) பிள்ளை தேவ பெருமாள் அரையர் இப் பாசுரத்தைச் சேவிக்கையில் ‘உன் தாமரைக் கண்களால் நோக்காய்’என்று ஒரு தடவை சொல்லி நிறுத்தாமல் ‘நோக்காய்,நோக்காய், நோக்காய்….’ என்று பலகாலும் சொல்லிக் கொண்டிருந்து மேலடியிலே போக மாட்டாதே நின்றாராம்.அப்போது கோஷ்டியிலே வீற்றிருந்த அவரது
திருத் தந்தையாரான ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து “பிள்ளாய் நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்படும்படி இங்ஙனம் பலகாலும் சொல்லி
நிர்ப்பந்திக்கலாமோ? அழகிய மிடற்றைத் தந்து, நல்ல பாசுரத்தைத் தந்து, பிள்ளைகளையும், செல்வத்தையும் தந்தருளி யிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைந்து இன்னமும், ‘நோக்காய் நோக்காய் … என்றால் ‘இஃது என்னே!மேலே பாடு’ என்றாராம்.

10- ‘கெடும் இடராய எல்லாம் கேசவா என்ன’ (திருவாய் 10.12:1) என்ற பாசுரத்தின் ‘கொடு வினை செய்யும் கூற்றின்’ என்ற அடியின் பொருளுரைக்கும் போது வருவது:யமனுடைய துன்பத்திற்கு அஞ்ச வேண்டா என்னுமதற்கு ஐதிகம் காட்டுகிறார் ஈட்டாசிரியர். ஒரு திரு வேட்டையிலே பட்டர் திரு வூற்றங்கரையிலே பேரோலக்கமாக இருக்க, ‘மாலைப் பொழுது ஆயிற்று’ என்று சிலர் விண்ணப்பம் செய்ய, “நாம் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒரு நாளும் செய்ய வேண்டிய காரியத்திலே சிறிது தாழ்கின்றோம் என்றால் இது குற்றமாக எமன் கேட்கவோ? ஓர் அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கொடு வரா நின்றால் அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான்.ஒருவன் பெயரை வாசித்தால் ‘ஓம் காண்! அது கிடக்க;மேலே செல்’ என்றால், பின்னை ஒரு நாளும் அப் பெயரை எடுத்து வாசிக்கப் பெறான் காண்; இந்த விஷயத்திலே’உனக்காகிக் தொண்டு பட்ட, நல்லேனை வினைகள் நலியாமை நம்பு தம்பி” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரம் அறியீர்களோ? அவனுக்குக்காகத் தொண்டுபட்டுப் போது போக்குபவர்களை வினைகள் நலியுமோ?’ என்று அருளிச் செய்தாராம்.

11-‘புண்ணியம் செய்து நல்ல‘ (திருவாய்10.2:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘எந்தை நாமம்‘என்பதிலுள்ள ஐதிகம். இடறினவன் ‘அம்மே’ என்னுமாறு போல திருநாமம் சொல்லுவதற்கு ஒரு தகுதியைத் தேடிக்கொள்ள வேண்டா. நஞ்சீயர், “திருநாமம் சொல்லும் போது பக்தி யுடையவனாய்க் கொண்டு சொல்ல வேண்டுமோ?”என்று பட்டரைக் கேட்க, ‘கங்கையிலே முழுகப் போமவனுக்கு வேறு ஓர் உவர்க் குழியிலே முழுகிப் போக வேண்டுமோ? மேல் உண்டான நன்மையைத் தருகிற இது தகுதியையும் தர மாட்டாதோ?’ என்று அருளிச் செய்தாராம். திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்.

12- ‘கடு வினை களையலாகும்‘ (திருவாய்.10.2:8). என்ற பாசுரத்தில் ‘படமுடை அரவில்… சொன்னோம்’(3-4 அடிகள்) என்ற அடிகளில் அநுசந்திக்கும் ஐதிகம்.ஆளவந்தார்க்கு எல்லாப் பொருளையும் உபதேசித்த மணக்கால் நம்பி ‘யோக ரகஸ்யம் மாத்திரம் குருகைக் காவலப்பனிடத்திலே பெறக் கடவீர்!’ என்று சாதித்திருந்த படியாலே, ஒருகால் அதனை நினைத்துக் குருகைக் காவலப்பனிடம் சென்று ‘அடியேனுக்கு யோக ரகஸ்யத்தை அருளிச் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார். அவரும் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து உபதேசம் பெறுமாறு சொல்லிப் போக விட்டார். ஆளவந்தாரும் நம்பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளினார். அந்தச் சமயம் திருவத்யயநோத்சவம் நடை பெற்றுக் கொண்டிருந்தது.அரையர் கோட்டியிலே சேர்ந்த அவர் சேவிக்கும் திருப்பாசுரங்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். அரையர்’கடுவினை களையலாகும்’ என்கின்ற இந்தப் பாசுர
அளவிலே வரும் போது, எழிலணி அனந்தபுரம் படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக் கறியச் சொன்னோம் என்ற அடிகளைச் சேவிக்கும் போது, ஆளவந்தார் திருமுகத்தைப் பார்த்து ஊன்றி உறுத்திச் சேவிக்க,,ஆளவந்தாரும் இதைக் கேட்டு ‘ஆழ்வாருடைய தமர்களிலே தாம் சேர வேண்டில் திருவனந்தபுரம் சென்று சேவித்து வரப் பிராப்தம்’ என்று சொல்லிக் கொண்டே அப்போதே ஸ்ரீபாதத்தை உடையாரைக் கொண்டு நம்பெருமாளிடம் விடைபெற்றுப் பயணமாகித் திருவனந்தபுரத்திற்கு எழுந்தருளி அனந்த பத்மநாபனை மங்களாசாசனம் செய்து வாழ்ந்து வந்தார்.° இந்த நிலையில் குருகைக் காவலப்பன் எழுதித்தந்த சிறு முறியைப் பார்க்க நேர்ந்த அந்நாளே அவர்குறிப்பிட்ட நாளாக இருந்தது. உடனே துணுக்குற்று அலைந்து ‘ஐயோ, நாம் நினைத்தவுடன் எங்கும் சென்று சேரும் ஆற்றலுடைய பெரிய திருவடியும் அல்லோம்; சிறிய திருவடியும் அல்லோம். அங்குச் சென்று சேர்வதற்கு ஒரு புட்க விமானம் பெற்றிலோமே’ என்று சோகித்து எழுந்தருளி யிருந்தார்.

இங்கே ஈட்டு ஸ்ரீசூக்தி : “திருவத்யயனம் பாடா நிற்க இதைக் கேட்டருளி ஆளவந்தார் ‘நமக்கு ஆழ்வாரோடே ஒரு சம்பந்தம் உண்டாக வேணும்’ என்று அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு (அனந்தபுரத்துக்கு) எழுந்தருளினார்”

13- “வானேற வழி தந்த வாட்டற்றான் பணி வகையே” (திருவாய். 10.6:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் ‘நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே (இறுதி அடி) என்பதற்கு ஐதிகம். பரமபதம் கிட்டிற்று என்னாக் கடுகக் கால் வாங்கிப் போகப் பாராதே காண்! பல நாட்கள் நம்மைக் குடிமக்கள் ஆக்கி எளி வரவு படுத்தின இவ்வுலக வாழ்க்கையைப் (சம்சாரத்தைப்) புரிந்து புரிந்து பார்த்துச் சிரி; ‘உன்னை அடி யறுத்தோமே'(உன்னை வென்றோமோ) என்று பார்த்துச் சிரி” என்கின்றார்.பின்பழகிய மணவாளப் பெருமாள் அரையர் ஒரு நோயால் வருந்தா நிற்க திருவரங்கநாதன் அவருக்குப் பரமபதம் கொடுக்கத் திருவுள்ளம் பற்றித் திருமாலை, திருப்பரிவட்டம் முதலான வரிசைகளைக் கைவிட்டருளின அளவிலே,’நானேறப் பெறுகின்றேன். நரகத்தை நகு நெஞ்சே’ என்று இப்பாசுரத்தைச் சொல்லிக் கிரந்தியை (கட்டியைப்) பார்த்துச் சிரித்தாராம்.‘நரகத்தை நகு’ என்ற இவ்விடத்திற்கு’நரக லோகத்தைப் பார்த்துச் சிரி’ என்று சிலர் பொருள் கூறுவர். அது வேண்டா; சம்சாரத்திற்கு ‘நரகம்’ என்ற பெயராதலால் ‘சம்சார பூமி’ என்ற பொருளே ஈண்டுக் கொள்ளத் தகும்.

இதிகாசங்கள்
‘தேனுகன் ஆவி போயுக
(பெரி.திரு. 9.8:7) என்ற திருமொழியில் உள்ளது. கம்சனது ஏவுதலால் கழுதை வடிவம் கொண்டு காட்டுக்குள்ளே கண்ண பிரானை நலிவதற்காக வந்தவன் தேனுகன் என்னும் அசுரன். கண்ணபிரான் பலராமனோடும் இடைச் சிறுவர்களோடும் மாடு மேய்த்துக் கொண்டு, பழங்கள் அழகாக மிகுதியாகப் பழுத்து மணம் வீசிக் கொண்டிருந்த ஒரு பனங்காட்டை அடைந்து அப் பழங்களை விரும்பி உதிர்த்துக் கொண்டு வருகையில் அவ் வனத்துக்குத் தலைவனும்.கம்சன் பரிவாரத்தில் ஒருவனுமான கழுதை வடிவங் கொண்ட தேனுகாசுரன் சினம் கொண்டு ஓடி வந்து எதிர்த்துப் போர் செய்ய உடனே கண்ணன் அதி லாவகமாக அதன் பின்னங்கால்கள் இரண்டையும் பற்றி அவ் வசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படிப் பனை மரத்தின் மேலெறிந்து அழித்தனன் என்பது வரலாறு. இத்தகைய பல இதிகாசங்கள் தீபிகையை அழகு செய்கின்றன.

இதிகாசமும் ஐதிகமும் – ஓர் அற்புதக் கலப்பு : இந்த இரண்டும் கலந்த நிலையை ஸ்வாமியின் உரையில் கண்ணுறும் போது அது நமக்குத் ‘தேனும் பாலும் கன்னலும் அமுதும்’ கலந்து அநுபவிப்பது போன்ற நிலையைத் தருகின்றது.
“வேங்கடங்கள் மெய்ம்மேல்” (திருவாய் 3.3:6)என்ற அடிகட்கு ஸ்வாமி அருளும் உரை:
கடன்கள் சிலர்’கடன்கள் மேல் வினை முற்றவும் வேம் (இது)’ என்று அந்வயித்துப் பொருளுரைக்க. கடங்கள்-எம்பெருமான் நாம் செய்த பாவங்களை மன்னித் தருள்வது மாத்திரம் அன்றிக்கே பகைவர்கள் மேலும் போக்குவான்,,எத்தனையோ பிறப்புகளில் சஞ்சிதங்களாய் பழ வினைகள் மலை மலையாய்க் குவிந்து கிடக்கும் பாவங்கள் நம்முடைய சிறிய முயற்சியால் தொலைந்திடுமோ என்று ஐயுற்றார்களாம்; அவர்கட்குப் பட்டர் ரசோகதிகளுடன் ஓர் இதிகாசம் எடுத்துரைத்தாராம்; இராமபிரான் கடலரசனை நோக்கி மூன்று நாள் தரை கிடந்து தவம் செய்தார்;அவ்வளவில் கடலரசன் முகம் காட்டாதொழியவே சீறிச் சினந்து அக் கடல் மீது அம்பு தொடுத்து நின்றார். அது கண்டு கடலரசன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து, அவன் நாலடி வர நின்ற போது ‘உனக்காக அம்பு தொடுத்தேன்’என்றுரைக்க நாணப்பட்டு “உன் விரோதிகளைச் சொல்லுக,அவர்கள் மீது இவ் வம்பைச் செலுத்துகிறேன்” என்று சொல்ல, அப்படியே அவன் தன் விரோதிகள் இருக்குமிடம் குறிப்பிட அங்கே அம்பைச் செலுத்தி உபகாரம் செய்தாரென்து வான்மீகி இராமாயணத்தால் அறிகின்றோம். வணங்கிய மாத்திரத்தில் சேதநன் பண்ணின பாவங்களை யெல்லாம் மறப்பான் இறைவன் என்பதற்குஇந்த இதிகாசம் சான்று.
இவ் விடத்தில் இன்னுமோர் ஐதிகத்தையும் அருளிச் செய்வர் பட்டர். “பண்டு தலை மயிர் இல்லாத ஒருவன் நெல் அளந்து கொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று ‘மயிரைப் பேணாமல் நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!’ என்ன, ‘வந்தது என்!’ என்ன, ‘ஒன்று மில்லை கண்டுபோக வந்தேன்’ என்ன, ஆகில் ‘ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்து விட, அதனை அவன் கொடு வருகின்ற காலத்தில் எதிரே ஒருவன் வந்து,’இது பெற்றது எங்கே!’ என்ன, ‘உன்தனை மொட்டைத்தலையன் தந்தான்’ என்ன, அவன் சென்று அங்கே யுள்ள அவனைக் கண்டு ‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற, ‘அடா! என் நெல்லையும் கொண்டு என்னையும் வைது போவதே!’என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து ‘ஏன் தான் குழல்கள் அலைய அலைய, ஓடி வாரா நின்றாய்!’ என்ன,,’ஒன்று மின்று; இன்னம் ஒரு கோட்டை கொண்டு போகச் சொல்ல வந்தேன்’ என்றானாம்; அப்படியே கடலை முகங்காட்டுவித்துக் கொள்ளுகைக்காகக் காலைப் பிடிப்பது,கோலைக் கோலைத் தொடுப்பதாக நிற்க, அவன் வந்து முகங்காட்டினவாறே ‘உமக்கு அம்பு தொடுத்தோம்’ என வெட்கி ‘உன் பகைஞரைச் சொல்லு, நாம் இதனை விட’என்றார் அன்றோ?

சம்வாதம் என்பது சம்பாஷணை; உரையாடல். எ.டு.’வீவின்றி நின்றவர்’ (திருவாய் 7.5:11) என்ற தொடரை விளக்குவதற்கு நம்பிள்ளை நஞ்சீயரிடையே நடைபெற்றதைப் போன்றது.அதாவது, “அர்ச்சுனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ? இல்லையோ?” என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க அதற்கு அவர் அளித்த மறுமொழி: “அர்ச்சுனன் பெற்றானோ? இல்லையோ? என்ற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள்? என்று அவர்களை யெல்லாம் ஆய்ந்து பார்த்தா நாம் பற்ற வேண்டும்?எம்பெருமானுடைய அருளிச் செயல் என்று இவ்வளவே கொண்டு நாம் பற்ற வேண்டுமே யொழிய, பெற்றவர்களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்த தண்ணீர் கண்டால் அது குடித்து விடாய் தீர்க்கின்றோம்; இது குடித்து யார் யார் தாக விடாய் தீர்த்தார்கள்? என்று விசாரித்துப் பார்த்தா பருகுகின்றோம்? இல்லையே” என்று அருளிச் செய்தாராம்.

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனை கன்று மேய்த்துவிளையாட வல்லானை; வரைமீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே
-2-5-3-
வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை‘ என்பதற்கு நஞ்சீயர் பொருள் சொல்லும் போது வேறு விதமாகச் சொல்லா நிற்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளை யழகிய மணவாளப் பெருமாளரையர் “இவ் விடத்திற்கு பட்டர் அருளிச் செய்யும் பொருள் இப்படி யன்றே” என்று சொல்லி பட்டர் அருளிச் செய்த விசேஷார்த்தத்தை ஸ்மரிப்பித்தாராம்;மலை மேல் காட்டில் உள்ள தடாகங்கங்களில் தண்ணீர் குடிக்கப் புகுங்கால் இளங்கன்றுகளாகையாலே நீரிலே முன்னே யிறங்கிக் குடிக்க அஞ்சுமாம்; அக்கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழக்குவிப்பதற்காகக் கண்ணபிரான் தான் தன் முதுகிலே கையைக் கட்டிக் கவிழ்ந்து நின்று தண்ணீர்முது செய்து காட்டுவன்;அதைச் சொல்லுகிறது ‘வரை மீ கானில் தடம் பருகு‘என்று,

திருவாய்மொழியில் 27 பதிகங்கள் பெண் பாவனையில் பேசியனவாக அமைந்துள்ளன. பெரிய திருமொழியில் உள்ள அகப் பொருள் துறைகளில் அமைந்த பதிகங்கள்23; திருநெடுந்தாண்டகத்தில் உள்ளவை 2 பதிகங்கள்;மடல் 2 ஆக மொத்தம் 27 பதிகங்கள். இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் பொழுது அவர்கள் தோழி, தாய், மகள் என மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர்.
சம்பந்த உபாய பயன்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஞா வஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்” (138)(பிரஜ்ஞாவஸ்தை – மூன்று காலங்களையும் அறியும்
அறிவின் நிலை)-என்று ஆசாரிய ஹிருதயம் கூறும்.

ஞானாவஸ்தைகள்‘ என்னாமல் ‘பிரஜ்ஞாவஸ்தைகள்’என்பதற்குக் காரணம் என்ன? இந் நிலைகள் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக. திருவெட்டெழுத்தின் முப்பதப் பொருள்களைப் பற்றிய ஞானமும் இவர்கள் திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தேயன்றோ இருப்பது?’ஓம் நமோ நாராயணாய’என்பது திருமந்திரம். இதிலுள்ள மூன்று பதங்களும் முறையே மூன்று பொருள்களைச் சொல்லுகின்றன. °அவை சேஷத்துவம், பாரதந்திரியம், கைங்கரியம் என்பன-அதாவது ‘பிரணவம்’ சேஷத்துவத்தையும் (பிறருக்கு அடிமையாய் இருத்தலையும்), ‘நமஸ்ஸு’ பாரதந்திரியத்தையும் (பரன் அல்லது பகவானுக்கு வசப்பட்டு இருத்தலையும்), ‘நாராயனாய’ சேதநன் ஈஸ்வரனுக்குப் புரிய வேண்டிய கைங்கரியத்தையும்’ தெரிவிக்கின்றன-அகாரம் பகவானையும், அதில் ஏறி மறைந்துள்ள (தொக்கி நிற்கும்)நான்காம் வேற்றுமை சேஷத்துவத்தையும் (அடிமைத் தன்மையையும்), உகாரம் அந்த அடிமைத் தன்மையின் அநந்யர்ஹ சேஷத்துவத்தையும் (மற்றவருக்கில்லாமல் ஈஸ்வரன் ஒருவனுக்கே உரித்தாய் இருத்தலையும்)மகாரம் ஞானவானான ஜீவான்மாவையும் தெரிவிக்கின்றன.திருவெட்டெழுத்தின் மூன்று பதங்களாலும் குறிப்பிடப் பெறும் ஞானம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தே இருக்கும் என்பதை உணர்த்தவே தோழி தாய் மகள் என்ற மூன்று நிலைகளும் எல்லாக் காலங்களிலும் இருந்தன என்று சொல்லப் பெறுகின்றன.இதனை ஆசாரிய ஹிருதயம் அவஸ்தா திரயம் (திரயம் மூன்று; அவஸ்தை – நிலை) என்று பேசும்.

ஸ்ரீ வைணவத் திருத் தலங்களில் திருவரங்கம் ‘கோயில்‘ என்றும்,திருவேங்கடம் ‘திருமலை’ என்றும், சம்பிரதாயமாக வழங்கப் பெற்று வருகின்றன. நம்மாழ்வாரின் முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் திருவரங்கம், திருவெஃகா, திருவேங்கடம் என்ற மூன்று திருப்பதிகளின் பெயர்கள் மட்டிலும் (28, 26,31) வருவதால் இச் சிறப்புப் பெயர்கள் பெற்றனவாகப் பெரியோர் பணிப்பர். திருவரங்கம் அழகிய மணவாளனின் திருவடி ‘திருப் பொலிந்த சேவடி’ (பெரியாழ். திரு. 5.4:7)என்றும் கச்சி நகரிலுள்ள தேவப் பெருமாளுடைய திருவடி’துயரறு சுடரடி’ (திருவாய் 1.1:1) என்றும், திருவேங்கடமுடையான் திருவடி ‘பூவார் கழல்கள்‘ (திருவாய் 6.10:4)என்றும் சம்பிரதாயத் திருநாமங்களாகப் பெரியோர் பணிப்பர்.

திருவரங்க விமானம் ஏழு சுற்றுகளுக்கும் நடுவில் உள்ளது. பிரணவ ஆதாரமாயுள்ளது. நான்கு திருமறைகளும் சாத்திரங்களும் தூபிகளாயுள்ளன. பர வாசுதேவன் இதிலிருந்து சேவை சாதிக்கின்றான். ‘ஓம்’ என்ற பிரணவம் விமானமாகவும் ‘நமோ நாராயணாய’ என்பதிலுள் ஏழு எழுத்துக்கள் ஏழு திரு மதில்களாகவும் அமைந்துள்ளன.எட்டெழுத்து மந்திரத்தை ஆராய்பவருக்கு இறைவனின் தன்மை புலப்படுவது போல திரு அரங்கத்திற்குச் செல்பவர்கட்கும் இறைவன் நேரே புலனாவான் என்பது கருத்து.
விமானத்தின் முன்பகுதியில் நிற்பது காயத்திரி மண்டபம்; விஷ்ணு காயத்திரியின் அறிகுறியாக தூண்களால் அமைக்கப் பெற்றது (24 தத்துவங்களின் அறிகுறியாக இருப்பனவாகவும் கருதலாம்)

காஞ்சி வரதராசரைச் (அத்திகிரி’ அருளாளனைச்)சேவிக்க 24 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இவை 24 தத்துவங்களின் குறியீடுகள் : அதாவது தந் மாத்திரைகள் 5;ஞானேந்திரியங்கள் 5 ; கருமேந்திரங்கள் 5; பூதங்கள் 5;ஆக இவை 20. இவற்றுடன் பிரகிருதி 1, மகான் 1,அகங்காரம் 1. மனம் 1 ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன் (ஆன்மா),மகா புருடன் (பரமான்மா) சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது.

திருக்கோட்டியூர் திருக்கோயிலின் விமானம்’அட்டாங்க விமானம்’ என்பது; 90 அடி உயரம் உள்ளது.இதன் நிழல் தரையில் விழுவதில்லை. தஞ்சைக் கோபுரத்தின் நிழல் போல ஒன்றன்மீது ஒன்றாக மூன்று தளங்களை யுடையது. மேல் தளத்தில் திசைக்கொன்றாக எட்டு விமானங்கள் உள்ளன. எட்டு விமானங்கள் திருமந்திரத்தின் எட்டெழுத்துகள் போலவும் விமானத்தின் மூன்று தளங்கள் திருமந்திரத்தின் மூன்று பதங்கள் (ஓம் நமோ + நாராயணாய) போலவும், மூன்றெழுத்துகளுடன் கூடிய (அ+உ+ம) பிரணவம் போலவும் அமைந்திருப்பதாக ஐதிகம்

நம்மாழ்வாரின் திருமேனி : ஆழ்வார்கள் பன்னிருவர்களுள் சடகோபர் ‘நம்மவர்’ என்று போற்றத் தக்கபெருமை வாய்ந்து ‘நம்மாழ்வார்’ என்ற சிறப்புத் திருநாமத்தால் வழங்கப் பெறுகின்றார். ஏனைய ஆழ்வார்களை நம்மாழ்வாரின் ஒவ்வோர் அவயவமாகவும் நம்மாழ்வாரை அவயவி யாகவும் வழங்குவது மரபு. ஆழ்வாரின் திருமுடி நம்மாழ்வார். பூதத்தாழ்வாரைத் தலையாகவும் பொய்கை பேயாழ்வார்களைத் திருக்கண்களாகவும், பெரியாழ்வாரைத் திருமுகமண்டலமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும்,
குலசேகராழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் திருக் கைகளாகவும், தொண்டைரடிப்பொடியாழ்வாரைத் திரு மார்பாகவும்,திருமங்கையாழ்வாரைத் திரு நாபியாகவும் மதுரகவிகளையும்எம்பெருமானாரையும் (இராமாநுசர்) திருவடிகளாகவும்
பெரியோர் அருளிச் செய்வர்.

இராமாநுசரின் திருமேனி : நம்மாழ்வாரைத் தலையாகவும், நாதமுனிகளைத் திருமுகமாகவும்,உய்யக்கொண்டாரை (புண்டரீகாட்சரைக்) கண் ஆகவும் மணக்கால் நம்பியை (இராம மிஸ்ராவைக்) கன்னமாயும்,ஆளவந்தாரை (யாமுனாசாரியரை) மார்பிடமாகவும், பெரிய நம்பியைக் கழுத்தாகவும், திருக்கச்சி நம்பிகையைத் திருக்கையாகவும், திருக்கோட்டியூர் நம்பியை ஸ்தனமாயும்,திருவரங்கப் பெருமாளரையரை வயிறாகவும், திருமாலை யாண்டானை முதுகாகவும், கிடாம்பி யாச்சானை இடுப்பாகவும், எம்பாரை இடையாகவும்; பட்டரையும், நஞ்சீயரையும் புட்டகங்களாகவும், நம்பிள்ளையைத் துடையாகவும், வடக்குத் திருவீதிப் பிள்ளையைத் முழங்கால்களாகவும், பிள்ளைலோகாகாரியரைத் திருவடியாகவும், திருவாய்மொழிப் பிள்ளையை பாதரேகை யாகவும், மணவாள மாமுனிகளைத் பாதுகையாகவும், சேனாபதி ஜீயரை ஊர்த்துவ புண்ட்ரமாகவும்,(திருமண்காப்பு) கூரத்தாழ்வானைப் புரிநூலாகவும்,முதலியாண்டனைத் திரிதண்டமாகவும், கிடாம்பியாச்சானைக் கமண்டலமாகவும், வடுக நம்பியைக் கல்லாடையாகவும்,திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் தோமாலை யாகவும்,பிள்ளை யுறங்காவில்லி தாசரை நிழலாகவும் இங்ஙனம் இராமநுசரைச் சர்வாசார்ய ஸ்வரூபராகக் கொள்வது மரபு.

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading