ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-2–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

சீதக் கடல் உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே–1-2-1-

பதவுரை

சீதம்–குளிர்ந்திரா நின்றுள்ள
கடல்–திருப்பாற்கடலிலே
உன் அமுது அன்ன–உள்ளமுதாகப் பிறந்த பிராட்டியோடொத்த
தேவகி–தேவகிப் பிராட்டியால்
கோதை குழலான் அசோதைக்கு போத்தந்த–பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட கேச பாசத்தை யுடைய யசோதைப் பிராட்டிக்குப் போகவிடப்பட்டவனாய்
பேதை–அறிவின்மையை யுடையனாய்
குழவி–சிசுவான கண்ணபிரான்
பிடித்து–(தன் கைகளால்) பிடித்து
சுவைத்து–ருசி பார்த்து
உண்ணும்–திருப்பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள
பாதம் கமலங்கள்–திருவடித் தாமரைகளை.
காணீர்–வந்து காணுங்கோள்.
பவளம்–பவளம் போல் சிவந்த
வாயீர்–அதரத்தையுடைய பெண் காள்! வந்து காணீர்!

விளக்க உரை

வேதத்தில் (எம்பெருமானுடைய சிறந்த திருவடியில் தேன் வெள்ளமுன்டு) என்று சொல்லப்பட்டுள்ளது.
இதை யடியொற்றி ஆழ்வார்களும் ‘‘தேனே மலரும் திருப்பாதம்’’ என்கிறார்கள்.
இப்படிப்பட்ட தனது திருவடியிலுள்ள தேனைப் பருகுவதற்காகவும், தனது திருவயிற்றில் கிடக்கும் உலகங்கட்கெல்லாம்
உஜ்ஜீவநமுண்டாகும்படியாகவும் ஸ்ரீக்ருஷ்ணன் தனது திருவடிகளில் ஒன்றையெடுத்து வாயிலே வைத்துச் சுவை பார்த்துக் கொண்டிருக்க,
அதைக் கண்ட யசோதைப் பிராட்டி தான் மிக மகிழ்ந்து, இதைப் பிறகும் கண்டு மகிழவேணும் என்றெண்ணித்
தன்னருகிலுள்ளாரைக் கொண்டாடியழைத்து, ‘நீங்கள் இக்குழந்தை சுவைத்துண்ணும் இப்பாதக் கமலங்களைப் பாருங்கள்’
என்று அவர்கட்குக் காட்டுகின்றாள்.

கடலில் இரண்டு அமுதம் பிறந்தன; ஒன்று தேவர்களுக்கு போக்யமான உப்புச்சாறாகிய அம்ருதம்; அது புறவமுதமாம்.
மற்றொரு அம்ருதம். ‘‘அமுதில் வரும் பெண்ணமுது’’ எனப்பட்ட பிராட்டி: இவளே உள்ளமுதம்.
ஆகவே இங்கு ‘‘உள்ளமுதன்ன’’ என்றது பிராட்டியைப் போன்ற என்றபடியாயிற்று.
‘‘திருவின் வடிவொக்குந் தேவகி’’ என்று மேலுங் கூறுவர். பிராட்டியைப் போலே பரோபகாரமே சீலமாகவுள்ள தேவகி என்க.

யசோதை தானே சொல்லுகிற பாசுரமாக அமைந்தவிதனில் ‘‘கோதைக்குழலாளசோதைக்குப் போத் தந்த’’ என்னலாமோ வென்னில்;
யசோதையின் சொல்லாக அருளிச்செய்தாலும் இடையில் தமது தன்மையுந்தோன்ற அருளிச் செய்வாரென்க.

———–

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள்
ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே–1-2-2-

பதவுரை

முத்தும்–முத்துக்களையும்
மணியும்–ரத்நங்களையும்
வயிரமும்–வஜ்ரங்களையும்
நல் பொன்னும்–மாற்றுயர்ந்த பொன்னையும்
தத்திப்பதித்து–மாறி மாறிப் பதித்து
தலைப்பெய்தாற்போல்–சேர்த்தாற்போலே
எங்கும்–திருமேனி யெங்கும்
மணி வண்ணன்–மணி போன்ற வர்ணத்தை யுடையனான கண்ணனுடைய
பாதங்கள்–திருவடிகளிலுள்ள
பத்து விரலும்
விரல் பத்தும்
ஒத்திட்டிருந்வா–ஒன்றோடொன்றெத்து அமைந்திருக்கும்படியை
காணீர்–ஒண் நுதலீர்–ஒளிபொருந்திய நெற்றியை யுடையீர் காண்!
வந்து காணீர்!

விளக்க உரை

முதலடியில் சில ரத்னங்களைச் சொன்னது நவரத்னங்களுக்கும் உபலக்ஷணம்.
கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன நவரத்தினங்களாம்.
கால்களுக்கு இடுகின்ற செம்பஞ்சு மருதாணி என்பனபோல ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு
நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு
‘என் மணிவண்ணனுடைய பாதங்களில் பத்து விரலும் – நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க
மாறி மாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப்பதை வந்து பாருங்கள் என்கிறாள்.

———–

பணைத் தோளிள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக் காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும்
கணைக் கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3-

பதவுரை

பணை–மூங்கில்போன்ற
தோள்–தோள்களை யுடையளாய்
இள–இளமைப் பருவத்தை யுடையளான
ஆய்ச்சி–யசோதையினுடைய
பால் பாய்ந்த–பால் சொரிகிற
கொங்கை–முலையை
அணைத்து–(திருக்கையால்) அணைத்துக்கொண்டு
ஆர–வயிறு நிரம்ப
உண்டு–(பாலை) அமுது செய்து
கிடந்த–(களித்துக்) கிடக்கின்ற
இ பிள்ளை–இந்தக் கண்ண பிரானுடைய
இணை–சேர்த்தி யழகு அமைந்த
காலில்–திருவடிகளில்
வெள்ளி தளை நின்று–வெள்ளித் தண்டை நின்று
இலங்கும்–விளங்கா நிற்கிற
கணைக்கால் இருந்த ஆ–கணைக்காலிருந்தபடியை
காணீர்!
காரிகையீர்–அழகுடைய பெண்காள்
வந்து காணீர்!!

விளக்க உரை

‘‘பணைத்தோளிள வாய்ச்சி’’ என்றது – தன்மையில் வந்த படர்க்கை: ஆய்ச்சியாகிய என்னுடைய என்றபடி.
அன்பினால் நெறித்துப் பால் சொரிகிற என் முலையைத் திருக்கைகளாலே அணைத்து வயிறாரவுண்டு மகிழ்ந்து கிடக்கிற
இப்பிள்ளையினுடைய கால்களில் வெள்ளித்தண்டை விளங்கா நிற்கிற கணைக்காலின் அழகை வந்து காணுங்கள்.

—————–

உழந்தாள் நறு நெய் ஒரோ தடா வுண்ண
இழந்தா ளெரிவினா லீர்த்து எழில் மத்தின்
பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே–1-2-4-

பதவுரை

உழந்தாள்–(நெய் முதலியவற்றை) பிரயாஸப்பட்டுத் தடாவிலே சேர்த்த யசோதையினுடைய
நறு நெய்–மணம் மிக்க நெய்யை
ஒரோ தடா–ஒவ்வொரு தடாவாக
உண்ண–(கண்ணன்) அமுது செய்த வளவில்
இழந்தாள்–(பிள்ளையைத்) தான் இழந்தவளாக நினைத்த யசோதை
எரிவினால்–வயிற்றெரிச்சலாலே
ஈர்த்து–கையைப் பிடித்திழுத்து
எழில் மத்தின்–அழகிய மத்தினுடைய
பழ தாம்பால்–சுற்றிக் கடைந்தமையாலுண்டான) பழமை பொருந்திய தாம்பை
ஒச்ச–(அடிப்பதாகக்) கையிலெடுக்க
பயத்தால்–அச்சத்தாலே
தவழ்ந்தான்–(அதைத் தப்பிப் போவதாக) தவழ்ந்த கண்ணனுடைய
முழந்தான் இருந்த ஆ–முழங்கால்களிருந்தபடியை
காணீர்!
முகிழ் முலையீர்–முகிழ்த்த முலையையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கீழ்ப் பாட்டிற்போல இப் பாட்டிலும் உழந்தாள் என்றதும் இழந்தாள் என்றதும் – தன்மையில் வந்த படர்க்கை.
ச்ரமப்பட்டுக் கறந்து காய்த்துத் தோய்த்துக் கடைந்து வெண்ணையாக்கி யுருக்கித் தடாக்களிலே நான் சேர்த்து வைத்திருந்தேன்.
அந்த நெய்யை ஒவ்வொரு தடாவாக ஒன்றும் மிச்சமாகாதபடி இவன் வாரியுண்டான்.
இவ்வளவு நெய்யை வாரியுண்டால் ஜரிக்கமாட்டாதே!’ என்கிற வயிற்றெரிச்சலாலே கையைப் பிடித்திழுத்து,
மத்திலே சுற்றிக் கடைந்து பழகின தாம்பாலே அடிப்பதாக நான் ஓங்க, பயத்தாலே அதைத் தப்புவதாகத் தவழ்ந்தான்;
இப்படிப்பட்ட இவனுடைய முழந்தாள்கள் இருக்கும்படியைப் பாருங்கள் என்கிறாள்.

இனி, தன்மையில் வந்த படர்க்கையாகக் கொள்ளாமல் படர்க்கையாகவே கொண்டு,
பெரியாழ்வார் தாமான தன்மையில் அருளிச்செய்கிற ரென்னவுமாம்.

இழந்தாள் – பிள்ளையை இழந்ததாக நினைத்தவளென்கை;
இவ்வளவு நெய்யை வாரியுண்ட பிள்ளை பிழைக்கப் போகிறானோ என்று அஞ்சினள்போலும். பயம் – வடசொல்.

—————

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-

பதவுரை

முன்–முற்காலத்திலே
மறம்கொள்–த்வேஷங்கொண்ட
இரணியன்–ஹிரண்யனுடைய
மார்வை–மார்பை
கீண்டான்–பிளந்தவனாய்,
பிறங்கிய–(கொடுமையால் வந்த) ப்ரகாசத்தை யுடைய
பேய்ச்சி–பூதனையினுடைய
முலை–முலையை
சுவைத்து–(பசையறும்படி) ஆஸ்வாதித்து
உண்டிட்டு–அமுது செய்து
உறங்குவான் போலே–(ஒன்றுமறியாமே) உறங்குமவனைப் போலே
கிடந்த–படுத்திருப்பவனான
இ பிள்ளை–இந்தக் கண்ணனுடைய
குறங்குகளை–திருத்துடைகளை
வந்து காணீர்!
குவி முலையீர்–குவிந்த முலைகளை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாய் அக் கண்ண பிரானுக்கு மாமனாகிய கம்ஸன்,
தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்கிறானென்பதை நாரதர் சொல்லக் கேட்டறிந்து அக் குழந்தையை
நாடி யுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசுரர்களை ஏவுகிற கிரமத்திலே, அவர்களில் ஒருத்தியான பூதனை யென்னும் ராக்ஷஸி
நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ண சிசுவையெடுத்துத்
தனது விஷம் தடவின முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால்
இறுகப் பிடித்துத் பாலுண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின்
கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் ­ -என்ற வரலாறு முதலடியிற் கூறப்பட்டுள்ளது.
நரஹிம்ஹாவதாரம் செய்தவனும் கிருஷ்ணவதாரம் செய்தவனும் ஒருவனே என்ற உண்மையை இவ்வாழ்வார் உணர்ந்தவராதலால்
‘‘மறங்கொளிரணியன் மார்வை முன் கீண்டானாகிய இப்பிள்ளை’’என்றார்.

————-

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–1-2-6-

பதவுரை

மத்தம்–மதத்தையுடைய
களிறு–யானைகளை நிர்வஹிக்குமவரான
வசுதேவர் தம்முடை–ஸ்ரீவஸுதேவருடைய
சித்தம் பிரியாத–மனத்தை விட்டுப் பிரியாத
தேவகி தன்–தேவகியினுடைய
வயிற்றில்–வயிற்றிலே
அத்தத்தின் பத்தாம் நாள்–ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே
தோன்றிய–திருவவதரித்த
அச்சுதன்–கண்ண பிரானுடைய
முத்தம் இருந்த ஆ–சண்ணமிருந்த படியை
காணீர்!!
முகிழ் நகையீர்–புன் சிரிப்பை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

இப்பாட்டில் முத்தம் என்றது ஆண்குறியை. ‘மூத்ரம்’ என்னுஞ்சொல் மூத்திரம் பேய்வதற்கு உறுப்பான அவயவத்தைச் சொல்லிற்றாய்,
அச்சொல் முத்தமெனத் திரிந்திருப்பதாகச் சிலர் கூறுவர். சிறு குழந்தைகளின் குறியைப் பேரன்புடையார் முத்தமிடுவார்கள்
என்னுங் காரணம் பற்றி அக் குறிக்கு முத்தமெனப் பெயராயிற்றென்று சிலர் சொல்லுவர்.

அத்தத்தின் பத்தாநாள் – ஹஸ்த நக்ஷத்திரத்திற்குப் பத்தாவது நாள் (கீழ்முறையில் எண்ணிப் பார்த்தால்) ரோஹிணீ நக்ஷத்ரமும்,
(மேல்முறையில் எண்ணிப் பார்த்தால்) திருவோண நக்ஷத்திரமுமாம்.
இவற்றுள் ரோஹிணீ நக்ஷத்திரம் ஸ்ரீக்ருஷ்ணாவதார நக்ஷத்ரம் : திருவோண நக்ஷத்ரம் – தானான தன்மையிலுள்ள திருமாலுக்கு உரிய நக்ஷ்த்ரம்.
இன்ன நக்ஷரத்தில் தோன்றினவனென்று வாய்விட்டுச் சொல்லாமல் ‘‘அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய’’ என்று சொல்லுவானேன்? என்னில் :
இவ்வாழ்வார் மங்களா சாஸநபரராகையினால் ‘கண்ணபிரானது திருவவதார நக்ஷரத்தை நேரே சொன்னால் சத்துருக்கள்
அபிசாரம் செய்வார்களோ!’ என்ற அதிசங்கையினால் மறைத்துச் சொல்லுகிறாரென்று ரஸமாக நிர்வஹிப்பர்கள்.
(அபசாரமாவது – எதிரிக்கு மரணமுண்டாகுமாறு செய்யும் யாக விசேஷம். அதில் எதிரியின் பெயரை ஸங்கல்பத்திற் சொல்லும்போது
‘‘இன்ன நக்ஷத்ரத்தில் பிறந்த இன்னானுக்கு மரணமுண்டாக’’ என்று குறிப்பிட வேண்டிய அவசியமிருப்பதால்,
அதற்கு நக்ஷத்ர நிச்சயமுண்டாகாதபடி மறைத்துச் சொல்லுகிறாரென்றவாறு. )

தேவகிக்கு இட்ட விசேஷணத்தினால் – வஸுதேவருடைய மனம் கோணாதபடி, ஒழுங்காக நடப்பவள் தேவகி என்பது வெளியாம்.
வஸுதேவர் யானைகள் கட்டி வாழ்ந்தவராதலால் மத்தக் களிற்று வசுதேவர் என்றார்.

————-

இருங்கை மத களிறு ஈர்க்கின் றவனை
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடு பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே–1-2-7-

பதவுரை

இரு கை மத களிறு–பெரிய துதிக்கையையுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை
ஈர்க்கின்றவனை–தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை
பருங்கி–கொன்று
பறித்துக்கொண்டு–(யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு
ஓடு–(கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின
பரமன் தன்–பரமபுருஷனான கண்ணனுடைய
நெருங்கு–செறியக் கோத்த
பவளமும்–பவள வடமும்
நேர் நாணும்–அழகிய அரை நாணும்
முத்தும்–முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த)
மருங்கும் இருந்த ஆ–திருவரையும் இருந்தபடியை
காணீர்!
வாள் நுதலீர்–ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

இடையினழகையும் அதிலுள்ள ஆபரணங்களினழகையும் காட்டும் பாசுரம் இது. ஸ்ரீக்ருஷ்ணனைக் கொல்லக் கருதிய கம்ஸன்
வில்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கண்ணனை அழைக்க, அப்பிரானும் பலராமனுடனே புறப்பட்டு வந்து கம்ஸன்
அரண்மனையினுட் புகும்போது, இவர்களைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயா பீடமென்னும் மதயானை சீறிவர,
ஸ்ரீக்ருஷ்ண பலராமர்கள் அவ்யானையை எதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியைப் பறித்தெடுப்பதுபோல
எளிதிற் பிடுங்கியெடுத்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அவற்றால் பாகனையும் அவ்யானையையும்
கொன்றனரென்ற வரலாறு முன்னடிகளில் அடங்கியுள்ளது.

அன்றியே, ஊரில் இடைப்பிள்ளைகள் தெருவிலே விளையாடும்போது ஒருவனை யானையாக வைத்து அவனை யொருவன்
இழுத்துக் கொண்டு திரிய, அவனைக் கண்ணபிரான் தான் மோதி யடித்துத் தானிழுத்துக் கொண்டு ஓடுகின்ற
லீலா விசேஷத்தை முன்னடிகளிற் கூறினதாகவும் உரைப்பர்.

—————

வந்த மதலைக் குழாத்தை வலி செய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்று மழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி யிழையீர் வந்து காணீரே–1-2-8-

பதவுரை

வந்த–(தன்னோடு விளையாட) வந்த
மதலை குழாத்தை–சிறு பிள்ளைகளின் கூட்டத்தில்
வலி செய்து–தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு
தந்தம் களிறு போல்–கொம்பு முளைத்த யானைக் குட்டி போல்
தானே–தானே முக்கியனாய் நின்று
விளையாடும்–விளையாடுமவனாய்
நந்தன்–நந்தகோபர்க்கு
மதலைக்கு–(விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய
நன்றும் அழகிய–மிகவுமழகிதான
உந்தி இருந்த ஆ–நாபி இருக்கிறபடியை
காணீர்!
ஒளி–ஒளியால் விஞ்சின
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கண்ணபிரான் தான் சிறு குழந்தையாயிருந்தாலும் தன்னோடு விளையாடுவதற்குக் கூட்டமாய் வரும் பாலகர்களையெல்லாம்
தனது வல்லமையால் அடக்கி, அவர்களெல்லாம் ஒருபக்கமும், தான் மாத்திரம் ஒருபக்கமுமாக நின்று இப்படிதானே
பிராதானனாய் நின்று விளையாடுவன்; அப்போதுதான் கொம்பு முளைக்கப்பெற்ற யானைக்குட்டியை
த்ருஷ்டாந்தமாகச் சொல்லத்தகுந்திருப்பன்; இப்படிப்பட்டவனுடைய உந்தியைப் பாருங்களென்கிறாள்.

————–

அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை யூட்டி வஞ்சித்து வைத்து
பதறப் படாமே பழந் தாம்பா லார்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளை யீர் வந்து காணீரே–1-2-9-

பதவுரை

அதிரும்–கோஷிக்கின்ற
கடல்நிறம்–கடலினது நிறம்போன்ற
வண்ணனை–நிறத்தை யுடைய கண்ணனுக்கு
ஆய்ச்சி–யசோதை யானவள்
மதுரம் முலை ஊட்டி–இனிய முலைப் பாலை ஊட்டி,
வஞ்சித்து வைத்து–(மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி
பதறப் படாமே–தன் எண்ணம் தப்பாதபடி
பழ தாம்பால்–பழகின கயிற்றாலே
ஆர்த்த–கட்டி வைத்த
உதரம் இருந்த ஆ–வயிறு இருந்தபடியை
காணீர்!
ஒளி வளையீர்–ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கண்ணபிரான் இளம்பிராயத்தில் கோகுலத்திலுள்ள இடையர் மனைகளில் எல்லாஞ் சென்று அவர்களது பால் தயிர் வெண்ணெய்
முதலியவற்றைத் திருடி உண்டதை அவ்விடைச்சிகள் வந்து முறையிட, அறிந்த யசோதை அக்குற்றத்திற்காக ஒரு தண்டனையாகக்
கண்ணனை வயிற்றில் கயிற்றினால் கட்டி உரலோடு பிணித்து வைத்தாளென்பது இதில் அறியத்தக்கது.
‘கடல்நிற வண்ணன்’ என்னாமல் ‘அதிருங் கடல்நிற வண்ணன்’ என்றது கண்ணனுடைய அடங்காத் தன்மையைக் காட்டும்.

————–

பெருமா வுரலில் பிணிப் புண்டிருந்து அங்கு
இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே–1-2-10-

பதவுரை

பெரு மா உரலில்–மிகப்பெரிய உரலோடு
பிணிப்புண்டு–கட்டுண்டிருந்து இருந்து
அங்கு–அந்த நிலைமையிலே
இரு மா மருதம்–இரண்டு பெரிய மருத மரங்களை
இறுத்த–முறித்தருளின
இ பிள்ளை–இக் கண்ண பிரானுடைய,
குரு மா–மிகவும் சிறந்த
மணி பூண்–கௌஸ்துபாபரணமானது
குலாவி திகழும்–அசைந்து விளங்கா நின்றுள்ள
திருமார்வு இருந்த ஆ காணீர்!
சே இழையீர்–செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள்
வந்து காணீர்!

விளக்க உரை

“குருமாமணிப்பூண்’’ என்று சிறந்த ரத்நாபரணமாகிய கௌஸ்துபமணியைச் சொல்லுகிறது-
என்ற வட சொல் குரு என்றாயிற்று. ச்லாக்க்யமான என்றபடி.
அப்படிப்பட்ட திவ்யாபரணம் விளங்கப்பெற்ற திருமார்வினழகைக் காணுங்களென்கிறாள்.

மருதமிறுத்தகதை:- கண்ணன் குழந்தையாய் இருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக் கண்டு
கோபித்த யசோதை கண்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற் கட்டி ஒருரலிலே பிணித்துவிட, கண்ணன்
அவ் வுரலை யிழுத்துக் கொண்டு அங்கிருந்த இரட்டை மருதமர (யமளார்ஜுக)த்தின் நடுவே எழுந்தருள,
அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்ட படியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழிந்தவளவில், நாரதர் சாபத்தாலே
அம் மரங்களாய்க் கிடந்த நளகூபரன், மணிக்ரீவன் என்னும் குபேர புத்திரரிருவரும் சாபந்தீர்ந்து சென்றனரென்பது.

———–

நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே-1-2-11-

பதவுரை

நாள்கள்–(கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள்
ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே–ஒரு நாலைந்து மாதத்தளவிலே
தாளை நிமிர்ந்து–காலைத் தூக்கி
சகடத்தை–சகடாஸுரனை
சாடிப்போய்–உதைத்துவிட்டு,
வாள் கொள்–ஒளிகொண்டதாய்
வளை–வளைந்திராநின்றுள்ள
எயிறு–கோரப்பற்களையுடைய பூதனையினது
ஆர் உயிர்–அரிய உயிரை
வவ்வினான்–முடித்த கண்ணனுடைய
தோள்கள் இருந்த ஆ காணீர்!
சுரி குழலீர்–சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கண்ணபிரான் நந்தகோபர் திருமாளிகையில் ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருக்க,
யசோதையும் யமுனைக்குப் போயிருக்க, அந்த வண்டியில் கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்து
மேல்விழுந்து கொல்ல முயன்றதை அறிந்து, பாலுக்கு அழுகிற பாவனையாலே தனது சிறிய திருவடிகளை மேலே தூக்கி யுதைத்தருள,
அவ்வுதை பட்டமாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்ததென்கிற கதை முன்னடிகளில் அடங்கியுள்ளது.
இப்படி சகடத்தை முறித்தவனும் பூதனையை முடித்தவனுமான பெருமானுடைய தோளழகை வந்து காணுங்களென்றாளாயிற்று.

‘‘நாலைந்து திங்களளவிலே’’ என்பதற்கு – நாலு அல்லது ஐந்து மாதங்களுக்குள்ளே என்றும்,
(நாலு மைந்துங்கூடின) ஒன்பது மாதங்களுக்குள்ளே என்றும் (நாலால் பெருக்கப்பட்ட ஐந்தாகிய) இருபது மாதங்களுக்குள்ளே என்றும் பொருளாகும்.
இவ்வாழ்வார் மங்களாசாஸந பரராதலால், ஸ்வலப்யஸிலே அரிய பெரிய காரியஞ்செய்தானென்று சொன்னால் கண்ணெச்சில்படுமோ
என்றஞ்சி அங்கனம் த்ருஷ்டிதோஷம் வராமைக்காக, மாதம்நாலென்றும் ஐந்தென்றும் ஒன்பதென்றும் இருபதென்றுந்
தெரியாதபடி மயங்கவருளிச் செய்தனரென்று ரஸோக்தியாக அருளிச்செய்வர் பூருவர்.

‘‘சகடத்தைச் சாடிப்போய்–ஆருயிர் வௌவினான்’’ என்கிறாரே; பூதனையே முடித்தது முன்னமும் சகடத்தை முறித்தது
பின்னும் நடந்திருக்க முன்பின்னாக மாறாடிச் சொல்லுவானேன்? என்னில்; முறைப்படச் சொல்ல வேணுமென்கிற எண்ணமில்லையென்க.
அந்தந்த காரியங்களைச் செய்தவன் என்பது மாத்திரமே விவக்ஷிதம்.
எயிறு + ஆருயிர், எயிற்றாருயிர். எயிறு – எயிற்றையுடையவளுக்கு ஆகுபெயர்.
‘‘எயிற்றியாருயிர்’’ என்பது எயிற்றாருயிரென விகாரப்பட்ட தென்பாருமுளர்.

சந்திரனுக்குப் பெயரான திங்களென்னுஞ் சொல் மாதத்தை எங்ஙனமே குறிக்குமென்னில்;
சந்திரனுடைய கலைகள் ஒருமுறை தேய்ந்து வளர்தல் ஒரு மாதம் எனச் சந்திரனாலறியப்படும் மாதத்திற்கு லக்ஷணை;
இச்சொல் சாந்த்ரமாநத்து மாதத்தையே குறிக்க வேண்டியதாயினும் ஸௌரமாநத்து மாதத்தையும் வழக்கில் குறித்து வருகின்றது.

——————-

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே–1-2-12-

பதவுரை

மை–மையணிந்த
தட–பெரிய
கண்ணி–கண்களையுடைய
அசோதை–யசோதைப்பிராட்டியாலே
வளர்க்கின்ற–வளர்க்கப்படுகின்றவனாய்
தலைசெய்–உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த)
நீலம் நிறம்–கருநெய்தல் பூவினது போன்ற நிறத்தையுடையவான
சிறுபிள்ளை-(இந்த) பாலக்ருஷ்ணனுடைய
நெய்–கூர்மைபொருந்திய
தலை–நுதியையுடைய
நேமியும்–திருவாழியும்
சங்கும்–திருச்சங்கும்
நிலாவிய–அமைந்திராநின்றுள்ள
கைத்தலங்கள்–உள்ளங்கைகளை
வந்து காணீர்!
கனம்–பொன்னால்செய்த
குழையீர்–காதணிகளையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

கண்ணழகு படைத்த யசோதைப்பிராட்டி பிறர்கையில் காட்டிக் கொடாமல் தானே வைத்தகண் வாங்காமல் ஆதரித்து
வளர்ப்பதனால் தான் அவளது கண்ணின் நிறமெல்லாம் கண்ணனது திருமேனியில் ஏறி) திருமேனி நிறம் கறுத்திருக்கின்றதோ!
என்று தோன்றும்படியிருக்கிற பிள்ளையென்பது முன்னடிகளின் உட்கருத்து.
யசோதைப்பிராட்டிக்குச் சிற்சில மையங்களில் சங்கு சக்கரங்களைக் காட்டுதலால் ‘‘நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள்’’ என்றார்.
அன்றியே, சக்கரரேகையும் சங்கரேகையும் பொருந்திய கைத்தலங்கள் என்றும் கொள்ளலாம்.
இப்பொருளில் நெய்த்தலை என்ற விசேக்ஷணம் சக்கரத்திற்கு இயற்கை யடைமொழியாகவேணும்.
கைத்தலத்தில் சங்க சக்ர ரேகைகள் அமைவது மஹாபுருஷ லக்ஷணம்.

——————

வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே–1-2-13-

பதவுரை

வண்டு அமர்–வண்டுகள் படிந்திருக்கிற
பூ குழல்–பூ அணிந்த குழலையுடையளான
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
மகனாக கொண்டு–(தன்) புத்ரனாக ஸ்வீகரித்து
வளர்க்கின்ற–வளர்க்கப் பெற்றவனாய்
கோ வலர்–ஸ்ரீநந்தகோபருடைய
குட்டற்கு–பிள்ளையான கண்ணபிரானுடைய,
அண்டமும்–அண்டங்களையும்
நாடும்–(அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும்
அடங்க–முழுதும்
விழுங்கிய–(ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த
கண்டம் இருந்த ஆ–கழுத்திருந்தபடியை

விளக்க உரை

பிள்ளைகளுக்கு அனுக்கம் உண்டாகாமைக்காகத் தாய்மார் தங்களை அலங்கரித்துக் கொண்டிருப்பர்களாகையாலே
‘வண்டமர் பூங்குழலாய்ச்சி’ எனப்பட்டது. யசோதையானவள் கண்ணபிரானைத் தன் மகனென்றே நினைத்திருந்தாலும்
ஆழ்வார் உண்மையை அறிந்தவராதலால் மகனாகக் கொண்டு வளர்க்கின்ற என்றார்.
அண்டமும் நாடு மடங்க விழுங்கியது – பிரளயகாலத்தில்
‘அண்டரண்ட பகிரண்டத்தொருமாநில மெழுமால்வரை முற்றுமுண்ட கண்டம்’ என்றார் திருப்பாணாழ்வாரும். கண்டம் – வடசொல்.

————-

எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச்
செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-14-

பதவுரை

ஆய்ச்சியர்–இடைப்பெண்கள்
தொண்டை–‘‘கொவ்வைக்கனி போன்ற
வாய்–அதரத்தையுடைய
எம் சிங்கம்–எமது சிங்கக்குருவே!
வா என்று–(எம்பக்கல்) வா’’ என்று
எடுத்துக் கொண்டு–(இடுப்பில்) எடுத்துக்கொண்டு
அம் தொண்டை–அழகிய கொவ்வைபோன்ற
வாய்–(கண்ணனுடைய) அதரத்தில்
அமுது–(ஊறுகிற) அம்ருதத்தை
ஆதரித்து–விரும்பி,
தம்–தங்களுடைய
தொண்டை வாயால்–கோவை வாயை
தருக்கி–(கண்ணன் வாயோடே நெருக்கி)
பருகும்–பாகம் பண்ணப்பெற்ற
இ செம் தொண்டை வாய்–இந்தச் சிவந்த கோவை வாயை
வந்து காணீர்!
சேயிழையீர்! வந்து காணீர்!!

விளக்க உரை

வாயினழகைக் காட்டுகின்றாள். இடைச்சிகள் ஒவ்வொருத்தியும் ‘என் சிங்கக்குட்டியே! என் யானைக்குட்டியே!’ என்று
பலபடியாகச் சீராட்டி ஸ்ரீகிருஷ்ணகுமாரனை யெடுத்துக் கொண்டு அவனது வாயில் ஊறுகின்ற அமுதம்போல் போக்யமான
நீரைப் பானம் பண்ணுவார்களாம். அப்படி அவர்களால் பானம் பண்ணப்பெற்ற அதரத்தினழகை வந்து பாருங்களென்கை.

————

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே–1-2-15-

பதவுரை

அசோதை–யசோதைப்பிராட்டி
நோக்கி–(கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து
நுணுக்கிய–அரைத்த
மஞ்சளால்–மஞ்சட்காப்பாலே,
நாக்குவழித்து – ;
நீராட்டும்–ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற
இ நம்பிக்கு–இக்கண்ணபிரானுடைய
வாக்கும்–திருவாக்கும்
நயனமும்–திருக்கண்களும்
வாயும்–அதரஸ்புரணமும்
முறுவலும்–புன்சிரிப்பும்
மூக்கும் இருந்த ஆ–மூக்குமிருந்தபடியை
காணீர்!
மொய்குழலீர்–செறிந்தகுழலையுடைய பெண்காள்! வந்து
காணீர்!

விளக்க உரை

கண்ணபிரானுடைய திருமேனியின் ஸௌகுமார்யத்தை யறியும் யசோதையானவன் தான் அத்திருமேனிக்குத் தகுதியாக அரைத்த
மஞ்சட் காப்பாலே நாக்கை வழித்துத் திருமஞ்சனஞ் செய்யும்படி அடங்கியிருப்பன் கண்ணன்;
அவனுடைய வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருக்கிறப்படியைப் பாருங்களென்கிறது.
வாக்கு என்றது – தாய், தந்தை முதலானாருடைய நாமங்களைச் சொல்லுகிற வாகிந்திரியத்தைச் சொன்னபடி.
வாயும் என்றது அதரத்தைச் சொன்னபடி. இனி, வாயும் என்பதை முறுவலுக்கு விசேஷணமாக்கி,
வாய்த்திருக்கின்ற புன்சிரிப்பு என்று உரைக்கலாம் என்றான் ஒரு தமிழன்.

—————–

விண் கொளமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து
திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16-

பதவுரை

விண் கொள்–ஸ்வர்க்காதிலோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
அமரர்கள்–தேவதைகளுடைய
வேதனை தீர–துன்பங்கள் தீரும்படி
முன்–முன்னே
மண்கொள்–பூமியை இருப்பிடமாகக் கொண்ட
வசுதேவர் தம்–வஸுதேவர்க்கு
மகனாய் வந்து–பிள்ளையாய் வந்து பிறந்து
திண்கொள்–வலிமைகொண்ட
அசுரர்–அஸுரர்கள்
தேய–க்ஷயிக்கும்படி
வளர்கின்றான்–வளராநின்ற கண்ணனுடைய
கண்கள் இருந்த ஆ காணீர்!
கனம் வளையீர்–கநக கங்கணத்தை யுடைய பெண்காள்
வந்து காணீர்!!

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் நயனமும் என்று கண்ணழகைக் காட்டியிருந்தாலும் அங்கு முகஸமுதாய சோபையைக் காட்டின மாத்திரமேயுள்ளது;
இப்பாட்டில் விசேக்ஷித்துத் திருக்கண்களினழகைக் காட்டுகின்றாள். கண்ணபிரான் சிறுகுழந்தையான பருவத்திலேயே
பலபல அசுரர்களை அழித்ததனால் ‘‘திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்’’ என்கிறார்.
‘‘பரித்ராணாய ஸாதூநாம் விநாசாயச துஷ்க்ருதாம்’’ என்ற அர்த்தம் முதலடியிலும் மூன்றாமடியிலும் விளங்க நின்றமை காண்க.
அசுரரை என்றவிடத்து, ஐ – சாரியை. வேதாநா என்னும் வட சொல் ‘வேதனை’ என்று ஐயீறாகத் திரிந்தது.

—————–

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே–1-2-17-

பதவுரை

பருவம்–வயது
நிரம்பாமே-முதிருவதற்கு முன்னமே
பார்எல்லாம்–பூமியிலுள்ளார் எல்லாரும்
உய்ய–உஜ்ஜீவிக்கும்படியாக
திருவின் வடிவு ஒக்கும்–பிராட்டியின் வடிவுபோன்ற வடிவையுடையளான
தேவகி–தேவகிப்பிராட்டியாலே
பெற்ற–பெறப்பட்டவனாய்
உருவு கரிய–உருவால் கறுத்ததாய்
ஒளி–உஜ்ஜவலமான
மணி–மணி போன்ற
வண்ணன்–வடிவையுடையனான கண்ணபிரானுடைய
புருவம் இருந்த ஆ காணீர்
பூண் முலையீர்–ஆபரணம் பூண்ட முலையையுடைய பெண்காள்!
வந்து காணீர்!!

விளக்க உரை

முதலடியால், சக்ரவர்த்தி திருமகனிற்காட்டில் கண்ணபிரானுக்கு வாசி சொல்லுகிறது;
அவன் பருவம் நிரம்பின பின்பிறே விரோதிகளை முடித்து அநுகூலரை வாழ்வித்தது.
பருவம் ‘பர்வ’ என்னும் வட சொல். பார் – இடவாகு பெயர். பார் எல்லாம் – ஒருமைப் பன்மை மயக்கம்.

—————

மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-18-

பதவுரை

மண்ணும்–பூமியையும்
மலையும்–மலைகளையும்
கடலும்–கடல்களையும்
உலகு எழும்–ஸப்தலோகங்களையும்
உண்ணுந்திறந்து–திருவயிற்றிலே வைக்கிறவளவில்
மகிழ்ந்து–உகந்து
உண்ணும்–திருவயிற்றிலே வைத்த
பிள்ளைக்கு–(இக்) கண்ணபிரானுடையதான
எழில் வண்ணம் கொள்–அழகிய நிறங்கொண்ட
மகரம் குழை இவை–இம்மகர குண்டலங்களின்
திண்ணம் இருந்த–திண்மை இருந்தபடியை
காணீர்! சேயிழையீர்! வந்து காணீர்!!

விளக்க உரை

மலையேழும், கடலேழும், உலகேழும் என்றும் இயைக்கலாம்.
மகிழ்ந்து -இவற்றை ப்ரளயங்கொள்ளாதபடி காக்கப் பெற்றோமே’ என்று மகிழ்ச்சி. மகரம் – வடசொல்.
சுறாமீன்வடிவமாகச் செய்யப்படும் காதணிக்கு மகரகுண்டலமென்று பெயர்.
திண்ணம் ‘அம்’ விகுதிபெற்ற பண்பு பெயர். கண்டார் கண்ணையும் நெஞ்சையும் கவரும்படியான திண்மை.

———————-

முற்றிலும் தூதையும் முன் கைம் மேல் பூவையும்
சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே நேரிழை யீர்வந்து காணீரே-1-2-19-

பதவுரை

சிற்றில்–சிறுவீடுகளை (மணலினால்)
இழைத்து–செய்துகொண்டு
திரிதருவோர்களை–விளையாடித்திரியும் சிறு பெண்களை
பற்றி–(வலியக்) கையைப் பிடித்துக்
கொண்டு (அவர்களுடைய)
முற்றிலும்–(மணல்கொழிக்கிற)சிறு சுளகுகளையும்
தூதையும்–(மணற்சோறாக்குகிற)சிறு பானைகளையும்
முன் கை மேல்–முன் கைமேல் (வைத்து கொண்டு பேசுகிற)
பூவையும்–நாகணவாய்ப்புள்ளையும்
பறித்துக்கொண்டு–அபஹரித்துக்கொண்டு
ஓடும்–ஓடுகின்ற
பரமன் தன்–(தீம்பில்) சிறந்தவனான
கண்ணபிரானுடைய
நெற்றி இருந்த ஆ காணீர்!
நேர்–நேர்த்தியையுடைய
இழையீர்–ஆபரணங்களணிந்த பெண்காள்!
வந்து காணீர்!

விளக்க உரை

கண்ணபிரான் அவதரித்த பதின்மூன்று பதினான்கு நாள்களுக்குள் ஊர்ப்பெண்களை யழைத்து அவயவ ஸௌந்திரியத்தை
யசோதைப் பிராட்டி காட்டின பாசுரமாக இத்திருமொழி அமைந்ததாயினும், பிறகு நடந்த பால சேஷ்டிதங்களையும்
இவ்வாழ்வார் அறிந்தவராகையாலே அவற்றையும் கண்ணபிரானுக்கு விசேஷணமாக்கி யருளிச்செய்கிறார்.
சிறுபெண்கள் விளையாட்டாகச் சிற்றிலிழைப்பது வழக்கம். அதாவது தெருக்களில் கொட்டியிருக்கும் மண்ணையும் கல்லையுங்கொண்டு
வீடு கட்டுவது போற் செய்து விளையாடுகை. அதற்கு மணல் கொழிக்கச் சிறுமுறம் வைத்துக் கொண்டிருப்பார்கள்.
மணற்சோறு சமைக்கச் சிறு பானையும் வைத்துக் கொண்டிருப்பார்கள்!
தவிரவும், அப்பெண்கள் கொஞ்சி விளையாடும் பொருட்டுத் தங்களது முன்னங்கை மேல் நாகணவாய்ப் பக்ஷியையும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.
இவற்றையெல்லாம் பலாத்கரமாக பறித்துக் கொண்டு பிடிகொடாமல் ஓடுகின்ற தீம்பனாம் கண்ணபிரான்.
அப்படிப்பட்ட இவனுடைய நெற்றியானது அங்ஙனம் ஓடுகின்ற ஆயாஸத்தினால் குறுவியர்ப்புத் தோன்றி
அழகாயிருப்பதைக் காணுங்கோளென்று காடுகிறபடி. முற்றில் – சிறுமுறம். ‘முச்சல்’ என்று சிறுவர்களின் வழக்கச் சொல்.

———

அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கு மார்ப்ப
மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-

பதவுரை

அழகிய–அழகியதும்
பைம் பொன்னின்–பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான
கோல்–மாடு மேய்க்குங் கோலை
அம் கை–அழகிய கையிலே
கொண்டு–பிடித்துக் கொண்டு
கழல்கள்–(கால்களிலுள்ள) வீரக் கழல்களும்
சதங்கை–சதங்கைகளும்
கலந்து–தன்னிலே சேர்ந்து
எங்கும் ஆர்ப்ப–போமிடமெல்லா மொலிக்க
மழ–இளமை பொருந்திய
கன்று இனங்கன்–கன்றுகளின் திரள்களை
மறித்து–(கை கழியப் போகாமல் மடக்கி)
திரிவான்–திரியுமவனான கண்ணபிரானுடைய
குழல்கள்–திருக் குழல்களானவை
இருந்த ஆ காணீர்!
குவி முலையீர்! வந்து காணீர்!!

விளக்க உரை

கண்டவர்கள் கண்ணுக்கு அழகியதாய்ப் பசும்பொன்னாலே செய்யப்பட்டதான கோலை கன்றுகளை மடக்கி மேய்ப்பதற்குக்
கருவியாகக் கையிலே கொண்டும், கன்றுகளை மடக்குவதற்காக ஓடுகையாலே திருவடிகளிலே சாத்தியிருக்கிற
வீரத்தண்டைகளும் சதங்கைகளும் ஒன்றோடொன்று கலந்து எங்கும் ஒலிக்கவும், இளங்கன்றுகளின் கூட்டங்களைச் சிதறிப்
போகவொட்டாமல் மடக்கி மேய்க்கின்ற கண்ணபிரானுடைய அசைத்தலைந்து விளங்குகின்ற திருக் கேச பாசங்களின்
அழகைக் காணுங்கள் என்று – பாதாதி கேசாந்தமாகக் காட்டித் தலைக்கட்டிற்றாயிற்று. .

——————

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தைத் தென் புதுவைப் பட்டன்
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே–1-2-21-

பதவுரை

சுரும்பு ஆர்–வண்டுகள் படிந்து நிறைந்த
குழலி–கூந்தலை யுடையளான
அசோதை–யசோதைப் பிராட்டியால்
முன்–க்ருஷ்ணாவதார ஸமயத்திலே
சொன்ன–சொல்லப்பட்ட
திருப்பாத கேசத்தை–பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை
தென் புதுவை பட்டன்–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார்
விருப்பால்–மிக்க ஆதரத்தோடு
உரைத்த–அருளிச்செய்த
இருபதோடுஒன்றும்–இவ்விருபத்தொரு பாட்டுக்களையும்
உரைப்பார் தாம்–ஓதுமவர்கள்
போய்–(இம் மண்டலத்தைக் கடந்து) போய்
வைகுந்தத்து–ஸ்ரீவைகுண்டத்திலே
ஒன்றுவர்–பொருந்தப் பெறுவார்கள்

விளக்க உரை

கிருஷ்ணாவதார ஸமயத்தில் யசோதைப் பிராட்டியானவள் ஊர்ப்பெண்டுகளை யெல்லாம் அழைத்துக் கண்ணபிரானுடைய
பாதாதிகேசாந்த அவயங்களின் ஸௌந்தரியத்தைக் காட்டின பாசுரங்களையே நான் பேசியிருக்கின்றேன்;
இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள் எம்பெருமானை நித்யாநுபவம் பண்ணுவதற்குப் பாங்கான திருநாட்டிலே சென்று இன்புறுவர் –
என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

சுரும்பு+ஆர் = சுருப்பார். பாதகேசம் – வட சொல் தொடர். பாதகேசமென்றது – பாதாதிகேசாந்த வர்ணனை என்றபடி. .

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading