ஸ்ரீ ஆழ்வார் திருநகரி –
ஸ்ரீ திருக் குருகூர் –
மூலவர் -ஸ்ரீ ஆதி நாதன் –
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்-அபய ஹஸ்தம்
சித்ரை உத்தரம்
உத்சவர் -ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
தீர்த்தவாரி பெருமாள் -ஸ்ரீ மிக்க ஆதிப்பிரான்
தாயார்கள் –ஸ்ரீ ஆதி நாச்சியார் -ஸ்ரீ குருகூர் நாச்சியார்
விமானம் – ஸ்ரீகோவிந்த விமானம்
தீர்த்தம் -ஸ்ரீ ப்ரஹ்ம தீர்த்தம் –ஸ்ரீ தாமிரபரணி
வ்ருக்ஷம் -ஸ்ரீ திருப்புளிய மரம்
ஆகமம் -ஸ்ரீ பாஞ்சராத்ரம்
மங்களா சாசனம் -திருவாய் மொழி -4-10–
ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே–4-10-2-
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே–4-10-3-
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?–4-10-4-
இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக் குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே–4-10-6-
ஓடி ஓடிப் பலபிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே–4-10-7-
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-
உறுவது ஆவது எத் தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத் தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூர தனுள்
குறிய மாண் உரு வாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே–4-10-10-
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-
————–
இரட்டைத் திருப்பதி -ஸ்ரீ தொலை வில்லி மங்கலம்
மூலவர் -ஸ்ரீநிவாசன் –
கிழக்கு நின்ற திருக்கோலம் கார்திகை -ஹஸ்தம்
உத்சவர் -ஸ்ரீ தேவப்பிரான்
தாயார் -ஸ்ரீ அலர் மேல் மங்கை -ஸ்ரீ பத்மாவதி
மூலவர் -ஸ்ரீ அரவிந்த லோசனன்
கிழக்கு -இருந்த திருக்கோலம்
உத்சவர் -ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன்
தாயார் -ஸ்ரீ பூமா தேவி -ஸ்ரீ கரும் கடல் கண்ணி
ஸ்ரீ குமுத விமானம்
ஸ்ரீ வருண தீர்த்தம் -ஸ்ரீ தாமிரபரணி
ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –
துவளில் மா மணி மாட மோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே–6-5-1-
குமுறு மோசை விழ வொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொடா லொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக் கொசிந்து கரையுமே–6-5-2-
கரை கொள் பைம் பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
உரை கொள் இன் மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங் கண் நீர் மல்க நிற்குமே–6-5-3-
நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்ட பின்
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே–6-5-4-
குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந் தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத் திசை உற்று நோக்கியே–6-5-5-
நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந் நெல் ஓங்கு செந் தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
நோக்கு மேல் அத் திசை யல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!-6-5-6-
அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே–6-5-7-
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வட கரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந் நாள் தொடங்கி இந் நாள் தொறும்
இருந் திருந்து அரவிந்த லோசந! என் றென்றே நைந் திரங்குமே–6-5-8-
இரங்கி நாள்தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தா னுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே–6-5-9-
பின்னை கொல்?நில மா மகள் கொல்? திரு மகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடு மால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந்துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே–6-5-10-
சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-
———–
ஸ்ரீ தென் திருப்பேரை
மூலவர் -ஸ்ரீ மகர நெடும் குழைக் காதர் –
கிழக்கு -இருந்த திருக்கோலம் –
பங்குனி உத்தரம்
உத்சவர் -ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்
தாயார் -ஸ்ரீ குழைக் காதர் வல்லித் தாயார் -ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ பத்ர விமானம்
ஸ்ரீ சுக்ர புஷ்கரணி -ஸ்ரீ சங்க தீர்த்தம்
ஸ்ரீ நம்மாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம் –
வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே–7-3-1-
நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப் பகல் போய்த்
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே–7-3-2-
செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே–7-3-3-
இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந்தினி யாரைக் கொண்டென் உசாகோ! ஓதக் கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே–7-3-4-
முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே–7-3-5-
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான்மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே–7-3-6–
பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே–7-3-7-
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே–7-3-8-
சேர்வன் சென்று என்னுடைத் தோழி மீர்காள்! அன்னையர் காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே–7-3-9-
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-
ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-
———–
ஸ்ரீ வைகுண்டம்
மூலவர் ஸ்ரீ வைகுண்ட நாதன், ஸ்ரீ கள்ளப் பிரான்
சித்திரை அஸ்வினி –
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ கள்ளப் பிரான்
தாயார் ஸ்ரீ வைகுந்த வல்லி, ஸ்ரீ பூதேவி
தீர்த்தம் ஸ்ரீ ப்ருகு தீர்த்தம், ஸ்ரீ தாமிர பரணி ஆறு
விமானம் ஸ்ரீ சந்திர விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ வைகுந்த வல்லீ ஸமேத ஸ்ரீ கள்ளப் பிரான் ஸ்வாமிநே நமஹ
ஸ்ரீ நம்மாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம் –
புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த வென் சிந்தை யகங்கழியாதே என்னை யாள்வாய்! எனக்கருளி
நளிந்த சீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே.–9-2-4-
எங்கள் கண் முகப்பே யுலகர்களெல்லாம் இணையடி தொழு தெழுந் திறைஞ்சி
தங்க ளன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்த பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்! திரு வைகுந்தத் துள்ளாய்! தேவா!
இங்கண் மா ஞாலத்தி தனுளுமொரு நாள் இருந்திடாய் வீற்றிடங் கொண்டே.–9-2-8-
———–
ஸ்ரீ திருப் புளிங்குடி
மூலவர் –ஸ்ரீ பூமி பாலகர் -கிழக்கு முக -கிடந்த திருக்கோலம்
உத்சவர் -ஸ்ரீ காசினி வேந்தன்
தாயார் -ஸ்ரீ நில மங்கை -ஸ்ரீ மலர் மகள்
ஸ்ரீ வேத சார விமானம்
ஸ்ரீ வருண தீர்த்தம் ஸ்ரீ நீருற்றி தீர்த்தம்
மங்களா சாசனம் -திருவாய் மொழி –9-2-/8-3-5-
கொடியார் மாடக்கோளூர் அகத்தும், புளிங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.—திருவாய்மொழி (8-3-5)
கொடிகள் விளங்கும் மாடங்களுடைய திருக்கோளூரிலும், திருப்புளிங்குடியிலும் பள்ளி கொண்டவனே!
உடம்பை அங்கும் இங்கும் அசைக்காமல் இன்று காணும் விதத்திலே மகிழ்ச்சியுடன் யோக நித்திரை கொள்பவனே!
அவதாரங்கள் எடுத்து அடியார்கள் துன்பங்களைப் போக்கிய நோயாலோ நீ பள்ளி கொண்டது?
அல்லது பூமியை அளந்த சிரமத்தாலோ? ஏன் என்று கூறி அருள வேண்டும்.
பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-
குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொரு நாள்
படிக் களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக் கணியாய்
கொடிக் கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-
புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-
காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம் மிடர் கடிவானே–9-2-6-
எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-
எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திரு வைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-
வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-
கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க் கிடர் கெட வசுரர்கட் கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-
—————
ஸ்ரீ நத்தம்-ஸ்ரீ வர குண மங்கை
மூலவர் -ஸ்ரீ விஜயாசனர் -கிழக்கு முக இருந்த திருக்கோலம்
உத்சவர் -ஸ்ரீ எம் இடர் கடிவான்
தாயார் -ஸ்ரீ வர குண வல்லி -ஸ்ரீ வர குண மங்கை
ஸ்ரீ விஜய கோடி விமானம்
ஸ்ரீ தேவ புஷ்கரணி -ஸ்ரீ அக்னி தீர்த்தம்
மங்களா சாசனம் –ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –
புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த வென் சிந்தை யகங்கழியாதே என்னை யாள்வாய்! எனக்கருளி
நளிந்த சீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே.–9-2-1-
————
ஸ்ரீ பெரும் குளம் -ஸ்ரீ திருக் குளந்தை
மூலவர் -ஸ்ரீ வேங்கட வாணன் –
கிழக்கு முக நின்ற திருக்கோலம்
உத்சவர் -ஸ்ரீ மாயக்கூத்தன்
ஸ்ரீ குளந்தை வல்லித்தாயார் -ஸ்ரீ கமல வல்லித்தாயார்
ஸ்ரீ ஆனந்த நிலைய விமானம்
தீர்த்தம் -ஸ்ரீபெரும் குளம்
ஸ்ரீ நம்மாழ்வார்-1-பாசுரம் மங்களாசாசனம் –
கூடச் சென்றேன் இனி யென் கொடுக்கேன்? கோல் வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசழிந்தேன்
மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவினை யாதரித்தே. –8-2-4-
—————
ஸ்ரீ திருக் கோளூர்
மூலவர் -ஸ்ரீ வைத்த மா நிதி —
கிழக்கு முக கிடந்த திருக்கோலம் –
ஆவணி புனர்பூசம்
உத்சவர் -ஸ்ரீ நிஸ்ஷோபவிதன்
ஸ்ரீ குமுதவல்லித் தாயார் ஸ்ரீ கோளூர் வல்லித்தாயார்
ஸ்ரீ சந்த்ர விமானம்
ஸ்ரீ ப்ருகு தீர்த்தம் –ஸ்ரீ தாமிர பரணி
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம் –
உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இள மான் புகுமுர் திருக் கோளூரே–6-7-1-
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-
கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே–6-7-4-
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங் கொல் இன்றே?–6-7-5-
இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக் கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங் கண்கள் பனி மல்கவே–6-7-6-
மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன திருக் கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே–6-7-8-
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக் கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே–6-7-9-
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே–6-7-10-
வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-
கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியா ரல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. –8-3-5-
————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply