நீலமும் காயம் பூவும் நிறைந்து அறை கடலும் தூய
ஞாலம் எண் திக்கும் அஞ்ஜைக சுந்தர நாணும்
கோலமோடு ஆழி சங்கு சார்ங்கம் வாள் கதை கொண்டு ஓங்கும்
மாலினி நினைந்து வாழும் அடியார் தாள் மனத்துள் வைப்பாம்
அன்பு அறிவு ஆராய்ந்த சொல் வன்மை தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று -வள்ளுவர்
இட்டுவா என்றால் சுட்டு வந்தவன் என்று கொண்டாடும்படி அன்றோ திருவடி
தூய்மை துணைமை துணியுடைமை இம்மூன்றின் வாய்மை வழி யுரைப்பான் பண்பு
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது
ஸ்ரீ திருவடியின் பக்தி ஆற்றல் சொல்வன்மை அறிவோமே
ஸ்ரீ பிராட்டியின் துணிவையையும் சொல்லுமே –
ஆரியன் வென்றி வெஞ்சிலை மாசுணம்-
உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன் -அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன்
வேறும் உண்டு உரை கேள் அது மெய்மையோய் ஏறு சேவகன் மேனி அல்லால் இடை ஆறும் ஐம்பொறி
நின்னையும் ஆண் எனக கூறும் இவ்வூரில் தீண்டுதல் கூடுமோ
இராமனை எண்ணித் தொழுதால் சோருதல் துளங்குதல் –அழுதல் அன்றி மற்றையல் ஒன்றும் செய்வது அறியாள்
கடல் தாவு படலம் —
ஸ்ரீ கடவுள் வாழ்த்து
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி யாவார் –4740-
அலங்கலில் தோன்றும் -மாலையினிடத்தில் உண்டாகிற
பொய்ம்மை அரவு என -பாம்பு என்று தோன்றும் -விபரீத ஞானம் போலே
பூதம் ஐந்தும் விலங்கிய -பஞ்ச பூதங்களும் -தங்களின் தனித் தனியே இருக்கும் தன்மையை விட்டு -மாறி ஒன்றாக சேர்ந்ததனால்
விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்–ஷட் பாவ விகாரம் கொண்ட தேவாதி பாகுபாடு பொருந்தியதுமான பிறப்புக்கள்
கலங்குவது எவரைக் கண்டால் -எவரைப் பார்த்த மாத்திரத்திலே ஒழிந்து விடுமோ
மறைகளுக்கு இறுதி யாவார் -அவர் என்பர் கை வில் ஏந்தி இலங்கையில் பொருதார் அன்றே -வேதாந்தங்களில் சொல்லும் அவரே
ஸ்ரீ கோதண்டம் ஏந்தி ராக்ஷஸ வர்க்கங்களை நிரசித்தவர் என்று அறிந்தோர் சொல்லுவார்
ஆசீர்வாதம் -நமஸ்காரம் -வஸ்து நிர்த்தேசம் -வாழ்த்துதல் -வணக்கம் -தலைமைப் பொருள் உரைத்தல் –
மூன்று வகை மங்கள ஸ்லோகங்களில் இது மூன்றாவது வகை –
நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் -தொல்காப்பியம் -பஞ்சீகரணம் -பரிணாமம் –
பால காண்டத்தில் ஸ்வரூப -உபாய -புருஷார்த்தங்களை சொல்லுவதாக மூன்று கடவுள் வாழ்த்துக்கள் –
அயோத்யா காண்டத்தில் ஸ்ரீ ராமபிரான் சர்வஸ்வரன் என்று சொல்லி –
ஆரண்ய காண்டத்தில் வேதம் முதலிய ஸாஸ்த்ர கம்ய பர வஸ்து இவன் என்று கூறி
கிஷ்கிந்தா காண்டத்தில் இவனே பிரபஞ்சங்களில் சர்வத்தையும் தனது சரீரமாகக் கொண்டவன் என்றும்
இதில் வஸ்து நிர்தேச ரூப பரமான மங்கள ஸ்லோகம் -ஸ்ரீ ராமனாக திருவவதாரம் செய்து
ராவணாதி ராக்ஷஸ சம்ஹாரம் செய்து அருளினார் என்கிறார்
மாலை பாம்பு போலே தோன்றும் பொய்ம்மை -பொய்-போலே பொய்யான பிரபஞ்சம் மெய்யான பரம்பொருளை பார்த்ததும் மறையுமே-
மெய் உணர்ச்சி தோன்றியதும் அனைத்தும் அவன் திருமேனி என்று உணர்வோமே-மறைகளுக்கு இறுதி உபநிஷத் –
அதுவே ஸ்ரீ பெருமாள் -இவரே அனைத்தும் –
ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ ஆனின் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ யானும் நீ
அது அன்றி எம்பிரானும் நீ இராமனே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம் –
ஸ்ரீ திருவடி கடலைக் கடந்து இலங்கையைத் தேடி -ஸ்ரீ பிராட்டியைக் கண்டு -ஸ்ரீ கணையாழியைத் தந்து-பொழிலைச் சிதைத்து –
அரக்கரை வதைத்து -இராவணன் செருக்கைக் குலைத்து-மீண்டு வந்து ஸ்ரீ வேத முதல்வன் திருப்பாதம் வணங்கி
உயர்வற உயர்நலம் அருள பெறுகிறான் இன்பத்தை அருளிச் செய்வதே இந்த ஸ்ரீ ஸூந்தர காண்டம் –
மூன்று தடைகளைக் கடந்து ஸ்ரீ பிராட்டி கடாக்ஷம் பெறுகிறான் –சம்சார சாகரத்தைக் கடப்பதுக்கு ஸூசகம் –
———
1. கடல் தாவு படலம்-
துறக்க நாட்டை இலங்கை என்று அனுமன் ஐயுற்றுத் தெளிதல்
பேர் உருவம் கொண்டு நின்ற திருவடி வானுலகத்தைக் கண்டு அங்கு ஸ்ரீ சீதா பிராட்டி இல்லை என்பது கருதுதல் –
ஆண்தகை, ஆண்டு, அவ் வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்;
‘ஈண்டு, இது தான் கொல் வேலை இலங்கை?’ என்று ஐயம் எய்தா,
வேண்டு அரு விண்ணாடு என்ணும் மெய்ம்மை கண்டு, உள்ளம் மீட்டான்;
‘காண் தகு தோகை உம்பர் இல்’ என, கருத்துள் கொண்டான். 1–
துறக்க நாடு-இவ்வுலகம் துறந்து அடையத்தக்க சுவர்க்கம் –
ஆண்டு -அவ்விடத்தின் நின்றும் –
இவன் பேர் உருக் கொண்டு வளர்ந்ததை —
பொருவரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய் பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேகம் உறப் பெயர்ந்த தாள் போல்
உருவறி வடிவன் உம்பர் ஓங்கின உவமையாலும் திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் –கிஷ்கிந்தா -மகேந்திர படலம் –
—–
இலங்கையைக் கண்ட அனுமன் தோள் கொட்டி ஆர்த்தல்
கண்டனன், இலங்கை மூதூர்க் கடி பொழில் கனக நாஞ்சில்
மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியின் செய்த
வெண் தளக் களப மாட வீதியும், பிறவும் எல்லாம்;
அண்டமும் திசைகள் எட்டும் அதிர, தோள் கொட்டி ஆர்த்தான். 2-
கடி -நறு மணம் -காவல் -விளக்கம் -சிறப்பு -மிகுதி -புதுமை -ஆர்த்தல் –
———
இது முதல் பத்துக் கவிகள் திருவடி தனது திருவடிகளை ஊன்றி அழுத்த –
அதனால் மகேந்திர மலையில் உண்டான நிகழ்வுகளைச் சொல்லும்
வன் தந்த வரி கொள் நாகம், வயங்கு அழல் உமிழும் வாய,
பொன் தந்த முழைகள் தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-
நின்று, அந்தம் இல்லான் ஊன்ற-நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான. 3-
அந்தம் இல்லான் நின்று ஊன்ற-அழிவில்லாத திருவடி-பேர் உருவத்துடன் அந்த மலையின் மீது நின்று கொண்டு அழுத்த
திருவடி சிரஞ்சீவிகள் எழுவரும் ஒருவன் என்பதால் அந்தமில் –
மற்றவர் -அஸ்வத்தாமன் -பலி சக்ரவர்த்தி -வியாசர் -விபீஷணன் – கிருபன் -பரசுராமர்
அந்தம் இல்லான் நின்று ஊன்ற-இது மேல் உள்ள ஒன்பது செய்யுளுடன் இயைக்கும்-
நீலக் குன்றம்-நெரிந்து கீழ் அழுந்தும்-
அப்பொழுது
தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான–வயிறு கீண்டு வெளியில் சரிந்த குடல்களை ஒக்கும் படி
பொன் தந்த முழைகள் தோறும்-பொன் மயமாக குகைகளில் வசிக்கின்ற
வன் தந்த வரி கொள் நாகம்,வலிய தந்தங்களையும்-விஷப்பற்களையும் ரேகைகளையும் கொண்டுள்ள மலைப்பாம்புகள்
வயங்கு அழல் உமிழும் வாய–எரியும் விஷ அக்னியைக் காக்கும் வாய்களை உடையவனாய்
புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-உடல் புறத்து உராய்ந்து கொண்டு நெளிந்து வெளியே செல்வன ஆயின –
போஜ ராஜன் செய்த சம்பூ ராமாயணத்திலும் இந்த வர்ணனை உண்டு
ஸ்ரீ வால்மீகி பகவான் -நிஷ் பரமாண சரீரஸ் சந் லிலங்க யிஷோர் ஆர்ணவம் பஹுப்யாம பீடயாமாஸ
சரணாப்யாஞ்ச பாவாதம் என்று முதலில் கூறி
பின்பு -பதாப்யா ம்ருத்ருடம வஸ்தாநம க்ருத்வா —ஹானுமா நுத பதிஷ்யன் –என்று -பலவங்கமாநாம்
சதுர்ப்பிஸ் சஞ்சாராத -என்றால் போலே
கம்பரும் மேலே -15-ஊன்று ஆழ்ந்து அடித்து அணை அழுத்தலோடும் -என்கிறார்
பெரிய உருவம் எடுக்க இரண்டு கால்களாலும் அழுத்தி கடல் தாண்ட நான்கு கால்களாலும் அழுத்தியத்தை சொன்னபடி
———–
புகல் அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளைச் சீயம் பொங்கி,
உகல் அருங் குருதி கக்கி, உள்ளுற நெரிந்த; ஊழின்,
அகல் இரும் பரவை நாண அரற்றுறு குரல ஆகி,
பகல் ஒளி கரப்ப, வானை மறைத்தன, பறவை எல்லாம்- 4–
புகல் அரும் முழையுள் துஞ்சும் -குகைகளில் தூங்கும்
பொங்கு உளைச் சீயம் –மிக்க பிடரி மயிரை யுடைய சிங்கங்கள்
பொங்கி, உகல் அருங் குருதி கக்கி, –இரத்தத்தை கக்கிக் கொண்டு உயிர் ஒழிந்து –
உள்ளுற நெரிந்த; -குகைக்குள் இடங்களிலே நொறுங்கிப் போய் விட்டன
பறவை எல்லாம்–அம்மலையில் மேல் இருந்த பறவைகள் எல்லாம்
ஊழின்,அகல் –யுகாந்த காலத்திலே உலகம் முழுவதும் பரவுகின்ற
இரும் பரவை நாண-பெரிய சமுத்திரமும் தமது பேர் ஓசைக்கு முன்பே வெள்கிப் பின்னிடும்படி
அரற்றுறு குரல ஆகி,-அஞ்சிக் கத்துகிற பெரும் குரலை யுடையவனாய் –
பகல் ஒளி கரப்ப, வானை மறைத்தன, -சூரியனது ஒளி மறைந்து போம்படி ஆகாசம் முழுவதும் பரவிற்றன –
———–
மொய்யுறு செவி கடாவி முதுகுற முறை கால் தள்ள
மையுறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின்
மெய்யுறத் தலீஇய மெல்லென பிடியொடும் உருவலோடும்
கையுற மரங்கள் சுற்றிய பிளிறின களி நல் யானை –5-
களி நல் யானை –மதக் களிப்பையுடைய சிறந்த ஆண் யானைகள் –
மையுறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய -மேகங்கள் பொருந்திய ஆகாயத்தினிடத்தே மேல் புறமாக தூக்கிய வால்களை யுடையவனாய்
மஞ்சின் மெய்யுறத் தலீஇய-மேகம் போலே கருநிறமான தமது உடம்பை இறுகித் தழுவிக் கொண்ட
மெல்லென பிடியொடும்-மென்மையான பெண் யானைகளுடன்
உருவலோடும்-அச்சத்தோடு
மொய்யுறு செவி–வலிமை மிக்க தமது காதுகளை
கடாவி முதுகுற–முதுகின் புறத்திலே படும்படி அசைத்து
முறை கால் தள்ள –அசைகின்ற ஒவ்வொரு முறையிலும் காற்று வீச
கையுற மரங்கள் சுற்றிய பிளிறின -மரங்களை தம் தம் துதிக்கையால் உறுதியாக சுற்றிக் கொண்டு வீரிட்டன
————-
பொன் பிறழ் சிமயக் கோடு பொடி யுற பொறியும் சிந்த
மின் பிறழ் குடுமிக் குன்றம் வெரி நுற விரியும் வேலை
புல் புற மயிரும் பூவாக் கட் புலம் புறத்து நாறா
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இருந்த மாதோ –6-
மின் பிறழ் குடுமிக் குன்றம்-மின்னல் போலே ஒளி வீசுகின்ற உச்சியை யுடைய மகேந்திர மலையானது –
பொன் பிறழ் சிமயக் கோடு பொடி யுற-பொன் மயமாக விளங்குகின்ற -தனது சிகரம் நீறாக
பொறியும் சிந்த –தீப் பொறி பறக்குமாறு
வெரி நுற விரியும் வேலை -தம் முதுகு மிகுதியாகப் பிளவு படுகின்ற சமயத்திலே
வில்லியம்–புலிகள்
புல் புற மயிரும் பூவாக் -சிறிய உடம்பு மயிர்களும் முளையாதனவும்
கட் புலம் புறத்து நாறா-கண்கள் மலராதனவாயும் இருக்கிற
வன் பறழ் வாயில் கவ்வி –வலிய தன் குட்டிகளை வாயால் கவ்விக் கொண்டு
அப்போது பிறந்த குட்டிப் புலி என்றவாறு
இரிந்த –நிலை கெட்டு ஓடின
மாதோ –மாது ஓ ஈற்று ஆசைகள்
———–
தாரகை, சுடர்கள், மேகம், என்று இவை தவிரத் தாழ்ந்து,
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்,
கூர் உகிர் குவவுத் தோளான் கூம்பு என, குமிழி, பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே! 8–
பூமியை ஆர் கலி அழுவமாகவும்-அதில் தாழ்ந்து உள் புகும் மகேந்திர மலையை மரக் கலமாகவும் –
திருவடியை பாய் மரமாகவும் -நக்ஷத்ராதி சுடர்களை நீர்க் குமிழியாகவும் உருவகம் –
————-
தாது உகு நறு மென் சந்தம் குங்குமம் குலிகம் தண் எனும்
போது உகு பொலன் என்று இது தொடக்கத யாவும் பூசி
மீது உறு சுனை நீராடி அருவியோடு உலகின் வீழ்வ
ஓதிய குன்றம் கீண்டு குருதி நீர் சொரிந்தால் ஒத்த –9-
எளிதில் பொடி ஆவதால் மென் சாந்தம்
குலிகம் -இங்குலிகம் -முதல் குறை –
—————-
கடல் உறு மத்து இது என்ன கரு வரை திரியும் காலை
மிடல் உறு புலன்கள் வென்ற மெய்த்தவர் விசும்பின் உற்றார்
திடல் உறு கிரியில் தம் தம் செய்வினை முற்றி முற்றா
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஓத்தார் -10–4750-
முனிவர்கள் உடலின் கண் பாசம் விடாமல் சுவர்க்கம் மட்டுமே செல்வர் என்றதாயிற்று
——————
வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தாலும் நடுக்கம் எய்தி
மயில் இயல் தேவிமார்கள் தழீஇக் கொள்ளப் பொலிந்த வானோர்
அயில் எயிறு அரக்கன் அள்ளத் திரிந்த நாள் அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனி தனிக் கொடுத்தல் செய்தார் –11-
கைலாச மலையைத் தூக்கிய காலத்தில் தேவர்கள் அஞ்சியது போலே அஞ்சினார்கள்
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வான் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ சீதா ராமர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply