இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், நிரவதிக -தனக்குமேல் ஒன்று இல்லாததான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப்பெறுவர் என்கிறார்.
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-
பூர்ணமாக -நிறைவாக என்னுதல்./ஆர்தல்-பருகுதலாய், தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே,
பருகுவாரைப் போலே என்னுதல். என்றது,அபி நிவிஷ்டராய் -மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி.
பொலிந்தே அடிக் கீழ்ப் புகுவார் –விஸ்ரம்ப- நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,
ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து,
பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்.
———————–
நிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றார்க்கு, தேவதாந்த்ரங்கள் -மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையும்,
ஸ்ரீ எம்பெருமான் பக்கல் ப்ரயோஜனாந்தர பரதையுமான –வேறு பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான
மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் என்கிறார்.
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-
பிரசித்தமான புகழையுடைத்தான ஆயிரத்திலும், இந்தப் பத்தும்,
தேவதாந்த்ரங்கள் -வேறு தேவர்கள் பக்கல் பரத்வ சங்கை பண்ணுதல்,
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல்,
அபாகவத ஸஹவாசம் -பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல்,
ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷித்தல் வேறு பிரயோஜனங்களை விரும்புதல்–ஆகிற மானச தோஷங்களைப் போக்கும்.
(இத் திருவாய்மொழியிலுள்ள “கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை”,
“தொழுது தொழுது நின்று ஆர்த்தும்”, “ஊழிபெயர்த்திடும் கொன்றே”,
“சிந்தையைச் செந்நிறுத்தியே” என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து-‘வேறு தேவர்கள் பக்கல்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.)
(கறுத்த மனம் வேண்டா” என்றதனால், ஸ்ரீ பிரணவத்தின் அர்த்தமான அநந்யார்ஹ சேஷத்வத்தையும்,
அவர்களை, “சென்று தொழுது உய்ம்மின்” என்றதனால், நமஸ் சப்தார்த்தமான ததீய சேஷத்வத்தையும்,
“சிந்தையைச் செந்நிறுத்தி” என்றதனால், ஸ்ரீ நாராயண பத சித்தமான ஐச்வர்ய கைவல்ய
வியாவிருத்தமான புருஷார்த்தத்தையும் சொல்லுகையாலே,
‘மாசு அறுக்கும்’ என்ற இடத்தில், மூன்று பதங்களின் பொருள்களும் சொல்லப் படுகின்றன)
————————
நிகமத்தில் இந்தத் திருவாய் மொழி அப்யஸிக்க -கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே
அவ் வெம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் –எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்கிறார்.
இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகும் தம் மூரெல்லாம்–5-3-11-
மடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும்.அவர்களுக்கு உத்தேசிய பூமி ஸ்ரீ பரம பதமாம்.
அன்றிக்கே, நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல்,
இவர்கள் இருந்த இடம் தானே ஸ்ரீ பரம பதமாம் என்னுதல்.
அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.
இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;
இப் பாசுரங்களில் சொல்லுகிற ஸ்ரீ பகவானுடைய குணங்களைப் பார்த்தால்,
இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;
இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;
இங்ஙன் அன்றாகில், ஸ்ரீ புருஷோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே.
———————-
நிகமத்தில் இவர் பாசுரம் கேட்டார், இவர் தசையை அநுசந்தித்தார் பிழையார்கள் என்கிறார்.
முடிந்தார் புகலிடம் அதுவாகையாலே சொன்ன இத்தனை.
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-
இப் பத்தையும் சொன்னவர்களுக்கு ஸ்ரீ பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,
பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவு படுமது வேண்டா;
இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள். இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள்
புகும் தேசம் ஸ்ரீ பரம பதம் ஆகையாலே ‘ஸ்ரீ வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.
இத் திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில்,
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்களுடைய- மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்கு,
பிரகிருதி விஸ்லேஷ அநந்தரம் -சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் ப்ராப்யமாக -பேறாக நினைத்திருக்கும்-
ஸ்ரீ தேச பிராப்தி – தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.
ஸ்ரீ பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய-பிரவணரானவருடைய – பாசுரம் கேட்டுப் பொறுக்க மாட்டாதே
ஈடுபட்டு பிரகிருதி விஸ்லேஷம் – இந்தச் சரீரம் நீங்கப் பெற்றவர்கள்,
அவர்களுக்கு உத்தேஸ்யமான தேசத்தைக் கிட்டாது ஒழிய விரகு உண்டோ என்பார் ‘எங்ஙனேயோ’ என்கிறார்.
நீள் இரவாய் நீண்டதால்”,
ஒண்சுடரோன் வாராது ஒளித்தான்” என்று
இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் அஸ்தமியாத -மறைதலில்லாத சூரியனும்
அஸ்தமியாத மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர் என்பார் ‘ஸ்ரீ வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.
————————
நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்கிறார்.
அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-
இதனைக் கற்று அறிய வல்லவர். அறியக் கற்கையாவது, ‘ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ நித்ய ஸூரிகள் நடுவே இருக்கிற
இருப்பைக் காட்டிலும், ஸ்ரீ திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை
அறிந்து கற்க வல்லவர்கள்.
வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உத்கர்ஷம் -உயர்வு; அந்தக் குணாதிக்யம் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.
மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்
ஸ்ரீ உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.
———————–
நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே–5-6-11-
ஸ்ரீமத் புத்ரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள்.
ஸ்ரீ யபதி- திருமால் அடியாரை ஆராதிக்கையாவது,
இவர் அநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியகரர் -பிரியமுள்ளவராக ஆனால் போலே,
இது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய வ்ருத்தி –
கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை. என்றது,
இவர் அநுகரித்த இப் பாசுரங்களைச் சொல்லுகை.
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்”-திருவாய்மொழி, 9. 4 : 9. என்னக் கடவது இறே-
————————-
நிகமத்தில் -இத் திருவாய் மொழியைப் பொருள் அறிவோடு -சாபிப்ராயமாக –
கற்குமவர்கள் நித்ய ஸூரிகளுக்கு என்றும் போக்யர் -இனிய பொருளாவர் என்கிறார்.
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-
அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது,இவருடைய உபாய சூந்யதையை அனுசந்தித்து -நினைத்துப் பாடவல்லார் என்றபடி.
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்ய ஸூரிகளுக்கு இனிய பொருளாகப் பெறுவர்.
தேவ ஜாதிகள் அமுதம் பெற்றுக் கிருதார்த்தராமாப் போலே,
ஸ்ரீ நித்ய ஸூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.
பிரபாகந்தர நிரபேஷமான -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் ஸ்ரீ பகவத் ருசியையுடைய அவர்கள்,
ப்ரபாகாந்தர -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் ஸ்ரீ பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,
ப்ரபாகாந்தர நிரபேஷராய் -வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள்
ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு போக்யராவார் -அமுதாவர்.
—————————–
இப் பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப் போலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யர் -இனியர் ஆவர் என்கிறார்.
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-
‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே,இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார்
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை.
மானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் காமுகரைப் போலே ஆவர். ஆவது என்? என்னில்,
தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும் போது
மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; ஆனால், சொல்லிற்றாயிற்று என்? என்றால்,
மேல் கொடிதான நரகம்” என்னா நிற்கச் செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே,
இது கற்றாரை ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம்.
இங்ஙன் அன்றாகில் வஞ்சனை யுள்ளவர் வார்த்தையாமே அன்றோ.-இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே.
பிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக் கட்டி இருப்பதும்.-
அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில், முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.
திருஷ்டாந்தம் –உவமை புக்க இடத்தே —தார்ஷாட்ந்திகம்-உபமேயமும் வரக்கடவது.-
தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னா நின்றதே அன்றோ.
—————————
நிகமத்தில் -இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே
ஸ்ரீ பகவானுடைய குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள் என்கிறார்.
நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11-
ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க, அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே,
இவர்களும் இங்கே ஸ்ரீ பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள்.
பிறந்தே சிறந்தார் என்று அந்வயம்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்குப் பிறக்கப் பிறக்கக் குணங்கள் புகர் பெற்று வருமாறு போன்று,
இவர்களும் ஸ்ரீ பகவதநுபவம் பண்ணுகையாலே ஸ்லாக்கியராயிருப்பார்கள்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்”- திருவிருத்தம். 79.– என்னக் கடவதன்றோ.
இந்தப் பத்தினைக் கற்க வல்லவர்கள்; என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு,
பலக் குறைவின் காரணமாக நடு வழியிலே விழுந்து நோவு படாதே ஸ்ரீ உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள்.
இவர்களுடைய ஜன்மங்கள் கர்மம் காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே
முக்தர்களுடைய சரீரத்தைக் காட்டிலும் ஸ்லாக்கியம்.
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களின் பொருட்டு அவதரித்த ஸ்ரீ பகவானுடைய அவதாரம் போலே ஸ்லாக்கியம் என்கை –
———————-
நிகமத்தில் இப் பத்தும் கற்றார் ஸ்ரீ பரம பதத்திலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர் என்கிறார்.
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே–5-10-11-
ஆயிரத்திலும் இப் பத்தினைக் கற்க வல்லவர்கள்.மஹாகாசம் என்று பேரையுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே.
காலம் என்னும் தத்துவம் -ஒரு பொருள் உள்ளவரையிலும் நித்ய அநுபவம் பண்ணப் பெறுவர்.
அநுசந்தானத்துக்குத் விச்சேதம் -தடை வாராதபடி பண்ணியருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும்படியான
சம்சாரத்தைவிட்டு, ஸ்ரீ பகவானுடைய அநுபவத்துக்கு விச்சேதம் -நழுவுதல் ஒரு நாளும் இல்லாத
ஸ்ரீ பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி.
மா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை.
கம்’ என்றது ஆகாசம்.
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply