ஸ்ரீ சடகோபர் அந்தாதி-41-50- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

மூர்த்தத்தினை–ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும்
இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற தீர்த்தத்தினைச் –ஸமஸ்த உலகங்களும் அடங்கும் இடமான
ஸ்வயம் பரிசுத்தமான பர ப்ரஹ்மத்தின் தன்மையையும்
செய்ய வேதத்தினைத் -செவ்வியை யுடைய வேதங்களையும்
திருமால் பெருமை பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் –ஸ்ரீ கீதாச்சார்யன்
அர்ஜுனனுக்கு உபதேசித்து அருளிய ஸ்ரீ பகவத் கீதையை யுள் அடக்கிய மஹா பாரதத்தை
பணித்தானும் -அருளிச் செய்த வேத வியாச பகவானும்
நின்ற வார்த்தைக் குருகைப் பிரானும் -நிலை நிற்கும் திவ்ய ஸூ க்திகள் அருளிச் செய்து அருளிய ஆழ்வாரும்
நின்ற வார்த்தை -நிலை பெற்ற புகழ் என்றுமாம் –
ஆகிய இருவருமே
கண்டான் அம் மறைப் பொருளே-ரஹஸ்ய வேத ஸாரார்த்தங்களை அறிந்தவர்கள்
பணித்தானும் கண்டான் -குருகைப் பிரானும் கண்டான் என்றவாறு –

———

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல் –

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

குரு கூர்ப் புனிதன் அருளைச் சுமந்தவள் -ஆழ்வாரது கருணையை மிகுதியாகப் பெற்றவளான தலை மகளினது
கண்ணின் கடை -கண்களின் நுனி இடத்தை
திறந்து -திறந்து -அவ்வழியாக வெளிப்பட்டு
ஆறுபட்டுக்–ஒரு ஆறாகி
குருளைச் சுமந்து வெளி பரந்து ஓட்டரும்–பலவகை விலங்கின் குட்டிகளை இழுத்து மேற் கொண்டு
வெளியான நிலம் எங்கும் பரவி ஓடுவதான
கொள்ளை வெள்ளம்-மிகுதியான கண்ணீர்ப் பெருக்கானது
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே.–சக்கரங்கள் பூண்ட -ரத்தினங்கள் பதித்த
தலைமகன் தேரை வந்து மோதுகின்றதே
பிரயாணத்துக்குத் தடை செய்கின்றது என்றவாறு

இங்கனமாக
பொருளைச் சுவை யென்று போவ தெங்கே –தலைமகன் செல்வதை இனியது என்று எண்ணி –
அதன் பொருட்டு இவளைப் பிரிந்து செல்வது எவ்வாறு என்றவாறு –

கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்-என்றதும்
தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே-என்றதும்
அதிசய யுக்தி வகையால் கண்ணீர்ப் பெருக்கை காட்டியவாறு –

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் –
ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது

ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே
விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –

————

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

மாறன் குருகை வஞ்சி-ஆழ்வார் திரு நகரியிலே வஞ்சிக்கொடி போல் உள்ள இந்த இளைய மாதினிடத்தே
கொங்கைகள் -வந்து அடிக் கொண்டன -கொங்கைகள் -மங்கைப் பருவம் தோன்ற
வளர்ந்து மார்பின் இடம் எல்லாம் தம்மிடமாகக் கொண்டன
இங்கனம் தனது பாரம் மிக்கதானால்
கொந்து அடிக் கொண்ட சூழலும் கலையும் குலைந்தலைய–பூங்கொத்துக்கள் நிறைய சூட்டப் பட்ட கூந்தல் பாரமும்
உடுத்த ஆடையும் நிலை குலைந்து சோருமாறு -இம் மெல்லியலாள்
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது –இவள் இடைக்கு என்னாகுமோ என்று
நெஞ்சம் பட பட என்று துடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே.–செவ்விய மின்னல் போன்ற இவள் இடைக்கு
இப்பாரங்களை -துவளாது நின்று -சுமக்கும் வல்லமை இருக்குமோ

வாடிடை நோக்கி வருந்தினன் போல் ஆடமை தோழியை ஆர்வமோடு அணைதல்

இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்

இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்

—————

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

கன வாயினவும் -ஸ்வப்ன அவஸ்தையின் வகைகளும்
துரியமும் –துரிய அவஸ்தையும்
ஆயவையும் கடந்து-மற்ற அவற்றின் இனமான ஜாக்ரத ஸூஷ்ப்தி அவஸ்தைகளையும் கடந்து
மன வாசகங்களை வீசிய -மநோ வாக்குகளைக் கடந்த
மாறனை –ஆழ்வாரை
மா மறையை வினவா துணர்ந்த விரகனை -எம்பெருமானாலேயே மயர்வற மதி நலம் அருளப்பட்ட ஆழ்வாரை
வெவ் வினையைத் தொலைத்த சின வாரணத்தைக் –யானை போன்றவரும் -சடகோபர் அன்றோ
குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே–ஆழ்வாரை சரணம் அடைந்தோமே
ஆழ்வார் திருவடிகளே சரணம் -என்றபடி

———

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

அவ் வரியினுக்கே–அந்த ஸ்ரீ ஹரி -ஸ்ரீ மன் நாராயணனுக்கு
வேதம் செப்பும் பேராயிரம் -நாமோ ஸஹஸ்ரவான் -பேர் ஆயிரம் உடையான் அன்றோ
திண் பெரும் புயம் ஆயிரம் –தோள்கள் ஆயிரத்தாய்
பெய் துளவத் தாரார் முடியாயிரம்– திருத்துழாய் மாலை பொருந்திய முடிகள் ஆயிரத்தாய்
இப்படி அனைத்துமே ஆயிரமாக -எண்ணிறந்தவையாக -அமையப் பெற்ற எம்பெருமானுக்கு
குரு கூர்ச் சட கோபன் சொன்ன ஆரா அமுதம் கவி ஆயிரம் –வான் திகழும் சோலை மதிள் அரங்கன்
வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் –
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் –
சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு -மற்றும் இவருக்கு சேராத பொருள் உண்டோ –

————

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முரிவளை முத்தும் -பெரிய சங்கினால் பெறப்பட்ட முத்தும்
சினையும்-அன்னப்பறவை ஈன்ற முட்டையும்
மயங்க-நீர்த்துறையிலே கலந்து மாறாடினவாக
அவற்றைக் குறித்து
வரி வளையும் அன்னமும் -உள் சுழியை யுடைய சங்கும் அன்னப் பறவையும்
முறை செறுத்து தம்மிலே வழக்காட–ஒன்றன் பொருளை மற்றது தன்னது என்று மயங்குவதால்
நீதி முறை கடந்து தமக்குள்ளே -ஒன்றோடு ஓன்று வழக்காட
வலம் புரிவளை யூடறுக்கும்–வலம்புரி சங்கு சென்று நாடு நின்று அவற்றின் போரை விலக்குவதற்கு இடமான
குருகூர் எம் புரவலனே.-ஆழ்வாரான நம் தலைவர்
அந்தி வந்து-இன்று மாலைப் பொழுதில் மீண்டு வந்து
அரிவளை பொன் மகிழ் -வண்டுகள் சூழ்ந்து மொய்க்கப் பெற்ற அழகிய தனது மகிழம்பூ மாலையை
அரி வளை -தான் கவர்ந்த அபஹரித்த வளை என்றுமாம்
ஆயிழைக்கு ஈயும் கொல் -தேர்ந்து எடுத்து அணிந்த ஆபரணங்களை யுடைய இம்மட மங்கைக்குக் கொடுத்து அருள் வானோ

கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே
அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்
அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்
ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி
அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –

——–

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல்

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

புரை துடைத்துப் –ஐம் புலன்களால் உண்டாகும் குற்றங்களை போக்கி
பெரும் பொய்யும் துடைத்துப் -அவற்றுக்கு மூல காரணமான மகா மாயையும் போக்கி
பிறர் புகலும் உரை துடைத்து -புற சமயத்தார் வாதங்களை பொருந்தாமை காட்டிக் கழித்து
அங்குள்ள வூசல் துடைத்து -பரதத்வ நிர்ணயத்தில் தடுமாற்றத்தையும் தீர்த்து
எம் முறு பிறவித் துரை துடைத்து ஆட் கொண்ட -பிறவித்துயர் தீர்த்து கைங்கர்யமும் கொண்டு அருளிய
தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை-ஆழ்வார் திருமஞ்சன துறையுடைய தாமிரபரணி
கடை துடைக்குங் கடலே -பெரு வெள்ளமாக வந்து கரையை உடைக்கப் பெற்ற கடலே
துடையேல் அன்பர் கால் சுவடே.-கருணையால் நிர்ஹேதுகமாக சம்ச்லேஷித்து சென்ற தலைவனது
திருவடிச் சுவட்டை அழித்திடாதே

ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –
கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி

———————

செவிலித்தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் —

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

நங்காய்-செவிலித்தாய் நல் தாயை விளித்து
இரண்டு கவடிறக் -தனக்கு முன்னும் பின்னும் உள்ளனவாய்த்த தன்னைக் காட்டுதற்கு ஆதாரமான மரத்தறிகள் இரண்டும் ஓடிய
உள் பகை புறப்பகை -வஞ்ச வர்க்கம் இரண்டும் அழிய என்றவாறு தலை மகன் பக்ஷத்தில்
கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து -தன்னைக் கட்டிய கால் விலங்காகிய சங்கிலியின் பொறுத்து வாயைத் துணித்திட்டு
சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்து -மத ஜலம் பெருகுகிற அடையாளம் மிகுதியாகத் தொடர்ந்து
இருக்கப் பெற்ற திக்கஜத்தை நாடிச் சென்று -அதனோடு போர் தொடர்ந்து
சங்கம் குவடிறக் குத்திய -அழகிய மலைச் சிகரங்களை ஓடியுமாறு -தந்தங்களினால் குத்திய
மாறப் பெயர்க் கொலை யானை -மாறன் என்னும் பெயரை யுடைய கொல்லுதல் வல்ல யானையானது
படர்ந்தி வானம் இருள்கின்றதே–பிரிந்தாருக்குத் துன்பத்தைச் செய்கின்ற சாயம் காலத்திலேயே இருள் அடைகிற அளவிலே
இவள் திறத்து ஒன்றும் -இவள் பக்கல் தவறாது வந்து சேர்ந்து விடும்

ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்
சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்

———–

இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

இருளாய்ப் பரந்த -இருள் மிக்குப் பரவப் பெற்ற
உலகங்களை -நில உலகத்தின் பகுதிகளை எல்லாம்
விளக்கும் -இருள் ஒழித்து விளங்கச் செய்கின்ற
இரவி-ஸூர்ய மண்டலம்
பொது நிற்றலின்-எல்லா வுயிர்கட்க்கும் பொதுப்பட உதவி செய்து நிற்றலால்
பொருளாய்ப் பரந்தது –உலகம் முழுவதும் காணப்படும் பொருளாய் விளங்கிற்று
அது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் –பலரும் மருளும்படி பரவுகிற மாயையினால் ஆகும் சோர்வு இல்லாத மாறன் கருணையினால்
சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே.–ஸ்ரீ மன் நாராயணன் உளன் என்று அறிந்து கொண்டனவே
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ

——–

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

அறிவே -எனது உணர்வே
மற்றை ஆகம வாதியரைச் செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது–வேதம் இருக்க அதனை விட்டு
அதற்கு மாறான ஆகமங்களை ப்ரமாணமாகக் கொண்டு துர்வாதம் செய்பவராகிய புறச் சமயத்தாரை சேர்வேன்
என்ற தீய சிந்தனை ஒன்றையும் கொள்ளாமல்
செய்தாரை யில்லா நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப் பிறிவேன் எனவும் எண்ணாது -தன்னைச் செய்தவர்
எவரையும் உடையது அல்லாததும் சன்மார்க்கத்தையே போதிப்பதுமாகிய வேதத்தில் ஊன்றி
பரதத்வத்தை அறிந்தவராகிய ஆக்வாறது திரு அவதார ஸ்தலமான திருக்குருகூரை விட்டுப் பிரிய எண்ணவும் செய்யாமல்
தென்னை வீடு பெறுத்தினையே-நீ முக்தி பெறவும் செய்து அருளினாயே -அந்த மஹா உபகாரகத்துக்கு
உனைத் தொழுதேன் –
உன்னை நான் நமஸ்கரித்தேன்

நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல்
இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading