ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே
சஹஸ்ர நாம தத் துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே
————–
ஆசு அலம் புரி ஐம் பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
ஆசு அலம் புரி ஐம் பொறி வாளியும்- -ஆசு-குற்றம் -அலம் -மிகுதி-வாளி-அம்பு–மிகக் குற்றம் செய்யும் பஞ்ச இந்திரிய பானங்கள்
நெறியின் புறம் செலாக்-நன்னெறிக்கு புறம்பாய் -சன்மார்க்கத்துக்குப் புறம்பே செல்லாத
மேகம் சென்று கடலில் படிந்து மீளுதல் -ஆறுகள் தோன்ற காரணமான மேகத்தைப் பற்றியது
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர் கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே
நீறு அணிந்த கடவுள் நிறத்த -சிவ பிரானுடைய வெண்ணிறத்தை யுடைய
வான் ஆறு அணிந்து சென்று –மேகமானது தான் செல்லும் வான வழியை அணிந்து போய் –
ஆர் கலி மேய்ந்து –கடலின் நீரைப் பருகி
அகில் சேறு அணிந்த முலைத் திரு மங்கை -அகில் குழம்பை அணிந்த ஸ்தனங்களை யுடைய திரு மகளை
தன் வீறு அணிந்தவன் -தனக்கு வேறு ஒருவருக்கு இல்லாத சிறப்பு உண்டாகுமாறு திரு மார்பில் அணியாகக் கொண்டுள்ள திருமாலின்
மேனியின் மீண்டதே -திரு மேனியைப் போலே கரு நிறத்துடன் மீண்டது
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து-என்றத்தைப் பின் பற்றியது
பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன்ற குன்றின் மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே –
பம்பி மேகம் பரந்தது-மேகம் எழுந்து இமய மலையில் படிந்த தன்மை
இம்பர் வாரி-இவ் உலகத்து கடல்
நம்பன் மாதுலன்-சிவபெருமானது மாமனார் –
உமையைப் பயந்தமையால் இமயவான் சிவனுக்கு மாமனார் –
மேலும் கங்கை முதலிய நதிகள் தன்னிடையே தோற்றுவித்ததால் -கடல் -நம்பன் மாதுலன் -விரும்புதலையுடைய மாமனார் என்றுமாம் –
பானுவால் வெம்மையை நண்ணினான் -சூரியனால் வெப்பத்தை அடைந்திட்டான்
ஆதலால்
அம்பின் ஆற்றுதும் என்று -நீரினால் அவ்வெப்பத்தைத் தணிப்போம் என்று
அகன்ற குன்றின் மேல் எழுந்தது போன்றதே –பரந்த இமயம் மலையின் மேல் எழுந்து உள்ளதைப் போன்றது –
புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்தது எனத் தாரகைகள்
உள்ளி உள்ளவெலாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின் வழங்கின மேகமே
புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி –பெருமை யுடைய அந்த இமயமலை பொன்மயமாக இருப்பதைப் பார்த்து
வான் –ஆகாயம் அந்தப் பொண்ணை கல்லி எடுக்கும் படி
வெள்ளி வீழ் இடை வீழ்த்தது எனத் –வெள்ளி மயமான தோண்டும் கருவியை அதன் நடுவில் வீழ்த்தினால் போலே
மழைத் தரைக்கு வெள்ளிக் கோல் உவமை –
உள்ளி -கொடுக்குமாறு நமது பொருள் எங்கு என்ன உள்ளது என்று ஆராய்ந்து
உள்ளவெலாம் உவந்து ஈயும் –தம்மிடம் உள்ள பொருள்களை எல்லாம் மணம் உவந்து தருகின்ற
அவ் வள்ளியோரின் வழங்கின மேகமே -அவ் வண்மைக் குணமுடைய மிகச் சிறந்த வள்ளல்களைப் போலே
தாரகைகள் வழங்கின மேகமே — மேகம் மழைத் தாரகைகள் வழங்கின —
மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என
ஞானம் உன்னிய நான் மறையாளர் கைத்
தானம் என்னத் தழைத்தது நீத்தமே -மழைத் தாரை வெள்ளம் இவ்வாறு பெருகிற்று
மணியும் பொன்னும் மயில் தழைப் பீலியும்
அணியும் ஆனை வெண் கோடும் அகிலும் தன்
இணையிலா ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்தது அவ்வாரியே– ஆரமும் -சந்தனக் கட்டகைகளும்-
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து
ஊக்கம் மிகுந்து உள் தெளிவு இன்றியே
தேக்கு எறிந்து வருதலின் தீம் புனல்
வார்க்கும் தென் நுகர் மாக்களை மானுமே —
மஞ்சுலாம் சோலை பாடல் வியாக்யானத்தில் இப்பாடல் பெரியவாச்சான் பிள்ளை மேற்கோளாக காட்டுகிறார்
தீம் புனல் -இன் சுவை உள்ள நீரை உடைய வெள்ளம்
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப -ஈக்களும் வண்டுகளும் வந்து மொய்க்கும் படி
வரம்பு இகந்து -எல்லை கடந்து
ஊக்கம் மிகுந்து உள் தெளிவு இன்றியே
தேக்கு எறிந்து வருதலின் -தேக்கு மரங்களை வீசிக்கொண்டு வருதலலால்
வார்க்கும் தேன் நுகர் மாக்களை மானுமே –வார்க்கின்ற கள்ளைக்குடிக்கும் மனிதர்களை ஒத்து இருக்கும்
கள் குடியரைக் கூறும் பொழுது
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப –கள்ளின் நாற்றத்துக்காக மொய்த்தலும்
வரம்பு இகந்து -வர்ணாஸ்ரம தர்மங்களைக் கை விட்டு
ஊக்கம் மிகுந்து உள் தெளிவு இன்றியே -உத்ஸாகம் மிக்கு மனஸ் தெளிவு பெறாமலும்
தேக்கு எறிந்து வருதலின் -ஏப்பம் விடுதலலாலும்
————-
சரயு நதியின் சிறப்பும், நால் வகை நிலத்திலும் அது ஓடியச் சிறப்பும்
இரவி தன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம். 12-
சரயு என்பது-இவ் உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்-தாய் முலை அன்னது–உலாவும் தன்மை யுள்ள நீரை யுடைய
கடலினால் சூழப்பட்ட . இந்நிலத்தில் வளர்கின்ற பிராணிகளுக்கு எல்லாம் குழந்தைக்கு
தாய் முலை போலே பயன் படும் தன்மை யுடைய சரயு நதி –
கைலாச கிரியில் உள்ள மானஸ மடுவில் தோற்றம் –
கொடிச்சியர் இடித்த சுண்ணம், குங்குமம், கோட்டம், ஏலம்,
நடுக்குறு சந்தம், சிந்தூரத்தொடு நரந்தம், நாகம்,
கடுக்கை, நாள் வேங்கை, கோங்கு, பச்சிலை, கண்டில் வெண்ணெய்,
அடுக்கலின் அளிந்த செந் தேன், அகிலொடு நாறும் அன்றே. 13–
கொடிச்சியர் இடித்த சுண்ணம், குங்குமம், -குறிஞ்சி நிலத்து மகளிர் இடித்துச் செய்த வாசனைப் பொடியும் குங்குமப்பூவும்
கோட்டம், –கோஷ்டம் என்னும் வாசனைப் பந்தமும்
ஏலம்,-ஏலக்காயும்
நடுக்குறு சந்தம், -குளிர்ச்சியினால் நடுக்கம் கொடுக்கும் சந்தனமும்
சிந்தூரத்தொடு -வெட்சிப்பூவும்
நரந்தம்,-நரந்தப்புல்லும்
நாகம்,–சுரபுன்னைப்பூவும்
கடுக்கை, -கொன்றைப்பூவும்
நாள் வேங்கை, –காலை மலர்கின்ற வேங்கைப்பூவும்
கோங்கு, -கொங்கு இலவமும்
பச்சிலை, -பச்சிலையும்
கண்டில் வெண்ணெய்,-பூண்டும்
அடுக்கலின் அளிந்த செந் தேன், -மாலியில் கட்டப்பட்ட இனிய தேன் கூடும்
அகிலொடு நாறும் அன்றே-அகில் கட்டையும் கூடி மணம் வீசும்
சரயு நதி குறிஞ்சி நிலத்தில் பாயும் பொழுது உண்டானவை இதில்
மேலே பாலை -முல்லை நிலத்தில் மருத நிலத்திலும் பாயும் நிலைமையும் வர்ணிக்கிறார்
செறி நறும் தயிரும் பாலும் வெண்ணெயும் தெளிந்த நெய்யும்
உறியோடு வாரி யுண்டு குருந்தோடு மருதம் உந்தி
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரு நீரால்
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே –
ஸ்ரீ கிருஷ்ணனைப் போலும் உள்ள நதி –
குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று -என்றும்
உயர் கொள் சோலைக் குருந்து யோசித்ததும் -போன்ற அருளிச் செயல்கள் ஒட்டிய பாசுரம்
முல்லையைக் குறிஞ்சி யாக்கி மருதத்தை முல்லை யாக்கிப்
புல்லிய நெய்தல் தன்னை பொருவறு மருதமாக்கி
எல்லையில் பொருள்கள் எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல்லுறு கதியில் செல்லும் வினை எனச் சென்றதன்றே —
செல்லுறு கதியில் செல்லும் வினை எனச் சென்றதன்றே –உயிர்கள் பிறக்குமாறு –
தேவ மனுஷ்ய திர்யக் ஜங்கம-என்கிற நால்வகை கதியில் இரு வினைகளுக்கு ஏற்ப செல்வது போன்று இது சென்றது
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றே யாகித் துறை தொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே —
சரயு ஒன்றேயாகி ஏரி குளம் கால்வாய் போன்று பெருகியது பரம்பொருளைப் போலவே –
தாதுகு சோலை தொறும் செண்பகக் காடு தொறும்
போதவிழ் பொய்கை தொறும் புது மணத் தடங்கள் தொறும்
மாதவி வேலிப் பூக வனம் தொறும் வயல்கள் தொறும்
ஓதிய உடம்பு தொறும் உயிர் என வுலாயதன்றே–
தேவாதி சதுர்வித தேகங்களில் உயிர் புகுவது போலே சரயு நீரால் செழித்து இருக்குமே
உயிர்க்கும் உயிரான பரம்பொருளைச் சொல்லிட்ரி ஆக்கவுமாம் –
———–
2. நாட்டுப் படலம்-கோசல நாட்டின் வளப்பத்தைக் கூறும் படலம் –
வாங்க யரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்
தீம்கவி செவிகளாரத் தவறும் பருகச் செய்தான்
அங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியல் உற்றேன்
மூங்கையான்-ஊமை
பிருகு வம்சத்தவர் வால்மீகி -ருஷன்-என்ற பெயர் -தவம் செய்து புற்று மூட –
வருணன் மழையால் புற்று கரைந்து வெளிப்பட்டவர் ஆதலால் வால்மீகி பெயர்
தோயும் வெண் தயிர் மத்தொலி துள்ளவும்
மாய வெள் வளை வாய் விட்டு அரற்றவும்
தேயு நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் –29-
பெரும் தடம் கண் பிறை நுதலார்க்கு எலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே –36—-விருந்து ஓம்பலும் ஈகையும்
கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்;
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்,
ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே–39—நல்லவற்றின் நலனும், தீயன செய்யாமையும்
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை
நகிலின் ஆலை நறும் புகை நான் மறை
புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும் —41-
பல்வகைப் புகைகள் -நகிலின் ஆலை நாறும் புகை -கருப்பஞ்சாற்றை காய்ச்சும் நெருப்பின் புகை
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை ஓர் பொய்யுரை இல்லாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி ஒங்கலால்–53-
————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வான் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ சீதா ராமர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply