ஸ்ரீ திருவாய் மொழி இரண்டாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

‘இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் ஸ்ரீ பகவானைப் பெறாமையாலே -அலாபத்தாலே –
நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல்,
கண்டார் எல்லாம் ஸ்ரீ பகவானைப் பெற்று -லாபத்தாலே-களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ என்கிறார்

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–2-1-11-

இங்கே இருந்து, கண்ணுக்கு இலக்கான பொருள்கள் அடங்கலும் ஸ்ரீ பகவானைப் பெறாத காரணத்தால்
நோவுபடுகின்றனவாக அநுசந்திக்குமவர்கள்,
இவ்விருப்பை விட்டுக் கண்ணால் கண்டார் அடங்கலும் ஸ்ரீ பகவானைப் பெற்றமையால் களிக்கும்
நித்திய விபூதியை விடாமல் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்கள்.
‘கண்டீர்’ என்று கையெழுத்துக் கூப்பிடுகிறார்.
‘திண்ணன’ என்றது, -ஸூ நிச்சிதம் -ஐயமின்மையைக் குறிக்க வந்தது.
இங்கே உள்ள சிலரைப் பற்றிச் சொல்லிற்று ஓர் அர்த்த மாகிலன்றே, ஐயம் திரிவுகள் உள்ளனவாம்?
ஸ்ரீ பகவானுடைய பிரபாவத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேயாயினும் சூளுறவு செய்யலாம் என்றபடி.

——————–

நிகமத்தில் – ‘இத்திருவாய் மொழியைக் கற்று உணர வல்லவர்கட்கு, -தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஸ்ரீ ஈஸ்வரத்வ புத்தி பண்ணுகையாகிற ஊனம் குற்றம் இல்லை,’ என்கிறார்

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே–2-2-11-

இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது -அபர தேவதைகள் பக்கல் – இறைவர் அல்லாதாரை-
ஸ்ரீ பரத்வ புத்தி பண்ணுகையும் இறைவர் என்று எண்ணுதலும்,
ஸ்ரீ பர தேவதை பக்கல் -ஸ்ரீ இறைவனை -பரத்வ பிரதிபத்தி பண்ணாமையும் -ஸ்ரீ இறைவன் என்று எண்ணாமையும்.
இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை.

————————-

நிகமத்தில் , ‘இத்திருவாய்மொழியை ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்று இருக்கும் அடியவர்கள்,-
ஸ்ரீ பகவத் ஏக போகராய் இருப்பார் – என்னைப் போன்று தனித்திராமல் திரளாக அனுபவியுங்கள்,’ என்கிறார்.

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-

அவன் பக்கலிலே நிக்ஷிப்தபரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும்
நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே,
நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.

அனுகூலர் கிடையாமையாலே ‘நால்வர் இருவர்’ என்கிறார்;
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து, ‘இதர உபாயங்களுக்கு அனுஷ்டாதாக்கள் பலராய் இருக்க,
இதற்கு அநுஷ்டாதாக்கள் மிகச் சிலராய் இருத்தற்குக் காரணம் யாது?’ என்று கேட்க,
‘உலகத்தில் இருந்ததே குடியாக அனைவரும் சமுசாரிகளாக இருக்க,
அதில் நாலிரண்டு பேர் உத்தம ஆஸ்ரமிகளானால் சமுசாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சந்யாசிகளுக்கு ஒரு அபகர்ஷமுமே உண்டோ?
சுவர்க்க அனுபவத்துக்கு ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களைச் சாதனமாகச் சாஸ்திரங்கள் விதிக்கின்றன;
ஓர் ஊரில் ஒரவனன்றோ யாகம் செய்தான் என்று கேள்விப்படுகிறோம்?
ஆதலால், இதற்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது?’ என்று ஸ்ரீ நம்பிள்ளைக்கு ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தார் –

——————-

நிகமத்தில்-‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் இவர் பிரார்த்தித்தபடியே
ஸ்ரீ நித்தியசூரிகள் திரளிலே போய்ப் புக்குச் சர்வேஸ்வரன் திருவடிகளிலே,
‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்’ என்கிறார்.

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11-

இப்பத்தையும் கற்க வல்வர்கட்குச் செவ்வி மாலையைக் கொண்டு
அவன் திருவடிகளிலே நித்திய கைங்கரியம் பண்ணப் பெறலாம்.
‘ஆயின், நித்திய கைங்கரியத்தைச் செய்வதற்கு இவர்க்குப் பிறந்த ஆற்றாமை
இதனைக் கற்குமவர்கட்கும் உண்டாக வேண்டாவோ?’ எனின், வேண்டா;
தொண்டினைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது பெறாமையாலே போலே காணும்
இவ்வாற்றாமை எல்லாம் இவர்க்குப் பிறந்தன;
பித்ரு தனம் -தமப்பன் செல்வம் புத்திரனுக்குக் கிடைக்க வேண்டியது முறையாமாறு போன்று,
இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.

————–

நிகமத்தில் , ‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர் உளராகில்,
அவர் ஸ்ரீ பரமபதத்தில் போய் நித்திய அனுபவம் பண்ணப் பெறுவர்’ என்கிறார்

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே–2-5-11-

‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது
‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்.
‘ஆயின், இவரைப் போன்று, ஆற்றாமை இல்லாதவர்களும் பெறுதல் கூடுமோ?’ எனின்
தமப்பனது தனம் கிடந்தால் புத்திரன் அழித்து ஜீவிக்குமத்தனையன்றோ?
அது போன்று, இங்கும் ஸ்ரீ ஆழ்வார் பட்ட வியசனம் படவேண்டா;
இவருடைய அனுபவத்தைப் பரமபதத்திலே அனுபவிக்கப் பெறுவர்.

————————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் யாரேனுமாகவுமாம்;
அவர்களுக்குக் குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள்-அப்ரயோஜம் – பிரயோஜனம் அற்றவைகள்;
இவ்வாகாரத்தாலே -இத்தன்மையாலே அவர்கள்-பகவதீயர் –ஸ்ரீ பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்,’ என்கிறார்

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

இதில் அபிநிவேசத்தால் -ஆசையாலே இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள்.
பண்ணாவது, கானம். / இசையாவது, குருத்துவம் லகுத்துவம் முதலானவைகள் தம்மிலே நெகிழ்ந்து பொருந்துகை.
‘தொனியாலும் திறத்தாலும்’ என்றபடி.
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;
‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் ஸ்ரீ பகவதீயர் -ஸ்ரீ பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

—————–

நிகமத்தில் -‘இத்திருவாய்மொழி கற்றவர்களை இத் திருவாய்மொழி தானே ஸ்ரீ எம்பெருமான்
திருவடிகளில் சேர்த்து விடும்,’ என்கிறார்.

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும–2-7-13-

ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு அடையாளமான திருநாமங்களை வைத்துப் பாடினவை. ‘இது செய்வது என்?’ எனில்,
ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளோடே சேர்த்துவிடும்;
‘இத்திருவாய்மொழியின் சம்பந்தந்தானே ஸ்ரீ கேசவன் தமராக்கிவிடும்,‘ என்பதாம்.

———————-

நிகமத்தில் இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள்
இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

விண் தலை -தலையான விண்ணிலே என்னுதல்
அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்-
ஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார் -இனிமையான உயர்ந்த வீடு –
சாம்சாரிகமான சங்கோசம் எல்லாம் தீரும் படி வீறு பட்டு இருந்து –
வீற்று இருந்து -பார்த்தாலே அனுபவம் மிக்கு இருப்பது தோன்றுமே –
தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும்
தருவானாக சமைத்து நிற்கிற ஸ்ரீ பரம பதத்தை ஆளப் பெறுவார் –
ஸ்ரீ ஆழ்வார் சம்பந்தம் அடியாகவே ஆளப் பெறுவோமே –

——————————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியை அப்யஸிக்க வல்லவர்
இதில் சொன்ன ப்ராப்யத்தைப் பெறுவர்,‘ என்கிறார்.

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே–2-9-11-

ஆயிரத்துள் இப்பத்தும்.‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றி, –
ஸ்ரத்தாநராய் இருப்பார்க்கு -நம்பிக்கை யுடையவர்க்குக்-
அநர்த்த கந்த ரஹிதமாய்- கேட்டின் வாசனையும் இல்லாததாய்- அகங்கார மமகாரங்களை உடைத்து அன்றிக்கே,
‘தனக்கேயாக வேணும்’ இவர் பிரார்த்தித்தபடியே இவ்வாத்மாவினுடைய
ஸ்வரூபத்திற்குத் தகுதியான-அனுரூபமான பேற்றினைச் செய்து கொடுக்கும்.

——————-

நிகமத்தில்‘இத்திருவாய் மொழி கற்றாரை, இத் திருவாய் மொழி தானே –
ஜென்மத்தை -பிறப்பினைப் போக்கி ஸ்ரீ அழகர் திருவடிகளிலே சேர்த்து விடும்,’ என்கிறார்.

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே–2-10-11-

‘பிரபந்தந்தான் செய்வது என்?’ என்னில்,அருளை யுடையவன் திருவடிகளிலே சேர்த்துவிடும்.
அருளைக் கொண்டே ஸ்ரீ பரம்பொருளை நிரூபிக்கவேண்டி இருத்தலின், ‘அருளையுடையவன்’ என்கிறார்.
அது செய்யுமிடத்துச் சம்சார சம்பந்தத்தை வாசனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும்.
ஒரு ஞானலாபத்தைப் பண்ணித் தந்துவிடுதலே அன்றி,
அர்த்த கிரியாகாரியாய் இருக்குமாதலின், ‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து அருளிச் செய்கிறார்-

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading