வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.–1-1-1-
பதவுரை
வண்ணம்–அழகு பொருந்திய
மாடங்கள்–மாடங்களாலே
சூழ்–சூழப்பட்ட
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள)
கேசவன்–கேசவனென்ற திருநாமமுடையனாய்
நம்பி–கல்யாணகுண பரிபூர்ணனான
கண்ணன்–ஸ்ரீக்ருஷ்ணன்
இன் இல்–(நந்தகோபருடைய) இனிய திருமாளிகையிலே
பிறந்து–திருவவதிரித்தருளின வளவிலே,
(திருவாய்ப்பாடியிலுள்ளார்)
எண்ணெய்–எண்ணெயையும்
சுண்ணம்–மஞ்சள் பொடியையும்
எதிர் எதிர் தூவிட–(ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத்தூவ,
கண்டக்கினிய–விசாலமாய்
நல்–விலக்ஷணமான
முற்றம்–(நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது
கலந்து–(எண்ணெயும் மஞ்சள் பொடியும் துகையுண்டு) தன்னிலே சேர்ந்து
அளறு ஆயிற்று–சேறாய்விட்டது.
திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்படியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக
அவதரித்தவளவில் அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும்
ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து
அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக ஆக்கிவிட்டன.
(ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான்) இதியாதி பிரமாணங்களாலே
க்ஷீராப்தியிலிருந்து எம்பெருமான் கண்ணனாக அவதரித்தமை விளங்காநிற்க,
இங்கே திருக்கோட்டியூரில் நின்றும் அவதரித்ததாகச் சொல்லுகிறது என்னவெனில்,
முன்பு இரணியன் மூவுலகங்களையும் அரசாண்டபோது தேவதைகள் அவ்வசுரனை முடிப்பதற்கு வேண்டிய உபாயத்தை
ஆலோசிப்பதற்குத் தகுதியானதும் அசுரர்களின் உபத்ரவமற்றதுமான இடத்தைத் தேடுமளவில்,
கதம்பமுனியின் சாபத்தினால் துஷ்டரொருவரும் கிட்டவர முடியாமலிருந்த இந்த (திருக்கோட்டியூர்) க்ஷேத்திரம்
க்ஷீராப்தி போலவே ஆலோசிப்பதற்கு ஏகாந்தஸ்தாகமாய் இருந்தபடியாலும்,
தேவதைகளின் கூட்டத்தில் எழுந்தருளி அவர்களை ரக்ஷிக்க வேண்டிய ரீதியைச் சிந்திக்கின்ற க்ஷீராப்தி நாதன் போலவே
இந்த க்ஷேத்திரத்து எம்பெருமானும் சேஷசாயியாய் இருப்பதனாலும்,
தமக்கு மங்களாசாசநத்துக்குக் கூட்டுறவான செல்வநம்பியைப் பற்றிச் சொல்லும்போது ஸ்மரிக்கநேர்ந்த இந்த திவ்ய தேசத்தினிடத்தில்
தமக்குள்ள அன்புமிகுதியினாலும் இப்படி ஐக்கியமாக அருளிச்செய்தாரென்று கொள்க.
தேவர்கள் கூட்டமாயிருந்து ஆலோசித்தஸ்தலமென்கிற காரணம் பற்றியே இதற்கு கோஷ்டீபுரம் என்று திருநாமமாயிற்று.
அதுவே தமிழில் கோட்டியூர் என்றாயிற்று.
கண்ணபிரான் வடமதுரையில் கம்ஸனுடைய சிறைக்கூடத்திலே பிறந்திருக்க, நந்தகோபருடைய திருமாளிகையிற் பிறந்ததாகச் சொன்னது –
கம்ஸனுக்குத் தப்பி கோகுலத்தில் பிரவேசித்த பின்புதான் இவன் பிறந்ததாக நினைத்திருக்கையாலே.
பிறந்தினில் – இதை முழுச் சொல்லாகக் கொண்டு ‘பிறந்தவளவில்’ என்றுமுரைக்கலாம்.
‘‘பிறந்து இன் இல்’’ என்று பிரித்துக் கொண்டால் பிறந்து ‘பிறக்க’ என்னும் செயவெனச்சத்தின் திரிபாம்.
‘‘சொல்திரியினும் பொருள் திரியாவினைக்குறை’’ என்னும் நன்னூற் சூத்திரமறிக.
இனி, ‘பிறந்த இன் இல் என்றும் பிரிக்கலாம். பிறந்த போக்யமான க்ருஹத்திலே என்றபடி.
எள் + நெய் = எண்ணெய். ‘சூர்ணம்’ என்ற வடசொல் சுண்ணமெனத் திரிந்தது. தூவிட – தூவியிட.
கண்ணன் முற்றம் – கண்ணன் பிறந்தபோதே அவனையே திருமாளிகைக்குத் தலைவனாக நந்தகோபர் அபிமானித்ததனால்
‘கண்ணபிரானுடைய முற்றம்’ என்கிறார் என்றுமுரைக்கலாம். ‘கண் நல் முற்றம்’ என்றும் பிரிக்கலாம்.
————–
ஓடுவார் விழு வார் உகந் தாலிப்பார்
நாடுவார் நம்பி ரான் எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே.-1-1-2-
பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியானது,
ஓடுவார்–(ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும்
விழுவார்–(சேற்றிலே வழுக்கி) விழுவாரும்
உகந்து–உகப்புக்குப் போக்குவீடாக
ஆலிப்பார்–கோஷிப்பாரும்
நாடுவார்–(பிள்ளையைத்) தேடுவாரும்
நம் பிரான்–நமக்கு உபகாரகனான கண்ணன்
எங்கு தான் என்பார்–எங்கேதான் (இராநின்றான்) என்பாரும்
பாடுவார்களும்–பாடுவார்களும்
பல் பறை–பலவகை வாத்யங்கள்
கொட்ட–முழங்க
நின்று–அதற்குப் பொருந்த நின்று
ஆடுவார்களும்–கூத்தாடுவாருமாக
ஆயிற்று–ஆய்விட்டது.
விளக்க உரை
கோகுலத்திலுள்ளாரெல்லாரும் தங்கட்குத் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு
அளவற்ற ஆநந்தமடைந்து தாம் செய்வது இன்னதென்று தெரியாமல், சிலர் ஓடினார்கள்; சிலர் சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்;
சிலர் உரக்க கோஷம் செய்தார்கள்; சிலர் ‘நம் கண்மணி எங்கே?’ என்று குழந்தையைத் தேடினார்கள்; சிலர் பாடினார்கள்;
சிலர் பறையடிக்க சிலர் அதுக்குத் தகுதியாகக் கூத்தாடினார்கள்;
ஆகவிப்படி பஞ்சலக்ஷம் குடியிலுள்ளாரெல்லாரும் சொல்ல முடியாத கோலாஹலமாயிருந்தார்கள்.
க்ருஷ்ணஜநநத்தால் திருவாப்பாடியில் விகாரமடையாதார் ஒருவருமில்லையென்பார் ஆய்ப்பாடியே ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்றென்றார்.
‘எங்குற்றான்’ என்ற பாடமும் கொள்ளத்தக்கதே.
———
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார் இவன் நேரில்லை காண் திரு
வோணத் தானுலகாளு மென் பார்களே.–1-1-3-
பதவுரை
சீர் உடை–ஸ்ரீமானான
பிள்ளை–க்ருஷ்ணன்
பேணி–(கம்ஸாதிகள் கண்படாதபடி தன்னைக்) காத்து வந்து
பிறந்தினில்–பிறந்தவளவில்
தாம்–ஆடிப்பாடி ஆயர்கள்
காண–(கண்ணனைக்) காண்கைக்காக
புகுவார்–உள்ளே நுழைவாரும்
புக்கு–உள்ளேபோய் (கண்டு)
போதுவார்–வெளிப்புறப்படுவாரும்,
ஆண் ஒப்பார்–‘‘ஆண்தன்மையொத்திருப்பவர்களில்
இவன் நேர்–இவனோடு ஒத்திருப்பார்
இல்லை–(யாரும்) இல்லை; (இவன்)
திரு ஓணத்தான்–ச்ரவண நக்ஷரத்தில் அவதரித்த ஸர்வேச்வரனுடைய
உலகு–விபூதிகளையெல்லாம்
ஆளும்–ஆளக்கடவன்’’
என்பார்கள்-என்று சொல்லுவாருமாக ஆனார்கள்.
விளக்க உரை
கண்ணபிரான் அவதரித்த காலத்தில் கோகுலத்தவர்கள் அந்தக் குழந்தையைப் பார்க்க நந்தகோபர் திருமாளிகையிற் புகுந்துகொண்டும்,
புகுந்து பார்த்தவர்கள் வெளியில் புறப்பட்டு வந்துகொண்டும், அவர்களில் ஸாமுத்ரிக சாஸ்த்ரம் தெரிந்தவர்கள்
‘இவன் எல்லாரைக்காட்டிலும் விலக்ஷண புருஷன் என்னும்படியாக லக்ஷணங்கள் அமைந்திருப்பதனால்
இவன் உபய விபூதி நிர்வாவஹனாயிருப்பான்’ என்று சொல்லிக் கொண்டும் இருந்தார்கள்.
கண்ணபிரான் பிறக்கும்போது சங்கு சக்கரங்களுடனே தோன்றக்கண்ட தேவகீ வஸுதேவர்கள்
‘இந்த ரூபத்தைக் கம்ஸன் தெரிந்து கொள்ளாதபடி மறைத்துக்கொள்’ என்று பிரார்த்திக்க, அப்படியே தாய் தந்தையருடைய
சொல்லைப் பரிபாலித்து, அக்காலத்தில் கம்ஸனால் நேரக்கூடிய ஆபத்தில் நின்றும் தப்பினபடியால்,
‘பேணி’ என்றும், ‘சீருடைப்பிள்ளை’ என்றும் அருளிச் செய்தார். சொன்னபடி கேட்கிற பிள்ளையன்றோ சீருடைப்பிள்ளை.
பேணி என்பதற்கு – ஆசைப்பட்டுக் கொண்டு என்றும், தன்னை மறைத்துக்கொண்டு என்றும் பொருள் சொல்லலாம்.
ஆண் ஒப்பார் இவன் நேரில்லை – லோகத்திலுள்ளவர்கள் ஆண் என்கிற தன்மையில் மாத்திரம் இவனை யொத்திருக்கிறார்களே யொழிய,
மற்றபடி திருமேனி ஸந்நிவேசம் முதலானவற்றில் இவனுக்கு ஒப்பானவர்கள் இல்லையென்கை.
‘‘ஆணொப்பான்’’ என்று பாடமாகில், ஆண்களுக்கு உரிய லக்ஷணத்தால் என்று பொருளாம் ஆன்விகுதி -மூன்றாம் வேற்றுமையுருபு.
‘‘திருவோணத்தானுலகு’ என்று ஆறாம்வேற்றுமைத் தொகையாகக் கொள்ளாமல்
‘திருவோணத்தான்’ என்றும் ‘உலகாளும்’ என்றும் இரண்டு வாக்கியமாகப் பிரித்துக்கொண்டு,
இப்படியிருப்பதால் இவன் திருவோணத்தானாகிய திருமாலேயாவன், உலகங்களையும் ஆள்வன் என்பதாகவுமுரைக்கலாம்.
ஆளும் – செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று ஆண்பாலுக்கு வந்தது.
——–
உறியை முற்றத்து உருட்டி நின் றாடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.–1-1-4-
பதவுரை
ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியிலுள்ள
ஆயர்–இடையர்கள்
உறியை–(பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை
முற்றத்து–முற்றத்திலே
உருட்டி நின்று–உருட்டிவிட்டு
ஆடுவார்–கூத்தாடுவார் சிலரும்,
நறு–மணம்மிக்க
நெய் பால்தயிர்–நெய்யையும் பாலையும் தயிரையும்
நன்றாக–நிச்சேஷமாக
தூதுவார்–தாநம் பண்ணுவார் சிலரும்,
செறி மென்–நெருங்கி மெத்தென்றிருக்கிற
கூந்தல்–மயிர்முடியானது
அவிழ–அவிழ்ந்து கலையும்படி
திளைத்து–நர்த்தநம்பண்ணுவார் சிலருமாக,
எங்கும்–சேரியடங்கலும்
அறிவு அழிந்தனர்–தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர்.
விளக்க உரை
கண்ணன் பிறந்த ஸந்தோஷம் உள்ளடங்காமல், நெய்யும் பாலும் தயிருமிருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டுவந்து
முற்றத்திலே உருட்டிவிட்டு ஆடினார்கள் சிலர்; நெய் பால் தயிர் முதலியவற்றை அபாரமாக தானஞ் செய்தார்கள் சிலர்;
தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள் சிலர் ஆகவிப்படி கோகுலத்து இடையர்கள் எல்லாரும்
ஸந்தோஷப் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் உன்மத்தரானார்கள்.
நன்றாகதூவுவார் என்றவிடத்து நன்று ஆக – (பிள்ளைக்கு) நன்மையுண்டாகும்படி என்று முரைக்கலாம்.
———–
கொண்ட தாளுறி கோலக் கொடு மழுத்
தண்டினர் பறியோலை சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் –1-1-5-
பதவுரை
தான்கொண்ட–கால்நெருக்கத்தையுடைய
உறி–உறிகளையும்
கோலம்–அழகிய
கெரடு–கூர்மையான
மழு–மழுக்களையும்
தண்டினர்–தடிகளையுமுடையராய்
பறி–(தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட
ஓலை-ஓலைகளினாற்செய்த
சயனத்தர்–படுக்கையையுடையராய்
விண்ட–விசஹித்த
முல்லை அரும்பு அன்ன–முல்லையரும்பு போன்ற
பல்லினர்–பற்களையுடையவரான
அண்டர்–இடையரானவர்கள்
மிண்டி–(ஒருவருக்கொருவர்) புகுந்து
நெய் ஆடினார்–நெய்யாடல் ஆடினார்கள்.
விளக்க உரை
ஜாதிக்குத் தகுந்தபடி உறியையும் மழுவென்னும் ஆயுதத்தையும் பசு மேய்க்கிற கோலையும் ஓலைப்பாயையும் உடையரான
இடையர்கள் ஆநந்தத்தினால் தங்களுடைய பற்கள் வெளியே தோன்றும்படி சிரித்துக்கொண்டு நெருங்கிவந்து நின்று நெய்யாடலாடினார்கள்.
நெய்யாடலாவது – ஸந்தோஷ ஸூசகமாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஒருவரோடொருவர் தழுவி நின்று ஆடும் ஆட்டம்;
எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானஞ் செய்தலுமாம்.
‘‘விண்டின் முல்லை’’ என்றும் பாடமுண்டாம்; விண்டு – மலை; மலை முல்லையரும்பு நெருங்கிய பூத்தாற்போலேயிருக்கிற
(வெண்ணிறமான) பற்களையுடையர் என்றபடி, அண்டர் – இடையர்களும் தேவர்களும்; இங்கு இடையர்களைச் சொல்லுகிறது.
———-
கையும் காலும் நிமிர்த்து கடார நீர்
பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித் தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6
பதவுரை
கையும்–திருக்கைகளையும்
காலும்-திருவடிகளையும்
நிமிர்த்து–(நீட்டி) நிமிர்த்து
கடாரம்–கடாரத்தில் (காய்ச்சின)
நீர்–திருமஞ்சனத் தீர்த்தத்திலே
பசு சிறு மஞ்சளால்–குறுங்கண்ணான பசு மஞ்சளால்
பைய–திருமேனிக்குப் பாங்காக
ஆட்டி–ஸ்நாநம் செய்வித்து
ஐய-மெல்லிதான
நா–நாக்கை
வழித் தாளுக்கு–வழித்தவளான யசோதைக்காக
அங்காந்திட-(கண்ணன்) வாயைத்திறக்க, (யசோதையானவன்)
பிள்ளை–கண்ணபிரானுடைய
வாயுள்–வாயினுள்ளே
வையம் ஏழும்–உலகங்களையெல்லாம்
கண்டாள்–ஸாக்ஷத்கரித்தாள்.
விளக்க உரை
யசோதைப்பிராட்டி ஒருநாள் ஸ்ரீக்ருஷ்ணசிசுவைக் குளிப்பாட்டும்போது வழக்கப்படியே குழந்தையின் கையையும் காலையும்
நீட்டி நிமிர்த்துப் பசுமஞ்சளைப் பூசி, நல்ல வாஸநாத்ரவ்யங்களைச் சேர்த்துக் காய்ச்சின தீர்த்தத்தைக் கொண்டு குளிப்பாட்டி,
முடிவில் மஞ்சள் தேய்வைக் கொண்டு நாக்கு வழிக்குமளவில் அந்தக் குழந்தை வாயைத் திறக்க,
அந்த வாயிலே ஸகல லோகங்களையுங் கண்டாள்.
அர்ஜுநனுக்கு திவ்யசக்ஷுஸ்ஸைக் கொடுத்துத் தன்னுடைய விச்வரூபத்தைக் காட்டினாப்போலே
யசோதைக்கும் தன்னுடைய ஸ்வந்தரமான இச்சையினாலே இப்படி காட்டியருளினனென்க.
———-
வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே–1-1-7-
பதவுரை
வாயுள்–(பிள்ளையின்) வாயினுள்ளே
வையகம்–உலகங்களை
கண்ட–ஸாக்ஷாத்கரித்த
நல் மடவார்–வைலக்ஷண்யத்தையும் மடப்பத்தையுமுடைய
மாதர்–ஸ்த்ரீகளானவர்கள், (‘‘இவன்)
ஆயர் புத்திரன் அல்லன்–இடைப்பிள்ளை யல்லன்
அரு தெய்வம்–பெறுதற்கரிய தெய்வம்,
பாய சீர் உடை–பரம்பின புகழையுடையனும்
பண்பு உடை–குணங்களை யுடையனுமான
பாலகன்–(இந்த) சிறு பிள்ளையானவன்
மாயன்–ஆச்சர்ய சக்தி யுக்தன்’’
என்று–என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக் கொண்டு
மகிழ்ந்தனர்–ஆநந்தித்தார்கள்.
விளக்க உரை
கண்ணனுடைய வாயில் ஸகல லோகங்களையுங்கண்ட யசோதையானவள் ஆநந்தத்தாலே மற்றுமுள்ள
பெண்டுகளையும் அழைத்துக்காட்ட, கண்ணபிரான் அவர்களுக்கும் அருள்கூர்ந்து அப்படியே காட்டிக்கொடுக்க,
அப்பெண்களெல்லாரும் யசோதையைப் போலவே கண்ணன் வாயில் ஸகல லோகங்களையுங் கண்டு ஆச்சரியப்பட்டு,
‘இவன் ஸாமாந்யனான இடைப்பிள்ளையல்லன்; ஸாக்ஷாத் பரமபுருஷனே இப்படிவந்து அவதரித்தானாக வேணும்’
என்று கொண்டாடிக் கூறினார்கள்.
———-
பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே-1-1-8-
பதவுரை
பத்து நளும் கடந்த–பத்துநாளுங் கழிந்த
இரண்டாம் நாள்–பன்னிரண்டாம் நாளான நாமகரண திநத்திலே
எத் திசையும்–எல்லாத் திக்குக்களிலும்
சயம் மரம்–ஜயதோரண ஸ்தம்பங்களை
கோடித்து–நாட்டி அலங்கரித்து
மத்தம் மா–மதம் பிடிக்குந் தன்மையுள்ள மிருகமாகிய யானைகள் தங்கியிருக்கிற
மலை–கோவர்த்தந பர்வதத்தை
தாங்கிய–(குடையாக) ஏந்தி நின்ற
மைந்தனை–குழந்தையாகிய கண்ணனை
ஆயர்–இடையரானவர்கள்
உத்தானம் செய்து–கைத் தலத்திலே வைத்துக் கொண்டு
உகந்தனர்–ஸந்தோஷித்தார்கள்.
விளக்க உரை
ஸ்ரீக்ருஷ்ண சிசுவுக்கு நாமகரணம் செய்ய வேண்டிய தினம் வந்தவளவில், கோகுலத்து இடையர்களெல்லாரும் எங்கும்
வெற்றித் தோரணங்களை நாட்டி அலங்கரித்து ஸ்ரீக்ருஷ்ணனென்று திருநாமமிட்டு அக்குழந்தையைத் தங்கள் தங்கள்
கையிலேயெடுத்துக்கொண்டு ஆநந்தம் பொங்கி நின்றார்கள்.
பிறந்த பத்தாம் நாளிலாவது பன்னிரண்டாம் நாளிலாவது வேறு நல்ல நாளிலாவது நாமகரணம் செய்யும்படி மநுஸ்மிருதி கூறுகின்றது.
இடையர்களெல்லாரும் வழக்கப்படி தேவேந்திரனை ஆராதிக்கத் தொடங்கினபோது கண்ணபிரான் அதனைத் தடுத்துக்
கோவர்த்தன மலைக்கே அந்த ஆராதனங்களை நடத்தி வைக்க, இந்திரன் பசிக்கோபத்தால் ஏழுநாள் விடா மழை பெய்வித்துப்
பசுக்களையும் இடையர்களையும் துன்பப்படுத்தினபோது அந்த கோவர்த்தன மலையையே யெடுத்துக் குடையாகப் பிடித்துக்
கண்ணன் காத்தருளின செய்தி ப்ரஸித்தம்.
இப்படி கண்ணபிரான் மலையைக் குடையாகப்பிடித்தது நாமகரணஞ்செய்த பின்பு நிகழ்ந்ததாயினும்,
இவ்வாழ்வார் பிற்காலத்தவராகையாலே இப்போது அதனை அநுஸந்திருக்கக் குறையில்லை.
மைந்தன் – ‘மைந்து’ என்று இளமைக்கும் வலிமைக்கும் அழகுக்கும் பெயர்; அதனையுடையவன் மைந்தன். உத்தானம் – வடச்சொல்.
———
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான் மெலிந் தேன் நங்காய்–1-1-9-
பதவுரை
நங்காய்–பூர்ணகளான ஸ்த்ரீகளே (இப்பிள்ளையானவன்)
கிடக்கில்–(தொட்டிலில்) கிடந்தானாகில்
தொட்டில்–தொட்டிலானது
கிழிய–சிதிலமாம்படி
உதைத்திடும்–(கால்களினால்) உதையா நின்றான்
எடுத்துக் கொள்ளில்–(இவனை இடுப்பில்) எடுத்துக் கொண்டால்
மருங்கை–இடுப்பை
இறுத்திடும்–முறியா நின்றான்.
ஒடுக்கி–(இவனுடைய கைகால்களை) ஒடுக்கி
புல்கில்–மார்வில் அணைத்துக் கொண்டால்
உதரத்து–வயிற்றிலே
பாய்ந்திடும்–பாயாநின்றான்
மிடுக்கு–(இச்சேஷ்டைகளைப் பொறுக்கவல்ல) சக்தி
இலாமையால்–(இப்பிள்ளைக்கு) இல்லாமையால்
நான்–தாயாகிய நான்
மெலிந்தேன்–மிகவும் இளைத்தேன்.
விளக்க உரை
யசோதையானவள் தன் ஸமீபத்திலுள்ள பெண்களை நோக்கிக் கண்ணனுடைய பருவத்துக்குத் தகுதியில்லாத
செயல்களைச் சொல்லுவதாக இப்பாசுரம் அமைந்தது.
நங்காய்! என்று ஏகவசநமான ஸம்போதநம் சாதியொருமையாய், ‘நங்கைமீர்களே!’ என்றபடி.
பருவத்திற்குத் தகுந்த செயல்களைச் செய்யும் புத்திரர்களைப் பெற்றிருப்பதனால் நீங்கள் ஒன்றும் குறைவில்லாமலிருக்கிறீர்கள்
என்று சொல்லிக் கொண்டவாறு என்னுடைய பிள்ளையைத் தொட்டிலில் கிடக்கவிட்டாலோ, இவன் தொட்டில் கிழிந்துபோம்படி காலாலுதைக்கிறான்.
‘கால்கள் மெத்தென்றிருப்பதால் நோயுண்டாகுமே’ என்று தொட்டிலினின்றும் எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால்,
இடத்தை விட்டு நழுவி இடுப்பை முறித்து விடுகிறான். ‘எனக்கே இக்குழந்தை செய்யும் சேஷ்டையினால் இடுப்பு முறியும் போது
இக் குழந்தைக்கு எவ்வளவு நோவுண்டாகுமோ! இஃது இவனுடைய திருமேனியின் ஸௌகுமார்யத்துக்குத் தகாதே! என்று நினைத்து
ஒரு தொழிலுஞ் செய்யமுடியாதபடி மார்பிலே வலிய அணைத்துத் தழுவிக்கொண்டால் கால்களினால் வயிற்றை உதைக்கிறான்.
இப்படி இவன் தன்னுடைய பருவத்திற்குத் தகாத காரியங்களைச் செய்வதை நினைத்து நினைத்து நான் மிகவும் இளைத்துவிட்டேன் என்கிறாள்.
மிடுக்கு இலாமையால் – இதற்கு இருவகையாகப் பொருள் கொள்ளலாம்.
இப்படி மிகச் சிறிய குழந்தையாகிய இவனுடைய செய்கையைப் பொறுக்கும் வல்லமை எனக்கு இல்லாமையால் என்றும்,
இந்த செய்கைகளையெல்லாம் தாங்குவதற்கு வேண்டிய சக்தி இந்தக் குழந்தைக்கு இல்லாமலிருப்பதனால் என்றும்.
———-
செந்நெ லார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல் லார்க்கு இல்லை பாவமே–1-1-10-
பதவுரை
செம் நெல்–செந்நெல் தாந்யங்களால்
ஆர்–நிறையப் பெற்ற
வயல்–கழனிகளாலே
சூழ்–சூழப்பட்ட
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரிலே
மன்னு–பொருந்தி வர்த்திக்குமவனாய்
நாரணன்–நாராயண சப்த வாச்யனாய்
நம்பி–ஸர்வ குண பூர்ணனான ஸர்வேச்வரன்
பிறந்தமை–திருவவதரித்தபடியை
மின்னு–விளங்கா நின்ற
நூல்–யஜ்ஞோபலீதத்தையுடைய
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–விஸ்தரித்து அருளிச் செய்த
பன்னு–ஜ்ஞாநிகள் எப்போதும் அநுஸந்திக்கக் கடவதான
இப் பாடல்–இப் பரசுரங்களை
வல்லார்க்கு–ஓத வல்லவர்க்கு
பாவமில்லை–பாபமில்லை.
விளக்க உரை
செந்நெல் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருக்கோட்டியூரிலே நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீமந்நாராயணன்
திருவாய்ப்பாடியில் வந்து திருவவதரித்தபடியைப் பட்டர்பிரான் பேசினதும் பக்தர்களுக்கு போக்யமுமான இத் திருமொழியை
ஓத வல்லவர்கள் எம்பெருமானை அநுபவிப்பதற்கு இடையூறான பாவங்களில் நின்றும் நீங்கி வாழ்வர் என்று
இத் திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.
நம்பி பிறந்தமை என்றது – திருவாய்ப்பாடியில் நடந்த கொண்டாட்டங்களுக்கும் உபலக்ஷணம்.
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply