ஸ்ரீ திருவாய் மொழி -38-திவ்ய தேசங்கள் –
———-
1-ஸ்ரீ திருமாலிருஞ்சோலை
கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளியால் சோலை மலைக்கே தளர்வு அறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துமோ எம்முடி -20-
முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -நடுவு அழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன் -21-
முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-
————–
2-ஸ்ரீ திருவேங்கடம்
ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே புகழ்———-23-
உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர்மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்————-60-
—————
3-ஸ்ரீ திருக்குறுங்குடி
எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்———–45-
————
4-ஸ்ரீ கும்பகோணம்
ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் ———–48-
——————
5-ஸ்ரீ திரு வல்ல வாழ்
மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற————-49-
——————-
6-ஸ்ரீ திரு வண் வண்டூர்
வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் ——————-51-
——————
7-ஸ்ரீ திருக் கோளூர்
உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்———–57-
——————–
8-ஸ்ரீ திரு நாடு
பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்————-58-
———————–
9-ஸ்ரீ திருவரங்கம்
கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்———-62-
——————
10-ஸ்ரீ திரு தென் திருப்பேர்
வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளியமால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார் ———-63-
———————
11-ஸ்ரீ திரு வாறன் விளை
இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு —————70-
தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் ———————–71-
—————–
12-ஸ்ரீ திருக் கடித்தானம்-
எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து———-76
——————
13-ஸ்ரீ திருப் புளிங்குடி
பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—————-82-
————-
14-ஸ்ரீ திரு நாவாய்-
அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்————-88-
——————-
17-ஸ்ரீ திருக்கண்ணபுரம்
மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் ——————90-
—————–
18-ஸ்ரீ திருவனந்த புரம்
கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—————92-
——————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply