ஸ்ரீ ரிக் வேதத்தில் – அதாவது ஸம்ஹிதையில் – பத்தாயிரத்து சொச்சம் [10170] ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. [1028 ஸூக்தங்கள்] .
ரிக் வேதத்தைப் பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்களாகவும் இரண்டு விதத்தில் பிரித்திருக்கிறது.
அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடு ஆரம்பித்து, அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடேயே அது முடிகிறது.
வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாயிருப்பது ரிக் வேதம்.
அதில் உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியைச் சொல்லியிருப்பதால்,
அக்னி உபாஸனைதான் (Fire worship) வேத தாத்பர்யம் என்றே கொள்கிறவர்களும் உண்டு.
அக்னி என்றால் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசம் (ஸத்ய தத்துவத்தைப் பற்றிய அறிவொளி) என்றால், இதுவும் சரிதான்.
‘யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன.
‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான
வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது.
இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில்
பொருத்திக் கொடுப்பதே ( practical application ) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது.
ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, ப்ரோஸில் (உரை நடையில்) யக்ஞம்
முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது.
காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.
ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிற மாதிரி மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே
நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர்.
‘சுக்லம்’ என்றால் வெளுப்பு. ‘கிருஷ்ணம்’ என்றால் கறுப்பு.
சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு “வாஜஸநேயி ஸம்ஹிதா” என்றும் பெயருண்டு.
“வாஜஸநி” என்பது சூரியனுடைய பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய ரிஷி இந்த ஸம்ஹிதையை
உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஜஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது.
கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதத்தின் பெருமை.
தர்ச பூர்ண மாஸம், ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேத யக்ஞங்களைப் பற்றியும்,
பலவிதமான ஸத்ர யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.
அதோடு கூட ரிக் வேதத்தில் இல்லாத சில உயர்ந்த ஸ்தோத்திர பூர்வமான மந்திரங்களும் இதில்தான் வருகின்றன.
உதாரணமாக, இப்போது பெரும்பாலும் வழக்கில் சொல்லப்படும் ஸ்ரீருத்ரம் யஜுர் வேதத்திலிருந்து எடுத்ததுதான்.
ஸூத்ரம் என்பது ஸித்தாந்ததத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது.
பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை.
இந்த விரிவுரையையும் ஸாங்கோபாங்கமாக விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.
தசோபநிஷத்துக்கள் என்கிற முக்கியமான பத்து உபநிஷத்துக்களில்
முதலாவதான ‘ஈசாவாஸ்யம்’, முடிவான ‘ப்ருஹதாரண்யகம்’ இரண்டுமே சுக்ல யஜுர் வேதத்தில்
உள்ளவையே என்பதும் இந்த வேதத்துக்கு ஒரு பெருமை.
‘ஸாமம்’ என்றால் மனஸை சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று அர்த்தம்.
ஸாம-தான-பேத-தண்டம் என்கிறபோது, முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக்
கொள்வதற்கு ‘ஸாமம்’ என்று பெயர் இருக்கிறது. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு
அந்நியோந்நியமாகப் பண்ணித் தருவது ஸாம வேதம். ஒருத்தரை சந்தோஷப்படுத்த என்ன வழி?
ஸ்தோத்திரம் செய்தால் அது சந்தோஷப்படுத்துகிறது. அல்லது பாட்டு பாடினால் சந்தோஷப்படுத்துகிறது.
ஸ்தோத்திரத்தையே பாட்டாகவும் கானம் செய்து விட்டால் இரட்டிப்பு ஸந்தோஷம் உண்டாக்கும் அல்லவா?
இம்மாதிரிதான் ரிக் வேதத்தில் ஸ்துதிகளாக இருக்கப்பட்ட மந்திரங்களில் பலவற்றையே ஸாம கானமாக
ஆக்கித் தருவது ஸாம வேதம். ரிக் வேத மந்திரமேதான்.
ஆனால் ரிக்கில் முன்னே சொன்ன உதாத்தம், அநுதாத்தம் முதலான ஸ்வரங்கள் மட்டுமே இருக்க
ஸாமத்திலோ கானமாகவே அவற்றை நீட்டி நீட்டிப் பாட விதிகள் செய்திருக்கிறது.
பிற்பாடு உண்டான ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம்தான்.
ஸாமகானத்தினால் ஸகல தேவதைகளும் பிரீ்தி அடைந்து விடுகிறார்கள்.
யக்ஞங்களில் ஆஹூதி தருவது மட்டுமின்றி, உத்காதா என்பவர் ஸாம கானம் பண்ணுவதாலேயே
தேவதாநுக்கிரஹம் ஸித்திக்கிறது .
ஸோம யக்ஞங்கள் என்பதாக, ஸோம ரஸத்தைப் பிழிந்து ஆஹூதி கொடுத்துப் பண்ணுகிற
யக்ஞங்களுக்கு ஸாமகானம் ரொம்ப முக்கியமாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, கீதையில் “வேதானாம் ஸாமவேதோஸ்மி” என்கிறார்:
“வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்கிறார்.
அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார்.
அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம்.
அதிலே பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன.
ப்ரோஸ், பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்த பிரயோஜனம் உண்டு.
ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும்
மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன.
மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அநேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.
ரொம்ப உயர்ந்த தத்வங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன.
லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்ரத்தை எல்லாம் கொண்டாடுகிற ‘ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தில் தான் வருகிறது.
யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை.
இதன் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய்
தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும் பிரஸித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள்,
‘பிரச்னம்’, ‘முண்டகம்’, ‘மாண்டூக்யம்’ என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
முமுக்ஷுவானவன் (ஞான சாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்று வசனம் இருக்கிறது.
அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.
மந்திரங்களுக்குள் மஹா மந்திரமாக விளங்கும் காயத்ரி மூன்று வேத ஸாரம் என்று கருதப்படுகிறது.
மூன்று வேதம் என்பதால் இங்கே அதர்வத்தைச் சேர்க்கவில்லை என்றாகிறது.
இதனால் அதர்வ வேதத்தை அத்யயனம் பண்ணுமுன் புனருபனயனம் (இரண்டாம் முறை பூணூல் கல்யாணம்)
பண்ணவேண்டும் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது.
பொதுவாக பிரம்மோபதேசத்தில் உபதேசிக்கப்படும் காயத்ரிக்கு “த்ரிபதா காயத்ரி” என்று பெயர்.
அது மூன்று பாதம் உடையதாக இருப்பதால் இப்படிப் பெயர். ஒவ்வொரு பாதமும் ஒரு வேதத்தின் ஸாரமாகும்.
அதர்வ வேதத்துக்கு வேறு காயத்ரி உண்டு. இப்போது அதர்வ வேதிகள் என்று யாரும் இல்லாதபோது,
அந்த வேதத்தை மற்ற வேதக்காரன் அத்யயனம் பண்ண வேண்டுமானால் இன்னொரு முறை உபநயனம் செய்து கொண்டு
அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிக் கொண்டு, பிறகு அந்த வேதத்தைக் கற்க வேண்டும்.
மற்ற மூன்று வேதங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மூன்றில் மற்ற இரண்டை அத்யயனம் பண்ண வேண்டுமானால்,
இப்படி புனருபனயனம் செய்து கொள்ள வேண்டியதில்லை.
ஏனென்றால், இந்த த்ரிவேதிகளுக்கும் பொதுவாக ஒரே காயத்ரி இருக்கிறது.
நான்கு வேத ஸம்ஹிதைகளும் சேர்ந்து 20,500 மந்திரங்கள்.
ஸாமவேத ஸம்ஹிதையில் ரிக் வேத ஸ்தோத்திரங்கள் உள்ள ‘அர்ச்சிக’ என்ற பாகமும்,
‘கானம்’ என்ற பாகமுமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.
கானங்களில் க்ராம கானம், அரண்ய கானம், ஊஹ கானம், ஊஹ்ய கானம் என்ற நாலுவகை உள்ளன.
———————-
ஆதௌ பாணிநிநாததோ (அ)க்ஷர ஸமாம்னா-யோபதேசேனஸ்ய:
சப்தானாம் அநுசாஸநான்யகலய: சாஸ்த்ரேண ஸூத்ராத்மனா|
பாஷ்யம் தஸ்ய ச பாதஹம்ஸகரவை: ப்ரௌடாசயம் தம் குரும்
சப்தார்த்த ப்ரதிபத்தி ஹேதும் அநிசம் சந்த்ராவதம்ஸம் பஜே (ஸாஹித்ய ரத்னாகர காவியம், XI-124)
இந்த ச்லோகத்தில் வரும் ‘அக்ஷர ஸமாம்னாயம்’ என்பது வ்யாகரணத்திற்குப் பெயர்.
அக்ஷரங்களைக் கூட்டமாகச் சேர்த்து வைத்த இடம் என்று அர்த்தம்.
ஈச்வரனுடைய மூச்சுக்காற்று வேதம். அவருடைய கைக்காற்று அக்ஷர வேதம்.
அதாவது மாஹேச்வர ஸூத்திரம். “சப்தானுசாஸனம்” என்பதும் அதன் பெயர்.
‘பாணிநி நாதத:’ என்பதற்குப் “பாணிகளால் (கைகளால்) சப்தம் பண்ணினாய்” என்றும்,
“பாணினிக்குச் சப்தம் ஏற்பட்டது” என்றும் சிலேடையாக இரண்டு அர்த்தங்கள் உண்டாகின்றன.
அதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார்
என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது.
“நீ கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன.
காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது.
மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம்.
“அர்த்த மாத்ரா லாகவேன புத்ரோத்ஸவம் மன்யந்தே வையாகரணா:” என்று,
வியாகரணமானது பண்டிதர்களுக்குத் தரும் பரமானந்தத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
“அரை மாத்திரை லாபம் கிடைத்தால், அது வியாகரண சாஸ்திரம் அறிந்தவர்களுக்கு,
நிரம்ப நாள் பிள்ளையில்லாதவனுக்கு ஒரு புத்திரன் உண்டானதுபோல ஸந்தோஷத்தைக் கொடுக்கும்” என்பது இதன் அர்த்தம்.
‘அ’ என்பதை ‘ஆ’ என்று நீட்டினால், அப்படி நீட்டினதற்குப் பலன் சொல்ல வேண்டும். அதுவே மாத்திரை லாபம்.
ரத்ன சுருக்கமாகவே ஸூத்ரம் இருப்பதால் அதிலே சிக்கல்கூட ஏற்பட்டு மாத்திரைகள் பற்றி அபிப்ராய பேதங்களும் உண்டாகும்.
அப்போது வியாக்யானந்தான் தெளிவு படுத்தித் தந்து, புத்ரோத்ஸவ ஆனந்தத்தைத் தருவது!
அதற்காக வியாக்யானம் வளவள என்று இருக்க வேண்டியதில்லை; நறுக்குத் தெறித்த மாதிரி சுருக்கமாயிருந்தும் தெளிவு பண்ணமுடியும்
‘கதாஸரித்ஸாகர’த்தில் பாணினியின் கதை சொல்லப் பட்டிருக்கிறது.
மகத தேசத்தில், இப்பொழுது பாட்னாவென்று வழங்கும் பாடலிபுத்ரத்தில்
வர்ஷோபாத்யாயர், உபவர்ஷோபாத்யாயர் என்ற இருவர் இருந்தார்கள்.
உபவர்ஷோபாத்தியாயர் இளையவர்.அவர் பெண் உபகோஸலை.
வர்ஷோபாத்தியாயரிடம் வரருசி என்பவரும் பாணினியும் பாடம் கேட்டு வந்தார்கள். பாணினிக்குப் படிப்பு வரவில்லை.
அதனால் அவரை வர்ஷோபாத்தியாயர், “ஹிமாசலத்திற்குப் போய் தவம் பண்ணு” என்று அனுப்பி விட்டார்.
அவர் அப்படியே போய்த் தபஸ் செய்து ஈச்வர கிருபையை அடைந்தார்.
1. அ இ உண்; 2. ருலுக்; 3. ஏ ஓங்; 4. ஐ ஒளச்; 5. ஹயவரட்; 6.லண்; 7. ஞம ஙண நம்;
8. ஜ2 ப4 ஞ்; 9. க4 ட4 த4 ஷ்; 10. ஜ ப3 க3 ட3 த3 ச்; 11. க2 ப2 ச2 ட2 த2 சடதவ்;
12. கபய்; 13. சஷஸர்; 14. ஹல் – இதிமாஹேச்வராணி ஸூத்ராணி.
பதினான்கு சப்தங்களையும் கொண்டு, அவற்றை பதினான்கு ஸூத்திரங்களாக வியாகரணத்துக்கு மூலமாக வைத்துக் கொண்டு,
“அஷ்டாத்யாயி”யை எழுதினார். வியாகரண மூலநூல் இதுவே. எட்டு அத்தியாயம் கொண்டதாதலால் “அஷ்டாத்யாயி”எனப்படுகிறது.
பதினான்கு ஸூத்ரங்களில் ஒன்றின் முதலெழுத்தையும் மற்றொன்றின் கடைசி எழுத்தையும் சேர்த்துச் சொன்னால்,
நடுவில் இருக்கிற எல்லா எழுத்தையும் அது குறிக்கும் என்று பண்ணிவிட்டார். உதாரணமாக,
‘ஹயவரட்’ என்பதில் முதல் எழுத்தான ஹ-வையும், ‘ஹல்’ என்பதில் முடிவான ‘ல்’லையும் சேர்த்தால் ‘ஹல்’ என்றாகிறது.
அது இடையிலுள்ள மெய்யெழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும்.
இப்படியே ‘அ இ உண்’ ஆரம்பமான ‘அ’-வை ‘ஒளச்’ முடிவான ‘ச்’- உடன் சேர்ந்த ‘அச்’ என்பது உயிரெழுத்துக்களைக் குறிக்கும்.
பதினாலு கோவைகளுக்கும் முதலெழுத்தாகிய ‘அ-வையும், கடைசி எழுத்தாகிய ‘ல்’ லையும் சேர்த்து,
‘அல்’ என்றால் அது அத்தனை எழுத்தையுமே சேர்த்துக் குறிக்கும்.
அலோந்த்யஸ்ய என்பது அஷ்டாத்யாயியில் ஒரு ஸூத்திரம்.
‘அல்’ என்றாலே எழுத்து என்று அர்த்தம் வந்துவிட்டது. எல்லா பாஷைகளுக்குமே அகாரம் ஆதியாயிருக்கிறது.
உருது பாஷையில் ‘அலீப்’ என்பது முதலெழுத்து. கிரீக்கில் ‘ஆல்ஃபா’ என்பது முதலெழுத்து.
இந்த இரண்டும் எழுத்துக்களையெல்லாம் குறிக்கும் ‘அல்’ என்பதிலிருந்து வந்ததுதான்.
லோகம் பூராவும் வைதிக மதம் இருந்ததற்கு இதுவும் ஒரு அடையாளம்.
‘பதஞ்சலி’ என்னும் பெயரைப் பதஞ்சொல்லி” என்பது எப்படிப் பொருந்தும்? ‘பதம்’ என்பது வியாகரணத்திற்கே ஒரு பெயர்.
பதவாக்ய ப்ரமாண என்கிறபோது ‘பதம்’ என்பதற்கு வியாகரணம் என்பதுதான் அர்த்தம்.
ஆகவே பதஞ்சொல்லி என்பதற்கு வியாகரணம் சொன்னவர் என்று அர்த்தமாகிறது.
————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply