கீழில் பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் –சர்வேஸ்வரன் தொடங்கி –
ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்திக்கை என்றது —அப்படிப்பட்ட அனுசந்தானத்தை உடையாரானார் பரிமாறும் பரிமாற்றம் இருக்கும் படி என் என்னில்-ஊழி தோறு ஊழி ஓவாது வாழிய வென்று- அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு – என்று ஆயிற்று இருப்பது ––ஸ்ரீ பெரியாழ்வார் பல்லாண்டு என்று ஆண்டாக்கி – அது தன்னைப் பலவாகி- ஆயிரமாக்கி – அது தன்னைக் கோடியாகப் பெருக்கி மங்களா சாசனம் பண்ணுகிறார் —இவர் அவ்வளவு அமையாமல் முதலிலே கல்பத்தை விவஷித்து அது தன்னை மேல் மேல் என்னப் பெருக்குகிறார் –
(கீழ்ப் பாட்டில் தனிமாத் தெய்வத் தடியவர்க்கிணை நாமாளாகவே இசையுங்கொல்“ என்று-பாகவத சேஷத்வம் நமக்குக் கிடைக்குமா? என்று மனோ ரதித்தார்,-பாகவதர்களை அநுவர்த்தித்துப் பார்த்தார்,
அவர்கள் எப்போதும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு… உன சேவடி செவ்வி திருக்காப்பு“ என்று எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்-அதைப் பார்த்து ‘இவர்களுடைய காலக்ஷேபமேயன்றோ நமக்கு உத்தேச்யம்,
இவர்களோ இடைவிடாது எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநமே பண்ணிக் கொண்டிரா நின்றார்கள்.-இது மிக அழகாயிரா நின்றது-இப்படிப்பட்ட போது போக்கு நமக்கும் கிடைக்குமாகில் நலமாயிருக்குமே!‘ என்று கொண்டு, அப்படிப்பட்ட பாக்கியம் வாய்க்குமா என்கிறார் இதில்.)
ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -4-
பதவுரை
யாவகை உலகமும்–எவ்வகைப்பட்ட லோகங்களும்
யாவரும்–எவ்வகைப்பட்ட பிராணிகளும்
இல்லா–இல்லாமலிருந்த
மேல் வரும் பெரு பாழ் காலத்து-கீழ்க் கழிந்த மஹா ப்ரளய காலத்தில்
இரு பொருட்கு எல்லாம்–எண்ணிறந்த ஆத்ம வஸ்துக்களுக்கெல்லாம்
பெறல் அரு தனி ஒரு வித்து தான் ஆகி-பெறுதற்கரிய மூவரைக் காரணமும் தானேயாய்க் கொண்டு
தெய்வம் நான் முகன் கொழு முளை ஈன்று-நான்முகக் கடவுளாகிற சிறந்த ஒரு முளையைப் படைத்து
முக்கண் ஈசனோடு பல தேவு நுதலி-முக் கண்ணனான சிவன் முதலி பல தேவங்களை உண்டாக்கி (ஆக இவ் வகையாலே)
மூ உலகம் வளைத்த உந்தி-மூன்று லோகங்களையும் உண்டாக்கின திரு நாபியை யுடையவனாய்
மாயன்–ஆச்சர்ய பூதனாய்
கடவுள்–ஸர்வோத்தமனான ஸ்ரீமந் நாராயணனுடைய
மா முதல் அடியே–(உஜ்ஜீவனத்திற்கு) மூல காரணமான திருவடிகளையே
ஊழி ஊழி தோறு ஸர்வ காலமும்
ஓவாது–இடைவிடாமல்
வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்-‘வாழ்ந்திடுக‘ என்று நாம் சொல்லி வணங்கும்படியாக (பாக்கியம்) வாய்க்குமோ.
யாவகை உலகமும் யாவரும் இல்லா-எவ்வகைப்பட்ட லோகங்களும் -எவ்வகைப்பட்ட பிராணிகளும் இல்லாதவாறு
மேல் வரும் பெரும் பாழ் காலத்து -முன்னவே கழிந்து போன மிகவும் நீண்ட உலகம் அழிந்து கிடந்த பிரளய காலத்தில்
இரும் பொருள்க்கு- எல்லாம்-எண்ணற்ற ஜீவ ராசிகளுக்கு எல்லாம்
அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகி-அடைவதற்கு அரியனாய்-ஒப்பற்றவனாய் -ஸஹாயம் அற்றவனாய் காரண வஸ்துவாக தானே நின்று
தெய்வ நான் முக கொழு முளை-தேவதை யாகிய பிரமன் என்னும் பூரணமான அங்குரத்தையும்
முக் கண் ஈசனோடு தேவு பல ஈன்று -மூன்று கண்களையுடைய ருத்ரனுடன் -பல தேவதைகளையும் படைத்து
நுதலி-இவர்களை ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களுக்காக சங்கல்பித்து
மூ உலகம் விளைத்த உந்தி-மூன்று லோகங்களையும் படைத்த திரு நாபியை யுடையவனாய்
மாய -ஆச்சர்ய சக்தி யுக்தனாய்
கடவுள் -பரதேவதையாய்
மா முதல் அடியே–பரம காரண பூதனான எம்பெருமான் திருவடிகளை
ஊழி தோற் ஊழி ஓவாது -கல்பங்கள் தோறும் இடைவிடாமல்
வாழிய வென்று யாம் தொழ இசையும் கொல்?-வாழ வேண்டும் என்று நாம் மங்களா சாசனம் செய்துஸ்துதிக்க நேர் படுமோ –
ஊழி தோறு ஊழி —
கல்பம் தோறும் கல்பம் தோறும் –
ஓவாது –
அது தான் நித்ய அக்னி ஹோத்ரமாக ஒண்ணாது –ஒரு ஷணமும் இடை விடாதே-இத்தால் மேல் எல்லாம் கூடிச் செய்யப் புகுகிறது என் என்னில்
வாழிய வென்று-என்னும் அத்தனை –
சர்வேஸ்வரனுடைய சேஷித்வத்தை உபக்ரமித்து-ததீய சேஷத்தளவும் செல்ல அனுசந்தித்து-அந்த சேஷத்வ காஷ்ட்டா ப்ராப்தியைக் கொண்டு அவன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறது
நித்தியமாகச் செல்ல வேணும்
யாம்
ஆயுர் ஆசாஸ்தே -(யஜுர் அஷ்ட -3-5-நீண்ட ஆயுளைப் பிரார்த்திக்கிறேன் )-என்று கண்டது அடைய எனக்கு என்று போந்த நாம் இப்போது அது தவிர்ந்து
தொழ
தொழுகை யாகிறது மங்களா சாசனம் பண்ணுகை யாயிற்று –
இசையும் கொல்?
எனக்கு என்று போந்த அது தவிர்ந்து உனக்கு என்கையாகிறது நெடு வாசி இறே –கூடாத இப் பேற்றோடே கூடுவார்க்கு இப்படி பிரார்த்திக்கிறது அவனுடைய எந்தச் செயலை அனுசந்தித்து என்னில்
யாவகை -இத்யாதி
முன்பே உள்ளதொரு வஸ்துவுக்கு ஒரு குண தானம் பண்ணின அளவு அன்றிக்கே – முதலிலே அழிந்து கிடந்த வஸ்துவை அடி தொடங்கி உண்டாக்கி நமக்குப் பண்ணி அருளிய மஹா உபகாரகத்துக்கு –
யாவகை உலகமும்
இங்கன் இட்டு மூன்று லோகம் கழிந்து மேலே ஒரு லோகம் குடி வாங்கக் கடவதாய்–அவ் வருகு ஓன்று குடி இருக்கக் கடவதாய் இருபத்தொரு பிரளயம் உண்டு இறே -அப்படி அன்றிக்கே எவ் வகைப்பட்ட லோகங்களும் –
அன்றிக்கே
யாவரும் இல்லா--எல்லாரும் ஓக்க லயிக்கச் செய்தே -மார்க்கண்டேயாதிகள் -நித்யத்வம் -என்று அலைவாரும் உண்டு இறே அங்கனும் ஒருவரும் இன்றிக்கே
மேல்
மேல் என்றது -பண்டு -என்றபடி –
வரும்
வரும் என்றது போன என்றபடி -பண்டு போன
(மேல் வரும் என்பதற்கு, கீழே கழிந்த என்று பொருள் கொள்ளுதல் விபரீத லக்ஷணை யினாலென்க.
இங்கு வியாக்யான ஸ்ரீஸூக்கி –“மேலென்றது பண்டென்றபடி, வருமென்றது போன வென்றபடி._
பெரும் பாழ் காலத்து-கர்க்ஷகன் உவர்த் தரையை உவர் கழிய நீர் நிறுத்துமா போலே –விளைக்கைக்கு இவற்றினுடைய துர் வாசனையை அழிக்கைக்காக ஒரு ப்ரஹ்மாவினுடைய ஆயூஸ்ஸூ அத்தனையும் அழித்திட்டு வைத்து இருக்குமாய்த்து
இரும் பொருள்க்கு எல்லாம்
தேவ மனுஷ்யாதி ரூபமாய் -அஸங்யேயமாய் =அசித் ஸம்ஸ்ருஷ்டங்களான ஜீவ வஸ்துக்களுக்கு எல்லாம்
அரும் பெறல்
இவ்வளவில் வந்து முகம் காட்டுவான் ஒருவனைக் கிடையாது இறே – ஆகையால் பெறுதற்கு அரிய
(அரும் பெறல் என்றது நிர்ஹேகத்வத்தைக் காட்டும்.-இப்படிப்பட்ட விலக்ஷணமான தொரு காரண வஸ்துவானது ஸம்ஸாரிகளிடத்திலுள்ள கிருபையினால்-தானாகவே வந்து முகங்காட்டிக் காரியம் செய்த்தென்கை. அன்றி, ஒருவகை முயற்சியால் பெற முடியாதது._)
(யாவகையுலகமும் என்று தொடங்கி மாயக்கடவுள் என்னுமளவும் எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகிறார்.–“பன்மைப் படர் பொருளாதுமில் பாழ் நெடுங்காலத்து நன்மைப் புனல் பண்ணி
நான் முகனைப் பண்ணித் தன்னுள்ளே, தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே“ என்ற பாசுரம்-இங்கு ‘அநுஸந்திக்கத்தகும்.–சேதந வர்க்கங்களிலும் அசேதந வர்க்கங்களிலும் ஒன்று மில்லாதபடி மஹா ப்ரளயங் கோத்த காலத்தில், தேவ மநுஷ்யாதி ரூபத்தாலே எண்ணிறந்தவைகளாய் அசித்தோடே கலசிக் கிடப்பவையான ஜீவ வஸ்துக்களுக்கெல்லாம் தானே காரணமாயிருப்பவன் எம்பெருமான்.)
தனி வித்து ஒரு தான் ஆகி
நிமித்த உபாதான சஹகாரி காரண த்ரயமும் தானே யாய்-வித்து -என்கையாலே –காரண வஸ்து என்கை —தனி -என்கையாலே–ஏஹோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந –மஹா உபநிஷத்-1-(நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான் பிரமனும் இல்லை சிவனும் இல்லை )- என்றபடி அத்விதீயன் -என்க-ஒரு -என்கையாலே-இதுக்கு ஸஹ காரிகள் ஒருவரும் இல்லை என்கை –
தான் ஆகி –
கார்ய ரூபமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் வேண்டும் காரண கணம் எல்லாம் தானேயாய்-இப்படி அண்ட ஸ்ருஷ்ட்டி அளவும் தானே உண்டாக்கி – இவ்வருகு உள்ளவற்றை உண்டாக்குகைக்காக-ஸ்ரீ கோயிலுக்கு ஸ்ரீ மதுர கவி தாசரை நிர்வாஹகராக விட்டால் போலே ப்ரஹ்மாவை இப்பால் உள்ள ஸ்ருஷ்டிக்காக உண்டாக்கினான்-ஸ்ரீ ராமானுஜர் திவ்ய ஆஜ்ஜை அன்றோ அனைத்து ஸ்ரீ கோயில் நிர்வாகங்களும் –இது அதுக்கு த்ருஷ்டாந்தம்
(தனி வித்து ஒரு தானாகி –-தான் ஒரு தனி வித்தாகி என்று அந்வயிப்பது.-வித்தாகி என்னாமல் ஒரு வித்தாகி என்னாமல் ஒரு தனி வித்தாகி என்றதனால் –நிமித்த காரணம் ஸஹகாரி காரணம் உபாதான காரணம் என்கிற மூவகைக் காரணங்களும் எம்பெருமான் தானே யாகிறான் என்று தெரிவிக்கப் பட்டதாயிற்று.–உலகில் குடம் துணி முதலிய வஸ்துக்கள் ஜனிக்க வேணுமானால் மேற் சொன்ன முக்காரணங்களும் அமைய வேண்டும்,-பானைக்கு மண் உபாதான காரணமென்றும்,சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரி காரணமென்றும்,-குயவன், காலம், அத்ருஷ்டம் முதலியன் நிமித்த காரணமென்றும் சொல்லப் படும்.–கார்ய வஸ்துக்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தாக வேண்டுமாகில் பிரபஞ்சமாகிற காரியத்திற்கு எது உபாதான காரணம்? எது ஸஹகாரி காரணம்? எது நிமித்தகாரணம்? என்று கேள்வி பிறக்குமே, எம்பெருமான்றானே மூவகைக் காரணமுமாகிறானென்பது வேதாந்திகளின் கொள்கை.)
தெய்வ நான் முக-
இதர சஜாதீயனான சதுர்முகன் ஆகிற
கொழு முளை ஈன்று –
இவ் வருகில் கார்ய வர்க்கத்தை அடைய உண்டாக்குகைக்கு ஈடான சக்தியை யுடைய ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து
(அத்வாரக ஸ்ருஷ்டியென்றும் ஸத்வராக ஸ்ருஷ்டியென்றும் ஸ்ருஷ்டி இரு வகைப் படும். எம்பெருமான் தானே ஸ்ருஷ்டிப்பது அத்வாரக ஸ்ருஷ்டியாம்,-ஒருவன் மூலமாக ஸ்ருஷ்டிப்பது ஸத்வராக ஸ்ருஷ்டியாம்.-அண்ட ஸ்ருஷ்டி வரையில் தானே ஸ்ருஷ்டிப்பதலால் அது அத்வாரக ஸ்ருஷ்டி இவ் வருகுள்ள வற்றை நான்முகன் மூலமாக ஸ்ருஷ்டிக்கிறானாகையாலே இவற்றின் ஸ்ருஷ்டி ஸத்வாரக ஸ்ருஷ்டி.–தெய்வ நான்முகக் கொழு முளையீன்று என்று.-கப்பும் கிளையுமு காயும் கனியும் முளையினின்று உண்கிறபடியால் நான்முகன் இங்கு ஒரு முளையாகக் கூறப்பட்டான்
கொழு முளை என்றது சிறந்த அங்குரம் என்றபடி.-இப்பாலுள்ள கார்யவர்க்கங்களை யெல்லாம் உண்டாக்குகைக்குப் பாங்கான யோக்யதையை யுடையவன் பிரமன் என்றவாறு.)
அவன் ஒருவனும் மூன்று காரியமும் செய்ய மாட்டான் இறே -அதற்காக
முக் கண் ஈசனோடு தேவு பல
சம்ஹார ஷமனான ருத்ரனோடே கூட-மற்றும் காரியத்துக்கு வேண்டும் தேவதைகள் பலரையும் உண்டாக்கி – இவை பலரும் தேவைக்கு எல்லாம் அவன் பண்ணி அருளிய வியாபாரம் என்னில்
நுதலி
(ததக்ஷைத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3- அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக் கடவேன் என்று சங்கல்பித்தது-அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது) பஹுஸ்யாம் –என்று சங்கல்பித்து-நுதலி -என்றது –கருதி என்றபடி –
(“நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனுந் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் என்றபடி-பிறகு அடைவே பல தேவதைகளையும் ஸ்ருஷ்டித்தானனாதலால்-தேவ பல நுதலி என்றும் அருளிச் செய்தார்.)
மூ உலகம் விளைத்த உந்தி
கீழும் மேலும் நடுவுமான உண்டான லோகங்களை உண்டாக்கிற்று அவன் திரு உந்தி யாயிற்று-அவனை ஒழியவே தானே இவை அடைய உண்டாக்கிற்றாயிற்று திரு உந்தி-திரு உந்தி என்ற ஒரு பத்மமாய் அது அடியாக ஆயிற்று லீலா விபூதி அடைய உண்டாக்கிற்று
மாய கடவுள்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதை
மா முதல் அடியே
மா முதல் மாயக் கடவுள் என்று கூட்டி -பரம காரணமான மாயக் கடவுள் என்னுதல் -மாயக் கடவுள் ஆனவனுடைய மா முதல் அடி என்னுதல்-ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதையான பரம காரண பூதனானவனுடைய திருவடி என்னுதல் –மாயக் கடவுள் என்று அவனுடைய பரம ப்ராப்யமான திருவடிகள் என்னுதல் –
திருவடி –
திரு மேனிக்கும் உப லக்ஷணம் என்னுதல்
அடியே வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்
உன் சேவடி செவ்வி திருக்காப்பு –என்றபடி-
(ஆக, ஸத்வாரக ஸ்ருஷ்டியாலே உண்டாக்கின ஸகல வஸ்துக்களுக்கும் மூல கந்தம் திருநாபி யாகையாலே-மூவுலகம் விளைத்த வுந்தி என்றார்.-இப்படிப்பட்ட திருவுந்தியை யுடைய மாயக் கடவுளுண்டு –-ஆச்சரியமான ஞான சக்திகளுடையனான ஸர்வேஸ்வரன்-அவனுடைய திருவடிகளை, ஊழி தோன்றி யோவாது வாழிய வென்று யாக தொழ விசையுங்கொல்.–அந்தத் திருவடிகளை ஸ்ரமப்டுத்திக் காரியங் கொண்டவர்களைப் போலே நாமும் ஆகாமல் அவற்றுக்குப் பல்லாண்டு பாடப் பெற வேணும்-–வாழிய – வியங்கோள் வினை முற்று.)
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply