ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
தாம் அபேஷித்த படியே திருவடிகளை கொடுத்து அருளப் பெற்று க்ருத்தார்த்தராய் –
அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து -இவை எல்லாம் செய்த பின்பு-
இனிச் செய்வதாக நினைத்து அருளுவது ஏதோ ?–என்கிறார்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கீழ் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானாரை குறித்து –
தேவரீருடைய திருவடிகளை சர்வதா அனுபவித்துக் கொண்டு இருக்கும் படி எனக்கு தந்து அருள வேணும் -என்ன –
அவரும் உகந்து அருளி-தாம் அபேஷித்த படியே விலஷணமான கிருபையை பண்ணி -திருவடிகளைக் கொடுக்க –
அவரும் க்ர்த்தார்த்தராய் –
வேத பிரதாரகரான குதர்ஷ்டிகளை பிரமாண தமமான அந்த வேதார்த்தங்களைக் கொண்டே நிரசித்தும் –
பூமிப் பரப்பு எல்லாம் தம்முடைய கீர்த்தியை எங்கும் ஒக்க வியாபித்தும் –
என்னுடைய ப்ராப்தி பிரதிபந்தக கர்மங்களை வாசனையோடு ஒட்டியும் –
இப்படி பரமோதாரரான ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு இன்னமும் எத்தை உபகரித்து அருள வேணும் என்று
நினைத்து இருக்கிறார் -என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் –
அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து -இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ -என்கிறார் .
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –
பத உரை .
ஈயாத -இதற்க்கு முன் எவர்க்கும் கொடுத்திடாத
இனி அருள் -இனிய திருவருளை
ஈந்தனன் -எனக்கு கொடுத்து அருளினார்
எண் இல் -எண்ணிக்கை இல்லாத
மறை குறும்பை -வேதத்தை தம் இஷ்டப் படி பொருள் கூறும் குறும்புத் தனம் வாய்ந்த மதங்களை
அம்மறைப் பல் பொருளால் -அந்த வேதம் கூறும் பல நேரிய பொருள்களைக் கொண்டு
பாய்ந்தனன் -உதைத்து தள்ளி விட்டார்
இப்படி அனைத்தும் -இந்த பூமி முழுவதும்
கீர்த்தியினால் –இசையினால்
ஏய்ந்தனன் -பொருந்தினார் -பரவி நின்றார்
என் வினைகளை -என்னுடைய கர்மங்களை
வேர் பறிய-வேர் போன்ற வாசனை போம் படி யாக
காய்ந்தனன் -போக்கடித்தார்
வண்மை இராமானுசர்க்கு -வள்ளன்மை வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானார்க்கு
இனி -இதற்கு மேல்
கருத்து என் -திரு உள்ளத்தில் நினைப்பு எது ?
இன்னும் செய்யத் தக்கது உண்டோ ? என்பது கருத்து .
வியாக்யானம் –
1-இதுக்கு முன்பு ஒருவர்க்கும் உபகரியாத விலஷணமான அருளை எனக்கு உபகரித்தார் –
2-.எண்ணிறைந்த மறைக் குறும்புண்டு-வேதத்தை மூலையடியே நடத்துகிற குத்ருஷ்டி மதங்கள்–அவற்றை அந்த
வேத ப்ரதிபாத்யமான அநேக அர்த்தங்களைக் கொண்டு தள்ளி விட்டார் –
3-.-இந்த பூமி எல்லாம் கீர்த்தியாலே வ்யாப்தர் ஆனார் .-
4-என்னுடைய கர்மங்களை வாசனையோடு போம் படி ஓட்டினார் –
பரம ஔதாரரான எம்பெருமானார்க்கு இனித் தம் திரு உள்ளத்தில் ஓடுகிறது எது ?-
இன்னும் செய்யத் தக்கது உண்டோ ?-என்று கருத்து .
ஏய்ந்த வண் கீர்த்தியினால் -என்று பாடமான போது –
பூமி எங்கும் பொருந்தப் பட்டுள்ள தம்முடைய விலஷணையான குணவத்தா ப்ரதையாலே-என் கர்மங்களைப் போக்கினார் -என்கை-
அதாவது -இவரோடு அந்வயம் உடையவன் அன்றோ இவன் என்று கர்மம் தானே விட்டுப் போகை –
பாய்தல்-உதைத்தல் -அதாவது -தள்ளுதல்
எய்தல்-பொருந்துதல் –
காய்தல்-கடிதல் .–
அவன் அருள் -ஸ்வாமி இன்னருள் – எண்ணில் மறை -எண்ணில் குறும்பு –
ஈந்தனன் ஈயாத இன்னருள் –
ஈயாத –
மந்த்ரம் யத்நேன கோபயேத் -என்றால் போல்
அஹங்கார யுக்தாஸ் சைமே -என்று சொல்லப்படுகிற ஹர விரிஞ்சாதிகளுக்கும் கூட கொடுக்க ஒண்ணாத படி
பேணிக் கொண்டு போந்த –
இன்னருள் –
விலஷணையான தம்முடைய கிருபையை -நிர்ஹேதுக பரம-கிருபையை -என்றபடி –
ஈந்தனன் –
கொடுத்தார் –
கீழ்ப் பாட்டில் இவர் -தேவரீர் திருவடிகளைக் கொடுத்து அருள வேணும் என்று பிரார்த்தித்த படியே –
அவர் கொடுக்கையாலே அதுக்கு மூலம் –
அவருடைய கிருபா குணம் என்று அனுசந்தித்து –இன்னருள் -என்று -அத்தை கொண்டாடுகிறார் காணும் –
ஈந்தனன் -ஈன்றனன் –
இன்னருள்
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அருளையும் -இவருடைய அருளையும் சேரப் பிடித்து – பார்க்கும் அளவில்
இவருடைய அருளுக்கு உண்டான தன்னேற்றம் வடிவிலே தொடை கொள்ளலாம் படி காணும் இதனுடைய போக்யதை இருப்பது –
ஆஸ்ரயத்துக்கு தகுதியாய் இறே அதினுடைய குணங்கள் இருப்பது –
ஈந்தனன் ஈயாத இன்னருள் –
இது காறும் வேறு யாருக்கும் கிடைக்காத இன்னருள் -தமக்கு கிடத்தமையின் ஈயாத இன்னருள் ஈந்தனன்-என்கிறார்
எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -ஸ்ரீ திருவாய் மொழி -2 7-5 – – என்று ஸ்ரீ நம் ஆழ்வார் கூறியது போலே இவரும் கூறுகிறார்
இவர் இங்கனம் கூறுவது எம்பெருமானார் தம் இணை மலர்த்தாள் தமக்கு தந்தமையை –
பரி பூரணமாக அருளுவது திருவடிகளை கொடுத்தே போலும் –
செழும் பறவை தானேறி திரிவான தாளிணை என் தலை மேலே –ஸ்ரீ திருவாய் மொழி- 10-6 5-
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -ஸ்ரீபெரியாழ்வார் திருமொழி – 5-4 7- -என்பன காண்க
இனி தனக்கு கிடைத்த இன்னருளை பிறருக்கு தான் கொடுக்க ஒண்ணாதபடி -முழுதும் தானே துய்க்கலாம் படியான
சீர்மை வாய்ந்து இருப்பதாகக் கண்டு –ஈயாத இன்னருள் -என்கிறார் ஆகவுமாம்-
தாரேன் பிறர்க்கு உன்னருள் என்னுடை வைத்தாய்-ஆரேனதுவே பருகிக் களிக்கின்றேன் -ஸ்ரீ பெரிய திருமொழி – 7-1 3-என்னும்
ஸ்ரீ திரு மங்கை மன்னன் திவ்ய ஸ்ரீ ஸூக்தி இங்கு அனுசந்திகத் தக்கது .
எண்ணில் மறைக் குறும்பை பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் –
எண்ணிறைந்த மறைக் குறும்புண்டு –
வேதத்தை மூலையடியே நடத்தக் கடவ குதர்ஸ்ர்டி மதங்கள் –தொகையில் இட்டு சொல்ல ஒண்ணாதபடி
அசந்க்யேயராய் -வேதப் பிரதாரகராய் ப்ரமித பிரமாண ப்ரமேய பிரமாத்ர் ஸ்வ ரூபராய் இருந்துள்ள
குதர்ஷ்டி மத நிஷ்டராய் என்றபடி –
அநந்தா வை வேதா – என்கையாலே எண்ணிறந்த மறை என்று யோஜிக்கவுமாம் –
அம் மறைப் பொருளால் –
ஸ்ருதிகளுக்கு -சுத்த அபேத பிரதிபாதனமே பொருள் என்று குறும்பு சொல்லுகிற அந்த குத்ர்ஷ்டி மதநிஷ்டரை அடங்கலும் –
அகிஞ்ச்சித்ஜ்ஞனாய் கர்ம வச்யனான சேதனனுக்கும் –
சர்வஜ்ஞ்ஞனாய் அகர்ம வச்யனான – ஸ்ரீ ஈஸ்வரனுக்கும் –
ஸ்வரூப ஐக்ய பிரதிபாதாகநத்தாலே அவற்றுக்கு தாத்பர்யம் சொல்ல ஒண்ணாமையாலே –
விசிஷ்ட ஐக்யமே அவற்றினுடைய தாத்பர்ய விஷயீ பூதார்த்தம் என்று ஸ்வரூப ஐக்ய பிரதிபாதகனத்துக்கு –
அத்யந்த பிரதி கூலங்களாயும் -விசிஷ்ட ஐக்ய பிரதிபாதாக நத்துக்கு அத்யந்த அனுகூலங்களாயும் -இருந்துள்ள –
போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா – என்றும் –
த்வா ஸூபர்ணா ஸ யுஜா ஸ காயா சமானம் வர்ஷம் ப்ரிஷஸ் வஜாதே -தயோ ரக்ய பிப்பலம்
சாத்வத்தி அனஸ் நன் நன்யோ அபிசாக சீதி -என்றும் –
இமான் லோகன் காமான் நீ காம ரூப்ய நு சஞ்சான்-ஏதத் சாம காயான் நாஸ்தே -என்றும் –
யஸ் யாத்மா சரீரம் யஸ்ய பர்த்வீ சரீரம் -என்றும் -இத்யாதி
பேத சுருதிகளையும் கடக சுருதிகளையும் உபன்யசித்தும் பஹூ முகமாக ப்ரசங்கித்தும்
அந்த ஸ்ருதிகளுடைய தாத்பர்யன்களைக்-கொண்டு தானே பாய்ந்தனன் –
அந்த ஸ்தலத்தில் நின்றும் பலாயனம் பண்ணுவித்தார் –
பாய்தல் -உதைத்தல் –
ததன்ய மத துர்ம் தஜ்வலித சேத சாம்வாதி நாம் சிரஸ் ஸூ நிஹிதம் மயாபத மதஷிணம் லஷ்யதாம் -என்கிறபடியே
அச் செயல்கள் எல்லாம் அவருடைய சம்பந்திகளுக்கு கூட உண்டாக கடவன ஆகையாலே அவருக்கு உண்டாக சொல்ல வேண்டா இறே –
இப்படி அனைத்தும்
எண்ணில் அம்மறைப் பல் பொருளால் –
கட்டுக் கடங்காது தமக்குத் தோன்றின படி -எல்லாம் திரிதல் –குறும்பு -எனப்படும்
மறைக்குறும்பாவது-
வேதத்தின் பொருளைச் சொற்களின் பகுதி விகுதிகளை பிரித்துக் காட்டும்-வியாகரணதிற்கும் –
சம்பந்தத்தை உணர்த்தும் பல சொற்களின் தொகுப்பாகிய வாக்கியத்திற்கும் –
முன் பின் இடங்களுக்கு ஏற்ப அமையும் பிரகரணதிற்கும் –
சொல் அமைந்து இருக்கும்-இடத்திற்கும் பெயருக்கும் ஏற்ப கட்டுப்பட்டு பொருள் கொள்ளாது –
தங்கள் நெஞ்சில் தோன்றினதையே-மறையின் பொருளாக ஆக்குவது மறைக் குறும்பாகும்
இதனால் வேதத்திற்கு அவப் பொருள்களை-தம் தமக்கு தோன்றினவாறே கூறும் குத்ருஷ்டி மதங்கள் கருதப் படுகின்றன –
அவை பலவாதலின் -எண்ணில் குறும்பு -என்கிறார் .
எண்ணில்லாமை மறைக்கு அடையாகவுமாம்-
இங்கு மறை என்னும் சொல்லை வழங்கியது குறிப்பிடத் தக்கது –
இறைவன் பால் பக்தி உணர்வு இல்லாதாருக்கு தம் பொருளைக் காட்டாது மறைப்பது பற்றி-வேதத்திற்கு இப்பெயர் வந்தது-
பக்தி உணர்வு அற்ற மற்றவர்கள் மெய்ப்பொருள் காணாது-தம் தமக்கு தோற்றும் அவப்போருள்கள் கூறி இடர்ப்படுவதற்கு
இதுவே காரணம் என்று உணர்க –
எந்த மறைக்குக் குத்ருஷ்டிகள் அவப்பொருள்கள் கூறினரோ-அந்த மறைக்கே மெய்ப்பொருள்கள்-கூறி
அவற்றின் பலத்தினாலே அந்தக் குத்ருஷ்டிகளை உதைத்து தள்ளி விட்டார் ஸ்ரீ எம்பெருமானார் .
எண்ணிறந்த குறும்புகள் பல் பொருளால் தள்ளப்பட்டன –
வேதத்தில் கூறப்படும் பல பல மெய்ப் பொருள்களால் பல குத்ருஷ்டி மதங்களைத்-தள்ளி
வேதத்தின் உட் பொருள் நெஞ்சுள் நிற்கும் படி தமக்கு எம்பெருமானார் உபகரித்த படியை
அமுதனார் இங்கே அனுசந்திக்கிறார் என்று அறிக .
பாய்தல் -உதைத்தல் / இப்படி அனைத்தும் ஏய்ந்தனன் கீர்த்தியினால் –
இப்பார் முழுதும் போர்த்தனன் புகழ் கொண்டு -என்றார் கீழும் /ஏய்தல்-பொருந்துதல்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் –
இந்த பூமிப் பரப்பு எல்லாம் கட்டடங்க தம்முடைய குணவத்தா பிரதையாலே ஆக்கிரமித்தார் –
ஏய்தல்-பொருந்துதல் –
தம்முடைய நியமனத்தை சிரசா வகிக்கும்படி வ்யாபித்தார் என்றபடி –
படி அனைத்தும் ஏய்தல் -பூமி எங்கும் வியாபித்தல்
கீர்த்தி -ஈதலினால் வந்த புகழ் வண்மை ஸ்ரீ இராமானுசன் -என்று ஸ்வாமியைக் குறிப்படுவதும் காண்க
தமக்கு புரிந்த உபகாரன்களைப் பேசும் போது இப்படி யனைத்தும் கீர்த்தியினால் ஈய்ந்தமை கூறுவது எங்கனம் பொருந்தும் ?
இஃது இவருக்கு செய்த உபகாரமோ -எண்ணில்
எங்கோ கிடந்தது உழலும் என்னைத் தன் மகிமையை உணரச் செய்து –தன்னருளுக்கு இலக்கு ஆக்குவதற்கு என்றே
கீர்த்தியினால் யேய்ந்ததாக கருதி ஸ்ரீ அமுதனார் இங்கனம் கூறுவது பொருந்தும் -என்க.
தான் கீர்த்தி பெற்று சிறப்புற வேணும் எண்ணம் ஸ்ரீ எம்பெருமானாருக்கு இல்லை
ஸ்ரீ அமுதனார் போல்வார் அதனால் உய்வு பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம்என்று உணர்க –
காரண கார்ய பாவம் என்றவாறு –
என் வினைகள் வேர் பறிய காய்ந்தனன் –
அநாதி காலமே தொடங்கி ஸ்ரீ எம்பெருமானார் உடைய விஷயீ கார பாத்திர பூதனான அளவும் –
நான் தீர கழிய செய்த அக்ர்த்ய கரணாதிகளை சமூலோன் மூலனம் பண்ணி நிவர்ப்பித்தார் –
காய்தல் -கடிதல் –
வேர் கிடந்தால் திரியட்டும் அங்கு உரிக்கும் என்னும் அதி சங்கையால் அத்தோடு கூட அவற்றைப் பிடுங்கிப் போட்டார் என்றபடி –
இவற்றிலே இந்த செடி சில நாள் இருந்து போய்த்து என்று தெரியாதபடி பண்ணினார் என்று வித்தர் ஆகிறார் காணும் –
சும்மனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே -என்றும் வானோ மறிகடலோ மாருதமோ
தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்றும் சொல்லுகிறபடியே பண்ணி அருளினார் என்றபடி –
இப்படி யனைத்தும் மேய்ந்த வண் கீர்தியினார் -என்ற பாடம் ஆன போது –
பூமியிலே எங்கும் ஒக்க வியாபித்து நிற்பதாய் சகல புருஷார்த்த ப்ரதத்வ ரூப ஔதார்யத்தை உடைய கீர்த்தியாலே
என்னுடைய துஷ் கர்மங்களை வாசனையோடு ஓட்டினார் என்று பொருளாக கடவது –
அதாவது இவரோடு அந்வயம் உடையான் ஒருவன் அன்றோ-
இவன் என்று துஷ் கர்மங்கள் எல்லாம் தன்னடையே விட்டுப் போகை –
வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே –
இப்படிப்பட்ட பரம உதாரரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு இன்னும் தம் திரு உள்ளத்தில் ஓடுகிறது ஏதோ –
அடியேனுக்கு இன்னம் எந்த விசேஷார்த்தத்தை கொடுப்பதாக நினைப்பிட்டு இருக்கிறீரோ –
அவரைப் பார்த்தால் இன்னம் சில எனக்கு கொடுக்க வேணும் என்று நினைத்து கொண்டு இருக்கிறாப் போலே இருக்கிறது காணும் என்று
வித்தர் ஆகிறார் –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்னும்படி ஆய்த்து –
என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் –
கீர்த்தியினால் ஏய்ந்ததன் பயன் இதனால் கூறப்படுகிறது
வினைகள்-புண்ணிய பாப ரூபமான கர்மங்கள்
என் வினைகள் –பிறர் உடையவர்களாய் என்னிடம் வந்தேறினவைகள் அல்ல
நானே செய்து என்னிடம் வேரூன்றினவைகள்
வினைகளுக்கு வேராவன வாசனைகள் .அவை அறவே போகும்படியாக வினைகளை ஓட்டினார் –
வேர் பறி போகவே மீண்டும் வினைகள் தலை தூக்க வழி இல்லை யாயிற்று –
ஸ்ரீ அமுதனார் தாமாகப் போக்கிக் கொள்ளில் அன்றோ -வாசனை-ருசிகள்-ஒட்டிக் கொண்டு-கிடந்தது
மீண்டும் வினைகள் தலை தூக்க இயலும்
கருமமும் கரும பலனுமாகிய காரணன் தன்னைக் காயப்படுத்தி வைத்து இருப்பவர் ஆகையாலே –
வினைகளை வேர் பறியக் காயும் திறமை ஸ்ரீ எம்பெருமானாருக்கு உண்டு என்க
இனி ஏய்ந்த வண் கீர்த்தியினால் -என்று பாடமான போது-
இப்பூமி எங்கும் பொருந்திய அழகிய கீர்த்தியினால் என் வினைகளை ஓட்டினார் என்று பொருள் கொள்ளல் வேண்டும்
கீர்த்தியினால் வினைகளை ஒட்டுதலாவது –
நற்குணம் வாய்ந்தவர் என்று பேர் பெற்ற ஸ்ரீ எம்பெருமானாருடைய தொடர்பு உடமையை-நாடறியவே-
பாபத்திற்கு கடவரான நமன் தமரும் -புண்ணியத்திற்கு கடவரான தேவர்களும்-குறுகப் பெறாது விலகுமாறு –
கன்மங்கள் தாமே வலுக்குன்றி ஒழிதலாம்-
வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே –
வள்ளலாகிய ஸ்ரீ எம்பெருமானார் இவ்வளவு உபகரித்ததோடு அமையாமல் மேலும் உதவுதற்கு முற்படுகிறார் –
இவ்வளவுக்கு மேலும் உதவுதற்கு என்ன தான் இருக்கிறதோ – என்றபடி
என்னை முற்றுமுயிர் உண்டு …இன்னம் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே -ஸ்ரீ திருவாய் மொழி – 10-7 3- –
என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்தியையும் –
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக் குறிப்பே –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 5-4 1-என்னும்
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஸூ க்தியையும் இங்கு ஒப்பு நோக்குக .
பாய்தல்– உதைத்தல் -தள்ளுதல்//எய்தல் -பொருந்துதல் /காய்தல் -கடிதல்
ராஜ குல மகாத்மயம்-சம்பந்தம் ஒன்றாலே -வினைகள் போயின —
—————-
ஈந்தனன் ஈயாத இன்னருள்–
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம்மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு
இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை -2-7-10-
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா கூறு கொண்டு
அவன் குலமகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் -3-1-4-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து -5-8-1-
தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு
நாழிகை ஏழுடன் இருப்ப வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்தவாறு -5-8-9-
ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை
வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி –7-3-4-
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே -11-8-9-
திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருள் கண்டு கொண்மின்கள் கைத்தவமே -6-3-4-
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு என்
உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே-8-8-3-
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிறக் கண்ணபிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே -8-9-6-
எந்தை திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளால்
வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து -1-
தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப்பிரான்
பிள்ளான் எதிராசர் பேர் அருளால் உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை
அன்று யுரைத்தது இன்பமிகும் ஆறாயிரம் -41-
தஞ்சீரை ஞானியர் தாம் புகழும் வேதாந்தி
நஞ்சீயர் பட்டர் நல்லருளால் எஞ்சாத ஆர்வமுடன்
மாறன் மறைபொருளை ஆய்ந்து
யுரைத்தது ஏர் ஒன்பதினாயிரம் -42-
நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட பின்
பெரியவாச்சான் பிள்ளை அதனால்
இன்பா அருபத்தி மாறன் மறைப் பொருளை
சொன்னது இருபத்து நாலாயிரம் -43–
அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாசிரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
புகழ் அல்ல விவ்வார்த்தை மெய் இப்போது -53-
இந்த உபதேச இரத்தின மாலை தன்னை
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார்
எந்தை எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி
சதிராக வாழ்ந்திடுவார் தாம் -73-
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply