ஸ்ரீ நம்மாழ்வார் மஹாத்ம்யம் —

ஸ்ரீ குரு பரம்பரை-

1.திருமால், 2. திருமகள், 3. சேனை முதலியார்,
4. நம்மாழ்வார், 5.நாதமுனிகள், 6. உய்யக்கொண்டார்,
7. மணக்கால் நம்பி, 8. ஆளவந்தார், 9.பெரியநம்பி,
10. இராமாநுசர், 11.எம்பார், 12.பட்டர், 13.நாஞ்சீயர்,
14.நம்பிள்ளை, 15.வடக்கு திருவீதிப்பிள்ளை, 16.பிள்ளை லோகாச்சாரியார்,
17.திருவாய்மொழிப்பிள்ளை and 18.மணவாள மாமுனிகள்.

ஸ்ரீ நம்மாழ்வார், ஆழ்வார்களுள் அவயவி (உறுப்பி) எனவும், ஏனைய ஆழ்வார்களை
இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.
ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல ஸ்ரீ நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத்
தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.

அந்த வகையில், பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும்,
பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும்,
குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும்,
தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை திரு வயிறாகவும்,
மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

நம்மாழ்வார் தகப்பனார் காரியார்.
காரியாரது தகப்பனாராகிய பொற்காரியார் திருவண்பரிசாரத்தில் வாழ்ந்த, வேளாளர் குலச் செல்வரும் ஆகிய
திருவாழ் மார்பரது அருந்தவச் செல்வியாகிய உடையநங்கையாரைக் காரியாருக்கு இல்வாழ்க்கைத் துணைவியாக்கினார்.

கற்புடை நல்லாளும், கணவனைத் தொழுதேத்தும் பெண்பாலும் ஆகிய உடையநங்கையார்,
தம் கணவராகிய காரியாருடன் திருக்குறுங்குடியை அடைந்து, அப்பதியில் எழுந்தருளியிருக்கும்
நம்பியைச் சேவித்து வணங்கி, ‘மக்கட் பேறு உண்டாகும்படி எம்பெருமான் அருள் புரிய வேண்டும்’ என வேண்டினார்.
அதனால் உதித்த புதல்வரே உண்மைப்பொருள் உணர்த்திய செம்மலாம் நம்மாழ்வார்.

ஸ்ரீ நம்மாழ்வார் அவதாரம்
ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ ஆழ்வார் திருநகரி (திருக்குருகூரில்) கலி பிறந்த 43 வது நாளில்,
காரியார் மற்றும் உடைய நங்கைக்கு, திரு மகனாராக, வேளாளர் குலத்தில்
பிரமாதி ஆண்டு, வைகாசித் திங்கள், பன்னிரண்டாம் நாள், பௌர்ணமி திதியில், வெள்ளிக்கிழமை,
விசாக நட்சத்திரத்தில், கடக லக்னத்தில், விஷ்வக்ஸேனரின் அம்சமாக , அவதரித்து அருளினார்.

குரு ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ ஆழ்வார் திருநகரி
இறைவன்: ஸ்ரீ ஆதிநாதன், ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
இறைவி: ஸ்ரீ ஆதிநாதவல்லி, ஸ்ரீ குருகூர்வல்லி
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: ஸ்ரீ கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: ஸ்ரீ உறங்காப்புளி

மதுரகவியார், ஆழ்வாரை நோக்கி, ‘உயிரற்றதாகிய பிரகிருதியினால் ஆகிய உடம்பில் அணு வடிவாயுள்ள
ஆன்மா புகுந்தால் எதனை அனுபவித்துக் கொண்டு எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்?’ என்ற
பொருள் அடங்கிய, “செத்தத்தின் வயிற்றிற் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு ஆழ்வார், “அந்த உடலின் தொடர்பினால் ஆகும் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும்
இவ்வைந்தினால் வரும் இன்ப துன்பங்களை அநுபவித்துக்கொண்டு அவ்விடத்திலேயே
‘இன்புற்றேன்; இளைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டே கிடக்கும்” என்ற பொருள் அடங்கும்படி,
“அத்தை தின்று அங்கே கிடக்கும்”என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அதாவது, செத்தது என்பது உடல்; சிறியது என்பது உயிர்.
உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது.
உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும்.
அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று,
அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய
எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.
பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன்
தோற்றத்திற்கேற்ப மட்டுமே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும்,
மெய்ஞ்ஞானத்தை உணர்வதென்பது அந்த உடம்புடன் சம்மந்தப்பட்ட குண நலன்களையும் சார்ந்தது.

முக்தி அடைவதற்கு, ஆன்மாவுக்கு கிடைக்கும் கூடும் முக்கியமாகிறது !
ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம்!
இங்கே, உடல் ‘செத்தது’ ஆகவும், ஆன்மா ‘சிறியது’ ஆகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.என்று சொன்ன ,
ஸ்ரீ நம்மாழ்வாரின் அந்த பதிலைக் கேட்ட கணத்திலிருந்து, ஸ்ரீ மதுரகவி அங்கேயே தங்கி,
ஸ்ரீ நம்மாழ்வாரின் பிரதான சீடராகி, அவருடைய திருவடிகளிலே தம்முடைய முடியுற வணங்கிக் கைகூப்பி, நின்று,
“அன்புடையீர், அடியேனை ஆட்கொண்டருள்வீர்”என்று வேண்டினார்.

ஸ்ரீ நம்மாழ்வார் மதுரகவியாரைப் பார்த்து, “நாம் பகவானை அனுபவித்து அருளிச் செய்யும் திவ்யப் பாசுரங்களை
பட்டோலையில் பதிவு செய்ய வேண்டும் எனத் திருவாய்மலர்ந்தருள,
ஸ்ரீ மதுரகவியாரும் பட்டோலையை அலங்கரிக்க,
ஸ்ரீ நம்மாழ்வாரும் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகளை அருளினார்.
ஆனால், அதற்கு பிறகும் கூட, ஸ்ரீ நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.
எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன?
நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத் துவங்கின போது,
திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக் கண்ணில் தோன்றின.

திருவிருத்தம்-100 பாசுரங்கள் (ரிக் வேத சாராம்)
திருவாசிரியம்-7 பாடல்கள் (யசூர் வேத சாராம்)
பெரிய திருவந்தாதி–87 பாடல்கள் (அதர்வண வேத சாராம்)
திருவாய்மொழி-1102 பாடல்கள் (சாம வேத சாராம்)

‘மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்’ என்று
ஸ்ரீ நாதமுனி குறிப்பிடுவதை வைத்து இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.

“குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும்
சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”-என்று ஸ்ரீ வள்ளுவர், ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து, கூறியதாகச் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ மாறன், இப்படி இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார்.
அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசலைத் திறந்து
ஸ்ரீ நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

திருமால் கோவில்களில் ‘ஸ்ரீ சடாரி’ என்னும் திருமால் பாதங்கள் சடகோபன் (நம்மாழ்வார்) என்றே வழங்கப்படுகின்றன.

ஸ்ரீ நம்மாழ்வாரின் பிறபெயர்கள்
சடகோபன்
மாறன்
காரிமாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப்பிரான்
குருகூர் நம்பி
திருவாய்மொழி பெருமாள்
பெருநல்துறைவன்
குமரி துறைவன்
பவரோக பண்டிதன்
முனி வேந்து
பரப்ரம்ம யோகி
நாவலன் பெருமாள்
ஞான தேசிகன்
ஞான பிரான்
தொண்டர் பிரான்
நாவீரர்
திருநாவீறு உடையபிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய் ஞானக் கவி
தெய்வ ஞானக் கவி
தெய்வ ஞான செம்மல்
நாவலர் பெருமாள்
பாவலர் தம்பிரான்
வினவாது உணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீவைணவக் குலபதி
பிரபன்ன ஜன கூடஸ்தர்
மணிவல்லி
பெரியன்

ஸ்ரீ நம்மாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்
1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம்,
6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வார் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை,
11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை, 15. பெருங்குளம்,
16. திருக்குறுங்குடி, 17.திருக்கோவலூர்,18. திருவநந்தபுரம்,19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை,
21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர், 23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ்,
26. திருவண்வண்டூர், 27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம்,
31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல், 35. பரமபதம்.

கற்பக விருட்சம் போல் இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது.
உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது.
இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை.
பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம்,
சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால்,
இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading