ஸ்ரீ சடகோபர் அந்தாதி-51-60- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே -அதிர்ஷ்டம் இருக்கும் போதும் அந் நன்மை மிகுதி நேராமல் தவறுதல் உண்டோ -இல்லை என்றபடி
பிறர் பால் வெறும்பாக் கிளத்தி -மற்றவர் மேல் பயன் இல்லாத பாடல்களைப் பாடிக் கொண்டு
மாரி அனைய கை–மால் வரை ஒக்கும் திண் தோள் என்று பாரிலோர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே -திருவாய் மொழி

மெலிகின்ற -திரிந்து இளைக்கின்றவனும்
என்னை வினை கொடுப் போய் எறும்பாக்கிய தமியேனை -தீ வினைகளால்
வலிய இழுத்துக் கொண்டு சென்று எறும்பு போல் எளியவனாக்கி -வேறு கதி அற்றவனான என்னை
இரும் பாடு எரி கொள்ளியினுள் எறும்பு போல் உருகா நிற்கும் என்னுள்ளம் -கலியன்

குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து-தீமைகள் செய்யும் படியான மூன்றுவகை பகைகளையும்-
காமம் கோபம் மயக்கம் -போன்றவை -வித்யா மதம் குல மதம் சீல மதம் -உயர் பிறப்பு மதம் -போல்வனவும் – போக்கி
ஆண்ட குருகை மன்னே-கைங்கர்ய ஸ்ரீ யும் அளித்து அருளி
அமரர்க்கும் ஏற விட்டான்-தேவர்களிலும் மேலாக்கி அருளி விட்டான் –

விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

———-

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

எம்மை யுள்ளும் சுற்றும்–ஜீவாத்மாக்களான நம்மை -புறத்தே அன்றே அகத்தும் சூழ்ந்து உள்ள
இருகூர் வினையும் அறுத்து-மிகுதியாக புண்ய பாப இருவகை கர்மங்களையும் துணித்து
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாம்யம் அனைத்தையும் என்றுமாம்

இறப் பார்க்கும்-அவ்வினை மரத்தை வேரோடு அழியும் படி செய்வதான
பார்த்தல் -செய்தல் என்ற பொருளில் வந்தது இங்கு
இயற்கை-தன்மை கொண்ட
குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி -ஆழ்வார் அடியார் குழாங்களுடன் கூடி
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ மன் நாதமுனிகள் -ஸ்ரீ பராங்குச தாஸர் போல்வார்
அன்புற்று-அவர்கள் பக்கல் அன்பு பூண்டு அவரகள் அன்புக்கும் அபிமானத்துக்கும் இலக்காகியும் என்றுமாம்

இன்புற்று -பாட பேதம் –
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே -அவர்களுடன் நித்ய வாஸம் செய்பவர்களுக்கும் உள்ளதேயாம்
தொண்டக்குடியாக இருந்தால் என்றபடி
மற்றும்
யவ்வூர் அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே–சமீபத்தில் உள்ளாருக்கும்
அடுத்து அடுத்து வேறு ஊரில் உள்ளாருக்கும் உண்டே

அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்

———-

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல் –

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து -எவருடன் பகை கொள்ளாத அன்றில் பறைவையுடனும் இப்பொழுது
என்னுடன் பகை கொள்ளும் படி செய்து அருளி
குருகு -கிரௌஞ்சம் -எப்பொழுதும் இணையுடனே இருக்குமே
அன்றுதல் – பகைத்தல்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டனை -கலியன்
என்னை அன்னையுடன் பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் -என்னுடைய செவிலித் தாயுடன் மாறுபடத்
தகாத வகைகளில் எல்லாம் மாறுபாடச் செய்வித்து அருளி
பிழைக் கொழுந்தை ஒன்றாத வண்ணம் -இளஞ்சந்த்ரனை என்னுடன் வேறுபாடு கொள்ளும்படி
உபாயம் இயற்றியது –சூழ்ச்சி செய்து அருளியது
யாதோ என்னில்
ஊழ் வினையை வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே–விதியை வென்ற ஆழ்வாருடைய
மகிழம்பூ மாலையே தவிர வேறே ஒன்றும் இல்லையே

ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –

———–

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

செந் தமிழ்ப் புலவர்க்கு ஏறே -கவி ஸிம்ஹமே
எதிகளுக்கு இன்னமுதே–ராமானுஜர் போல்வாருக்கு ஆராவமுதமே
எறி நீர்ப் பொருநை ஆறே தொடர் குருகூர் -அலை வீசுகின்ற நீர்ப்பெருக்கை யுடைய தாமிரபரணி
இடையறாது பாயப்பெற்ற திருக்குருகூரில் திரு அவதரித்த
மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே–வைதிகர்கள் பெறாப் பேறாகப் பெற்ற மாற்று உயர்ந்த அரும் பொன் போன்றவரே
வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனல் -இவன் சிறப்பாக அன்பு உள்ள அடியவன் என்று என்னைக் குறித்து மனப் பூர்வகமாக நம்ப மாட்டேன் என்று கொள்ளாதே
அது தேறத் தகும் -அங்கனம் மெய்யடியவனாக என்னை நீ நம்பத்தகும்

———–

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

பெருந் தண் குருகூர்-மகிமையுடைய -நீர் வளம் மிக்கு குளிர்ந்த திருக்குருகூரில் திரு அவதரித்த
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. -இயல் தமிழுக்கும் இசைத் தமிழுக்கும்
தலையில் அணியும் ரத்ன ஆபரணம் போல் அனைவராலும் கொண்டாடப்படுபவரே
பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே –மாற்று அறிய பொன்னோடே அன்றோ பொன்னை உரைத்துப் பார்ப்பது
அங்கனம் நோக்கப் புகும் இடத்து
உயற் நாற் கவியும் பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் — –எல்லை நிலமாகச் சொல்லத் தக்கது அல்லால்
புலமைக் கொருவர் உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ –உமக்கு ஈடாக மாற்று சொல்ல ஒருவரும் இல்லையே

தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்
குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி

———–

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

எம் தீ வினையைத் துணித்தான்–கர்மங்களைப் போக்கி அருளியவரும் –
பண்டை பல்வினை பாற்றி அருளியவர் அன்றோ
தமிழால் சுருதிப் பொருளைப் பணித்தான்-வேதம் தமிழ் செய்து அருளியவரும் –
அவ்வருமறையின் பொருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அன்றோ
குருகைப் பிரான் பணி யன்றெனில் –அவர் கட்டளை அன்றாயின்
மணித் தார் அரசன் தன் ஓலையைத் –இரத்தின மாலை அணிந்த அரசனது திரு முகத்தை
தூதுவன் வாய் வழியே திணித்து -தூதன் வாயினுள்ளே புகுத்தி அவன் வாயை அடைத்து
ஆசழியச் சிதைமின் தலையை -பெண்ணைக் கொடு என்று
கேட்ட குற்றம் தீருமாறு -அத் தூதன் தலையைத் துணுத்திடுங்கோள்
கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே-எம் குருகைப் பிரான் அன்றி மற்ற ஓர் அரசன் எமது பெண்ணைக் கொள்வான் போலும்
பாவை -சித்திரப் பிரதிமை -கண் மணிப் பாவை –கொல்லிப் பாவை போல் –

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

பழத்தைப் -கனிந்த பலம் போன்ற இனிமை யுடையதும்
பசும் கற்பகத்தின் பூவைப் -வேண்டுவார் வேண்டுவற்றைக் கொடுப்பதாலும் அனைவரும்
தலை மேல் கொள்ளும் சிறப்பினாலும் கற்பக வ்ருக்ஷத்தின் மலர் போன்றதும்
பொரு கடல் போதா அமுதைப் -அலை மோதும் பாற் கடலில் நின்றும் தோன்றாத ஆரா அமுதமாயும் –
இல் பொருள் உவமை இது
பொருள் சுரக்கும் கோவைப் -நல்ல பொருளை சுரக்கும் காம தேனு வாகவும்
திருவாய் மொழிப் பாவைப் பணித்த எம் கோவை -திருவாய் மலர்ந்து அருளிச் செய்த எமது ஸ்வாமியான ஆழ்வாரை
யல்லா -அல்லாமல் பிறரை முன்பு கவி பாடிய
என்னைக்
குற்றம் கண்டென்-இவரை முன்னமே பாடாத குற்றம் யுடையவனாக உணர்ந்து
மற்றை நாவலரே என் நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ -மற்றைப் புலவர்கள் எனது நாக்கைத் பிடுங்கினாலும் நல்லவர் அல்லரோ
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது –
நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –

———-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

நாவலந் தீவில் –அம் நாவல் தீவில் -அழகிய ஐம்பூத் வீபத்தில்
கவிகள் எல்லாம் சில நாள் கழியப்–பிறர் பாடிய பாடல்கள் சில நாள்கள் கழிகிற அளவிலே
பூவலந் தீவது போல்வ அல்லால் -மலரின் மணம் மென்மை முதலிய சிறப்புக்கள் கெட்டு அழிவது போலேத் தாம் கெட்டிடுமே யல்லாமல்
குருகூர்ப் புலவன் கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் -பண்டை வல் வினை பற்றி அருளும் ஆழ்வார் பாசுரங்கள் போல்
எங்கும் போய்க் கெழுமிக்-எல்லா இடங்களிலும் பரவி
வெள்ளம் கோளிழைத்தே–வெள்ளத்தைப் போவதாய்
ஆழ் பொருளான பரமாத்மாவைத் தெளிவாகக் காட்டி அருளும்
பிரளய வெள்ளத்திலும் அழியாமல் நிலை நின்று
அதுக்கும் மேலே
கூவலந் தீம் புனலும் கொள்ளும்மே –கிணற்றில் உள்ள அழகிய இனிய நீரையும் கொள்ள மட்டுமோ -மாட்டாது என்றபடி
கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி

————–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை -அபவ்ருஷேயமான நித்யமான வேதங்களை
இன் தமிழால் குழைந்தார் -தமிழால் தளைக்கச் செய்து அருளியவரும் –
குருகையிற் கூட்டம் கொண்டார்-திருக் குருகையில் சேர்ந்த -திரு அவதரித்தவரும் —
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடனும் இங்கேயே சேர்ந்து அவருக்கும் அருள் புரிந்தார்
குமரித் துறைவர்-கன்னியாகுமரி என்னும் தீர்த்தத்துக்கு உரியவருமாகிய ஆழ்வார்
பாண்டிய மன்னனை -குமரித் துறைவன் என்றும் கன்னித் துறைவன் என்றும் சொல்வது உண்டே
வானின் வரம்பிடை நின்று–பரமபதத்தை எல்லையில் நின்று கொண்டு
மழைத்தார் தடக் கைகளால் என்னை அழைத்தார் -மேகம் போன்ற வண்மையான திருக்கைகளால்
என்னை அவ்விடத்துக்கு வா என்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அது மாத்ரமும் இல்லாமல் அங்கு செல்லுவதற்கு உரிய தத்வ ஞானத்தையும் தந்து அருளினார்
அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே–ஆதலால் இங்கு அர்ச்சா ரூபியான ஆழ்வாருக்கு
கைங்கர்யம் செய்வதோடு நிற்காமல் அங்கும் சென்று அவருக்கே அடிமை செய்வேன் என்கிறார் –

———–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தேன் –அடிமைத் தொழில்கள் அனைத்தையும் செய்து
ஆழ்வார் திருவடி இணைகளை அடைந்தேன்
அதன்றித்-அது மட்டும் அல்லாமல்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் –திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தப் பெற்றேன்
தண் குருகூர் நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் –ஆழ்வார் திரு நாமத்தையும் வைபவத்தையும்
திரு அவதார ஸ்தல மஹாத்ம்யத்தையும் பாராட்டிக் கூறினேன்
இனி-இப்படி ஆழ்வாரை சரண் அடைந்து ஏற்றிய பின்பு
நாட் குறித்துக் கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே–யம பயம் தான் உண்டோ
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறு கப் பெறா

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading