ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –107–இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்-இத்யாதி –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி தம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து –
தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட
நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து –
இதிலே
அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு –
அசங்க்யேயமான துக்கங்களை அனுபவித்து உரு மாய்ந்து முடியிலும் –சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்—
தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய் -அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்
கொண்டு அடிமைப் படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய் இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம் இருக்க வேண்டும் என்று –
அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற – அவரை விளித்து –
தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான் ஆட்படும்படி யாக
அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை விண்ணப்பம் செய்கிறார் .

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107- –

பத உரை –
இன்புற்ற -தண்ணிய என் இதயத்தில் இடம் பெற்று ஆனந்தம் அடைந்த
சீலத்து -பழகும் இயல்பு வாயந்துள்ள
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
சொல்லுவது -தேவரீரிடம் விண்ணப்பம் செய்வது
ஓன்று உண்டு -ஒரு விஷயமிருக்கிறது
அது யாது எனில் –
என்பு உற்ற நோய் -எலும்பைப் பற்றி நின்று வருத்தும் நோய்கள் உடையதான
உடல் தோறும் -ஒவ்வொரு சரீரத்திலும்
பிறந்திறந்து -பிறப்பதும் சாவதுமாய்
எண் அறிய -எண் இல்லாத
துன்பு உற்று –துன்பம் அடைந்து
வீயினும் -ஒழிந்தாலும்
என்றும் -எக் காலத்திலும்
எவ்விடத்தும் -எல்லா இடத்திலும்
உன் தொண்டர்கட்கே -தேவரீருடைய அடியார்களுக்கே
அன்புற்று இருக்கும்படி -அன்பு உடையேனாய் இருக்கும்படியாக
ஆக்கி -செய்து
என்னை-அடியேனை
அங்கு -அவ்வடியார்கள் திறத்திலே
ஆட்படுத்து -அடிமையாம்படி பண்ணி யருள வேணும்

வியாக்யானம் –
எத்தனையேனும் தண்ணியனான என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து – அது தன்னைப் பெறாப் பேறாக நினைத்து –
ஆநந்த நிர்பரராய் -எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை உடையவரே –
இப்படி இருக்கிற தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது-ஒரு கார்யம் உண்டு –
அது ஏது என்னில் –
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –என்னுமா போலே -ஸ்ரீ திரு வாய் மொழி -2 9-3 – –
தோற்புரையே போமதன்றியிலே அஸ்த்திகதமாய் இன்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும் –
ஜநிப்பது மரிப்பதாய் – அசங்க்யேய துக்கங்களை அனுபவித்து முடியிலும்
சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும் அவர்களுக்கே மாறுபாடுருவின
ஸ்நேஹத்தை உடையேனாய் இருக்கும்படியாக செய்து என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் -என்று கருத்து .

இன்பு -சுகம்
சீலமாவது -பெரியவன் தண்ணியன் உடன் புரையறக் கலக்கும் ஸ்வபாவம்
என்பு -எலும்பு
துன்பு -துக்கம் –

தொண்டர்கட்கே –ஏவகாரம் -உமக்கும் ஸ்ரீ ஆழ்வாருக்கும் அவனுக்கும் இன்றி –
அடியார் அடியார் -அவர்க்கே அல்லால் -அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்ப்பாடு என்னைப் பண்ணி –
அங்கு ஆள்படுத்தே –கிரய விக்ர அர்ஹமாகும் படி –
இப்பொழுது தான் விண்ணப்பம் செய்ய -முன்பு சொன்னது எல்லாம் இதற்கு தயார் பண்ணி –
ஸ்ரீ கீதாச்சார்யன் -அர்ஜுனனை தயார் பண்ணி அருளிச் செய்தால் போலே –குஹ்ய தமம் –
பக்தி பண்ணி சொல்ல -மன்மனா பாவ இத்யாதி –
ஸ்ரீ பெரும் பூதூர் மட்டும் இல்லை -ஸ்ரீ எம்பார் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ திருப் கட்சி நம்பி
திருவவதார ஸ்தலங்களுக்கு போக வேண்டுமே –
2-பாசுரத்தில் உபக்ரமித்து மிக்க சீலம் அல்லால் இதிலும் -இன்புற்ற சீலத்து இஇராமாநுச என்று உப சம்ஹரிக்கிறர் –
ஆக்கி ஆள்படுத்தி- மனசில் உணரவைத்து கைங்கர்யமும் கொள்ள வேணுமே –
அடியேன் செய்ய விண்ணப்பம் ஸ்ரீ ஆழ்வார் தொடங்கும் பொழுதே பிரார்த்தித்து –
இங்கு ஸ்ரீ அமுதனார் விண்ணப்பம் செய்த உடனே தலைக் கட்டி அருளுகிறார் ஸ்வாமி –
23-பாசுரம் -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -பிரார்த்தனை –அச்சமயத்தில் சொல்லும் அசடு இல்லையே –
29-பாசுரத்தில் உற்றோமே ஆவோம் -உனக்கே ஆட் செய்வோம் –கைங்கர்ய பிரார்த்தனை -சரணாகதிக்கு அப்புறம் தானே –
இங்கு சொல்லுவது ஓன்று உண்டு சொல்லி அடுத்த வரியில் -என்ன என்கிறார் -இன்புற்ற சீலவான் ஸ்வாமி என்பதால் –
தொண்டர்களுக்கே -ஏக -சப்தம் தானும் பிறருமான -தானும் இவனுமான நிலையையும் கழித்து
வெளி உள் இரண்டையும் கழித்து என்றபடி –
உபாய பரமாக இல்லை ப்ராப்ய பரமாக

இன்புற்ற சீலத்து இராமானுசா –
ஸ்ரீ திரு வேம்கட முடையானுக்கும் ஸ்ரீ திரு குறும்குடி நம்பிக்கும்
திரு இலச்சினையும் -ஸ்ரீ பாஷ்யதையும் பிரசாதித்த ஸ்ரீ ஆசார்யராகவும் –
ஸ்ரீ செல்லப் பிள்ளைக்கு பிதாவாயுமாய் இருக்கிற தேவரீருடைய மதிக்கையும் –
அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய தண்மையையும் பாராதே –
என்னை தேவரீருக்கு அவ்வருவாக எண்ணி -என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து –
அது தன்னையே பெறாப் பேறாக நினைத்து – ஆனந்த நிர்பரராய் எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை
உடைய ஸ்ரீ எம்பெருமானாரே –
இன்பு -ஸூகம்
சீலமாவது பெரியவன் தண்ணியரோடு புரை யறப் பரிமாறும் ஸ்வாபம் –
இப்போதாக காணும் இவருடைய-சீலம் அமுதனாருக்கு வெளியாகத் தொடங்கிற்று-

இன்புற்ற சீலத்து இராமானுச
மிகத் தண்ணியனான எனது இதயத்துள்ளே இருப்பதை பெறாப் பேறாக கருதி இன்பத்துடன்
எழுந்து அருளி வுள்ளமையால் -என்னிடம் உள்ள வ்யாமோஹம் வெளிப்படுகிறது
இந்த வ்யாமோஹம் எவ்வளவு குற்றங்கள் நிறைந்து இருந்தாலும் அவற்றை நற்றமாக தோற்றும்படி செய்து விடுகிறது
ஸ்ரீ சர்வேஸ்வரன் சேதனர்கள் இடம் உள்ள வ்யாமோஹத்தாலே அவர்களோடு மிகப் புல்லிய இதயத்திலே குற்றம் தோற்றாமல்
அது நற்றமாக தோன்ற எழுந்து அருளி இருப்பது போன்றது இதுவும் என்க-
அனைவருக்கும் ஈசானன் மத்தியில் இதயத்தில் கட்டை விரல் அளவினனாய் எழுந்து அருளி உள்ளான் .

ஸ்ரீ ஈச்வரனே இருப்பதால் அருவருப்பதில்லை -என்னும் உபநிஷத்தும்
தத பூத பவ்ய ஈச்வரத்வாதேவ வாத்சல்யாதிசயாத் தேக கதாநபி தோஷான் போக்யதயா பச்யதீத்யர்த்த -என்று
ஆகையினாலே முற்காலத்தவருக்கும் பிற்காலத்தவருக்கும் ஸ்ரீ ஈச்வரனே இருப்பதனாலேயே வாத்சல்யம் மிக்கதனால்
தேஹத்தில் உள்ள தோஷங்களையும் போக்யமாகப் பார்க்கிறான் -என்று பொருள்

ஸ்ரீ வேதாந்த தேசிகனும் –
ஔதன்வதே மதி சத்மனி பாசாமானே ச்லாக்க்யே ச திவ்ய சதனே தமஸ பரஸ்தாத்
அந்த களேபரமிதம் சூஷிரம் சூசூஷ்மம் கரீச கதமா தர்ண ஸ்பதம் தே -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத் – 21-
ஸ்ரீ திருப்பாற்கடலின் கண் உள்ள பெரிய இல்லம் இலங்கிக் கொண்டு இருக்கும் போது –
பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் கொண்டாடத் தக்க அப்ராக்ருதமான திரு மாளிகையும் துலங்கிக் கொண்டு இருக்கும் போது –
சரீரத்துக்கு உள்ளே மிகவும் நுண்ணிய இந்தப் பொந்து-ஸ்ரீ அத்திகிரிப் பெருமாளே -எப்படி நீ ஆதரிக்கும் இடம் ஆயிற்று –
என்று அருளிய ஸ்லோகமும் நினைவிற்கு வருகின்றன –

ஸ்ரீ இறைவனும் தம் இதயத்தில் இடம் தேடி வரும்படியான ஏற்றம் வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானார் –தமது மென்மையை-மேன்மையை –
நோக்காது -மிகத் தாழ்ந்தவனான எனது இதயத்து உள்ளே –பதிந்து உரையும்படியாக -என்னோடு பழகினால் –
அந்த சீல குணத்தை என் என்பது -என்று
வ்யாமோஹம் -அதானாலாய வாத்சல்யம் சீலம் -என்னும் குணங்களில் ஈடுபட்டு இன்புற்ற சீலத்து இராமானுச –என்று விளிக்கிறார் .
தாம் சீரிய புருஷார்த்தத்தை பெற விண்ணப்பிக்கப் போவது வீணாகாது -பயனுறும் -என்னும்
தமது துணிபு தோன்ற இங்கனம் விளிக்கின்றார் -என்று அறிக –
சீலமாவது-பெரியவன் சிறியவனோடு வேற்றுமை தோன்றாமல் பழகுதல் –
மிக்க சீலமல்லால் உள்ளாதென்நெஞ்சு– 2- என்று முதலில் சீல குணத்தில் ஈடுபட்டவர் முடிவிலும் ஈடுபடுகிறார் .

சொல்லுவது ஓன்று உண்டு –
சர்வஞ்ஞாரான தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
நத்வே வாஹம் -என்று தொடங்கி- கர்ம ஞான பக்திகளை பரக்க உபதேசித்து கொண்டு போந்து –
சர்வ குஹ்ய தமம்-பூய ஸ்ருணுமே பரமம் வச -என்று உபதேசிக்கும் போது ஸ்ரீ கீதச்சர்யன் அருளிச் செய்தால் போலே இவரும் –
இராமானுசா இது என் விண்ணப்பமே -என்கிறபடியே இவ்வளவும் தம்முடைய அபிநிவேசம் எல்லாம் விண்ணப்பம் செய்து
இப்பாட்டிலே தம்முடைய அபேஷிதத்தை நிஷ்கரிஷித்து அருளிச் செய்கிறார் –
அங்கு சேஷி உடைய உக்தி –இங்கு சேஷ பூதனுடைய அபேஷிதம் –
ஒரு பிரயோஜனம் உண்டு என்றீர் அது என் என்ன –

சொல்லுவது ஓன்று உண்டு
என்றும் எவ்விடத்தும் —அங்கு ஆட்படுத்து –தாம் அறுதி இட்டு இருக்கிற புருஷார்த்தத்தை திரு உள்ளத்திலே இறுதியாகப்
படும்படி செய்து கார்யத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக நயந்து -சொல்லுவது ஓன்று உண்டு -என்கிறார் –
இரந்து உரைப்பது உண்டு -திரு சந்த விருத்தம் – 101- என்று ஸ்ரீ எம்பெருமானிடம் ஸ்ரீ திரு மழிசைப் பிரான்-
விண்ணப்பித்தது போலே விண்ணப்பிக்கிறார் ..
எத்தனை கஷ்டம் நேர்ந்தாலும் சித்தம் சிதறாது தேவரீர் தொண்டர்கள் இடம் அன்பு மாறாமல் அவர்களுக்கே அடிமை
செய்யும்படியான நிலைமையை அடியேனுக்கு அளித்து அருள வேணும் – என்று புருஷார்த்தத்தை வடி கட்டி அபேஷிக்கிறார் .

என்புற்ற நோயுடல் தோறும்-பிறந்து இறந்து எண்ணரிய துன்புற்று –
நோய் -வியாதி -அதாகிறது -ஆத்யாத்மிகாதி துக்கங்கள் –
அந்த நோயானது அந்தர்பஹிந்திரிய வியாபார ரூப ஸ்வ க்ரத கர்ம பலம் ஆகையாலே தோற்புரையே போமது அன்றிக்கே –
அஸ்திகதமாய் கொண்டு இருக்கையாலும் ஆத்மா நாசகம் ஆகையாலும் –என்புற்ற –என்று விசேஷிக்கிறார் –

என்பு -எலும்பு –
உறுகை -அத்தைப் பற்றி நிற்கை –
உடல் தோறும் -அப்படி அஸ்திகதங்களாய் கொண்டு நலியக்-கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரம் தோறும் –
துர்வார துரித மூலம் துஸ்தர துக்காநாம் பந்த நீ ரந்தரம்வபு -என்னக் கடவது இறே –
அன்றிக்கே –
நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை –என்கிறபடியே
அந்த வியாதி தானே உருக் கொண்டு இருக்கிற -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சரீரங்கள் என்று என்னுதல்-
ஜன்ம பரம்பரைகள் தோறும் -என்றபடி-பிறந்து இறந்து என்ற இது மற்ற அவஸ்த தாந்தரங்களுக்கும் உப லஷணம் –
இறப்பு -நாசம் –

என்புற்று நோய் உடல் தோறும்
தோல் அளவோடு நில்லாது எலும்பைப் பற்றி நின்று வாட்டும் தாபம் -ஷயம் முதலிய வியாதிகளுக்கு
இடமான ஒவ்வொரு சரீரத்திலும் -என்றபடி –
நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -ஸ்ரீ பெரிய திரு மொழி – 9-7 7- – என்றார் ஸ்ரீ திரு மங்கை மன்னனும் .
நோய்களினால் நலிவு விரும் உடல் வாய்ந்த பிறப்புக்கள் தோறும் -என்றது ஆயிற்று –
தேவரீர் தொண்டர்கட்கே அன்புற்று ஆட்படுத்தப் பெறுவேன் ஆயின்
நோய்களினால் நலிவுறும் பல பிறப்புக்கள் நேரினும் நல்லதே -என்று கருத்து –

பிறந்து இறந்து எண்ணற்ற துன்புற்று வீயினும் –
அவ்வவ ஜன்மங்களிலே ஜநிப்பது-மரிப்பது தொடக்கமான அவஸ்தா சப்தகத்திலும் விரலை மடக்கி ஓன்று இரண்டு என்று
எண்ணப் புக்கால்-அது கால தத்வம் உள்ள அளவும் எண்ணினாலும் எண்ணித் தலைக் கட்ட அரிதான துக்கங்களை ஒன்றும்-
பிறிகதிர் படாதபடி அனுபவித்து முடியிலும் –
போற்றலும் சீலத்து இராமானுச –என்கிறபடியே
தேவரீர் உடைய-சீல குணத்தை அளவிட்டு சொல்லினும் -இஸ் சரீர அனுபந்தியான துக்கத்தை அளவிட்டு
சொல்ல ஒண்ணாது என்கிறார் காணும் –
துன்பு –துக்கம் –

பிறந்து இறந்து எண்ணரிய -துன்புற்று வீயினும்
பிறப்பு இறப்புகளை சொன்னது ஏனைய இருத்தல் -மாறுபடுதல்-வளர்த்தல் தேய்தல் என்னும்
விகாரங்களுக்கும் உப லஷணம்.
ஆக பொருள்களுக்கு உள்ள ஆறு விகாரங்களும் கூறப் பட்டன ஆகின்றன .
இனி அவஸ்தாசப்தகம் எனப்படும்
கர்ப்பம் ஜன்மம் பால்யம் யவ்வனம் வார்த்தகம் மரணம் நரகம் என்னும் இவைகளைக்
கூறப்பட்டனவாகக் கொள்ளலுமாம் .
இந்த விகாரங்களுக்கு உள்ளாவதோடு எண்ணற்கு அரிய துன்பங்களால் தாக்கப்பட்டு படு-
நாசத்துக்கு உள்ளாக்கும் நிலை ஏற்படினும் ஏற்படுக –
தேவரீர் தொண்டர்கட்கே அன்பனாய்-அடிமை யாக்கப் பெறின் அவைகளும் ஏற்கத் தக்கனவே -என்கிறார் .
இறத்தல் சரீரத்திற்கு நேருவது–வீதல் ஆத்மாவுக்கு நேரிடும் உழலுதலாகிற படு நாசத்தை கூறுகிறது -என்று வேற்றுமை அறிக

நான் பிறப்பு இறப்பு வேண்டாம் துன்புற்று வீதல் ஆகாது என்று தேவரீர் இடம் விண்ணப்பிக்கிறேன் அல்லேன் –
எத்தகைய நிலை ஏற்படினும் தேவரீர் தொண்டர்கட்கே அடிமை செய்யும் படி அருள் புரிய வேணும் -என்று
விண்ணப்பிக்கிறேன் என்றார் ஆயிற்று –
பிராணன் பிரியும் போது கபம் தொண்டையை அடைக்கும் காலத்தும் –
நின் கழல் எய்யா தேத்த அருள்-செய் எனக்கே -திருவாய் மொழி -2 9-3 – என்று ஸ்ரீ நம் ஆழ்வார்
பிரார்தித்ததை இங்கு நினைவு கூர்க–
எம்பெருமானார் தொண்டர்கட்கே ஆட்பட்டோருக்கு – உடல் தோறும் பிறந்து இறந்து துன்புற்று வீதல் நேரவே மாட்டா –
நேரினும் ஆட்படும் இன்பத்தை நோக்க அவைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து ஒழியும் என்க –

என்றும் –
எல்லா காலத்திலும் –

எவ்விடத்தும் –
எல்லா இடத்திலும் –

என்றும் எவ்விடத்தும் –
இந்த காலம் இந்த இடம் என்கிற வரையறை இன்றி ஆட்படுத்தப்பட வேணும் -என்க

உன் தொண்டர் கட்கே –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இராதே மோஷ-பிரதான தீஷிதராய் அன்றோ –
இவ்வளவாக திருத்தி என்னுடைய ஹிருதயத்திலே புகுந்து நித்ய வாசம் பண்ணா நிற்கிற தேவரீருக்கு
அனந்யார்ஹ சேஷமாய் இருக்கும் அவர்களுக்கே –
அவதாரணத்தாலே –அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகிறார் –
உனக்கே நாம் ஆட் செய்வோம் –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே —
ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் – என்றும்
தமேவ சாத்யம் புருஷம் பிரபத்யே -என்றும் பிரதம பர்வத்தில் சொல்லுகிறபடியே –

குருரேவ பரம் பிரம்ம -என்றும் –
உபாய உபேயே பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்றும்
தேவு மற்று அறியேன் -என்றும்
தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாக மன்னுமது – என்றும்
சரம பர்வத்தில் சொல்லுகிறபடியே சொல்லுவித்தார் -இறே –

அன்புற்று இருக்கும் படி –
நிரவதிக-பிரேம யுக்தனாய் இருக்கும்படி –
அன்பு -ஸ்நேஹம் –என்னை ஆக்கி -தேவரீருக்கு கிருபா விஷய பூதன் ஆகும் படி என்னைப் பண்ணி –

அங்கு ஆள்படுத்தே –
பவதீயர் திருவடிகளில் விஷயமான எல்லா அடிமைகளிலும் அன்வயித்து-க்ர்த்தார்த்தனாம் படி
பண்ணி அருள வேணும் என்கிறார் –
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் நீங்காது ஏத்த அருள் செய் எனக்கே என்று இப்படியே
ஸ்ரீ ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –

உன் தொண்டர்கட்கே
இன்னார் இணையார் என்று இல்லை –
தேவரீர் தொண்டர்களாய் இருத்தலே வேண்டுவது
தேவரீருக்கு பிரியும் தொண்டினையே குறிக் கோளாக கொண்டவர்களுக்கே என்னை
ஆட்படுத்த வேணும் . அன்புற்று இருக்கும் படி –அங்கனம் ஆட்படுதல் நிலை நின்று முதிர்ந்த அன்பினால்
ஆயதாய் இருத்தல் வேண்டும் .

என்னை யாக்கி அங்கு ஆட்படுத்து –
அன்புடையவனாய் இருக்கும்படியும் செய்ய வேணும் –
ஆட்செய்யும்படியாகவும் பண்ண வேணும்
இரண்டும் வேண்டிப் பெற வேண்டிய புருஷார்த்தங்கள் ஆகும் எனக்கு -என்பது கருத்து –

அன்பின் பயனாய் அடிமை தானே அமையாதோ-எனின் –
இவன் அடிமை செய்திடுக -என்று தேவரீர் இரங்கி தந்ததாய் இருத்தல் வேண்டும் என்கிறார் –
உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் -திரு பள்ளி எழுச்சி – 10- என்னும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடியார்
திருவாக்கினை இங்கு நினைவு கூர்க –

தொண்டர்கட்கே –ஆட்படுத்து –
உனக்கே நாமாட் செய்வோம் –திருப்பாவை – 29- என்று ஸ்ரீ ஆண்டாளும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் மொழி -2 -9 -4 – என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும்
போலப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷித்துத் –தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்கிறார்

முன்னைய பாசுரங்களில் முன்னிலையாகப் பேசி வந்த ஸ்ரீ நம் ஆழ்வார்
புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது மட்டும் ஸ்ரீ எம்பெருமான் திரு முகத்தை நோக்கி முன்னிலையில் கூறாது –
தனக்கேயாக -என்றது –
முகத்தை நோக்கில் புருஷார்த்தத்தில் கொண்ட துணிவு அவ் அழகினால் குலைவுறும்
என்று கவிழ்ந்து இருந்தமையினால் என்று ரசமாக பணிப்பர் ஸ்ரீ ஆச்சார்யர்கள் –
ஸ்ரீ ஆண்டாள் அங்கன் அன்றிப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது அதனில் ஊன்றி நிற்பவள் ஆதலின் –
புருஷார்த்தத்தில் தான் கொண்ட துணிவு குலைவுறுமோ என்னும் அச்சம் ஏற்பட வழி இல்லாமையால் –
ஸ்ரீ கோவிந்தன் முகத்தை நோக்கி –
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று நிஷ்கர்ஷம் செய்து அருளினாள் –
ஸ்ரீ அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஸ்ரீ ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி –
உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .

தொண்டர்கட்கே அன்பும் -ஆட்படுதலும் உபயோகப் படுவனவாய் அமைய வேண்டும் .
தொண்டர்கட்கும் பிறர்க்குமாக ஒண்ணாது
தொண்டர் கட்கே யாக வேணும்
தொண்டர்கட்கும் எனக்குமாக ஒண்ணாது
தொண்டர்கட்கே யாக வேணும் என்பது ஸ்ரீ அமுதனார் செய்யும் புருஷார்த்த நிஷ்கர்ஷமாகும் –

தேவு மற்று அறியேன்- சரணாகதி அருளியவன் தாளே அரணாக மன்னும் அது-
பிரேம யுக்தனாய் -அன்பு-ஆக்கி ஆட் படுத்து என்று பிரார்த்திக்கிறார்–

ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்ரீ வரவர முனி சம்பந்திகளின் சம்பந்தம் வேண்டும் என்றார்-

———–

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –திருப்பாவை -28-

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்
ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -29-

உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய்–பெரியாழ்வார் திருமொழி- 5-3-3-

தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன் அடி இணைக் கீழ் அலர்கள் இட்டு
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –பெருமாள் திருமொழி -1-3-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -2-4-

அரங்கன் எம்மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலையுற்றது என் நெஞ்சமே -2-8-

தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசாக எண்ணேன் மற்ற அரசு தானே -10-7-

அத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த-115-

மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு
ஆள் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே -திருமாலை-27-

எம்பிராற்கு ஆள் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -28-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்;நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து;ஒல்லை
கைம்மாத் துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது இஃதே–2-9-1-

செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே!
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின்கழல்
எய்யாது ஏத்த அருள் செய் எனக்கே–2-9-3-

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை
அளியன் என்று அருளி யுன் அடியார்க்கு ஆள் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –திருப் பள்ளி எழுச்சி -11-

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான் -பெரிய திருமொழி-4-10-9-

தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும்
பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-

தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாரே -7-4-9-

நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -பெரிய திரு மொழி – 9-7 7- –

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் –அமலனாதி -1-
மனக்கே ஆட் செய் எக் காலத்தும்’ என்று,என்
மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னித்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே–2-9-4-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூ மணிவண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே–3-7-2-

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே–3-7-3-

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் மடியார் எம் அடிகளே–3-7-9-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப் படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-

வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தாமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக் கை என்னம்மான்
நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10-

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று -10-9-6-

—————————————————————————————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading