ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
அநிஷ்டமான கர்ம சம்பந்தம் கழிந்தபடி சொன்னார் கீழ் –
இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபேஷிதமான தேவரீர் திருவடிகளில் ப்ராவண்ய அதிசயத்தை
தேவரீர் தாமே தந்து அருள வேணும் -என்கிறார் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கீழில் பாட்டிலே -ஸ்ரீ இராமானுசன் மன்னு மாலர்த்தாள் பொருந்தாத மனிசரைக் குறித்து –
ஹித லேசமும் செய்யாத பெரியோரை அனுவர்த்திக்கும் மகாத்மாக்களுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து –
பிராப்தி பிரதி பந்தங்களான புண்ய பாப ரூப கர்மங்களை கழற்றிக் கொண்டு –
சம்சார வெக்காயம் தட்டாதபடி இருந்தேன் என்று -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் உடைய
சம்பந்தி சம்பந்தி பர்யந்தமாக செல்லுகிற ப்ரபாவத்தைக் கொண்டாடினார் –
இதிலே –
அப்படிப்பட்ட திருவடிகளில் தமக்கு உண்டான ப்ராவண்யா அதிசயம் பிறக்க வேணும் இறே என்று கொண்டு –
அவைதிக சமயத்தோர் அடங்கலும் பக்னராய் வெருவி வோடும்படி அவதரித்து -பூ லோகத்தில் எங்கும் பாஹ்யரைத் தேடி –
அவர்கள் மேல் படை எடுத்து – அவர்களைத் தேடித் திரியும்படியான -ஜ்ஞான பௌ ஷ்கல்யத்தை உடையரான ஸ்ரீ எம்பெருமானாரே –
தேவரீர் திருவடிகளில் அதி மாத்ர ப்ராவண்யத்தை அடியேனுக்கு தந்தருள வேணும் என்று நேர் கொடு நேரே விண்ணப்பம் செய்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
வினைகள் கழன்றமையின் கேடு நீங்கினமைகூறப் பட்டது முந்தைய பாசுரத்திலே –
தொடர்ந்து விட்டுப் பிரியாது இணைந்து நிற்கும் அன்புடையாம் நன்மை வேண்டப் படுகிறது-இந்தப் பாசுரத்திலே-
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –
பத உரை
அறு சமயச் செடியை -அறு வகைப் பட்ட புறச் சமயங்களாம் தூறு மண்டின இடங்களை
தொடரும் -கைக் கொண்டு அதன் வழியே தொடர்ந்து நிற்கும்
மருள் செறிந்தோர் -அறிவு கேடு குடி கொண்டு இருப்பவர்கள்
சிதைந்து -நிலை குலைந்து
ஓட -வெருவி ஒடும்படியாக
வந்து -அவதாரம் செய்து
இப்படியை-இந்நிலத்தில் உள்ளவர்களை
தொடரும் -தம் சீரிய கொள்கையை ஏற்பதற்கு இடம் ஏற்படும் அளவும் -விடாது தொடர்ந்து சென்று சீர் திருத்தும்
மிக்க பண்டிதன் -மிகுந்த அறிவு வாய்ந்த
இராமானுச–ஸ்ரீ எம்பெருமானாரே
பிடியை -பெண் யானையை
தொடரும் -அது எதிர் விழி கொடாத நிலையிலும் பேராத பேரன்பால் அதனையே பின் தொடர்ந்து திரியும்
களிறு என்ன -ஆண் யானை போலே
யான்-அடியேன்
உன் -தேவரீர் உடைய
பிறங்கிய -பிரகாசிக்கும் தன்மை வாய்ந்த
சீர்-குணங்கள் கொண்ட
அடியை -திருவடியை
தொடரும் -பின் பற்றித் திரியும்
படி -ஸ்வபாவத்தை
நல்க வேண்டும் -தந்து அருள வேண்டும் .
வியாக்யானம் –
நூறு மண்டிக் கிடக்கிற பாஹ்ய ஷட்சமயங்களை அநுவிதானம் பண்ணுகைக்கு உறுப்பான
அறிவு கேடு குடி கொண்டவர்கள் பக்னராய் வெருவியோடும் படியாக வந்து –
அவர் பின் படரும் குணன் -36 – என்கிறபடியே –
இந்த விபூதியில் உள்ளாரை விஷயீ கரிக்கைக்கு அவகாசம் பார்த்து தொடர்ந்து திரியுமவராய் -வஸ்து ஸ்வபாவங்கள்
அறிந்து கார்யம் செய்கைக்கு உறுப்பாய் இருந்துள்ள -நிரவதிகமான ஜ்ஞாத்ருத்வத்தை வுடையவரே
பிடியின் அளவில் ப்ராவண்யா அதிசயத்தாலே -ஒன்றாலும் -நிவர்த்திப்பிக்க ஒண்ணாதபடி –
அத்தையே பின் பற்றித் திரியா நின்றுள்ள -களிறு போலே -நானும் தேவரீர் உடைய
சௌ ந்தர்ய-ஸௌகந்தய -ஸௌ குமார்யாதி குணங்கள் எல்லாம் பிரகாசித்து இருந்துள்ள-திருவடிகளை
பின் தொடரும் ஸ்வபாவத்தை தந்து அருள வேணும் .
களிறென்ன -என்றது-களிறு என்று சொல்லலாம் படி என்கை-இத்தால் களிறு போலே என்றபடி –
களிறன்ன-என்று பாடமானாலோ என்னில் –
அப்போது பிடியைத் தொடரும் களிற்றை ஒத்த யான் என்று -பூதார்த்த வாசியாய் –
யான் -என்கிற வதிகாரிக்கு விசேஷணமாம் இத்தனை யல்லது –
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் -என்கிற ப்ராப்ய ப்ராவண்ய பிரார்த்தனைக்கு திருஷ்டாந்தமாக மாட்டாமையாலே
அது சேராது –
பிறங்குதல்-பிரகாசம்
பிறங்கிய சீரடி என்றது -மிகவும் அழகியதான திருவடிகள் என்னவுமாம் .
அப்போது பிறங்குதல் -மிகுதி —
சீர் என்று அழகு –
செடி-தூறு
மருள் செறிகை யாவது -அறிவு கேடு திரளுகை –
அடியைத் தொடரும்படி என்கிற விடத்தில் –
படி என்றது ஸ்வபாவம்
நல்குதல்-கொடுத்தல்-
அடியைத் தொடரும்படியாக செய்ய வேணும் -என்னவுமாம் .
பாஹ்ய சமயைகளை ஒட்டி -படியிலில் உள்ளாரை பெருமாள் இடம் சேர்க்கும் -மிக்க பண்டிதன் –
ஞானம் கொண்டு மற்றவரை திருத்தி மாதவன் திருவடி சேர்த்ததால் மிக்க பண்டிதன் –
பிடி -ஸ்ரீ எம்பெருமானார் திருவடி -நாம் களிறு –போல பின் செல்வோம் –
எல்லா உறவுமே அவன் ஸ்ரீ புருஷோத்தமனை
சேலேய் கண்ணியர் என்றாரே -ஆளவந்தாரும் மாதா பிதா இத்யாதி –
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் -குண க்ருத தாஸ்யம் இல்லை–பிராப்த -வகுத்த இடமே எல்லாம் நமக்கு
சீர் -திருமேனி குணத்தையே இங்கே அருளிச் செய்கிறார் -அழகு ஸுந்தர்யம் பரிமளம் –ஆத்ம குணம் எட்டுவதற்கு அரியது –
இங்கு பிடி களிறு -உதாரணம் சரீர குணம் காமம்
அறு சமய செடியை –
தூறு மண்டிக் கிடக்கிற பாஹ்ய ஷட் சமயங்களை –
செடி -தூறு
அன்றிக்கே
அறு -என்று அனுஷ்டான தசையிலே யற்று இருக்கிற சமயங்கள் என்னுதல் –
சாதன-தசையில் ஆட்டை அறுத்து கொடுக்கையும் -தலையை அறுத்து கொடுக்கையும் -கல்லும் முள்ளுமான-காட்டிலே –
பஞ்சாக்னி மத்யத்திலே தபசு பண்ணுகையும்–பச்ம தாரண மலலேபநாதி துர்வ்யாபாரங்களை பண்ணுகையும் –
ப்ராப்தி தசையிலும் -பாஷாண கல்பமாய் இருக்கையும் -முதலான துக்கங்களாலே வ்யாப்தங்கள் ஆகையாலே
வருத்ததோடு பிணைந்து இருக்கிற சமயங்கள் என்னுதல் –
தொடரும் மருள் செறிந்தோர் –
இப்படிப் பட்ட-துர்மதங்கள் ஆகிற -கஹனத்திலே தர்ஷ்டி விஷமான பாஷாணங்கள் எல்லாம் தலை சாய்ந்து –
பஹூ சாகாக்ய நந்தாச்ச புத்தயோர் வ்யவசாயினாம் -என்கிறபடியே –
நின்றவா நில்லா நெஞ்சினராய்க் கொண்டு துர்மதங்களை அநு விதாநம் பண்ணுகைக்கு உறுப்பான
அறிவு கேடு குடி கொண்டவர்கள் –
மருள் செறிகையாவது –
அறிவு கேடு திரளுகை –
சிதைந்து ஓட –
சிம்கத்தை கண்ட ம்ருகங்கள் ஓடுமா போலே இவரைக் கண்டு துஷ்ட சமயத்தார் பக்ன ஹ்ருதயராய் வெருவி ஒடும்படியாக –
வந்திப்படியை தொடரும் –
பரம பதத்தின் நின்றும் இவ்வளவாக தாமே வந்து -இந்த பூமியில்
அந்த பிரதி பஷங்கள் மேலே படை திரட்டி திரியும் –
படி -பூமி-
அன்றிக்கே –அவன் பின் படரும் குணன் –என்கிறபடியே
இந்த பூமியில் உள்ளோரை விஷயீ கரிக்கைக்காக அவசரம் பார்த்து தொடர்ந்து திரியும் அவர் என்னவுமாம் –
இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –
மிக்க பண்டிதனே –
தேவரீருடைய ஞான பௌ ஷ்கல்யம் இருக்கிறபடி
எங்கனே -என்று ஆச்சர்யப்பட்டு சம்போதிக்கிறார் காணும் –
காளகஸ்தியில் நின்றும் சைவர்கள் ஸ்ரீ திருமலை மேல் வந்து தங்களுடைய துர்மதம் பிரவர்த்தனம் பண்ணத் தொடங்க –
அவ்விடத்துக்கு இவர் எழுந்து அருளி அவர்களை ஜெயிக்க அவர்கள் பக்னராய் ஓடிப் போனார்கள் என்றும் –
ஸ்ரீ திரு நாராயண புரத்துக்கு சமீபத்திலே ஜைனர் இவரோடு பிரசங்கித்து பக்னராய் போனார்கள் என்றும் –
அதற்கு பிறகு திக் விஜயமாக ஆசேது ஹிமாசலம் பர்யந்தம் பிரதிவாதிகளை நாடி பூமிப் பரப்பு எல்லாம் சஞ்சரித்து தம்முடைய
பாண்டியத்தாலே சரஸ்வதி பீடத்திலே இருந்த குத்ருஷ்டிகளை ஜெயித்தார் என்றும் பிரசித்தம் இறே –
இந்த சம்போதனத்தால் -எம்பெருமானாரே எனக்கு ஒரு அபேஷை இருக்கிறது -அத்தை விண்ணப்பம்
செய்கிறேன் என்னும் இடம் இவருக்கு அபிப்ராயமாக தோற்றுகிறதுஅது என் என்ன -அருளிச் செய்கிறார் –
பிடியைத் தொடரும் களிறன்ன யான் –
பிடியின் அளவில் வ்யாமோஹ அதிசயத்தாலே ஒன்றாலும் நிவர்த்திக்க ஒண்ணாதபடி –
அத்தையே பின்பற்றி திரியா நின்றுள்ள களிறு போலே –
இத்தனை நாளும் விஷயாந்தர ப்ரவனனாய் திரிந்த போட்கனான அடியேன் –
அன்றிக்கே –
யா ப்ரீதி ரவிவே நா நாம் விஷயேஷ்வநபாய நீ-த்வா மனுச்மரதச்சாமே விஷயான் நாபசர்பது-என்கிறபடி
இப்படிப்பட்ட ப்ரீதி பிரகஷ்யத்தை உடையேனாம்படி-அடியேனை கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் -என்னவுமாம் –
பிடியைத் தொடரும் களிறன்ன -என்றது
களிறு என்று சொல்லலாம்படி என்கை -பிடி -பெண் யானை – களிறு -ஆண் யானை -படி -ஸ்வ பாவம் –
பிடியைத் தொடரும் களிறென்ன –
தொடரும் என்னும் சொல்லின் ஆற்றலால் -பிடி எதிர் விழி விழிக்காத நிலையிலும் அதன் மீது களிறு கொண்ட காதல் -பேராது
வேறு எவ்வகையினும் தளராது -நிலை பெற்றமை தோற்றுகிறது .
இவ்வுவமையால்
இயல்பானமையின் பேராததும்-எவ்வகையினும் தளராததுமான பேரன்பை ஸ்ரீ எம்பெருமானார் இடம் ஸ்ரீ அமுதனார் வேண்டினார் ஆயிற்று .
என்ன –என்று சொல்லும்படியாக –இது இங்கே உவமை உருபு
சிலர் களிறன்ன -என்று பாடம் ஓதுவர்-அப்பொழுது அன்ன -என்பது பெயர் எச்சமாய் களிறு போன்றவனான யான் என்று சொன்னபடியாம் –
ஆயின் இங்கு வேண்டும் அடியைத் தொடருகைக்கு உவமானம்-காட்டப்பட்டதாக மாட்டாது -ஆதலின் அது நல்ல பாடம் அன்று என்பர் ஸ்ரீ பெரிய ஜீயர் .
நல்க வேண்டும் –
கொடுத்து அருள வேண்டும் -இத்தனை நாளும் இப்படித் திரிந்த நான் இப்போது
உன் பிறங்கிய சீரடியைத் தொடரும்படி –கிளர்ந்து லோகம் எல்லாம் வியாபித்து இருக்கிற பாவனத்வாதி
குண கரிஷ்டமான தேவரீர் உடைய திருவடிகளில் பிராவண்ய அதிசயம் பிறந்து -ஒருநாளும் இடைவிடாதே இருக்கும் ஸ்வ பாவத்தை –
நல்க வேண்டும் –
எனக்கு கொடுத்து அருள வேண்டும் -இப்படிப் பட்டவானாக என்னை அனுக்ரகிக்க வேணும் என்றபடி –
பிடியைத் தொடரும் களிறு என்னலாமோ என்னில் -மாதா பிதா யுவதயா -என்று ஸ்ரீ ஆள வந்தார்
அருளிச் செய்கையாலே இப்படி அருளிச் செய்யத் தட்டில்லை இறே-
ஸ்ரீ பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளின பின்பு ஸ்ரீ சக்கரவத்தி -ஸ்ரீ கௌசல்யையை நினைத்து தன்னுடைய கிலேசத்தால் –
எத்தனை கிலேசப்படுகிறாளோ -என்று தானும் போர நொந்து தன்னை அவள் போஷித்த படியை வர்ணிக்கும் இடத்தில் –
யதா யதா ஹி கௌசல்யா தாஸீ வச்ச சகீ வச-பார்யாவத்பகி நீவச்ச மாத்ர்வச்சோ பதிஷ்டதே -என்று சொன்னான் இறே –
ரிஷியும் பிரீதி அதிசயத்தை வெளி இடுகைக்காக சொன்னால் ஆகையாலே குறை இல்லை –
யானுன் பிறங்கிய சீரடியைத் தொடரும்படி நல்க வேண்டும் –
களிற்றினுக்கு காதல் அழகார்ந்த பிடியைக் கண்டதும் உண்டாகியது .
அடியேனுக்கு பேரன்பு -நற்குணம் வாய்ந்த நின் திருமேனியை தேவரீர் காட்டித் தர –அதனை நான்-கண்டதும்
உண்டாகும்படி செய்து அருள வேண்டும் -என்று எம்பெருமானாரையே பிரார்த்திக்கிறார் .
அடி -என்பது திரு மேனிக்கு உப லஷணம்-
உபமேயத்தில் பிறங்கிய சீர் -என்பதற்கு ஏற்ப-உபமானமான பிடியினிடத்தும் சீர்-அழகு -பிறந்கியதாக கொள்க –
பிடியின் சீருடைமை களிற்றுக்கு கன்ம சம்பந்தத்தாலே தானே தோன்றி காதலை விளைவிக்கும்
அடியின் சீருடைமையோ –ஸ்ரீ எம்பெருமானார் அருள் இன்றி தோன்றி பேரன்பை விளைவிப்பதற்கு வேறோர் ஹேது இன்மையின்
அவரையே பிரார்த்திக்க வேண்டியது ஆயிற்று -இந்த பிரார்த்தனைக்கு ஏற்ப மேலும் –
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு – .என்னும் பாசுரத்தில் –
தமது நெஞ்சை அனுபவிக்கும் வண்டாகவும்-அடியை அனுபவிக்கப்படும் தாமரை மலராகவும் –
அதன் கண் உள்ள-குளிர்ச்சி மென்மை மணங்களை பிறங்கிய சீராகிய தேனாகவும் –
அதனை உண்டு அம்மலரிலே-நிரந்தரமாக அமர்ந்திட அவ் வண்டு வந்து அடைந்தது என்று பலித்தமை வருணிக்க பட்டுள்ளமையும் –
இப்பாட்டில் வந்துள்ள களிற்றினுக்கு போலே எவ்வகையிலும் பேராத பேரன்பு பலித்தமை-
கையில் கனி என்ன –என்னும் பாசுரத்தில் –
உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் -என்று விளக்க பட்டு உள்ளமை யும் கவனிக்க தக்கது .
சப்தாதி விஷயங்களில் ஏற்படும் பற்று விடுவிக்க ஒண்ணாது இருத்தல் பற்றி
களிற்றின் காதல் போன்ற பேரன்பு தமக்கு வேண்டும் என்கிறார்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயி நீ த்வா மனுச்மர -விஷ்ணு புராணம் -1 20-13 – என்று
பகுத்தறிவு அற்றவர்களுக்கு சப்தாதி விஷயங்களில் எத்தகைய ப்ரீதி நீங்காது உள்ளதோ –
அத்தகைய ப்ரீதி உன்னைத் தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும் என் இதயத்தின் நின்றும்-நீங்காது நிலைத்து இருக்கட்டும் –
என்று ஸ்ரீ அச்யுதன் இடத்தில் வேண்டிக் கொண்டால் போலே-
ஸ்ரீ அமுதனார் ஸ்ரீ எம்பெருமானார் இடத்தில் வேண்டிக் கொள்கிறார் .
இதனால் தம்மை களிறு போன்றவராகவும் ஸ்ரீ எம்பெருமானாரை பிடி போன்றவராகவும்
கூறுதல் குற்றம் ஆகாது -என்பது உணரத் தக்கது …
அன்புடைமைக்கு மட்டும் இவ்வுவமை கொள்ளத் தக்கது .
சேலேய் கண்ணியரும்–அவரே -என்று ஸ்ரீ சர்வேஸ்வரனை அழகிய கண்ணுடைய பெண்டிராக கூறினார்-ஸ்ரீ நம் ஆழ்வார் –
யுவதயா-என்று ஆழ்வாரை யுவதிகளாக கூறினார் ஸ்ரீ ஆள வந்தார் .
பிறங்கிய சீர்
பிறங்குதல்-பிரகாசித்தல் மிகுதியுமாம்
சீர் -அழகு –மென்மை மணம் முதலிய குணங்களுமாம்–
தொடரும் பிடி
தொடருகின்ற ஸ்வபாம்-தொடரும்படி -பெயர் எச்சத் தொடர்
அறு சமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் –
வேத நூல் கூறும் உண்மை நெறிக்கு புறம்பான வை யாதலின் -அறு சமயங்களும்
செடிகளாக செப்பப் பட்டன .செடி-தூறு
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை -ஸ்ரீ திருவாய் மொழி -1 5-7 – – என்னும் இடத்தில்
தூறு மண்டின சரீரம் என்று வியாக்யானம் செய்யப் பட்டு இருப்பது காண்க
அறு சமயங்கள் தூறு மண்டிக் கிடத்தலின் -வழி தெரிந்து நடப்பதற்கு -இடம் இல்லாமல் போயிற்று –
தூற்றுள் நின்று வழி திகைத்து – அலமாந்து நிற்பவர் -இடையிலே வழி காட்ட இருப்பவரை கேட்டறிந்து நல் வழியே நடக்கலாகாதோ –
அங்கனம் செய்யாது -தூறு மண்டின இடத்தில் தமக்கு தோற்றியதையே வழியாக -மருண்டு தொடர்ந்து செல்லா நிற்பார் –
புறச் சமயத்தோர் -அவர்கள் இடம் அவ்வளவு அறிவு கேடு செறிந்து உள்ளது .
அன்னார் தூறு மண்டின இடங்களை செதுக்கி -பண்டைய நன்னெறியை துலக்க ஸ்ரீ எம்பெருமானார் வந்ததும் –
சிதைவுண்டு சிதறி ஓடினர்–
அங்கனம் மருள் செறிந்தோர் சிதைந்து ஓடும்படி -அவதரித்தார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –
இப்படியைத் தொடரும் –
படி-ஞாலம்
இப்படியை -இவ்விருள் தருமா ஞாலத்தை என்றபடி
படி என்பது படியில் உள்ளாரை இட ஆகு பெயரால் கூறுகிறது .
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் -தம் உபதேசத்தால் -அறிவுற்று ஆளாதற்கு இடம் ஏற்படும் அளவும் –
ஞாலத்தவரை விடாது பின் தொடரும் பரம காருணிகர் -ஸ்ரீ எம்பெருமானார் -என்க
அவ் ஒண் பொருள் கொண்டு அவர்பின் படரும் குணன் -36 – என்று கீழே கூறியதை இங்கே நினைவு கூர்க .
இராமானுசன் மிக்க பண்டிதனே –
மருள் செறிந்தோர் எம்பெருமானார் வந்ததும் சிதைந்தோடுதற்கும்-இப்படியை அவர் தொடருவதற்கும்
ஹேது மிக்க பண்டிதராய் இருத்தல் –
பண்டா-அறிவு அஸ்ய -இவருக்கு -சம்ஜாதா -உண்டாயிற்று இதி -என்பதால் பண்டித என்று
பண்டிதன் என்னும் சொல்லுக்கு வ்யுத்பத்தி கூறுவர்.அறிவு வாய்ந்தவர் என்பது பொருள் .
இங்கே அறிவாவது –
அறுசமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓடும்படி-செய்ய வல்ல யுக்திகளை தோற்றுவிக்கும்
சமயோசிதமான நுண்ணறிவு –
அது மிக்கு இருத்தலாவது –
அவர்களுள் முரண்பாட்டை ஒருவருக்கு ஒருவர் காட்டி –உட் பூசல் மூட்டி -சூந்த உபசூந்தர்கள் போலே
ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு மாண்டு ஒழியும்படி –
எளிதில் செய்ய வல்ல மதியின் மிக்க கூர்மை-என்க –
எம் இராமானுசன் அவ் எழில் மறையில் சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே -74 -என்று
மேலே -இவர் கூறுவதும் காண்க –
இனி படியைத் தொடரும் விஷயத்திலே அறிவுடைமையாவது அவரவர் தகுதிக்கு ஏற்ப – தம்மை அமைத்துக் கொண்டு –
நெஞ்சில் படும்படி உபதேசித்து -அறிவூட்டுகை –
அது மிக்கு இருத்தலாவது அவ்வுபதேசம் பலித்து ஆளாக்கி விஷயீ கரித்தல் என்க –
ஸ்ரீ இராமானுச அடியைத் தொடரும்படி நல்க வேண்டும் என்று கூட்டி முடிக்க –
அவஸ்துவாக இருந்தேன்-.பொருள் என்னும் இவ் உலகம் படைத்தவன்–சபலம் -சோம்பாது பல் உலகம் படைத்து
கொண்டு இருக்கிறான்-அவன் பண்டிதன்–
ஸ்ரீ ஸ்வாமி மிக்க பண்டிதன்–
அடியை தொடரும் படியாக அருள வேண்டும்-.ஆசை பிறந்து இடைவிடாமல் ஏக பக்தி யாக இருக்க அருள வேண்டும்-
———–
படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப் போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ ——முதல் திருவந்தாதி—-85-
பிடிசேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் ——97–
பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை–இரண்டாம் திருவந்தாதி-75-
புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——மூன்றாம் திருவந்தாதி–45-
—————–———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply