வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் —51-
இதில்-ஆற்றாமையாலே தூது விடுகிற ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அடி விடாமல்-நோற்ற நாலிலும் அமோகமாய் இருக்கிற சரண வரணம் ஆகிற ப்ரஹ்மாஸ்திரம் பண்ணி இருக்கச் செய்தேயும்
அவன் ஜகத் ரஷண ஹேதுவாக கார்யம் செய்யாது ஒழிய
அத்தாலே-தம் அபேஷிதம் கிடையாமையாலே
மிகவும் தளர்ந்து-ஆர்த்த ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவன் ஆகையாலே நம் ஆர்த்தியை அறிவிக்கவே தப்பாமல் நம் கார்யம் செய்யும்
ஸ்ரீ திரு வண் வண்டூரில் ஐஸ்வர்யத்தில் கால் தாழ்ந்து நம்மை மறந்தான் இத்தனை -என்று அனுசந்தித்து
கடகரை இட்டு
நத்யஜேயம் -என்ற ஸ்ரீ தசரதாத் மஜனுக்கு தம் தசையை அறிவித்துச் சொல்லுகிறபடியை
ஸ்ரீ நாயகன் வரும் அளவும் கண்டு ஆறி இருக்க மாட்டாமல் ஆற்றாமையாலே ஸ்ரீ நாயகனைக் குறித்து
தூது விடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
வைகல் பூம் கழி வாயில் அர்த்தத்தை-வைகல் திரு வண் வண்டூர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –
———————–
மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு—52-
இதில்-பிரணய ரோஷத்தாலே யூடின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம் ஆற்றாமையாலே-நோற்ற நாலிலும் சரணம் புக்கு-தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே
பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று
பரிவார வர்திகளான ஸூக்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க
அவனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று
ஆபத்தைப் போக்கி ரஷித்த நாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே
என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து-தம்முடன் கலப்பதாக பதறி-நடந்து வந்து
வடிவு அழகாலும்
சேஷ்டிதையாலும்
தன் செல்லாமையாலும்-தம்மூடலைத் தீர்த்து-தம்முடன் கலந்த படியை –
ஸ்ரீ கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே அவனோடு ஊடி
இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை
தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும்
செல்லாமையாலும்-ஊடலைத் தீர்த்து ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட
வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த-மின்னிடை மடவாரில் அர்த்தத்தை
மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
———————-
நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —53-
இதில் விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழே
அல்லோம் -என்று இருந்த தம்மை ஆவோம் -என்னப் பண்ணினவனுடைய அகடிகதடநா சாமர்த்தியத்தை அனுசந்தித்து
விஸ்மிதரான இவருக்கு-இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மிதர் ஆகிறது
நாட்டில் தன்னில் தான் சேராத பதார்த்தங்கள் எல்லாவற்றையும் நம்முடனே சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படி பாரீர்-என்று அவன் தன் வ்ருத்த விபூதி யோகத்தைக் காட்ட
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற -நல் குரவும் செல்வமும் – அர்த்தத்தை
நல்ல வலத்தால் இத்யாதியால் அருளிச் செய்கிறார் –
——————–
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள் —54-
இதில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்து
அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மாசறு சோதி
மானேய் நோக்கு
பிறந்தவாறு-என்கிற திருவாய் மொழிகளிலே
சேணுயர் வானத்து இருக்கும் –
நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கோல் –
உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–என்று
தூரஸ்தன் என்றும்
நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை
குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை –
—————————–
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் -துவளறவே
முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-
இதில் ஸ்ரீ பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தை அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் தம்முடைய த்ருஷ்ணையாலே ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அனுபவிக்க புக்க இடத்தில்
குடிக்கின்ற தண்ணீர் விக்கிப் பாரவஸ்யத்தை விளைவிக்குமா போலே-அவை சைதில்யத்தை விளைக்க
அத்தாலே கலங்கி-அடியே பிடித்து-தமக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் கரண த்ரயத்திலும் யுண்டான
பிராவண்ய அதிசயத்தை-அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-துவளில் மா மணி மாடத்தில் அர்த்தத்தை
துவளறு சீர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
———————
மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-
தான் கோலி -அங்கே-ஏறாளும் இறையோனும் — -இங்கே -அவை முற்கோலி -தன்னடையே போயின –
இதில்-தமக்கு உள்ளது அடையக் கை விட்டு போன படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் பிறந்த சம்ஸ்லேஷம் மானச சம்ஸ்லேஷ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்கிறபடி மிகவும் அவசன்னராய்
அத்தாலே மோஹித்துக் கிடக்க
ஏறாளும் இறையோனில் தாம் விடப் பார்த்த ஆத்மாத்மீய பதார்த்தங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழன்று
சிதிலமாய்ச் செல்லுகிறபடியை-திருத் தாயார் தன் மகள் வளையாதிகள் போயிற்று என்று
அவனுரிச் சூறை கொண்ட பிரகாரத்தை பேசின பாசுரத்தாலே சொல்லிக் கூப்பிடுகிற
மாலுக்கு வையத்தில் அர்த்தத்தை-மாலுடனே தான் கலந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
—————————
உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-
இதில் ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனபடியை அருளிச் செய்ததை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
திருத் தாயார் –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -என்று தொடங்கி
பொற்பமை நீண் முடி பூம் தண் துழாயற்கு -என்று
ஆபாத மௌலி பர்யந்த பர்யவசிதங்களானவன் திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிட்டு-பரவசையாய்க் கிடந்து உறங்க
ம்ருத சஞ்ஜீவிநீ யான திருநாமத்தைக் கேட்டு பெண் பிள்ளை யுணர்ந்து எழுந்திருந்து
அவன் இருக்கிற ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போக
அநந்தரம்
திருத் தாயார் உணர்ந்து பெண் பிள்ளையைப் படுக்கையிலே காணப் பெறாமையாலே
தன் வயிற்றில் பிறப்பாலும்-இவள் தன் ஸ்வபாவத்தாலும்-ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனாள்-என்று
சோகிக்கிற அந்த திருத் தாயார் பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிற
உண்ணும் சோற்றில் அர்த்தத்தை உண்ணும் சோறாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை —
——————————
பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-
இதில் ஆர்த்தி பாரவச்யத்தாலே தூது விட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
உண்ணும் சோற்றில் ஆற்றாமையோடு
ஸ்ரீ திருமாலான ஸ்ரீ வைத்தமா நிதி திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு அனுபவிக்க வேணும்
என்று த்வாரா பரவசராய்ப் புறப்பட்டு முட்டுப் போக மாட்டாமல்
எங்கனே புகும் கொல் -என்றதுவே பலித்து-விழுந்து நோவுபடுகிற தசையை
அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பரம பதாதிகளிலே போய் அறிவியுங்கோள் என்று
பரிசர வர்த்திகளான கடகரை தாம் அர்த்திக்கிற பிரகாரத்தை
தூத பரேஷண வ்யாஜத்தாலே அருளிச் செய்கிற – பொன்னுலகு ஆளீரோவில் அர்த்தத்தை
பொன்னுலகு இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-
—————————-
நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு—59-
இதில்-கேட்டார் அடைய நீராம்படி கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போக மாட்டாமல் தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு
அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால் ஸ்ரீ சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல்
சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
ஸ்ரீ திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –
———————–
உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்—60-
இதில் ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புக்க பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
ஆர்த்தி பாரவச்யத்தாலே கூப்பிடுகிற இவர்-பிராப்யாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொண்டு
ஸ்ரீயபதிகளின் திருவடிகளிலே பண்ணும் அடிமையே பரம பிராப்யம் என்று அறுதி இட்டு
அந்த பிராப்யத்தை பெறுகைக்காக-தேச காலாதி விப்ர க்ருஷ்டங்களான ஸ்தலங்களை விட்டு
கானமும் வானரமும் வேடும் ஆனவருக்கு முகம் கொடுத்துக் கொண்டு
சௌலப்ய சாம்ராஜ்யம் பண்ணுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே
ச பிராது -இத்யாதிப் படியே ஸ்ரீ பிராட்டியை முன்னிட்டு
சரண்ய குண பூர்த்தியையும்-சரண வரண உத்யுக்தரான தம் வெறுமையையும் அனுசந்தித்துக் கொண்டு
பூர்ண பிரபத்தி பண்ணுகிற உலகமுண்ட பெருவாயனில் அர்த்தத்தை
உலகு உய்ய மால் நின்ற -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
——————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply